வனவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் புதிய வனப்பாதுகாப்புச் சட்டம் - 2022
பெரு நிறுவனங்கள் வனத்தை அழிக்க மாற்றப்படும் வனப்பாதுகாப்புச் சட்டம்
புதிய வனவிதிகளின்படி, மத்திய அரசு வனவாழ் மக்களின் அனுமதியின்றி காடுகளை யாருக்கு வேண்டுமானாலும் தாரைவார்க்க முடியும்.
தமிழ்நாடு: வன உரிமைச் சட்டத்தின் விதியை மீறும் வகையில், வனவாழ் மக்களின் அனுமதி பெறாமல், தனியார் நில வணிக முதலாளிகள் காடுகளை சூறையாட அனுமதிக்கும் வகையில், மத்திய அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது.
ஜூன் 28 அன்று 2003 இல் அறிவிக்கப்பட்ட முந்தைய வன விதிகளுக்குப் பதிலாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEFCC) வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வனப் பாதுகாப்பு விதிகள் 2022ஐ, அறிவித்துள்ளது.
இந்த விதிகள் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வன நிலத்தை தாரைவார்க்கும் செயல்முறையை எளிதாக்குவதோடு சுருக்கவும் செய்துள்ளது. மேலும் அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளபடி, இழப்பீடாக பிற இடங்களில் காடு வளர்ப்புக்கு நிலம் கிடைப்பதை எளிதாக்குகிறது.
இப்போது, அமலுக்கு வரும் விதிகளில் மற்றொரு முக்கியமான மாற்றத்தை பற்றி Newslaundry செய்தி வலைத்தளம் பதிவுசெய்துள்ளது. காடுகள் அழிக்கப்படுவதற்கு முன், பட்டியலின பழங்குடியினர் மற்றும் காடுகளில் வசிக்கும் பிற மக்களிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கான பொறுப்பை மத்திய அரசு முன்பு கட்டாயமாக்கியிருந்தது. தற்போது இந்த பொறுப்பு மாநில அரசுகளின் மீது மாற்றப்பட்டுள்ளது.
முந்தைய விதிகளின்படி, வன நிலத்தை தனியார் திட்டங்களுக்கு ஒப்படைப்பதற்கு முன், வனவாழ் மக்களின் ஒப்புதலின் உண்மைத்தன்மையை மத்திய அரசு முதலில் சரிபார்க்க வேண்டும். ஆனால் இப்போது, காட்டை தாரைவார்ப்பதற்கான ஒப்புதலை முதலில் வழங்கிவிடலாம். அதன்பிறகு, இழப்பீடாக பிற இடங்களில் காடு வளர்ப்பிற்கான கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம். பிறகு, மாநில அரசு இம்மக்ககளின் வன உரிமைகளுக்கான கோரிக்கைகளை தீர்த்துவைத்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
இவ்விதிகளின்படி, ஒரு திட்டத்திற்கான இணக்க(சம்மத) அறிக்கையைப் பெற்ற பிறகு, வனப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 2-இன் கீழ் மத்திய அரசு இறுதி ஒப்புதலை அளிக்கலாம். பின்னர் மாநில அரசையோ அல்லது ஒரு யூனியன் பிரதேச (UT) ஆட்சிப்பகுதியிடமோ இம்முடிவை தெரிவிக்கலாம்.
வன உரிமைச் சட்டம் - அதாவது வன உரிமைகள் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கிய மற்ற அனைத்து சட்டங்கள், விதிகளின் விதிமுறைகளை இத்திட்டம் நிறைவேற்றுவதையும் ஒத்துப்போவதையும் மாநில அரசோ அல்லது யூனியன் பிரதேச (UT) ஆட்சிப்பகுதியோ உறுதி செய்ய வேண்டும். பின்னர், வன நிலத்தை வேறு விசயங்களுக்கு பயன்படுத்துவது, பட்டா வழங்குதல் அல்லது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ரத்து செய்வதற்கான உத்தரவை வெளியிடலாம்.
இந்த மாற்றம் வன உரிமைச் சட்டத்தை மீறுகிறது; இதன் கீழ் அரசாங்கங்கள் வனவாழ் மக்களின் பாரம்பரிய நிலங்களில் ஒரு திட்டத்தை அனுமதிக்கும் முன் அவர்களின் சுதந்திரமான, நன்கு முன்னறிவிப்பு செய்யப்பட்ட நிலையில் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று நியூஸ்லாண்ட்ரி செய்தித்தளம் தெரிவித்துள்ளது. வேதாந்தா நிறுவன தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இந்த செயல்முறையை ஆதரிப்பதாக இந்த அறிவிக்கை கூறுகிறது.
வன உரிமைச் சட்டத்தை மேற்பார்வையிடும் பழங்குடியினர் விவகார அமைச்சகம், இறுதி அனுமதி வழங்கப்படுவதற்கு முன், வனவாழ் மக்களின் ஒப்புதலைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று டிசம்பர் 2015 இல் அறிவுறுத்தியிருந்தது. இதுவே சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் "முடிவெடுக்கும் செயல்முறையை முன்னறிவிப்பதோடு வளப்படுத்தவும் செய்வதாக அமையும்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
"வன உரிமைச் சட்டத்தின் (FRA) கீழ் உள்ள உரிமைகோரல்களுக்கு ஆதரவாக இருக்கும் ஆதாரங்களை அழிப்பதை/மாற்றுவதைத் தடுக்க வேண்டுமானால், [இறுதி] அனுமதிக்கு முன்னதாகவே உரிமைகளை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது" என்று பழங்குடியினர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக நியூஸ்லாண்ட்ரி செய்தித்தளம் கூறுகிறது.
இறுதி ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு, கிராம சபையை நாடினால், அது கிராம சபையின் பணி அதிகாரத்தை பொருத்தமற்றதாக மாற்றிவிடுவதோடு எவ்வித மாற்றமும் இல்லாமல் வனப்பகுதியில் கொடுக்கப்பட்ட இறுதி அனுமதி நடைமுறைக்கு(fait acoompli) வரும் என்று அமைச்சகம் கூறியது.
சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையின் புகழ்பெற்ற ஆய்வாளரான சரச்சந்திர லேலே இது உண்மைதான் என ஒப்புக் கொண்டார்.
"இந்த மாற்றம் வன அனுமதியை கிட்டத்தட்ட ஒரு மாற்ற முடியாத செயலாக மாற்றுவதன் மூலம் விஷயங்களை மோசமாக்குகிறது ... வன அனுமதி ஏற்கனவே மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, வன உரிமைகள் சட்டத்தின்(FRA) கீழ் உள்ள உரிமைகள் தொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதை பெற போராடுவதை எங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது," என்று அவர் நியூஸ்லாண்ட்ரி செய்தித்தளத்திடம் கூறினார்.
சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம்- 1986, நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம்- 1974 மற்றும் காற்று (மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம்- 1981 முதலிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான மூன்று சட்டங்களையும் திருத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. "சிறிய விதி மீறல்களுக்கும் சிறை தண்டனை என்ற பயத்தை களைய வேண்டும்" எனும் நோக்கில் இந்த சட்டத்திருத்தமானது இதுபோன்ற "குற்றங்களை குற்றமற்ற ஒன்றாக" மாற்ற முனைகிறது.குற்றவாளிகள் இனி சிறைத்தண்டனை அச்சுறுத்தலை எதிர்கொள்ள மாட்டார்கள், ஆனால் பெரிய அளவில் பணத் தொகையை அபராதமாக செலுத்த நேரிடும். சட்ட மற்றும் கொள்கை சார்ந்த வல்லுநர்கள் இந்த திருத்தங்கள் "மாசுபடுத்தலாம், தண்டம் கட்டிக் கொள்ளலாம்" என்பது போன்ற மனப்பான்மையை ஊக்குவிக்கும் என்று நம்புகின்றனர்.
விதிகளில் செய்த பிற மாற்றங்கள்
வனப் பாதுகாப்பு விதிகள், 2022, திட்டத் மதிப்பாய்வு குழுவால் வெவ்வேறு திட்டங்கள் குறித்த காலக்கட்டத்திற்குள் மதிப்பாய்வு செய்ய வேண்டிய காலக்கெடுவையும் பரிந்துரைக்கிறது. 5-40 ஹெக்டேர்களுக்கு இடையில் தாரைவார்க்கப்படும் அனைத்து சுரங்கம் அல்லாத திட்டங்களும் 60 நாள்களுக்குள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும், அதே நேரத்தில் சுரங்கத் திட்டங்கள் 75 நாள்களுக்குள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். 40 முதல் 100 ஹெக்டேர் வரையிலான சுரங்கம் அல்லாத திட்டங்களை 75 நாள்களுக்குள்ளும், சுரங்கத் திட்டங்களை 90 நாள்களுக்குள்ளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
100 ஹெக்டேருக்கு மேல் உள்ள வன நிலங்களை தாரைவார்க்கும் பொழுது சுரங்கம் அல்லாத திட்டங்களுக்கு 120 நாள்களுக்குள்ளும், சுரங்கத் திட்டங்களுக்கு 150 நாள்களுக்குள்ளும் திட்டங்களை இக்குழு ஆய்வு செய்ய வேண்டும்.
தாரைவார்க்கப்பட வேண்டிய வன நிலம், தனது புவியியல் பரப்பில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் காடுகளைக் கொண்ட மலைப்பாங்கான அல்லது பெரிய பெரிய மலைகள் நிறைந்த மாநிலத்தில் அல்லது UT இருந்தால், தனது மொத்த புவியியல் பரப்பில் 20%க்கும் குறைவான காடுகளைக் கொண்டுள்ள வேறு மாநிலத்தில் இழப்பீட்டாக காடு வளர்ப்பு திட்டத்தை (Compensatory Afforestation) மேற்கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேச நிர்வாகங்கள் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், தனது புவியியல் பரப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான காடுகளைக் கொண்டுள்ள பிற மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் உள்ள திட்டங்களுக்கும் இந்த முறை பொருத்திக்கொள்ளலாம்.