அறிவியல் தொழில்நுட்பம் யாருக்கு சேவை செய்கிறது? - பட்டமளிப்பு விழாவில் ஐஐடி மாணவர் தனஞ்செய் உரை
செந்தளம் செய்திப்பிரிவு
“கொத்துக் கொத்தாக பாலஸ்தீனிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள்!”-ஐஐடி மெட்ராஸ் பட்டமளிப்பு விழாவில் மாணவர் பேச்சு
நோபல் பரிசு வென்றவர் கையால் ஆளுநர் பதக்கம் வாங்கிய பிறகு தனஞ்சய் பாலகிருஷ்ணன் மக்களின் குரலாக பேசியுள்ளார்.
படிப்பில் மட்டுமல்லாது இதர கற்றல் சாராத செய்லபாடுகளிலும் தலை மாணாக்கராக விளங்குவருக்கு இந்த ஆளுநர் பரிசு வழக்கமாக ஆளுநர் கைகளால் வழங்கப்படும். இந்த முறை 2012-ஆம் ஆண்டு வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெற்ற ப்ரியன் கே.கோபில்கா பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அனைத்து மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கியதோடு, தனஞ்சய் பாலகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதக்கத்தையும் வழங்கியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, நோபல் பரிசு பெற்ற 39 விஞ்ஞானிகள் சேர்ந்து உக்ரைன் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக புதினுக்கும், இன்னப்பிற உலக தலைவர்கள், மதத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில் ப்ரியன் கே. கோபில்காவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் பதக்கம் பெற்ற தனஞ்சய் தனது ஏற்புரையில் மக்களின் குரலாக நின்று பேசியதே தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்சய் 2019-ம் ஆண்டு ஐஐடி மெட்ராஸில் நுழைவுத் தேர்வு வழியாக சேர்ந்து, ஐந்து ஆண்டு கால முடிவில் இரண்டு பட்டங்களை பெற்றுள்ளார். இளநிலை இயந்திர பொறியியல் படிப்புடன், முதுநிலை தரவு அறிவியல் துறையிலும் பட்டம் பெற்றுள்ளார். 19 ஜீலை, 2024ல் நடந்த 61வது பட்டமளிப்பு விழாவில் இவருடன் சேர்த்து மொத்தமாக 2,634 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.
ஐஐடி மெட்ராஸ் பட்டமளிப்பு விழாவில், தனஞ்சய் வழங்கிய ஏற்புரை ஏன் முக்கியத்துவம் வாய்நத்தாக பார்க்கப்படுகிறது:
வழக்கமாக தனது பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், ஆசிரியர்களுக்கு நன்றி கூறிவிட்டு தனது எதிர்கால தொழில் வாழ்க்கையில் சாதிக்கப் போவதைப் பற்றி மட்டும் பேசாமல் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த பெற்றோர்கள், விருந்தினர்கள், தன்னுடன் பட்டம் பெற்ற மாணவர்களை பாலஸ்தீனிய மக்களை இனப்படுகொலை செய்யும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக நிற்க வேண்டுமென அறைகூவல் விடுத்தார். தனக்கு கிடைத்த அரிய மேடையை பாதிக்கப்படும் மக்களுக்கானதாக பயன்படுத்த வேண்டுமென்ற தெள்ளத் தெளிவான புரிதலோடு இவ்வாறு பேசியுள்ளார், “நமது கடமையை செய்தாக வேண்டும். எனக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் மேடையை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை எனில் என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் இருக்கும். பாலஸ்தீனிய நாட்டில் மக்கள் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். இவையெல்லாம் என்று முடிவுக்கு வரும் என்பதுகூடத் தெரியவில்லை. இதைப்பத்தியெல்லாம் எதற்காக எங்களிடம் சொல்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது.”
அறிவியலும் தொழில்நுட்பமும் மக்களுக்கானதாக இல்லாமல் ஏகாதிபத்திய நாடுகளுக்கானதாகவே, அவர்களின் காலனியாதிக்க நலன்களுக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று பேசியுள்ளார். “அறிவியலும், தொழில்நுட்பமும், பொறியிலும், கணிதமும்(STEM) ஏகாதிபத்திய நாடுகளின் இரகசிய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது கடந்தகால வரலாறு. இஸ்ரேலிலும், அதுதான் நடக்கிறது.”
இதைத்தொடர்ந்து அவர் மேலும் பேசிய போது, “நினைத்துப் பார்க்க முடியாதளவிற்கு பெருந்தொகையை ஊதியமாகவும், இன்னப் பிற கவர்ச்சிகரமான சலுகைகளையும் வழங்கும் பகாசுர கார்ப்பரேட் கம்பனிகளில் உயர்ந்த வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஒரு பொறியியல் மாணவர்களாக நாம் கடினமாக உழைக்கிறோம். இந்த தொழில்நுட்ப உலகை ஆளும் பகாசுர கார்ப்பரேட் கம்பனிகள்தான் இன்று நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் கட்டுப்படுத்துகிறது என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.”
இதுவரை காசாவில் 37,000க்கும் மேற்பட்ட மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களை கொல்வதற்காக தொழில்நுட்பங்கள் தயாரிக்கப்படுகின்ற என்பதை தனஞ்சய் பாலகிருஷ்ணன் இவ்வாறு கூறுகிறார்: “பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போரில் தொழில்நுட்ப உலகில் மதிப்புமிக்க கம்பனிகள் என்று சொல்லிக்கொள்ளும் பல பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களை கொல்வதற்கான தொழில்நுட்பங்களை தயாரித்து வழங்குவதன் மூலம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கெடுத்து வருகின்றன.”
தன்னை பாதிக்காத எந்தவொரு பிரச்சனை பற்றியும் கண்டும் காணாமல் இருப்பதோடு தனக்கு அரசியல் பிடிக்காது அல்லது தெரியாது என்று ஒதுங்கும் நடுத்தர வர்க்கத்து மாணவர்கள் மத்தியில், “இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர்கள், பகாசுர கார்ப்பரேட் கம்பனிகளின் தலையீடு பற்றிய பிரச்சனைக்கு போகிற போக்கில் இதுதான் தீர்வு என்று எளிதாக சொல்லிவிட முடியாது. எனக்கும் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் என்ன தீர்வென்று தெரியாது”, என்று சொல்வதன் மூலம் தான் வழக்கமான அரசியல்வாதி அல்ல என்பதை தெளிவுபடுத்திவிடுகிறார்.
அதைத் தொடர்ந்தே மக்களுக்கான பொறியாளராக இருப்பதென்றால் என்னவென்று சொல்லும்போது தனது அரசியல் மக்களுக்கானது என்பதையும் தெளிவுபடுத்திவிடுகிறார், “பொறியியல் பட்டம் பெற்று நிஜ உலகில் ஒரு பொறியாளராக நாம் செய்யும் வேலையால் என்ன விளைவுகள் உண்டாகிறது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வு நிரம்பிய, பலதிரைகளால் மூடப்பட்டிருக்கும் அதிகார கட்டமைப்பில் நமது நிலை, நமது பங்கு என்னவென்பது பற்றி விருப்புவெறுப்பின்றி ஆய்வுக்குட்படுடுத்த வேண்டும். இதை எந்தளவிற்கு நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்கிறோமோ அந்தளவிற்கு நம்மால் சாதி, மதம், பாலினம் மற்றும் வர்க்க அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான வழியை நம்மால் புரிந்துகொள்ள முடியும்,” என்கிறார்.
மேலும், “என்னைப் பொறுத்தவரை பிறவித் துன்பம்/தீராத் துன்பத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இதுவே முதற்படியாக இருக்க முடியும்.” என்று தனதறிவுக்கு எட்டிய தீர்வையும் கூறியுள்ளார். மனிதப் பிறவி ஒரு சாராருக்கு ஏன் துன்பம் நிறைந்ததாக இருக்கிறது என்ற கேள்விகளுக்கு பல்வேறு மதவாதிகளும், தத்துவவாதிகளும் பல்வேறு தீர்வுகளை காலங்காலமாக வலியுறுத்தி வந்த நிலையில் தனஞ்சய் பாலகிருஷ்ணன் மக்களுக்கான அரசியல் பணியை முன்னெடுப்பதே பிறவித் துன்பத்தை நீக்குவதற்கான வழி என்று கூறுகிறார்,
நாட்டிலுள்ள ஐஐடி கல்வி நிலையங்களின் சீர்மிகு செயல்பாட்டிற்கு இந்தாண்டு(2024) மட்டும் 10,324 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐஐடி போன்ற கல்லூரிகளில் படித்துவிட்டு சுயம்புவாக, தனது திறமையால் மட்டும்தான் தனக்கு கோடிகளில் சம்பளம் கிடைக்கிறது என்று கல்வியின் சமூகப் பொறுப்பை தட்டிக்கழிக்கும் அல்லது தர்மத்திற்கும், இன்னப்பிற அரசியல் ஆதயாத்திற்கும் நன்கொடைகள் வழங்குவதன் மூலம் தங்களை சமூக அக்கறையுள்ள நபர்களாக காட்டிக் கொள்ளும் மெத்தப் படித்த மேதாவிகளின் மனசாட்சியில் கல்லெறிவது போல் இவ்வாறு பேசித் தனது ஏற்புரையை முடிக்கிறார், “ஐசக் நியூட்டன் சொன்னார், எனக்கு முன்பிருந்த மகத்தான் விஞ்ஞானிகளின் உழைப்பில், தியாகத்தில் விளைந்தவற்றை பெற்றுக் கொண்டதால்தான் என்னால் சிலவற்றை கூடுதலாக கண்டறிய முடிந்தது. அதேபோலத்தான், நான் இங்கு நிற்பதற்கு, ஏன் நாம் அனைவரும் இங்கு இருப்பதற்கு பின்னால்கூட கோடானு கோடி இந்திய மக்களின் உழைப்பும், தியாகமும் இருக்கிறது. அவ்வகையில் நாம் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொரு இந்தியரின் துயரங்களைத் துடைப்பதும் நமது கடமையாகிறது. தவறுகளை கண்டும் காணாததுபோல் செயலற்று இருப்பதும், வாய்மூடி வாளாவிருப்பதும் தவறுகளுக்குத் துணை நிற்பதாகவே கருதப்படும். எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், நீங்கள், நான், ஏன் நாம் எல்லோரும் (மக்களுக்குச்) சரியானவற்றின் பக்கம் நிற்போம் என்று நம்புகிறேன்”, என்று தனது உரையை முடித்துள்ளார்.
- செந்தளம் செய்திப்பிரிவு