அக்னிபாதை திட்டத்தை கைவிட கோரி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் செய்தி அறிக்கை

இராணுவத்தை கார்ப்பரேட் மயமாக்கும், காவி மயமாக்கும் மோடி அரசு!

அக்னிபாதை திட்டத்தை கைவிட கோரி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் செய்தி அறிக்கை

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி ஒன்றிய மோடி அரசை, அக்னிபாதை திட்டத்தைக் கைவிடுமாறு கோரி செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அக்னிபாதை திட்டம் இராணுவத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொத்தடிமைகளை உருவாக்கும் திட்டம் என்று விமர்சித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் சொந்த ஊழியர்களையே "அமர்த்துவது பிறகு வெளியேற்றுவது" (Hire & Fire) என்று கொள்கையை கடைபிடிக்கும் இவர்கள், 4 ஆண்டு சேவைக்கு பிறகு வரும் அக்னி வீரர்களுக்கு நிரந்தர வேலையில் அமர்த்த முடியாது. அதுவும் நிரந்தரமற்ற வேலையே! இந்த திட்டத்தை எதிர்த்து முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பாலன் கீழ்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

26-6-2022

ஒன்றிய மோடி அரசே, ’அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடு.

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் செய்தி அறிக்கை

இராணுவத்தை கார்ப்பரேட் மயமாக்குவதற்கும், காவி மயமாக்குவதற்கும் மோடி அரசு ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதை எதிர்த்து உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா என்று நாடு முழுக்க பாஜக அலுவலகம், இரயில்களை தீயிட்டு கொளுத்தும் போராட்டங்களை இளைஞர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய-அமெரிக்க இரானுவ ஒப்பந்தம், நான்கு அடிப்படை ஒப்பந்தங்கள், குவாட் ஒப்பந்தங்கள் மூலமாக இராணுவத் துறையில் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுடைய ஆதிக்கம் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டிருந்த 80 சதவிகித அரசு நிறுவனங்களை 74% அந்நிய மூலதனத்திற்கும், இராணுவ தளவாட உற்பத்தியில் புதியதாக காப்பரேட் நிறுவனங்களையும் இந்த ஒப்பந்தங்களின் மூலமாக திறந்துவிட்டுள்ளது. 100 இராணுவ நிறுவனங்களின் தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரந்தரமற்ற வேலை முறைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில் அக்னிபத் திட்டமும் நிரந்தர வேலைவாய்ப்பை ஒழித்துவிட்டது. இதன் மூலம் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான இராணுவ செலவினங்களை மிச்சப்படுத்தப் போவதாக பாசிச மோடி அரசு கூறுகிறது. இந்த நிதியை கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திற்குதான் செலவிடப் போகிறது.

இராணுவத்தில் “அக்னிபத்” திட்டத்தின் கீழ் 4 வருட ஒப்பந்த அடிப்படையில் இராணுவ வீரர்களை பணி அமர்த்த மோடி அரசு தொடங்கிவிட்டது. நான்கு ஆண்டு காலத்தில் முடிதிருத்துதல், சலவைத் தொழில், ஓட்டுநர், தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக மோடி அரசு கூறுகிறது. 4 வருடத்திற்குப் பிறகு வெளிவருகிற இராணுவ வீரர்களை மஹிந்திரா குழுமம், கோயங்காவின் ஆர்பிஜி எண்டர்பிரைசஸ், பயோகான் லிமிடெட், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம், டாட்டா சன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் கொத்தடிமைகளாக பயன்படுத்தப் போகின்றன. அதுமட்டுமின்றி தொழிற்சங்க போராட்டத்தை நசுக்குவதற்கும் இவர்களை கூலிப்படையாக பயன்படுத்தப் போகின்றன. ஏற்கெனவே பணிபுரியும் தொழிலாளிகளுக்கே நிரந்தர வேலை உத்தரவாதம் தராத இந்நிறுவனங்கள்தான் இராணுவ வீரர்களுக்கு நிரந்தர வேலை தருவதாக ஏமாற்றுகின்றன.

இந்தியாவை இராணுவமயமாக்குவது, இராணுவத்தை இந்துத்துவ மயமாக்குவது என்கிற ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிர திட்டத்தை நிறைவேற்றுவதே அக்னிபாத்தின் அடுத்த நோக்கமாகும். இதன் மூலம் காஷ்மீர் முதல் தமிழகம் வரை தேசிய இன உரிமைகளை அடக்குவது, சிறுபான்மை மக்களை நரவேட்டையாடுவது, ஒடுக்கப்பட்ட சாதி மக்களை, தொழிலாளர்ளை, விவசாயிகளை ஒடுக்குவது போன்ற பாசிச ஒடுக்குமுறையினை நடைமுறைப்படுத்தவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹிட்லர் தனது கட்சிக்காக ஒரு இராணுவத்தையும், அரசு இராணுவத்தில் நாஜிப் படைப் பிரிவையும் உருவாக்கி இனப் படுகொலைகளை நிகழ்த்தினான். ஹிட்லரின் வழியில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. தன் கட்சிக்கான படைப் பிரிவை உருவாக்கி அதன் பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆயுத பயிற்சி ஏற்கெனவே அளித்து வருகிறது. தற்போது அக்னிபத் திட்டத்தில் 25% வீரர்களை இராணுவத்தில் ஒரு காவிப் படையாக மோடி அரசு மாற்றவுள்ளது. வெளியேற்றப்படுகிற 75% வீரர்களை கார்ப்பரேட்டுகளுக்கும், சங்பரிவாரங்களுக்கும் கூலிப்படையாக மோடி அரசு மாற்றப் போகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பணிமுடிந்து வருபவர்கள், இந்துத்துவா சேம ப்டையாக மாறுவர். இவர்களே சமூகத்தின் அனைத்து அமைதியின்மையையும் தீர்மானிப்பவர்களாக இருப்பர். ஏற்கெனவே போலீசையும், அதிகார வர்க்கத்தையும் பயன்படுத்தி புல்டோசர்களை கொண்டு டெல்லி, உத்திரபிரதேசம் போன்ற பாஜக ஆட்சி அதிகாரம் இருக்கிற மாநிலங்களில் இன சுத்திகரிப்பு நடவடிக்கையை செய்து கொண்டிருக்கிறது. இனி இராணுவ கூலிப்படையையும் மோடி அரசு இதற்காகப் பயன்படுத்தப் போகிறது. இந்த திட்டத்தைக் காவல்துறைக்கும் விரிவுபடுத்தப் போவதாகவும் மோடி அரசு கூறுகிறது.

இத்திட்டத்தின் ஆபத்தை உணர்ந்துதான் முன்னாள் இராணுவ அதிகாரிகள், எதிர் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள்கூட இத்திட்டத்தை எதிர்க்கின்றனர். ஒன்றிய மோடி அரசு ’அக்னிபத்’ திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது.

இந்துராஷ்டிரம் எனும் பெயரில் கார்ப்பரேட் ராஜ்ஜியத்தை அமைக்கத் துடிக்கும் ஒன்றிய மோடி அரசின் ’அக்னிபத்’ திட்டத்தைத் திரும்பப் பெறும் வரையும், பாசிச புல்டோசர் ஆட்சியை வீழ்த்தும் வரையும் தொழிலாளர்கள், விவசாயிகள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் என அனைத்து சக்திகளும் ஒன்று திரண்டு போராட வருமாறு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறைகூவி அழைக்கிறது.

இச்செய்தியறிக்கையை தங்கள் ஊடகத்தில் பதிவிட்டு மக்களுக்கு கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

பாலன்,

ஒருங்கிணைப்பாளர், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி

7010084440 

Files