ஏஎம்கேவின் சர்வதேச அரசியல் பொதுவழி நூலுக்கு ஓர் அறிமுகம்

சமரன்

ஏஎம்கேவின் சர்வதேச அரசியல் பொதுவழி நூலுக்கு ஓர் அறிமுகம்

2010-11ம் ஆண்டுவாக்கில் - குறிப்பாக நேபாளப் புரட்சியில் பிரசண்டா கும்பலின் துரோகம் அரங்கேறிய காலகட்டத்தில் புதிதாக எழுந்த திருத்தல்வாதப் போக்குகளை முறியடிக்கும் விதமாக அணிகளுக்கு வகுப்பு எடுக்கப்பட்ட ஆவணம்தான் ஏஎம்கேவின் சர்வதேச அரசியல் பொதுவழியை தீர்மானிப்பது குறித்து ஓர் அறிமுகம் என்ற இந்த ஆவணம். ஏற்கனவே இந்தியப் புரட்சியின் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் என்ற மக்கள்யுத்தக் கட்சியின் பெரும்பான்மை பெற்ற ஆவணத்தில் அதற்கான குறிப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த நூலில் அவ்வழி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அரசியல் பொருளாதார சூழ்நிலையில் ஏற்ற இறக்க நிலை - மாற்றங்கள் - வரலாம். ஆனால் சர்வதேச அரசியல் பொதுவழியை வகுத்துக் கொள்வதற்கு கோட்பாட்டளவில் நமக்கு முழுமையான பார்வையை கொடுத்துச் சென்றுள்ளார்.

இதில் 2 விசயங்கள் உள்ளது

 1. ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சர்வதேச அரசியல் பொதுவழி ஏன் தேவை
 2. சர்வதேச அரசியல் வழியை எவ்வாறு வகுத்துக் கொள்வது; அதனடிப்படையில் தேசிய அரசியல் வழியை வகுத்துக் கொள்வது பற்றியது

சர்வதேச அரசியல் வழியை உருவாக்குகையில் 2 பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது:

 1. அது எவ்வாறு அமைய வேண்டும் என்கிற அரசியல் செயல்தந்திரம் மற்றும் போர்த்தந்திரம் பற்றிய பிரச்சினை
 2. ஒரு யுத்தம் மூளுமேயானால் - அதுகுறித்து பாட்டாளி வர்க்கம் என்ன கோட்பாடு அடிப்படையில் தனது அரசியல் பொதுவழியை அமைத்துக் கொள்வது பற்றிய பிரச்சினை

அதே போல், சர்வதேச அரசியல் வழியை உருவாக்குவதில் 3 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்

 1. வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் இது எந்த காலகட்டத்திற்கானது என்பது பற்றிய வர்க்க ஆய்வு
 2. யுத்தங்கள் பற்றிய வர்க்கப் பகுப்பாய்வு
 3. அடிப்படை முரண்பாடுகள் பற்றிய வர்க்கப் பகுப்பாய்வு

இதில் ஒவ்வொரு அம்சங்களாக எடுத்துக் கொண்டு பார்ப்போம்.           

இன்றைய சகாப்தம் பற்றி ஆய்வு மற்றும் ஆசான்களின் வழிகாட்டுதல்

மார்க்ஸ் காலகட்டம் சுதந்திர போட்டி முதலாளித்துவ காலகட்டம். அக்கட்டத்தின் ஆய்வு முறை தனித்தனி தேசங்களை பற்றிய ஆய்வாக இருந்தது. அவை தேச எல்லைப் பரப்பிற்குள் மட்டுமே இருந்தது. அன்றைய கட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக போராடிய முற்போக்கு அம்சங்களை கொண்டிருந்தது. லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற நூலில் ஸ்டாலின் இவற்றை சுருக்கமாக எடுத்துரைக்கிறார். அன்றைய கட்டத்தில் எங்கே தொழில் வளர்ச்சியும் பாட்டாளி வர்க்கமும் பலமாக இருக்கிறதோ அங்கு புரட்சி ஏற்படும் என்ற நிலை லெனின் காலக்கட்டத்தில் மாறியது. லெனினுடைய காலகட்டம் ஏகாதிபத்திய சகாப்தமாக மாறியிருந்தது. முதலாளித்துவம் தன்னுடைய முற்போக்கு பாத்திரத்தை இழந்து அழுகி - மிகவும் பிற்போக்கான ஏகாதிபத்தியமாக சீரழிந்திருந்தது. 

ஏகாதிபத்தியத்தின் குணாம்சங்களாக லெனின் முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் நூலில் எடுத்துரைத்தவற்றை சுருக்கமாக வரையறுக்கலாம்:

 1. உற்பத்தி மற்றும் மூலதனகுவிப்பு பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்கை வகிக்கும் ஏகபோகமாக உருவெடுத்தல்;
 2. வங்கி மூலதனம் தொழிற்துறை மூலதனத்துடன் பிணைக்கப்பட்டு நிதிமூலதனத்தின் அடிப்படையில் நிதியாதிக்க கும்பல் உருவாகுதல்;
 3. மூலதன ஏற்றுமதியின் மூலமாக அடையப்படும் பெரும் முக்கியத்துவம்; 
 4. சர்வதேச முதலாளித்துவ ஏகபோகங்களின் தோற்றம்;
 5. பெரும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையே உலகம் மறுபங்கீடு செய்துகொள்ளல்.

இந்த மறுபங்கீடு போட்டி தவிர்க்க முடியாமல் யுத்தத்திற்கு இட்டுச் செல்கிறது. ஆகையால் இந்தக் காலக்கட்ட உற்பத்திமுறை உலகளவில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி நிலைமைகளை அகலப்படுத்துவதில் உலகை இரண்டு முகாம்களாக பிரிக்கிறது.

 1. ஒடுக்கும் ஏகாதிபத்தியங்கள் ஒரு பக்கமும்
 2. ஒடுக்கப்படும் காலனிய நாடுகள் ஒருபக்கமும்

என இந்த இரண்டும் இந்த ஏகாதிபத்திய அமைப்பில் ஒரே சங்கிலியில் பிணைக்கப்பட்ட கண்ணிகளாக மாறுகின்றன. இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தில் அந்த சங்கிலியின் பலவீனமான கண்ணியை உடைப்பதே பாட்டாளி வர்க்கத்தின் பொதுவழியாக அமைய வேண்டும். முதலாளித்துவம் தனது முற்போக்குப் பாத்திரத்தை இழந்துவிட்டபடியால் இது பாட்டாளி வர்க்கப் புரட்சிகர சகாப்தம் ஆகிறது. 

இந்த பலவீனமான கண்ணியை உடைப்பதன் மூலம் தனிநாட்டில் புரட்சி சாத்தியம் என்பதை நிறுவி அதை நடைமுறையிலும் செயல்படுத்தி காட்டினார் லெனின். எனவே ஏகாதிபத்திய காலகட்டதின் மார்க்சியமே லெனினியமாகும். ஆகையால் நாமும் இந்த சகாப்தத்தில் இருப்பதால், நமது ஆய்விற்கும் இக்காலகட்ட மார்க்சியமான லெனினியத்தையே அடிப்படையாக கொள்ள வேண்டும். 

மாவோ வகுத்துக் கொடுத்த சர்வதேச அரசியல் வழி

மாபெரும் விவாதம் நூலில், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைத்துக் கொள்ள வேண்டிய சர்வதேச அரசியல் பொதுவழியை பற்றிய ஆய்வின் 

5 முக்கிய வழிகாட்டுதல்களை நாம் ஆழ்ந்து பயில வேண்டும். 

1. சர்வதேச அரசியல் பொதுவழியை தீர்மானிக்க மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர போதனைகளை வழிகாட்டும் கொள்கையாகக் கொள்ள வேண்டும். அதிலிருந்து விலகிச் செல்லக் கூடாது. - அதாவது இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் மார்க்சியத்தின் மீது எழும் திருத்தல்வாத, கலைப்புவாதப் போக்குகளை எதிர்த்து முறியடிப்பது.  மார்க்சியம் வெல்லாது என்றோ, பாட்டாளி வர்க்கக் கட்சி வேண்டாம் என்றோ திருத்தல்வாதம் கூறாது. ஆனால் கலைப்புவாதம் இரண்டையும் எதிர்க்கும். எப்போதெல்லாம் எதிர்ப்புரட்சி தலைதூக்குகிறதோ - அப்போதெல்லாம் தத்துவத் துறையிலும் கலைப்புவாதம் தலை தூக்கும். 1907ல் லெனின் காலகட்டத்தில் இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.  லெனின் அதை முறியடித்தார். ஏகாதிபத்தியம் பற்றிய தனது ஆய்விலும் கூட மார்க்ஸ் வகுத்தளித்ததைதான், தான் விரிவுபடுத்தியதாக கூறுகிறார். லெனினுக்குப் பின்பு பாசிச காலக்கட்டத்தில் பல்வேறு திருத்தல்வாத கலைப்புவாதப் போக்குகள் தலைதூக்கியது (அவை குறித்து பின்பு பார்ப்போம்), அவையும் ஸ்டாலின் மற்றும் மாவோவால் முறியடிக்கப்பட்டன. அவ்வகையில் மார்க்சியத்தோடு பல எண்ணமுதல்வாத கருத்துகளை இணைக்கும் போக்கு இன்றும் நிலவுகிறது. அவற்றை எதிர்த்து நாம் தொடர்ச்சியாக போராட வேண்டும்.

2. அக்டோபர் புரட்சியின் பிரகடனம் மற்றும் அறிக்கை - அக்டோபர் புரட்சியில் நமக்கு வழிகாட்டப்பட்ட பொதுவழி - அதாவது, மார்க்ஸ் காலத்தில் "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!" என்ற பிரகடனம் ரஷ்யப் புரட்சின் கட்டத்தில் பின்வருமாறு வளர்த்தெடுக்கப்பட்டது. 

"உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்டத் தேசங்களே ஒன்று சேருங்கள்! எல்லா நாடுகளிலும் ஏகாதிபத்தியத்தையும் பிற்போக்கையும் எதிர்த்து நில்லுங்கள்! உலக சமாதானத்திற்கான தேசிய விடுதலைக்காகவும், மக்கள் ஜனநாயகத்திற்காகவும், சோசலிசத்திற்காகவும் பாடுபடுங்கள்! சோசலிச முகாமை வலுப்படுத்தி விரிவடைய செய்யுங்கள்! பாட்டாளி வர்க்கப் புரட்சியை படிப்படியாக முழு வெற்றிக்கு இட்டுச் செல்லுங்கள்! ஏகாதிபத்தியம் இல்லாத மனிதனை மனிதன் சுரண்டுதலில்லாத புதிய உலகத்தை ஏற்படுத்துங்கள்!" என்பதாகும்.    

3. உலக அரசியல்-பொருளாதார சூழ்நிலைமைகள் மற்றும் வர்க்க அணிசேர்க்கை குறித்த பகுப்பாய்வு; யுத்தம் பற்றிய வரலாற்று அம்சம் மற்றும் வர்க்க உள்ளடக்கத்தை பற்றிய ஆய்வு - இது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான முதலாளித்துவ யுத்தமா? அல்லது ஏகாதிபத்திய சகாப்தமா? ஏகாதிபத்திய சகாப்தம் எனில் மோதும் இரண்டு அணிகள் மற்றும் வர்க்கங்கள் பற்றிய மதிப்பீடு அவசியம். அதேபோல் ஒரே சகாப்தமாக / கட்டமாக இருந்தாலும் அதில் ஏற்படும் முக்கியமான திருப்பங்களை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் உள்ள வித்தியாசம்; இரண்டாம் உலகப்போரின் போதே பல்வேறு திருப்பங்கள் இருந்தது. இரண்டு உலகப்போர்களிலிருந்து ஏகாதிபத்தியங்களும் படிப்பினையை கற்றுக் கொண்டுள்ளன; நாமும் கற்றுக்கொண்டுள்ளோம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்டுள்ள புதிய காலனிய முறையிலான மறுபங்கீடுகள் மற்றும் உலகமயமாக்கல் கட்டம் போன்றவற்றை கணக்கில் கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய வலிமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் கொள்ள வேண்டும். பழைய ஏகாதிபத்தியங்கள் வீழ்ந்து புதிய ஏகாதிபத்தியங்கள் பலம் பெறும், அவை உலகில் தனக்கான இடத்திற்காக மூர்க்கமாக மோதும். எனவே இவை போன்ற சூழல் பற்றிய மதிப்பீடு அவசியம் வேண்டும்.    

4. இன்றைய உலக சூழல் பற்றி பருண்மையாக ஆய்வு செய்து, அடிப்படை முரண்பாடுகளை பற்றிய வர்க்க பகுப்பாய்வை வைக்க வேண்டும்.

5. சோசலிச நாடு பற்றிய வர்க்க பகுப்பாய்வு வேண்டும் என்கிறார். அதாவது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும் முதலாளித்துவ ஏகபோக சர்வாதிகாரத்திற்கும் இடையிலான முரண்பாடு பற்றிய வர்க்கப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். 

அடிப்படை முரண்பாடுகள்

உலகின் அடிப்படை முரண்பாடுகளை பற்றிய ஆய்வுதான் சர்வதேச சூழலை ஆய்வு செய்வதற்கான  - உலகின் வளர்ச்சி விதிகளை ஆய்வு செய்வதற்கான வழிமுறையாகும். 

மார்க்ஸ் காலத்தில் இருந்த,

 1. கூலியுழைப்புக்கும் மூலதனத்திற்கும் இடையிலான முரண்பாடு

லெனின் காலகட்டத்தில் - அதாவது முதல் உலகப்போர் கட்டத்தில், 3 முரண்பாடுகளாக மாறியது:

 1. கூலியுழைப்புக்கும் மூலதனத்திற்கும் இடையிலான் முரண்பாடு
 2. ஏகாதிபத்தியங்களுக்கும் ஒடுக்கப்படும் காலனி நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு
 3. ஏகாதிபத்தியங்களுக்கிடையிலேயே உலகை மறுபங்கீடு செய்து கொள்வதற்கான முரண்பாடு

அடுத்தபடியாக, ஸ்டாலின் - மாவோ காலத்தில் அவை 4 முரண்பாடுகளாயின:

 1. கூலியுழைப்புக்கும் மூலதனத்திற்கும் இடையிலான முரண்பாடு
 2. ஏகாதிபத்தியங்களுக்கும் காலனி நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு
 3. ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடு, மற்றும்
 4. அன்று புதிதாக தோன்றிய சோசலிச முகாமிற்கும் ஏனைய பிற முதலாளித்துவ -ஏகாதிபத்திய அரசுகளின் முகாம்களுக்கிடையிலான முரண்பாடு.

இன்றைய முரண்பாடுகள் 

தற்கால ஏகாதிபத்திய சகாப்தத்தில், இன்றைய சூழலில் நிலவுகின்ற அடிப்படை முரண்பாடுகள் யாவை என வரையறுப்பது சர்வதேச வழியைத் தீர்வு காண்பதற்கு முதல் நிபந்தனையாகும். இன்று நான்காவது முரண்பாடான சோசலிச முகாமிற்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் இடையிலான முரண்பாடு இல்லை. ஏனெனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு இன்று உலகில் எங்குமே இல்லை. இதனை இந்தியாவில் முதன்முதலில் முன்வைத்தவர் ஏஎம்கேதான். மக்கள் யுத்தக் குழுவில் கொண்டபள்ளி சித்தாராமையா  தரப்பு 'சோவியத் எதிர்ப்பு முன்னணி' எனும் பெயரில் டெங் கும்பலின் திருத்தல்வாத மூன்றுலகக் கோட்பாட்டை முன்வைத்து ரஷ்யாவை எதிர்க்க சீனா- அமெரிக்காவோடு சேர வழிகாட்டியது; சீனாவை சோசலிச நாடு என வரையறுத்தது. அதை மறுத்து,  டெங் கும்பல் வைத்த மூன்றுலகக் கோட்பாடு வர்க்கப் பகுப்பாய்வு அற்றது. வெறும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை வைத்து மட்டும் மதிப்பிட முடியாது. உற்பத்தி உறவுகள் என்னவாக உள்ளது என்பதைப் பற்றிய பருண்மையான வர்க்கப் பகுப்பாய்வு வேண்டும் என்றார் ஏஎம்கே. ஆதலால் ரஷ்யா, சீனா உள்ளிட்ட உலகில் எங்கும் இன்று பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு நிலவவில்லை. அவை முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களாக சீரழிந்துவிட்டன. ஆகையால் நான்காவது முரண்பாடு முடிவுக்கு வந்துவிட்டது என்றார். எனவே சோவியத்தை எதிர்க்க சீனா அணியோடும், உள்நாட்டில் என்.டி.ஆர். அணியுடனும் சேர வேண்டும் என வழிகாட்டிய கொண்டபள்ளி சித்தராமையாவின் கலைப்புவாதத்தை முறியடித்து மார்க்சிய-லெனினிய வழியை நிலைநாட்டியவர் ஏஎம்கே. 

ஆனால், சிபிஎம் கட்சி குருச்சேவ் கும்பலுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு கியூபா, வெனிசுலாவை கூட சோசலிச நாடு என பேசி வந்தது. பிடல் சோசலிசத்தில் ஆரம்பித்து, நேரு சோசலிசம், விஜயகாந்த் சோசலிசம் வரை பேசியது. இன்று கருணாநிதியையும் கம்யூனிஸ்ட் என்கிறது; மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசைக் கூட சோசலிச அரசு எனக் கூறும் இழிவான நிலைக்கு சென்றதால்தான் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து தேர்தல்களில் நோட்டாவோடு போட்டியிடும் அவல நிலைக்கு வீழ்ந்துள்ளது. அடிமைகளாக வாழ்ந்துவிட்ட அப்படியே அடிமை வாழ்வு முறைக்கு பழக்கப்பட்டுவிட்ட இவர்களுக்கு பாராளுமன்ற பன்றித் தொழுவமும் ரஷ்ய சேவகமுமே சொர்க்கம்போலத் தெரிவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  

ஏகாதிபத்தியங்களுக்கும் காலனிநாடுகளுக்கும் இடையில் முரண்பாடு இல்லை என்பது பற்றி 

ரஷ்யாவில் ஸ்டாலின் மறைவுக்குப் பின் வந்த குருச்சேவ் கும்பல் உலகில் காலனியாதிக்கம் முற்று பெற்றுவிட்டது. அமைதி வழியில் சோசலிசம், சமாதான சகவாழ்வு என்று திருத்தல்வாதப் பாதையை வகுத்தது.  இதை முறியடிக்க மாவோ, 'மாபெரும் விவாதம்' துவக்கினார். ஏகாதிபத்தியங்களுக்கும் காலனி நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு நீடிக்கிறது. அவை புதியகாலனிய வடிவம் எடுத்துள்ளது என்று கூறினார். காலனி நாடுகளில் தரகுமுதலாளித்துவ கும்பலை ஆட்சியிலமர்த்தியது; அக்கும்பல்  - நிலபிரபுத்துவ வர்க்கத்துடன் சமரசம் செய்துகொண்டு ஏகாதிபத்தியங்களுக்கு புதியகாலனிய முறையில் சேவை செய்து வருகிறது. மாவோவின் புதிய காலனியம் பற்றிய ஆய்வை ஏஎம்கே விரிவுபடுத்தினார்.

ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்திற்கு காலனிகள் அவசியம் தேவைப்படுகிறது. ஏனெனில்,

 1. சந்தைகளை கைப்பற்றுவதற்கு
 2. மூலப்பொருட்கள் மற்றும் வளங்களை கொள்ளையடிப்பதற்கு
 3. மூலதனமிடுவதற்கு

இவை ஏகாதிபத்தியத்தின் உயிராம்சங்கள். 

முதலாளித்துவ ஏற்றத்தாழ்வான வளர்ச்சி விதிகளை பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களால் ஒழிக்க முடியாது. ஈரான், ஆப்கன், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிலும், உலகளவிலும் நடைபெற்று வரும் காலனிய மறுபங்கீடு போட்டிகளே, இன்றும் காலனியாதிக்கம் வேறுவடிவில் புதிய காலனிய வடிவில் தொடர்வதை நமக்கு அறுதியிட்டு காட்டுகிறது. 

இந்த சூழலில்தான், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் இந்தியாவை சுதந்திர நாடாகக் கருதி அமைதிவழியில் சோசலிசம் என்பதை பேசித் திரிகின்றன. தெலுங்கானாவில் நிஜாம் ஆட்சியை எதிர்த்த போரில், நேரு ஆட்சியை நிலப்பிரபுத்துவத்துக்கெதிரான சுதந்திர அரசாக கருதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று ஏமாந்து இரையானது. 2002ல் ஜோதிபாசு 'அந்நிய மூலதனத்தை வரவேற்போம், ஆனால் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம்' என்றார். நிமிட்ஸ் போர்க்கப்பல் இந்தியா வந்தபோதும் கூட அமெரிக்காவுடனான இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்தனர். ஆனால் அமெரிக்காவுடன் செய்துக் கொண்ட அடிப்படை ஒப்பந்தங்களை எதிர்க்கவில்லை. இராணுவ நடவடிக்கைகளை அரசியல்-பொருளாதாரத்திலிருந்து பிரித்துப் பார்க்கும் மோசமான தவறிழைத்தனர். 

எனவே ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை காலனியாதிக்கமும் நீடிக்கும் - ஏகாதிபத்தியங்களுக்கும் காலனி நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடும் நீடிக்கும்.      

ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடு இல்லை என்பது பற்றி 

இந்தப் போக்கின் மூலகர்த்தா காவுத்ஸ்கி. லெனின் காலத்திலேயே முறியடிக்கப்பட்டிருந்த இந்த புழுத்துப் போனப் பிணங்கள் மீண்டும் மீண்டும்  ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவில் இன்றும் சோம்பிகளாக நடமாடுகின்றன. ஏகாதிபத்தியங்களுக்கு காலனிகள் எவ்வளவு அவசியமோ, அதேபோல் அவைகளுக்கிடையிலான மறுபங்கீடு போட்டியும் யுத்தமும் - முரண்பாடுகளும் தவிர்க்க முடியாதது.

ஏகாதிபத்தியங்களுக்கிடையில் முரண்பாடு முடிந்துவிட்டது எனப் பேசுவதில் 2 விதப் போக்குகள் உள்ளன

 1. அமெரிக்க தலைமையில் ஒற்றைத் துருவ மேலாதிக்க அரசு உருவாகிவிட்டது என்பதான அதீதிய ஏகாதிபத்தியம் பற்றி பேசும் போக்கு
 2. நிதிமூலதனம் தேச பண்பற்று நாடுகடந்த - ஒருங்கிணைந்த மூலதனமாக உருவாகிவிட்டது எனும் மற்றுமொரு போக்கு

சிலர் இந்த இரண்டுப் போக்குகளையும் கூட இணைத்துப் பேசும் காவுத்ஸ்கியின் மறுவார்ப்புகளாக உள்ளனர்.      

காவுத்ஸ்கி பிரிட்டனை முதன்மைப்படுத்தி அதீத ஏகாதிபத்தியம் பேசினார். அதை லெனின் முறியடித்தார். இன்று அமெரிக்காவை வைத்து அதீத ஏகாதிபத்தியம் பேசுகின்றனர். ஆனால் முதல் உலகப் போரும், இரண்டாம் உலகப் போரும் அதற்குப் பிந்தைய முதல் பனிப்போர் நிலைமைகளுமே ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடு நீடிக்கிறது என்பதை நிறுவின. 

முதல் போக்கு : அமெரிக்கா உலக மேலாதிக்கத்திற்காக முயற்சித்ததே ஒழிய அது எப்போதும் ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பை நிறுவிவிடவில்லை. சோவியத் ரஷ்யா வீழ்ந்திருந்தபோது அமெரிக்கா உலக மேலாதிக்க கனவு கண்டது. அப்போதும் கூட அமெரிக்காவுக்கும் - ஐரோப்பிய யூனியனுக்கும், அமெரிக்காவுக்கும் - ஜெர்மனிக்கும் முரண்பாடுகள் நிலவியே வந்தது. இரண்டும் மேலாதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டே வந்தன. ஜெர்மனி- போஷ்னியா யுத்தமே அதற்கு ஒரு சாட்சியாக இருந்தது.  

அமெரிக்க ஏகாதிபத்திய யுத்தத்தந்திரங்களில் ஏற்பட்ட மாற்றங்களும் நமக்கு ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடு எவ்வாறு நிலவியும் மாறியும் வந்தது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

1989 காலக்கட்டத்தில் அதன் யுத்தத்தந்திரங்கள்,

 • சோவியத்தையும், கிழக்கு ஐரோப்பாவையும் தலைத்தூக்கவிடாமல் நசுக்கி கிழக்கு ஐரோப்பாவை நேட்டோ கட்டுப்பாடில் கொண்டு வருவது.
 • ஐரோப்பிய யூனியன், ஜெர்மனியை அப்பிராந்தியத்தில் தனக்குப் போட்டியாக வளரவிடமால் தடுப்பது. 
 • ஆசியாவில் ஜப்பானை தனக்குப் போட்டியாக வளரவிடாமல் தடுப்பது
 • மூன்றாம் உலக நாடுகளில் சுதந்திரம் எனப் பேசும் எந்த நாடுகளையும் விட்டு வைப்பதில்லை.

2001 ல்,

 • சீனாவை முக்கிய இலக்காகக் கொண்டது
 • அதனுடன் ஈரான், தென் அமெரிக்கா பகுதியில் வளர்ந்து வந்த புரட்சிகர சக்திகளை தனது எதிரிகளாக வரையறுத்தது.

2007 மற்றும் அதன் பிறகு, 

 • மியூனிச் மாநாடு மற்றும் ஷாங்காய் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டப் பிறகு அமெரிக்காவுக்கு சவாலாக ரஷ்யா மீண்டும் எழுந்தது. அப்போது ரஷ்யா - சீனா முகாமை தனது எதிரியாக வகுத்துக் கொண்டது.  
 • ஜனநாயக மீட்பு என்ற போர்வையில் பல வண்ணப் புரட்சிகள் மூலம் மத்திய ஆசியாவில் சோவியத்தின் அங்கமாக இருந்த நாடுகளில் ஊடுருவி எடுபிடி அரசுகளை உருவாக்கியது,
 • ஆசியாவில் இந்தியாவை தனது யுத்தத்தந்திரக் கூட்டாளியாக மாற்றி சீனாவுக்கு எதிராக நிறுத்தியது. அதற்கென பல்வேறு இராணுவ ஒப்பந்தங்களை செய்து கொண்டது. தொடர்ச்சியாக அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியாவை இப்பிராந்தியத்தில் அடியாள்ப்படையாக மாற்றி வருகிறது.
 • சீன-ரஷ்ய முகாம் சார்பு நிலையிலிருந்த வடகொரியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளை முரட்டு நாடுகள் என முத்திரைக் குத்தி அவற்றுக்கு எதிராக - சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான ஜனநாயகப் போர் என அறிவித்து - போர் தொடுத்தது.

இவ்வாறு ஏகாதிபத்தியங்களின் பலாபலங்களில் ஏற்படும் மாற்றங்கள் அமெரிக்காவின் யுத்தத்தந்திரத்தில் ஏற்பட்டுள்ளது. ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஒன்று வீழ்வதும் பிறகு மீண்டு எழுவதுமான ஏற்றத் தாழ்வான வளர்ச்சி தவிர்க்க முடியாதது. 

ஜெர்மனி - முதல் உலகப்போரில் தோல்வியடைந்தது. இரண்டாம் உலகப்போரின் மறுபங்கீடு யுத்தத்தில் வெறி கொண்டு இறங்கியது. அதன் பின்னரும் கூட அமெரிக்க அணியில் அது அங்கம் வகித்து வந்தாலும் முரண்பாடு தொடர்ந்து கொண்டே உள்ளது.

ரஷ்யா - சோவியத் உடைவுக்குப் பின் அமெரிக்க சார்பு நிலை எடுத்தது. ஈராக் மீது போர்தொடுத்தபோது கூட வேடிக்கைப் பார்த்தது. ஏற்கெனவே சோசலிச அரசில் அடித்தளமிடப்பட்டிருந்த ஆயுத தளவாட உற்பத்தி மூலம் உருவான ஆயுத வியாபரம், புதிய எண்ணெய் எரிவாயு வயல்களின் கண்டுபிடிப்புகள் மூலம் வலிமை பெற்றது. சீனா ஏகாதிபத்தியமாக பரிணமித்த பின்பு அதனுடன் ஷாங்காய் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல்-பொருளாதார- இராணுவ கூட்டமைப்புகள் மூலம் அமெரிக்க - நேட்டோ முகாமுக்கு சவாலாக மாறியது. 

எனவே ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான இந்த வீழ்ச்சியும் எழுச்சியும் அல்லது புதிய ஏகாதிபத்திய தோற்றமும் மறுபங்கீடு யுத்தமும் தவிர்க்க முடியாது. ஆகையால் இந்த முரண்பாடும் இன்று நிகழ்ச்சி நிரலிலேயே உள்ளது.

ஏகாதிபத்தியங்கள் அமைத்துக் கொள்ளும் கூட்டணியும் கூட போர்த் தயாரிப்புகளுக்கான சமாதான நடவடிக்கைதானே ஒழிய முழுமுற்று ஒற்றுமைக்கானது அல்ல என 'சோசலிசமும் போரும்' நூலில் லெனின் கூறுகிறார். இந்த அமைதி வழி ஒப்பந்தங்கள்தான் யுத்தத்திற்கு வழிவகுக்கிறது.  

ஆனால் திருத்தல்வாதிகள் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடு முடிந்துவிட்டது என்கின்றனர். சோசலிச முகாம் உள்ளது என வாதிடுவது வெளிப்படையான திருத்தல்வாதம் என்றால், ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் முரண்பாடு இல்லை என்பது கள்ளத்தனமான திருத்தல்வாதம் ஆகும். அதைத்தான் காவுத்ஸ்கி, சிபிஎம், அ.மார்க்ஸ், பிரசண்டா கும்பல்கள் செய்தது. பிரசண்டா கும்பல், நேபாளத்தில் அதீத ஏகாதிபத்தியம் பேசி ஆயுதங்களை ஐ.நா.விடம் ஒப்படைத்தது; தளப்பிரதேசங்களை கலைத்தது; சரணாகதியடைந்து புரட்சியை  தோல்விக்கு இட்டுச் சென்றது. சிபிஎம் ரஷ்யா சார்புநிலை எடுத்து வருகிறது. அ.மார்க்ஸ் கும்பல் 'ஜனசக்தி' இதழில், - ரஷ்யா சோசலிச நாடு இல்லையென்றாலும் அமெரிக்காவை எதிர்க்க அதனுடன் சேர வேண்டும். ஒற்றைத் துருவ மேலாதிக்கத்துக்கு எதிராக பல்துருவ ஒழுங்கமைப்பு ஜனநாயகமானது எனவே ரஷ்யாவை ஆதரிக்க வேண்டும் - என்று எழுதியது. இன்று அதைத்தான் மனோகரனும் பிரபாவும் பேசி வருகின்றனர். வெனிசுலா, உக்ரைன் மற்றும் பாலஸ்தீன பிரச்சினைகளில் டிராட்ஸ்கி மனோ அணி ரஷ்யா ஆதரவு நிலைபாடு எடுத்து அ.மார்க்ஸ் வாரிசானது. பிரபா 'பனிப்போர்' என்பதே முதலாளித்துவ கோட்பாடு எனக்கூறி ஏகாதிபத்திய முரண்பாடுகளை மறுக்கிறார். அதன் மூலம் ஏஎம்கேவையும் மறுக்கிறார் - ஏஎம்கேவின் அந்த உண்மையான மாணவன்(!?).             

இரண்டாவது போக்கு : தேசங்கடந்த ஒருங்கிணைந்த நிதிமூலதனம் உருவாகிவிட்டது. ஆகையால் transnational corporate களை மட்டும் எதிர்ப்பது என்ற நிலையை ரெட்ஸ்டார் அமைப்பு பேசி வருகிறது. இதன் மூலம் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான  முரண்பாடு நிலவுகிறது என்பதை மறுக்கிறது. பாவச அணியின் புதிய கண்டுபிடிப்பான நாடுகடந்த பாசிசம் மற்றும் நிதிமூலதனம் பற்றிய அறிக்கைகளில் இந்த காவுத்ஸ்கிய போக்குதான் வெளிப்படுகிறது. லெனின் முன்வைத்த ஏகாதிபத்தியம் பற்றிய 5வது வரையறை இன்று காலாவதியாகிவிட்டது. அது இன்று பொருந்தாது எனக் கூறி லெனினியத்தை தூர வீசுகின்றனர் இந்த கலைப்புவாத கும்பல். 

இவர்களில் பெரும்பான்மையோர், மார்க்ஸ்-எங்கெல்ஸ் காலக்கட்டத்தில் நிலவிய முரண்பாடான கூலியுழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலான முரண்பாடு மட்டும்தான் உள்ளது என்கின்றனர். இன்னும் சிலர் அதையும் மறுத்து வர்க்க சமரச சகதியில் வீழ்ந்துவிட்டனர். 

அடுத்த திரிபு

ஏகாதிபத்தியங்கள் பற்றியும் காலனியாதிக்கம் பற்றியும் பேசுவதே கிடையாது. உற்பத்தி உறவுகள் பற்றியும் பேசுவது கிடையாது. அடித்தளம் -மேற்கட்டுமானம் இவற்றை பிரித்து அணுகாமல் இரண்டையும் ஒன்றாக பார்ப்பது அல்லது மேற்கட்டுமானத்தை மட்டும் பற்றிய எண்ணமுதல்வாத அடையாள அரசியல் பேசுவது. இந்தப் போக்குகளை கிராம்சி, லூகாஸ் போன்றோர் ஆரம்பித்து வைத்தனர். கிராம்சியின் சிறைக் குறிப்புகளைப் பார்த்தால் 'ஏகாதிபத்தியம் என்ற வார்த்தையே இருக்காது'. பாசிசத்தை வெறும் நிலவுடமை கட்ட அம்சமாக பார்த்தார். இதைத்தான் இன்று மருதையன், பு.ஜ. அணியினர் வரிந்துக் கொண்டனர். பார்ப்பனிய பாசிசம் என்று பேசி ஏகாதிபத்திய எதிர்ப்பையும் நிதியாதிக்க கும்பல் எதிர்ப்பையும் கைவிட்டுவிட்டார்கள்.  

2001ம் ஆண்டில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட பிறகு, அமெரிக்கா, நாகரீகமற்ற இசுலாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நாகரீக கிறிஸ்துவம் தொடுக்கும் போர் என்பதை தனது செயல்தந்திரமாக அறிவித்து செயல்பட்டது. தனது ஏகபோக நலன்களிலிருந்து அமெரிக்காதான் முதலில் இசுலாமிய மத அடிப்படைவாத இயக்கங்களை தீனிப்போட்டு வளர்த்தது. அதை மறைத்து ஜனநாயக வேசம் பூண்டது. பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் ஏகாதிபத்தியம்தான் என்பதை மேற்கூறிய திரிபுவாதிகள் காண மறுக்கின்றனர். பாகிஸ்தானில் பெனாசீர் (ஒரு இசுலாமியர்), மற்றொரு இசுலாமிய பயங்கரவாத குழுக்களால்தான் கொல்லப்பட்டார். இதை எவ்வாறு பார்ப்பது? இதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல்-பொருளாதார நலன்கள் குவிந்திருந்ததா இல்லையா? ஏகாதிபத்தியங்களுக்கிடையான இந்த போட்டியை வெறும் மேற்கட்டுமான விசயமாக பார்ப்பது மார்க்சிய விரோத நிலைபாடே ஆகும். 

எனவே இன்று சர்வதேச அளவில் 3 அடிப்படை முரண்பாடுகள்தான் நிலவுகின்றன என்ற முடிவை நமக்கு வகுத்தளித்துள்ளார் ஏஎம்கே. நான்காவது முரண்பாடு தற்போது நிகழ்ச்சி நிரலில் இல்லாவிட்டாலும் நிரந்தரமாக இல்லை என்பது கிடையாது. அதை உண்டாக்கும் சோசலிசத்தை உருவாக்குவதே நமது லட்சியம் ஆகும். ஏகாதிபத்தியங்களின் பலவீனமான கண்ணியை பற்றி மதிப்பீடு செய்து, அதனை உடைப்பதற்கு இந்த அடிப்படை முரண்பாடுகளை பற்றிய ஆய்வு நமக்கு மிகவும் அவசியமாக விளங்குகிறது. அடிப்படை முரண்பாடுகளைத் தீர்ப்பதன் மூலம்தான் - சமூகப் புரட்சிக்கான நிலைமைகளை பயன்படுத்துவதன் மூலம்தான் - சமுதாய மாற்றுத்துக்கான சோசலிசப் புரட்சியை நிறைவேற்ற முடியும். 

ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உள்ள முரண்பாடுகளை கையாள்வது குறித்து

புரட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்ல எந்தவொரு சிறிய வாய்ப்பாக இருந்தாலும் பயன்படுத்த வேண்டும் என்கிறார் லெனின். ஏகாதிபத்தியங்களின் பலவீனமான கண்ணியை உடைத்தெறிய ஏகாதிபத்தியங்களுக்கிடையே உள்ள முரண்பாட்டையும் நாம் கையாள வேண்டும். இது மறைமுக சேமிப்பு சக்தியாகும். அதை பயன்படுத்தவே கூடாது என்பது இடது விலகல் போக்காகும். ஆனால் அதை நேரடி சேமிப்பு சக்தியாக கருதி சிபிஎம், பாவச அணி உள்ளிட்ட திருத்தல்வாதிகள் வலது விலகல் சேற்றில் மூழ்கிவிட்டனர்.    

முரண்பாடுகளை கையாள்வது என்பது ஏதாவது ஒரு ஏகாதிபத்திய அணிக்கு வால் பிடிப்பது ஆகாது. யுத்தக் காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டியில் அவை முழு பொருளாதாரத்தையும் இராணுவ பொருளாதாரமாக மாற்றி ஒன்றையொன்று மோதிக் கொண்டு பலவீனமடையும். அச்சூழலையும் அதன் மூலம் ஏற்படும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும். அதாவது, அநீதி யுத்தத்தை நீதி யுத்தமாக மாற்றுவதே ஏகாதிபத்திய முரண்பாட்டைக் கையாள்வது என்கிறார் ஏஎம்கே. 

ஏகாதிபத்திய முரண்பாடுகள் ஆசான்களால் எவ்வாறு கையாளப்பட்டது

எந்தவொரு கட்டத்திலும் எது முதன்மை முரண்பாடோ அதை வரையறுப்பதன் மூலமே ஏகாதிபத்திய முரண்பாடுகளை கையாள்வதில் நாம் தேர்ச்சிப் பெற்றோர் ஆவோம். 

முதல் உலகப் போருக்கு சற்று முன்பு வரை ஏகாதிபத்தியங்களுக்கும் ஒடுக்கப்பட்ட காலனி நாடுகளுக்கும் இடையிலான யுத்தத்தில் தேசங்களின் விடுதலை யுத்தத்தை ஆதரிப்பது  - ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தாய்நாட்டை பாதுகாப்பது என்ற வழியே முன்வைக்கப்பட்டது. 

முதல் உலகப் போர் தொடங்கிய பிறகு ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடே முதன்மை முரண்பாடானது. அச்சூழலில் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களையும் எதிர்த்து அவற்றை சாராமல் உள்நாட்டு ஆளும் வர்க்கத்தை வீழ்த்தும் "உள்நாட்டு யுத்தக் கொள்கை" கடைபிடிக்கப்பட்டது. அந்த சூழலிலும் காவுத்ஸ்கி 'தாய்நாட்டை பாதுகாப்போம்' என்ற ஏகாதிபத்திய ஆதரவு நிலை எடுத்தார். அதை எதிர்த்துப் போராடி - அதை முறியடித்து லெனின், ரஷ்யாவில் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

இரண்டாம் உலகப்போரின் முதல் கட்டத்தில் ஏகாதிபத்தியங்களுக்கும் காலனி நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு முதன்மை முரண்பாடாக இருந்தது. ஜப்பான் -சீனா, ஜெர்மனி, போலாந்து - செக்கோஸ்லாவியா, இத்தாலி - அபினேசியா என முரண்பாடுகள் கூர்மையடைந்திருந்தது. ஆகையால் அந்தக் கட்டத்திலும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலையே முதன்மை முரண்பாடாக இருந்தது. அந்த முரண்பாடு சிறிது காலம்தான் நீடித்தது. அதற்குள் ஜெர்மனி மறுபங்கீடு யுத்தவெறி கொண்டு பிற ஏகாதிபத்தியங்கள் மீது யுத்தம் தொடுக்க ஆரம்பித்தது. 

இரண்டாம் உலகப்போரின் இரண்டாம் கட்டத்தில், யுத்தம் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான யுத்தமாக இருந்தது - அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் ஒரு அணியாகவும், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி போன்ற ஏகாதிபத்தியங்கள் மற்றொரு அணியாகவும் மோதின. இதில் ஸ்டாலின் தலைமையிலான சோசலிச அரசு எந்த ஏகாதிபத்திய சார்பு நிலையும் எடுக்காமல் சோசலிசத்தை கட்டியமைப்பதிலும் சோசலிச முகாமை விரிவுபடுத்துவதிலும் முதன்மைத்துவம் கொடுத்தது. ஜெர்மனியுடன் அநாக்கிரமிப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. 

நூறு அடிமைகளை கொண்ட ஒருவன், இருநூறு அடிமைகளைக் கொண்ட மற்றொருவனுடன் அடிமைகளை பங்கிட்டுக் கொள்ளும் போட்டியினை தற்காப்பு போர் என்றோ, நீதி யுத்தம் என்றோ, தாய்நாட்டுப் பாதுகாப்புப் போர் என்றோ வரையறுப்பது தவறு. அது அநீதி யுத்தமே என்கிறார் லெனின். இன்றைய போர்கள் நிதிமூலதனத்தின் நலன்களிலிருந்து நடத்தப்படும் போர் என்கிறார். 

யுத்தத்தின் தன்மையை யார் முதலில் தாக்குகிறான் என்பதை வைத்து தீர்மானிக்க கூடாது; யுத்தம் என்பது அரசியலின் வேறு வழி தொடர்ச்சி. ஏகாதிபத்திய யுத்தங்கள் சுதந்திரத்திற்காகவோ, சிறிய நாடுகளில் உள்ள மக்களின் பாதுகாப்புக்காகவோ அல்ல. 

ஏகாதிபத்திய போர்களின் உள்ளடக்கம் என்ன என்பதை மீண்டும் நினைவூட்டுவோம்:

 1. உலகை மறுபங்கீடு செய்து செல்வாக்கு மண்டலங்களை கைப்பற்ற
 2. சந்தைகளுக்காக
 3. மூலப்பொருட்களுக்காக
 4. முதலீடுகளின் வாய்ப்புக்காக
 5. இவையனைத்தையும் சாதிக்க அரசியல் ஏகபோகத்திற்காக

எனவே ஏகாதிபத்தியங்கள் தங்களது பலாபலங்களின் அடிப்படையில் காலனிகளை மறுபங்கீடு செய்துக் கொள்ள அநீதி யுத்தத்தை தொடுக்கின்றன. இதில் நாம் எந்த முகாமையும் ஆதரிக்க முடியாது. இந்த வழிமுறைதான் இரண்டாம் உலகப் போரின் இரண்டாம் கட்டத்தில் பின்பற்றப்பட்டது. 

இரண்டாம் உலகப்போரின் மூன்றாவது கட்டத்தில், யுத்தத்தின் வர்க்கத்தன்மை மாறியது. ஜெர்மனி அநாக்கிரமிப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு சோவியத்தை தாக்கியது. சோசலிச ரஷ்யாவை போரில் இழுத்து விட்டது. சோசலிச ரஷ்யாவையும், சீனா, வியட்நாம் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள செந்தளப் பிரதேசங்களையும் - சோசலிசம் வெற்றிப் பெறும் தறுவாயில் இருந்த நாடுகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய முன்னணி செயல்தந்திரத்தை பின்பற்றியது. 

அப்போது இரண்டு முக்கிய மாற்றங்கள் நிலவியது:

 1. சோசலிச முகாம் இருந்தது;
 2. பாசிசத்தை கையாளும் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஒருபக்கமும் - மறுபக்கம் பாசிசத்தை கையாளாத பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் இருந்தன. 

தங்களது நாட்டில் தொழிலாளி வர்க்கம் இருந்ததாலும், சோசலிச புரட்சியின் தாக்கத்தை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட கீன்சிய பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக அவற்றுக்கு பாசிசத்தை கையாள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆகையால் அந்த நாடுகளில் இருக்கும் குறைந்தபட்ச ஜனநாயகத்தை பாதுகாப்பது; காலனிநாடுகளில் நேரடி காலனியாதிக்கத்தை கைவிடுவது என்ற நிபந்தனைகளுடன் பாசிசத்திற்கு எதிராக ஐக்கிய முன்னணி கட்டப்பட்டது.

அக்கட்டத்தில் 2 வகையான கலைப்புவாதப் போக்குகள் தலைத் தூக்கியது. 

 1. சோசலிசத்தை மட்டும் பார்த்து பாசிசத்தை கணக்கில் கொள்ளாத டிராட்ஸ்கியசம்.
 2. பாசிசத்தை மட்டும் பார்த்து சோசலிசத்தை கணக்கில் கொள்ளாமல் 'அமெரிக்கனிசமே -கம்யூனிசம்'; பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவையில்லை என்ற பிரௌடரிசம்.

இப்போக்குகளை முறியடித்து - பாட்டாளி வர்க்கத்தையும் உலக சோசலிச முகாமையும் பாதுகாத்து, பாசிசத்தை வீழ்த்தினார் ஆசான் ஸ்டாலின் - என்று மாவோவும் ஏஎம்கேவும் அன்றைய கட்டத்தில் கையாளப்பட்ட சர்வதேச அரசியல் வழியை விளக்கியுள்ளனர். 

சீனாவிலும் மாவோ ஷியாங்கே சேக்குடன் ஜப்பானிய எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டினார். அது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில்தான் கட்டப்பட்டது. செந்தளப் பிரதேசங்களை கைவிடவில்லை. ஆயுதங்களையும் ஒப்படைக்கவில்லை. சீனாவைப் பொறுத்த வரை அன்றைய முதன்மை முரண்பாடு ஜப்பானுக்கும் சீனாவுக்குமானதாக இருந்தது. தாய்நாட்டை பாதுகாப்பது என்ற நிலைபாடை எடுத்தது. உள்நாட்டில் ஐக்கிய முன்னணி கட்டிய அன்றைய சூழலிலும் கூட 3ம் அகிலத்தின் அன்றைய சர்வதேச அரசியல் வழியான 'உள்நாட்டு யுத்தக் கொள்கையை' ஆதரித்து நின்றார் மாவோ.  

ஆனால் பிரசண்டா கும்பல் அதீத ஏகாதிபத்தியம் பேசி ஆயுதங்களை ஐ.நா.விடம் ஒப்படைத்து விட்டு நேபாள புரட்சிக்கு துரோகம் விளைவித்தது. இன்று பல்வேறு கலைப்புவாதிகள் ஒரு ஏகாதிபத்திய முகாமுடன் ஐக்கிய முன்னணி கட்டியேத் தீர வேண்டும். அதுவே ஏகாதிபத்திய முரண்பாடுகளை கையாள்வது எனப் பேசி திரிகின்றனர்.

முதல் பனிப்போர் கட்டத்தில் ஏஎம்கே உள்நாட்டு யுத்தக் கொள்கையைதான் வழிகாட்டினார். ஒரு ஏகாதிபத்திய முகாமின் சார்பு நிலை எடுப்பது ஒட்டுமொத்த ஏகாதிபத்திய அமைப்பையும் பாதுகாக்கும் போக்கு என்று மூன்றுலகக் கோட்பாடு - திருத்தல்வாத கோட்பாடு என்பதை  நிறுவினார்.

இரண்டாம் பனிப்போர் கட்டத்திலும் நமக்கு அதைதான் 2018 மேதின நிலைபாட்டில் வழிகாட்டி சென்றார். அந்த நிலைபாட்டைதான் சமரன் தனது சர்வதேச அரசியல் வழியாக கொண்டுள்ளது. அதனடிப்படையிலேயே வெனிசுலா, ஆப்கன், இலங்கை, உக்ரைன், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளின் நெருக்கடி மற்றும் யுத்தங்கள் குறித்த பிரச்சினைகளில் நாம் நமது சர்வதேச அரசியல் வழியை முன்வைத்தோம்.

தொகுப்பாக,

 1. முதல் உலகபோர் கட்டத்தில் இருந்த 3 முரண்பாடுகள்தான் இன்று நிலவுகின்றன. 
 2. இரண்டாம் உலகப்போரில் இருந்தது போலன்றி, இன்று அமெரிக்க - நேட்டோ மற்றும் ரஷ்யா-சீனா இரு முகாமும் பாசிச முறைகளை கையாள்கின்றன. 
 3. இன்றைய புதிய காலனிய கட்டத்தில் அரசியல் - பொருளாதார - இராணுவ நடவடிக்கைகளையும் பிரிக்க முடியாத அளவிற்கு பொதுப் போக்காக மாறிவிட்டது,
 4. சோசலிச முகாம் இருந்தால்தான் - அதுவும் யுத்தத்தில் பங்கெடுத்ததால்தான் அதை நாம் ஆதரிக்க முடியும். 

எனவே இன்றைய பனிப்போர் சூழலில் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடே முதன்மை முரண்பாடாக உள்ளது. உள்நாட்டு யுத்தக் கொள்கையே நமது சர்வதேச அரசியல் பொதுவழியாக உள்ளது. 

சமரன்
பிப்-மார்ச் இதழில்

 

முழு நூலையும் வாசிக்க / நூலினை பெற தொடர்பு கொள்ளவும்

90953 65292