நாடாளுமன்றத் தேர்தல் 2024: பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்!
சமரன் - சிறப்புக் கட்டுரை
18வது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அதோடு ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிஷா மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் இந்த தேதிகளுக்குள் நடைபெற உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கதையளக்கப்படும் இந்தியாவின் போலிமுகத்திரையை மோடியின் பாசிச ஆட்சி விலக்கி தனது உண்மை முகத்தை இன்று அப்பட்டமாகக் காட்டியுள்ளது. அம்பானி அதானியின் நலன்களுக்காக அமெரிக்க ராமனுக்கு சேவை செய்யும் பேயாட்சியை நடத்தி வருகிறது. நாட்டையும் நாட்டு மக்களையும் அமிர்த காலத்திற்கு அழைத்துச் செல்வதாக பேசி ஓர் இருண்ட காலத்திற்கு கூட்டி செல்கிறது. இவற்றையெல்லாம் எதிர்த்து நாடாளுமன்றவாத சட்டவாத போராட்டம் கூட நடத்த திராணியற்று "இந்தியா" கூட்டணி உள்ளிட்ட ஆளும் வர்க்க எதிர்க்கட்சிகள் செயலற்று கிடக்கின்றன. மக்களை நம்பி இந்தத் தேர்தலை சந்திக்காமல் எந்த ஏகாதிபத்தியமாவது தலையிட்டு பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காதா என்று ஏங்கிக் கிடக்கின்றன. இந்த தேர்தலை உண்மையில் தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறதா அல்லது பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழு நடத்துகிறதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அதன் செயல்பாடுகள் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலின் மீதான ஜனநாயக மாயைகளை உடைத்தெறிந்துள்ளன. மக்கள் ஜனநாயகக் குடியரசே உண்மையான ஜனநாயகத்தை உருவாக்கும்; இந்த பாசிச காட்டாட்சிக்கு அதுவே மாற்று என்பதை பரவலாகவும் அழுத்தமாகவும் அனைவரிடத்தும் கொண்டு செல்வதே இந்தத் தேர்தலில் நமது செயல்தந்திரமாக உள்ளது.
ஏன் பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும்?
பொருளாதர வளர்ச்சியுடன் கூடிய இந்துத்துவா என்ற முழக்கத்தை வைத்து 2014ல் ஆட்சிக்கு வந்தது மோடி அரசு. 10 ஆண்டுகால கொடிய ஆட்சியில் அம்முழக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வந்துள்ளது. ஆம் இந்த முழக்கம் வெற்றிதான் அம்பானி அதானிகளின் பொருளாதாரம் உலகப் பணக்காரர்களுடன் போட்டியிடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது அல்லவா? இசுலாமியர்களின், தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வழிபாட்டு உரிமைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு இந்து ராஜ்ஜியத்தின் அடையாளமான ராமர் கோவில் நிறுவப்பட்டுவிட்டதல்லவா? இம்முழக்கம் அவர்களுக்கு வெற்றிதான். இந்த தேர்தலிலும் கூட ராமர் கோவில் கட்டிவிட்டோம், காஷ்மீரில் சிறப்பு சட்டம் 370 ஐ ரத்து செய்துவிட்டோம், குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றி விட்டோம் என்று பிரச்சாரம் செய்துதான் வாக்கு கேட்கிறது. ஆனால் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய பொருளாதாரம் வளர்ந்துள்ளதா எனில் நிச்சயம் இல்லை. வாழ்வின் அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. விலைவாசி உயர்வு, வறுமை, வேலைவாயிப்பின்மை தலைவிரித்தாடும் ஓர் இருண்ட காலத்திற்குள் நாட்டை இழுத்துச் சென்றுள்ளது என்பதுதான் உண்மை.
- நாட்டில் வறுமையில் வாடும் மக்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கதையளக்கும் மோடி அரசுதான் 80கோடி மக்கள் ரேசன் அரிசியை மட்டும் நம்பியே உயிர் பிழைக்கும் அவலநிலைக்குத் தள்ளியுள்ளது. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் வறுமை சதவிகிதம் 50% சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதே உண்மை. வறுமை மற்றும் பட்டினிக் குறியீட்டில் மிக மோசமான நிலையில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா நீடிக்கிறது. ஆசிய நாடுகளிலேயே இந்தியாதான் கடைசி இடத்தில் உள்ளது. ஆப்பிரிக்காவின் பஞ்ச நாடாக அறியப்படும் சோமாலியாவுடன் போட்டிபோடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உலகளவில் வறுமை விகிதம் உயர்ந்திருப்பதற்கு இந்தியா சரிபாதி விகிதத்தைக் கொடுத்திருக்கிறது.
- பஞ்சம், வறுமை, ஊட்டச்சத்து குறைபாடுகளால் பரந்த அளவிலான மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அன்றாடம் உயர்த்தி வருகிறது. கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்கள், பால் உள்ளிட்ட உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் என அனைத்துப் பொருட்களின் விலையும் மக்களின் வாங்கும் சக்திக்கு அப்பால் உயர்ந்துவிட்டன.
- நாட்டில் வேலையின்மை 9% சதவிகிதம் அளவிற்கு ஆண்டுதோறும் உயர்ந்து 40 கோடிக்கும் அதிகமானோரை வேலையில்லாப் பட்டாளமாக மாற்றியுள்ளது. பட்டப்படிப்பு முடித்து வரும் இளைஞர்களில் 85% சதவிகிதத்திற்கும் அதிகமானார் தாங்கள் படித்ததற்கு துளியும் சம்பந்தமில்லாத அத்துக் கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர்; அவர்களை உள்நாட்டு அகதிகளாக மாற்றியதோடு பக்கோடா போடுங்கள் என ஏளனம் செய்தது இந்த மோ(ச)டி கும்பல்.
- சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் 3 ட்ரில்லியன் டாலரை எட்டிவிட்டதாக பேசினாலும் இந்திய ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்திற்கு வீழ்ந்துவிட்டதானது நாட்டின் ஜிடிபி உண்மையில் வளரவில்லை; மாறாக வீழ்ச்சியடந்து வருகிறது என்பதையே காட்டுகிறது. இந்தியப் பொருளாதாரம் கடன் பொருளாதாரமாகவும் ஊகமூலதன பொருளாதாராகவும் மாற்றியமைக்கப்படுள்ளது என்பதுதான் உண்மை. சுமார் 190லட்சம் கோடி கடன் இருப்பதாக பட்ஜெட்டிலே குறிப்பிடும் நிலையில்தான் இந்தியா உள்ளது. மென்மேலும் இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறைந்து நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தே வருகிறது. இதனால் பணவீக்கம் 7% அளவுக்கு அதிகரித்து கடன் சுமை மேலும் அதிகரிக்கிறது.
- உழைக்கும் சாமானிய மக்களிடம் சுமார் 27லட்சம் கோடியை வரியாக பிடுங்கியுள்ளது; பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கு வரிச்சலுகைகள்; ஏகாதிபத்தியங்களிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரிச்சலுகைகள்; அம்பானி அதானி உள்ளிட்ட கார்பரேட்களுக்கு 25லட்சம் கோடிக்கு அதிகமான வாராக் கடன் தள்ளுபடிகள்; பணமாக்கல் திட்டங்கள் மூலம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தது என முழுவதுமாக கார்ப்பரேட் நல அரசாக மாறியுள்ளது.
- வேளாண் உற்பத்திப் பொருட்கள் இறக்குமதி, கார்ப்பரேட் விவசாயம், மானிய வெட்டு, வங்கி கடன் மறுப்பு, உரம் மற்றும் இடுபொருட்கள் விலை உயர்வு, நதிகள் தனியார்மயம் போன்ற நடவடிக்கைகளால் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றியதோடு ஆண்டுக்கு 3.5லட்சம் விவசாயிகளை கொன்று புதைத்து வருகிறது.
- பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து பொருட்களை சந்தையில் கொட்டிக் குவிப்பது - அவைகளுக்கு இங்கு தொழில் தொடங்க சலுகைகள், மானியங்கள் வாரி இறைப்பது. இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் சட்டம் (Merger and acquisition act) மூலம் சிறிய நிறுவனங்களை கையகப்படுத்தி அதானி - அம்பானி நிறுவனங்களின் மையப்படுத்தப்பட்ட ஏகபோகத்திற்கு வழிவகுத்தது. ஆனால் மறுபுறம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு, மானிய வெட்டு மூலம் பல லட்சம் சிறு - குறு தொழில்களை ஒழித்துக் கட்டியுள்ளது. இதுதான் பாஜக அரசின் 'மேக் இன் இந்தியா'.
- ஆன்லைன் வர்த்தகத்தில் பிளிப்கார்ட், அமேசான், சுவிக்கி, சொமேட்டோ, ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கமானது சில்லறை வர்த்தகத்தை ஒழித்து இந்திய வணிகம் மீதான மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளைத் தகர்த்து பல லட்சம் வணிகர்களின் வயிற்றில் அடித்துள்ளது. இதுதான் மோடி கும்பலின் 'டிஜிட்டல் இந்தியா'.
- இந்தியாவின் சந்தையும் பொருளாதாரமும் மையப்படுத்தப்பட்டு மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்டு வருகிறது. நீட், கியூட், தேசியக் கல்விக்கொள்கை மூலம் மாநில அரசுகளின் கல்வி உரிமைகளைப் பறித்து விட்டது. கல்வி, மருத்துவம், வங்கிகள் உள்ளிட்ட சேவைத் துறைகள் அனைத்தையும் முற்றிலும் தனியார்மயமாக்கி மாணவர்களை தூக்கிலேற்றி வருகிறது.
- நாட்டின் இயற்கை வளங்கள், மூலப்பொருட்கள், மனித வளங்கள் அனைத்தையும், பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் தடையில்லாமல் கொள்ளையடிக்க ஏதுவாக சுற்றுச் சூழல் சட்டம், வனச் சட்டம், பல்லுயிர் பெருக்கச் சட்டம், அரிய தனிமங்கள் பயன்பாட்டு சட்டம், நிலச் சீர்திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் இருந்த சொற்ப தடைகளையும் திருத்தங்கள் செய்து வருகிறது.
- அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்ய இராணுவ - பாதுகாப்புத் துறை அடிப்படை ஒப்பந்தங்கள்; ஆசிய-பசிபிக், இந்தோ-பசிபிக், குவாட் உள்ளிட்ட இராணுவ -பொருளாதார கூட்டமைப்புகளில் ஈடுபட்டு வருகிறது. இராணுவ தளவாட உற்பத்தி, துறைமுகம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கியுள்ளது. 2023 செபடம்பரில் நடந்த ஜி-20 மாநாட்டில் நாட்டை அமெரிக்காவின் புதிய காலனிய பிடியில் இறுக்கும் பல்வேறு அடிமை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
- உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஊழல், சுங்கச் சாவடிகளில் ஊழல், மருத்துவக் காப்பீடுத் திட்டங்களில் ஊழல், இராணுவ தளவாட உற்பத்தியில் ஊழல், கிராமப்புற மேம்பாடு திட்டத்தில் ஊழல், பங்குச் சந்தை மோசடிகள், 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல், நிலக்கரி ஊழல், ரஃபேல் ஊழல், வியாபம் ஊழல் என மோடி ஊழல் செய்யாத துறையே இல்லை என்ற அளவுக்கு உலக அளவில் ஊழல் செயவதில் "விஷ்வகுரு"வாக திகழ்கிறார் மோடி.
- கார்ப்பரேட் சேவைகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமே பல்லாயிரம் கோடிகளை கையூட்டாக சட்டரீதியாக பெற்றுள்ளது பாஜக. மொத்த தேர்தல் பத்திரங்களில் சுமார் 6000 பத்திரங்களைப் பற்றிய விவரங்களை மூடிமறைத்து மோடி அரசின் பினாமியாக செயல்படுகிறது எஸ்.பி.ஐ. வங்கி.
இவ்வாறு பாஜக ஆட்சி அனைத்து நெருக்கடிகளையும் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்கள் மீதும் சுமத்தி வருகிறது. அதை எதிர்த்தப் போராட்டங்களை சாதி-மத ரீதியாக பிளவுபடுத்தி பாசிச அடக்குமுறைகளை ஏவி வருகிறது பாஜக அரசு. அதற்கு ஏதுவாக அரசின் அனைத்து உறுப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் மயம் - பாசிச மயமாக்கியுள்ளது.
- அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் திருத்தி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்றியது. அதற்கு எதிரான போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. விவசாயிகளின் டெல்லி போராட்டத்தை முள்வேலி அமைத்தல், தார்சாலைகளில் ஆணி நடுதல், சாலைகளில் பள்ளம் பறித்தல், காலாவதியாகி-விசமாகிப் போன கண்ணீர் புகை குண்டுகளை வீசுதல், பெல்லட் குண்டுகள் மூலம் விவசாயிகளின் உடல்களை சல்லடையாக துளைத்தல், குண்டாந்தடிகள் கொண்டு தாக்கி கொலை செய்தல் என அராஜகத்தை ஏவியது.
- தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்த துணை இராணுவப் படைக்கு சிறப்பு அதிகாரச் சட்டம் வழங்கியது; காஷ்மீர் 370 சிறப்பு அந்தஸ்தை பறித்தது; மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களில் கார்ப்பரேட் நலன்களுக்காக இரத்த வெறியாட்டம் நடத்தியது. இந்தி-சமஸ்கிருத-ஆங்கில மொழித் திணிப்புகள் மூலம் தேசிய மொழிகளை நசுக்கி வருவது; ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே சந்தை, ஒரே வரி, ஒரே கடவுள் என்று அனைத்து மாநில அதிகாரங்களையும் மத்திய அரசுகளின் கைகளில் குவித்துள்ளது.
- ஆசிபாக்களையும், ஸ்ரீமதிக்களையும் வண்புணர்ந்து கொன்று வீசியது; மணிப்பூரில் இளம் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றது; மல்யுத்த வீராங்கனைகளை காம இச்சைக்கு ஆளாக்கியது என நாடு முழுவதும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்களில் சங்பரிவார குண்டர்களை ஏவி வருகிறது. பில்கிஷ் பானுவையும் அவரது கைக்குழந்தையையும் சிதைத்த மிருகங்களை ஆரத்தி எடுத்து வரவேற்கிறது.
- இந்துத்துவாவையே தேசபக்தியாக பிரச்சாரம் செய்வது; இந்துத்துவத்தை எதிர்க்கும் எழுத்தாளர்களை சிறையிலடைப்பது - படுகொலை செய்வது; முத்தலாக் தடை, லவ் ஜிகாத் எதிர்ப்பு, ஹிஜாப் தடை, குடியுரிமை சட்டங்கள், நாடு முழுவதும் மசூதிகளை அகழ்வாய்ந்து திருட்டுத்தனமாக கோவில்களாக மாற்றி வருகிறது. இசுலாமியர்களின் வழிபாட்டு உரிமையை பறித்து வருகிறது, மாட்டுக் கறி ஏற்றுமதியில் உலகின் முதலிடத்தில் இருந்துக் கொண்டு 'பசு பாதுகாப்பு' எனும் பெயரில் இஸ்லாமியர்களைப் படுகொலை செய்வது, அவர்களுக்கு எதிராக டெல்லி, ஹரியானாவில் குஜராத் மாடல் கலவரங்களை உண்டாக்கியது என அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கியுள்ளது.
- ஊபா, என்.ஐ.ஏ, போன்ற பயங்கரவாத சட்டங்களை பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைத்து ஜனநாயக சக்திகள் மீதும் ஏவி வருகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம், குற்றத் தண்டைகள் சட்டம், உள்ளிட்ட சட்டங்களை திருத்தி பாசிச கருப்புச் சட்டங்களாக மாற்றி வருகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டம், ஊடகத் துறை சட்டங்களை திருத்தி ஊடகங்களின் குரல் வளையை நெறிக்கிறது.
- ஒருபக்கம் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு என நாடகமாடிக் கொண்டே, நாடு முழுவதும் புல்டோசர் பாசிசத்தை ஏவி வருகிறது. உழைக்கும் மக்களை அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து நகர்ப்புற வளர்ச்சி எனும் பெயரில் வெளியேற்றி வருகிறது. அவர்களின் வாழ்விடங்களை இடித்து தரைமட்டமாக்கி வருகிறது.
- மாபெரும் ஊழல்களில் திளைத்துக் கொண்டே ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் அமலாக்கத்துறையையும், வருமானவரித்துறையையும் - எதிர்க் கட்சிகளை பேரம் பேசி பணிய வைக்கவும், அவர்கள் மீது கைதுகள், அடக்குமுறைகளை ஏவவும் - கருவியாக பயன்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாது சுயேச்சையாக செயல்படுவதாக கூறப்படும் நீதித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசு அமைப்புகளையும் கூட பாசிச ஒடுக்கும் கருவிகளாக மாற்றியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த பெயரளவிலான ஜனநாயகத்தைக் கூட கேலிக்கூத்தாக்கியுள்ளது.
இவ்வாறு நாட்டைச் சுடுகாடாக்கி வருகிறது இந்த பாசிச பாஜக அரசு. எனவே இந்த பாசிச மோடி ஆட்சியை வீழ்த்துவது இன்றைய முக்கிய கடமையாகியுள்ளது. மக்கள் மத்தியில் பாசிச மோடி ஆட்சிக்கு எதிரான மன நிலையே உருவாகியுள்ளது. அதை அரசுக்கு எதிரான - இந்த பாசிச ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிரான - போராட்டமாக கட்டியமைக்க வேண்டும். ஆனால் மக்களின் இந்த கோபத்தை மடைமாற்ற பாசிசத்திற்கு எதிராக ஆளும் வர்க்க கும்பலின் மற்றொரு பிரிவான 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் பாசிச ஆட்சியை முடிவுக்கு கொண்ட வர முடியுமென்றும், நாடு இருண்ட காலத்தில் செல்வதை தடுத்து விடியலை உருவாக்க முடியம் என்றும் திருத்தல்வாதிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு பாசிசம் ஏன் தேவைப்படுகிறது?
பாசிச பாஜக ஆட்சிக்கு ஒரே மாற்றாக முன்னிறுத்தப்படும் காங்கிரசு தலைமையிலான 'இந்தியா' கூட்டணி பாசிசத்தை வீழ்த்துவதற்கான எந்த திட்டத்தையும் முன் வைக்கவில்லை. அவர்கள் ஏன் பாசிச பாஜகவிற்கு மாற்று இல்லை என்று பார்ப்பதற்கு முன் இந்தியாவின் இன்றைய ஆட்சியாளர்களுக்கு பாசிசம் ஏன் தேவைப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க-நேட்டோ, சீன-ரசிய ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உலக மறுபங்கீட்டுக்கான பனிப்போராக மாறியது. கொரோனா பெருந்தொற்றிற்குப் பிறகு இந்நிலை மேலும் மோசமடைந்தது. 80களுக்கு பிறகு நிதானமாக கட்டியமைக்கப்பட்டு வந்த பாசிசம் இன்று பாசிச மோடி ஆட்சியில் எட்டுக்கால் பாய்ச்சலுடன் கட்டியமைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவிற்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் அனைத்தும் இந்திய உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன. புதிய காலனிய-புதிய பொருளாதார உலகமய, தனியார்மய கொள்கைகளை இந்திய ஆளும் வர்க்கங்கள் தீவிரமாக அமல்படுத்துகின்றன. இதற்காக பொருளாதாரம் மையப்படுத்தப்படுகிறது. இந்த பொருளாதார மையப்படுத்துதல் அரசியல் மையப்படுத்துதலுக்கும், அரசியல் மையப்படுத்துதல் பாசிசத்திற்கும் இட்டுச் செல்கிறது. இந்த ஏகபோக உருவாக்கம் பிற வர்க்கங்களையும், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவையும் கூட ஒடுக்குகிறது. இந்த ஓடுக்குமுறையை எதிர்த்த மக்கள் போராட்டங்களை ஒடுக்க ஆளும் வர்க்கத்திற்கு பாசிசம் அவசியப்படுகிறது.
இந்துத்துவப் பாசிசம் என்பது வெறும் மதவாதம் அல்ல; அது அமெரிக்க ஏகாதிபத்திய - அம்பானி அதானி போன்ற தரகு பெரும் முதலாளித்துவ - பெரும் நிலவுடமை வர்க்கங்களின் கூட்டுப் பாசிசம் ஆகும். அது பாஜக என்ற கட்சியின் திட்டம் மட்டும் அல்ல. பாஜகவை தேர்தலில் தோற்கடிப்பதன் மூலமாகவோ, "இந்தியா" கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவதன் மூலமாகவோ இந்துத்துவப் பாசிசத்தை வீழ்த்த முடியாது. பாசிசத்தை கட்டி அமைப்பதற்கு நாடாளுமன்றம் வெறும் திரையாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பொருளாதார மையப்படுத்துதலை தகர்க்காமல் - நிதிமூலதன ஆதிக்கத்தைத் தகர்க்காமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது.
பாசிச பாஜகவை வீழ்த்துவோம் என காகிதத்தில் எழுதிப் பார்ப்பதன் மூலமே "இந்தியா" கூட்டணி, பாசிசத்தை வீழ்த்திவிட முடியாது. அதே போல் அவர்கள் பாசிசத்தை வீழ்த்துவார்கள் அல்லது பாசிசத்திற்கு மாற்று அல்லது மூச்சுவிட இக்கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்ற பம்மாத்து பேச்சுக்கள் எதுவும் பாசிசத்தை வீழ்த்த துளியளவும் உதவாது.
'இந்தியா' கூட்டணி பாசிசத்திற்கு நிச்சயமாக மாற்று இல்லை
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான சந்தர்ப்பாவாத கூட்டணியாக - 'இந்தியா (Indian National Develpmental Inclusice Alliance)' எனும் கூட்டணி உருவாக்கப்பட்டது. அது பாஜகவின் பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடித்து தங்களது எஜமானன்களான அமெரிக்காவுக்கும் அம்பானி-டாட்டா-அதானிகளுக்கும் சேவை செய்வதற்கு தங்களுக்கும் ஒரு வாய்ப்பு ஏற்படாதா என்றே போட்டிப் போடுகின்றன. இக்கூட்டணியின் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலைக்கு இழுத்துக் கொண்டு செல்கிறது. இவர்களுக்குள் பாஜகவை வீழ்த்துவதில் கூட ஓர் ஒத்தக் கருத்து ஏற்படவில்லை. ஒருவர் இராமர் கோவிலை எதிர்த்தால் ஒருவர் ஆதரிக்கிறார்; ஒருவர் இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்தால் மற்றொருவர் ஆதரிக்கிறார்; ஒருவர் சனாதனத்தை எதிர்த்தால் மற்றொருவர் சனாதனத்தை உயர்த்திப் பிடிக்கிறார்; இந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற உடன்பாடே இதுவரை எட்டப்படவில்லை. இந்தக் கூட்டணி சார்பாக இன்னும் தேர்தல் வாக்குறுதிகளோ அல்லது அறிக்கையோ கூட இதுவரை வெளியிடப்படவில்லை. காங்கிரசு வரும் ஏப்ரல் 6ம் தேதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. ஒவ்வாரு பிராந்தியக் கட்சியும் தனித்தனியாக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. இன்னும் பல மாநிலங்களின் தொகுதிப் பங்கீடுகள் கூட முடிவடையாத நிலையே நீட்டிக்கிறது. அந்த அந்தக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தமிழ்நாட்டில் மட்டும்தான் தொகுதிப் பங்கீடுகள் முடிந்துள்ளன. சென்ற ஆண்டு இறுதியில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களிலும் கூட ஒற்றுமை இல்லாமல் தனித்தனியாகதான் முடிவெடுத்து போட்டியிட்டன. அதுவே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாகியது. அந்நிலை தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடர்கிறது. இந்த அவலமான நிலையில்தான் 'இந்தியா' கூட்டணி உள்ளது. நாம் ஏற்கனவே கூறியது போல இது செத்தே பிறந்த கூட்டணி. இவர்களுக்கு இருக்கும் ஒரே கனவு மத்தியில் ஆட்சி சுகத்தை அனுபவிப்பது என்பதுதான்.
மறுபக்கம் பாஜக, மக்கள் மத்தியில் தனது ஆட்சி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக தோல்வி பயத்தைக் கொண்டுள்ளது. இதனாலேயே எதிர்க்கட்சிகள் மீது தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட பாசிச ஒடுக்குமுறைகளை ஏவி வருகிறது. டெல்லி முதல்வர் - ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த - அர்விந்த் கெஜ்ரிவாலை மதுபானக் கொள்கை வழக்கில் ஊழலில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையை ஏவி கைது செய்துள்ளது. நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஊழல்வாதிகள்; தான் மட்டுமே ஊழலை ஒழிக்க வந்த உத்தமர் என்று பேசி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொண்டு நிறுவனங்களின் தயவில் டெல்லியிலும் பஞ்சாப்பிலும் ஆட்சியைப் பிடித்தார். இன்று அவரும் ஊழலில் ஈடுபட்டிருப்பது முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது என்பதையே நிரூபித்துள்ளது. அது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அவரை இவ்வழக்கில் கைது செய்திருப்பது என்பதன் நோக்கம் என்னவென்பது நாம் அனைவருக்கும் சொல்லாமலேயே விளங்கும். ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை இதே பாணியில் உடைத்தது அல்லது மிரட்டி தங்கள் கூட்டணிக்குள் இழுத்துக் கொண்டது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் மீதும் கூட தற்சமயம் வருமான வரித்துறையை ஏவிவிட்டுள்ளது. சுமார் 1700 கோடி ரூபாய் வருமான வரி கட்ட வேண்டும் எனக் கூறி காங்கிரசின் வங்கி கணக்கை அராஜமாக முடக்கியுள்ளது. சிபிஐ கட்சிக்கும் கூட
ரூ. 11கோடி வருமான வரிக் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வருமானவரி கணக்கு காட்டத் தேவையில்லை என சட்டம் இடமளிப்பதாக காங்கிரசின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ப.சிதம்பரம் பேசுகிறார். அப்படியிருக்க வங்கி கணக்கை தேர்தல் சமயத்தில் முடக்க வேண்டிய காரணம் என்ன என்று அவர் கேள்வி எழுப்புகிறார். இவையனைத்தும் பாஜக அரசு தோல்வி பயத்தால் எதிர்க் கட்சிகளை போட்டிக் களத்தில் இருந்து வெளியேற்ற செய்யும் முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன.
ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஏகாதிபத்திய நாடுகளும் ஐ.நா.வும் பாஜக அரசின் இத்தகைய பாசிச அராஜகப் போக்குகளை கண்டிப்பதாக நாடமாடுகின்றன. பாசிச ஆட்சிக்கு ஆணிவேராக இருந்துக் கொண்டே ஜனநாயக வேடம் போடுகின்றன. உக்ரைன் போர் மற்றும் எண்ணெய் இறக்குமதிகளில் பாஜக அரசின் ரஷ்ய சார்பு நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக - அவை தங்களின் வளர்ப்பு பிள்ளையான ஆம் ஆத்மிக்கும்; பாஜகவானது சீனாவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட மறுக்கிறது - நான் உங்களின் ஆணைகளை அப்படியே நிறைவேற்றுவேன் என அமெரிக்காவிடம் மன்றாடிய ராகுல் காந்திக்காகவும் ஆதரவு குரல் கொடுக்கின்றனவே ஒழிய ஜனநாயகத்தை இந்தியாவில் நிலைநாட்டுவதற்காக அல்ல. இவை ஒருபோதும் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்காது; இருக்கும் அரைகுறை ஜனநாயகத்தை பறிக்கவே செய்யும். இவர்களுக்கு பாஜகவும் ஒன்றுதான், காங்கிரசும் ஒன்றுதான் யாராக இருந்தால் என்ன தங்களுக்கு சேவை செய்ய வேண்டும் அவ்வளவே. நமக்கும் இவ்விரண்டும் ஒன்றுதான். ஆனால் அவர்கள் பார்க்கும் கண்ணோட்டத்தில் அல்ல; பாட்டாளி வர்க்க அல்லது மக்கள் ஜனநாயக கண்ணோட்டத்திலிருந்து நாம் அவற்றை மதிப்பிடுகிறோம். இவைகள் இரண்டும் பண்பளவில் ஒரே கட்சிகள்தான். பாசிசத்தை அமல்படுத்துவதில் அளவில் வேண்டுமானால் சூழ்நிலைகளைப் பொறுத்து ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். பாஜக இந்துத்துவ பாசிசத்தை ஆட்சி வடிவமாக கொண்டுள்ளது. காங்கிரசு பெருந்தேசிய வெறியை பாசிச ஆட்சி வடிவமாக கடைப்பிடிக்கிறது. அதுவும் இந்துத்துவத்தை காரியவாதமாக பயன்படுத்தியே வந்தது; ஆளும் மாநிலங்களில் கடைபிடித்தே வருகிறது. இவ்விரு கட்சிகளும் அமல்படுத்தும் அரசியல்-பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றே ஆகும்; அக்கொள்கைகளின் ஆதாரமாக இருக்கும் நிதிமூலதனமே பாசிசத்திற்கு அடிப்படையாக விளங்குகின்றது.
நீரில் எழுதப்படும் தேர்தல் வாக்குறுதிகள்
பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்டே அவர்களின் தேர்தல் அறிக்கைக்கான முன்னோட்டமாக இருக்கும் சூழலில், இந்தியா கூட்டணி இதுவரை தேர்தல் அறிக்கையையும் வாக்குறுதிகளையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் காங்கிரசு கட்சி மட்டும் தனித்து 5 நீதிக் கொள்கைகளின் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. அதாவது விவசாயிகளுக்கான நீதி (கிசான் நியாய் - Kisan Nyay), தொழிலாளர்களுக்கான நீதி (ஷ்ராமிக் நியாய் - Shramik Nyay), இளைஞர்களுக்கான நீதி (யுவ நியாய் - Yuva Nyay), பெண்களுக்கான நீதி (நாரி நியாய் - Nari Nyay), பிற்படுத்தப்பட்டோருக்கான நீதி (பாகிதாரி நியாய் - Bhagidari Nyay) என ஒவ்வொரு தலைப்பிலும் தலா 5 உத்திரவாதங்கள் வீதம் 25 உத்திரவாதங்கள் இடம் பெறும் என - பாஜக அரசின் மோடி உத்திரவாதங்களுக்கு போட்டியாக - ராகுல் காந்தியின் உத்திரவாதங்களாக இவை அமையும் எனக் கூறியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள் கூட இல்லாத சூழலில் இவை இன்னும் தேர்தல் வாக்குறுதிகளை கூட திடமாக அறிவிக்க முடியாத குழப்ப நிலையிலேயே உள்ளன. இவைகள் அறிவித்தாலும், உலகமய - தனியார்மய - தாராளமயக் கொள்கைகளை பின்பற்றிக் கொண்டே நிறைவேற்ற முடியாது என்பதே நிதர்சனம். ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1லட்சம் வங்கி கணக்கின் மூலம் வழங்கப் போவதாகவும் பெண்களுக்கு வேலைகளில் 50% சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப் போவதாகவும் ராகுல்காந்தி பேசி வருகிறார். மோடியின் உத்திரவாதங்களை பொய் வாக்குறுதிகள் (ஜூம்லா) என பேசி விட்டு இவர் யாரை ஏமாற்ற இவ்வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். வேலைவாய்ப்பை பறிக்கும் கொள்கைகளையும் ஒப்பந்தங்களையும் ஏற்கனவே மாறிமாறி ஆட்சி அமைத்த இவ்விரு கட்சிகளும் ஏற்படுத்திவிட்டு வேலைவாய்ப்பை வழங்கப் போவதாகவும் அதில் இடஒதுக்கீடு அளிக்கப் போவதாகவும் மக்களை ஏமாற்றுகின்றன. ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர்ந்தால் கூட சமீபத்தில் ஜி-20 மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அடிமை ஒப்பந்தங்களைக் கூட மீற முடியாது. அவ்வொப்பந்தங்கள் என்ன வழிகாட்டுகின்றனவோ அதற்குட்பட்டுதான் இவர்கள் செயல்பட முடியும் என்பதே உண்மை. அதாவது பாஜகவின் வாக்குறுதிகள் என்னவோ அதுவே காங்கிரசு ஆட்சிக்கு வந்தாலும் அதன் நடவடிக்கைகளாக இருக்கும். இது பன்னாட்டு உள்நாடு கார்ப்பரேட் நலன்களுக்கானதே; இதனால் மக்களுக்கு சுமைகளே கூடும்.
திமுக-வின் வாக்குறுதிகள்
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால்,
- கேஸ் சிலிண்டர் விலை 500ரூபாய், பெட்ரோல் விலை 75ரூபாய், டீசல் விலை 65 ரூபாயாக குறைக்கப்படும் என்கிறது. அவற்றின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெட்ரோலிய கார்டல்களிடமும் தனியார் கார்ப்பரேட்களிடமும் தாரை வார்த்துவிட்டு, அதில் தனியார் மயத்தை ஒழிக்காமலேயே விலையை குறைக்கப்போவதாக பூ சுற்றுகிறார் ஸ்டாலின்.
- தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் வேலை நாட்கள் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாகவும் ஊதியம் ரூ.400 ஆகவும் உயர்த்தப்படும் என்கிறார். ஏற்கெனவே ஊதியம் வழங்கப்படாமல் இத்திட்டம் கைவிடப்படும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது அரசின் பொருளாதார நிலைமைகள். இதில் இவற்றை புத்துயிர் ஊட்டப்போவதாக கூறுவதெல்லாம் சுத்த ஏமாற்று வேலையே.
- தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்கிறது. போன சட்டமன்ற தேர்தலின் போதும் இதே வாக்குறுதியை அளித்துதான் ஆட்சிபிடித்தது. முதல் சட்டமன்ற தீர்மானம் இதுதான் என்றது. ஆட்சியிலேறிய 3ஆண்டுகள் முடிந்தபின்பும் அதை நிறைவேற்ற முடியவில்லை. அதை நிறைவேற்றுவது மத்திய அரசின் கைகளின் எல்லையை மீறி சென்றுவிட்டது என்பது தெரிந்தே ஏமாற்றுகிறார். அதனால்தான் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூட வாக்குறுதி அளிக்காமல் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்படும் என்கிறார்.
- புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும் என்கிறார். அதன் அத்தனை அம்சங்களையும் திமுக அரசு தமிழகத்தில் ஏற்கெனவே வேறு பெயர்களில் நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. அதை ரத்து செய்தாலும் செய்யாவிட்டாலும் அதன் அம்சங்களை நிறைவேற்றியே தீரும் என்பதே உண்மை. ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறித்து தன் பங்கிற்கு கல்வியை சந்தைப் பொருளாக்கியே வருகிறது திமுக அரசு. அனைவருக்கும் கல்வி கட்டாயம் என்பதை அமல்படுத்தி கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்காமல் புதிய கல்விக் கொள்கை ரத்து என்பதெல்லாம் நாடகமே
- குடியுரிமை சட்டத்தை ரத்து செய்வோம் என்கிறது. ஏற்கெனவே காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தபோது அதற்கு அச்சாரம் போட்டதும் இதே கட்சிதான். மேலும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு சட்டங்களை மறு பரிசீலனை செய்வோம் என்கிறது. அவை திமுக கடைபிடிக்கும் ஏகாதிபத்திய - கார்ப்பரேட் நலக் கொள்கைகளுக்கு உட்பட்டே உள்ளன. இதை கடைபிடித்துக் கொண்டே இச்சட்டங்களை திருத்த முடியாது என்று தெரிந்துக் கொண்டே ஏமாற்றுகிறது.
- திமுகவின் நீண்ட கால தேர்தல் வாக்குறுதிகளான (அண்ணா காலத்தில் இருந்தே தொடரும்) மாநில சுயாட்சி, ஆளுநர் பதவி ஒழிப்பு, மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி கோரிக்கைகளை இந்த தேர்தலிலும் பிரதியெடுத்துள்ளது. இந்த வாக்குறுதிகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றாமல் மாற்ற முடியாது என்பது தெரிந்தே பேசுகிறது. ஏன் இந்த வாக்குறுதிகளை காங்கிரசே கூட ஏற்காது என்றும் தெரிந்தே பேசி வருகிறது.
- மேகதாது அணை கட்டுவதை தடுக்குமாம்; இதை கூறிய அடுத்த மாத்திரமே கர்நாடகா காங்கிரசில் இருந்து எதிர்ப்பு குரல் கிளம்பிவிட்டது, அது நாங்கள் கட்டியே தீருவோம் என்கிறது.
ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று இரண்டை தவிர பெரும்பான்மை வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளது திமுக அரசு. பால் விலையை குறைப்போம் என்றார்கள் - ஆனால் லிட்டருக்கு ரூ.15க்கு மேல் உயர்த்திவிட்டார்கள். மின் கட்டணம் மாதமொருமுறை கணக்கெடுக்கப்படும் என்றார்கள் - ஆனால் வருடத்திற்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்தும் கொள்கையை அமல்படுத்தினார்கள். சொத்து வரி உயர்வு, நகர்புற வளர்ச்சி என்ற பெயரில் மீனவர்களையும், விவசாயிகளையும் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டி அடிப்பது என பாசிசத்தின் தொங்குச் சதையாக தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறது திமுக. பாஜக அரசுடன் கள்ளத்தனமாக கூடிக் குலாவுகிறது. இறையூர், மேலபாதி, நாங்குநேரி என திமுக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர் நடவடிக்கையாகி விட்டன. ஸ்ரீமதிக்களை வன்புணர்ந்து படுகொலை செய்த காவி கயவர்களை பாதுகாக்கிறது. இவர்களுக்கு பாசிச எதிர்ப்பு பேச என்ன அருகதை உள்ளது.
தமிழக அளவிலான பிற கட்சிகளின் நிலைபாடு
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையில் காங்கிரசு, சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியிலும், அதிமுக மற்றும் தேமுதிக ஒரு அணியாகவும், பாஜக தலைமையில், பாமக, தமாகா, அமமுக, உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் என நான்கு முனைப் போட்டியாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைந்துள்ளது. இக்கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகள் பற்றி இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
இந்தியா கூட்டணியின் திமுக - காங்கிரசு பற்றி மேலே பார்த்தோம். சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் வழக்கம்போல ஆளுக்கு 2 தொகுதி வீதம் திமுகவின் 'இந்தியா' கூட்டணியில் பெற்றுக் கொண்டு வழக்கம்போல அவைப்புலவர் பணியைத் தொடர்கின்றன. பெரும்பாலான எம்.எல். அமைப்புகளும், தமிழ்தேசிய அமைப்புகளும் கூட திமுகவின் பாசிசப் போக்குகளை கண்டிக்காமல், இக்கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கும் அறிவாலய தாசர்களாக மாறிவிட்டனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துக் கொண்டு அதன் கைப்பாவையாக செயல்பட்டு வந்தது அடிமை அதிமுக அரசு. பாஜகவின் கூட்டணியில் அங்கம் வகித்தபோது எடப்பாடி அரசு செய்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது போலீஸ் ராஜ்ஜியத்தை ஏவி 13 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது. அதன் பின்னரும் வீடு வீடாக புகுந்து வேட்டையாடியது. நீட் சட்டம், குடியுரிமைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து பாசிச சட்டங்களையும் பாஜக அரசு கொண்டு வந்தபோது அதற்கு ஆதரவளித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. மாநில உரிமைகள் அனைத்தையும் பாஜகவிற்கு தாரை வார்த்தது. தமிழக மக்களுக்கு துரோகமிழைத்தது. இதனால் சென்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்தது. பிற மாநிலங்களில் கட்சிகளை உடைத்தது போலவே தமிழகத்தில் அதிமுகவை உடைத்தது மோடி அரசு. அதன் பின்னரும் கூட பாஜக மற்றும் திமுக அரசுகளின் அரசியல் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து பேசாமல் உட்கட்சி பூசலில் கட்சியின் தலைமைக்கான போட்டியில் மூழ்கி கிடந்தது. எடப்பாடி கும்பல் கட்சியின் தலைமையைக் கைப்பற்றுவதற்காக பாஜகவின் கூட்டணியை முறித்துக் கொண்டது. பாஜகவினர் அதிமுகவை ஏறி மிதித்தபோதும் அக்கட்சியின் அநீதிகளை இன்றுவரை கூட பேச மறுக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்திலும் அது தொடர்கிறது. அவர்களுக்கு தங்களது கட்சியை தக்க வைப்பதே பெரும்பாடு ஆகிவிட்டது. தேர்தல் அறிக்கையில் ஒரு சில விசயங்களை தவிர திமுகவின் வாக்குறுதிகளையே அப்படியே பிரதியெடுத்துள்ளது அதிமுக. தேமுதிகவுடன் ஒரு உதவாக்கரை கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. வெற்றி விகிதத்தில் தமிழகத்தில் இரண்டாவது இடத்தை பிடிப்பது கூட இவர்களுக்கு இன்றைக்கு சவாலாக மாறியுள்ளது. பாஜக மற்றும் திமுக அரசுகளின் மக்கள் விரோதப் போக்குகளை அம்பலப்படுத்தி அரசியல் இயக்கம் நடத்த திராணியற்றும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு தன் கட்சி உறுப்பினர்களை தாரை வார்த்து நிற்கிறது. இக்கட்சி எப்போதும் பாசிசத்தின் தொங்குச் சதையாகவே இருந்து வருகிறது. எனவே இந்தக் கூட்டணி எவ்விதத்திலும் பாஜகவுக்கோ அல்லது 'இந்தியா' கூட்டணிக்கோ மாற்றாக அமையாது.
பாஜகவானது பாமக, அமமுக போன்ற கட்சிகளையும் ஓபிஎஸ், சரத்குமார்-ராதிகா போன்ற தனிநபர்களையும் இணைத்துக்கொண்டு மதவாத - சாதிவாத சாக்கடைக் கூட்டணியை உருவாக்கியுள்ளது. பாஜகவின் எச்சில்காசுக்கும் எலும்புத்துண்டுக்கும் அலையும் மகா கேடான சந்தர்ப்பவாத கூட்டணி இது. அவை தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களால் விரட்டியடிக்கப்படுவது உறுதி.
நாம் தமிழர் கட்சி இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என சொன்னாலும் அ.தி.மு.க.வுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. உலகமய கொள்கைகளை எதிர்த்து மாற்றுப் பொருளாதார கொள்கையை முன் வைக்காமல் சுதேசியப் பொருளாதாரம் பேசுவதும், எவ்வித அதிகாரமுமற்ற, நிலவும் சட்டமன்ற அமைப்பிற்குள்ளாகவே தமிழ்தேசிய அரசு அமைப்பதாக பேசுவதும் நடைமுறை சாத்தியமற்றதாகும். எனவே இக்கட்சியின் அரசியல் பொருளாதார கொள்கை திராவிட கட்சிகளின் அரசியல் பொருளாதாரக் கொள்கைக்கும் மாற்றாக அமையாது.
பாசிசத்தின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்
நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் அரசாங்கத்தின் அங்கமாக இல்லாமல் சுயேச்சையான அதிகாரத்துடன் செயல்படும் அமைப்புகள் என்ற மாயைகள் இந்த தேர்தலில் தகர்க்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பு முதல் - 7 கட்டமாக நடத்துவது வரை பாஜக அரசாங்கத்திற்கு சாதகமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கலை உண்டாக்கியுள்ளது. விசிக, மதிமுக, நாம் தமிழர் கட்சி என அந்த பட்டியல் நீள்கிறது. தேர்தல் விதிகளை சின்னம் ஒதுக்குவதில் காரணம் காட்டினாலும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சின்னத்திற்கு எந்த தகுதியும் பெற்றிராத தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்குகிறது. ஆனால் எதிர்கட்சிகளுக்கு மறுக்கிறது. தேர்தல் அறிவித்த பின்பும் எதிர்கட்சிகளின் மீதான கைதுகள், வங்கி கணக்கு முடக்க நடவடிக்கைகளை வேடிக்கைப் பார்க்கிறது. ஆளும் வர்க்க கட்சிகளுக்கு பேச்சுரிமை, கருத்துரிமையை வாரி வழங்கும் இதே தேர்தல் ஆணையம் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் போன்ற அமைப்புகளின் கருத்துரிமை பேச்சுரிமையை திமுக அரசின் ஏவலுக்கு அடிபணிந்து பறிக்கிறது. இதில் ஜனநாயகமும் இந்த ஆணையத்தின் சுயேச்சைத் தன்மையும் எங்கே வாழ்கிறது. இது பாசிச அரசுகளின் கைப்பாவையாகவே செயல்படுகிறது.
நாடாளுமன்றவாத மாயைகளை விட்டொழித்து மக்கள் ஜனநாயக குடியரசமைக்க போராடுவோம்
இன்று இந்திய அரசு செயல்படுத்திவரும் புதிய தாராளக் கொள்கைகள் மற்றும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளை காங்கிரஸ், பா.ஜ.க. மட்டுமல்ல அனைத்து நாடாளுமன்றவாதக் கட்சிகளும் ஆதரிக்கின்றன என்பதை பார்த்தோம். மத்தியில் அதிகாரத்தில் இல்லாத தரகுமுதலாளித்துவக் கட்சிகள், மாநில அளவிலான தரகு முதலாளித்துவக்கட்சிகள், சமூக நீதி மற்றும் தலித்தியம் பேசுகின்ற சாதிவாதக் கட்சிகள் என அனைத்து நாடாளுமன்றவாதக் கட்சிகளுக்குள் மேற்கண்ட தேசவிரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வேறுபாடுகள் இல்லை.
இக்கட்சிகளுக்குள் உள்ள வேறுபாடு என்னவென்றால், எந்த ஆளும் வர்க்கக் கட்சிகளை சார்ந்தக் கும்பல் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதிலும், எத்தகைய அரசாங்கம் அமைப்பது என்பதிலும்தான் மாறுபடுகின்றன. அதாவது இந்திய அரசை ஒரு இந்துத்துவ பாசிச அரசாகக் கட்டியமைப்பதா அல்லது பெரும் தேசியவாத பாசிச அரசாகக் கட்டியமைப்பதா என்பதுதான் பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் உள்ள வேறுபாடு ஆகும். கடந்த காலங்களில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசுக்கு பா.ஜ.க.வும், பாஜகவுக்கு காங்கிரசும் பல கொடிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமலேயே நிறைவேற்ற ஆதரவளித்தே வந்தன. அந்தக் கள்ளக்கூட்டு இனியும் தொடரும்.
நாட்டை நாசமாக்கும் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதும், இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதும் பிரிக்க முடியாததாகும். இவ்விரு கட்சிகளை எதிர்த்துதான் இந்திய மக்கள் புதிய காலனியாதிக்கத்தையும், பாசிசத்தையும் முறியடிக்க முடியும். இவற்றுக்கு வாக்கு கேட்டு செல்வது நாடாளுமன்றவாதத்தில் மூழ்கி இக்கட்சிகளின் வாலாக மாறுவதிலேயே முடியும்.
பாஜக - காங்கிரசு இவ்விரு கட்சிகளையும் பாசிச கட்சி என்று வரையறுப்பதாலேயே இது பாஜகவுக்கு ஆதரவாகி விடாது. நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து சுடுகாடாக்கி வரும் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாஜக ஆட்சி இனி ஒரு நொடி கூட தொடரவே கூடாத மிக கொடூரமான பாசிசக் காட்டாட்சியாகும். அது அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து ஆளும் தகுதியை இழந்துவிட்டது. ஐயத்திற்கிடமின்றி ஆர்.எஸ் எஸ் - பாஜக கும்பல்கள் மிச்ச சொச்சமில்லாமல் அழிந்து சாம்பல் ஆக வேண்டிய கும்பல்களே. அதே சமயம் காங்கிரசு கட்சி ஆட்சிக்கு வந்தால் அது பாசிசத்தின் பொருளியல் அடித்தளமான ஏகபோக ஒற்றைச் சந்தையாக்கத்தை மாற்றியமைக்காது; அதற்கான திட்டத்தையும் அது முன் வைக்கவில்லை; வைக்கவும் இயலாது. எனவே காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் பாசிசத்தின் வடிவங்களில் சிற்சில மாற்றம் வரலாமே ஒழிய பாசிசம் ஒழியாது. காங்கிரசு ஆட்சிக்கு வந்த கர்நாடக மாநில அரசும், திமுக அரசுமே அதற்கான நேரடி உதாரணங்களாகும். உலகமயக் கொள்கைகளை அமல்படுத்தும் எந்தவொரு நாடாளுமன்ற, சட்டமன்ற கட்சியாலும் பாசிசத்தை ஒழிக்க இயலாது என்பதே நமது அரை நூற்றாண்டு அனுபவமாகும்.
இந்தியாவை காங்கிரசு ஆள்வதா? பாஜக ஆள்வதா? என்பது கார்ப்பரேட்டுகளின் பிரச்சினை. உழைக்கும் மக்களின் பிரச்சினை அல்ல.
எனவே, பாட்டாளி வர்க்க நிலைபாட்டை பின்வருமாறு முன்வைக்கிறோம்
இடைக்காலத் தீர்வாக, அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு கொள்கையைக் கொண்ட தேசிய முதலாளிகளின் (வ.உ.சி., சன்யாட்சென் போன்ற) தேசிய ஜனநாயக முன்னணி அரசு அமையும் பட்சத்தில் குறைந்தபட்ச திட்டமாக நிபந்தனைகளுடன் ஆதரிக்கலாம். ஆனால் அவ்வர்க்கங்கள் பலவீனமாகவே உள்ளன. அரசியல் இயக்கமாகவும் வளரவில்லை. ஆகவே இதை கொள்கையளவில் இடைக்காலத் தீர்வாக முன் வைக்கிறோம்.
அடிப்படை வர்க்கங்களுடன் கீழிருந்து பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டியமைப்பதும், மேலிருந்து பல்வேறு ஜனநாயக சக்திகள், அரசியல் இயக்கங்களுடன் கூட்டமைப்பைக் கட்டியமைப்பதும் உள்நாட்டு தேசிய அரசியல் வழியின் பிரதானக் கூறாக உள்ளது. பாசிச எதிர்ப்பு முன்னணியை ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியாகக் கட்டியமைப்பதும், பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியின் விளைவாக அமையும் ஐக்கிய முன்னணி சர்க்கார் - அதாவது புரட்சிக்கு சற்று முன்பாக அமையும் சர்க்கார் - பாசிசத்தின் பொருளியல் அடிப்படையைத் தகர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான பாதை அமைத்து தரும்.
இந்த ஐக்கிய முன்னணியின் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் சென்று அதன் மூலம் அமையும் மக்கள் ஜனநாயக குடியரசே பாசிச அரசிற்கு நிரந்தர மாற்றாக இருக்கும். அதற்காக போராடுவதும், மக்களிடம் அக்கருத்தை பரவலாகவும், அழுத்தமாகவும் பிரச்சாரம் செய்வதே இன்றைய நமது தலையாய பணியாகும்.
- சமரன்
(ஏப்ரல் 2024 இதழில்)