டெங் திரிபுவாதத்தை முறியடிப்போம்! லெனினியத்தை உயர்த்திப் பிடிப்போம்!
Sidhambaram Voc
முதல் உலகப்போர் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உலக மறுபங்கீட்டுப் போராக - அநீதியான போராக இருந்தது. லெனின் உலகப்போரை உள் நாட்டுப் போராக மாற்றுவது எனும் செய்லதந்திரத்தை வகுத்து வெற்றி கண்டார். அதாவது இது அநீதிப்போராக இருந்ததால் போரில் எந்தவொரு தரப்பையும் ஆதரிக்க முடியாது என்றார். காவுத்ஸ்கியர்கள் தாய் நாட்டைக் காப்போம் என்று கூறி ஒரு ஏகாதிபத்திய முகாமின் (ஜெர்மனி) யுத்தத்தை ஆதரித்தனர். லெனின் அதை சமூக தேசியவெறி எனவும் ஏகாதிபத்திய அடிவருடித்தனம் எனவும் சாடினார்.
முதல் உலகப்போருக்குப் பிறகு சோசலிச அரசு தோன்றியது. சோசலிச ரசியாவை அழிக்கும் பொருட்டு ஜெர்மனி ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடுத்தது. சோசலிச ரசியாவை காக்கும் பொருட்டு லெனின் ஜெர்மனியுடன் சமாதன ஒப்பந்தம் செய்து (பிரெஸ்டோ விஸ்க் ஒப்பந்தம்) கொண்டு சோசலிச கட்டுமானத்தை முன்னெடுத்தார். வெற்றி பெற்றார்.
முதல் உலகப்போருக்கு முன்பு சோசலிச முகாம் இல்லை. ஆகவே செயல்தந்திரம் வேறாக இருந்தது. சோசலிச முகாம தோன்றிய பின்பு செயல்தந்திரம் மாறுகிறது.
இரண்டாம் உலகப்போரின் போது மூன்று கட்டங்களில் மூன்றுவித செயல்தந்திரங்கள் வகுக்கப்பட்டன.
இரண்டாம் உலகப்போரின் போது நிலவிய நிலைமைகள் என்ன ?
1) வெற்றி பெற்ற பாட்டாளி வர்க்க ரசிய அரசு (சோசலிச ரசிய அரசு) இருந்தது (2) வெற்றி பெறும் தறுவாயில் இருந்த சீனத்து பாட்டாளி வர்க்க அரசு (சோசலிச சீனாவின் செந்தளங்கள்) (3)ஏகாதிபத்திய நாடுகளில் ஒரு அணி முதல் உலகபோர் நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக (ஜெர்மனி அணி) பாசிச அணியாக வளர்ந்தது. ஒரு அணி (அமெரிக்க அணி) பாசிசக்கொள்கைகளை அமல்படுத்தவில்லை. சோசலிச அபாயத்தை எதிர்கொள்ள கீன்சிய சீர்திருத்தங்களை அமல்படுத்தியது.
இந்த நிலைமைகளை கணக்கில் கொண்டு மூன்று கட்டங்களில் மூன்றுவித செயல்தந்திரங்கள் வகுக்கப்பட்டன.
1) முதல் கட்டம் பாசிச அணி சிறு நாடுகளை ஆக்கிரமிப்பதில் இருந்து துவங்கியது. அப்போது மூன்றாம் அகிலம் ஒடுக்கப்பட்ட நாடுகள் பக்கம் நிற்பதற்கான செயல்தந்திரம் வகுத்தது.
2) இரண்டாம் கட்டம் இரு ஏகாதிபத்திய அணிகளுக்கு இடையிலான அநீதிப் போராக வடிவமெடுத்தது. அப்போது மூன்றாம் அகிலம் உலகப்போரை உள் நாட்டுப் போராக மாற்றுவோம் எனும் செயல் தந்திரம் வகுத்தது.
3) மூன்றாம் கட்டத்தில் பாசிச அணியானது சோசலிச ரசியாவையும், சீன செந்தளங்களையும் அழிக்கும் நோக்கில் படையெடுத்தது. அப்போது சோசலிச அரசு யுத்தத்தில் பங்கெடுத்தது. ஆகவே யுத்தத்தின் வர்க்கத்தன்மை மாறிவிட்டது. அது சோசலிச முகாம்களை காப்பதற்கான நீதி யுத்தமாக வடிவம் பெற்றது.
பாசிசத்திற்கு செல்லாத அமெரிக்க அணியுடன் குறைந்தபட்ச செயல்தந்திரத்தின் அடிப்படையில் (ஏகாதிபத்திய முதலாளிய நாடுகளில் நிலவும் முதலாளிய ஜனநாயகத்தைக் காப்பது, அதன் காலனிய நாடுகளில் ஜனநாயகப்புரட்சிக்கு குறைவான தேசவிடுதலையை சாத்தியபபடுத்துவது) சோசலிச ரசியாவின் நீதி யுத்தத்தை ஆதரிக்கும் அமெரிக்க அணியுடன் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஐக்கிய முன்னணி கொள்கை வகுக்கப்பட்டது. முதல் இரு கட்டங்களிலும் அமெரிக்க அணி சோசலிச ரசியா அழியட்டும் என காத்திருந்தது. தனது காலனிகளை ஜெர்மன் அணி கைப்பற்றவே ரசியாவிடம் ஓடி வந்தது. இறுதியில் பாசிசம் தோற்கடிக்கப்பட்டது. சீனப்புரட்சி வெற்றி பெற்றது. இரசியாவில் சோசலிச நிர்மாணத்தை கட்டியெழுப்பினார் ஸ்டாலின்.
அப்போது 1) டிராட்ஸ்கியர்கள் ஒரு முகாம் மட்டுமே பாசிசத்திற்கு சென்றது என்பதை பார்க்க தவறினர். சோசலிச முகாமை மட்டுமே பார்த்தனர். ஆகவே ஐக்கிய முன்னணி கொள்கை கூடாது என்றனர். (2) பிரௌடரிச திருத்தல்வாதிகள் பாசிசத்தை மட்டுமே பார்த்து சோசலிசத்தை பார்க்க தவறி அமெரிக்கனிசமே ஜனநாயகம் என்றனர்.
இன்று நிலைமைகள் என்ன ?
1) உலகில் எங்கும் சோசலிசமுகாம் (அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு) இல்லை.
2) இரண்டாம் உலகப்போரின் போது ஒரு முகாம்தான் பாசிசத்திற்கு சென்றது. ஆனால் தற்போது அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் பாசிசப்போக்குகள் தலை தூக்குகின்றன. ஒரு அணி மட்டும் பாசிச அணியாக இல்லை.
அதாவது முதல் உலகப்போருக்கு முந்தய நிலைமைகள் தற்போது நிலவுகின்றன. அதே சமயம் அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் பாசிசமயமாகிவருகின்றன. இவற்றைக் கணக்கில் கொண்டுதான் பாட்டாளி வர்க்கம் தனது செயல்தந்திரத்தை வகுக்க வேண்டும். ஏகாதிபத்தியங்களின் அநீதிப்போரை அது மறைமுகப்போராக இருந்தாலும் (cold war - பனிப்போர்), நேரடிப் போராக இருந்தாலும் (Hot war) நாம் எந்தவொரு பிரிவையும் ஆதரிக்க கூடாது என்று லெனினியம் கற்பிக்கிறது.
உக்ரைன் போரின் வர்க்கத்தன்மை என்ன ?
உக்ரைன் ஆளும் வர்க்கம் நேட்டோவின் கைப்பாவை அரசாக உள்ளது. அது அமெரிக்காவால் அரபு வசந்த மாடலின் ஊடாக அமைக்கப்பெற்ற பொம்மை அரசாக உள்ளது. மோதுகின்ற இரு முகாமும் ஏகாதிபத்திய நாடுகளாக உள்ளன. நேட்டோ ஜெலன்ஸ்கி கும்பல் மூலம் ஒரு பதிலிப்போரை (proxy war) நடத்துகிறது. ரசியா நேரடிப்போர் நடத்துகிறது.
உக்ரைனோ ரசியாவோ அமெரிக்காவோ சோசலிச நாடுகள் இல்லை. குறைந்தபட்சம் ஒரு தேசவிடுதலையை முன்னெடுக்கும் அரசாகவும் ஜெலன்ஸ்கி அரசு இல்லை. அது ஒரு நியோ நாஜிச அரசாக உக்ரைன் வாழ் ரசியர்களை கொன்றுகுவித்த பாசிச அரசாக உள்ளது. அதைக்காட்டி ரசியா ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடுத்தது.
உக்ரைன் ஆளும் வர்க்கம் அணி சேராக் கொள்கையை கடைபிடித்திருந்தால் யுத்தத்தை எதிர்கொள்ள நேர்ந்திருக்காது. ஆனால் நேட்டோவின் வேட்டைக்காடாக உக்ரைன் சந்தையை மாற்றியது. ஆகவே யுத்தத்தை சந்தித்து சொந்த மக்களையே பலியிட்டுவருகிறது.
ஆகவே, ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காவும், உக்ரைன் பெருமுதலாளிகளுக்காகவும் நடக்கும் இந்த பனிப்போரில் நாம் எந்தவொரு பிரிவையும் ஆதரிப்பது ஏகாதிபத்தியத்திற்கும், அமெரிக்க - ஐரோப்பிய சார்பு உக்ரைன் ஆளும் வர்க்கத்திற்கும் வால்பிடிப்பதேயாகும்.
பாசிச ஜெலன்ஸ்கி அரசு ரசியாவை எதிர்கொள்ள நேட்டோவிடம் சரணடைவது சரி எனில், பாசிச மோடி கும்பல் சீனாவை எதிர்கொள்ள குவாட்டில் இடம் பெறுவதையும் சரி என நாம் அங்கீகரிக்க வேண்டியிருக்கும். ஆகவேதான் உக்ரைன் போரில் ஜெலன்ஸ்கியை ஆதரிக்கப் போய் இன்று மோடியை ஆதரிக்கும் நிலைக்கு திருத்தல்வாதிகள் தாழ்ந்துவிட்டனர்.
காலனிய, அரைக்காலனிய, ஒடுக்கப்பட்ட நாடுகள் ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காரப் போரை தவிர்க்க இன்றுள்ள சாத்தியமான ஒரே வழி அணி சேராக்கொள்கையை கடைபிடிப்பதேயாகும். அது உக்ரைனுக்கும் பொருந்தும்.
சோசலிச முகாம்களைப் பாதுகாப்பதற்காக மார்கசிய ஆசான்களால் உருவாக்கப்பட்ட செயல்தந்திரங்களை சோசலிச முகாம்கள் இல்லாத இன்றைய சூழலுக்கு திருட்டுத்தனமாக பொருத்தும் திருத்தல்வாதிகளின் ஏகாதிபத்திய விசுவாசத்தை - காவுத்ஸ்கியவாதத்தை - டெங்கின் திரிபுவாத மூன்றுல கோட்பாட்டை மார்க்சியர்கள் புரிந்துகொண்டு புறந்தள்ளுவது அவசியமாகும்.
திரிபுவாத டெங் கும்பல்தான் சோசலிச முகாம் இல்லாவிட்டாலும் முதல் உலக ஏகாதிபத்தியங்களை எதிர்த்து இரண்டாம் உலக ஏகாதிபத்தியங்ககளுடனும் ஏதாவதொரு ஏகாதிபத்தியத்தை சார்ந்து நின்ற மூன்றாம் உலக ஆளும் தரகு வர்க்க கும்பலுடனும் ஐக்கிய முன்னணி அமைக்கலாம் எனும் திரிபுவாதத்தை முன்வைத்து சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அமெரிக்காவுன் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டும் என்று பேசியது. இந்த டெங் திருத்தல்வாதம்தன் இன்று மார்க்சிய முகமூடியுடன் உலகெங்கும் வலம் வருகிறது.
டெங் திரிபுவாதத்தை முறியடிப்போம்! லெனினியத்தை உயர்த்திப் பிடிப்போம் !
கருத்தாக்கம் பெற உதவிய நூல் : ஏ.எம்.கேவின் சர்வதேச அரசியல் வழி பொது வழியை தீர்மானிப்பது குறித்த ஒரு அறிமுகம் - சமரன் வெளியீடு.
- Sidhambaram Voc