தோழர் பாலன் மறைவு! ஒரு துயரக் கதை!

தெய்வ சுந்தரம் நயினார்

தோழர் பாலன் மறைவு! ஒரு துயரக் கதை!

மறைந்த தோழர் பாலன்  . . .

தோழர் பாலன் மறைவு ! ஒரு துயரக் கதை!

----------------------------------------------------------------

கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு தோழர் பாலன் அவர்கள்! என்மீது மிகுந்த அன்பு கொண்டவர்! சென்னைக்கு வந்தால் என் இல்லத்தில்தான் தங்குவார். அவரே சில சமயங்களில் சமையல் வேலைகளைத் தொடங்கிவிடுவார்! மிக மிக எளிமையானவர்! 

1980- வாக்கில் தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் கிராமப்புறங்களில் மக்களோடு மக்களாகக் கலந்து பல போராட்டங்களை நடத்தியவர்! அவர்மீது தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் விடுதலை பெற்றபிறகும் தொடர்ந்து தன் போராட்டங்களை மேற்கொண்டவர்.

பொதுவாக, கிராமப்புறங்களில்  உழைக்கும் ஏழை, கூலி விவசாயிகளின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் நியாயமான போராட்டங்களைச் சீர்குலைப்பதில் இரண்டு ''நிறுவனங்களுக்கு'' மிகப் பெரிய பங்கு உண்டு. ஒன்று ''சாதியம்'' ... மற்றொன்று ''ஊர்ப்பஞ்சாயத்து''! 

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் நியாயமான உரிமைகளுக்காகப் போராட முற்படும்போதெல்லாம், அவர்களை ஒடுக்குகிற நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள் .... அப்போராட்டங்களைச் சாதிமோதலாக மாற்ற முற்படுவார்கள். அவர்களின் சாதிகளிலுள்ள இளம் வாலிபர்களைத் தூண்டிவிட்டு, பாதிக்கப்படுகிற விவசாயிகளின் போராட்டங்களைச் சாதிய மோதலாக மாற்ற முயல்வார்கள்!

அடுத்து, ''ஊர்ப் பஞ்சாயத்து'' என்ற நிறுவனத்தின்

மூலமாக ஏழை விவசாயிகளைக் கட்டுப்படுத்துவார்கள் .. இந்த இரண்டும் இன்றும் கிராமப்புறங்களில் நீடித்துவருகின்றன.  

இந்த இரண்டுவகை ''ஏமாற்று ஒடுக்குமுறைகளையும்'' எதிர்த்து ... 1980 -களில் தர்மபுரி மாவட்டத்தில் புரட்சிகர இயக்கங்கள் செயல்படத் தொடங்கின! 

நிலப்பிரபுக்களின் சாதிகளைச் சேர்ந்த முற்போக்கு இளைஞர்களை ஒன்று திரட்டின! அந்த இளைஞர்கள் தங்களைச் சாதியரீதியாக அதுவரை பயன்படுத்திவந்த நிலப்பிரபுக்கள், வட்டிக்காரர்களை எதிர்த்து நின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட முற்பட்டனர். இது நிலப்பிரபுக்களுக்கு ஒரு மிகப் பெரிய அடியைக் கொடுக்கத் தொடங்கின! 

அடுத்து, ''ஊர்ப்பஞ்சாயத்து''! அதற்கு மாற்றாக, ''மக்கள் பஞ்சாயத்து'' என்ற ஒரு அமைப்பைக் கிராமங்கள் தோறும் ஏற்படுத்தினர். பாதிக்கப்படுகிற மக்களும் மேற்குறிப்பிட்ட முற்போக்கு இளைஞர்களும் மக்களைக் கொடுமைப்படுத்தியவர்களை ... இந்த மக்கள் பஞ்சாயத்தில் நிறுத்தி, தண்டித்தனர்! 

இந்தவகையான போராட்டங்களை ஒன்றிணைத்தார் தோழர் பாலன் அவர்கள்! எனவே அவரை ''ஒழித்துக்கட்டுவதில்'' ஒடுக்குமுறையாளர்கள் முனைந்தார்கள்! 

ஒருநாள்... சீரியம்பட்டி என்ற ஒரு கிராமத்தில் தோழர் பாலன் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்தார்! அவர் மேடையில் இருக்கும்போதே அவரைத் தடியால் காவல்துறையினர் தாக்கினர். அங்கு கூடியிருந்த மக்களையும் தாக்கத் தொடங்கினர். ஒரு ஜாலியன்வாலாபாக் படுகொலை தொடங்கியது! 

தோழர் பாலன் உட்பட 17 இளைஞர்கள் மிகக் கடுமையான தடியடிக்கு உட்பட்டனர். அனைவரும் அருகிலுள்ள பாலக்கோடு காவல் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டனர்! அங்கும் அடிகள்தான்! பலத்த அடிகளால் மயக்கமடைந்த தோழர் பாலனை தர்மபுரி மருத்துவமனைக்குச் கொண்டுசென்றனர்! அங்கிருந்த மருத்துவர்கள் மனிதநேய அடிப்படையில் தோழர் பாலனுக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். 

ஆனால் காவல்துறை அதிகாரியோ '' வெறும் சம்பிரதாயத்திற்குத்தான் இவரை இங்கு கொண்டுவந்துள்ளோம். அவர் உயிர்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை'' என்றனர்! ஆனால் மருத்துவர்கள் தொடர்ந்து தங்கள் கடமையைச் செய்யத் தொடங்கினர். 

உடனே காவல்துறை அதிகாரி தோழர் பாலனை தாங்கள் சென்னைக்கு மேல்மருத்துவத்திற்காக அழைத்துச் செல்கிறோம் என்று கூறினார். ஆனால் மருத்துவர்களோ 'அதற்குத் தேவையில்லை ... நாங்களே அவரைக் காப்பாற்றத் தேவையான மருத்துவத்தை அளிக்கமுடியும்'  என்றனர். ஆனால் காவல்துறையோ அவர்களின் குரல்களுக்குச் செவிசாய்க்கவில்லை! கட்டாயப்படுத்தி மருத்துவர்களிடம் 'ஒப்புதல் சீட்டு'' வாங்கிக்கொண்டு, தோழர் பாலனைச் சென்னைக்குக் கொண்டுவந்தனர்! 

வரும் வழியில் தோழர் பாலன் அவர்களின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது! சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் உயிருடனா அல்லது உயிர் இல்லாமலா என்பது தெரியவில்லை! 

செய்தி அறிந்த நான் மறுநாள் அதிகாலையில் அவரை மருத்துவமனையில் பார்ப்பதற்காகப் புறப்படத் தயார் ஆனேன். அதற்குள் தோழர் பாலன் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது! உடனே இதுபற்றிப் பலரிடம் - பிரபல வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் போன்றோரிடம்- கூறி, அவர்களைத் தோழர் பாலன் அவர்களின் இறப்புக்கு நியாயம் கேட்கவும், அவர் உடலைப் பெறவும்  மருத்துவமனைக்கு அழைத்தேன்! ஆனால் ஒருவரும் அதற்குத் தயார் இல்லை! மாறாக, எனக்கு ''அறிவுரை'' கூறத் தொடங்கினர்! ''அரசு இப்பிரச்சினையை மிகக் கடுமையாகப் பார்க்கிறது. ஆகவே தாங்கள் தலையிடவேண்டாம்'' என்றனர். 

இந்த நிலையில் என்னுடன் மூன்று, நான்கு தோழர்கள்(ஒருவர் மறைந்த பேராசிரியர் மூர்த்தி, மறைந்த வழக்கறிஞர் கனகராஜ், திரு. மோகன் என்ற வழக்கறிஞர்) வந்தனர். மருத்துவமனைக்குள் நாங்கள்  நுழைய காவல்துறையினர் அனுமதிக்கவில்லை! இதற்குள் தோழர் பாலன் அவர்களின் சகோதரர் அங்கு வந்தார். அவரைக்கொண்டு தோழர் பாலன் அவர்களின் உடலைப் பெறலாம் என்று எண்ணினோம். ஆனால் அதற்குள் அவரையும் காவல்துறை மிரட்டிவிட்டது! 

மதியம்வரை தோழர் பாலன் உடலைப் பெறப் போராடினோம். பயன் இல்லை! ஒரு நேரத்தில் அவரது உடல் பிணவறையிலிருந்து வெளியே கொண்டுவரப்படுவதைப் பார்த்தோம்! எங்களது போராட்டத்தைப் பார்த்த  காவல்துறையினர் என்னைமட்டும் உள்ளே அனுமதித்தனர்! தோழர் பாலன் அவர்களின் உடலைப் பார்த்தேன்! உடல் முழுவதும் மூடப்பட்டு, முகம்மட்டும் சற்றுத் தெரிந்தது! மனம் கதறியது! கத்தினேன் அவ்வளவுதான்! காவல்துறை அதிகாரி என்னிடம்'' நாங்கள் இவரை அடக்கம் செய்யச் செல்கிறோம். நீங்கள் மட்டும் வேண்டுமென்றால் வரலாம்'' என்றார். ''சாக அடித்துவிட்டு, அடக்கம் வேறு செய்கிறீர்களா? என்று ஆத்திரத்தில் கத்தினேன். அவர்களுக்கு அதுபற்றிக் கவலை இல்லை! 

தோழர் பாலன் உடல் காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டது!

இதில் மற்றொரு செய்தி என்னவென்றால் ... அவரை ஏற்கனவே நீதிமன்றம் விடுவித்த ஒரு வழக்கில் காவல்துறை மேல்முறையீடு செய்திருந்தது. அந்த முறையீட்டிலும் தோழர் பாலனின் விடுதலையை நீதிமன்றம் அன்றுதான் உறுதிப்படுத்தியது! 

இதுபோன்று சில வருடங்களுக்குப் பின்னர் தோழர் ரவீந்திரன் என்பவரும்  சாகடிக்கப்பட்டார். அவருடைய உடலைப் பெறுவதிலும் காவல்துறையினர் தயக்கம் காட்டினர். நான், எனது நண்பரும் ஊடகவியலாளருமான தோழர் டி எஸ் எஸ் மணி, வழக்கறிஞர் தோழர் சங்கரசுப்பு, தோழர் இளங்கோ பிச்சாண்டி, தோழர் கோபால் (கல்பாக்கம் அறிவியலாளர்) உட்பட  வேறு சில தோழர்களும் இணைந்து ... போராடி.. உடலைப் பெற்று... நாங்களே இறுதிமரியாதை செலுத்தி அடக்கம் செய்தோம்! 

இந்த இரண்டு புரட்சிகர இறப்புகளும் எனது மனதில் நீங்காத் துயரத்தை இன்றும்  தந்துகொண்டுதான் இருக்கின்றன!  

மக்களுக்கு இன்று தெரியவந்த ''சாத்தான்'' குளங்கள் வரலாற்றில் எப்போதும் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன!

காவலர்களுக்கும் தனிமனிதர்களுக்கும் இடையில் ஏற்படுகிற மோதலில் தனிநபர்கள் சாகடிக்கப்படுவது வேறு (சாத்தாங்குளத்தில் நடந்ததுபோல) ! புரட்சிகர இயக்கத் தோழர்கள் ஒட்டுமொத்த அரசின் அடக்குமுறையால் கொல்லப்படுவது வேறு! இரண்டாவது வகை இறப்பு மக்களுக்கான தியாகம்! அர்ப்பணிப்பு! முதலாவது வகையான இறப்பின் தன்மை வேறு! இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது!

பிறப்பு, இறப்பு இரண்டுக்கும் நாம் அனைவரும் உட்பட்டவர்கள்தான். வயது முதிர்ச்சியால் அல்லது உடல் பிணியினால் அல்லது விபத்தால் ஒருவர் இறப்பது வேதனைக்குரியதுதான். ஆனால் இந்தவகை இறப்பு மயிலிறகு போன்று கனம் அற்ற ஒன்றுதான். ஆனால் மக்களுக்காக இறப்பது இமலயமலையைவிட மிக மிகக் கனமானது. மறைந்த தோழர்கள் அப்பு, பாலன், ரவீந்திரன், தமிழரசன் போன்றவர்களின் இறப்பு இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

- தெய்வ சுந்தரம் நயினார் (முகநூலில்)

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு