இந்தியப் பொருளாதாரத்தின் கவலைக்கிடமான நிலைமை: நுகர்வு கணக்கெடுப்பு சொல்லும் புள்ளிவிவரம்
தி வயர்
கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் என்னவென்றால், நமது ஒட்டுமொத்த செலவினம் இன்னும் முன்னேறிய நாடுகளை விட குறைவாக உள்ளது; அதேபோல, வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளவர்களோடு ஒப்பிடும் போது, மொத்த செலவினங்களில் உணவுக்காக இந்தியர்கள் ஒதுக்கும் தொகை அதிகமாக உள்ளது.
குடும்பங்களின் நுகர்வு செலவின கணக்கெடுப்பை (CES) நடத்துவதற்கு ஏற்கனேவ பத்தாண்டுகளுக்கு மேலாக தாமதாகமாகிவிட்டது. கடந்த காலத்தில், இந்த ஆய்வுகள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டன. இது வாழ்க்கைத் தரம் குறித்தும், குடும்பங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வு பற்றிய முக்கியமான தகவல்களை வழங்குகிறது.
முன்பு எடுக்கப்பட்ட குடும்ப நுகர்வுச் செலவுக் கணக்கெடுப்பின் (HCES) தரம் குறித்து எழுந்த சர்ச்சைகைள் காரணமாக வெளியிடப்படாமல் இருந்ததா அல்லது மக்களின் பொருளாதார நிலைமைகள் பற்றிய உண்மைகள் அம்பலமாகிவிடும் என்ற காரணத்திற்காக வெளியிடப்படாமல் இருந்ததா என்பது ஒரு மர்மமாகவே உள்ளது. முந்தைய கணக்கெடுப்பை வெளியிட வேண்டாமென கூறியதற்கு பின்னால் உள்ள விரிவான விளக்கங்களை குறிப்பாக தொழில்நுட்ப அம்சங்கள் குறித்தான விளக்கங்களை மட்டுமாவது வழங்கியாக வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில், நல்ல நிர்வாகத்திற்கு அடிப்படையே வெளிப்படைத் தன்மைதான். கூறப்படுவதுபோல் கணக்கெடுப்பு முறையின் தரம், நம்பகத்தன்மை சிக்கல்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை அறிந்து கொள்ளவதற்கு குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமையுள்ளது. மேலும், பல்வேறு கணக்கெடுப்பின் முடிவுகளும்கூட இன்னும் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பின் (SECC), மூலம் மத்திய அரசின் முக்கியமான சமூக நலத் திட்டங்களில் குறிப்பான பயனாளிகளை தேர்வு செய்வதற்கு உள்ள முக்கியமான தரவுகளும் மறைக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ SECC இணையதளம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதோடு, வரவிருக்கும் தேர்தல்கள் காரணமாகவோ அல்லது கணக்கெடுப்பில் கண்டறிந்த புள்ளிவிவரங்களின் தரத்தில் குறைபாடுகள் காணப்படுவதாக சொல்லபடும் சாக்குப்போக்குகள் காரணமாகவோ நீண்ட காலமாக முடங்கிய நிலையில் உள்ளது!
2022-23 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட குடும்பங்களின் நுகர்வுச் செலவின கணக்கெடுப்பு (HCES) முறை மாற்றப்படாமல் இருந்திருந்தால், வறுமை எந்தளவிற்கு குறைந்துள்ளது என்பதை ஒப்பீடு செய்து கண்டறிந்திருக்க முடியும். எவ்வாறாயினும், HCES 2022-23க்கான ஆய்வறிக்கைகள் "ஒப்பாய்வு செய்வதில் உள்ள சிக்கல்களை" பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டுகின்றன; முந்தைய கணக்கெடுப்புகளுடன் ஒப்பிடுகையில் நுகர்வுச் செலவினங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றன. எனவே, முந்தைய தரவுகளுடன் ஒப்பிட முடியாத நிலை தொடர்வதால், ஒப்பாய்விலிருந்து எடுக்கப்பட்ட எந்த முடிவும் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டும். இந்தக் குறைப்பாட்டை ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில், சராசரி வீட்டு உபயோகச் செலவினங்களில் காணப்படும் சில அடிப்படைப் போக்குகளையும், மாதிரிகளையும் கோடிட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இருப்பினும், தனித்தனிக் குடும்பத்தின் தரவுகள் இல்லாமல் நம்மால் விரிவாக பகுப்பாய்வு செய்ய முடியாது.
முதலாவதாக, 2022-23ல் நடத்தப்பட்ட குடும்பங்களின் நுகர்வுச் செலவினக் கணக்கெடுப்பில் (HCES) வறுமை குறைந்துள்ளது என்பதை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், கணக்கெடுப்பு முறையில் காணப்படும் மாற்றங்களை கணக்கில் கொள்ளாமலேயே முந்தைய நுகர்வோர் செலவினக் கணக்கெடுப்பு (CES) தரவுகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன என்பதை வலியுறுத்துவது முக்கியமாக உள்ளது. கூடுதலாக, முன்பிருந்த திட்டக் கமிஷன் போலல்லாமல், இன்றைய சூழலுக்கான வறுமைக் கோட்டை நிதி ஆயோக் நிறுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பொருள் என்னவென்றால், இன்றைய சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு புதிய வறுமைக் கோடு நிறுவப்படும் வரை, தனித்தனி குடும்பங்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் வரை, விரிவான வறுமை குறைப்பு தொடர்பான முடிவுகளை வெளியிட முடியாது. அதேபோல, இந்தத் தரவுகளைக் கொண்டு, முந்தைய சுற்றுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகளுடன் ஒப்பிடுவது சவாலானதாகவே இருக்கும். இதற்கிடையில்தான், NITI ஆயோக் பல பரிமாண வறுமை கணிசமான அளவிற்கு குறைந்துள்ளது என்பன போன்ற கட்டுக் கதையை உருவாக்கிவிட்டுள்ளது; அதாவது 25 கோடிக்கும் மேற்பட்ட நபர்கள் பல பரிமாண வறுமைக் குறியீட்டின் (MPI)படி வறுமை கோட்டிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளனர் என்று கூறியிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, பல்பரிமாண வறுமைக் குறியீடு(MPI) என்பதே குறைபாடுகள் நிறைந்த கணக்கெடுப்பு என்பதை சொல்ல வேண்டியுள்ளது.
உண்மை ஊதியம் உயரவே இல்லை
வறுமை குறைக்கப்பட்டுள்ளது(உண்மையில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றுதான் சொல்லி வருகிறார்கள்) என NITI ஆயோக் அடித்துச் சொல்வதற்கு நியாயமான எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை; முன்னதாக, 2004 முதல் 2012-க்கு இடைப்பட்ட காலத்தில், விவசாயம் அல்லாத வேலை வாய்ப்புகள் அதிகரித்ததால், விவசாயத்தில் இருந்து தொழிலாளர்கள் வெளியேறியதற்கும் உண்மை ஊதியம்(விலையேற்றத்தை கழித்த பிறகான ஊதிய நிலை) உயர்வதற்கும் வழிவகுத்ததால், வறுமை குறைந்தது என்று சொல்வதற்கு சரியான காரணம் இருந்தது. இதன் விளைவாக குடும்பங்களின் நுகர்வு செலவினம் அதிகரித்ததோடு வறுமை நிலைகளும் குறைந்தன. எனினும் தற்போதைய அரசாங்கத்தின் பேச்சுகளை நியாயப்படுத்துவதற்கு எந்தவொரு சரியான காரணமும் இருக்க முடியாது. 2013 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் விலைவாசி ஏற்றத்திற்கும், கூலி உயர்வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாத நிலையில் ஒரே அளவில் அதிகரித்துள்ளது (உண்மை ஊதியம் தேங்கியுள்ளது) என்கிறபோது நுகர்வுச் செலவில் அதிகரிப்பு இருக்க வேண்டும் என்ற பொதுக் கருத்திற்கு முரண்படும் வகையில் குடும்பங்களின் நுகர்வு செலவினம் குறைந்துள்ளதாகவே அரசாங்கத்தின் கணக்கெடுப்பு கூறுகிறது. இதுமட்டுமல்லாது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவிற்கேற்ப குடும்பங்களின் சேமிப்பு விகிதமும் குறைந்துள்ளது என்பதை மத்திய புள்ளியில் அமைப்பு வெளியிட்டுள்ள குடும்ப சேமிப்பு தரவுகளைக் கொண்டு பார்க்கும் தெரிய வரும்.
கடந்த பத்தாண்டுகளில் குடும்பங்களின் நுகர்வு செலவினங்கள் அதிகரித்ததற்கு சில பொருளாதார காரணிகள் பங்களித்திருக்க வேண்டும். 2011-12 முதல் 2018-19 வரையிலான காலத்தில், அதாவது கொரோனா பெருந்தொற்று பரவுவதற்கு முன்பு, மொத்த வேலையில்லாதோர்களின் எண்ணிக்கை 1 கோடியிலிருந்து 3 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில்தான், உண்மை ஊதியம் எவ்வித உயர்வுமின்றி தேங்கியிருந்ததோடு, வேலையின்மை விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. எவ்வித கல்வி பயிலாத, வேலைவாய்ப்பில் இல்லாத அல்லது திறன் பயிற்சியும் பெறாத (NEET-Not in Employment, Education and Training) இளைஞர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் மேலதிகமாக உயர்ந்துள்ளது. கூடுதலாக, சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி (சிஎம்ஐஇ)யின் ஆய்வின் படி, தொழிலாளர்கள் உழைப்புச் சந்தையிலிருந்து வெளியேறி வருகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது; இது வேலை தேடி அலைபவர்கள் வேலை தேடுவதையே கைவிடும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதைக் குறிக்கிறது. 2012 முதல் 2020-22க்கு இடைப்பட்ட காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது இளைஞர்களின் கல்வி நிலையைப் பொறுத்து ஏற்கனவே இருமடங்காக அல்லது மூன்று மடங்காக அதிகரித்துவிட்டதை காட்டுகிறது.
இந்தியாவில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஏழ்மையான நிலையில் உள்ளனர். வேலையிலுள்ளவர்கள் குறித்தும், வேலைத் தேடி அலைபவர்களின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் சீரான கால இடைவெளியில் நடத்தப்படும் கணக்கெடுப்பின் (PLFS, 2022-23) படி, மொத்தமுள்ள 43 கோடி கிராமப்புற பணியாளர்களில் 24.6% பேர், ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கும் குறைவாக (பெயரளவு ஊதியம்) சம்பாதிக்கிறார்கள். இந்த ஆபத்தான புள்ளிவிவரம் மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் எதிர்கொள்ளும் படுமோசமான சூழ்நிலையை எடுத்துக்காட்டுகிறது. மொத்தமுள்ள 13.8 கோடி நகர்ப்புற தொழிலாளர்களில், தோராயமாக 10% தொழிலாளர்கள் இதே போன்ற அவலநிலையையே எதிர்கொள்கின்றனர் (படம் 1 ஐப் பார்க்கவும்). இந்த புள்ளிவிவரங்கள் வறுமையின் தொடர்ச்சியான, எங்கும் நிறைந்த தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு, வறுமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று கதையளப்பதையும் அம்பலப்படுத்துகிறது.
PLFS-2022-23 கணக்கெடுப்பின்படி ஊதியத் தரவை ஆழமாக ஆராயும்போது மற்றொரு சிக்கலான போக்கு வெளிப்படுகிறது: தொழிலாளர்களில் கணிசமான பகுதியினர் நாள் ஒன்றுக்கு ரூ. 100 முதல் 200 என்ற கொத்தடிமை நிலையிலான கூலி வரம்பிற்குள் ஊதியம் பெறுபவர்களாக இருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் வகையில், கிராமப்புற சுயதொழில் செய்பவர்களில் 17% பேரும், மாதச் சம்பளம் பெறுபவர்களில் 12% பேரும் மேற்சொன்னது போன்ற கூலி வரம்பிற்குள்தான் வருகிறார்கள் என்பது அவர்களின் படுமோசமான நிலையை எடுத்துக்காட்டுகிறது. அவ்வகையில், வறுமையில் வாடும் இந்த தொழிலாளர்களின் நிலையை கணக்கில் கொண்டு பார்க்கும் போது, எங்கும் பாலாறும் தேனாறும் பாய்வதாக கூறும் பேச்சில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், பல தொழிலாளர்களின் உழைப்புச் சக்தி (குறிப்பாக கிராமப்புறங்களில்) இன்றளவும்கூட ஊதியம் பெறாத குடும்ப பணிகளைச்/தொழிலைச் செய்யும் நிலையிலேயே நீடித்து வருகிறது. மொத்த கிராமப்புற பணியாளர்களில் சுமார் 22% பேரும், நகர்ப்புற பணியாளர்களில் 6.6% பேரும் இதுபோன்ற நிலையில் தவித்து வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு வரை ஊதியம் பெறாத குடும்பத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குள் (2020 முதல் 2023 வரை) கிராமப்புறங்களில் மட்டும் கூடுதலாக 4 கோடி தொழிலாளர்கள் ஊதியம் பெறாத குடும்பப் பணியாளர்களாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; இதுவே நகர்ப்புறங்களில் 20 இலட்சமாக மாறியுள்ளது.
படம் 1: இந்தியாவில் தொழிலாளர்களின் தினசரி வருவாய்/கூலி (பெயரளவு), 2022-23.
ஆதாரம்: காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) 2022-23 தனித்தனி குடும்பங்களின் தரவுகளைப் பயன்படுத்தி கட்டுரையாசிரியர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
சமத்துவமின்மை
இந்திய கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் நுகர்வுச் செலவினங்களில் எந்தளவிற்கு ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது என்பதை கணக்கிடுவதற்கு 2011-12 இல் எடுக்கப்பட்ட நுகர்வுச் செலவுக் கணக்கெடுப்புடன்(CES) 2022-23 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட தற்போதைய குடும்ப நுகர்வுச் செலவுக் கணக்கெடுப்பில் (HCES) கண்டறிந்த புள்ளிவிவரங்களை கொண்டு ஒப்பாய்வு செய்துள்ளனர். கீழேயுள்ள அட்டவணை கிராமப்புற-நகர்ப்புற நுகர்வு செலவினங்களில் வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வை குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரிடையே வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வை விளக்குகிறது. நுகர்வுக்காக குறைந்தளவு செலவு செய்யும் பிரிவினரில்(0-5%) கிராமப்புற நகர்ப்புற வேறுபாடு என்பது 2011-12இல் 34% ஆக இருந்தது, அதுவே இப்போது(2022-23) 46% ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்ற போக்கு 5-10% நுகர்வுக் பிரிவினர் மத்தியிலும் காணப்படுகிறது, அங்கு கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடு 2011-12 இல் 34% ஆக இருந்து 2022-23 இல் 46% ஆக அதிகரித்துள்ளது. மேலும், 10-20% மற்றும் 20-30% நுகர்வுப் பிரிவினரில் கிராமப்புற-நகர்ப்புற ஏற்றத்தாழ்வு குறைந்த அளவில்கூட அதிகரிக்கவே செய்துள்ளது.
நேர்மறையான விசயம் என்னவென்னறால், பிற நுகர்வு பிரிவினர்கள் மத்தியில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான இடைவெளியில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புகளில் பணக்கார நுகர்வு பிரிவினர்களுக்கு இடையிலான வேறுபாடு கணிசமாகக் குறைந்துள்ளது, இது 2011-12 இல் 109% ஆக இருந்து 2022-23 இல் 79% ஆக மாறியுள்ளது. பணக்கார நுகர்வு பிரிவினர் மத்தியில் அதிக சமத்துவத்தை நோக்கிய நேர்மறையான போக்கு காணப்படுகிறது. இருப்பினும், நுகர்வு முறைகளை மிகக் கூர்ந்து ஆராயும்போது, குறைந்த நுகர்வு அளவுகளைக் கொண்டவர்களிடையே கிராமப்புற-நகர்ப்புற சமத்துவமின்மை அதிகரித்தாலும், அதிக நுகர்வு பிரிவினர்களிடையே குறைகிறது என்பது தெளிவாகிறது.
அட்டவணை 1: வெவ்வேறு வருமானக் குழுக்களில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையேயான குடும்ப நுகர்வுச் செலவினங்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள்
மாநில அளவில் நுகர்வுச் செலவினங்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வு
2011-12 மற்றும் 2022-23 க்கு இடையில், மாநில அளவில் குடும்பங்களின் சராசரியான மாதாந்திர செலவினம் (MPCE) பெருமளவில் தேக்க நிலையை வெளிப்படுத்தியுள்ளது. சமூக-பொருளாதார அடுக்கில் கீழ்மட்டத்தில் உள்ள மாநிலங்கள் பெரும்பாலும் அதே நிலையில்தான் இருந்து வருகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், குடும்பங்களின் சராசரியான மாதாந்திர செலவினத் தரவரிசையில், பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிறிய மாநிலங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பது தெரியவருகிறது.
2011-12 முதல் 2022-23 வரையிலான காலக்கட்டத்தில் கிராமப்புற குடும்பங்களுக்கான சராசரி மாதாந்திர செலவினத்தை (MPCE) கீழே உள்ள அட்டவணை பட்டியலிடுகிறது.
அட்டவனை-2: கிராமப்புற குடும்பங்களுக்கான சராசரி மாதாந்திர செலவினம்
2011-12 ஆம் ஆண்டில், மேற்கு வங்காளம், அசாம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களின் நுகர்வு அளவை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், மிகக் குறைந்தளவில்தான் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2022-23 வாக்கில், இந்த மாநிலங்கள் சிற்சில மாற்றங்களுடன், இப்போதும் பட்டியலின் கீழ்வரிசையில்தான் உள்ளன. அசாம், பீகார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களும் முன்பிருந்த நிலையில்தான் இருந்து வருகின்றன. கூடுதலாக, முன்பு சராசரி நுகர்வு செலவினம் அதிகமாக இருந்த ராஜஸ்தான் மாநிலம் தனது நிலையிலிருந்து சரிந்துள்ளது. அதேபோல், குஜராத் போன்ற பொருளாதார ரீதியாக வளமான மாநிலங்களும் அவற்றின் நுகர்வு தரவரிசையில் சரிவை சந்தித்துள்ளன.
அட்டவனை-3: நகர்ப்புற குடும்பங்களுக்கான சராசரி மாதாந்திர செலவினம்
மேலே உள்ள அட்டவணையில் மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களின் தரநிலைகள் கணிசமான சரிவைக் கண்டுள்ளன. நகர்ப்புற குடும்பங்களுக்கான சராசரி மாதாந்திர செலவினத் தரவரிசையின் அடிப்படையில் பெரிய மாநிலங்களை விட சிறிய மாநிலங்களின் நிலை இதிலும் சிறப்பாக இருந்துள்ளன. 2022-23ல், அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மணிப்பூர், பீகார் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் நிலை பின்தங்கியே உள்ளன.
அசாம் மணிப்பூரைத் தவிர, குறிப்பிடப்பட்ட அனைத்து மாநிலங்களும் வட இந்தியாவைச் சேர்ந்தவை, அவற்றில் பெரும்பாலானவை - மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவை நீங்கலாக - இந்தி மொழி அதிகம் பேசப்படும் மாநிலங்களாக இருந்து வருகின்றன. சராசரி நுகர்வு குறிப்பிடத்தக்க அளவில் இரண்டு மடங்காக அதிகரித்திருந்த போதிலும், இந்தி மொழி அதிகமாக பேசப்படும் மாநிலங்களின் நுகர்வு அளவுகள் என்பது வளர்ந்த மாநிலங்களை விட பின்தங்கியே உள்ளன. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களை பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, இந்த நுகர்வு போக்கு முறைகளில் தொடர்ச்சியாக ஏற்றத்தாழ்வு நிலவுவதை பார்க்க முடிகிறது.
"இரட்டை எஞ்சின் ஆட்சி" நடப்பதாக கூறப்படும் உத்தரபிரதேசத்தின், குடும்ப நுகர்வு செலவினங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. உத்தரப்பிரதேசத்தின் நகர்ப்புற குடும்பங்களின் நுகர்வு செலவினத் தரவரிசையில் 2011-12ல் 23வது இடத்திலிருந்த அதே நிலைமைதான் 2022-23 வரை தொடர்ந்துள்ளது. இதேபோல், கிராமப்புற குடும்ப நுகர்வு செலவினங்களைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசத்தின் தரவரிசை 2011-12ல் 23வது இடத்திலிருந்து 2022-23ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஒருபடி சரிந்து 24ம் இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இரட்டை எஞ்சின் ஆட்சியும், வளர்ச்சித் திட்டங்கள் இருப்பதாக சொன்னபோதும் கணிசமான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதையே குறிக்கிறது.
ஒரு காலத்தில் குஜராத் மாடல் வளர்ச்சி என்று சொல்லப்பட்டது போல, எந்தவொரு பிரகாசமான வளர்ச்சியும் அங்கு காணப்படுவதாகத் தெரியவில்லை. கிராமப்புற குடும்ப நுகர்வின் அடிப்படையில் அதன் தரவரிசை 17ல் இருந்து 19 ஆகவும், நகர்ப்புற குடும்ப நுகர்வு செலவினத்திலோ 14ல் இருந்து 16 ஆகவும் சரிந்துள்ளது.
நகர்ப்புற குடும்பங்களுக்கான சராசரி மாதாந்திர செலவினத் தரவரிசையில் உள்ள 28 மாநிலங்களில் 27வது இடம் பிடித்திருக்கும், பீகாரின் "நல்லாட்சி மாடல்" பற்றியும் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், நல்லாட்சி நடப்பதாக கூறினாலும், பீகாரில் நகர்ப்புற குடும்பங்களின் பொருளாதார நிலை மோசமாகவே உள்ளது. கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக "நல்லாட்சி" நடப்பதாக கூறப்படும் பீகாரில்தான், பொருளாதார நிலைமையை பிரதிபலிக்கும் குடும்ப நுகர்வு செலவினங்களுக்கான தரவரிசையில் நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருந்து வருகிறது. கிராமப்புற குடும்ப நுகர்வு செலவினத் தரவரிசையில் சிறிது முன்னேற்றம் இருந்தாலும், அதாவது, 25வது இடத்திலிருந்து 22வது இடத்திற்கு நகர்ந்தாலும், கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலைமையை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மேம்படுத்த இது போதாது.
குடும்பங்களின் சராசரி மாதாந்திர செலவினத் தரவரிசை அடிப்படையில் பார்க்கும்போது, வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி காணப்படுகிறது. தென் மாநிலங்கள் பொதுவாக சிறப்பாக செயல்படுகின்றன. தென் மாநிலங்கள் மனித வள மேம்பாட்டிற்கு ஆரம்பத்தில் முன்னுரிமை அளித்து, சிறந்த ஒட்டுமொத்த குடும்ப நல்வாழ்வுக்கு வழிவகுத்ததே இந்த வேறுபாடு தோன்றுவதற்கு காரணமாக உள்ளது. குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் முன் மனித வள மேம்பாட்டில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
பொருளாதாரம் வளரும்போது, உணவுக்காக ஒதுக்கப்படும் வீட்டுச் செலவுகளின் பகுதி இயல்பாகவே குறைகிறது என்று எங்கெல்ஸ் விதி சொல்கிறது. இருப்பினும், இது முன்னேற்றம் என்று அர்த்தமல்ல. மற்ற செலவுகளுடன் ஒப்பிடும்போது நமது உணவுச் செலவு குறைந்தாலும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டில் உணவுக்கான செலவின வீதம் இன்னும் அதிகமாகவே உள்ளது. இந்தியா மற்றும் பிற வளர்ந்த நாடுகள் மற்றும் ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் காணப்படும் மொத்த செலவினங்களுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு நபரும் உணவுக்காக ஆண்டுதோறும் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை கீழே உள்ள வரைபடம் விளக்குகிறது. இந்த புள்ளிவிவரம் 2021ல் வெளியிடப்பட்டதாகும். இது போன்ற சர்வதேச ஒப்பீடுகள் கணக்கெடுப்பு முறையில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக சிலக் குறைபாடுகளைக் கொண்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே துல்லியமான புள்ளிவிவரங்களைக் காட்டிலும் அவை பொதுவான கருத்தை நமக்குத் தருகின்றன என்பதைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் அவற்றிற்கு பொருள்விளக்கம் காண வேண்டும்.
வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது ஒட்டுமொத்த செலவினம் குறைவாக உள்ளதோடு, மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது செலவினங்களில் கணிசமான பகுதியை உணவுக்காக ஒதுக்குகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியதே இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயமாகும்.
வரைபடம்: 2021 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட ஆசிய நாடுகள் மற்றும் பிற வளர்ந்த நாடுகளுக்கான மொத்த செலவினங்களில் ஒரு நபருக்கான சராசரி ஆண்டுச் செலவினம், உணவுக்காக செலவிடப்பட்ட பங்கு பற்றிய ஒப்பீடு.
கிராமப்புற குடும்பங்களின் மொத்த செலவீனத்துடன் ஒப்பிடும் போது உணவுக்கான செலவினச் சதவீதம் 2011-12 இல் 52.90 சதவீதத்திலிருந்து 2022-23 இல் 46.38 சதவீதமாகவும், நகர்ப்புற குடும்பங்களுக்கு 2011-12 இல் 42.62 சதவீதத்திலிருந்து 39.17% சதவீதமாகவும் குறைந்துள்ளது. இருப்பினும், இதை பொருளாதார முன்னேற்றத்தின் அறிகுறியாக பொருள் விளக்கம் காண்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமெனில், அமெரிக்காவில் (2018), மொத்த நுகர்வோர் செலவினத்தில் உணவுக்காக 6.4% மட்டுமே ஒதுக்கியுள்ளனர், சிங்கப்பூரில் (2018) 6.9% ஒதுக்கியுள்ளனர். இதுவே இங்கிலாந்தில் (2019) 7.9 சதவீதமாகவும் சுவிட்சர்லாந்தில் (2019) 8.9 சதவீதமாகவும் இருக்கிறதென்பதை ஒப்புநோக்க வேண்டும்.
சந்தோஷ் மெஹ்ரோத்ரா, பானில் உள்ள IZA இன்ஸ்டிடியூட் ஆஃப் லேபர் எகனாமிக்ஸில் ஆராய்ச்சி உறுப்பினராகப் பணிபுரிகிறார், அதே நேரத்தில் ராகேஷ் ரஞ்சன் குமார் கேரளாவில் உள்ள இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி உறுப்பினராக உள்ளார்.
(சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ராகேஷ் ரஞ்சன் குமார்)
- சகா (தமிழில்)
மூலக்கட்டுரை : https://m.thewire.in/article/economy/consumption-indicator-survey-doesnt-paint-a-bright-picture-of-indias-economy/amp