விலைவாசி உயர்வுக்கேற்ற ஊதியமின்மையால் பட்டினியில் வாடும் இந்தியர்கள்
உணவுக்கான செலவு கட்டுப்படியாகாத அளவில் பெருகி வரும் நிலையில், பல குடும்பங்கள் பற்றாக்குறை உணவை உண்கின்றன. - விக்னேஷ் ராதாகிருஷ்ணன், சோனிக்கா லோகநாதன்
தரவு | ஐந்து ஆண்டுகளில் வீட்டில் உணவு தயாரிப்பதற்கான செலவு 65% உயர்ந்துள்ள நிலையில் ஊதியம் வெறும் 28%-37% வரை மட்டுமே உயர்ந்துள்ளது
மும்பையில் வீட்டில் சமைக்கப்படும் சைவ சாப்பாட்டின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் 65% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், நகர்ப்புற மகாராஷ்டிராவில் பணிபுரியும் ஒரு தொழிலாளியின் சராசரி தினக்கூலி 37% சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஒரு மாதாந்திர ஊதியம் பெறும் தொழிலாளியின் ஊதியம் வெறும் 28% சதவிகிதமே அதிகரித்துள்ளது.
தினக்கூலி/சம்பளத்திற்கும் செலவினங்களுக்கும் இடையிலான இந்த ஏற்றத்தாழ்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கூட அதிகம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இந்திய வீடுகளில் உணவுக்காக ஒதுக்கப்படும் தொகை, அவர்களை சாப்பாட்டை குறைத்துக் கொள்வதற்கோ அல்லது சாப்பாட்டில் சிலவற்றை குறைத்துக் கொள்வதற்கோ இட்டுச் செல்கிறது.
ஒரு சராசரி இந்தியக் குடும்பம் காலை, மதியம், இரவு உணவுகளில் நாளைக்கு இரண்டு அளவு சாப்பாட்டிற்குச் (thali) சமமான உணவை உட்கொண்டால் மட்டுமே அவர்களின் அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று கருதப்படுகிறது. இதில் கடந்த கால தரவுகள் ஏதுமில்லாததால் அசைவ உணவுகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. சரக்குகள் விலைகளின்படி, நிலையான தரவு கிடைப்பதால் மும்பை மாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மும்பையின் குறிப்பான ஊதிய விவரங்கள் கிடைக்காததால் மகாராஷ்டிராவின் பொதுவான தினக்கூலி மற்றும் சம்பளங்கள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
மும்பையில் சராசரியாக இரண்டு அளவு சாப்பாடு விலை எவ்வளவு என்பதை கணக்கிட, அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களான - துவரம் பருப்பு, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி, உருளைக்கிழங்கு, பட்டாணி, கோதுமை மாவு, முட்டைக்கோஸ், சூரியகாந்தி எண்ணெய், உப்பு, மற்றும் அரிசி - ஆகியவை தேவையான அளவு அளவிடப்பட்டது. மும்பையில் அந்த பொருட்களை வாங்குவதற்கான சராசரி சில்லறை விலைகள் - இந்த ஆண்டு ஆகஸ்ட் 8, ஓராண்டு (2022) முன்பு , மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2020) மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு (2018) - என நுகர்வோர் விவகார அமைச்சகம் மற்றும் தேசிய தோட்டக்கலைத் துறை ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டது.
அட்டவணை 1 | இரண்டு அளவு சாப்பாட்டைத் தயாரிக்கத் தேவையான பொருட்களின் எடை மற்றும் அதன் சில்லறை விலைகள் ரூபாயில் அட்டவணையிடப்பட்டுள்ளது.
உதாரணமாக, இரண்டு அளவு சாப்பாட்டை செய்யத் தேவைப்படும் 125 கிராம் துவரம் பருப்பை வாங்குவதற்கான செலவு கடந்த ஐந்து ஆண்டுகளில் ₹13.1ல் இருந்து ₹21.1 ஆக அதிகரித்துள்ளது (அட்டவணை 1). இதேபோல் 100 கிராம் தக்காளி விலை ₹5.7ல் இருந்து ₹17 ஆக உயர்ந்துள்ளது. மாறாக, 300 கிராம் உருளைக்கிழங்கின் விலை ₹12ல் இருந்து ₹8 ஆக குறைந்தது.
அட்டவணை 2 | அளவு சாப்பாட்டின் விலை (ரூபாயில்)
இரண்டு அளவு சாப்பாட்டிற்கான அனைத்து பொருட்களின் விலை இந்த ஆண்டு ₹112.6, கடந்த ஆண்டு ₹82, 2020ல் ₹81.4, 2018ல் ₹67.9 (அட்டவணை 2). சாராம்சத்தில், ஒரு மாதம் முழுவதும் ஒரு மும்பை குடும்பத்தின் இரண்டு அளவு சாப்பாடுகள் தயாரிப்பதற்கான செலவு 2018 இல் ₹2,037 இல் இருந்து 2023 இல் ₹3,378 ஆக உயர்ந்துள்ளது.
அட்டவணை 3 | ஒரு தொழிலாளியின் சராசரி தினக்கூலி (பொதுத்துறையில் வேலை பார்ப்பவர் தவிர) மற்றும் நகர்ப்புற மகாராஷ்டிராவில் மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியரின் சராசரி சம்பளம்
மும்பையின் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கேற்பு விகிதம் 70.5% சதவிகிதமாகவும், பெண்களின் விகிதம் 18.8% ஆகவும் இருந்ததால், மகாராஷ்டிராவின் ஆண்கள் ஊதியம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. நகர்ப்புற மகாராஷ்டிராவில் ஆண்களின் தினக்கூலி 2018 இல் நாளொன்றுக்கு ₹301 ஆக இருந்தது, 2023 இல் அது ₹414 ஆக உயர்ந்தது. இது மாதாந்திர வருவாயாக கணக்கிட இது 30 ஆல் பெருக்கப்பட்டது. நகர்ப்புற மகாராஷ்டிராவில் ஆண்களின் சராசரி மாத சம்பளம் அதே காலகட்டத்தில் ₹20,520ல் இருந்து ₹26,335 ஆக மட்டுமே அதிகரித்துள்ளது.
அட்டவணை 2 மற்றும் 3 இல் இருந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் அளவு சாப்பாடு தயாரிப்பதற்கான செலவு 65% அதிகரித்துள்ள வேளையில் தினக்கூலி 37% மற்றும் மாத சம்பளம் 28% மட்டுமே அதிகரித்துள்ளது என்பதை காண முடிகிறது.
அட்டவணை 4 | மாத ஊதியத்தில் உணவு தயாரிப்பதற்கான செலவின் பங்கு
மாதத்திற்கு தினமும் இரண்டு அளவு சாப்பாடு தயாரிப்பதற்கான செலவு, ஊதியத்தின் பங்காக கணக்கிடுகையில், 2018 இல் ஒரு தொழிலாளியின் மாத வருமானத்தில் 22.5% இருந்தது. அது 2023 இல் 27.2% ஆக உயர்ந்துள்ளது. மாத சம்பளம் பெறுபவர்களின் விஷயத்தில் , இது அட்டவணை 4 இல் காட்டப்பட்டுள்ளபடி, அதே காலகட்டத்தில் 9.9% இலிருந்து 12.8% ஆக அதிகரித்துள்ளது.
அளவு சாப்பாடு தயாரிப்பதற்கு மசாலா மற்றும் நெய் போன்ற கூடுதல் பொருட்கள் தேவைப்பட்டாலும், அட்டவணை 1 இல் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களுக்கு மட்டுமே தரவு கிடைத்தது. எனவே, உண்மையில் ஒரு அளவு சாப்பாடு தயாரிப்பதற்கான செலவு, நாம் மேலே மதிப்பிட்டுள்ளதை விட ஊதியத்தில் அதிக பங்காக இருக்கும்.
ஆதாரம்: நுகர்வோர் விவகாரங்கள் துறை, தேசிய தோட்டக்கலை வாரியம், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு, மகாராஷ்டிரா மாநிலத்திற்கான மாவட்ட மதிப்பீடுகள் பற்றிய அறிக்கை.
- வெண்பா
(தமிழில்)