அடைந்தால் திராவிட நாடு! அடுத்த கட்டம் கார்ப்பரேட்டோடு!
துரை. சண்முகம்
" சொந்த காசுல சூனியம் வைப்பாங்களா! இந்த நேரத்துல இந்த பில்லு தேவையா? கால அவகாசம் எடுத்து கொண்டு வந்தா என்ன? ஒருவேளை இதுல வேறு எதுவும் இருக்குமோ?!"
என்று பத்ரி சேஷாத்திரி ( கிழக்கு பதிப்பகம்) கிடந்து அணத்துகிறார்.
தொகுதி மறுவரையறை எனும் பிரச்சனை உண்மையில் திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் கிடைத்த லட்டுதான்!
சட்டப்பிரிவு 82 , 170 - படி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் வரையறுக்கப்பட வேண்டும் என சொல்லப்படுவதிலேயே அடிப்படை பிழை இருக்கிறது.
இந்திராகாந்தி காலத்திலும் பிறகு திமுக அங்கம் வகித்த வாஜ்பாய் அரசிலும் 20 ஆண்டுகள் வாக்கில் இந்த வரையறுப்பைபை தள்ளி வைத்தார்கள். இந்தக் காலப்பகுதிக்குள் மக்கள் தொகையில் ஓரளவு பொதுநிலை சமநிலை வந்துவிடும் என்பது ஒரு தோராயக் கணக்கு. இதுவும் கூட அறிவியல் முறைப்படி இல்லாத அரச மரத்தடி வேண்டுதல் போலத்தான்.
எனவே மக்கள் தொகை அடிப்படையில் வரையறை எனும் அடிப்படையே மாநில உரிமை பேசுபவர்கள் தவிர்த்திருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்குமான சம விகிதாச்சார முறைகளான நாடாளுமன்ற தொகுதி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி இருக்க வேண்டும். சந்தர்ப்பவாதமாக இந்திய ஆளும் வர்க்கத்துடன் ஒன்றிப்போன மாநில கட்சிகள் கூட்டணிக்கு ஏற்ற வகையில் அவ்வப்போது நடந்து கொள்ளும் தற்காலிக அணுகுமுறைகளே இருக்கின்றன.
இதற்கிடையே இந்திய அரசு சொன்னதைக் கேட்டு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டதற்கு தண்டனையா என புறநானூற்று வீரர்கள் குமுறுகிறார்கள்!
வடக்கே உள்ளவர்கள் இது எங்களது தனி உரிமை போடா! எனத் தாண்டிப் போகையில், சுங்கம் தவிர்த்த சோழர்களால் இந்த குடும்ப கட்டுப்பாட்டை தவிர்க்க முடியாமல் இந்திய அரசு சொன்னால் உடனே பணிந்தது எத்தகு வீரம்? பிள்ளைகளை பெறுவதில் ஒன்றோ இரண்டோ அதற்கான அனைத்து சமூக வாய்ப்புகளும் உதவி செய்யப்படாத போது, குடும்பக் கட்டுப்பாடு மட்டும் அப்படியே ஏற்றுக்கொண்டு கும்பிடுகிறேன் சாமி என்று விழுந்தது தான் தென்னாட்டு வீரன் போல!
மேலும் விவசாய உற்பத்தியில் இருந்து அதிகபட்சம் தொழில் மயமாக்கப்பட்ட நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் அதற்கேற்ற குடும்ப அமைப்பு முறையில் தேவை நெருக்கடியில் இருந்தும் அதிகப்பிள்ளை பெற்றுக் கொள்வது என்பதிலிருந்து மாற்றம் என்பது ஒன்றும் நடந்துள்ளது.
பிள்ளை பெற்றாலும் பார் திராவிடம்! பெறாமல் அடக்கி ஆண்டாலும் திராவிடம்! சாதனைப் பார்! எனும் கணக்கில் இதையும் எழுத முடியாது.
அடிப்படையாக எழுப்ப வேண்டிய குரல் என்ன?
மக்கள் தொகை அடிப்படை என்பதையே மாநில அரசியல் பிரதிநிதித்துவ அதிகாரத்திற்கு தவிர்க்கப்பட வேண்டும். குறைந்த நபர்களே இருந்தாலும் அது ஒரு மாநிலம் என்பதை விட ஒரு தேசிய இனத்தின் உரிமை பெற்ற பகுதி. இந்த அடிப்படையிலான வரையறையை உருவாக்க போராட வேண்டும். இந்தியா பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்ற வகையில் மிக மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் பிரதேசங்களுக்கு கூட சம பிரதிநிதித்துவ வாய்ப்பு என்பது சமத்துவமான சதவீத அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். இதற்கான அறிவியல் வகைப்பட்ட அரசியல் அதிகார பகிர்வுக்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இத்தகைய மாற்று எண்ணங்களுக்கு பதில், எல்லா மாநிலமும் எப்போது சமமாக பிள்ளை பெக்கும்? என காலங்கடத்தி காத்திருந்தது போல கட்சிகள் நடிக்கின்றன.
உண்மையில் மக்கள் தொகை வளர்ச்சி என்பதை விட இந்திய ஆளும் வர்க்கத்தின் வளர்ச்சியை ஒட்டிய புதிய வரையறைகளுக்கு இந்த விவகாரம் தள்ளப்படுகிறது என்பதுதான் உண்மை.
அதிகாரத்தை ஒருங்கே குவிக்கும் நிதி மூலதன அதிகாரத்தின் தேவையிலிருந்து அனைத்தும் செய்யப்படுகிறது.
இந்த நோக்கத்தின் பின்னணியில் பல்வேறு தேசிய இன மக்களின் மாநில அரசியல் அதிகார உரிமையை மட்டுப்படுத்தும் பறிக்கும் மறு வரையறை இயங்குகிறது.
மாநில உரிமைகள் என்று குதிக்கும் கட்சிகள் கூட மக்களின் உரிமைகள் என்ற பொருளை விட, முதலாளிகளின் சுரண்டல் வளர்ச்சிக்கு நாங்களும் பங்கு கேட்கும் உரிமை என்ற பொருளில்தான் பொத்தாம் பொதுவாக பேசுகின்றன.
ஏனென்றால் ஏற்கனவே உள்ள நாடாளுமன்ற பிரதிநிதிகள் தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான சட்டங்கள் திட்டங்களை பேரளவில் எதிர்ப்பதாக குரல் கொடுத்து விட்டு இங்கே மாநிலத்தில் ஆளும் வர்க்கத்தின் அபிலாசைகளை நிறைவேற்றி தரும் கார்ப்பரேட் கையால் படைகளாக மாறி நிற்கின்றன.
எனவே தொகுதி வரையறை எனும் கருத்தாக்கத்தை மக்களுக்கான அதிகபட்ச ஜனநாயகத்திற்கான வரையறை எனும் அரசியல் பொருளில் வரையறுப்பதற்கும் அதற்கான அரசியலையும் சேர்த்து பேச வேண்டும்.
இதில் மக்கள் தொகை என்பதை முன் நிபந்தனை ஆக்கும் பொருளாதார வாதத்தை மறுக்க வேண்டும்.
மக்களுக்கான பொருளாதார நலத்திட்டங்கள் வேறு சில உதவிகளுக்கான தேவைகளை மட்டுமே மக்கள் தொகையின் அடிப்படையில் அந்தந்த மாநிலத்துக்கு உரிய முறையில் அளிக்க வேண்டும்.
திட்டமிட்டு தொகுதி வரையறை மசோதா உடன் மகளிர் ஒதுக்கீடு மசோதாவையும் சேர்த்துக் கொண்டு வருகிறது கிரிமினல் பாஜக. எதிர்ப்பவர்களை, பாருங்கள்! பெண்களுக்கான சதவீதத்தையும் எதிர்க்கிறார்கள்! என்று மடக்கலாம் என்பது அதன் உத்தி.
பாசிச எதிர்ப்பு என ஆரம்பித்து இந்தத் தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான போர் என அறிவித்து தொகுதி வரையறையை எதிர்த்து பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும்! என கறுப்பணிந்து தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வின் இந்தத் தொகுதி வரையறை திமுக விற்கு ஒரு நல்ல வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது என்பதும் உண்மை.
திமுக எதிர்ப்பது சரி. ஆனால் அதன் அரசியல் வரம்புகளை பரிசீலனையோடு அணுகாமல் பாசிச எதிர்ப்பிற்கு திமுக தலைமை என்பது போல தமிழக மக்களின் ஒன்றிய அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு திமுகவின் கார்ப்பரேட் சேவை அரசியலுக்கு வால் பிடித்துக் கொண்டு போகக் கூடாது.
இந்த நாடாளுமன்ற வாத முழக்கத்திற்குள் மக்களுக்கான ஜனநாயக அரசியல் பேசும் தருணமாக இதை பாட்டாளி வரக்கம் பயன்படுத்த வேண்டும்.
ஏனென்றால் மாநில உரிமை என தீரமாக பேசும் திமுக இந்த மாநிலத்திற்கு உள்ளே மக்களுக்கான ஜனநாயக அரசியல் போராட்ட உரிமைகளை அடக்குவதில் தொழிலாளர்களுக்கு உரிமை மறுப்பு ஆளும்வர்க்க பிரதிநிதியாக இயங்குகிறது.
எதிர்க்கட்சியான அதிமுக முற்றிலும் வாதத்திற்கு தேவையே இல்லாத வகையில் பாஜகவில் கலந்து கரைந்து தனித்த செயலற்று கிடக்கிறது.
எனவே திமுக எனும் தாராள வாத முதலாளி வர்க்க தேவைக்கான அரசியலாக மட்டும்தான் இதைப் பின்பாட்டு பாட வேண்டும் எனும் அடிப்படை தொழிலாளி வர்க்கத்துக்கு இல்லை.
ஏற்கனவே ஒரு பேட்டியில் ஓபிஎஸ் உளறி கொட்டியது போல, " தேர்தலில் திமுக தான் ஜெயிக்கும்! அண்ணா திமுக ஜெயிக்காது! என்று அமித்ஷா சொன்னார்! என்பதில் இந்திய ஆளும் வர்க்கத்திடம் எப்போது வேண்டுமானாலும் சமரசம் செய்து கொள்ளும் தகுதி படைத்த கட்சியாக திமுக உள்ளது என்பது எதிரிகளின் வாயாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு! என்பது போல, திமுக இதையும் தேர்தல் சவடாலாக பயன்படுத்தி அடையப்போவது கார்ப்பரேட் நாடு! என்பதுதான் அதன் வர்க்க அடிப்படை. வழக்கம் போல ஆளும் வர்க்க இந்தியாவின் ஒடுக்குமுறையை அதன் வர்க்க கண்ணோட்டத்தில் அம்பலப்படுத்தி எதிர்க்கும் வர்க்க அரசியலை முன்னெடுப்பதற்கு பதில் திமுகவின் தேர்தல் ஆதாயத்திற்கு திருப்பி விடும் வேலையில் நிலவும் ஆளும் வர்க்க ஒடுக்குமுறை கட்டமைப்பின் காதலர்கள் உள் இழுக்கப்பட்டுள்ளார்கள்.
உண்மையில் "தீ பரவட்டும்" எனும் முழக்கம் நொய்டாவில் போராடி சாதித்த தொழிலாளர்களின் வர்க்கத் தீயின் சாரத்திலிருந்து , தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முழக்கமாக முன்னேற வேண்டும்.
- துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/986666140706849/?rdid=Vr9bBAAUvdPfcpxf
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு