பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு காரணம்

தாராளமய கொள்கைகளும் மத்திய - மாநில அரசுகளின் வரிக் கொள்கைகளுமே!

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு காரணம்

பாசிச மோடி ஆட்சி இந்திய வரலாற்றில் இது வரையில் இல்லாத வகையில் கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் - டீசல் விலையை தினந்தோறும் உயர்த்தி வருகிறது.  ஐந்து மாநிலத் தேர்தல்களுக்காக 137 நாட்கள் விலையேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அதன் பிறகான 16 நாட்களில் 14 முறை பெட்ரோல் - டீசல் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதனால் தற்போது பெட்ரோல் விலை ரூ. 120, டீசல் விலை ரூ.101, சமையல் எரிவாயு விலை ரூ. 1000 வரை உயர்ந்துள்ளது. இந்த வரி உயர்வு என்பது கார்ப்பரேட் நலனிலிருந்தே உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசலின் மீது கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி, செஸ் வரி, சிறப்பு வரி உள்ளிட்ட புதிய காலனியச் சுரண்டல் வரிக் கொள்கை மூலம் 2020 - 2021 நிதியாண்டில் மட்டும் சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடி அளவுக்கு சுரண்டியுள்ளது. இவ்வாறு 8 ஆண்டுகளில் மக்களிடமிருந்து ரூ. 26.52 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10.57 லட்சம் கோடி வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் ஆண்டொன்றுக்கு சுமார் 5லட்சம் கோடி வரிச்சலுகையும் அளித்து வருகிறது. 

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கலுக்குச் சேவை செய்யும் வகையில்

·        மத்திய, மாநில அரசுகள் தங்களின் வருவாய்க்கு பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கும் வரிக் கொள்கைகள்;

·        அரசாங்கம் பெட்ரோலிய நிறுவனங்களை தனியார்மயமாக்கியது; பெட்ரோலுக்கு விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கைவிட்டு அதை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்தது;

·        2017ல் தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்களே விலையேற்ற அனுமதித்தது;

·        பெட்ரோலிய வர்த்தகம் சர்வதேச அளவில் டாலரில் நடப்பது;

·        அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவடைந்து கொண்டே செல்வது;

போன்ற காரணங்களால்தான் இன்று பெட்ரோலியப் பொருட்களின் விலை விண்ணைத் தாண்டிப் பறக்கிறது.

இன்றைய பெட்ரோல் விலை உயர்வுக்கான முதன்மையான காரணம் இந்திய அரசு கடைப்பிடிக்கும் வரிக்கொள்கைகளாகும். இந்தியாவில் தற்போது விற்கப்படும் பெட்ரோல் விலை ரூ.105ல் மத்திய அரசின் வரி ரூ.32ஆகவும் தமிழக அரசின் வரி ரூ.22.54ஆகவும் உள்ளது.

2020-21ல் மத்திய அரசு வசூலித்த பெட்ரோல் டீசல் வரி ரூ.4.19 லட்சம் கோடி (ரூ. 3.73 லட்சம் கோடி கலால் வரி; ரூ. 10,676 கோடி செஸ்) ஆகும். மாநிலங்கள் மூலம் ரூ.2.17 லட்சம் கோடி (வாட் ரூ. 2.03 லட்சம் கோடி) வசூலிக்கப்பட்டது. மத்திய கலால் வரியின் கீழ் வசூலிக்கப்பட்ட கார்பஸில் இருந்து மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வரி ரூ.19,972 கோடி ஆகும்.

இவ்வாறு, மோடி கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெட்ரோலுக்கு சுமார் 300 சதவீதமும், டீசலுக்கு 600 சதவீதமும் வரியை உயர்த்தியுள்ளது. மாநில அரசுகளும் தன் பங்கிற்கு வரிகளை உயர்த்தியுள்ளது. இதுவே இன்றைய பெட்ரோல் விலை தொடர்ச்சியாக உயர்வதற்கு முதன்மையான காரணமாகும்.

வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில்தான் பெட்ரோல், டீசல், எரிவாயுவுக்கான விலைகளை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இந்த கொள்கை முடிவு மன்மோகன்சிங் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2017-ல் மோடி கும்பல் தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்களே விலையேற்ற அனுமதித்தது. மோடியின் எட்டு ஆண்டுகால ஆட்சியில் இந்தியன் ஆயில் நிறுவனம் 21,762 கோடி லாபமும், பாரத் பெட்ரோலிய நிறுவனம் கடந்த மார்ச் மாதம் வரை 19,041.7 கோடி லாபமும் ஈட்டியுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் 10,664 கோடி லாபம் ஈட்டியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 2020-21 நிதியாண்டில் 88,939கோடியாக இருந்த மொத்த வருவாய் 2021-22ல் முதல் காலாண்டில் மட்டும் 1லட்சத்து 55ஆயிரத்து 56கோடி லாபம் அடைந்துள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியையே சார்ந்து இருக்கிறது. பெட்ரோலிய வர்த்தகம் சர்வதேச அளவில் டாலரில் நடப்பதால் இந்தியாவிற்குக் கடும் பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. இந்தியா அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்குப் அடிபணிந்து ரூபாயில் இறக்குமதி செய்துகொண்டிருந்த ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை முறித்துக்கொண்டது. அதே போல் வெனிசுலாவுடனான ஒப்பந்தத்தையும் முறித்துக்கொண்டது. இதனால் இந்தியா கச்சா எண்ணெயை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியுள்ளது.

அடுத்தது ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிக விலை கொடுக்கவேண்டியுள்ளது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்குக் காரணமென்ன? அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்த புதிய காலனியாதிக்கத்திற்குச் சேவை செய்யும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக இந்தியாவின் உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு, அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு சரிகிறது.

ஒட்டுமொத்தமாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கும் அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்குச் சேவை செய்யும் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகள்தான் நாட்டின் அனைத்து பொருளாதார நெருக்கடிகளுக்கும் பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்திற்கும் அடிப்படை காரணமாகும்.

மோடி கும்பலின் வாய்ச்சவடால்

2014 நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம், பெட்ரோல் டீசல் விலைகளைக் குறைப்போம், சாமானிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது மோடி கும்பல். எண்ணெய் நிறுவனங்கள் மீதும் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்கள் மீது வரிகளை உயர்த்துவதற்குப் பதில் கார்ப்பரேட் வரியை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக 2021-22 மத்திய பட்ஜெட்டில் குறைத்துள்ளது. மேலும், வரிச்சலுகையாக 1.45லட்சம் கோடியும், கடன் தள்ளுபடியாக 2லட்சத்து 38ஆயிரம் கோடியும் அளித்துள்ளது. கடந்த 5ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் வரி, நேரடி வருமான வரி சுமார் 10.57லட்சம் கோடியை வசூலிக்க மறுக்கும் மோடி கும்பல் உழைத்து உழைத்து ஓடாய் தேயும் சாமானிய மக்கள் மீது கலால் வரிகளைப் போட்டு இதுவரை ரூ.26.53 லட்சம் கோடியைக் கொள்ளையடித்துள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையேற்றம் என்பது ஒரு சாதாரணப் பிரச்சனை அல்ல. கச்சா எண்ணெயிலிருந்து பெயிண்ட், அழகு சாதன பொருட்கள், மசகு எண்ணெய், மெழுகு, ஆஸ்பால்ட், ரப்பர், உரங்கள், பிளாஸ்டிக், மரப்பால் மருந்துகள், செயற்கை இழைகள் மற்றும் வெடிபொருட்கள் போன்ற உப பொருட்களுக்கான விலையும் உயர்ந்துள்ளது. அதே போல் சரக்கு போக்குவரத்தில் ஏற்படுகின்ற விலை உயர்வு என்பது நாமக்கட்டி முதல் ஸ்டிக்கர் பொட்டு வரை, உப்பு முதல் கற்பூரம் வரை, அரிசி முதல் பருப்பு வரை, காய்கறிகள் முதல் கடுகு வரை, பேருந்து கட்டணம் முதல் சுங்க கட்டணம் வரை, ரயில் கட்டணம் முதல் விமான கட்டணம் வரை, உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்திற்கும் அனைத்து வகையான பொருளாதார நெருக்கடிகளுக்கும் வித்திடும் பிரச்சனையாக உள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும் சாமானிய மக்கள் படும் துயரம்

கடந்த 20 மாதங்களாகக் கொரோனா பொது முடக்கத்தாலும் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வாலும் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். வறுமை, பசி பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து மாதம் 3000 கூட சம்பாதிக்க முடியாமல் துன்பத்துயரங்களை அனுபவிக்கின்றனர். பியூ ஆய்வு மையம் நடத்திய ஆய்வுகள் இந்தியாவில் ஒரே ஆண்டில் 3 கோடியே 20 லட்சம் பேர் புதிதாக ஏழைகளாக மாறியுள்ளனர் எனக் கூறுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அன்றாடங்காச்சிகள், ஆட்டோ தொழிலாளர்கள் சிறிய நடுத்தரத் தொழிலாளர்கள், சில்லறை வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகப் பெட்ரோல் விலை உயர்வால் 25 லட்சம் மோட்டார் வாகன தொழிலாளர்  குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

தினமும் 5 லிட்டர் பெட்ரோல் போட்டு வாகனத்தை இயக்கும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக 30 ஆயிரமும், 10லிட்டர் பெட்ரோல் போடும் டேக்சி தொழிலாளர்களுக்கு 50 ஆயிரமும், 20 லிட்டர் டீசல் போடும் சிறிய சரக்கு வாகனத்திற்குக் கூடுதல் எரிபொருள் செலவு ஒரு லட்சமும், 150லிட்டர் டீசல் போடும் லாரிக்கு 8 லட்சமும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 500 கோடியும் செலவு ஆகிறது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்கவே முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். கச்சா எண்ணெய் விலை உலக மார்கெட்டில் அதிகரித்துக் கொண்டே போவதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்குவதாகவும், இதனால் அரசுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் கடும் நிதிச்சுமை ஏற்படுவதாகவும் மோடி கும்பல் கூறுகிறது. உண்மை நிலை உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் சரிந்து வருகிறது. இதன் அனைத்து பலன்களையும் எண்ணெய் நிறுவனங்களும், அம்பானி அதானியின் நிறுவனங்களும் அனுபவித்து வருகின்றன.

2014 ல் மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தபோது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 109 டாலராக இருந்தது. அன்று ஒரு லிட்டர் பெட்ரேல் 71 ரூபாயாகவும், டீசல் 54 ரூபாயாகவும் சமையல் எரிவாயு விலை 410 ரூபாயாகவும் இருந்தது. 2021-ல் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 57 டாலருக்கு குறைவாக சரிந்தும் கூட ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கும், டீசல் ரூ.94க்கும் சமையல் எரிவாயு ரூ.850க்கும் விற்கப்பட்டது. 2014ம் ஆண்டை விட தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 91 டாலாராக குறைவாக இருந்தும்கூட பெட்ரோல் விலை ரூ. 120க்கும், டீசல் விலை ரூ.101க்கும் விற்கப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வையே காரணம் காட்டுகிறார்கள்.  2014-ல் பெட்ரேல் மீதான கலால் வரி ரூ.9.48 ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூ.3.56 ஆகவும் இருந்ததை மோடி ஆட்சி படிப்படியாக உயர்த்தி 2021-ல் பெட்ரோலுக்கு ரூ.32.90 ஆகவும்  டீசலுக்கு ரூ.31.80 ஆகவும், கடந்த 13 மாதங்களில் பெட்ரோலுக்கு ரூ.25.75ம் டீசலுக்கு ரூ.23.93ம் உயர்த்திக் கொள்ளை லாபம் அடித்துள்ளது.

2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி மூலம் ரூ.3லட்சம் கோடிக்கு அதிகமாக மக்களின் ரத்தத்தை வரிப் பணமாகக் கொள்ளையடித்துள்ளது 'மக்களின் நாயகன்' மோடி ஆட்சி. நடப்பு நிதியாண்டில் 2021-2022ல் பெட்ரோல் விலை 39 முறையும், டீசல் விலை 36 முறையும் விலை உயர்த்தியுள்ளது.

மோடி அற்புதமானவர் ஏழைகளின் கஷ்டங்களைத் தீர்க்க வந்த தேவதூதர் இனிமேல் விறகு அடுப்பு யாரும் பயன்படுத்தக் கூடாது, இனி மானியத்தோடு ஆண்டுக்கு 12 சிலிண்டர் வழங்கப்படும் என பா.ஜ.க ஆட்சியாளர்கள் ஒளிவட்டம் கட்டினார்கள். தற்போது நாடு முழுவதும் 28 கோடியே 90 லட்சம் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. இந்நிலையில் 2014-ல் 410 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை 2022ல் மக்கள் கண்ணீர் வடிக்கும் வகையில் மானியங்களை வெட்டி 1000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதேபோல் மண்ணெண்ணெய் எரிவாயுக்கான மானியங்களை படிப்படியாகக் குறைத்து வருகிறது. 2019-20-ல் ரூ.4058 கோடியாக இருந்த மானியத்தை 2020-21-ல் ரூ.2677 கோடியே 32 லட்சமாக வெட்டியுள்ளது. 2021-22-ல் முழுமையாக மானியத்தை ஒழித்துவிட்டது.

2019-ல் ஒரு சிலிண்டருக்கு 175 ரூபாயாக இருந்த மானியத்தை 2021 ஜனவரியில் வெறும் 65 ரூபாயாக குறைத்துள்ளது. குறிப்பாக கடந்தாண்டு சிலிண்டர் விலையை பிப்ரவரி 4ம்தேதி 25 ரூபாயும், 15ம்தேதி 50 ரூபாயும், 25ம்தேதி 25 ரூபாயும், மார்ச் 1ம்தேதி 25 ரூபாய் என 30 நாட்களில் 125 ரூபாய் உயர்த்தியதோடு மீண்டும் ஒரு சிலிண்டருக்கு 25 ரூபாய் உயர்த்தியது. இந்தாண்டு மார்ச் மாதத்தில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ50 உயர்த்தி எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுகிறது. உலக வங்கியின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் எரிவாயு  விலையை 1000 ரூபாயாக உயர்த்தியுள்ளது மோடி கும்பல்.

கார்ப்பரேட் கொள்ளையும் அதற்குச் சேவை செய்யும் வரிக் கொள்கையும்

எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று காங்கிரஸ் கட்சியின் 10ஆண்டுக் கால ஆட்சியும், தற்போதைய மோடி கும்பலின் 8ஆண்டுக் கால ஆட்சியும் ஒரே பல்லவியைதான் பாடுகின்றன.

காங்கிரஸ் கட்சியின் 10ஆண்டுக் கால ஆட்சியில் எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்துள்ளனர். குறிப்பாக 2010-2011-ல் ஓ.என்.ஜி.சி (ONGC) நிறுவனம் ரூ. 18,924 கோடியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (IOC) ரூ.7,445 கோடியும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ரூ. 1,547 கோடியும், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ரூ 1,539 கோடியையும் கொள்ளையடித்தன. அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தாராளமாக எண்ணெய் விலையை உயர்த்த வேண்டும், பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என்றும், விலைவாசியை உடனடியாக கட்டுப்படுத்தும் மந்திரக்கோல் எதுவும் இல்லை என்றும் கூறினார். அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விலைவாசியைக் கட்டுப்படுத்தும் மந்திரக்கோலான அலாவுதீன் அற்புத விளக்கு எதுவும் என்னிடம் இல்லை என எண்ணெய் நிறுவனங்களுக்கும் தரகு முதலாளித்துவ கும்பல்களுக்கும் பரிந்து பேசினார்.

தற்போது மோடியும் நிதியமைச்சரும், எண்ணெய் நிறுவனங்களும் அரசும் கடும் நஷ்டத்தையும் நிதி இழப்பையும் சந்திப்பதாக கூறி கோயபல்ஸ் வேலையை, ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பப் பேசுவதன் மூலம் உண்மையாக்க முயற்சிக்கின்றனர்.

எண்ணெய் விலைகளைக் குறைக்க முடியாது என்று மோடி கும்பலும், பெட்ரோல் விலை உயர்ந்தால் சைக்கிளில் சந்தைக்குச் செல்லுங்கள் என்று கருநாடக எம்பியும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளின் பெற்றோர் மாண்டுப் போங்கள் என்று ம.பி. பாஜக எம்பியும் ஆணவத்தோடு பேசுகின்றனர். 7 பைசா பெட்ரோல் விலை உயர்வுக்கே மாட்டு வண்டியில் வந்து போராடியது வாஜ்பாய் கும்பல், தற்போது வாஜ்பாயின் வாரிசான மோடி ஆட்சி பெட்ரோல் விலையை 100 ரூபாய்க்கு மேல் உயர்த்தி மக்களை மாட்டு வண்டியில் போக சொல்கிறது.

உண்மையில் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலைகள் உயர்வுக்கான அடிப்படை காரணமான உலகமய, தனியார்மய ,தாராளமய கொள்கைகளை விமர்சிக்காமல் தனிநபர் மீதான விமர்சனங்களை முன்வைத்து எதிர்கட்சிகள் நாடகமாடுகின்றன.

தாராளமய கொள்கைகளையும் கார்ப்பரேட்டுகளின் விலை நிர்ணய உரிமையையும் தகர்த்தெறிவோம் !

கடந்த 30 ஆண்டுகளாக செயல்படுத்தப்படும்  தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளே நாட்டின் அனைத்து நெருக்கடிக்கும் பெட்ரோல், டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வதற்கும் அடிப்படை காரணமாகும்.

இந்தியாவின் மீதான அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கம்; தாராளமய கொள்கையின் விளைவாக நாட்டின் உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு; அந்நியச் செலாவணி பற்றாக்குறை; ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி; டாலரின் ஏகபோக ஆதிக்கம்; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்து ஈரானுடன் போடப்பட்ட உணவுக்கு எண்ணெய் திட்டம் கைவிடப்பட்டது; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, ஊக்கத்தொகை வழங்கும் மத்திய மாநில அரசுகளின் வரிக்கொள்கைகள்; எண்ணெய் நிறுவனங்களே சந்தைவிலைக்கேற்ப விலைநிர்ணயம் செய்யலாம் என்ற கொள்கை முடிவு போன்றவைதான் பெட்ரோல்-டீசல் விலையுயர்வுக்கு அடிப்படை காரணமாகும்.

எனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அடிப்படை காரணமான தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை எதிர்த்தும், பெட்ரோலிய பொருட்கள் மீதான கார்ப்பரேட்களின் விலை நிர்ணய உரிமையை ஒழித்து அரசே விலையை நிர்ணயிக்க கோரியும், பெட்ரோலிய  நிறுவனங்களை அரசுடமையாக்கவும், புதிய காலனிய வரிகளான கலால் வரி, செஸ் வரி, மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிக்கொள்கைகளை எதிர்த்தும் அனைத்து உழைக்கும் வர்க்கங்களும் ஒன்றுபட்டு போராடுவோம்!

சமரன் – 2022 - ஏப்ரல்-மே இதழ்