காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் மக்கள் விரோத திமுக அரசு

செந்தளம் செய்திப்பிரிவு

காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் மக்கள் விரோத திமுக அரசு

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான  358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும்  காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அப்பள்ளிகளில் பயிலும் 65,000 மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை மாநகராட்சி மூலமாகவே செயல்படுத்துவதில்  எந்த சிக்கலும் இதுவரை  இல்லை. 

தற்போது இந்தத் திட்டத்தை தனியாரிடம் வழங்கி அதற்கு ரூ.19 கோடியையும் தாரைவார்த்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் போக்கின் தொடக்கமாக சென்னையில் இதை நடைமுறைபடுத்தியுள்ளது.

இது கார்ப்பரேட் கும்பலின் வரி ஏய்ப்புக்கும் அவர்களின் கொள்ளைக்கும், அரசு லஞ்ச வாவணியங்களில் ஈடுபடுவதற்கு மட்டுமே பயனளிக்கும். ஏற்கனவே corporate social responsibility என்பதன் மூலம் கல்விக்கான கார்ப்பரேட் வரியை நீக்கியதோடு பள்ளிகளை இயக்குவதை கார்ப்பரேட்களிடம் ஒப்படைத்திருந்தது மு.க.ஸ்டாலின் அரசு. கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருந்து முற்றிலும் அரசு விலகி கொள்ளும் போக்கின் தொடர்ச்சியே இந்த திட்டமும். 

படிக்கவும் - தொடர்புடைய கட்டுரை : நம்ம ஸ்கூல் திட்டம் : கல்வியைப் பறிமுதல் செய்யும் 'கார்ப்பரேட் நீதி'

சென்னை மாநகரைப் பொறுத்தவரை கடந்த ஆட்சியிலேயே காலை உணவுத் திட்டம்  தொடங்கப்பட்டது. அட்சய பாத்திரம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மாநகராட்சியோ, அரசோ அந்த நிறுவனத்திற்கு நேரடியாக எந்த நிதியும் வழங்கவில்லை. அதேநேரத்தில் ஆளுனர் மாளிகை மூலமாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. ஆட்சியிலில்லாதபோது அதை எதிர்ப்பதாக நாடகமாடிய  மு.க.ஸ்டாலின் இப்போது அதே திட்டத்தை  ரூ.19 கோடியை தனியாருக்கு கொடுத்து செயல்படுத்தச் சொல்கிறது. தனியார்மயமாக்கலில் அதிமுக அரசுக்கும்,  திமுக அரசுக்கும் என்ன வித்தியாசம்?

மேலும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் முழுவதையும் தனியார்மயமாக்கி வருகிறது. அரசின் அனைத்து துறை ஊழியர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றி வருகிறது. அவர்களை வெறும் 3500 ரூபாய் சம்பளத்திற்கு கொத்தடிமைகளாக்கி வருகிறது. தொழிலாளர் விரோத போக்கினை இந்த திராவிடமாடல் அரசு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

கொள்ளை லாபம் கொழிக்கும் சாராய வணிகத்தை மட்டும் விடாமல் நடத்தி வரும் அரசு கல்வி சேவையையும்  உணவு வினியோகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கின்றது. இதன் பெயர் சமூகநீதி அரசாம்!

செந்தளம் செய்திப்பிரிவு