திராவிட மாடலின் சமூக (அ)நீதி!

ஆனந்த விகடன்

திராவிட மாடலின் சமூக (அ)நீதி!

பட்டியலினத்தைச் சேர்ந்த தான் நன்றாகப் படிக்கிற ஒரே காரணத்துக்காக ஆதிக்க சாதி மாணவர்கள் தன்னை அவமானப்படுத்துவதாகப் பள்ளியில் புகார் செய்தார் நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர் சின்னதுரை, இதற்காக அவரையும் அவர் சகோதரியையும் ஒரு கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. தமிழகத்தையே அதிரவைத்த, எல்லோரையும் அவமான உணர்வுக்கு ஆளாக்கிய அந்தச் சம்பவத்துக்குப் பிறகு 'இனி இப்படி ஒரு கொடிய நிகழ்வு நடக்காது' என்றே பலரும் நம்பினார்கள். ஆனால், இரண்டே மாதங்களில் அதே நெல்லை மாவட்டத்தில் மீண்டும் ஒரு கொடிய சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

தச்சநல்லூர்ப் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், மாரியப்பன் என்ற இரண்டு பட்டியலின இளைஞர்களை, வெளியூர் போனபோது அறியாமல் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக .ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆறு பேர் கும்பல் வழிமறித்திருக்கிறது. அவர்களின் சாதி குறித்து விசாரித்து, பட்டியலினத்தவர் என்று தெரிந்ததும் அவர்களைக் கடுமையாகத் தாக்கி, ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி, அவர்கள்மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்திருக்கிறது. அவர்களிடம் பணத்தையும் கொள்ளையடித்திருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி என்ற கிராமத்தில் ஆதிக்க சாதியினர் கட்டும் கோயில் ஒன்றில் நடைபெறும் பாலீஷ் போடும் வேலைகளால் தங்கள் குடியிருப்புகளுக்குத் தூசு வருகிறது என்று பட்டியலின மக்கள் புகார் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்து, அந்தப் பகுதிக்குள் நுழைந்த 500-க்கும் மேற்பட்ட ஆதிக்க சமூகத்தினர் உருட்டுக்கட்டை மற்றும் தடிகளைக் கொண்டு பட்டியலின மக்களின் வீடுகளைத் தேடிச்சென்று கொடூரத் தாக்குதல் நடத்தி, தீயிட்டும் கொளுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் விஷ்ணுகுமார். கீரனூர் அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் அவர் பேசினார் என்பதற்காக, அந்த மாணவியின் உறவுக்காரர் உள்ளிட்ட சில மாணவர்கள் சேர்ந்துகொண்டு விஷ்ணுகுமாரைத் தாக்கியுள்ளனர். இதனால் அவமானம் அடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.

வெளியில் வந்தவை இப்படி நிறைந்து வழிய, வெளியில் தெரியாமல் ஏராளமான கொடுமைகள் நடக்கின்றன. வேங்கைவயலில் பட்டியலின மக்களின் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட வழக்கில் ஒரு வருடம் ஆகியும் இதுவரை ஒருவர்மீதும் நடவடிக்கை இல்லை.

மனிதத்தன்மையற்ற இந்தத் தாக்குதல்களையும் வன்கொடுமைகளையும் கண்டும் காணாமல் மௌனம் சாதித்து வேடிக்கை பார்க்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு. இது இப்படி இருக்க, 'சனாதன தர்மத்தை ஒழிப்போம்' என்று உதயநிதி ஸ்டாலின் பேசுவது வெட்டி அரசியல் பேச்சு. பெரியார், அறிஞர் அண்ணா கோரிய சமூக நீதிக்கு தி.மு.க அரசு செய்யும் துரோகம் இது.

இவ்வளவு ஏன்... இந்த 'திராவிட மாடல்' அரசின் ஆளுங்கட்சியினரும் அமைச்சர்களுமே பட்டியலினத்தவர்களை அவமதித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவர்களை நீக்கவும் இல்லை, கடும் நடவடிக்கை எடுக்கவுமில்லை என்பதுடன், குறைந்தபட்சம் முதல்வரின் கண்டனத்துக்குக்கூட அவர்கள் ஆளாகவில்லை. என்பதுதான் கொடூரமான உண்மை.

அரசின் இப்படிப்பட்ட அலட்சியம்தான், பட்டியலின மக்கள்மீது தாக்குதல் நடத்தும் சக்திகளுக்குத் துணிச்சலைக் கொடுக்கிறது. அரசின் இந்தப் போக்கினால் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்வது நிச்சயம். சொல்லுங்கள் முதல்வரே, இதுதான் உங்கள் சமூக நீதியா?

- ஆனந்த விகடன் 

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு