கருத்து சுதந்திரத்தை உயர்நீதிமன்றம் பறிப்பதற்கெதிரான குரல்
யூடியூப் சேனல்களின் கூட்டறிக்கை

நாடு முழுவதும் கட்டியமைக்கப்பட்டு வரும் பாசிச நடவடிக்கைகளால் அனைத்து முன்னணி ஊடகங்களும் காவிமயமாக்கப்பட்டுவிட்டன. அவைகள் இந்த அரசின் அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் உண்மைக்கு மாறான தகவல்களையும், செய்திகளையும், கருத்துக்களையுமே பரப்பி வருகின்றன.
இந்த நிலையில் சமூக வலைதளங்களும், சிறு சிறு யூடியூப் சேனல்கள் மட்டுமே முறையான தகவல்களை கொண்டு வந்து கொண்டிருந்தன.
மாணவி ஶ்ரீமதியின் படுகொலையை மூடிமறைத்த - கொலைக் குற்றவாளிகளை பாதுகாத்த அரசு மற்றும் நீதித்துறையை அம்பலப்படுத்தின. இன்று அவற்றுக்கும் தடை விதிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அதை கண்டித்து யூடியூப் சேனல்களின் கூட்டறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி :
யூடியூப் சேனல்களின் கூட்டறிக்கை
யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கிப் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவியின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துவரும் நிலையில், மாணவியின் பெற்றோர் அதை முற்றிலும் மறுத்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக களத்திற்குச் சென்று புலனாய்வு நடத்தி பல வெளிவராத உண்மைகளை டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பல அப்பாவி இளைஞர்களை காவல்துறை கைது செ ய்துள்ளதை வெளிக்கொண்டு வந்ததும் இதே ஊடகங்கள்தான்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார். 29.08.22 அன்று பிறப்பித்துள்ள உத்தரவில், மாணவி மரணம் தொடர்பாக "இணை விசாரணை" (Parallel investigation) நடத்தும் சமூக வலைதளங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நீதிமன்றம் பயன்படுத்தியுள்ள இணை விசாரணை" என்ற வார்த்தையே ஆபத்தானது என நாங்கள் கருதுகிறோம். அரசும், அதிகாரவர்க்கமும் மறைக்க நினைக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே பத்திரிகையாளர்களின் கடமை. அந்தப் பணியையே இந்த வழக்கிலும் அனைத்து ஊடகங்களும் செய்து வருகின்றன. அவ்வாறு இருக்கையில், பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்வதை தடுக்கும் வகையிலும் அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் இந்த உத்தரவு அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த நமது தலைவர்கள். கருத்துச் சுதந்திரத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமையாக்கியுள்ளனர். இந்த உரிமையின் அடிப்படையில் செயல்படும் பத்திரிகையாளர்களை பேசக்கூடாது என்பதும். பேசினால் நடவடிக்கை பாயும் என்று உத்தரவிடுவதும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
ஆகவே, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக டிஜிட்டல் ஊடகங்கள் இணை விசாரணை நடத்தக் கூடாது என்றும், அதுகுறித்து செய்தி வெளியிடும் யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தவறான முன்னுதாரணமாகவே கருதுகிறோம்.
இந்த உத்தரவை திரும்பப்பெற்று கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
ரெட் பிக்ஸ்
அரண்செய்
பேரலை
ஜீவா டுடே
தமிழ் கேள்வி
யூடேர்ன்
தமிழ் குரல்
யூ 2 புரூடஸ்
ஓபீனியன் தமிழ்
மெட்ராஸ் ரிவ்யூ
தமிழ் நிறம்
ரூட்ஸ் தமிழ்
தமிழ் மின்ட்
என வெளியிட்டுள்ளனர்.
கருத்து சுதந்திரத்தை பறிக்கும் நீதிமன்றங்களின் அராஜகப்போக்குகளை யூடியூப் சேனல்களோடு சேரந்து கண்டிப்பது நமது ஜனநாயக கடமைகளுள் ஒன்று.
- செந்தளம் செய்திப் பிரிவு