தேசிய கல்விக்கொள்கையால் முக்கியத்துவத்தை இழக்கின்றனவா இயற்பியலும் வேதியியலும்?

முனைவர். ஆஷாக் ஹுசைன்

தேசிய கல்விக்கொள்கையால் முக்கியத்துவத்தை இழக்கின்றனவா இயற்பியலும் வேதியியலும்?

ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வி தளங்களில் ஒரு மௌனப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளை படிப்பதற்காக “மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத” படிப்புகளிலும் மாணவர்கள் சேர்வதற்கு ஆர்வத்தோடு இருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகியுள்ளது. தற்போது அகியிருக்கும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, இந்தியக் கல்வி முறையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது, நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டது என முதலில் சொல்லப்பட்டாலும், அதன் அமலாக்கத்திற்குபிறகு அறிவியல் கல்வியின் மையத் தூண்களாக இருந்த இயற்பியல் மற்றும் வேதியியல் இளங்கலை பாடப்பிரிவுகள் அதன் முக்கியத்துவத்தை இழக்கும் வகையில் நிலைமை மாறியுள்ளது. மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இது பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பல்கலைகழகங்களில் 3 ஆண்டுகள் இளங்கலை படிப்பு என்ற நிலையிலிருந்து நான்கு ஆண்டுகள் என 2023 ஆண்டு முதல் மாற்றப்பட்டுள்ளது. இந்த 4 ஆண்டுகளில் வருடத்திற்கு இரண்டு செமஸ்டர் என மொத்தம் எட்டு செமஸ்டர்களுக்கான தேர்வை “மாணவர்கள்” எழுதுவார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்த பாடங்களை விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. இவ்வாறான மாற்றங்களால் முக்கிய பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடியாமல் போகும். மத்திய பல்கலைக்கழகங்களோடு தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கும் இது அமலாகும். NEP (NATIONAL EDUCATION POLICY-2020) இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்களின் பல்வேறு அறிவுசார்ந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கான முழுமையான, நெகிழ்வான மற்றும் பலதரப்பட்ட கல்வி முறையை உருவாக்கும் நோக்கத்துடனும், விமர்சனப்பூர்வமான சிந்தனை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உருவாக்கும் நோக்கத்துடனும் தொடங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அறிவியல், தொழிற்நுட்பம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றோடு பரந்த அளவிலான திறன்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்ட மாணவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட தாராளவாத கலை அணுகுமுறையை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது ஆனால் நடைமுறையில் இன்று பல்வேறு எதிர்மறையான பாதிப்புகளை அது உருவாக்கியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் தேசிய கல்விக்கொள்கையின் அமலாக்கம், முக்கிய அறிவியல் பாடங்களான இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகள் மாணவர்களுக்கான அடிப்படைப் அறிவியல் பாடங்களாகக் கருதப்பட்டு வந்த நிலையில், இப்போது பல கல்லூரிகளில் major/minor என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது முதன்மைப் பாட நிலையிலிருந்து நீக்கப்பட்டு, துணைப்பாடம் என்ற அளவில்  குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இயற்பியல் மற்றும் வேதியியலை முதன்மைப் பாடமாக எடுக்க விரும்பிய மாணவர்களும் வேறு வழியின்றி தங்கள் விருப்பங்களுக்கு மாறாக வேறு பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் சூழலை அது உருவாக்கியுள்ளது. 

உதாரணமாக, காஷ்மீரில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் சீமா என்றொரு படிப்பில் ஆர்வமுள்ள அறிவார்ந்த ஏழை மாணவி  எப்போதும் இரசாயனங்களில் பொதிந்துள்ள மர்மங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமுடன் இருப்பார். வேதியியல் உலகத்தை ஆராய்வதில்தான், தன் வாழ்க்கைப் பயணம் அமைய வேண்டும் என விரும்பினாள். எனவே இளங்கலையில் வேதியியலின் அடிப்படைகளைப் படிக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலும், மேலும் வேதியியல் சார்ந்த பணிகளில் வேலை செய்ய ஆவலுடனும், மருத்துவ உலகை ஆராய்வதிலும், அதன் இரகசியங்களை அறிந்துகொள்ளும்  நம்பிக்கையிலும் அவள் உறுதியாக இருந்தாள். மூலக்கூறுகளுக்கிடையே உள்ள இரகசியங்களைக் கண்டுபிடித்து வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய புதுமையான வழிமுறைகளைக் காண ஆர்வமுடன் இருந்தாள். ஆனால் எதிர்பாராதவிதமாக, சீமா தனது சொந்த ஊரில் உள்ள கல்லூரியில் வேதியியல் பாடத்தை தேர்வு செய்ய முடியாமல் போனது. ஏனெனில் அந்தக் கல்லூரியில் வேதியியல் பாடம் முதன்மைப் பாடமாக இல்லாமல் துணைப்பாடமாக குறைக்கப்பட்டதாக கூறிவிட்டார்கள். மேலும், ஆன்லைன் வழியாக பிற கல்லூரியில் இணைவதற்கு முயற்சி செய்யும் தருணத்தில் சரியான ஆலோசனை இல்லாமல் போனதால், கால அவகாசமின்றி வேறு கல்லூரியிலும் சேர முடியாமல் போனது. முதன்மை மற்றும் துணைப்பாடம் குறித்தும் பாடங்களைத் தேர்ந்தெடுப்பதன் தாக்கங்கள் குறித்தும் உறுதியாகத் தெரியாமல் இருந்ததாலும், வழிகாட்டுதல் இல்லாத சூழ்நிலையாலும், இறுதியில் அவர் தனது விருப்பத்திற்கு மாறாக ஆர்வமில்லாத படிப்பில் சேர்ந்தார். வேதியியல் மீதான அவரது ஆர்வம் அப்படியே இருந்தது. அதனால் அவர் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவில் முக்கிய இடத்தைப் பெற முடியவில்லை. இது மட்டுமல்லாமல், ஜம்மு காஷ்மீரில் உள்ள 142 கல்லூரிகளில் சுமார் 45 கல்லூரிகளில் மட்டுமே வேதியியல் மற்றும் இயற்பியல் முக்கிய அங்கீகரிக்கப்பட்ட பாடங்களாக இருக்கின்றன சீமாவின் அனுபவம் வருந்தத்தக்க வகையில் அவருக்கு மட்டுமல்லாமல், மேலும் மேலும் பலருக்கும் பொதுவானதாகி வருகிறது. 

மேலும், NEP 2020 பலதரப்பட்ட கற்றலை ஊக்குவிக்கும் என சொல்லப்பட்டது, ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை, ஆன்லைன் சேர்க்கை வழிமுறை காரணமாக பாடத் தேர்வு மற்றும் கல்லூரி தேர்வு செயல்முறையின் போது மாணவர்களுக்கு வழிகாட்டுதலில் நிலவும் இடைவெளிகள் அதிகரித்துள்ளது. தனிநபர் சேர்க்கைகள் நேரடியாக நடைபெற்றபோது ஆசிரியர்களிடம் மாணவர்களே கலந்தாலோசிக்கவும், பாட அமைப்புகளைப் பற்றி புரிந்து கொள்ளவும், அவர்களின் இலக்குகளைத் தெளிவுபடுத்தவும் அவை வாய்ப்பாக அமைந்திருந்தன. ஆனால், இந்தத் தொடர்புகள் இல்லாமல், சீமா போன்ற மாணவர்கள் முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல் திசைமாறிச் செல்கின்றனர்.. மேலும், ஆன்லைன் வழியாக நடைபெறும் மாணவர் சேர்க்கையினால் எளிய வழியில் பல கல்லூரிகளை அணுகுவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் ஜனநாயகப்படுத்துவதற்கும் வாய்ப்பாக இருந்தாலும், பல மாணவர்கள் சரியான ஆலோசனையைப் பெற முடியாமல் அது தடுக்கவும் செய்கிறது. வரையறுக்கப்பட்ட குறைந்த அளவிலான இணைய இணைப்பு வசதியும் போதுமான உதவியும் இல்லாத சூழலினால் சிக்கலை மேலும் அதிகப்படுத்துகிறது. நிலையான ஆன்லைன் உள்கட்டமைப்பு வசதி  கடினமாக இருக்கும் நிலையில், முக்கிய அறிவியல் பாடங்கள் குறைந்த சேர்க்கையையே காண்கிறது. இதனால் எளிதான அல்லது அதிக நெகிழ்வான படிப்புகளுக்கு மாணவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.

“கவுன்சலிங் முறையை மேம்படுத்துவதன் மூலமும், ஆன்லைன் மற்றும் நேரிடையாக என இரண்டு விதமான சேர்க்கை செயல்முறைகளை மேற்கொள்வதன் மூலமும், அனத்துவிதமான அறிவியல் பாடங்களை ஊக்குவிப்பதன் மூலமும், இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற அடிப்படை அறிவியல் பாடங்கள் நமது வகுப்பறைகளில் இருந்து மறைந்துவிடாமல் பாதுகாக்க முடியும். அப்போதுதான் எதிர்கால சந்ததியினருக்கு அறிவியல் பாரம்பரியத்தைப் முழுமையாகக் கடத்த முடியும். சீமா போன்ற ஏழை மாணவர்களின் கல்விப்பயணம், அவர்களின் கனவுகளை நனவாக்க முடியும். மாநில அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வளர்ப்பதிலும் முன்னேற்றம் காண முடியும்.

பல ஆண்டுகளாக இயற்பியல் மற்றும் வேதியியல் அறிவியலின் முக்கியப் பாடங்களாக புதுமையான அறிவியல் கண்டுபிடிப்பிற்கும் விமர்சனப் பூர்வமான சிந்தனைக்கும் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை வளர்க்கும் பாடங்களாக திகழ்ந்து வருகிறது. இந்தப் பாடங்கள் பொறியியல், மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற துறைகளின் முதுகெலும்பாக அமைகின்றது. மாநில வளர்ச்சி மற்றும் தேசிய வளர்ச்சிக்கும் முக்கிய பாங்காற்றியுள்ளது. NEP 2020 அமலாக்கத்தால் கல்விக் கட்டமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் ஆன்லைன் சேர்க்கை செயல்முறையின் எதிர்பாராத தாக்கம், மிக குறைவான மாணவர்களே இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப்  பாடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் அறிவியல் கல்வியின் அடித்தளமே சிதைந்துவிடும் அபாயம் உள்ளது. இந்த போக்கு தொடர்ந்தால், கல்லூரிகள்  அறிவியல் பாடங்களை மேலும் மேலும் குறைத்துவிட வாய்ப்புள்ளது, ஆய்வகங்களை பயன்படுத்தப்பட முடியாது, மேலும் எதிர்கால சந்ததியினருக்கு ஆழமான அறிவியல் கல்வி கிடைக்காமல் போகலாம். இந்த சரிவு அறிவியல் கல்வியில் வெற்றிடத்தை உருவாக்கும். மேலும் மாணவர்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை தேர்ந்தெடுப்பதை விரும்பாமல் போகவும் வாய்ப்புள்ளது. இந்த அறிவியல் பாடங்களை கற்பிப்பதில் பல ஆண்டுகள் படித்து  பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, நிச்சயமற்ற பணிச்சூழலையும் உருவாக்கியுள்ளது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களின் அறிவு இல்லாமல் போனால், விமர்சன சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், சிக்கல் தீர்க்கும் தலைமுறைகளை நாம் இழக்க நேரிடும். இது உள்ளூர் தொழில் வளர்ச்சியை பாதிக்கும், அறிவியல் நிபுணத்துவத்தின் பன்முகத்தன்மையைக் குறைக்கும். 

எனவே, ஜம்மு காஷ்மீர் கல்லூரிகளில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகள் மறைந்து விடாமல் தடுக்க, இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். கல்வியை மறுகட்டமைப்பு செய்வதற்கான NEP 2020 அணுகுமுறையென்பது, நமக்கு எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஒரு பக்கம் மாணவர்களை  பன்முகத்திறமையாளர்களாக மேம்படுத்தத் தயார்ப்படுத்த முயற்சி செய்யும் அதே வேளையில், மறுபுறம் சில அடிப்படைக் கட்டமைப்பு அம்சங்களை பலப்படுத்த வேண்டும். குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் அதிகமான கவனம் தேவை. மாணவர்களுக்கு பரந்த அளவிலான திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு விருப்பப்பாட (elective) படிப்புகள் படிப்பதும் மற்றும் தொழிற்பயிற்சிக்கு (vocational) முக்கியத்துவம் தருவதும் கொள்கை நிலைப்பாடாக இது கொண்டுள்ளது என்றாலும், இயற்பியல் மற்றும் வேதியியல் போன்ற முக்கியப் பாடங்களை அகற்றுவது ஒருவிதமான ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கிவிடும். எனவே, தற்போது செய்ய வேண்டியவை என்னவெனில், 

    ஆன்லைன் சேர்க்கை செயல்முறையின் போது விரிவான ஆலோசனையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்

    மாணவர்களுக்கு வழிகாட்டுதலில் உள்ள இடைவெளியைக் குறைக்க பாடத் தேர்வு, எதிர்காலத்திற்கான ஆக்கப்பூர்வமான திட்டமிடல் உள்ளிட்டவற்றை ஆலோசிக்க, பயிற்சி பெற்ற ஆலோசகர்களை அணுகுவதை உறுதிசெய்ய வேண்டும்.

    கூடுதலாக, ஏற்கனவே நிலவிய நேரடியான சேர்க்கையுடன் ஆன்லைன் வழியான சேர்க்கையினால் விளையும் சாதகமான அம்சங்களை  இணைக்க வேண்டும்

    எல்லாவற்றிற்கும் மேலாக அறிவியல் மற்றும் அறிவியல் அல்லாத, மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத பாடங்கள் அடிப்படையில் பிரித்து சேர்க்கைகளின் இணைப்பை ஊக்கப்படுத்தக் கூடாது 

    ஜம்மு மற்றும் காஷ்மீரில் கல்வி மற்றும் தொழிலாளர் வளர்ச்சியின் அத்தியாவசியத் தூண்களாக இயற்பியல் மற்றும் வேதியியலை முன்னிலைப்படுத்தி, அறிவியல் வளர்ச்சிக்கு மாநில அளவில் கவனம் செலுத்த வேண்டும்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், NEP 2020 நல்ல நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது என ஒன்றிய அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், இயற்பியல் மற்றும் வேதியியல் போன்ற முக்கியமான பாடங்கள் நீக்கப்படும் சூழலை உருவாக்கியதால், போதுமான வரவேற்பை எந்த மாநிலத்திலும் பெறவில்லை. ஜம்மு மற்றும் காஷ்மீரில், மாணவர்கள் ஏற்கனவே தனித்துவமான கல்வி சவால்களை எதிர்கொள்கின்றனர். எனவே மேற்கூறிய  பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒன்றிய அரசு அவசர கவனம் செலுத்த வேண்டும். ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் மேம்படுத்துவதன் மூலமும், ஆன்லைன் மற்றும் நேரடி என இரண்டு வகை சேர்க்கை செயல்முறைகளை மேற்கொள்வதன் மூலமும், அறிவியல் பாடங்களை ஊக்குவிப்பதன் மூலமும், இந்த அடிப்படைப் பாடங்கள் நமது வகுப்பறைகளில் இருந்து மறைந்துவிடாமல், எதிர்கால சந்ததியினருக்கான அறிவியல் அடிப்படையில் கேள்வி கேட்கும் பாரம்பரியத்தைப் பாதுகாக்க உதவும். சீமா போன்ற ஏழை மாணவர்களின், கனவுகளை நனவாக்க உதவுவதிலும், பிராந்தியத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வளர்ப்பதிலும் இந்த கல்விக்கொள்கை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

(கட்டுரையாளர்: முனைவர்.அஷக் உசைன் ஜம்முவில் உள்ள அரசு காந்தி நினைவு அறிவியல் கல்லூரியில் வேதியியல் இணைப் பேராசிரியர்)

தமிழில்: மோசஸ் பிரபு 

மாற்று இணையதளம்

https://maattru.in/2024/11/nep2020-antiscience/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு