மணிப்பூரில் குக்கி பழங்குடிகளை அழிக்கும் மோடி-பைரன்சிங் அரசே பதவி விலகு!

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி

மணிப்பூரில் குக்கி பழங்குடிகளை அழிக்கும் மோடி-பைரன்சிங் அரசே பதவி விலகு!

மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி “ஒரு குஜராத் மாடல் கலவரத்தை” திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது ஆர்எஸ்எஸ் -பாஜக கும்பல். அரம்பை தெங்கோல், மெய்தி லீபன் போன்ற அமைப்புகளும், மணிப்பூர் பாஜக அரசும், மோடி கும்பலின் ஆசியுடன் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக மணிப்பூரை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து வருகின்றன. 

கார்ப்பரேட்டுகளுக்கு மலைப்பகுதிகளில் உள்ள நிலங்களையும் வளங்களையும் தாரை வார்க்க மெய்தி மக்களிடையே பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை பாஜக தூண்டிவிட்டது. கிறித்துவ, இசுலாமிய மத சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை கக்குவது; பழங்குடிகளை மியான்மர் வந்தேறிகள் என்பது; சர்வதேச போதை தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்டு அவர்கள் கஞ்சா பயிரிடுவதாக பிரச்சாரம் செய்வது; போன்ற பாசிச செயல் தந்திரங்களை மெய்தி லீபன் அரம்பை தெங்கோல் போன்ற சங்பரிவார குண்டர் படையின் மூலம் செய்து வந்தது. அதன்தொடர்ச்சியாக பாஜக பின்புலத்தில் செயல்படும் “மணிப்பூர் பழங்குடி சங்கம்” தொடுத்த வழக்கின் மீது மணிப்பூர் உயர் நீதிமன்றம் மார்ச் 27 அன்று சமவெளியில் வாழும் மெய்திக்களின் பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குக்கி மற்றும் நாகா பழங்குடிகள் போராட துவங்கினர். இப்போராட்டங்களை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு காவல்துறை மற்றும் இராணுவத்தின் உதவியுடன் ஆயுதக் கிடங்கில் இருந்த துப்பாக்கிகளை கைப்பற்றி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது சங்பரிவார கும்பல். குக்கிகளும் எதிர் தாக்குதல் தொடுக்க அது கலவரமாக மாறியது. சட்டமன்றம், ஆளும் வர்க்கம், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள், முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை அனைத்தையும் 90% சமவெளிப் பகுதி மக்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பழங்குடிகள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாகவும், மெய்திகள் இந்துக்களாகவும் இருப்பதால் மத ரீதியான உணர்வுகளை தூண்டி வருகிறது பாஜக அரசு. இதுவரை 200க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட கோவில்களும், 300க்கும் மேற்பட்ட தேவாலயங்களும், குக்கி மக்களின் 3000 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் செய்ததை போல பழங்குடிகளின் வீடுகள் அடையாள குறியீடிடப்பட்டு தாக்கப்பட்டுள்ளன. தாய்ப்பால் ஊட்டும் பெண்ணின் மண்டையை பிளப்பது; நடுரோட்டில் ஒரு பெண்ணை தலைச் சிதற சுட்டுக் கொல்வது; பெண்கள் இருவரை நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது என இரத்த வெறிகொண்டு வேட்டையாடுகிறது சங்பரிவார ஓநாய் கூட்டம். இவ்வாறு அங்கு திட்டமிட்டு ஓர் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக  கும்பல். 

காங்கிரஸ் ஆட்சி உலகமய-தாராளமய-தனியார்மய கொள்கைகளை வடகிழக்கு மாகாணங்களுக்கும் விரிவுபடுத்த 1991ல் “கிழக்கு நோக்கிய” கொள்கையை கொண்டு வந்தது. 2014ம் ஆண்டு மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு “கிழக்கில் செயல்படும்” கொள்கை என அதை பெயர் மாற்றம் செய்தது. பிறகு “குவாட்” மற்றும் “தடையற்ற இந்தோ-பசிபிக்” திட்டங்களின் ஒரு அங்கமாகவே கிழக்கில் செயல்படும் கொள்கையை பாஜக உருவாக்கியது. JICA வுக்காக ஜப்பானும், அம்பானி-அதானி நலன்களுக்காக இந்தியாவும் இணைந்து வடகிழக்கு மாகாணங்களில் வனப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு நாசகர திட்டங்களை செயல்படுத்துவதற்காக “கிழக்கில் செயல்படுவதற்கான கூட்டமைப்பை” உருவாக்கின. வடகிழக்கு மாநிலங்களின் வனங்களை பாதுகாப்பதற்கான வழிவகை செய்துள்ள அரசியலமைப்பு சட்டங்கள் பிரிவு 371க்கு எதிராக மணிப்பூர் நில சீர்திருத்த சட்டம் மற்றும் இந்திய வன சட்டத்தின் பிரிவுகளை திருத்தி 2023 வன பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. சமவெளியில் வாழும் மக்கள் மலைகளில் நிலம் வாங்குவதற்கு தடையாக உள்ள சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வது மட்டுமின்றி அவர்களை பழங்குடிகளாக அறிவித்துவிட்டால் பழைய சட்டங்களை செல்லாக்காசாக்கி குறுக்கு வழியில் மலைகளில் உள்ள நிலங்களை மெய்திகளின் பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதே பாஜக ஆட்சியின் நோக்கமாகும்.

மேலும் பதஞ்சலி, கோத்ரெஜ் அக்ரோவெட் போன்ற நிறுவனங்களுக்காக பல்லுயிர் பெருக்க மையங்களை தேர்ந்தெடுத்து அங்கு பாமாயில் உற்பத்திக்காக ரூ.11,140 கோடி ஒதுக்கி செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் விவசாய நிலமும், வன நிலமும் பணப்பயிர் நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. வன உயிர்கள், மண் வளம், நிலத்தடி நீர் போன்றவற்றை அழித்து பெரும் உணவுப் பற்றாக்குறைக்கு இவை இட்டுச் சென்று வருகின்றன. இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளில் எல்லாம் இத்திட்டம் தோல்வி அடைந்து  அந்நாடுகளில் நீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனாலும் மோடி அரசு நம் நாட்டில் இவற்றை அமல்படுத்தி வருகிறது.

வடகிழக்கு மாகாணங்களின் சந்தையை தெற்காசிய நாடுகளின் சந்தையுடன் இணைப்பதற்காகவும், அப்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதன் பெயரில், அமெரிக்க-ஜப்பான் மேலாதிக்கம் மற்றும் இந்திய துணை மேலாதிக்கத்தை நிறுவவும் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக அம்மாகாணங்களை மாற்றுவதற்காகவும், அதை எதிர்த்த பழங்குடிகளின் போராட்டங்களை நசுக்குவதற்காகவும் அசாம் ரைபில்ஸ் (Assam Rifles), மத்திய பாதுகாப்பு படை மற்றும் எல்லை பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அப்பகுதிளை காஷ்மீரைப் போல் இராணுவமயமாக்கி வருகிறது பாஜக அரசு. 

தேர்தலுக்கு முன்பு மணிப்பூரில் உள்ள பிளவுகள் சரிசெய்யப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக “மணிப்பூர் நிலப்பரப்பில் இனி குக்கிகளுக்கு இடமில்லை” எனும் நிலையை உருவாக்கியுள்ளது. 2021-ம் ஆண்டு குக்கி, நாகா, மற்றும் பிற பழங்குடி இனத்தைச் சேர்ந்த சட்டமன்ற பிரதிநிதிகளை உள்ளடக்கிய மலைப்பிரதேச கமிட்டி தன்னாட்சி அதிகாரம் வழங்க கோரும் “மாவட்ட தன்னாட்சி கவுன்சில் திருத்த மசோதா 2021” ஐ முன்மொழிந்தது. அரசியல், பொருளியல் துறைகளில் தன்னாட்சி கோரும் இம்மசோதாவை மாநில பாஜக அரசு நிராகரித்தது. இதை எதிர்த்தும் கூட 2021-ல் போராட்டம் நடந்தது. அப்போதும் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை.

எனவே, கார்ப்பரேட் நலன்களுக்காக மணிப்பூர் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி ரத்தம் குடித்து வரும் மோடி – பைரன்சிங் கும்பலை ஆட்சியிலிருந்து தூக்கியெறிய மணிப்பூர் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். மணிப்பூர் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுவிட்டால் பழங்குடிகள் மட்டுமின்றி மெய்திகளும் வாழ வழியின்றி சாக வேண்டியிருக்கும். கார்ப்பரேட்டுகளை வெளியேற்றக் கோரியும்; வனப் பாதுகாப்பு சட்டம், நில சீர்திருத்த சட்டம் போன்றவற்றை இரத்து செய்யக் கோரியும்; பழங்குடி அந்தஸ்து குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பழங்குடிகளின் தன்னாட்சி உரிமை கோரிக்கை மற்றும் 

6-வது அட்டவணையில் சேர்ப்பது ஆகிய கோரிக்கைகளை நாம் ஆதரிக்க வேண்டும். மணிப்பூரிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியது பாஜக அரசு, சங்பரிவார கும்பல் மற்றும் அவர்களின் கார்ப்பரேட் எஜமானர்களே ஒழிய பழங்குடிகள் அல்ல என்பதை மெய்திகள் உணர வேண்டும். மெய்தி உழைக்கும் வர்க்கம், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் மற்றும் பழங்குடிகள் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியைப் வீழ்த்த போராடுவது மிக அவசியமாகும்.

மணிப்பூரில் குக்கி பழங்குடிகளை அழிக்கும் மோடி-பைரன்சிங் அரசே பதவி விலகு!

கார்ப்பரேட்களின் கனிம வளக் கொள்ளைக்காக கொண்டுவந்துள்ள வனச் சட்டத்தை திரும்பப் பெறு! 

மணிப்பூர் குக்கி பழங்குடிகளின் சிறப்பதிகாரங்களை பறிக்காதே! பறித்ததை திரும்பக் கொடு!

இந்து மதவெறி பயங்கரவாத அமைப்புகளான அரம்பை, தெங்கோல், மெய்தி-லீபன் உள்ளிட்ட மக்கள் விரோத அமைப்புகளைத் தனிமைப்படுத்துவோம்!

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி, தமிழ்நாடு

Disclaimer: இந்த பகுதி முன்னணியின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு