முதலாளித்துவ இந்தியாவும் மாறிவரும் குடும்ப உறவுகளும்

இரா. முருகவேள்

முதலாளித்துவ இந்தியாவும் மாறிவரும் குடும்ப உறவுகளும்

இந்து திருமண சட்டத்தில் விவாகரத்துக்கு விதிக்கப் பட்ட நிபந்தனைகள் பரஷரதர்ம சம்பிதா என்ற வேதகால இலக்கியத்தில் இருந்து எடுக்கப் பட்டவை.  இவை இந்து ஆதிக்க சாதிகளுக்கு பெரும் புரட்சியாக இருக்க உழைக்கும் மக்களுக்கு மிகக் கடுமையான நிபந்தனை ஆக இருந்தன:-. 

ஒரு கட்டுரை படிக்கிறீர்களா?.சென்ற மாத உயிர்மையில் எழுதியது.

முதலாளித்துவ இந்தியாவும் மாறிவரும் குடும்ப உறவுகளும்

இந்தியாவில் விவாகரத்து சதவீதம்1.1 ஆக உயர்ந்துள்ளது என்று சமூகவியல் ஆய்வளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இது 0.74 ஆக இருந்தது என்கின்றனர்.  எனவே பத்து ஆண்டுகளில் விவாகரத்து பெறுபவர்களின் அளவு 0.36 சதவீதம் உயர்ந்துள்ளது. இது மிக அதிகம் என்று பேசப்படுகிறது. அதே நேரம் மும்பை, பூனா, பெங்களுரூ, டெல்லி ஆகிய நகரங்களில் விவாகரத்து கோரி மனுச் செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை 20 லிருந்து 30 சதம் என்று மதிப்பிட்டுள்ளனர். 

பெரும்பாலான இந்திய புள்ளி விவரங்கள் போலவே இதுவும் குழப்பமானதும், தவறான பார்வையைத் தரக்கூடியதுமாகும். இந்தப் புள்ளி விவரங்களில் விவாகரத்து வழக்குகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பிரிந்து வாழ்பவர்கள், ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்தவர்கள், குழந்தைகளின் கஸ்டடிக்கு போராடும் பெற்றோர் ஆகியவை சேர்க்கப்படவில்லை.  நீதிமன்றத்துக்கு வராமல் பிரிந்து வாழ்பவர்கள் குறித்தும்  எந்த விதமான புள்ளி விவரமும் இல்லை. 

அதே நேரம் அண்மைக் காலத்தில்  திருமண முறிவுகளை ஒவ்வொரு தெருவிலும், குடும்பத்திலும் பார்க்கிறோம். எனவே நம் கண்முன் புனித இணைப்பாகக் கருதப்பட்ட, மாற்றவே முடியாததாகக் கருதப்பட்ட திருமணம் சிதறுவதையும் பார்க்கிறோம்.  எனவே இந்தியாவில் திருமண முறிவுகள் அதிகரிக்கின்றனவா? இல்லையா? அதற்கு என்ன காரணம் என்று புரிந்து கொள்வது அவசியமானது. இதைப் புரிந்து கொள்ள இந்தியாவில் எந்தப் பிரிவினரிடையே விவாகரத்து அதிகரித்துள்ளது என்பதையும் புரிந்து கொள்வது அவசியமானது.

இந்தியாவில் மணமுறிவும், மறுமணமும் அனுமதிக்கப்பட்ட சமூகங்கள் உள்ளன. “மூன்று இடத்தில் இவளைக் கட்டிக் கொடுத்தார்கள். மூன்றிலும் சண்டை போட்டுக் கொண்டு வந்து விட்டாள்” என்று காவல் கோட்டம் நாவலில் சு. வெங்கடேசன் எழுதுவார். இப்படிப்பட்ட சமூகங்கள் இந்தியா முழுவதும் இருந்தன. இவற்றில், மணமுறிவு புள்ளி விவரம் முன்பு என்ன, இப்போது என்னவாக இருக்கின்றது என்பது கடலிலேயே இல்லை. ஆனால் இந்த சமூகங்கள் இப்போது நாடுமுழுவதும் பரவி வாழ்வதாலும், உள்ளூர் கிராம பஞ்சாயத்துக்கள் சிதறிவிட்டதாலும் இந்த விவாகரத்து முறைகளில் வீழ்ச்சி இருக்கும், இவற்றில் விவாகரத்து குறைந்து விட்டது என்று  முடிவு செய்யலாம். 

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு அகங்காரன் என்பவர் எழுதிய “கரைமரம் ஆற்றோடு” என்ற சிறுகதைத் தொகுப்பில் ஒரு கதை வரும்.  ஒரு வங்கி அதிகாரியின் ஓட்டுநரின் மகள் குடிகாரக் கணவனிடம் சிக்கிக் கொண்டு படாதபாடு படுவாள். சகிக்க முடியாத அதிகாரி, ஓட்டுநரிடம் மகளை உங்களுடன் அழைத்து வந்து வைத்துக் கொள்ளலாமே என்று கேட்பார். “ ஒரு இருபது முப்பது வருடம் முன்னாலேன்னா   மக தாலியை கழற்றி வீசீட்டு வந்திருப்பா. நாங்களும் அவளுக்கு வேறு ஏதாவது ஏற்பாடு செய்திருப்போம். இப்போது இந்த சினிமா வந்து புருசனை விட்டு பிரியக் கூடாது, தாலி செண்டிமெண்ட் எல்லாம் பேசி பொண்ணுக கெட்டுப் போச்சு சார். செத்தாலும் இவனை உட்டு வரமாட்டேன்னு அவங்கிட்டயே கெடக்கறா” என்பார். 

சினிமா பார்த்து இளைய தலைமுறை கெட்டுப் போய்விட்டதாக அடிக்கடி தமிழ் சமூகத்தில் பேசப்பட்டு வருகிறது. இது அதற்கு ஒரு புது விளக்கம். கரைமரம் ஆற்றோடு தமிழ் இலக்கியத்தில் கவனிக்கப்படாமல் மறைந்து போன எண்ணற்ற எழுத்துக்களில் ஒன்று. இந்தக் கதையில் பேசப்படுவதும் தமிழ் இலக்கியத்தில் எப்போதாவது மட்டுமே தீண்டப்பட்ட ஒன்று. தமிழ் சமூகத்தில் அறுபது சதவீதம் விவாகரத்தும், மறுமணமும் அனுமதிக்கப்பட்ட சாதிகள் தான் என்கிறார் தொ.பரமசிவன் (பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும்- நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்). காவல் கோட்டத்திலும், கிராவின் கதைகளிலும்  பிரிதலும் இணைதலும் மிக இயல்பாக நடப்பது எடுத்துக் காட்டப்பட்டிருக்கும். 

எனவே இப்போது யார் நடுவே விவாகரத்து அதிகரித்து வருகிறது? இதை முடிவு செய்ய வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

1950 களின் நடுவில் இந்துத் தொகுப்புச் சட்டங்கள் வந்த பிறகு ஒற்றைப் பரிமாணம் கொண்ட இந்துப் பண்பாடு என்ற கருத்தாக்கம் மிகப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரிவினைக்குப் பின்னான அன்றைய கால கட்டத்தில் இந்து என்பது யார் என்று தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு இருந்தது. முஸ்லீம், கிருத்துவர், பார்சி அல்லாத எல்லோரையும்  கூடுமானவரை  இந்து என்ற போர்வையில் இழுத்துப் போட்டு இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க இந்திய அரசு முனைந்தது. திருமணத்தைப் பொறுத்தவரை பிடிக்கவில்லை என்றால் பிரிந்து போய்விடலாம், பெரிய கணக்குவழக்குகள் இல்லை என்பதே பெரும்பான்மையான சாதிகளில் மரபாக இருந்தது. இந்துத் திருமணச் சட்டம் விவாகரத்துக்கு மிகக் கடுமையான நிபந்தனைகள் விதித்தது.

1. வேறு தொடர்பு (அடல்ட்ரி)

2. கொடுமை புரிதல்

3. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிரிந்து போதல்

4. மதம் மாறுதல்

5. தீராத நோய்  ஆகியவை மட்டுமே விவாகரத்துக்குக் காரணங்களாக இருக்க முடியும் என்று இந்துத் திருமணச்சட்டம் பிரிவு 13(1) கூறுகிறது.

இந்த நிபந்தனைகள் “பரஷர தர்ம சம்ஹிதா”  என்ற வேதகால இலக்கியத்தில் விதவைத் திருமணத்துக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளாகும். அதில் சாதி நீக்கம் செய்ய்ப்படுதல் என்பது மதம் மாறுதல் என்று இந்துத் திருமண சட்டத்தில் மாற்றப்பட்டது. 

மரத்தடியில் பேசிப் பிரிந்து போகும் மக்களுக்கு இதெல்லாம் மிகக் கடுமையான நிபந்தனையாக இருந்த நிலையில், மரபுரீதியிலான விவாகரத்தும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. வேறு வழி இல்லை. கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களை ஒரு சட்டவிதியின் மூலம் அகற்றிவிட முடியாது இல்லையா? தவிர  மத்திய அரசுக்கு இந்து என்ற முத்திரை மட்டுமே தேவையாக இருந்தது. மற்றபடி உள்சாதிப் பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டிய தேவை அவர்களுக்கு அப்போது இல்லை. 

ஆதிக்க சாதியினரிடம் கூட கணவன் அடி தொழுவது அப்படியொன்றும் மீற முடியாத வழக்கமாக இருக்கவில்லை. ஆங்கில கல்வி கற்று ஆங்கிலேயர்களுடன் நேரடி உறவு கொண்டிருந்த சமஸ்தான மன்னர்கள் மற்றும் பெரு நிலப்பிரபுக்களின் குடுபங்களைச் சேர்ந்த பெண்கள் விருந்துகள்,  நடனங்கள், மது, சிகரெட், வெளிநாட்டு பயணங்கள் என்று கொண்டாட்டமாகத்தான் வாழ்ந்து வந்தனர். எ பிரின்சஸ் ரிமம்பர்ஸ் என்ற நூலின் ஆசிரியரும் முன்னால் ஜெய்பூர் ராணியுமான காய்த்ரி தேவி தனது தாய் இளமையிலேயே கணவனை இழந்து விட்டார். பின்பு குச் பிஹார் அரசாட்சியை ஏற்றுக் கொண்டார். அங்கே எப்போதும் பிரிட்டிஷ் பாணியில் விருந்துகள் நடந்து கொண்டிருக்கும் என்று எழுதுகிறார்.

வட இந்தியாவில் ஜாட்கள், பஞ்சாப், ஹரியானா பகுதியில் உள்ள சில ராஜ்புட் சாதிகள், பாக்ரி ராஜ்புட்கள், குறிப்பாக விவசாய சாதிகளிடையே கரேவா அல்லது சடார் அந்தாசி அல்லது லெவிரட் திருமணங்கள் எனப்படும் குழந்தையில்லாத விதவைகள் கணவனின் சகோதரனை மணந்து கொள்ளும் வழக்கம் பரவலாக இருந்தது. 

எனவே இந்துக்கள் என்று பொதுவாக வகைப்படுத்தப்பட்ட மக்களின் பல பிரிவினர் திருமணம் மாற்ற இயலாதது என்ற விதிக்குள் இல்லை.  

அதே நேரம்  பார்ப்பனர்கள்   உள்ளிட்ட ஆதிக்க சாதிப் பெண்களைப் பொறுத்தவரை  இந்துத் திருமணச் சட்டம் பெரும் புரட்சியாக இருந்தது. அதற்கு முன்பு  பெரும்பாலான ஆதிக்க சாதிகளில் பெண்களுக்கு இந்த உரிமைகள் இல்லை. மறுமண உரிமையும் இல்லை. சொத்துரிமையும் இல்லை. இதையெதிர்த்து சனாதனவாதிகள் பெரும் போராட்டங்கள் நடத்தினர். இவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கார் பதவி விலக வேண்டி வந்தது.  

சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்ற பெண்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இந்த விழிப்புணர்வு பெற்ற  பெண்களால் பெண்ணுரிமை குறித்த கோரிக்கைகள் வலுப் பெற்றன. கார்ப்பரேட்டுகளின் வலியுறுத்தலால்   கூட்டுக் குடும்ப சொத்தில் தகப்பன் பங்கில்  ஒரு சிறுபகுதி பெண்களுக்கு வழங்கும் விதி ஏற்படுத்தப்பட்டது.  எனவே பழமையில் ஊறிய ஆதிக்க சாதியினர் மறுமணம் போன்றவற்றுக்கு பண்பாட்டுத் தடைகள் போட முனைந்தனர். 

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே கலை இலக்கியத் தளங்களில்  ஆதிக்க சாதிப் பழமை வாதிகளின் செல்வாக்கு காரணமாக மறுமணம் போன்றவற்றுக்கு எதிராக கணவனைத் திருத்தும் குலவிளக்கு என்ற பாத்திரம் பல்லாயிரம் முறை முன்வைக்கப்பட்டது.  இந்த இலக்கியங்களின் நாயகிகள் கணவனைத் தவிர வேறு ஆணை கனவிலும் கருதாதவர்கள். அவன் அயோக்கியனாக இருந்தாலும் அவனுக்காக சகலத்தையும், அதாவது கற்பைத் தவிர்த்து, தியாகம் செய்யத் தயாராக இருந்தவர்கள்.

இந்திய மொழிகள் அனைத்திலும் இது நடந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளிவந்த அபாகி என்ற  வங்காள மொழித் தொடர்கதை மிகவும் புகழ்பெற்றது. கைபெண்ணான அபாகி எண்ணற்ற காமுகர்களிடமிருந்து தனது கற்பின் வலிமையால் தொடர்ந்து தப்புகிறாள். தாகூர், சரத் சந்திரர் ஆகியோர் புகழ் பெற்றிருந்த காலத்திலேயே இந்த அபாகியும்  மிகப் பரவலாக படிக்கப்பட்டது. தாகூருக்கும், சரத்துக்கும் கிடைக்காத வரவேற்பு அபாகிக்குக் கிடைத்தது. சரத் சந்திரரின் மனைவி ஒருமுறை அபாகியின் கற்பின் வலிமையைச் சிலாகித்து உங்களால் அப்படி ஒரு பாத்திரத்தை படைக்க முடியுமா என்று  கேட்டாராம். சரத் சந்திரர் ”அதற்குள்  அபாகி எல்லா ஆண்களிடமிருந்தும் தப்பிவிடுவாள் என்று முடிவு செய்து விடாதே, இன்னும் காசி விஸ்வநாதர் மீதி இருக்கிறார். அவர் முயற்சி செய்து பார்த்தால் அபாகி தப்புவது கடினம்” என்றாராம். 

கடுப்பு தீராத சரத் சந்திரர் இன்னொரு இலக்கிய நண்பருக்கு கடிதம் எழுதினாராம், “ இந்தக் கதையில் அடுத்து அபாகியை முயற்சி செய்யப் போவது நீதானாம். ஜாக்கிரதையாக இரு” 

இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்திய அரசின் அதிகாரம் நேரடியாக சென்றடையாத பல பகுதிகள் இருந்தன. பல நிலப்பிரப்புக்களின் ஆட்சிப் பகுதிகள், மலைப் பகுதிகள், போக்குவரத்து, தொலை தொடர்பு வசதிகள் எட்டாத பகுதிகள் இருந்தன. இவை தங்கள் பழைய மரபையே கடைப்பிடித்து வந்தன. அரசானது மெல்ல மெல்ல ஆதிக்க சாதி சினிமா, இலக்கியங்கள், பழம் பெருமைப் பிரச்சாரம், இதிகாச குடும்ப ஒழுங்குகள், கற்பு நிலையை மதப் பிரச்சாரகர்கள் மூலம் வலியுறுத்துவது மூலமாக எல்லாச் சாதிகளையும் சேர்ந்த நகப்புற நடுத்தர வர்க்கத்தை  தனது உறுதியான ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. கிராமப்புற உறவுகளை, மரபுகளை நகரங்களில் பின்பற்றுவது இழிவாகக் கருதப்பட்டது. அரசு பணிகளுக்குள் நுழைந்த படித்த நடுத்தர வர்க்கம்  குலதெய்வ கோவிலைத் தவிர கிராமப் பஞ்சாயத்து வழக்கங்கள் அனைத்தையும் கைவிட்டுவிட்டது. சாதி அனுமதிக்கப்பட்டாலும் அரசானது போலீஸ், கோர்ட்டுக்கு மாறாக மாற்று சட்டம் ஒழுங்கு முறைகளை திட்டவட்டமாகத் தகர்த்தது.  டி டி கோசாம்பி கூறுவது போல சாதி, கிராமப் பஞ்சாயத்துக்கள் குற்றவாளிகளைத் தண்டிக்கும் உரிமையை இழந்ததால் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தன. தேர்தல் மூலம் உருவான உள்ளாட்சி அமைப்புகள் இந்த பொறுப்பை எடுத்துக் கொள்ள முடியாதபடி சட்டம் மூலம் தடை செய்யப்பட்டிருந்தன.

அறுத்துக் கட்டுவது, பிரிந்து வாழ்வது,  மனமொப்பி இணைந்து கொள்வது ஆகியவை   நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தால் அடியோடு புறக்கணிக்கப்பட்டன. சினிமாவும் இலக்கியமும் மேலும் மேலும் இந்த விதமான பண்பாட்டுத் தாக்குதலை தீவிரப்படுத்தின. ஒருவனை இரண்டு பெண்கள் காதலித்தால் ஒருத்தி சாக வேண்டும், ஏனெனில் ஒருவனை நினைத்த அவள் இன்னொருவனை திருமணம் செய்து கொள்ளக் கூடாது, பாலியல் வன்முறை செய்யப்பட்ட பெண் உயிரை விட வேண்டும், கணவனை இழந்தால் அவன் நினைவாக வாழ வேண்டும் என்று சகட்டு மேனிக்கு சினிமாக்கள் எடுத்துத் தள்ளப்பட்டன. இதைப் பற்றித்தான் மேலே சொன்ன சிறுகதையில் அகங்காரன் எழுதுகிறார். 

ஆனால் இந்துத் திருமணச் சட்டம் ஒற்றைப் பரிமாணம் கொண்டது. இந்தியப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த இந்து என்று வகைப்படுத்தப்பட்ட மக்களின் குடும்ப வாழ்வைத் தீர்மானிக்கும் அளவுக்கு முதிர்ச்சி கொண்டதல்ல.

இந்துச் சட்டம் பெண் சொத்துரிமையை அரைகுறையாக வைத்து விட்டு சீதனத்தையும் சட்டபூர்வமாக்காமல் விட்டதில், விவசாயம் போன்ற தொழில்கள் செலவு பிடிப்பவையாக மாறியதில்  வரதட்சணைக் கொடுமை, எரித்துக் கொல்வது, பெண் சிசுக் கொலை என்று இந்தியா முழுவதும் மனிதகுலம் அதுவரை கண்டிராத கொடுமைகளைக் கண்டது. 

அதே போல மரபு விவாகரத்து முறைகள் புறக்கணிக்கப்பட்டு, விவாகரத்துக்கு இந்துத் திருமணச் சட்டம் மிகக்கடுமையான விதிமுறைகள் வைத்து இருந்ததால் அதில் சொல்லப்படும் கொடுமை புரிதல் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு விவாகரத்து பெறுவதைத் தவிர வேறு வழியே பெண்களுக்கு இல்லை என்ற நிலை இருந்தது. ஆண்களுக்கு அதுவும் இல்லை. எனவே கணவன் கொடுமை புரிவதாக ஏராளமான வழக்குகள் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன. வழக்குகள் வருடக் கணக்காக இழுத்துச் சென்றன.  விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்ட ஆண்கள் வழக்குகளில் சிக்கி இரண்டாவது மனைவியை தம்பி மனைவி, அண்ணன் மனைவி என்று பொய் சொல்லும் அசிங்கமும் நடந்தது. வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை வழக்குகள் என்பவை இன்றளவும் இந்தியாவில் மிக முக்கியமன சமூகப் பிரச்சினைகளாக உள்ளன.

கோர்ட் படியேறுவது அவமானமாகக் கருதப்பட்டது. மறுமணம் அதைவிட அவமானகரமானதாகக் கருதப்பட்டது.  எனவே கணவனோடு வாழ முடியாத பெண்கள் பிறந்த வீடுகளில்  ஊதியம் இல்லாமல் உழைக்க நிர்பந்திக்கப்பட்டனர். அல்லது யாருக்காவது சட்ட பாதுகாப்பு இல்லாத பாலியல் துணையாகும் நிலை ஏற்பட்டது. 

இந்த அரைகுறை நடவடிக்கைகளுக்கு ஒரே காரணம் தான் இருந்தது. இந்திய அரசு இந்துப் பண்பாடு என்ற ஒற்றைத் தன்மை கொண்ட பண்பாட்டை பரவலாக்க விரும்பியது. இந்திய சமூகத்தின் மேல் இந்திய நடுவண் அரசின் பிடி இறுக இறுக இந்த ஆதிக்க சாதி பண்பாடு இந்துப் பண்பாடு என்று பரப்பப் படுவதும் தொடர்ந்து வந்தது. முதலாளித்துவ அரசானது இந்து நிலவுடமைக் கூட்டுக் குடும்பங்களை ஒழித்து இருக்க வேண்டும். ஆனால் முதலாளித்துவ அரசு கிராமப்புற நில உடமையாளர்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தது. எனவே நிலத்தை விற்று வாங்கும் பொருளாக மாற்றும் பணியை அரைமனதுடனேயே செய்தது. நகர்ப்புற ஆதிக்க சாதிகள், கிராமப்புற நிலவுடமை வர்க்கங்கள் பெண் விடுதலை என்பதை மேலும் மேலும் சிக்கலாக மாற்றி வைத்தன. இதனால் ஆண்களும் சேர்தே வதைபட்டனர். 

எனவே முன்பு மரபு நீதியிலான விவாகரத்தை அனுமதித்து வந்த சமூகங்களும், ஒரு சில பழங்குடி இனங்களும் கூட ஆதிக்க சாதி இந்துப் பண்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதால் இந்தியாவில் விவாகரத்து மிகவும் குறைவாக இருப்பது போன்ற தோற்றம் இருந்தது. அதே நேரம் இந்தியா படுமோசமான புரிந்தலற்ற திருமண உறவுகளுக்குப் பேர் போன நாடாகவும் இருந்தது. பேசினால் சண்டை வரும் அதனால் பெரும்பாலும் பேசிக்கவே மாட்டோம் என்பது போன்ற டயலாக்குகளை இந்தியாவில் மட்டுமே கேட்க முடியும். 1960- 2000 கால கட்டத்தில் இந்திய சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக கணவன் மனைவி மாமனார் மாமியார் என்ற குடும்ப அமைப்பை நோக்கி நகர்ந்தது. 

குடும்ப சொத்துக்கள் மீது மாமனார் ஆதிக்கம், மாமியார் கொடுமைகள் உச்ச கட்டத்திலிருந்த காலமும் இதுதான். பெண்கள் இவறையெல்லாம் சகித்தே வந்தனர். வயதான பின் மாமியார் திண்ணைக்கு தூக்கி வீசப்படுவதும் நடந்தது. நடக்கும் இல்லையா. . . . 

உலகமயமாக்கல் பல்வேறு சமூக மாற்றங்களை இந்தியாவில் கொண்டு வந்தது. பெண்கல்வி உச்சகட்டத்தை எட்டியது. இரண்டு குழந்தைகள் மட்டுமே கொண்டிருந்த குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர் முன்பு போல பெண் குழந்தைகளை விட்டுக் கொடுக்க மறுத்தனர். பல்லாயிரம், லட்சக்கணக்கான பெண்கள் மும்பை, பெங்களுரூ, சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களை நோக்கி பல்வேறு பணிகள் பெற்று நகர்ந்தனர். இந்த நகரங்கள் ஆண்பெண் உறவுகளை எளிமையாக்க பல்வேறு பப்கள், காபி ஷாப்கள், விருந்து அரங்குகள் போன்ற வசதிகளைக் கொண்டிருந்தன. ஜிம்களீல் கூட சம அளவில் பெண்கள் பங்கு கொண்டனர். 

இந்த இடத்தில் தான் பிரச்சினை வருகிறது. இந்தியாவில் மிக அதிக விவாகரத்துக்கள் நடக்கும் நகரங்களாக மும்பை, டெல்லி, பெங்களுரூ, கல்கத்தா நகரங்கள் உள்ளன. விவாகரத்து வழக்குகளில் முதலிடம் மஹாராஷ்ட்ரா (அதில் பெரும்பான்மை மும்பை பூனா பகுதி). இரண்டாவது இடம் கர்நாடகா (பெங்களூரு, மைசூர் பகுதி), மூன்றாவது இடம் உத்திரபிரதேசம் (அதன் பெரும் மக்கள் தொகை, டெல்லிக்கு அருகிலிருப்பது காரணமாக), நான்காவது இடம்  மேற்கு வங்காளம் (கல்கத்தா), ஐந்தாவது டெல்லி, ஆறாவது தமிழ்நாடு.  25-25 வயது விவாகரத்து 50 சதவீதம். 18-25 வயது 35 சதவீதம், 35க்கு மேல் 15 சதவீதம். (மாலைமலர்12.9.2024). 

மஹாரஷ்ட்ராவில் பதிவாகும் 20000 விவாகரத்து வழக்குகளில்15,000 வழக்குகள் மும்பை, பூனா நகரங்களில் பதிவாகின்றன. கர்நாடகாவைப் பொறுத்தவரைபெங்களூரு விவாகரத்து ளுக்கு பெயர் பெற்ற நகரமாக்கி வருகிறது. 30 சதவீத தம்பதிகள் விவகாரத்து கோருகின்றனர் என்றெல்லாம் புள்ளி விவரங்கள் உள்ளன. இது விவாததுக்குரியது. ஆனால் விவாகரத்து மிக அதிக அளவுக்கு அதிகரித்து உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். 

கேரளாவும் வடகிழக்கு இந்திய மாநிலங்களும் மிக அதிக அளவு விவாக்ரத்தைக் காண்கின்றன. இதற்கு காரணம் மருமக்கள் தாயம், பழங்குடி பின்புலம் என்கிறார்கள்.

தமிழ் நாட்டில் 2026 ஆம் ஆண்டில் 40 குடும்ப நீதிமன்றங்கள் உள்ளன. 2000 ஆம் ஆண்டு 6 குடும்ப நீதிமன்றங்கள் தான் இருந்தன.

எனவே ஆதிக்க சாதி பண்பாட்டை எல்லோர் மீதும் திணிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்ற இந்திய ஆளும் வர்க்கம் தான் வெட்டிய குழியில் தானே விழுந்தது. ஆதிக்க சாதிக் குடும்பங்களும் சேர்ந்தே இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளன. சொல்லப் போனால் அதிகம் பாதிக்கப்படுவது இப்போது அவர்கள் தான்.

இந்தியாவில் நிலங்கள், தங்கம், கார் போன்ற பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2000க்கு பின்னான காலத்தில் கடன் இல்லாமல் வீடு, கார் ஆகியவை வாங்குவது மிகக் கடினம் என்ற நிலை வந்து விட்டது. உலகமய கால பெருமுதலாளித்துவ வர்க்கம் தனது பொருட்களை விறக வேண்டும் என்றால் இந்திய குடும்பங்களின் வருமானத்தை பெருக்கியே ஆக வேண்டும். அதற்கு இருந்த ஒரே வழி பெண் உழைப்பை அதிகரிப்பது, பெண்களையும் வேலைக்குப் போக வைப்பது. இதைக் கொண்டு நடுத்தர, உயர்நடுத்தர குடும்பங்களின் வருமானம் ஏறக்குறையை இரண்டுமடங்காக்கப்பட்டது. கல்வி முதலாளிகளூம் தங்கள் மார்க்கெட்டை அதிகரிக்க உயர் கல்வியை பெரிய அளவில் பெண்களூக்குமாக விரிவுபடுத்தினர்.

பெண்கள் அதிக கல்வியறிவு பெற்று வேலை வாய்ப்புகளையும் பெற்றது மிக முக்கியமான சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது. வாய்பேசாமல் அனைத்தையும் சகித்துக் கொள்ளூம், தனித் தீவாக வெறுமையில் வாழும் பழைய தியாகி மருமகள் பாத்திரம் இப்போது குறைவாகி விட்டது. பெண்கள் திருமணத்துக்குப் பின்பும் குடும்ப, சமுக உறவுகளைப் பேணுகின்றனர். தன்னம்பிக்கை கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார தன்னிறைவு கொண்டிருக்கின்றனர். 

இதற்கு மாறாக ஆண்களின் நிலை உள்ளது. காதலித்து பேசிப் பழகி திருமணம் செய்த பின்பு காலையில் மனைவி காபி தரவேண்டும் என்று எதிர்பார்த்தால் சிக்கல் வரத்தான் செய்கிறது. இந்தக் காலப் பெண்கள் காபி தரவும் பாத்திரம் கழுவவும்  செய்கின்றனர் என்றாலும் அது பல்வேறு வரம்புகளுக்குட்பட்டது. அதற்கு மாற்றாக புரிதலுடனான வாழ்க்கையை எதிர்பார்க்கின்றனர். கணவன் வேறு ஏதாவது தரவேண்டும்.  இணைந்து முடிவுகள் எடுக்க வேண்டும், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். தேவைப்படும் போது இணைந்து நிற்க வேண்டும். “எனக்கு ஒன்னுமே தெரியாது, அவரோட பாஸ்புக், பத்திரம், எல் ஐ சி, கடன் விவகாரம் எல்லாமே அவருக்கு மட்டும் தான் தெரியும்” என்பதெல்லாம் இந்தத் தலைமுறை பெண்களிடம் சரிவருவதில்லை. 

கணவன் மனைவி உறவில் குடும்பம் தலையிடுவதையும் பெண்கள் விரும்புவதில்லை. முடிவுகள் அவர்கள் இருவராலேயே எடுக்கப்பட வேண்டும் என்று விழைகின்றனர். 

கட்டுரையாளர்  ரம்யா, ரோஸ்லின், ஹேமா,  பிரமீளா,  கிருஷ்,  ஆகிய ஐவரின் வழக்குகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).

இதில் ரம்யா,  ரோஸ்லின், பிரமீளா ஆகியோர் வழக்கு மாமியாரின் ஆகிரமிப்பு பற்றியது.     கிருஷ் வழக்கு பாலியல் உறவுக்கு மனைவி முன்வராததும்,    ஹேமா வழக்கு கணவன் வேலைக்குப் போகாததும் ஆகும்.   

இதில் கிருஷ் மட்டுமே விவாகரத்து கோரிய ஆண் ஆவார். இன்னும் கூட தமிழ் நாட்டில் விவாகரத்து பெற்ற பெண்கள் மறுதிருமணம் செய்வதில் பிரச்சினை இருக்கிறது என்றாலும் பெண்களே பெருமளவு விவாகரத்து கோருகின்றனர். அதிலும் பெரும்பாலான பெண்கள் திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் விவாகரத்து கோருகின்றனர். இவர்கள் தங்கள் கணவனை பெரும்பாலும் ஆளுமை அற்றவனாகவும், முடிவெடுக்க இயலாதவனாகவும், பெற்றோர் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டவனாகவும் பார்க்கின்றனர். 

இந்தப் பெண்கள் இவ்வளவு சீக்கிரம் விவாகரத்து கோருவதற்கு குழந்தை பிறப்பதற்கு முன்பே பிரிந்து விட வேண்டும் என்ற அவசரமும் காரணமாகும். பெற்றோரும் கூட பிரிவு தவிர்க்க முடியாதது என்றால் அது உடனே நடக்கட்டும், குழ்ந்தை இருந்தால் இன்னொரு திருமணம் செய்து வைப்பது சிரமம்  என்று நினைக்கின்றனர்.

திருமணம் இப்போது கடமை என்பதாக இல்லாமல் இணைந்து வாழ்தல்  என்ற கருத்தாக்கத்தை இந்தப் பெண்கள் தங்களை அறியாமலேயே முன்வைக்கின்றனர் .

மிகவும் வியப்பூட்டும் விதமாக திருமணம் கடந்த உறவுகள் இப்போதெல்லாம் விவாகரத்துக்கு காரணமாகவே இல்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்துக்கு முன்பே இருந்த காதல், திருமணமான பின்பு வெளியே பாலியல் உறவுகள் இருப்பது, பணம் தராமல் இருத்தல் போன்றவை மணமுறிவுக்கு முக்கிய காரணங்களாக இருந்தன. இப்போது ஒரு விதத்தில் அதற்கெல்லாம் நேரமே இல்லை என்று சொல்லலாம். அல்லது ஆண் குழந்தைகள் மீதான அதீத கவனிப்பு, அழுத்தம், கல்வி தரும் நெருக்கடி ஆகியவை அவர்களை அதற்கெல்லாம் உரிய மனநிலை இல்லாதவர்களாக மாற்றுகிறது போலும். 

இன்னொரு விதத்தில் இந்திய உற்பத்தி நகரங்களில் பாட்டாளி வர்க்கம் சாதி கட்டுப்பாடுகள் அனைத்தையும் தகர்த்து விட்டது. உற்பத்தி தளங்கள், கட்டுமானத் தளங்கள், செங்கல் சூளைகள் போன்றவை இறுக்கமற்ற ஆண்பெண் உறவுகள் கொண்டவையாக மாறிவிட்டன. இங்கு விவாகரத்து அவசியமே இல்லை.

இப்போது இந்தியாவை ஆளூம் கார்ப்பரேட் அமைப்புகள் ஒருநபர் குடும்பம் என்ற இடத்தை நோக்கி முன்னேருகின்றன. சனாதனிகள் சாதி, மத கும்பல்களைக் கொண்டு காதல் எதிர்ப்பு இயக்கங்கள் நடத்துக்கின்றனர்.  ஏதோ ஒரு விதத்தில் பழையை குடும்ப உறவுகளைப் பேண  போராடுகின்றனர். ஆனால் இந்தியா  ஒருகாலத்திலும் அவர்கள்  விரும்பியது போல இருந்ததில்லை.  இனியும் இருக்கப் போவதில்லை.

இரா. முருகவேள்

உயிர்மை 

https://www.facebook.com/story.php?story_fbid=10216116953072643&id=1714910257&post_id=1714910257_10216116953072643&rdid=2Pxqz8C8q5fFJWN0

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு