பாஜக ஆட்சியை எதிர்ப்போரை ஒடுக்கும் திமுக அரசு !!
செந்தளம் செய்திப்பிரிவு
விடியா அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் போராட்டம், தொழிலாளர்கள் போராட்டம், மாணவர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம் என மக்கள் போராட்டங்கள் முன்னெப்போதும்விட அதிகமாக நடந்து வருகிறது. இதுதவிர, மக்கள் விரோத சட்டத் திட்டங்களுக்கு எதிராகவும், சமூகத்திலுள்ள ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் தலைமையில் நடக்கும் போராட்டங்களின் பட்டியல் தனிவரலாறாக நீள்கிறது.
அன்று, பழைய காலனிய பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து ‘சட்டப் மறுப்புப் போராட்டம்’ நடத்திய திருப்பூர் குமரனின் மண்டை உடைக்கப்பட்டது. இன்று, புதிய காலனிய மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்து அமைதி வழியில் போராடிய DYFI தோழர் ஐயப்பனின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. பழைய காலனிய கவர்னர்களுக்கும், புதிய காலனிய முதல்வர்களுக்கும் ‘அடக்குமுறை ஒன்றே ஆட்சிமுறை’யாக உள்ளது. காலனியாட்சிக்கும், போலி மக்களாட்சிக்கும் தேவைப்படுவது குண்டாந்தடியாட்சியே என்பது நிரூபணமாகியுள்ளது. திராவிட குண்டாந்தடியாட்சியை செந்தளம் வலைதளம் வன்மையாக கண்டிக்கிறது. நாமும் அவர்கள் மண்டையில் ஒங்கி ஒலிக்கும்படி அடித்துச் சொல்லுவோம் குண்டாந்தடியாட்சி ஒழிக என்று.
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து திமுக கம்பனி சென்ற வாரம் போராடப் போவதாக அறிவித்திருந்தது. ‘மக்களைப் பழிவாங்கும் பட்ஜெட்’ என்கிறார் தமிழகத் தரகு-முதலாளிகளின் முதல்வர் மு.க.ஸ்டாலின்; ஆனால், எந்த மக்களுக்கு என்று சொல்லவில்லை. “வரி வாங்கத் தெரியுது… நிதி கொடுக்கத் தெரியாதா? என்று திமுக கம்பனி முதல்வர் கேட்கிறார்; இடதுசாரிகளெல்லாம் சேர்ந்து போராடியபோது, இதையேத்தான் DYFI தோழர் ஐயப்பனும் கேட்டார். மண்டை உடைக்கப்பட்டுள்ளது. புதிதாக காவல்துறையில் பணிக்கு சேரும் இளைஞர்களுக்கு போராடும் கம்யூனிஸ்ட்களை தனியாக கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறதாம். நாமும் இதைத் தனியாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
‘திட்டமிட்டு புறக்கணிப்பது பாசிசம்’ என்கிறார் தமிழக சாதி ஆதிக்க சக்திகளின் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆரூரான் ஆலையை எதிர்த்து போராடிய தமிழக விவசாயிகளைப் புறக்கணித்து குண்டாந்தடியால் தாக்கியது எந்த பாசிசம்? கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது சேவையாற்றிய செவியலியர்களை பணி நிரந்தரம் செய்ய மறுப்பது எந்தப் பாசிசம்? முதலாளிகளுக்கு – தொழிலாளர்களுக்கிடையிலான தாவாக்களில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வரும் தீர்ப்புகளுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்ட வந்த மரபை மீறி தொழிலாளர்களுக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தது எந்த பாசிசம்? டிஜிட்டல்மயமாக்கல் என்ற பெயரில் அமைப்புசாரா தொழிலாளர்களின் ESI, PF கணக்குகளை காணாமல் செய்துவருவது எந்த பாசிசம்? நீட் ஒழிப்பு என்று நாடாகமாடுவதன் மூலம் தமிழக மாணவர்களை வஞ்சிப்பது எந்த பாசிசம்?
“தட்டிக் கேட்டுப் பெறுவதே நம் திராவிடம்” என்று திமுக கம்பனி நிர்வாகிகள் மேடையிலேறி முழங்குகிறார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். இந்தியாவிலேயே அதிகமான புதிய காலனிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களை(SEZ-54) திறந்து வைத்துள்ளது இந்த திராவிடம்தான். அந்நிய நிதி மூலதனத்தைத் தட்டிக் கேட்டுப் பெறுவதில் குஜராத் மாடலுடன்(3-வது இடம்) மல்லுக்கு நிற்பதும் இந்த திராவிட மாடல்தான்(4-வது இடம்). தமிழக உழைக்கும் மக்களின் உரிமைகளைத் தட்டிப் பறித்து முதலாளிகளுக்கு உகந்த மாநிலமாக, முதல் மாநிலமாக செந்தமிழ் நாட்டை (தற்போது EoDBல் 3-வது இடம்) மாற்றுவோம் என்று தொழிற்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இந்திய முதலாளிகளின் சம்மேளனத்தில் ஒருமுறை சூளுரையாற்றினார்; இதிலும்கூட, உழைக்கும் மக்களின் உரிமைகள் முற்றாக பறிக்கப்பட்டு - இரண்டாவது இடத்தில் இருக்கும் குஜராத் மாடல்தான் இவர்களுக்கு போட்டியே. இப்படியொரு போட்டாப் போட்டி நடக்கிறபோது, இவர்களின் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக, பழிவாங்கப்படுவதாக சொல்வதும், இதற்காக தட்டிக் கேட்பதும் நியாயம்தானே என செந்தமிழ் நாட்டின் உழைக்கும் மக்களாகிய நாம் கண்டுகொள்ள முயலவேண்டும்.
சமூக அநீதியை கட்டிக்காக்க பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் போராடுவோம் என்று உதய்னா தலைமையில் திமுக கம்பனி நிர்வாகிகள் சங்கற்பம் எடுக்கிறார்கள். அதே வேகத்தில் வந்து, காக்கி டயர்’களிடம் சொல்லி அடக்குமுறையை ஏவுகிறார்கள்; சாதியக் கலவரங்களுக்கும், வன்கொடுமைகளுக்கும் துணை நிற்கிறார்கள். அம்பேத்கர் எழுதிய சட்டம்தான் மக்களுக்காக போராடும் கம்யூனிஸ்ட்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது. பெரியார் வழியில் ஆட்சி நடப்பதாகச் சொல்லும் ஸ்டாலின் ஆட்சியில்தான் அமைதிவழியில் போராடுபவர்கள் மீது ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.
போராடுவது நம் அடிப்படை உரிமை என்று அம்பேத்கர் எழுதிய சட்டப் புத்தகத்திலிருந்து வரிக்கு வரி இவர்களுக்கு படித்துக் காட்டினாலும் போதவே போதாதாம்; ‘உயிர் எமக்கு வெல்லமல்ல’ என்று கூறி மக்கள் நலனிற்காக போராடத் துணிந்துவிட்டவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு, பிரிட்டிஷ் காலனியாட்சியில் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டத்தில் முன்பு உட்கிடையாக சொல்லப்பட்ட தன்பாற் அக்கறையின்மை(Contributory Negligence) என்ற கோட்பாட்டை எடுத்துக் காட்டுகிறார்கள்; இவற்றோடு, “சுரண்டல்காரர்களின் நிபந்தனைக்கு கட்டுப்பட்ட சுதந்திரம்’’ என்று அம்பேத்கர் எழுதிய அதே சட்டத்தை துணைக்கு கொண்டு வந்து மண்டையை பிளப்பதற்கு, ஏன் சுட்டுத் கொல்வதற்குக்கூட அரசிற்கு உரிமை உள்ளது என்று 100க்கும் மேற்பட்ட வழக்குகளில் அநீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்புகளை பட்டியலிடுகிறார்கள்; நமக்கு சமூக அநீதிப் பாடமெடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த நடைமுறையைத்தான் புதிய குற்றவியல் சட்டத்தில் புது விதியாக சேர்த்துள்ளார்கள்; ஏகபோக போலீஸ் இராஜ்ஜியத்தை பலப்படுத்தியுள்ளார்கள். “காவல் அதிகாரி தன் கடமையைச் செய்யும் பொருட்டு வழங்கும் உத்தரவுகளுக்கு எவராயிருந்தாலும் கீழ்படிய வேண்டுமாம். உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் எதிர்க்கக்கூடிய, மறுக்கக்கூடிய, புறக்கணிக்கக்கூடிய எவரையும் தடுப்புக் காவலில் வைக்கலாம் அல்லது அப்புறப்படுத்தலாம்” என்று பாரதிய நியாய சங்ஹிதாவின் கீழ் உள்ள பிரிவு 172ல் எழுதியுள்ளார்கள். பழைய காலனியாட்சியாளர்கள்கூட இந்தக் கொடூரமான நடைமுறையை சட்டத்தில் வெளிப்படையாக எழுதுவதற்கு கூசி நின்றார்கள்; காலனிய ஆட்சி தூக்கியெறியப்பட்டுவிடுமோ என்று அஞ்சி நடுங்கினார்கள். ஆனால், இந்த புதிய காலனிய தாசர்களுக்கு – அந்நிய, இந்திய ஏகபோக நிதி மூலதன கும்பல்களுக்கு சேவை செய்யும் – ஆரிய, திராவிட மாயாவிகளுக்கு பயம்விட்டுபோயாச்சு போலும். இவர்களுக்கு பாடை கட்டும் நேரம் வந்தாச்சு போலும்…
தோழமைக் கட்சித் தோழர்களுக்கு திமுக சுட்டிக்காட்டிய தோழமை
CPI, CPI(M), CPI(ML) லிபரேஷன் ஆகிய இடதுசாரிகள், ஜனநாயக சத்திகள் தலைமையில் ஆகஸ்ட் 1-ம் தேதி, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனை முன்பாக ‘மக்கள் விரோத பட்ஜெட் எதிர்ப்பு’ போராட்டம் நடைபெற்றது. BNS சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள பிரிவு 172-ன்படி பங்கேற்றவர்களின் மண்டையை உடைத்து அப்புறப்படுத்திய பிறகு வழக்கம்போல மண்டபத்தில் தடுப்புக் காவல் என்ற பெயரில் சிறை வைத்துள்ளனர். “கைது செய்யப்பட்டவர், கைது செய்யப்படாதவர் என்ற எந்தவொரு பாகுபாடுமில்லாமல் குரல் மாதிரிகள், கைரேகைகள், கையெழுத்து மற்றும் கையொப்ப மாதிரிகளை வலுகட்டாயமாக வாங்குவதற்கு” BNSS சட்டப் பிரிவு 349-ன் படி குற்றவியல் நடுவருக்கு சர்வ அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், தடுப்பு காவலில் வைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் புகைப்படம் எடுக்கப் போவதாகச் காவல்துறையினர் சொல்லியுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் குரல் மாதிரிகளை சேகரிப்பதற்கு நீதிமன்ற நடுவரின் உத்தரவு தேவை என்றும், கைது செய்யப்படாதவரின் அடையாளங்களை சேகரிப்பதற்கு காரண காரிய விளக்கத்துடன் வழங்கப்படும் உத்தரவுகள் தேவை என்றும் சட்டத்தில் பெயரளவிற்கு நிபந்தனைகளை எழுதி வைத்துக்கொண்டார்கள். ஆனால், யதார்த்த நடைமுறையில், அனைத்து அதிகாரங்களும் ஏகபோகமாக போலீஸ் அதிகாரிகளிடம்தான் குவிந்துள்ளது என்று மண்டபத்தில் புகைப்பட அடையாளங்களை வலுக்கட்டாயமாக பதிவு செய்ய முயன்ற சம்பவம் சாட்சி சொல்கிறது. தலைகீழாக நின்று தவமிருக்கவில்லை - தண்ணீரும் குடிக்கவில்லை; காக்கை உட்கார பழம் விழுந்தது போல, மூன்றாவது முறையாக ஆட்சி பீடத்தில் மோடி உட்கார புதிய குற்றவியல் சட்டம் மக்கள் தலையில் விழுந்ததை வரப்பிரசாதமாக கவ்விக்கொண்ட முத்துவேல் கருனாநிதி மகனின் அரசு எவ்வளவு துரிதமாக இச்சட்டங்களை அமல்படுத்தி வருகிறது என்பதே இதன் மூலம் நமக்கு தெரிய வரும் விசயமாகும்.
இந்த நடைமுறையும் ஏதோ இன்றுதான் புதிதாக வந்துள்ளதாக தப்புக்கணக்கு போட முயல்வார்கள் சட்டவாதிகள். இந்த நடைமுறை பழைய பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதி கர்சன் பிரபு காலத்திலிருந்தே தொடர்கிறது. இன்றும்கூட, அறவழியில் மேடையிலேறி அரசியல் முழக்கம் செய்பவர்களின் பேச்சுக்கள் ஆடியோ-வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது; இதுவும் அன்றைக்கு, வங்காளத்தில் எழுச்சி பெற்று வந்த சுதேசி இயக்கத்தை துண்டாடுவதற்காக வங்கத்தை இரண்டாக துண்டாடிய மகா காலனியாதிக்கவாதி கர்சன் பிரபுவின் திருவிளையாடல்தான். அரசியல் முழக்கங்கள் தாங்கிய சுவரொட்டிகளை ஒட்டச் செல்லும் இளந்தோழர்களின் புகைப்பட அடையாளங்களை பதிவு செய்வது, மன்னிப்பு கடிதம் எழுதச் சொல்லிக் கேட்பதும்கூட தொன்றுதொட்டு நடந்தேறி வருகிறது; ஒருபுறம், மக்கள் விரோத அரசியலை அம்பலப்படுத்தும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பலமுறை அலைக்கழித்தப் பிறகு வேறுவழியின்றி அனுமதி தருவதும், மறுபுறம், நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு நடவடிக்கைகளில் தலையிட்டு பலவழிகளில் முடக்குவதற்கான சதிவேலைகளை அரங்கேற்றுவதும்தான் சுரண்டும் வர்க்கத்தை எப்படியாவது பாதுகாத்துவிட வேண்டுமென துடிக்கும் காவல்துறையின் தலையாய கடமையாக இருந்திருக்கிறது.
மூவர்ணக் கொடிகாத்த குமரர்களின் இடத்தில் இன்று செங்கொடி காக்கும் குமரர்கள் நிற்கிறார்கள். மக்கள் விரோத சட்டங்கள் போடுகிறார்கள். ஏன், எதற்கென்று எதிர்த்துக் கேட்பவர்கள் தலையிலும்
குண்டாந் தடியைப் போடுகிறார்கள். சட்ட மறுப்பு போராட்டம் நடத்திய
திருப்பூர் குமரர்களின் கையிலிருந்த மூவர்ணக் கொடியைப் பறித்துக் கொண்ட ஆரிய-திராவிட மாயாவிகள் போலி சுதந்திரக் கொடியேற்றும்
நாள்(ஆக-15) பார்த்து நிற்கிறார்கள். நாமும் தகுந்த நாள் பார்ப்போம், ஏகபோக நிதி மூலதன கும்பல்களுக்கு சேவைசெய்யும் காவி-கதர்-கருப்பு பாசிஸ்ட்டுகளின் கதைமுடிக்க…
லெனினியமே நம் கலங்கரை விளக்கம்
“பொது அமைதிக்கு குந்தகம்” விளைவித்ததாகச் சொல்லி போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக ஆயுதப்படைகளை அனுப்பி வைப்பதற்கு, ஊரடங்கு தடை உத்தரவு போடுவதற்கு, இன்னும் இதுபோன்று பலவாறான அடக்குமுறைகளுக்கு தங்களது அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்தராத அல்லது சட்டத்தில் ஓட்டைகளை விட்டுவைக்காத ஒரு அரசுகூட (எவ்வளவுதான் ஜனநாயகத்தன்மையுடையது என்று சொல்லப்பட்டாலும்) உலகில் இல்லை” என்று ஓடுகாலி காவுத்ஸ்கி பற்றி விமர்சிக்கும் போது லெனின் கூறியிருப்பார். 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. லெனினியம் பொருந்தாது என்று கூறுபவர்கள்தான் லெனினாலும், லெனினியத்தாலும் விழ்த்தப்பட்ட காவுத்ஸ்கியையும், காவுத்ஸ்கிய வாதத்தையும் புறவாசல் வழியாக உயர்த்திப்பிடிக்கிறார்கள். முன்வாசலில் உள்ள லெனின் திருவுருவச் சிலைக்கு போலியாக செவ்வணக்கம் செய்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் ஓங்கிச் சொல்லுவோம் மார்க்சிய-லெனினியம் ஒன்றே நம் கலங்கரை விளக்கம் என்று…
ம.ஜ.இ.க.வுக்கு தடை! கலையும் திமுகவின் இரட்டை வேடம்
மக்களை நம்பவைத்து கழுத்தையறுப்பதற்காக ஒருபுறம் சமூக நீதிக் காவலர் வேடம் போடும் திமுக அரசு, சொற்ப நிதியை மட்டுமே மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவு செய்கிறது. மறுபுறம், அம்பானி, அதானிகளுக்கு தமிழகத்தை காவு கொடுக்கவும் மக்களை ஒடுக்கவும் குற்றவியல் சட்டங்களை வரமாக கருதி நடைமுறைப்படுத்தி வருகிறது.
அன்று(மார்ச்-23,2024), பகத் சிங் நினைவு நாளையொட்டி மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் நடத்த திட்டமிட்டிருந்த பாசிச எதிர்ப்பு மாநாட்டிற்கும் பல்வேறு சதிவேலைகளைச் செய்துதான் பாசிச திமுக அரசு தடை உத்தரவு விதித்தது. இன்று(3/08/24) ஏகபோக கார்ப்பரேட் நலன்களுக்கான ஏகபோக போலீஸ் ராஜ்ஜியத்தை சட்டப்பூர்வமாக நிறுவும் குற்றவியல் சட்டங்களை எதிர்த்து ம.ஐ.இ.க.வினர் ஏற்பாடு செய்திருந்த சென்னை அரங்க கூட்டத்திற்கும் தடை விதித்துள்ளது.
பாஜகவின் கார்ப்பரேட் பாசிசத்திற்கு கங்காணி வேலை பார்க்கும் திமுக அரசையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று தொடர்ந்து முழங்குவது ம.ஜ.இ.க மட்டுமே.
தோழமைச் சுட்டலுக்கு முடிவே இல்லையா?
பாசிச பாஜகவிற்கு மாற்று திமுகவே என வாக்குசேகரித்த தோழர்கள் இன்று பாசிச திமுகவின் குண்டாந்தடித் தாக்குதலால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.(Carrot for MPs, Only Baton for Comrades Policy)
திமுக கம்பனியின் சிபாரிசில் போலி நாடாளுமன்றப் படியேறிய CPI, CPI(M) எம்.பி.க்களின் எதிர்வினை என்ன என்பதையும், கட்சித் தலைமைகளின் நிலைப்பாடு என்னவென்பதையும் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களும், குண்டாந்தடியடி வாங்கியத் தோழர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியாக மாறியிருக்கிறது.
செந்தளம் செய்திப்பிரிவு