தென்காசி: தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர் நீதிமன்ற காவலில் சித்திரவதை செய்து படுகொலை
இந்தியா டுடே
பாளையங்கோட்டை மத்திய சிறை காவல் சித்திரவதையால் இறந்துள்ள தாழ்த்தப்பட்ட சாதி இளைஞரின் பிரேதப் பரிசோதனையில், உடலில் ஏழு ஆழமான காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி போலீஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 26 வயது தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர் நீதிமன்றக் காவலில் இறந்தார். காவலில் வைத்து சித்திரவதை செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறியதை அடுத்து, இறந்தவரின் உடலில் ஏழு ஆழமான காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) சட்டவிரோதமாக பெட்டிக்கடை மூலம் மது விற்பனை செய்ததாக 60 வயதான முப்புலிமாடத்தியுடன் தங்கசாமி கைது செய்யப்பட்டார். ஐபிசி பிரிவு 294(பி), 353, 506(2) மற்றும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் 4(1)(ஐ), 4(1)(ஏ) மற்றும் 14ஏ ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர் புதன்கிழமை (ஜூன் 14) இறந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை இந்தியா டுடே ஆய்ந்ததிலிருந்து பாதிக்கப்பட்டவரின் உடலில் ஏழு ஆழமான காயங்கள் இருந்ததை கண்டறிய முடிகிறது.
பாதிக்கப்பட்டவரின் உள் உறுப்புகள் அப்படியே இருந்தபோதும், வலது தோள்பட்டையின் மேல், வலது சுண்டு விரலின் உள்பகுதி, வலது கீழ் முழங்காலின் முன்பகுதி, கீழ் முதுகு நடுப்பகுதி, இடதுபுறம் இடுப்பு பகுதியின் மேல், மற்றும் இடது காலின் முன் பகுதி என சிவந்து கன்னிப்போயிருந்த ஏழு சிராய்ப்புகள் காணப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
மேலும், வலது கணுக்காலின் உட்புறம், இடது பெருவிரலின் பின்புறம் மற்றும் இடது நடுக் காலின் உட்புறம் ஆகியவற்றில் கருத்த காயங்கள் காணப்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது, இவை அனைத்தும் இறப்பதற்கு ஒரு வார காலம் முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும்.
மரணத்தை ஏற்படுத்துவதற்கு இந்த காயங்கள் போதுமானதாக இல்லை என்று அறிக்கை கூறியுள்ள நிலையில், இறப்புக்கான உடனடி காரணம் அறிவதற்கான உள்ளுறுப்புகளின் இரசாயன பகுப்பாய்வு மற்றும் திசுக்களின் ஹிஸ்டோபோதாலஜிக்கல் பரிசோதனை நிலுவையில் உள்ளது.
தங்கசாமியின் உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர், போலீசார் ஆதாரங்களை சிதைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
காவல்துறை தரப்பு வாதம்
இது குறித்து விசாரணை நடத்த சிறைத்துறை டிஐஜி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதாரங்களின்படி, ஜூன் 12 மாலை நேரத்தில் தங்கசாமி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். சிறை அதிகாரிகள் அவரது உடலில் ஒரு சில காயங்களை பதிவுசெய்துள்ளனர், மேலும் அவர் நடுங்குவதாகவும், அப்போது மது வாசனை வந்ததாகவும் கூறப்படுகிறது.
“அவரது உடல்நிலை சரியில்லாததால், ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டார். சிறை மருத்துவ பணியாளர்கள் அவரது நிலையை உன்னிப்பாகக் கண்காணித்துள்ளனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை மருத்துவமனைக்கு அடுத்துள்ள பிளாக்கிற்கு மாற்றப்பட்டார். இருப்பினும், பின்னர் அவர் சுருண்டு விழுந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,” என்றும் சிறை அதிகாரிகள் இந்தியா டுடேவிடம் தெரிவித்தனர்.
(பிரமோத் மாதவ்)
- வெண்பா
தமிழில்