தொடரும் பாஜகவின் பாசிச காட்டாட்சி - நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் படிப்பினைகளும்

சமரன்

தொடரும் பாஜகவின் பாசிச காட்டாட்சி  - நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் படிப்பினைகளும்

18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்-19 தொடங்கி ஜூன்-1 வரை 7கட்டங்களாக நடைபெற்று ஜூன் 4 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. 3மாதங்களாக நடைபெற்று வந்த தேர்தல் தெருக்கூத்துகளும், பாசிச எதிர்ப்பு நாடகங்களும் ஒருவழியாக ஓய்ந்துவிட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது முறையாக மோடியே மீண்டும் பிரதமராகிவிட்டார். 

இருப்பினும், முந்தைய 2 தேர்தல்கள் போல தனிப்பெரும்பான்மையுடன் பாஜகவால் இம்முறை ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் துணையோடுதான் ஆட்சியை தக்கவைக்க முடிந்துள்ளது.  இது பாஜகவின் தோல்வி முகத்தையே காட்டுகிறது. இந்த தோல்வி என்பது பாஜக ஆட்சி அமல்படுத்தும் உலகமய-தாராளமய-இந்துத்துவ பாசிசக் கொள்கைகளுக்கு கிடைத்த தோல்வியே ஆகும். 

பாஜக ஆட்சியின் மீதான மக்களின் அதிருப்தியால், 'இந்தியா' கூட்டணியின் காங்கிரசு முந்தைய தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. இருப்பினும், அதனால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற முடியவில்லை. காரணம், பாஜக ஆட்சியின் மீதான மக்களின் அதிருப்தியை கூட அறுவடைய செய்வதற்கு இக்கூட்டணி கட்சிகள் மக்களிடம் வேலை செய்யவில்லை. மேலும், பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிரான மாற்று அரசியல் பொருளாதாரத் திட்டங்களை இக்கூட்டணி கட்சிகள் வைக்கவில்லை, அவற்றால் வைக்கவும் முடியாது. ஏனெனில், நிதிமூலதனத்தின் நலங்களுக்கான உலகமய-தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதில் - ஏகாதிபத்திய கும்பலை அண்டிப் பிழைப்பதில் இவை அனைத்துக் கட்சிகளும் ஒன்றே. 

பாசிச பாஜக கும்பல் ஒரு கணம் கூட ஆட்சியில் நீடிக்க தகுதியற்றது; அதை தூக்கியெறிய வேண்டும் என்பதை பெரும்பான்மையான மக்கள் உணர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த பாசிச ஆட்சிக்கு எதிராக உள்ளதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இருப்பினும் பாஜகவால் எப்படி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது என்பதையும்; நாம் கணக்கில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் - நமது படிப்பினைகள் குறித்தும் இக்கட்டுரையில் சுருக்கமாக காண்போம்.

எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையை நிறுவ 272 இடங்கள் அவசியம். தேசிய ஜனநாயாக கூட்டணி சார்பாக பாஜக அதிகபட்சமாக 240 தொகுதிகளை வென்றுள்ளது. அதற்கடுத்த படியாக தெலுங்குதேசம் 16 இடங்கள், ஐக்கிய ஜனதாதள் 12 இடங்கள், சிவசேனா (ஷிண்டே) 7 இடங்கள், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) 5 இடங்கள், ஜனதா தள் (செக்கியூலர்), ஜனசேனா கட்சி, ராஷ்டிரிய லோக் தள் ஆகியவை தலா 2 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சி, அப்னா தள், அசோம் கன பரிஷத், ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஹிந்துஸ்தானி அவும் மோர்ச்சா, சிக்கிம் க்ரண்டிகரி மோர்ச்சா, ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்) ஆகியவை தலா 1 இடங்கள் என மொத்தம் 293 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது. 'இந்தியா' கூட்டணி சார்பில் காங்கிரசு அதிகபட்சமாக 99 தொகுதிகளையும் அதற்கு அடுத்து சமாஜ்வாதி கட்சி 37 இடங்கள், திரிணாமூல் காங்கிரசு 29 இடங்கள், திமுக 22 இடங்கள், சிவசேனா (பால்தாக்கரே) 9 இடங்கள், தேசியவாத காங்கிரசு (சரத்பவார்) 8 இடங்கள், சிபிஎம், ராஷ்டிரிய ஜனதா தள் ஆகியவை தலா 4 இடங்கள், ஆம் ஆத்மி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை தலா 3 இடங்கள், சிபிஐ, சிபிஐ(எம்.எல்.)லிபரேசன், ஜம்மு காஷ்மீர் தேசிய காங்கிரசு, விசிக ஆகியவை தலா 2 இடங்கள், பாரத் ஆதிவாசி கட்சி, கேரள காங்கிரசு, மதிமுக, ராஷ்டிரிய லோகந்திரிக் கட்சி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, மேகலாயா மக்கள் குரல்  கட்சி ஆகியவை தலா 1 இடங்கள், சுயேச்சைகள் 3 இடங்கள் என மொத்தம் 238 தொகுதிகளை 'இந்தியா' கூட்டணி வென்றுள்ளது. இவ்விரு கூட்டணிகளிலும் சேராத கட்சிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு கட்சி 4 இடங்களும், சுயேச்சைகள் 4 இடங்களும், ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷிராம்), ஷிரோமனி அகாலி தள், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம், சோரம் மக்கள் இயக்கம் ஆகியவை தலா 1 இடங்களும் பெற்றுள்ளன. ஆகவே எந்தவொரு கட்சிக்கும் இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவில் பாஜக இம்முறை ஆட்சியை தக்கவைத்துள்ளது. கடந்த 2014, 2019ம் ஆண்டு தேர்தல்களில் முறையே 282, 303 இடங்கள் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த பாஜக இம்முறை கூட்டணி தயவில் ஆட்சியை அமைத்துள்ளது. இது பாசிச பாஜக ஆட்சியின் தோல்விமுகத்தையே காட்டுகிறது. அதேபோல் 'இந்தியா' கூட்டணியினர் கடந்த 2 தேர்தல்களை விட இந்த தேர்தலில் பல இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றிருந்தாலும் பாஜகவின் ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெறவில்லை என்பதையே இந்த எண்ணிக்கைகள் காட்டுகின்றன.

இந்த வெற்றி தோல்விகளின் பின்னாள் உள்ள சில காரணிகள்:

  1. ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி
  2. மதவாத அரசியலும் சாதியவாத அரசியலும்
  3. அரசாங்க நிர்வாக அமைப்புகள் மற்றும் ஊடகங்களின் ஒருதலைபட்சமான அணுகுமுறை
  4. கட்சிகளுக்கிடையிலான உள்முரண்பாடுகள்
  5. ஏகாதிபத்திய தலையீடுகளும் பங்குச் சந்தையும் 

ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி

இந்தியாவின் ஓவ்வொரு மாநில அரசுகளின் மீதும் மத்திய பாஜக அரசின் மீதும் அனைத்து மக்களுமே மிகுதியான அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த ஆட்சியாளர்கள் அமல்படுத்தும் சுரண்டல் கொள்கைகளால் மக்கள் நேரடியாக பாதிப்படைகின்றனர். விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பால் வறுமை, விவசாயம் - சிறுகுறு தொழில்கள் நசிவு, பணக்காரகளுக்கும் ஏழைகளுக்குமிடையே வரலாறு காணாத ஏற்றத்தாழ்வு என உத்திரவாதமில்லாத வாழ்நிலையால் மக்கள் தினந்தோறும் அல்லல்படுகின்றனர்; செத்து மடிகின்றனர். கொரோனா கொள்ளை நோய்க்கு பலியானதை விட அதிகமானோர் இந்த 10 ஆண்டுகளில் வறுமையால் மடிந்துள்ளனர். இதனை இந்த அரசாங்க புள்ளி விவரங்கள் மூடி மறைத்தாலும் மக்கள் அவற்றை தங்கள் வாழ்க்கையின் மூலம் நேரடியாகவே உணர்ந்து வருகின்றனர். ஆளும் வர்க்க கட்சிகளின் நலத்திட்ட மோசடி அறிவிப்புகளிலும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். ஏனெனில் அந்த அறிவிப்புகள் தங்கள் வாழ்க்கையை சுபிட்சமாக்காது என்பதையும் கடந்தகால அனுபவங்களிலிருந்து அவர்கள் கண்டு கொண்டுள்ளனர். எனவே ஆளும் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு அதிருப்தி அதிகமாகவே உள்ளது. ஆனால் அவர்களின் இந்த இழிநிலைக்கு காரணம் இந்த ஆட்சியாளர்கள் பின்பற்றும் ஏகாதிபத்திய ஆதரவு அரசியல்-பொருளாதாரக் கொள்கைகள்தான் என்பதை உணரத்தான் அவர்களால் முடியவில்லை. அதை பயிற்றுவிக்க வேண்டிய பாட்டாளி வர்க்க சக்திகள் மிகவும் பலவீனமடைந்துள்ளன அல்லது முதலாளித்துவ கொள்கைகளின் ஆதரவு நிலை எடுத்துள்ளன. இதனால் பெரும்பான்மையான மக்களின் அதிருப்தி என்பது வெறும் கட்சி அளவிலேயே முடங்கி விடுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் அதிருப்தி ஏற்பட்டால் காங்கிரசுக்கு வாக்களிப்பது; காங்கிரசு உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலத்தில் அதிருப்தி ஏற்பட்டால் பாஜகவுக்கு அல்லது எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பது என்ற நிலை இந்த தேர்தலிலும் தொடர்கிறது. 

மாநில ரீதியாக பார்த்தால், 

ஆந்திரா, அருணாச்சல பிரதேஷ், அசாம், பீகார், சட்டீஸ்கர், குஜராத், ஹிமாச்சல பிரதேஷ், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேஷ், ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்ராகண்ட் ஆகிய மாநிலங்களிலும் அந்தமான், டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை வென்றுள்ளது. 

மறுபுறம் கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்திரபிரதேஷ், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சண்டிகர், லட்சதீவு, புதுவை, ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் இந்தியா கூட்டணி அதிக இடங்களை வென்றுள்ளது. 

ஹரியானா, தெலுங்கானா, கோவாவில் சம இடங்களை வென்றுள்ளன. 

இதில் ஆந்திரா, ஹிமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, ஒடிசா, டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா, புதுச்சேரி, குறிப்பாக உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளும் மாநில கட்சிகள் படுதோல்வியடைந்துள்ளன. அதேபோல் தமிழ்நாடு, தெலுங்கானா, அருணாச்சல பிரதேசம், பீகார், குஜராத், ஹரியானா, உத்ராகண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் மாநில கட்சிகளின் வாக்கு வங்கி வெகுவாக குறைந்துள்ளது. 

மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் மட்டுமே விதிவிலக்கு. மத்திய அரசின் மீதான அதிருப்தி அலை மாநில அரசின் மீதான அதிருப்தியை விட பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் மேலோங்கியிருப்பதனால் அவ்விரு மாநிலங்களிலும் மாநில கட்சிகள் வென்றுள்ளன. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் 3 வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் மீதான பாசிச அடக்குமுறைகள் மத்திய அரசுக்கு எதிராக பலமாக எதிரொலித்துள்ளன. மத்தியில் ஆளும் பாஜகவே பெரும்பான்மையான மாநிலங்களிலும் ஆட்சியில் இருப்பதால் இரண்டு அரசுகளின் மீதான அதிருப்தியும் சேர்ந்து பல மாநிலங்களின் வாக்குவங்கியில் பாஜக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பாஜகவை தவிர பிற கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அவ்வரசுகளின் மீதான அதிருப்தியும் இந்த தேர்தல் முடிவுகளில் வெளிபட்டுள்ளது. 

மதவாத அரசியலும் சாதியவாத அரசியலும்

ஆளும் வர்க்க கும்பல் தங்களது ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகளின் தோல்விகளை மூடிமறைக்க மக்களை மதரீதியாகவும் - சாதி ரீதியாகவும் பிரித்து மோதவிடுகின்றன. பாஜக, இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இசுலாமியர்கள் மீது - குடியுரிமைச் சட்டம், லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத், ஹிஜாப் தடை, ஹலால் உணவு தடை, மசூதிகளை இடித்து கோவில்களாக மாற்றும் செயல்தந்திரம், குஜராத் இனப்படுகொலைக்கு ஆதரவான தீர்ப்புகள், ஹரியானா, உத்ராகண்ட், கர்நாடகாவில் மதக் கலவரங்கள் படுகொலைகள் - என எண்ணிலடங்கா கொடுமைகளை ஏவியது. தேர்தல் பிரச்சாரத்தின் போதும் மோடி உட்பட பாஜகவின் சங்பரிவார கும்பல் அனைத்தும் இசுலாமியர்கள் மீது வன்மத்தை கக்கின. மணிப்பூரில் குக்கி - மெய்தி இன மக்களிடையே மதவாத-இனவாத மோதலைத் தூண்டிவிட்டு வடகிழக்கு மாகாணங்களை தீக்கிரையாக்கியது. ஒரே நாடு - ஒரே கடவுள் என்று இசுலாமியர்களின் மண்டையோடுகளையும் குருதியையும் கொண்டு அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி முடித்தது.

இந்த மதவாத செயல்தந்திரங்கள் உத்திரபிரதேசத்தில் பலத்த அடியை பாஜகவுக்கு கொடுத்துள்ளது. சங்கிகளால் ராம ஜென்ம பூமியாக கருதப்படும் அயோத்தியிலேயே பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. ராமர்கோவில்-அயோத்தி மேம்பாடு எனும் பெயரில் பெரும்பான்மையான இந்து மக்களின் வாழ்விடங்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையுமே சூறையாடியது. மக்களின் வாழ்நிலையை கேள்விக்குறியாக்கியபின் இந்த மதவாத செயல்தந்திரங்கள் அங்கு எடுபடவில்லை. ஜம்மு-காஷ்மீரிலும் 370 சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து இசுலாமியர்களுக்கு எதிராக தாக்குதலைத் தொடுத்தது - அங்கும் பாஜகவுக்கு மரண அடி கிடைத்துள்ளது. மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் குக்கி, நாகா பழங்குடிகள் மீதான பாஜக அரசின் இனவழிப்பு கொடுமைகளுக்கு எதிராகவும் மக்கள் பாஜகவினை அம்மாநிலங்களில் இருந்து விரட்டியடித்ததோடு பல கிராமங்களில் தேர்தலையும் புறக்கணித்துள்ளனர். இந்துத்துவ செல்வாக்கு மிக்க ராஜஸ்தான், குஜராத்திலும் கூட தங்களது இந்துமதத்திலேயே உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான அடக்குமுறைகளாலும் இசுலாமியர்கள் மீதான மோடியின் விசம பிரச்சாரத்தாலும் ஒரிரு இடங்களை பறிகொடுத்ததோடு குறிப்பிடத்தகுந்த அளவில் வாக்குவங்கியையும் இழந்துள்ளது. அதே சமயம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களிலும் அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஜார்கண்ட், ஒடிசா ஆகிய இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள் தொய்வடைந்துள்ள மாநிலங்களிலும் பாஜகவின் மதவாத செயல்தந்திரங்கள் வெற்றி பெற்றுள்ளன அல்லது ஓரளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளன. குறிப்பாக கேரளாவில் பாஜக தனது கணக்கை முதன்முறையாக துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பாமக, அமமுக உள்ளிட்ட இந்துத்துவ அடிவருடி கட்சிகளின் துணையோடு 10% சதவிகிதத்திற்கும் மேல் வாக்குவங்கியை உருவாக்கி திமுக, அதிமுகவிற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது. 

இந்தி பேசும் மாநிலங்களில் (Hindi Heartland) பாஜகவின் செல்வாக்கு குறைந்து வருவதையும் இந்தி பேசாத மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும் கீழ்கண்ட புள்ளி விவரம் (படம்) காட்டுகிறது.

தேர்தல் என வந்துவிட்டாலே வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் சாதிரீதியான காரணிகள் முக்கியப் பங்காற்றிவிடுகின்றன. ஆளும் கட்சி எதிர் கட்சி என அனைத்து தேர்தல் கட்சிகளும் சாதிவாக்குகளின் அடிப்படையில் வேட்பாளர் அறிவிப்பு முதல் பிரச்சாரங்கள் வரை தொடங்கிவிடுகின்றன. உத்திரபிரதேசத்தில் பிராமணர் - ராஜ்புட் சாதியினர்களுக்கு இடையிலான மோதல்கள் அதிகரித்திருப்பது அம்மாநில பாஜகவின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது. அதேபோல் சமாஜ்வாதி கட்சி யாதவ் சாதியினரை முதன்மைப்படுத்தும் கட்சியாக இருந்தாலும் இம்முறை யாதவ் -ஜாதவ் சாதியினருக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல் தொகுதி வாரியாக உள்ள பெரும்பான்மை சாதியினரை குறிவைத்து வேட்பாளர்களை நிறுத்தியதானது அதற்கு கணிசமான வெற்றியை தேடி தந்துள்ளது. கர்நாடகாவில் லிங்காயத்து-கவுடா சாதியினருக்கிடையே மோதல்கள் இருந்தாலும் தேர்தலுக்காக சந்தர்ப்பவாத உடன்பாட்டை உருவாக்குவதன் மூலம் பாஜக அங்கு வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள் ஆட்சி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்தது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பை இடஒதுக்கீடு நலன்களுக்காக பயன்படுத்துவதாக பொய்யான அறிவிப்பை செய்தது; ஆனால் இதை தேர்தல் நலன்களுக்கு பயன்படுத்திக் கொண்டது. இதன் மூலம் துல்லியமாக கணித்து சாதிரீதியாக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றது. 

மாயாவாதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சி தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை பாஜகவின் காலடியில் சேர்த்ததால் அக்கட்சியை உத்திரபிரதேச மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. அதேபோல் அனைத்து மாநிலங்களில் உள்ள பாஜக ஆதரவு தலித்தியவாத கட்சிகளையும் இந்த தேர்தலில் மக்கள் புறக்கணித்துள்ளனர். பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்கள் இந்தியா கூட்டணிக்கே வாக்களித்திருப்பதாக புள்ளிவிவர கணிப்புகள் கூறுகின்றன; அதனால்தான் இந்த தேர்தலில் தனி தொகுதிகளின் வெற்றி எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது காங்கிரசு. அதேபோல் பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு கணிசமான அளவு குறைந்தே உள்ளது. பெரியாரின் நீதிக்கட்சி வழியில் தமிழ்நாட்டிலும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை முன்னிலைப்படுத்தும் போக்கே இன்றும் தலைவிரித்தாடுகிறது. திமுக-அதிமுக இரண்டுமே சாதிவாக்குகளின் அடிப்படையிலேயேதான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. பாமக உள்ளிட்ட சாதிவெறி கட்சிகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். இதில் இருந்து கூட இவ்விரு திராவிட கட்சிகளும் பாடம் கற்றுக் கொள்ள மறுக்கின்றன. 

தொகுத்து பார்த்தால் மதவாத-சாதியவாத செயல்தந்திரங்கள் சில மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளன. சில மாநிலங்களில் மரண அடி வாங்கியுள்ளன. இவை ஏற்றத்தாழ்வான அரசியல்-பொருளாதார வளர்ச்சி இந்த செயல்தந்திரங்களின் வெற்றி விகிதத்திலும் எதிரொலிக்கிறது. ஏற்கெனவே மதவாத செயல்தந்திரங்களுக்கு பலியான மக்கள் அது நமக்கு விடிவை தராது என்பதை உணர்ந்து திரும்புகின்றனர். சில மாநில மக்கள் புதிதாக மதவாத கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு பலியாகி வருகின்றனர். மாற்று செயல்தந்திரம் வைத்து மக்களை ஈர்க்க முடியாத பலவீனமான சூழலே மக்களின் இந்த அவலநிலைக்கு ஒரு காராணமாகியுள்ளது. 

அரசாங்க நிர்வாக அமைப்புகள் மற்றும் ஊடகங்களின் ஒருதலைபட்சமான அணுகுமுறை

தேர்தல் ஆணையம், நீதிமன்றம், அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, ஊடகங்கள் என அனைத்தும் இந்த தேர்தலில் பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளன. ஆப்கி பார் 400 பார் (Abki Baar 400 Paar) என 400 தொகுதிகளை தனித்து வெல்வதை இலக்காக கொண்டு தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பாஜகவுக்கு அனைத்து அரசாங்கத் துறைகளும் ஊடகங்களும் ஒத்து ஊதின. பாஜகவின் கனவை நிறைவேற்றுவதை தங்களது பணியாக வரிந்துக் கட்டிக் கொண்டு செயல்பட்டன. தேர்தல் கருத்துக் கணிப்பு எனும் பெயரில் சொல்லி வைத்தாற் போல் அனைத்து ஊடகங்களும் பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் 410 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்ற பரப்புரையில் ஈடுபட்டன. எந்தவொரு மெயின்ஸ்டீரீம் (Main-stream) ஊடகமும் உண்மையான களநிலவரங்களை வெளிப்படுத்தவில்லை.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் பொழுது மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் போன்ற அமைப்புகள் தங்களது கருத்துக்களை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்தும் உரிமைகளை கூட பறித்த தேர்தல் ஆணையம்தான், மதக்கலவரத்தை தூண்டும் விதமாக மோடியும் அமித்ஷாவும் இசுலாமியர்கள் மீதான மதவெறியை விஷம் போல கக்கியதை வேடிக்கைப் பார்த்தது.

அமலாக்கத்துறையும் - வருமான வரித்துறையும் சேர்ந்துக் கொண்டு டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை மதுவிலக்கு கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கைது செய்தது. காங்கிரசின் வங்கி கணக்குகளை முடக்கின. சிபிஐ - சிபிஎம் கட்சிகளுக்கு வருமானவரித் துறை நெருக்கடி கொடுத்தது.

தேர்தல் பத்திர ஊழல் வெளிவந்து விவாதத்தைக் கிளப்பிய போது எஸ்,பி,ஐ வங்கியும் நீதித்துறையும் உரிய நடவடிக்கை எடுக்காமல் நாடகமாடின.

இவ்வாறு அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக அமைப்புகளும் ஊடகங்களும் ஆளும் பாஜகவுக்கு ஆதாரவாக செயல்பட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகளுக்கு பலவித இடையூறுகளை கொடுத்தன. பாஜகவின் ஒரு நாடு-ஒரே தேர்தல்-ஒற்றை கட்சி பாசிச ஆட்சிமுறையை நிறைவேற்றும் நோக்கோடு அனைத்து அரசாங்க உறுப்புகளும் செயல்பட்டன. ஆனாலும் மக்கள் இந்த பாசிச செயல் தந்திரங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஊடகங்களின் கருத்துத் திணிப்புகளையும் பொய்யாக்கியுள்ளனர். இந்த தேர்தலில் அரசாங்க அமைப்புகளின் ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கைகள் இந்திய தேர்தலின் போலி ஜனநாயகத் தன்மையை ஒருவிதத்தில் அம்பலபடுத்தியுள்ளது.

கட்சிகளுக்கு இடையிலான உள் முரண்பாடுகள்

இதில் இரண்டு அம்சங்கள் தேர்தல் முடிவுகளை பாதித்துள்ளன.

  1. பாஜக எதிர்க்கட்சிகளை உடைத்தது
  2. கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள்

முதலாவதாக, பாஜக நாடு முழுவதும் தனது கட்சியின் செல்வாக்கை உருவாக்கும் நோக்கில் ஒற்றைக் கட்சி-ஒற்றை ஆட்சி முறை செயல்தந்திரத்திலிருந்து எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணியிலிருந்த மாநில கட்சிகளை கூட உடைக்கும் வேலையில் ஈடுபட்டது. குறிப்பாக மகாராஷ்டிராவில், சிவசேனாவை ஷிண்டேயைப் பயன்படுத்தி உடைத்தது; தேசியவாத காங்கிரசை அஜீத்பவாரை பயன்படுத்தி உடைத்தது. தமிழ்நாட்டில், அதிமுகவை ஒபிஎஸ்-ஐ பயன்படுத்தி உடைத்தது. அதேபோல் அமலாக்கத்துறையை கருவியாக பயன்படுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளில் இருந்த முக்கியத் தலைவர்களை தனது கட்சியின் பிடிக்குள் கொண்டு வந்து அந்த கட்சிகளை உடைத்தது. இந்த நிகழ்வுப் போக்குகள் சில மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராகவும் சில மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளன. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி தோல்வியை தழுவியதற்கு இது முதன்மையான காரணமாக அமைந்தது. அதே வேளையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தனது வாக்கு வங்கியை உயர்த்திக் கொள்ள இந்த செயல்தந்திரம் பயன்பட்டுள்ளது. 

இரண்டாவதாக, கூட்டணி கட்சிகளுக்கிடையிலான முரண்பாடு தமிழ்நாட்டில் கூட அதிமுக-பாஜக கூட்டணி உடைந்தது. மறுபுறம் கேரளா, டெல்லி, மேற்குவங்கம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் சிபிஎம், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை - 'இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் அவை -அந்தந்த மாநிலங்களில் காங்கிரசுக்கு நேரெதிராக போட்டியிட்டன. இவை பாஜகவுக்கு வாய்ப்பாக அமைந்தது. டெல்லியில் பாஜக வெற்றி பெற்றது. கேரளாவில் ஒரு இடத்தை வென்றதோடு தனது வாக்கு வங்கியையும் பாஜக கணிசமாக உயர்த்திக் கொள்ள இந்த நிலை உதவியது. அம்மாநிலத்தின் சிபிஎம், பாஜகவுக்கு மறைமுக ஆதரவாக செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டுவது - காங்கிரசு, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக சிபிஎம் குற்றஞ்சாட்டுவது போன்ற மோசமான சூழல் அங்கு நிலவியது.

இந்தத் தேர்தலில் மாநில கட்சிகள் இழந்த தங்களது செல்வாக்குகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இவை உத்திரப்பிரதேசம், பீகார், பஞ்சாப் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களின் தேர்தல் வெற்றியில் தெரிகிறது. அதேபோல் கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்களில் தேசிய கட்சிகளின் செல்வாக்குகள் உயர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது.

ஏகாதிபத்திய தலையீடுகளும் பங்குச்சந்தையும்

உலக பொது நெருக்கடியினால் ஏகாதிபத்தியங்களுக்கிடையே முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. அமெரிக்க-நேட்டோ முகாமும் சீன -ரஷ்ய முகாமும் பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா அமெரிக்காவுடன் பல தரப்பு அடிமை ஒப்பந்தங்கள் மூலம் அதன் புதிய காலனியாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் போரில் அமெரிக்கா ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதித்தது. அந்த தடையையும் மீறி பாஜக அரசு ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தக உறவுகளை (அதானி-அம்பானி தரகுமுதலாளித்துவ நலன்களிலிருந்து) மேற்கொண்டது. இந்த வர்த்தக உறவு அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு இடையூறாக அமைந்தவுடன் அமெரிக்கா தன்னை ஜனநாயக காவலனாக காட்டிக் கொள்ளும் நாடகங்களில் ஈடுபட்டது. அதானியின் பங்குச்சந்தை ஊழலை ஹிண்டன்பர்க் அறிக்கை மூலமும், மோடி அரசின் குஜராத் இனப் படுகொலையை பிபிசி ஆவணமாகவும் வெளியிட்டது. மோடி அரசின் மீதான தனது பிடியை இறுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 

இதன் விளைவாக இந்தியப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்கா திட்டமிட்டு பங்குச்சந்தையிலிருந்து மூலதனத்தை விலக்கிக் கொள்ளத் துவங்கியது; மறைமுகமாக மோடி அரசை மிரட்டியது. இதற்கு அடிபணிந்த மோடி அரசு மேலும் சில அடிமை ஒப்பந்தங்கள் (உள்கட்டமைப்பு, கனிம வளம், இராணுவ-பாதுகாப்புத் துறை உள்ளிட்ட ஒப்பந்தங்கள்) மூலமாக அமெரிக்காவுக்கு இந்திய சந்தையையும் மூலப்பொருட்களையும் தாரை வார்க்கும் போக்கை அகலப்படுத்தியது. இது நாட்டு மக்களின் மீது கடும் சுமையாக மாறியது. 

இந்த சூழலில்தான் சீனா - ரஷ்யாவுக்கு மோடி அரசு பரிவு காட்டுவதாகவும்; ஆனால் தான் உங்களின் உண்மையான விசுவாசியாகவும் இருப்பேன் என்று ராகுல் காந்தி அமெரிக்க-பிரிட்டன் ஏகாதிபத்தியங்களிடம் மன்றாடிக் கேட்டு கொண்டார். அதைத் தொடர்ந்தே ஜோடா யாத்திரை நாடகங்களை அரங்கேற்றினார் என்பதை ஏற்கெனவே (முந்தைய சமரன் கட்டுரைகளில்) நாம் பார்த்தோம். 

ஆகையால் இந்த சர்வதேச முரண்பாடுகள் இந்திய அரசியல்-பொருளாதாராத்திலும் வெளிப்பட்டது. இந்த முரண்பாடுகள் பங்குச்சந்தை முதலீடுகளிலும் எதிரொலித்தன. அதேபோல் பங்குச்சந்தை சூதாட்டங்கள் இந்திய அரசியலின் கொள்கைகளையும் தீர்மானித்து வருகின்றன. 

பல அந்நிய முதலீடுகள் தங்களுக்கான சந்தை வாய்ப்புகளை இந்த அரசு தனது கொள்கைகள் மூலம் உருவாக்கித் தர தாமதபடுத்துகின்றன என்பதால் பறந்தோடின. அவற்றை நிலைநிறுத்தும் நோக்கிலும் அல்லது புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் பாஜக அரசு புதிய புதிய பாசிச சட்டங்களை இந்த நிதிமூலதன ஆதிக்கத்திற்கு சேவை செய்ய அவசரகதியில் கொண்டு வந்தது. பங்குச்சந்தை மூலம் நிதிமூலதன ஏகாதிபத்திய கும்பல் நாட்டை சுரண்டவும் கொள்ளையடிக்கவும் இருந்த சொற்ப தடைகளையும் நீக்கி வருகிறது. 

பங்குச்சந்தையின் நிதிமூலதன ஆதிக்கம் இந்திய ஆட்சியாளர்களின் கொள்கைகள் - பட்ஜெட் - திட்டங்கள் என அனைத்திலும் எதிரொலிப்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பாஜக ஆட்சியில் மூலதன முதலீடுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ச்சியாக அனைத்து பட்ஜெட்களிலும் அதிகரித்தே வருகிறது. சென்ற ஆண்டில் மட்டும் 11லட்சம் கோடியை இதற்காக ஒதுக்கியது. மக்களின் வரிப்பணங்களையும், கடன்களையும். பொதுத்துறை சொத்துக்களையும் பங்குச்சந்தை சூதாட்டம் மூலம் ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பலும் அதானி-அம்பானிகளும் கொள்ளையடிக்க வழிவகுத்து வருகிறது. எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ -க்களை அதானியின் வாலட் (Wallet) ஆக மாற்றியுள்ளது. இந்த பங்குச்சந்தை சூதாட்டம் தேர்தல் சூதாட்டத்துடன் இணைந்து தேர்தல் களம் சூடுபிடித்தது. 

தேர்தல் அறிவித்த பிறகு சுமார் 90,000 கோடி ரூபாய் அளவிற்கு பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறின. தேர்தல் பிரச்சார நேரத்தில் மோடியும் அமித்ஷாவும் பங்குகளை தேர்தல் முடிவு வரும் நாளையொட்டி வாங்கி குவிக்க வலியுறுத்தி பேசி வந்தனர். 400 இடங்களை வெற்றி பெற்று தாங்களே மீண்டும் ஆட்சியை பிடிக்கப் போவதாகவும் அதனால் பங்குச்சந்தை எழுச்சி அடையும் எனவும் மோசடியான வாக்குறுதிகள் மூலம் பங்குச்சந்தை சூதாடிகளை கவர்ந்தனர். அனைத்து கார்ப்பரேட் ஆதரவு ஊடகங்களும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு எனும் பெயரில் பாஜக 350லிருந்து 415 இடங்கள் வரை வெற்றிப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என செய்திகளை வெளியிட்டு பாஜகவை ஊதி பெருக்கின. இவை செய்தியாக வருவதற்கு முன்பே தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்து இறுதிநாளை நெருங்கியதையொட்டி பல அந்நிய முதலீட்டாளர்களும் அதானி-அம்பானிகளும் தங்களது செல் (shell) நிறுவனங்கள் மூலம் பங்குகளை 31.05.2024 வெள்ளி அன்றே வாங்கி குவித்தன. சனி-ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின்பு 03.06.2024 திங்களன்று இந்த கருத்துக்கணிப்புகளை நம்பி சிறிய முதலீட்டாளர்களும் பகாசுர முதலீட்டாளர்களின் இந்த பங்குகளை வாங்கினர். இதனால் தேசியப்பங்குச் சந்தை 2500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை 700 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. ஆனால் மறுநாள் தேர்தல் முடிவுகள் பங்குச்சந்தையின் சிறிய முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமையவில்லை. பாஜக தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் 240 தொகுதிகளுக்குள் முடங்கியது. சிறிய முதலீட்டாளர்கள் வந்தவரை போதும் என பங்குகளை விற்றுவிட்டு வெளியேறினர். பங்குச்சந்தை அதலபாதாளத்தில் வீழ்ந்தது. தேசிய பங்குச்சந்தை சுமார் 4400 புள்ளிகள் சரிந்தது; மும்பை பங்குச் சந்தை சுமார் 1400 புள்ளிகள் வரை சரிந்தது. பங்குச்சந்தை முந்தைய நாள் எழுச்சியைவிட இருமடங்கு கீழே வீழ்ந்தது. இதில் சுமார் 38லட்சம் கோடியை சிறிய முதலீட்டாளர்களும், தனிநபர்களும், பொதுத்துறை வங்கிகளும் இழந்துள்ளன. பன்னாட்டு-உள்நாட்டு ஏகபோக நிதியாதிக்க கும்பல் பங்குச்சந்தை-தேர்தல் சூதாட்டம் மூலம் பல லட்சம் கோடிகளை சுருட்டியுள்ளது. தேர்தல் நடத்துவதற்கான நிதிச்சுமைகளை மக்கள் தலையில் கட்டிவிட்டு இந்த சூதாட்டத்தின் மூலம் கார்ப்பரேட்கள் கொழுக்கவும் பிரச்சாரம் செய்துள்ளது இந்த மோடி-அமித்ஷா கும்பல். 

பெரும்பான்மை கிடைக்காததால் பங்குச்சந்தை வீழ்ந்திருந்த நிலையில், நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு போன்ற பாசிச அடிவருடி கும்பலால் முட்டுக் கொடுக்கப்பட்டு பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதனால் பங்குச்சந்தை மீண்டும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. 

பாஜக ஆட்சி அமைத்தவுடன் அமெரிக்க அதிபர் பைடன், இஸ்ரேலிய அதிபர் நெதன்யாகு, ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து மழையை பொழிய ஆரம்பித்துவிட்டனர். ஆட்சியை தொடர்ந்து நடத்த தங்களது சர்வதேச ஆதரவை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் அதானி மீண்டும் அறிக்கையை வெளியிடத் துவங்கி விட்டார். ஹிண்டன்பர்க் அறிக்கை திட்டமிட்ட சதி என்று தேசபக்தி நாடகத்தை துவங்கிவிட்டது இந்த மாஃபியா கும்பல். பங்குச்சந்தையை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் ஆட்சியேற்ற உடனேயே நிறுத்தி வைத்திருந்த கார்ப்பரேட் நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தத் துவங்கி விட்டது பாஜக அரசு. 

தொகுத்துப் பார்க்கும்போது 

நாட்டில் நிலவும் புதிய காலனிய உற்பத்தி முறையால் ஏற்றத்தாழ்வான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசியலும் பொருளாதாரமும் பின்னிப் பிணைந்தவை ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது. எனவே, இந்த ஏற்றத்தாழ்வான பொருளாதார வளர்ச்சி ஏற்றத்தாழ்வான அரசியல் வளர்ச்சியாகவும் உள்ளது. இதனால் அரசியல் உணர்வு மட்டம் மாநிலத்திற்கு மாநிலமும் மாநிலங்களுக்கு இடையில் மண்டல அளவிலும் வேறுபட்டுள்ளது.

மறுபுறம், பெரும்பான்மையான மக்கள் இந்த பாசிச ஆட்சிக்கு ஆதரவாக இல்லை என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகளை இந்த பாசிச ஆட்சிக்கு மாற்றாக மக்கள் நம்பவில்லை என்பதையும் இவை எடுத்துக்காட்டுகிறது.

மோடி 3.0 எப்படி இருக்கும்?

கடந்த இரண்டு தேர்தல்களில் பாஜக தனி பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்து நிதிமூலதன நெருக்கடிகளை மக்கள் மீது சுமத்தி பாசிச காட்டாட்சியை நடத்தியது. அதன் விளைவாக இந்த தேர்தலில் கணிசமான தொகுதிகளை இழந்தது; பெரும்பான்மை பெற்று அதனால் ஆட்சியை அமைக்க முடியவில்லை; கூட்டணி கட்சிகளின் ஆதரவோடே ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இதுவே பாசிச எதிர்ப்பு போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் இனி பாஜக முன்பு போல பாசிச ஆட்சியை நடத்த முடியாது என்றும் சிலர் வாதிடுகின்றனர். சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆணைகளுக்கு அடிபணிந்து மோடி நடப்பார்; வலுவான எதிர்க்கட்சி சபை அமைந்துள்ளது; மாநில நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்; தேர்தல் மூலமே பாசிச நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடிந்து விட்டது; அப்படி பாசிச ஆட்சியை நடைமுறைப்படுத்தினால் ஆட்சியே கவிழ்ந்து விடும் என தினந்தோறும் அவர்கள் ஏராளமான கதைகளை அளந்து வருகின்றனர். 

இந்தக் கதைகள் அனைத்தும் வர்க்கப் பார்வை அற்ற முதலாளித்துவ அறிவு ஜீவிகளின் வாந்தியெடுப்புகளே ஆகும். பாஜகவுக்கும் தெலுங்கு தேசத்திற்கும் என்ன வர்க்க முரண்பாடு தோன்றிவிடப்போகிறது? மோடிக்கும் நிதீஷ் குமாருக்கும் என்ன வர்க்க முரண்பாடு தோன்றிய விடப் போகிறது? ஏகாதிபத்தியத்தையும் அம்பானி அதானி போன்ற பெரும் தரகுமுதலாளிகளையும் நக்கிப்பிழைப்பதில் மாநில தரகுமுதலாளித்துவ கும்பலுக்கும் பங்கு வேண்டும் என்பதைத் தாண்டி எதுவுமில்லை. நிதிமூலதன நலன்களுக்காக அமல்படுத்தும் திட்டங்களில் தங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் சலுகை வேண்டும் என்பதை தாண்டி இவர்கள் பெரிதாக எதையும் கோரப்போவதில்லை. இந்த பட்ஜெட் அறிவிப்பில் கூட, இம்மாநில அரசுகளின் தொடர் கோரிக்கையான சிறப்பு அந்துஸ்து கோரிக்கையை பாஜக நிராகரித்துவிட்டது. அதற்கு பதிலாக அம்மாநிலத்தின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட கார்ப்பரேட் நலத் திட்டங்களுக்கான நிதியை அதிகரித்திருத்துள்ளது. இதை அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த போதிலும் இவ்விருவரும் பட்ஜெட்டை புகழ்ந்து தள்ளி தங்களது பாசிச அடிவருடித் தனத்தை நிரூபித்து வருகின்றனர். 

எனவே, மோடி ஆட்சியின் கூட்டணியில் அங்கம் வகிப்பதன் மூலம் எலும்பு துண்டுகளைப் பொறுக்கி தின்னப் போகிறார்கள். இவர்கள் நிச்சயமாக தீர்மானகரமான சக்தியாக இருக்கப் போவதில்லை. ஈழத்தில் இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் கூட ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து எப்படி கருணாநிதி கும்பல் காங்கிரஸ் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருந்தது என்பதை நாம் நேரடியாகவே பார்த்து உள்ளோம். மிஞ்சிப் போனால் ஒரு சில பதவி நுகர்வுகளிலும் பணப்பட்டுவாடாக்களிலும் சிற்சில நாய்ச்சண்டைகள் நடக்கலாம். இவர்கள் பாஜக மீது ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு அம்மாநில தரகுமுதலாளிகள் வலுவான நிலையில் இல்லை என்பது ஒருபுறமிருந்தாலும் இவர்கள் பாஜக ஆட்சிக்கு 5 ஆண்டுகளும் தொடர்ந்து ஆதரவளிப்பார்களா? அல்லது ஆட்சியைக் கவிழ்ப்பார்களா? என்பதை முன்னனுமானத்தில் கூற இயலாது. அது பாசிசம் தீவிரமடைவதைப் பொறுத்தது; இக்கட்சிகளின் பின்னால் உள்ள மாநில தரகுமுதலாளித்துவக் கும்பலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா அல்லது அவை பாசிசத்தை அண்டிப் பிழைப்பதற்கானா வாய்ப்புள்ளதா என்பதைப் பொறுத்தது. இவையே இக்கும்பல்களுக்கிடையிலான ஒற்றுமையும் முரண்பாடும்.    

அதேபோல், எதிர்க்கட்சிகளின் வலுவான சபை இந்த நாடாளுமன்றத்தில் அமைந்து விட்டதாயும் அது பாசிச ஆட்சிக்கு கடிவாளம் இடும் என்றும் பேசுகின்றனர். மேலே கூறியது போல், எதிர்க்கட்சிகள் அனைத்திற்கும் பாஜகவிற்கும் அப்படி என்ன வர்க்க முரண்பாடுகள் இருந்து விடப் போகிறது?! இவர்கள் அனைவரும் ஒரே வர்க்கத்தின் வெவ்வேறு பிரதிநிதிகளே. பொருளாதார நெருக்கடிகளால் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கு எதிரான மக்களின் மனநிலையை ஏய்த்துப்பிழைக்க இந்த மாற்றுகளை உலாவ விட்டுள்ளது நிதியாதிக்க கும்பல். அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரண்டு விடக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. 

பாசிசத்தின் பொருளாதார அடித்தளத்தை தகர்க்காமல் பாசிசத்தை ஒழிக்க முடியாது என்பதை நாம் பலமுறை விவாதித்துள்ளோம். எனவே இந்தத் தேர்தல் முடிவுகளால் அமைந்துள்ள இந்த ஆட்சியும்-எதிர்க்கட்சிகளும் அத்தகைய அடித்தளத்தை தகர்க்க வல்லமை பெற்றவை அல்ல; அவை தகர்க்கவும் செய்யாது. அது அவர்கள் பணியும் அல்ல; அது பாட்டாளி வர்க்கம் ஆகிய நமது கடமையாகும். 

இந்த உண்மையை மூன்றாவது முறையாக ஆட்சியில் ஏறி இருக்கும் பாஜக பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே பறைசாற்றி வருகிறது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குற்றவியல் சட்டம், தொலைத்தொடர்பு சேவைகள் சட்டம் உள்ளிட்ட பாசிச சட்டங்களை ஒவ்வொன்றாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. கார்ப்பரேட் நலத்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த துவங்கி விட்டது. இதற்கான உத்திரவாதங்களை தற்போது நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பார்வையாளராக பங்கெடுத்து உறுதியளித்து வந்துள்ளது. அதன் பிறகு, கார்ப்பரேட்டுகளுக்கான வரியை வெறும் 7% சதவீதமாக குறைத்து விட்டது. அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை பரிசீலனை செய்து வருகிறது. மோடி 3.0 பாசிச காட்டாட்சியை தொடங்கிவிட்டது. 

எனவே இந்த பாசிச காட்டாட்சிக்கு மாற்று 'இந்தியா' கூட்டணியோ இந்த போலி நாடாளுமன்ற தேர்தலோ அல்ல என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி பேசி வருகிறோம். பெரும்பான்மையான மக்களுக்கு இந்த இரு முதலாளித்துவ கூட்டணிகள் மீதும் நம்பிக்கையில்லை. அதனால்தான் இவர்கள் 100% சதவிகித வாக்குப்பதிவு என கூவி கூவி பிரச்சாரம் செய்தாலும் இம்முறை வாக்குப்பதிவு கடந்த முறைகளைவிட வெகுவாக குறைந்துள்ளது. வெறும் 66% சதவிகிதம் மக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதை அறுவடை செய்து புரட்சிக்கு தயார் செய்யும் அளவிற்கு புரட்சிகர இயக்கங்களும் வலுவாக இல்லை என்பதும் ஒரு கசப்பான உண்மையே. ஏனெனில் இது சர்வதேச அளவிலேயே அலைஇறக்க கட்டமாக உள்ளது. இந்த அலை இறக்கக் கட்டத்தில் பாட்டாளி வர்க்கப் போர்த்தந்திரங்களின் மீது நம்பிக்கையிழந்த குட்டிமுதலாளித்துவ சக்திகள் கலைப்புவாதத்திற்கு பலியாகி விட்டனர். சர்வதேச அளவில் பெரும்பான்மையான மார்க்சிய-லெனினிய கட்சிகள் கலைப்புவாதத்திற்கு ஆட்பட்டு சிதைந்து விட்டன. 

பாசிசத்தை வெறும் மதவாதமாக மட்டும் சுருக்கிப் பார்த்து இவர்கள் திராவிட இனவாத அரசியலுக்கும் தலித்திய அரசியலுக்கும் முட்டுக் கொடுத்து வருகின்றனர். இவ்விரு அடையாள அரசியலுக்கும் அதன் செயல்தந்திரங்களுக்கு பலியாகி வருகின்றனர். அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் வாலாக மாறி வருகின்றனர்; பாட்டாளி வர்க்கத் தலைமையை மறுக்கின்றனர். எனவே பாஜகவின் இந்த பாசிச ஆட்சிக்கு எதிராக பாட்டாளி வர்க்க தலைமை கொண்ட வலுவான பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டி அமைக்க இயலவில்லை. அனைத்து துறைகளிலும் கலைப்புவாதத்தை முறியடித்து கட்சியை திடப்படுத்துவதன் மூலமே அப்படியானதொரு முன்னணியை கட்டியமைக்கவும் இதன் மூலம் இந்த பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும். இந்த பாசிச ஆட்சிக்கு மாற்று மக்கள் ஜனநாயக குடியரசுதான் என்பதை மீண்டும் ஒரு முறை உரக்கச் சொல்லுவோம்.

- சமரன்

(ஜூலை -ஆகஸ்ட் 2024 இதழில்)