இந்திய-அமெரிக்க பாதுகாப்புக் கூட்டணியை வலுப்படுத்த ஏடிஎம்எம்-பிளஸ் மாநாட்டில் 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
வெண்பா (தமிழில்)
இந்தியாவும் அமெரிக்காவும், பாதுகாப்புத் துறையின் அனைத்து அம்சங்களிலும் இரு நாடுகளுக்கிடையேயான யுத்ததந்திர ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவை வழிகாட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க 10 ஆண்டு கால செயல் திட்டத்தில் அக்டோபர் 31, 2025 அன்று கையெழுத்திட்டன.
"அமெரிக்கா-இந்தியா முக்கிய பாதுகாப்புக் கூட்டுத் திட்டம்" ("Framework for the U.S.-India Major Defence Partnership") என்ற ஒப்பந்தத்தில், மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 12வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் பிளஸ் உச்சிமாநாட்டில் (ADMM-Plus), இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்கப் போர்த் துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50% சுங்க வரிகளை விதித்ததால் உறவுகளில் ஏற்பட்ட பதட்டமான சூழலுக்கு மத்தியில் இந்த மாற்றம் வந்துள்ளது.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் தொடர்ந்து நீடிக்கும் உத்வேகத்தைப் பாராட்டுக்குள்ளானது. அனைத்து முக்கிய துறைகளிலும் கூட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. உருவாகி வரும் சவால்கள் மற்றும் பாதுகாப்பு ஈடுபாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டது. பாதுகாப்புத் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
ராஜ்நாத் சிங் 'X' தளத்தில்:
"எங்கள் வளர்ந்து வரும் ஒருமித்த யுத்ததந்திர கொள்கைக்கான கூட்டின் புதிய சகாப்தத்தை இது அறிவிக்கும். பாதுகாப்பு எங்கள் இருதரப்பு உறவுகளின் முக்கிய தூணாக இருக்கும். சுதந்திரமான, வெளிப்படையான, விதிகளைப் பின்பற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதற்கு எங்கள் கூட்டணி மிகவும் இன்றியமையாதது ஆகும்”.
பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியாவே அமெரிக்காவின் முக்கிய பங்காளியாகத் தொடர்கிறது என்றும், சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பகுதியை உறுதி செய்வதற்கான கூட்டு ஒத்துழைப்பையும் அமெரிக்கப் போர்த் துறை செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஹெக்செத் ஒரு பதிவில், இந்த திட்டம் இருதரப்பு பாதுகாப்புக் கூட்டை மேம்படுத்துகிறது என்றும், இது பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான அஸ்திவாரமாக உள்ளது என்றும் கூறினார்.
மேலும் அவர் பதிவில்: "நாங்கள் எங்கள் ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகிறோம். எங்கள் பாதுகாப்பு உறவுகள் இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையாக உள்ளன”.
இந்த பாதுகாப்புக் கட்டமைப்பானது, அடுத்த பத்தாண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டணியை விரிவாக்குவதற்கு ஒருங்கிணைந்த கொள்கை திசையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவும் அமெரிக்காவும் வழக்கமான இராணுவப் பயிற்சிகள், உளவுத் தகவல் பகிர்வு, தொழில்துறை ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பங்காளிகளுடன் யுத்ததந்திர ஒருங்கிணைப்புக்கான கூட்டு வழிமுறைகள் மூலம் தங்கள் பாதுகாப்பு உறவைத் தொடர்ந்து விரிவுபடுத்துகின்றன என்றும் அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
31.10.2025 அன்று நடந்த இந்தக் கூட்டத்தில் தூதுக்குழு மட்டத்திலான விவாதங்களும், அதைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கிடையே நேரடி கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எதிர்காலத் திட்டங்களை மதிப்பாய்வு செய்ய இரு தலைவர்களும் இந்த ஆண்டு மே மாதத்திலேயே தொலைபேசி உரையாடலை நடத்தினர். அப்போது, ஹெக்செத் இருதரப்பு தற்காப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக நேரில் விவாதம் செய்ய அமெரிக்காவிற்கு வருமாறு ராஜ்நாத்சிங்கை அழைத்திருந்தார். இருப்பினும், சுங்க வரி தொடர்பான சிக்கல்களுக்கு மத்தியில், சிங்கின் ஆகஸ்ட் மாத பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
மூலக்கட்டுரை:https://www.thehindu.com/news/national/india-usa-ink-10-year-defence-framework-pact/article70224347.ece
=========================================
இந்தியா, அமெரிக்கா வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய நிச்சயமற்ற நிலைமைக்கு மத்தியில் பாதுகாப்பு கூட்டை 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளன
இந்தியாவும் அமெரிக்காவும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31 2025) தங்களின் பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு புதுப்பித்துள்ளன. இது அவர்களின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் யுத்ததந்திர வடிவங்களை வரையறுக்கும் ஒப்பந்தத்தின் மூன்றாவது நீட்டிப்பாகும். இந்த ஒப்பந்தம் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் பிளஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, கோலாலம்பூரில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்கப் போர்ச் செயலாளர் பீட்டர் ஹெக்ஸெத் ஆகியோரால் கையெழுத்தானது.
ஹெக்ஸெத், X தள பதிவில், புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பு “பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுப்பு அஸ்திவாரமாக எங்கள் பாதுகாப்புக் கூட்டணியை மேம்படுத்துகிறது” என்று கூறினார். இரு தரப்பினரும் “தங்களின் ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகின்றனர்” என்றும், பாதுகாப்பு உறவுகள் “ஒருபோதும் இல்லாத அளவுக்கு வலிமையாக உள்ளன” என்றும் தெரிவித்தார்.
ராஜ்நாத்சிங் X பதிவில், இந்த ஒப்பந்தம் “இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவின் முழுமைக்கும் கொள்கை வழிகாட்டுதலை வழங்கும்” என்றார். இதை “புதிய சகாப்தத்தின்” தொடக்கம் என்று அழைத்த அவர், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளின் “முக்கிய தூணாக” தொடர்ந்து இருக்கும் என்றும், “வளர்ந்து வரும் நமது யுத்ததந்திர ஒத்துழைப்பிற்கான வழிகாட்டியாகும்” என்றும் கூறினார். “சுதந்திரமான, வெளிப்படையான, விதிகளுக்குட்பட்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்த எங்கள் கூட்டணி மிகவும் முக்கியமானது,” என்றும் தெரிவித்தார்.
டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, மோடி பிப்ரவரி மாதம் வாஷிங்டனுக்குப் பயணம் செய்தபோது, வெளியிட்ட கூட்டு அறிக்கையானது “21 ஆம் நூற்றாண்டின் அமெரிக்கா-இந்திய பிரதான பாதுகாப்பு கூட்டணிக்கான (காம்பாக்ட்)” அடுத்த பத்தாண்டிற்கான கட்டமைப்பு போன்ற இந்த ஆண்டின் பிற்பகுதியில் கையெழுத்திடும் திட்டங்களை அறிவித்தது. இந்தியாவும் அமெரிக்காவும் முதன்முதலில் 1995 இல் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது பல ஆண்டுகளாக நீடித்த பனிப்போர் கால அந்நியப்பட்ட நிலைக்குப் பிறகு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, ஜூன் 2005 இல், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் ஆகியோர் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு உறவுக் கட்டமைப்பில் கையெழுத்திட்டனர், இது மீண்டும் 2015 இல் புதுப்பிக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு முதல், இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு வர்த்தகம் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திலிருந்து சுமார் 24 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது. இதனால் இந்தியாவுடன் அதிக வர்த்தகத்தில் ஈடுபடும் முதல் 5 நாடுகளுக்குள் அமெரிக்காவை கொண்டு வந்துள்ளது. பிப்ரவரியில், கூடுதலாகா ஆறு P-8I கடல்சார் ரோந்து விமானங்களைக் கொள்முதல் செய்வது, ஜாவலின் பீரங்கிதாக்கு ஏவுகணைகள் மற்றும் ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்களின் இணை தயாரிப்பு - பரிமாற்றம் ஆகியவற்றிற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த கட்டமைப்பு புதுப்பிப்பு, டிரம்ப் நிர்வாகத்தின் இந்திய பொருட்கள் மீது கொடிய வரிகளை விதித்துள்ள கடினமான காலத்திற்கு மத்தியில் வருகிறது. அமெரிக்கா தனது “பரஸ்பர வரிக் கொள்கையின்” பகுதியாக 25 சதவீத வரியை முதலில் விதித்தது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் காரணமாக கூடுதல் 25 சதவீத அபராத வரியும் விதிக்கப்பட்டது.
சமீப மாதங்களாக டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்கா இந்தோ-பசிபிக் யுத்ததந்திரத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் குறைவாக இருப்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் (Quad) அமைப்பு, இந்த கொள்கைக்கான “மையப் புள்ளியாக” செயல்பட 2017 இல் உயிரூட்டப்பட்டது. இருப்பினும், வெளியுறவு அமைச்சர்கள் இரண்டு முறை சந்தித்துள்ள நிலையிலும், தலைவர்களின் வருடாந்திர உச்சிமாநாடு எதுவும் நடைபெறவில்லை. டிரம்ப் தனது உரைகளில் குவாட்டை பற்றி எந்த குறிப்பும் தெரிவிக்கவில்லை.
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு