காங்கிரஸ் கட்சியின் அந்தர்பல்டி அட்டகாசங்கள்
ராஜ சங்கீதன்
பொதுவாக காங்கிரஸ் கட்சிக்கு திமிர் தலைமுடி உச்சி வரைக்கும் உண்டு. குறிப்பிட்ட காலங்களில் அடக்கி வாசிப்பது போல் காணப்பட்டாலும், அக்கட்சியின் அயோக்கிய கொண்டை, தாமாகவே வெளிப்பட்டு விடும். இல்லையெனில் காங்கிரஸ் கட்சியே வெளிப்படுத்தி விடும்.
ராகுல் காந்தி 'BJP can never win in Tamil Nadu' என்றெல்லாம் வசனம் பேசி, பாசிச எதிர்ப்பு எல்லாம் பேசியபோது தமிழர்களுக்கே 'நாம் காண்பது கனவா அல்லது நனவா' எனக் கிள்ளிப் பார்க்கும் நிலை வந்தது உண்மை. ஆனாலும் நான் சொன்ன 'கொண்டை' இருக்கிறதல்லவா? கேரளாவில் இடதுசாரி கட்சியை எதிர்த்து நிற்பது, கூட்டணி கட்சியாகவே இருந்தாலும் சமாஜ்வாதி கட்சியை சில தொகுதிகளில் எதிர்த்து நிற்பது என காங்கிரஸ் கட்சியின் அந்தர்பல்டி அட்டகாசங்கள் வரலாற்றில் ஏராளம்.
அங்கு சுற்றி இங்கு சுற்றி அடிமடியில் கை வைத்த கதையாக, நடிகர் விஜய் பக்கமாக சாய்ந்து கொண்டு திமுகவிடம் கூட்டணி பேரம் நடத்தியதும் மாணிக்கம் தாகூர் தொடங்கி காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் திமுகவை பிடித்து கடித்து வைத்ததும் அவ்வப்போது பழம்பெரும் நடிகரான கிஷ்மூ போல சோடங்கர் என்கிற காங்கிரஸ் பாத்திரம், ராகுலின் கைப்பாவையாக இங்கு வந்து மிரட்டி பார்ப்பதும் பிரவீன் சக்கரவர்த்தி என்கிற விஜய் PRO எதையேனும் உளறிக் கொட்டி வைப்பதும் என காங்கிரஸ் ஆடிய ஆட்டம் மிக மிக அதிகம்.
இந்த நிலையில்தான் சுதா என்ற காங்கிரஸ் எம்.பி. தற்போது பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்தற்கு எதிர்த்தும் ஏகத்துக்கு பேசியிருக்கிறார். சன் டிவியில் 'காவிய புதன்', 'சூப்பர்ஹிட் வெள்ளி' என அடைமொழி இட்டதுபோல் 'இணையதள நாயகன்', 'அதிகாரபரவலாக்க நாயகன்' என்றெல்லாம் வர்ணித்து ராஜீவ் காந்தியை குறிப்பிட்டு, அவரைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரென பேரறிவாளன் மீது அபாண்ட குற்றச்சாட்டை போட்டிருக்கிறார். 'இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியேவும் பயிற்சி பெற்ற LTTE' என ஈயம் பூசியும் பூசாததும் போல் நழுவிச் சென்றிருக்கிறார்.
இந்தியாவில் புலிகளுக்கு பயிற்சி கொடுத்தவர் யார் என்பதையும் அவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதையும் இதே 'ராஜீவ்காந்தி' பாசத்துடனும் அறிவு நேர்மையுடனும் சுதா சொல்லி இருக்கலாம். சொல்ல மாட்டார். காங்கிரஸ்காரர் அல்லவா? அயோக்கியத்தனத்துக்கும் காங்கிரஸ் என்றுதானே அர்த்தம்?
ஏன் சம்பந்தமில்லாமல் இன்னொரு நாட்டு பிரச்சினையில் போய் மூக்கை நுழைத்தார் ராஜீவ் காந்தி?
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என லண்டன் புலிகள் செயலக பொறுப்பாளர் கிட்டு அறிவித்தும் ஏன் தொடர்ச்சியாக புலிகளை காங்கிரஸ் தொடர்புபடுத்திக் கொண்டே இருக்கிறது?
ராஜீவ்காந்தி கொலையில் புலிகளை தொடர்புபடுத்துவது போல ஏன் சந்திராமியையும் சுப்ரமணியசாமியையும் காங்கிரஸ் தொடர்புபடுத்தவே இல்லை?
போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ராஜீவ் காந்தி கொலைக்கும் இருந்த தொடர்பு என்ன?
ராஜீவ்காந்தி கொலையில் புலிகளின் பங்கு என்னவென்பது குறித்து சுதா, அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமியுடன் பகிரங்கமாக விவாதம் நடத்துவாரா?
பேரறிவாளனுக்கு எந்தவித தொடர்பும் கொலையில் இல்லை என வழக்கு பதிந்தவர் தொடங்கி, தீர்ப்பு அளித்தவர் வரை பேசியும் கூட அவரை குற்றவாளி என சித்தரிக்க முயலும் சுதாவின் உண்மையான நோக்கம் என்ன?
காட்டுக்குள் சென்ற திருடனை பிடிக்க முடியாமல், ஒரு கரடியை பிடித்து கட்டி வைத்து 'நீதான் திருடன் என்ற உண்மையை ஒப்புக் கொள்' என மிரட்டினார்கள் என பிரபலமான நகைச்சுவை கதை ஒன்று உண்டு. அது காவல்துறைக்கு பொருந்துகிறதோ இல்லையோ காங்கிரஸ் கட்சிக்கும் பெரிதும் பொருந்தும்.
போலவே ராஜீவ் காந்தியின் தவறான அரசியல் கொள்கைகளும் மூர்க்கமும் மிகவும் பிரசித்தம்.
இந்திராகாந்தி கொல்லப்பட்டதும் சீக்கியர்களுக்காக எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை தாண்டவத்தை குறித்து ராஜீவ்காந்தி சொன்னது: 'ஒரு பெரிய மரம் சாய்ந்தால் நிலம் அதிரத்தானே செய்யும்!'
இப்படி பேசும்போது அந்த 'இணையதள நாயகன்' பிரதமராக பதவியில் இருந்தார். அவர் ஒப்பிட்ட 'நில அதிர்வு' சம்பவத்தில் டெல்லியில் மட்டும் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
சீக்கிய பாதுகாவலர்கள் சுட்டுக் கொல்லும் அளவுக்கு இந்திரா காந்தி மேல் கோபம் ஏற்படுத்திய நிகழ்வு, சீக்கியர்கள் புனிதமாக கருதும் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அவர் அனுப்பினார் என்பதுதான்.
இன்னும் தாத்தா காலத்துக்கு சென்றோமெனில், இன்று காஷ்மீர் மக்கள் படும் துயரத்துக்கு விதை ஊன்றியவர் அவர்தான். வட கிழக்கு மாநிலங்களை சுற்றி கோடு போட்டு அவர்களும் இந்தியர்கள்தான் என அவர்களுக்கே தெரியாமல் இந்தியத்தை அவர்களின் தலையில் சுமத்தியவர் அவர்தான்.
'உலகம் தூங்கிக் கொண்டிருக்கும்போது இந்தியா விழித்திருக்கிறது' எனப் பேசுவதற்கு முன்னதாக காஷ்மீரியப் பண்டிதர் நேரு, பார்ப்பனர்கள் நடத்திய யாகத்தில் பங்கேற்று ஆசிர்வாதம் வாங்கிதான் நாடாளுமன்றத்தில் முழங்கினார்.
அடுத்ததாக சுதா சொல்லும் 'இறையாண்மை காத்த அதிகாரபரவலாக்கல் நாயகன்' ராஜீவ் காந்தி, தன்னை வரவேற்க வந்த ஆந்திர முதலமைச்சரை அனைவர் முன்னிலும் அவமதித்தது மட்டுமின்றி 'நான்கு நாட்களில் அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்' என சொல்லி சென்று செய்தும் காட்டினார்.
இத்தனைக்கும் சம்பவம் நடந்த 1982ம் ஆண்டில் 'சார்வாள்' எந்த அரசியல் பதவியும் வகிக்காத காலம்.
ஆந்திர முதல்வருக்கு நேர்ந்த அவமானத்தை முன் வைத்து 'தெலுங்கு ஆத்மகெளரவம்' என தெலுங்கர்களுக்கான சுயமரியாதை இயக்கம் நடத்தி ஆட்சிக்கு வந்தவர்தான் என்.டி.ராமாராவ்.
அமெரிக்காவின் நியூ யார்க் மேயர் தொடங்கி உலகளாவிய மனித உரிமைப் போராளிகள் வலியுறுத்தி வரும் உமர் காலீதின் விடுதலை குறித்து ராகுல் காந்தி சாரிடம் இருந்து இந்த நொடி வரை ஒரு வார்த்தை கூட வரவில்லை.
காங்கிரஸ் கட்சி செய்த இந்தித் திணிப்பின் நீட்சிதான் இன்றைய பாஜகவின் இந்தித் திணிப்பு.
ரெய்டு நடத்திக் கொண்டே அறிவாலயத்தில் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய காங்கிரஸின் வழியைத்தான் பாஜக இன்று எல்லா கட்சிகளுக்கும் செய்து கொண்டிருக்கிறது.
ED, CBI என அமைப்புகளை காங்கிரஸ் ஏவலாட்களாக பயன்படுத்திய உதாரணத்தைதான் அதிக வலிமையுடன் இன்று பாஜக செய்கிறது.
கல்வி உள்ளிட்ட மாநில உரிமைகளை பறித்த காங்கிரஸ் வழியில்தான் இன்றும் பாஜக பீடுநடை போட்டுக் கொண்டிருந்தது.
காங்கிரஸ் கொண்டு வந்த எமர்ஜென்சிதான் இன்று மோடியின் யதேச்சதிகாரமாக பரிணமித்திருக்கிறது.
சர்ச்சைக்குரிய பகுதி என மூடி வைக்கப்பட்டிருந்த பாபர் மசூதி இந்துத்துவர்களுக்கு திறந்து விடப்பட்டதும் ராமர் கோவிலுக்கு அங்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் நம் விழா நாயகன் ராஜீவ் காந்தி ஆட்சியில்தான். அங்கு தொடங்கிதான் இன்று இந்துத்துவ ஆக்டோபஸ் பெருத்துக் கிடக்கும் ஆபத்தான இந்தியாவை நாம் அடைந்திருக்கிறோம்.
இந்துத்துவத்தை மூடி வைத்து பார்த்தால் பாஜக, காங்கிரஸ் கட்சிதான். இந்துத்துவ வெறியை வெளிப்படையாக பூசி காங்கிரஸை அவதானித்தால் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட கிடைக்காது.
தமிழ்நாட்டில் பெரியார் தொடங்கி ஈழப் போராட்டங்கள் வரை காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அரசியல் வேரூன்றி மரம் விட்டிருக்கும் காரணங்கள் பலவற்றை காங்கிரஸ் கட்சி கொடுத்திருக்கிறது.
மேலும் தமிழ்நாட்டின் போராட்ட அரசியலின் பிரதான முகங்களில் ஒன்று அற்புதம் அம்மாளின் முகம். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்காக இயக்கம் கட்டி போராடிய மாநிலம் தமிழ்நாடு.
ஆனால் சுதா போன்றவர்கள், நுனிக் கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்டிஆரின் அரசியலோ அல்லது நுனிக்கிளையோ அடிக்கிளையோ ஏதும் தெரியாமல் என்டிஆராக விரும்பும் விஜயை நம்பிக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கூட்டம்.
தமிழ்நாடு, காங்கிரஸ் கட்சியை சகித்துக் கொண்டு மட்டும்தான் இருக்கிறது.
சகிப்புத்தன்மையை ஏற்பு எனத் தவறாக நினைத்துக் கொண்டு காங்கிரஸ் ஆடினால், தமிழ்நாடு உண்மை என்னவென்பதை காங்கிரஸுக்கு 'காட்டு காட்டு எனக் காட்டும்!'
ராஜ சங்கீதன்
https://www.facebook.com/share/1CjDoGQ4Kb/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு