மோடி ஆட்சி மீதான அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் அணுகுமுறை குறித்த பாட்டாளி வர்க்க நிலைபாடு
சமரன்
அதானியின் பங்குச்சந்தை மோசடி குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையும், மோடி கும்பல் குஜராத் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கியதை அம்பலப்படுத்தி பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படமும் சர்வதேச அரங்கில் முக்கிய வாதப்பொருளாக மாறியுள்ளது. மோடி கும்பலை நெருக்கடிக்கு உள்ளாக்கும் ஏகாதிபத்தியங்களின் இவ்விரு நடவடிக்கைகளையும் எவ்வாறு பார்ப்பது? என தெரிந்துக் கொள்வது அவசியமாகும்.
மோடி ஆட்சி மீதான அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் அணுகுமுறையை உக்ரைன் போருக்கு முன்பு, உக்ரைன் போருக்குப் பின்பு என இரண்டாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் உக்ரைன் ஆளும் வர்க்கத்தை கருவியாக பயன்படுத்தி உக்ரைனை மறுபங்கீடு செய்யவும், தமது புதிய காலனியாதிக்கத்தை நீட்டிக்கவும், அதன்மூலம் ஐரோப்பிய மேலாதிக்கத்தை நிறுவவும் யுத்த தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்த நிலையில், உக்ரைன் மீதான தனது புதிய காலனிய ஆதிக்கத்தை நிலைநாட்டி ஐரோப்பிய மேலாதிக்கத்தை நிறுவ சீனாவின் ஆதரவுடன் ரசியா நேரடி இராணுவ யுத்தத்தை தொடுத்தது. இது இவ்விரு ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உக்ரைன் மறுபங்கீட்டிற்கான - உலக மேலாதிக்கத்திற்கானப் போராக - அதாவது ஒரு பனிப்போராக வடிவமெடுத்து ஓராண்டுக்கு மேலாக நடந்து வருகிறது.
தனது ஐரோப்பிய மேலாதிக்க நோக்கங்களிலிருந்தும், சீனாவுடனான வர்த்தக நலன்களில் இருந்தும், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் முரண்பட்டுள்ளன. உக்ரைனை தனது பிடிக்குள் கொண்டுவர ரசியாவையும் எதிர்த்து உக்ரைனுக்கு இராணுவ பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன. எனவே நேட்டோ - ஷாங்காய் (ரசிய-சீன முகாம்) முகாம்களுக்கு இடையில் மட்டுமின்றி, நேட்டோ முகாமிற்குள்ளாகவும் முரண்பாடுகள் நீடித்துவருகினறன. இந்த முரண்களே உக்ரைன் போர் ஒரு நீண்ட எதிர்புரட்சிகர யுத்தமாக நீடித்து வருவதற்கான அடிப்படைகளில் ஒன்றாக விளங்குகிறது.
எண்ணைய் எரிவாயுவிற்காக ரசியாவை சார்ந்து நின்றுவந்த ஐரோப்பிய நாடுகளில் எண்ணெய் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்தன. ஐரோப்பிய பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றது. பெரும் போராட்டங்கள் வெடித்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. அமெரிக்காவுடனான எண்ணை எரிவாயு ஒப்பந்தங்களும் உடனடியாக பலனளிக்காத நிலையில் அமெரிக்க - ஐரோப்பிய முரண்கள் மேலும் தீவிரம் பெற்றன. இதை ரசியா முன்னரே கணித்துதான் போரில் இறங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சர்வதேச நிலைமைகளில், ஏகாதிபத்திய அணிச்சேர்க்கையில் ஏற்பட்ட மாற்றமும், முரண்களும்தான் இந்திய அரசியலில் தற்போது பிரதிபலிக்கின்றன.
உக்ரைன் போரில் நடுநிலை வகிப்பது எனும் பேரில் மோடி கும்பல் தரகுமுதலாளித்துவ அதானி - அம்பானிகளின் நலன்களில் இருந்து ரசியாவை ஆதரித்து நிலைப்பாடு எடுத்தது. ரசியாவை கண்டித்து நேட்டோ நாடுகள் ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானங்களை ஆதரிக்காமல் வெளி நடப்பு செய்து வந்தது. அதுவரை ரசியாவுடனான இந்தியாவின் ஆயுத ஒப்பந்தங்களை அமெரிக்கா கண்டித்து வந்தாலும், காட்சா தடை விதிப்பதாக சொன்னாலும் விதிக்கவில்லை. ஆனால் உக்ரைன் போருக்குப் பிறகு ஐ.நாவில் மோடி ஆட்சியில் மனித உரிமை மீறல் நடப்பதாகவும், இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம் நடப்பதாகவும் விமர்சிக்க துவங்கியது. இதை பிரிட்டனும் ஆதரித்தது. அதற்கு முன்பு இவை குறித்தெல்லாம் வாய் திறக்கவில்லை. 2002 குஜராத் இனப்படுகொலையை காரணம் காட்டி மோடி மீது அமெரிக்கா அப்போது விதித்திருந்த விசா தடையை அவர் பிரதமரானதும் தானாக நீக்கியது. நான்கு அடித்தள பாதுகாப்பு மற்றும் குவாட் உள்ளிட்ட ஒப்பந்தங்கம் மூலம் அதற்குரிய பலன்களையும் இந்தியச்சந்தையில் பெற்றது. ஆகவே மோடி ஆட்சி மீதான அமெரிக்காவின் விமர்சனம் என்பது வெறும் கண்துடைப்பே.
மோடி கும்பல் உக்ரைன் போரில் ரசிய ஆதரவு நிலைப்பாடு எடுத்தது மட்டுமின்றி ரசியாவுடனான எண்ணெய் வர்த்தகத்தையும் அதிகப்படுத்தி அதானிக்கு கொள்ளை இலாபம் ஈட்டித்தந்தது. இதனால் இந்தியா மீதான தனது புதிய காலனியப் பிடி தளர்ந்துவிடுமோ என கருதிய அமெரிக்காவும் தனது புதிய காலனியப் பிடியை மேலும் இறுக்கவும், ரசியாவுடனான இந்தியாவின் உறவை பலவீனப்படுத்தவுமே ஹிண்டன்பர்க் அறிக்கையையும், பிரிட்டன் மூலமாக பி.பி.சி ஆவணப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனும் பேரில் ஈராக், ஈரான், லிபியா, துனீஷியா, ஆப்கன் உள்ளிட்ட நாடுகளில் இலட்சக்கணக்கான இசுலாமியர்களை கொன்று குவித்த அமெரிக்காவும் பிரிட்டனும் இந்திய இசுலாமியர்கள் குறித்து கவலைப்படுவதாக நாடகமாடி ஜனநாயகவேசம் போடுவதன் நோக்கம் இதுவே. இது கடைந்தெடுத்த ஐயோக்கியத்தனமும் பச்சையான சந்தர்ப்பவாதமும் ஆகும். இதை பாட்டாளி வர்க்கம் ஒருபோதும் நம்பாது. ஆனால் இந்த முரண்களின் விளைவாக வெளிவரும் அதானியின் மோசடிகள், மோடி கும்பலின் இசுலாமிய இனப்படுகொலை குறித்த தகவல்களை பயன்படுத்தி மோடி கும்பலை அம்பலப்படுத்தவும், அதன் பாசிச கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறியவும் நாம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவேண்டும். அதானியின் மோசடி வாயிலாக ஒட்டுமொத்த இந்திய பங்குச்சந்தையின் அழுகலையும், அது அமெரிக்கா, ரசியா, சீனா உள்ளிட்ட ஊக மூலதன கார்ப்பரேட் சூதாடிகளின் மையமான சர்வதேச ஊக மூலதன பங்குச்சந்தையின் அழுகலின் ஒரு சிறு பகுதியே அதாவது மூழ்கும் பனிப்பாறையின் ஒரு சிறு முனையே (Tip of an iceberg) என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும். இது அதானி குழும பிரச்சினை மட்டுமல்ல. எனவே அம்பானி அதானி உள்ளிட்ட அனைத்து கார்ப்பரேட் பங்குச்சந்தை சூதாடிகளின் சொத்துகளையும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இந்த மோசடிக்கு துணை போன செபி, எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோர வேண்டும்.
அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பணம், தனியார்த்துறை ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் பணத்தை, பங்குச்சந்தையில் வைத்து சூதாடும் மத்திய, மாநில அரசுகளின் ஊக வர்த்தக கொள்கைகளை அம்பலப்படுத்த வேண்டும். கல்வி, மருத்துவத்துறை உள்ளிட்ட சேவத்துறைகளை பங்குச்சந்தையுடன் இணைக்கும் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை, தேசிய மருத்துவக் கொள்கைகளை எதிர்க்க வேண்டும். ஊக மூலதனத்தின் அழுகல் போக்கையும், புல்லுருவித்தனத்தையும் ஊட்டி வளர்க்கும் உலகமய கொள்கைகளை ஒழித்துக்கட்ட வேண்டும். உற்பத்தி சாராத இந்த ஊக மூலதன பங்குச்சந்தையுடன் ஊழல்- மோசடி- சூதாட்டம் பிண்ணிப் பிணைந்துள்ளதை விளக்கி பங்குச்சந்தை அமைப்பையே ஒழித்துக்கட்ட மக்கள் இயக்கம் கட்டியமைக்கப்பட வேண்டும். ஊக மூலதனத்தின் இந்த நீர்க்குமிழி பொருளாதாரத்தின் (Bubble Economy) வீக்கத்தை நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சியாக காட்டும் மோடி கும்பலின் மோசடிகளையும் எடுத்துக்காட்ட வேண்டும்.
சீன ஆதரவு நிலை எடுத்த ராஜபக்சே கும்பலை தனது பிடியில் வைக்க சேனல் 4 வீடியோக்களை பயன்படுத்தி மனித உரிமை மீறல் எனும் விசயத்தை ஐ.நாவில் கிளப்பியது அமெரிக்கா. பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 மூலம் வெளிவந்த வீடியோக்கள் இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலையின் கோரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியது. அதை அமெரிக்காவும் பிரிட்டனும் பயன்படுத்திக் கொண்டன. அதே போலவே பி.பி.சி ஆவணப்படத்தையும் தற்போது கருவியாக அமெரிக்காவும் பிரிட்டனும் பயன்படுத்த நினைக்கிறது. பி.பி.சி ஆவணப் படம் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை பயன்படுத்தி அதன் மீதான எகாதிபத்தியங்களின் விசாரணையை அனுமதிக்காமல், ஐ.நாவிலுள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளின் பன்னாட்டு விசாரனையை கோருவது அவசியமாகும். மேலும் ஐ.நாவில் உள்ள ஏகாதிபத்திய நாடுகளின் இசுலாமியர்க்கு எதிரான பயங்கரவாத போர்கள் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்யவும், அவை இந்திய இசுலாமியர் குறித்த நீலிக்கண்ணீர் வடிப்பதையும் அம்பலப்படுத்தவும் வேண்டும். இலங்கை மீதான அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானத்தின் சதிகளை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டு மோடி கும்பலின் இனப்படுகொலை குறித்த விசாரணையை ஏகாதிபத்தியங்களின் தலைமையில் நடத்துவதை எதிர்க்க வேண்டும். ஐ.நாவிலுள்ள ஒடுக்கப்பட்ட, இசுலாமிய நாடுகள், பத்திரிக்கையாளர்கள், ஜனநாயக அமைப்புகளை உள்ளடக்கிய குழுவை உருவாக்கி ஒரு நியாயமான சர்வதேச விசாரனை நடத்தப்பட்டு இந்த இனப்படுகொலையாளர்களை தண்டிக்க வேண்டும்; ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்பரிவார அமைப்புகள் அனைத்தையும் நிரந்தரமாக தடை செய்யப்படவேண்டும் எனும் முழக்கங்களை முன்வைத்துப் போராட வருமாறு மக்களை அணிதிரட்ட வேண்டும்.
இந்த சர்வதேச நிலைமைகளில் இருந்துதான் இந்திய ஆளும் வர்க்கத்தின் இவ்வாண்டு பட்ஜெட்டை ஆராய வேண்டும். இது நாட்டின் அமிர்த காலத்திற்கான பட்ஜெட் என்கிறார் நிர்மலா. ஆனால் உண்மையில் கார்ப்பரேட்டுகளுக்கு அமிர்தகாலத்தையும், மக்களுக்கு ஆலகால விசத்தையும் ஊட்டும் பட்ஜெட்டாகவே 2023 பட்ஜெட் உள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு சர்சார்ஜ் குறைக்கப்பட்டு, சமூக நலத்திட்டங்களுக்கு நிதி வெட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் குவாட் திட்டத்திற்கும், நான்கு அடித்தள பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கும், சேவை செய்யும் வகையில் இராணுவத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை குளிர்விக்கும் வகையில் உதான் திட்டத்தின் கீழ் புது விமானங்களை 6லட்சம் கோடியில் வாங்கவுள்ளது மோடி ஆட்சி. பன்னாட்டு உள் நாட்டு கார்ப்பரேட்டுகளின் நெருக்கடிகளைத் தீர்க்கும் வகையிலும், அந்த நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்தவுமே 2023 பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் விரோத தேசவிரோத பட்ஜெட்டை எதிர்த்து நாம் போராடவேண்டும்.
இந்த நிகழ்வுப்போக்கின் புள்ளிகளுடன் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையையும் இணைத்துதான் நாம் மதிப்பிடவேண்டும். ஒற்றுமை யாத்திரைக்கு முன்பாக ஏகாதிபத்தியங்களின் ஆசியைப் பெற வேண்டி ஐரோப்பிய நாடுகளுக்கு ராகுல் விஜயம் செய்தார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காங்கிரசின் ஜனநாயகத் தன்மை குறித்தும் பாஜகவின் பெரியண்ணன் அணுகுமுறை குறித்தும் அதன் இசுலாமியர் வெறுப்பு அரசியல் குறித்தும் பேசினார். பிறகு இந்தியா வந்த அவர் ஒற்றுமை யாத்திரையை துவங்கினார். ஒற்றுமை யாத்திரை முடிந்த பிறகு ஹிண்டன்பர்க் அறிக்கையும் பி.பி.சி ஆவணப்படமும் அடுத்தடுத்து வெளிவந்தன. கடந்த ஆண்டு பாராளுமனறத்தில் அம்பானி, அதானி இருவருக்காகவே மோடி ஆட்சி செய்கிறார் என கூறிய ராகுல் இந்த ஆண்டு அதானியை மட்டுமே குறிவைத்து பேசினார். அம்பானி பற்றி பேசவில்லை. மேலும் சீன ஊடுருவலை மோடி வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டி அமெரிக்க விசுவாசத்தை வெளிப்படுத்தினார். பி.பி.சி ஆவணப்படம் மோடி ஆட்சி மீதான தகவல் யுத்தம் (information war) என ரசியா விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அம்பானிக்கும் கூட அதானியின் ஊதி பெருக்கப்பட்ட வளர்ச்சி கசப்பான ஒன்றாகவே இருந்து வந்தது. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கும்பொழுது ஏகாதிபத்தியங்களும், டாட்டா - அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளும் மோடி ஆட்சிக்கு மாற்றாக ராகுலை முன்னிறுத்த தொடங்கியுள்ளதை நாம் எளிதில் கணிக்க இயலும். உலக கோடீஸ்வரர் சோரஸ், அதானி பிரச்சினை இந்தியாவில் ஜனநாயக மாற்றத்திற்கு வழிகோலும் என்று கூறியுள்ளார். இந்துத்துவப் பாசிச வடிவம் மூலதன நலன்களுக்கு பொருந்தும் வரையில் அதை அனுமதித்த முதலாளித்துவம், மூலதன விரிவாக்கத்திற்கு அந்த வடிவம் தடையாக மாறும்போது (கடந்த 8 ஆண்டுகளாக மோடி கும்பல் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக அன்னிய மூலதனமும் வரவில்லை) புதிய பாசிச வடிவங்களை மூலதனம் ஆட்சியில் அமர வைக்கும். அது காங்கிரசின் மதச்சார்பற்ற பாசிசமாகவோ (Secular fascism), திராவிட மாடல் பாசிசமாகவோ, அல்லது வேறுவகை வடிவமாகவோ இருக்கலாம். பாசிசத்தின் வடிவங்கள் மாறலாமே ஒழிய, மூலதனத்தின் ஏகபோக ஆட்சி நீடிக்கும் வரையில் பாசிசமும் நீடிக்கும். பாஜக எதிர்ப்புணர்வை காங்கிரசு எங்ஙனம் வாக்கு வங்கியாக மாற்றப்போகிறது என்பதைப் பொறுத்துதான் முதலாளிகளின் விருப்பங்கள் கூட நிறைவேற வாய்ய்புண்டு. இந்த விசயங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதானியின் பங்குச்சந்தை மோசடிகள் அம்பலப்பட்ட பின்பும் திமுக அரசு அதானியுடன் போட்ட ஒப்பந்தங்களை இரத்து செய்யவில்லை. அதானி மோசடி குறித்து மூச்சுவிடவும் தயாரில்லை. எனவே அதானி- அம்பானிகளுடன் திமுக அரசு போட்டுள்ள ஒப்பந்தங்களை இரத்து செய்யக் கோரிப் போரட வேண்டும். இப்போராட்டங்களை மோடி கும்பலை ஆட்சியில் இருந்து அகற்றும் போராட்டங்களுடன் இணைக்க வேண்டும்.
இதுவே பாட்டாளி வர்க்கத்தின் இன்றைய பிரதான கடமையாகும்.
- சமரன்
(மார்ச் - மே 2023 மாத இதழ்)