ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற கோரி போராட்டம்
ஆளுநர் என்ற அதிகாரத்துவ முறையே ஒழிக்கப்பட வேண்டும்
தமிழக ஆளுநராக தற்போது உள்ள ஆர்.என்.ரவி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசாங்கத்துக்கு எதிராகவும், போட்டியாகவும் செயல்படுவதாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி என்ற கூட்டமைப்பு. மோடி அவர்களின் ஆட்சி தொடங்கியதிலிருந்தே, பி.ஜே.பி ஆளாத பல மாநிலங்களில், அந்த மாநிலங்களின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்க்குமான மோதல்கள் வலுத்து வருகின்றன. டெல்லியில் துவங்கி, மேற்கு வங்கம், புதுச்சேரி, மணிப்பூர், மகாராஷ்ட்ரா, தெலுங்கானா போன்ற பல மாநிலங்களில் தமிழ்நாடு உட்பட இந்த மோதல் நீடித்து வருகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை கவர்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பத் தவறியதன் மூலம் மக்களின் விருப்பத்துக்கு எதிராகவும், ஆளும் கட்சியின் தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக செயல்படுவதாக தமிழக திமுக அரசு குற்றம் சாட்டியது. குறைந்தது 19 மசோதாக்கள் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ரவியிடம் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசாங்கம் குற்றம் சுமத்துகிறது. ஆளுநர் ரவி அவர்கள் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான, ஆளுநர் அதிகாரத்துக்கு எதிரான தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களை சட்டமாக நடைமுறைபடுத்த விடாமல், மத்திய ஆளும் பிஜேபி அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்று பல்வேறு ஜனநாயக சக்திகளும் ஆளும் கட்சி தரப்பும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த பேரறிவாளன் விடுதலை சம்பந்தப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆளுநரின் அதிகாரத்தை குறித்தும், ஆளுநர் ரவியின் செயல்பாட்டையும் கடுமையாக விமர்சித்திருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஒவ்வொரு மசோதாவையும் ஆளுநர் முடிவெடுக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பது கூட்டாட்சி முறைக்கும் தவறான முன்னுதாரணம் என்று கடுமையாக சாடியது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு சிறு குறு வணிகர்களையும், உற்பத்தியாளர்களையும் கடுமையாக பாதிப்பதாகவும். இதனால் பல இலட்ச கணக்கான உள்நாட்டு சிறு குறு தொழில்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழந்து பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அரசு புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. மக்கள் அன்றாட தேவைக்கு வாங்கப்படும் அனைத்துவித பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதித்து வாட்டி வதைப்பதாக ஜனநாயக சக்திகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு பக்கம் மக்கள், இன்னொரு பக்கம் சிறு குறு தொழில் முனைவோர், தொழிலாளர்கள், விவசாயிகள் மட்டுமல்லாமல் மாநில அரசுகள்கூட ஜிஎஸ்டி மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சக்திகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதேபோல் ஜி.எஸ்.டி சம்பந்தப்பட்ட விசாரனை ஒன்றில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் (ஜூன் மாதம்) தீர்ப்பளித்தது. ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த முடிவுகள் அனைத்தும் "வழிகாட்டு மதிப்புகள்" கொண்ட பரிந்துரைகள் மட்டுமே என்றும் அவை மாநில அரசுகளை கட்டுப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜி.எஸ்.டி போன்ற நிதி அமைப்பு மாநில அரசுகளின் சுயாட்சி பாத்திரத்தை முடக்கி, கூட்டாட்சி முறையை சீர்குலைப்பதாக ஜனநாயக சக்திகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். ”மத்திய அரசு சர்வ அதிகாரத்தையும் தன்னுள் குவித்துக்கொண்டு, மாநில அரசுகளின் நிதி மேலாண்மையையும் தன் அதிகார வரம்பிற்குள் கொண்டு வருவதே ஜி.எஸ்.டி அமைப்பு முறை. இதுபோன்ற மத்திய அரசு பொருளாதாரத்தை (அதாவது நிதியையும், பொருளாதார முடிவுகளையும்) தனக்குள் ஒன்றுகுவிப்பதன் மூலம் அரசியல் ரீதியாக அனைத்து துறைகளையும் கட்டுப்படுத்துகிறது. அரசியல் ரீதியான முடிவுகளையும் நாட்டின் பல்வேறு துறைகளையும் கட்டுபடுத்துவதன் மூலம் ஆட்சி பாசிசத்தை நோக்கி செல்வதை தடுக்க முடியாது. இதுபோன்று பாஜக கட்சி, பாசிச ஆட்சியை கட்டியமைக்க முயல்வாதாகவும் அதை எதிர்த்து போராடவும் பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும்” என்றும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் சார்பாக மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் மக்களை அழைப்பதாக துண்டறிக்கைகள் அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
- செந்தளம் செய்திப் பிரிவு