கார்ப்பரேட் நலன்களுக்கான இந்துத்துவப் பாசிசத்திற்கு கரசேவை செய்யும் திமுக அரசு

சமரன் சிறப்பு கட்டுரை

கார்ப்பரேட் நலன்களுக்கான இந்துத்துவப் பாசிசத்திற்கு கரசேவை செய்யும் திமுக அரசு

'உலகமய தாராளமய கொள்கைகளுக்குச் சேவை செய்வதில் குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே!' என்ற முந்தைய (சமரன் - மே 2022) கட்டுரையில் குஜராத் மாடலை நாடு முழுவதும் விரிவுப்படுத்தும் மத்திய அரசும், திராவிட மாடலை முன்னிறுத்தும் திமுக அரசும் எவ்வாறு புதிய காலனிய அரசியல் பொருளாதார கொள்கைகளுக்கு சேவை செய்கின்றன என்பதை பார்த்தோம்.

படிக்க: குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே! - பகுதி-1

குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே! - பகுதி-2

அதாவது,

1. அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்பு திட்டம் இங்கு எவ்வாறு கதிசக்தி திட்டம் - உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் நிறைவேற்றப்படுகிறது;

2. நீலப் பொருளாதார கொள்கைகள் மூலம் கடல், மீன்வளங்கள் எவ்வாறு கொள்ளையிடப்படுகின்றன;

3. பணமாக்கல் திட்டம் மூலம் நாட்டின் கேந்திரமான செல்வ வளங்கள் எவ்வாறு கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப் படுகின்றன;

4. 'குவாட்' திட்டங்களுக்காக தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்கள் எவ்வாறு செமிகண்டக்டர், EV சார்ஜிங், மின்கலன்கள், இராணுவ தளவாடங்களுக்கான கேந்திர மையமாக மாற்றப்படுகின்றன;

5. இந்துத்துவ பாசிசத்துடன் 'சமூகநீதி' பேசும் திமுக அரசு எவ்வாறு சமரசவாதத்தை கடைபிடிக்கிறது

போன்றவற்றை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆளும் இந்த திமுக அரசு எவ்வாறு இன்னும்பிற துறைகளிலும் புதியகாலனிய நலன்களுக்குச் சேவை செய்கிறது என்பதையும் இந்துத்துவ பாசிச மோடி அரசுடன் கூடி குலாவுவதையும் இதில் பார்ப்போம்.

புதிய மின்சார சட்டமும் தமிழகத்தில் மின் கட்டண உயர்வும்

அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் சேவை நலன்களிலிருந்து சந்தை நலன்களுக்காக அதிகார வர்க்க காங்கிரஸ் - பாஜக கும்பல் மாற்றியமைத்து வந்தன. தீவிரமடையும் நெருக்கடியால் தற்போதைய பாஜக ஆட்சியில் இந்தப் போக்கு எட்டுக்கால் பாய்ச்சல் வேகம் எடுத்துள்ளது. அதன் அங்கமாகவே சேவைப் பொருளாக இருந்த மின்சாரமும் சந்தைப் பொருளாக மாற்றப்பட்டு விட்டது. அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கவே மின்சார சட்டத்தில் 2020ம் ஆண்டு திருத்தத்திற்கான முன்வரைவு வைக்கப்பட்டு, இந்தாண்டு ஆகஸ்ட்டில் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே மின் தயாரிப்பு புதியகாலனிய அமைப்புகளின் நேசனல் லோட் டெஸ்பாட்ச் சென்டர் (National Load Despatch Centre) கட்டுப்பாட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையிலும் இருந்து வருகிறது. மின்சாரத்தை ஸ்பாட் சந்தை (தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்கும் சந்தை) மூலம் விலைக்குப் பெற்று விநியோகித்து வந்தது தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB). நீர்மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள் போன்றவை உருவாக்கப்பட்டு இருந்தாலும், பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களின் மின் தேவைக்காக விலை கொடுத்து வாங்கி விநியோகிக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதற்காக மாபெரும் மின் விநியோக கட்டமைப்பை உருவாக்கி வழங்கி வந்தது. இதை தனியார்மயமாக்கும் நோக்கிலேயே படிப்படியாக TNEB Limited, TANGEDCO, TANTRANSCO எனும் பெயர்களில் மாற்றியமைக்கப்பட்டது. தற்போது மின் விநியோகம் முழுவதையும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் - அதானி பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கும் ஒப்படைத்து விட ஏதுவாக இந்த சட்ட திருத்தம் ஏற்பாடு செய்துள்ளது. அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டது திமுக அரசு. அதனையொட்டியே, மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மின்கட்டண உயர்வின் சுமைகள் சிறுகுறு உற்பத்தியாளர்கள் மீதும் ஏழை எளிய நடுத்தர உழைக்கும் மக்கள் தலையிலுமே இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

500 யூனிட்டிற்கும் குறைவாக பயன்படுத்துவோருக்கு மட்டும் 45% மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மாதமொரு முறை மின் கணக்கீடு எடுக்கப்படும் அதனால் ஸ்லாப் ரேட் (Slab rate-பயன்பாட்டு விகிதம்) அடிப்படையில் பயன்பாட்டு கட்டணம் குறையும் என தேர்தலில் பொய்யுரைகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் அரசு, இன்று மோடி அரசை போலவே மின் கட்டணத்திற்கு வழங்கப்படும் மானியங்களை தாமாக முன்வந்து விட்டுத் தருமாறு மக்களை நெருக்குகிறது. அதே வழியில் போக போக மானியங்களை குறைக்கும் நடவடிக்கைகளையும் செய்யவிருக்கிறது. மின் இணைப்பிற்கான டெபாசிட் தொகைகளை தாறுமாறாக உயர்த்தியுள்ளது. நகர் புறங்களில் உள்ள சிறிய ரக தொகுப்பு வீடுகளில் பெரும்பாலும் மாத வாடகைக்கே வசித்து வருகின்றனர். ஒன்றிரண்டு இணைப்புகளுக்கு மேல் உள்ள இணைப்புகளை இரத்து செய்து வருகிறது.அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி வருகிறது. இதனால் 100யூனிட் வரை வழங்கப்படும் மானியம் பறிக்கப்படுவதோடு ஸ்லாப் ரேட் அடிப்படையில் அவர்களின் மின் கட்டணத் தொகை பல மடங்கு உயரும் அபாய தாக்குதலை தொடுத்துள்ளது. வாடகை வீட்டில் குடியிருப்போர் மின் கட்டணத்திற்கு மட்டும் தங்கள் சம்பாத்தியத்தில் 10% அளவிற்கு செலவிடும் நிலை ஏற்படும். தொகுப்பு வீடுகளில் வாழும் நடுத்தர குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மோட்டார் பம்புகள், பொது மின்விளக்குகள் போன்ற பொது பயன்பாட்டிற்கான 100யூனிட் மானியத்தை பறித்து யூனிட்டிற்கு ரூ.8 என விலை நிர்ணயம் செய்துள்ளது.

சிறுகுறு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மின் கட்டண சலுகைகள் பறிக்கப்பட்டு அதன் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே நலிவடைந்திருக்கும் தொழில்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக நெசவாளர்களும், பின்னலாடைத் தொழிலாளர்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். டாலர் சிட்டி என அழைக்கப்பட்டு வந்த திருப்பூரில் இன்று தொழிலாளர்கள் பிச்சையெடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிறுகுறு முதலாளிகள் தொழிலிலிருந்து வீதிக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு எவ்வித பாதிப்பும் வராது என பொய்யாக அமைச்சரவை வாதாடினாலும், தனியார் வசம் முமுமையாக ஒப்படைக்கப்படும் மின் விநியோகத்தால் அவர்கள் லாப நோக்கிலிருந்து பரிமாற்று மானிய (cross subsidy) முறை கைவிடப்பட்டு விவசாயத்திற்கு மானிய விலையில் விநியோகிக்கும் பொறுப்பை ஏற்க மாட்டார்கள் என்பதே உண்மை. மெல்ல மெல்ல விவசாயிகளுக்கான மின் விநியோக சங்கிலியும் அறுத்தெறியப்படும். ஏற்கனவே வேளாண் சட்டங்கள் மூலமும் தற்கொலை பாதைக்குத் தள்ளப்பட்டு வரும் விவசாயம் இனி மின்சாரத்தால் பொசுக்கப்படும் சூழலே அதிகரித்துள்ளது.

பாசிச மோடி அரசு மனிதனின் இறுதி அடக்க நிகழ்வுகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்தது என்றால் திமுக அரசு மின் மயானங்களுக்கு கூட மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மறுபுறம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மின்சார விநியோகத்திலும் பயன்பாட்டு கட்டணத்திலும் சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

ஏற்கனவே தமிழக மின்சாரத் துறை தனியார்மய கொள்கைகளால் ரூ.1,64,000 கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. கொள்முதல் முதல் விநியோகம் வரை ஊழலில் மிதக்கிறது, அதை காரணம் காட்டியே புதிய மின்சார சட்ட திருத்தம் சங்கி ஊடகங்களால் நியாயப்படுத்தப்படுகிறது. அத்துறையில் நடக்கும் முறைகேடுகளில் பங்குதாரராக இருக்கும் திமுக அரசு அதைப் போக்க வக்கில்லாமல் மத்திய பாஜக அரசின் சட்டத் திருத்தத்தினை அப்படியே ஏற்கிறது. வாய்ப்பிருக்கும் இடங்களை பயன்படுத்திக் கொண்டு தானும் அதானி பவர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட தரகு வர்க்க கும்பலுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சாமானிய உழைக்கும் மக்களின் வாழ்க்கையை இருட்டில் மூழ்கடித்து வருகிறது.

குவாட் திட்டங்களுக்குச் சேவை செய்யும் புதிய மோட்டார் வாகனச் சட்டம்

'குவாட்' திட்டத்தின் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப ஏமாற்று மோசடிகளின் ஒரு பகுதியே இந்த புதிய மோட்டார் வாகன சட்டமாகும். 'போக்குவரத்து பயன்பாட்டில் நவீன தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது' என்ற பெயரில் ஓலா எலக்ட்ரிக், ஆம்பியர் எலக்ட்ரிக், சிம்பிள் எனர்ஜி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கான உற்பத்தி மையமாக எவ்வாறு தமிழ்நாடு மாற்றப்படுகிறது என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம். அந்நிறுவனங்களுக்கான சந்தையாகவும் நாட்டை திறந்துவிடும் நோக்கிலேயே இந்த புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. வாகனங்களின் பயன்பாட்டு காலத்தை குறைத்து பழைய வாகனங்களை பயன்படுத்துவோர் மீது அளவு கடந்த அபராதங்களை விதிப்பது; புதிய புதிய போக்குவரத்து விதிகளை உருவாக்குவது; கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு இன்சூரன்ஸ் திட்டங்களை அதிகரிப்பது - கட்டாயமாக்குவது; போன்ற முறையற்ற நடவடிக்கைகள் மூலம் அபராதத் தொகையை 20மடங்கு வரை உயர்த்தி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. அவர்களின் பயணங்களை முடக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இவர்கள் அனைவரும் பழைய வாகனங்களை குப்பையில் எறிந்துவிட்டு குவாட் திட்டங்களின் தயாரிப்பான புதிய மின் வாகனங்களை வாங்கி பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதனால் பலனடைவோர் யார்? வாகன கடன்களை வழங்கும் நிதிநிறுவன கும்பலும், மின் வாகன உற்பத்தியில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களும் இவற்றைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியமுமே. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நெருக்கடியை தீர்த்துக் கொள்ளும் வழிகளில் இதுவும் ஒன்று. இதனால் பாதிக்கப்படுவது யார்?

1. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஏற்கனவே வீழ்ச்சியடைந்திருக்கும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தியில் ஈடுபடும் கோயம்புத்தூர், திருச்சி போன்ற நகரங்களிலுள்ள சிறுகுறு உற்பத்தியாளர்களும், மாநிலத்தின் பிற பகுதிகளில் இத்துறையை நம்பி வாழும் மெக்கானிக்குகள் உள்ளிட்ட தொழிலாளர்கள்

2. இன்று இரு சக்கர வாகனங்களை பிரதானமாக பயன்படுத்தும் சொமேட்டோ, அமேசான், ஊபர் போன்ற ஸ்டார்ட்-அப் கார்ப்பரேட் நிறுவனங்களில் படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாமல் கொத்தடிமைகளாக வேலை செய்யும் அமைப்பு சாரா கிக் (Gig) தொழிலாளர்கள்

3. ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள்

4. ஏற்கனவே பெட்ரோல் - டீசல் விலையுயர்வால் அவதியுறும் ஏனைய ஏழை- நடுத்தர வாகன ஓட்டிகள் போன்றோரே.

இந்த புதியகாலனிய அமைப்பு முறையில் வேலைக்காக இடப்பெயர்வுகளும் பயணங்களும் அத்தியாவசியமாகியும் அதிகரித்தும் உள்ளது. அதற்கான மக்களின் பயண செலவினங்களும் இந்த மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் நலன்களிலிருந்து உள்கட்டமைப்புகளை உருவாக்கும் அரசு மக்களின் அத்தியாவசிய பயணங்களுக்குத் தேவையான பொது போக்குவரத்து கட்டமைப்புகளை உருவாக்கவில்லை. மாறாக, போக்குவரத்தில் தனியார் ஏகபோகத்திற்கு வழிவகை செய்துள்ளது. மேலும் பயணிப்போர் மீது அபராதங்களை பன்மடங்கு உயர்த்தி அவர்களை முடக்கி வருகிறது.

ஒருபக்கம் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை பார்த்து 'ஓசி' என திமிராகப் பேசி வருகிறார் அமைச்சர் பொன்முடி. மறுபக்கம், அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்தும் டீலக்ஸ் என ஏமாற்று பெயரிட்டும் கட்டணங்களை திமுக ஆட்சி பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இவை ஆம்னி பேருந்துகளுக்கும், ஓலா, ஊபர் போன்ற தனியார் வாகனச் சந்தைக்கும் மக்களின் அத்தியாவசிய பயணங்களை திறந்துவிட்டு கொள்ளையடிப்பதற்கு வழிவகை செய்துள்ளது. இதைத்தான் முதலமைச்சருக்கான ஆலோசனை குழு 'திராவிட மாடல்' என்ற பெயரில் வழங்கி வருகிறது.

நாட்டின் பிற மாநிலங்கள் இன்னும் இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த தயங்கும் சூழலில் 'திராவிட மாடல்' மு.க.ஸ்டாலின் அரசு முன்கையெடுத்து இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களை வதைத்து வருகிறது. 'குவாட்' திட்டங்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் சேவை செய்வதில் அவ்வளவு வெறி(!) இந்த கேடுகெட்ட அடிவருடி திமுக அரசிற்கு.

அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்பு திட்டத்திற்கு தமிழகத்தை தாரை வார்க்கும் திமுக அரசு

அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்பு திட்டத்தின் இந்திய வடிவமான கதிசக்தி திட்டம் - உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு தமிழகத்தை பலியிட சபதமேற்று வேக வேகமாக அவற்றை செயல்படுத்தி வருகிறது திமுக அரசு.

1. பாரத்மாலா திட்டத்திற்கு சேவை செய்யும் வகையில் அதிமுக ஆட்சி கொண்டு வந்த 8வழி (பசுமை வழி) சாலை திட்டத்தை 'பயண குறைப்பு சாலை' திட்டம் என பெயர் மாற்றி திமுக அரசு அமல்படுத்துகிறது.

2. சாகர்மாலா திட்டத்தின் அங்கமான காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு அனுமதித்துள்ளது.

3. உதான் திட்டபடி, சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கவும், அதன் விரிவாக்கத்திற்காக காஞ்சிபுரம் அருகிலுள்ள பரந்தூரில் சுமார் 5000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி பிரமாண்டமான விமான நிலையம் அமைக்க ஒத்திசைந்துள்ளது.

4. ராமநாதபுரம், கமுதி குண்டாற்றையும் அதை சுற்றியுள்ள நிலங்களையும் சோலார் பவர் யூனிட் அமைப்பதற்கு தாரை வார்த்துள்ளது.

மேற்கண்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் அனைத்தையும் அதானி குழும நிறுவனங்களுக்கு தாரை வார்த்துள்ளது. இத்திட்டங்களுக்காக, விவசாய நிலங்கள், ஆறுகள், நீர்நிலைகள், கடல்கள், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், கனிம வளங்கள் அனைத்தையும் அதானி குழுமமும் அந்நிய ஏகாதிபத்திய நிதிமூலதன கும்பலும் சுரண்டி கொழுக்க தாரை வார்த்துள்ளது. அப்பகுதி வாழ் மீனவர்களையும், விவசாயிகளையும் வாழ்வாதாரங்களை பறித்து விரட்டியடிக்கிறது.

இதோடு மட்டுமில்லாமல் அதானி குழுமத்துடன் 'ஒரே டேட்டா ஒரே என்ட்ரி' திட்டத்திற்கான டேட்டா சென்டர் அமைப்பது உள்ளிட்ட 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MOU) இந்த ஓராண்டில் மட்டும் கையெழுத்திட்டுள்ளது மு.க.ஸ்டாலின் அரசு. இதுவரை 59 தனியார்மய ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தை புதிய காலனியாதிக்கத்தின் பிடியிலும் கார்ப்பரேட்டுகளுக்கும் தாரை வார்ப்பதில் தீவிரமாக செயல்படுகிறது. இந்தியாவிலேயே திமுகவின் தனியார்மய ஒப்பந்தங்கள்தான் எண்ணிக்கையில் அதிகம். ஆட்சியிலில்லாத போது எதெயெல்லாம் எதிர்ப்பதுபோல் வேடமிட்டதோ அதையெல்லாம் முந்தைய அதிமுக அரசு விட்ட இடத்திலிருந்து தொடங்கி அதை விட தீவிரமாக அமல்படுத்துகிறது.

நாடாளுமன்ற விவாதத்தில் கனிமொழியும் நிர்மலா சீதாராமனும் யார் அதிகமாக நாட்டை அதானிக்கு கூறுபோட்டு விற்பது என சக்களத்தி சண்டைபோடுகிறார்கள். இது திராவிட மண், பெரியார் மண் என பேசிக்கொண்டு பெரியாரின் காலனிய சேவையைப் போலவே இதை அமெரிக்க மண்ணாகவும் அதானி மண்ணாகவும் மாற்றி வருகிறது இந்த மணல் மாஃபியா திமுக அரசு.

இலங்கை மீதான இந்தியாவின் விரிவாதிக்க நலன்களுக்கு துணைபோகும் திமுக அரசு

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இலங்கையை மையப்படுத்தி அமெரிக்க - சீன ஏகாதிபத்தியங்கள் பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன. இலங்கையின் நெருக்கடிக்கு உதவுவது என்ற பெயரில் அதற்கு காரணமான சீனாவும் அமெரிக்காவும் இப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதையொட்டியே சீனாவின் போர்க்கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கை ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு வர உத்தேசித்திருந்தது. பதில் நடவடிக்கையாக அமெரிக்க 'சார்லஸ் ட்ரூ' என்ற போர்க்கப்பல் தயாராக சென்னையிலுள்ள அதானியின் 'காட்டுப்பள்ளி' துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இந்திய-அமெரிக்க பாதுகாப்புத் துறை அடிப்படை ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் 'குவாட்' கூட்டமைப்பின் 'இந்தோ-பசிபிக்' பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு என்ற புதிய காலனிய நலன்களிலிருந்தும் இலங்கை மீதான இந்தியாவின் விரிவாதிக்க நலன்களுக்கு அதானி தரகுமுதலாளித்துவ கும்பல் சேவை செய்கிறது. அதனால்தான் தனது கையிலிருக்கும் துறைமுகத்தை திறந்து விட்டது அதானி குழுமம். இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலமாக (EEZ) விளங்கும் கடல் எல்லைக்குள் எவ்வித கட்டுப்பாடுமின்றியும் அமெரிக்க போர்க்கப்பலால் நுழைய முடிகிறது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அமெரிக்கா, இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்ந்து நசுக்கிய இந்திய அரசுக்கு துணைப்போன கருணாநிதி போலவே தற்போது மு.க.ஸ்டாலினும் இலங்கையின் மீதான அமெரிக்க - அதானி கும்பலின் மேலாதிக்க நலன்களுக்கு துணைப் போகிறது. இந்த போர் தயாரிப்பு நடவடிக்கைகளை வரவேற்று பாதுகாப்பு அளிக்கிறது; அப்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களை இந்திய/இலங்கை இராணுவங்கள் கேள்வி கேட்பாரின்றி சுட்டுக் கொல்வதையும் வேடிக்கைப் பார்க்கிறதுஇந்த தமிழினத் துரோக திமுக அரசு.

பால் பொருட்களின் விலை உயர்வு

மத்திய மோடி அரசு பால் பொருட்கள் மீது ஜி.எஸ்.டி வரி விதித்து மக்களின் மீது நெருக்கடியை சுமத்துகிறது எனில், திமுக அரசு அதன் பங்கிற்கு பாலின் விலையை 25% வரை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதியுறும் குழந்தைகளை மேலும் வறிய நிலைக்கு தள்ளி வருகிறது. ஜி.எஸ்.டி கவுன்சிலில் நாங்கள் மட்டுமா உள்ளோம், திமுக அரசின் அமைச்சர்களும்தான் உள்ளனர் என நிர்மலா சீதாராமனே இவர்களை பார்த்து காறித்துப்பினாலும் துடைத்துக் கொண்டு அமைதி காக்கின்றனர் திமுகவின் எம்.பி.க்கள்.

திமுக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள்

மோடி அரசு கொண்டு வந்த தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தி வருகிறது திமுக அரசு. தமிழகத்தின் அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலியிடங்களை புதிய ஊழியர்களை இட்டு நிரப்பாமல் ஒப்பந்த தொழிலாளர் முறையை மென்மேலும் ஊக்குவித்து வருகிறது. அதனால் ஏற்கனவே பணியிலிருக்கும் அரசு ஊழியர்களுக்கும் பணிசுமை அதிகரித்துள்ளது. உழைப்பு சுரண்டலை தீவிரப்படுத்துகிறது.எவ்வித பணி உத்திரவாதமும் இல்லாத சூழலில் பணி புரியும் இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வாழ்வாதரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களை விட மிக மோசமான சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட எவ்வித தொழிலாளர் உரிமைகளும் வழங்கப்படுவதில்லை. கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்டு வருகின்றனர்.

அதேப்போல பணியில் உள்ள அரசுஊழியர்களுக்கும் உடல்நிலைக் கோளாறுகளுக்கு தனியார் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியிருப்பதால் அவர்களுக்கு முறையாக மருத்துவ உதவிகள் கிடைப்பதில்லை. காப்பீடு நிறுவனங்களின் முறைகேடுகளுக்கு துணைபோகும் விடியல் அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் தனியார் காப்பீடு நிறுவனங்களிடமே முறையிடக் கோரி தனது பொறுப்பிலிருந்து நழுவி கொள்கிறது. அவர்களை கை விரிக்கிறது. இது ஒரு உதாரணமே. இவ்வாறு நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மீதான தொழிலாளர் விரோதப் போக்குகளை தானும் கடைபிடித்தே வருகிறது.

மது, போதைப் பொருட்களின் விற்பனை கூடாராமாக திகழும் தமிழ்நாடு

நாட்டில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு எதிராகவும், வேலையில்லாத் திண்டாட்டங்களுக்கெதிராகவும்இளைஞர்கள் அமைப்பாக திரள்வதற்கு தடையாக சாதி-மத-இன ரீதியில் பிளவுப்படுத்தும் அடையாள அரசியல் ஒருபுறமும், அவர்களை மது-போதை அடிமைகளாக சீரழிக்கும் போக்குகள் மறுபுறமும் வளர்ந்து வருகிறது. பள்ளிப்பருவத்தை தாண்டாத சிறுவர்களை கூட சீரழித்து வருகிறது.

கொரோனா முதல்அலைக் கட்டத்தில் டாஸ்மாக் கடைதிறப்பிற்கு எதிராக கருப்பு சின்னம் அணிந்து நாடகமாடிய மு.க.ஸ்டாலின் கும்பல், தான் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என பேசியது. தற்போது 'அது வேற வாய்' என்பது போல டாஸ்மாக் கடை வியாபாரத்தை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைககளிலும் ஈடுபட்டு வருகிறது. போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என வாய்ச் சவடால் அடிக்கும் திமுக அரசிற்கு மதுபானம் மட்டும் தேனாக தெரிகிறது போல. போதைப் பொருள் இல்லா தமிழகம் என பேசுவதற்கு காரணம் போதைப்பொருள் கடத்தல், விற்பனைத் தொழிலில் ஈடுபடும் குண்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும்,

கஞ்சா போதைப் பொருட்களினால் டாஸ்மாக் விற்பனை குறைந்துள்ளதை அதிகரிக்கவுமே. கள்ளச் சாராயத்திற்கு பதிலாக டாஸ்மாக் கடைகளை திறந்து அரசே மக்களை குடிபோதையில் ஆழ்த்தியதோ, அதே போல கஞ்சா, ஹெராயின், கோக்கைன் போன்ற போதைப் பொருட்களை கள்ளக் கடத்தல் மார்க்கெட் நெட்வொர்க்கிலிருந்து வெளிப்படையான விநியோகத்திற்கு மாற்றி இளைஞர்கள் மீது ஒரு அபினி யுத்தத்தை தொடுக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் தலைவர்களாக விளங்குவது அதானி உள்ளிட்ட பெரும்தரகு முதலாளித்துவ மாஃபியா கும்பலே. அதானியின் பல்வேறு துறைமுகங்கள் வழியாகத்தான் போதைபொருட்கள் இந்தியாவிற்குள் நுழைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கூட அதானியின் முந்த்ரா மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. இந்த மாஃபியா கும்பலுக்கு துணைபோகும் திமுக அரசு போதைபொருள் ஒழிப்பு பற்றி பேசுவது மோசடி.

அதிமுக ஆட்சியில் விற்றது மட்டும்தான் மதுபானம், திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் சத்து டானிக் விற்கிறார்கள் என கருதுகிறது போல மருதையன் - மக்கள் அதிகாரம் (கோவன் அணி). தங்களின் திமுக அடிவருடித்தனத்திற்கு அளவில்லாமல் அறிவாலய வாயிலில் மயங்கி கிடக்கின்றனர். இவர்களுக்கு திமுக போதை எப்போது தெளியுமோ தெரியவில்லை.

இந்துத்துவ பாசிசத்துடன் கைகோர்க்கும் போக்கு

1. தமிழகத்தில்வெள்ளம், புயல் போன்ற நிவாரணப் பணிகளிலும் ஹிஜாப் தடைக்கு எதிராகவும் என சிறுபான்மை இசுலாமியர் நலன் மற்றும் ஜனநாயக கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்து வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீதான தடைக்கு எதிராக எவ்வித குரலையும் கொடுக்காத திமுக அரசு அத்தடையை எதிர்த்து போராடி வரும் ஜனநாயக அமைப்புகளின் குரல்களை நசுக்கியது.

2. ஆர்.எஸ்.எஸ். ஒரு சமூக கலாச்சார இயக்கம் என சான்றளித்த கருணாநிதியின் வாரிசு இன்று ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பை பாதுகாக்கிறது. காந்தி ஜெயந்தி அன்று நடக்கவிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு முதலில் கடிதம் எழுதி கொடுத்துவிட்டு நடத்திக் கொள்ளலாம் என அனுமதித்திருந்தது.பி.எப்.ஐ அமைப்பு தடைசெய்யப்பட்டபின், அத்த்தடையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கூறியதேயொழிய ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தடை செய்ய பரிந்துரைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை கண்டித்த திமுக கூட்டணியிலேயே இருக்கும் விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் அமைதி ஊர்வலத்திற்கு கூட அனுமதி தரவில்லை. நவம்பர் 6ல் சில மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியது. அதற்கிடையில் நடைபெற்ற விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் ஊர்வலத்தில் கலந்துக் கொள்ளவும் இல்லை அது குறித்து எவ்வித அறிக்கையையும் கூட வெளியிடவில்லை. இவ்வாறு கூட்டணி தர்மத்தை மீறும் திமுக அரசியல் நாகரிகம் என பாஜகவுக்கு வெள்ளைக்கொடி காட்டி பம்முகிறது. சங்பரிவாரங்களுக்குச் சேவை செய்கிறது.

3. பள்ளிகளில் நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் சாகா பயிற்சிகளை தடை செய்ய மறுப்பதோடு, கோவை உள்ளிட்ட சில ஊர்களில் அரசு பள்ளிகளிலும் கூட சங்பரிவாரங்கள் ஊடுருவி நடத்தும் சாகா பயிற்சிகளை அனுமதித்து அமைதி காத்தது. சிறார் மனங்களில் பயங்கரவாத விஷத்தை விதைக்கும் கும்பலை களையெடுக்க வக்கில்லாமல் சப்பைகட்டு கட்டுகிறார் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

4. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில், விசாரணையை முறையாக நடத்தாமல் இந்துத்துவ சக்திகளின் சதி வேலைகளை மூடிமறைக்க இந்த வழக்கை பாஜக - ஆர்.எஸ்.எஸ்ன்நிர்பந்தங்களுக்கு பணிந்து என்.ஐ.ஏ விடம் ஒப்படைத்துள்ளது.இதுவரை நாட்டில் நடந்த பெரும்பான்மை குண்டு வெடிப்பு மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார குண்டர்களே என்று அதன் முன்னாள் ஊழியர்கள் மூலமாக உண்மை வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் பழி முழுவதும் இசுலாமிய அமைப்புகள் மீது. இவ்வேளையில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தையும் இசுலாமியர்களின் பயங்கரவாத செயலாக சித்தரிக்கவே அது என்.ஐ,ஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சங்பரிவார - மதவெறி கும்பல் மதக் கலவரங்களுக்கு தூபம் போடுகிறது.

இவ்வாறு தமிழகத்தை சாதி-மத கலவரங்களின் மூலம் குஜராத்தாக மாற்ற முயலும் சங்பரிவாரங்களின் சதிகளுக்கு தானும் துணைப் போகிறது. நெருக்கடியின் சுமைகளை மக்கள் தாங்க முடியாமல் எதிர்த்து போராடுவது தன்னுடைய அரசிற்கும், தான் சார்ந்துள்ள ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கும் ஆபத்து என்ற நிலையிலிருந்தே இது போன்ற பிற்போக்கு எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளுடன் திமுக அரசு கைகோர்க்கிறது.

பாசிச என்.ஐ.ஏ சட்டத்தை ஏவும் ஜனநாயக விரோத போக்கு

காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட என்.ஐ.ஏ சட்டத்தை அப்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுக அரசும் ஆதரவளித்தே கொண்டு வந்தது. மோடி ஆட்சியில் என்.ஐ.ஏ சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டபோதும் அதற்கு எதிர் குரல் எழுப்பாமல் இணக்கம் காட்டியது. சென்னையில் என்.ஐ.ஏ அலுவலகம் அமைப்பதற்குதுணைபோனது. தற்போது 'ஒரே நாடு - ஒரே சீருடை' - 'ஒரே டேட்டா - ஒரே என்ட்ரி' என்ற திட்டங்களுக்கும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மாநில காவல்துறை உரிமைகளையும் - நீதிமன்ற உரிமைகளையும் - சட்டம், ஒழுங்கு உரிமைகளையும் மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது. ஆனால் இங்கு வாய்கிழிய மாநில உரிமைகள் பறிப்போவதாக கூப்பாடு போட்டு வருகிறது.

இந்துத்துவ சக்திகளை பாதுகாக்கும் பொருட்டு, சிறுபான்மை மதத்தினர், மாவோயிஸ்ட்கள், பிற ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகளையும், அரசிற்கெதிராக குரல் கொடுக்கும் தனிநபர்களையும் கூட ஒடுக்குவதற்கு என்.ஐ.ஏ., ஊபா போன்ற பாசிச சட்டங்களை மத்திய அரசு ஏவி வருகிறது. இந்த பாசிச போக்கிற்கு துணைபோகிறது. சில சமயங்களில் தானே பரிந்துரைக்கிறது. தற்போது என்.ஐ.ஏ.விற்கான காவல் நிலையங்களையும், நீதிமன்றங்களையும் தமிழகமெங்கும் அமைக்கவிருக்கும் மோடி அரசிற்கு பணிந்து அதை அனுமதித்ததோடு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஸ்ரீமதி படுகொலையில் கூட்டுபாசிசத்தை அரங்கேற்றியது

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படுகொலையை மூடிமறைத்து கல்வி-காவி முதலாளிகளை பாதுகாத்தது. திமுக அரசு, அதிமுக, ஆர்.எஸ்,எஸ், சங்பரிவாரங்கள் ஓரணியில் கூட்டுச் சேர்ந்து மாணவியின் கொலையை திசைதிருப்ப கலவரத்தை தூண்டிவிட்டன. கொலையாளிகளையும் கலவரகாரர்களையும் நீதிமன்றம் பாதுகாத்தது.மறுபுறம், அப்பாவி இளைஞர்களை பொய் வழக்கில் கைது செய்தது. கிரிமினல் கும்பலின் பக்கம் நின்று கொண்டு கொலையை தற்கொலையாக மாற்ற அனைத்து நாடகங்களையும் அரங்கேற்றியது திமுக அரசு.

இந்த சம்பவங்களின் பின்னணியில் இருந்த உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நக்கீரன் நிருபர் பிரகாஷ் மற்றும் புகைப்படக்காரர் அஜீத் மீதான கொலைவெறித் தாக்குதலின்போதும் கூட தாக்குதலில் ஈடுபட்ட கல்வி-மாஃபியா கொலைகும்பலின் மீது எந்த தூசியும் விழாமல் பாதுகாத்தது. கொலையின் உண்மை நிலவரங்களை பேசிய யூடியூபர்களை செய்தி வெளியிடக் கூடாது என மிரட்டியது. மாணவியின் பெற்றோர் குறித்து அவதூறு பரப்பிய சங்பரிவார ஊடகங்களுக்கு ஊக்கமளித்தது. மேலும் இச்சம்பவம் குறித்து தொடர்ச்சியாக எழுதிவந்த அறம் இணைய இதழ் ஆசிரியர் சாவித்திரி கண்ணன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்தது. கொலைக்கு நீதிகேட்டுப் போராடிய அனைத்து அமைப்புகளையும் ஒடுக்கும் வேலையில் இறங்கியது. இவ்வாறு சங்பரிவார கல்வி-காவி காடையர்களுக்கு விளக்குப்பிடித்த திமுக அரசு அநீதிக்கெதிரான ஜனநாயக குரல்களை நசுக்கி கூட்டுப்பாசிசத்தை அரங்கேற்றியது.

திமுகவிற்கு கரசேவை செய்யும் அறிவாலயத்து செல்லப்பிராணிகள்

புதியகாலனியாதிக்கத்திற்கும் இந்துத்துவ பாசிசத்திற்கும் சேவை செய்யும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கும் சமூக அநீதிகளுக்கும் கூட்டணியில் உள்ள சமூக நீதி பேசும் விசிக, தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். ஆனால் மறுபுறம் மோடி அரசின் பாசிச அடக்குமுறைகளை பார்ப்பனிய மற்றும் சனாதன நடவடிக்கைககளாக மட்டும் குறுக்குகின்றன. பாஜக -திமுக அரசுகள் கடைபிடிக்கும் புதிய காலனிய அரசியல் பொருளாதார கொள்கைகளே பாசிச போக்குகளுக்கு காரணம் என்பதை காண மறுக்கின்றன.சிபிஐ, சிபிஎம் கட்சிகள் மதவாத மோடி ஆட்சிக்கு எதிராக மதசார்பற்ற கூட்டணி என்ற பெயரில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து வருகின்றன. தாங்கள் ஆளும் மாநிலமான கேரளாவில் 'குவாட்' மற்றும் 'சாகர்மாலா' திட்டத்தின் பகுதியான 'விழிஞ்சம்' துறைமுகத்தை அதானியிடம் ஒப்படைக்க தவமிருக்கின்றன. அதை எதிர்த்த போராட்டங்களை திமுக அரசைப் போலவே ஒடுக்கி வருகின்றன. (மேற்கு வங்கம் நந்திகிராம சம்பவத்திலிருந்தும் கூட படிப்பினை பெறவில்லை இந்த திருத்தல்வாத கூட்டம்). பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவையும் ஆர்.எஸ்.எஸ். ஐயும் சமப்படுத்தி இரண்டையும் தடை செய்ய வேண்டும் என தீர்மானம் போடுகின்றன. திமுக அரசின் இந்துத்துவ சேவையை விஞ்சும் விதத்தில் ஆளும் இந்துத்துவ பாசிச கும்பலுக்கும் புதிய காலனிய முயற்சிகளுக்கும் சேவை செய்தே வருகின்றன. இவைகளோடு சேர்ந்து மருதையன், மக்கள் அதிகாரம் (ராஜூ அணி), பு.இ.மு. போன்ற புரட்சி பேசும் வலது சந்தர்ப்பவாத சகதியில் வீழ்ந்த கூட்டமும் அறிவாலயத்தின் வாசலில் காவல் காத்துக் கொண்டு நிற்கின்றன. திமுக அரசு இந்துத்துவ பாசிச கும்பலுக்கும் அமெரிக்க - அதானிகளுக்கும் கரசேவை செய்கிறது எனில் இவர்கள் திமுக அரசிற்கு கரசேவை செய்கின்றனர். பாசிச எதிர்ப்பு பேசிக் கொண்டே பாசிசத்திற்கு வாலாக மாறுகின்றனர்.

எனவே, திமுக - காங்கிரஸ் கும்பலுக்கு வாலாக மாறாமல், பாசிச எதிர்ப்பை பாஜக எதிர்ப்பாக மட்டும் சுருக்கிவிடாமல், ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் கொண்ட புரட்சிகர பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டியமைக்க ஒன்றுபடுவோம்.

- சமரன், டிசம்பர 2022 மாத இதழ்