நேற்று –திண்ணியம்! இன்று -இறையூர்!!

“சமூக நீதி” ஆட்சியில் தலைவிரித்தாடும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்!

நேற்று –திண்ணியம்! இன்று -இறையூர்!!

உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

“சமூக நீதி” ஆட்சி என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க ஆட்சியில்தான் சாதி, தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித் தாடுகின்றன. கடந்த அ.தி.மு.க ஆட்சியிலிருந்து எவ்வகையிலும் இந்த ஆட்சி வேறுபடவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூரில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் குடிநீர்த் தொட்டியில் ஆதிக்க சாதியினர் மலத்தைக் கலந்த கொடூரமான வன்கொடுமை சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச கொடூரம் இன்று இறையூரிலும் நடக்கிறது.

கடந்த காலங்களில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஆதிக்க சாதியினரின் கொட்டம் கொடிகட்டிப் பறக்கும். இந்த முறையும் தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீதான ஆதிக்க சாதிவெறி கும்பலின் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு வங்கியாகவே உள்ளூர் ஆதிக்கத்தை ஆளும் வர்க்க கட்சிகள் கருதுகின்றன என்பது சொல்லத்தேவையில்லை. இதற்காகவே தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்க சாதியினரின் சாதிய வன்கொடுமைகளை இரு திராவிடக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. உள்ளூர் ஆதிக்கங்களில் பதவி வகிக்கும் ஆதிக்கச் சாதியினர் இவ்விரு திராவிடக் கட்சிகளிலும் பொறுப்பில் இருப்பது எதேச்சையானது அல்ல.

இறையூரில் முத்தரையர் எனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்தான் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவர் திமுகவில் பொறுப்பில் உள்ளார். கள்ளர், அகமுடையர், முத்தரையர் ஆகிய மூன்று ஆதிக்க சாதிப் பிரிவினரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர். அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடுவதற்கு இந்த சாதிகளிலுள்ள ஆதிக்க பிரிவினர் தடையாக உள்ளனர். அகமுடையர் சாதியைச் சேர்ந்தவர் நடத்தும் தேநீர்க் கடையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் குவளை முறை பின்பற்றப்படுகிறது. மேலும், முத்தரையர் சாதியினரின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப் படவில்லை. இவை தவிர பல்வேறு சொல்லொணா வன்கொடுமைகள் அன்றாடம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இவ்வாறு சாதி வன்கொடுமைகளின் “புகலிடமாக” புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கிறது. இரு ஆளும் வர்க்க திராவிட கட்சிகளும் வழக்கம் போல் கள்ளமௌனம் காக்கின்றன. ஆட்சியாளர்களின் கார்ப்பரேட்மய கொள்கைகளைப் பற்றி கேள்வி கேட்காமல் இருக்க மக்கள் சாதி ரீதியாக அடித்துக்கொண்டு சாவது அவர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றது.

கோவில் பிரச்சினையில் புதுக்கோட்டை ஆட்சியர் தலையிட்டுத் தாழ்த்தப்பட்ட மக்களைக் கோவிலுக்குள் வழிபட அனுமதி வழங்கியதாக திமுக அரசும், செஞ்சட்டை உ..பி.க்களும் தம்பட்டம் அடிக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் சென்று வந்த பிறகு கோவிலில் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி ஆதிக்க சாதியினர் தீட்டுக் கழித்துள்ளனர். இது பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி செய்ததை பெரிதுபடுத்தி குடிநீரில் மலம் கலந்த கொடூரத்தை தி.மு.க அரசு நீர்த்துப் போகச்செய்கிறது. இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது. ஒருபுறம் இந்த தம்பட்டங்கள் காதை கிழிக்கும்போதுதான், சேலம் விருதாசம்பட்டியில் ஆதிக்க சாதியினருக்கு வால் பிடித்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டுரிமையை மறுக்கிறது திராவிட மாடல் அரசு. தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என சொன்ன சாதிவெறியர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் கோவிலுக்கு சீல்வைத்து அம்மக்களின் வழிபாட்டுரிமையை மறுக்கிறது மு.க.ஸ்டாலின் அரசு.

பிறகு ஜனநாயக சக்திகளின் மத்தியில் எதிர்ப்பு பலமானதைத் தொடர்ந்துதான் சிலரைக் கைது செய்துள்ளது தி.மு.க அரசு. அதுவும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் SC/ST பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. திண்ணியம் எனும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாயில் மலம் திணித்த கொடூரத்தில் இறையூர் வன்கொடுமை சிறிதும் சளைத்ததல்ல.

திண்ணியங்களும் இறையூர்களும் ஆளும் வர்க்கங்களுக்குத் தேவையானதாக உள்ளன. ஆனால் நம்மைப் போன்ற புரட்சிகர இயக்கங்களுக்கோ மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்ட அவை எதிர் புரட்சிகர மையங்களாகத் திகழ்கின்றன. திண்ணியங்களும் இறையூர்களும்தான் டிஜிட்டல் இந்தியா, திராவிட மாடல்களின் உண்மைச் சொரூபம்.

சாதிவெறிப் பாசிசத்தையும், மதவெறிப் பாசிசத்தையும் பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பலும் மாநில ஆளும் வர்க்க கட்சிகளும் கைகோர்த்துக் கட்டியமைக்கின்றன. சங் பரிவார அமைப்புகள் கிராமங்களில் கூடாரமிட்டு சாதிய அமைப்புகளைத் திட்டமிட்டு வளர்த்துவிடுகின்றன.

திண்ணியங்களையும் இறையூர்களையும் தகர்க்க வேண்டுமெனில் அரை நிலவுடைமை முறை உள்ளிட்ட முதலாளித்துவத்திற்கு முந்தய உற்பத்தி முறைகளைத் தகர்க்கவேண்டும். நிலச் சீர்திருத்தம் செய்யப்படவேண்டும். அதன் பொருட்டு அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஓரணியில் கிளர்ந்தெழ வேண்டியது நமது அடிப்படையான ஜனநாயகக் கடமையாகும். சாதி, தீண்டாமை வன்கொடுமைகளுக்கு தலைமைத் தாங்கும் ஆளும் வர்க்க கட்சிகளை எதிர்த்து பின்வரும் முழக்கங்களின்பால் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டியது அவசியமாகும்.

“திராவிட மாடல்” தி.மு.க அரசே !

 இறையூரில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த ஆதிக்க சாதிவெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் தண்டனை வழங்கு!

 சேலம் விருதாசம்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிபாட்டுரிமையை மறுத்துவிட்டு இறையூரில் வழங்கியதாக சமூக நீதி நாடகம் ஆடாதே! கோவிலைப் பூட்டி ஆதிக்க சாதிவெறியர்களுக்கு வால் பிடிக்காதே!

 இறையூரில் வழிபாட்டுரிமை வழங்கியதாகத் தம்பட்டம் அடித்து குடிநீரில் மலம் கலந்த பிரச்சினையைத் திசை திருப்பாதே!

 *வழிபாட்டுரிமையை மறுக்கும், இரட்டைக்குவளை முறையை அமல்படுத்தும் சாதிவெறியர்களை பி.சி.ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்!

 "சமூக நீதி"ஆட்சியில் தலைவிரித்தாடும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்!

 இந்துத்துவ பாசிசத்தை பலப்படுத்த சாதிய அமைப்புகளைத் திட்டமிட்டு வளர்த்தெடுக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பாஜ.க, சங் பரிவார அமைப்புகளை விரட்டியடிப்போம்!

 சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு சவக்குழி வெட்ட அனைத்து சாதி உழைக்கும் மக்களும் அணிதிரள்வோம்!

நன்றி: மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்,