உண்மையான தற்குறியை கவனிக்க தவறிவிட்டோமே!
சாவித்திரி கண்ணன்
திசை திருப்பல், விளம்பர வியூகங்கள், அதிரடி எதிர் தாக்குதல்கள் – இவை தாம் திமுகவின் அரசியல் வெற்றிச் சூத்திரமாகும்.
தான் திருடன் பிறருக்கு திருட்டு பட்டம் சூட்டி, தன்னை யாரும் கவனிக்காதவாறு தற்காத்துக் கொள்வான் என்பார்கள்!
இது திமுகவிற்கு முற்றிலும் பொருந்தும்.
எளிமையான வாழ்க்கை வாழ்ந்த காமராஜரையே களங்கப்படுத்தியவர்கள் தான் இவர்கள்; கருப்பு காக்கா, நேருவின் எடுபிடி, வட நாட்டு ஏஜெண்ட், படிக்காத தற்குறி..என்றெல்லாம் பட்டம் கட்டி, அவருக்கு பங்களா இருக்கிறது. ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார் என்று வசை பாடினர்.
அதே போல எம்.ஜி.ஆர் மலையாளி எனத் தொடர்ந்து அவமானப்படுத்தினர். அப்போது கருணாநிதி தமிழரா? தெலுங்கரா? என்று கேட்டதும் அடியோடு அடங்கினர்.
அந்த வெறுப்பு அரசியலின் வீச்சை மேன்மேலும் பன்மடங்காக்கியது தான் ஸ்டாலின் திமுகவின் சாதனையாகும்.
எடப்பாடிப் பழனிச்சாமியை கொத்தடிமை, தவழ்ந்து பதவி பெற்றவர், அதிமுகவை அமித்ஷா தான் நடத்துகிறார்.. என்றெல்லாம் பேசினர்.
அதே போல விஜய்யை, தற்குறி, அவரது கட்சியினர் அணில்கள் என்று வசைபாடினர்.
ஆனால், உண்மையில் பார்ப்பனர்களின் கொத்தடிமையாக ஆட்சி செய்தவர் தான் திரு. ஸ்டாலின். இவரது ஐந்து வருட ஆட்சி என்பது இங்கு பாஜகவை ஆதரிக்கும் பார்ப்பனர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் பரிசாகத்தான் இருந்தது.
டி.என்.இ.பி சேர்மனாக இருந்து இங்கு ராஜேஷ் லக்கானி ஆடிய ஆட்டங்களை வெறுமே வேடிக்கை பார்த்தவர் தான் ஸ்டாலின்.
தனக்கு கீழ் இருக்கும் அதிகாரிகள் தன்னை மீறி செயல்பட்டு தன்னுடைய ஆணையை துச்சமாக மதித்த பல தருணங்களில் அமைதி காத்தவர் தான் ஸ்டாலின்.
அதற்கு ஒரு உதாரணம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தமிழ் படைப்பாளிகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ( தினமலர் ஆலோசனைப்படி) தடுத்து நிறுத்தி தமிழ் அறிஞர் மறைமலை இலக்குவனார், கவிஞர்கள் மு,மேத்தா, வைரமுத்து ஆகியோருக்கு தராமல் நிறுத்தி வைத்த போது, ஒன்றும் பேசாமல் மெளனம் சாதித்தார்.
அதிமுக ஆட்சியில் வட பழனி முருகன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட தினமலர் ஆதிமூலம் திமுக ஆட்சியிலும் ஐந்தாண்டுகள் தொடர முடிந்தது எப்படி?
பாஜகவை தீவிரமாக ஆதரிக்கும் பார்பனரான மாலன் அவர்கள் மருத்துவ பல்கலைக் கழகத்தில் மருத்துவ பத்திரிக்கையாளர் வகுப்பை நடத்தும் வாய்ப்பை எப்படி பெற்றார்? அவரைத் தவிர தகுதியானவர்கள் யாரும் இல்லையா?
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தலைவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால், அது அவருக்கே தெரியுமா என்று தெரியவில்லை. ஒரே ஒரு முறை கூட வருடாந்திர கூட்டம் தன் தலைமையில் நடத்திவரல்ல. ஆனால், அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரான சுதா சேஷ்யய்யன் செம்மொழி ஆய்வு நிறுவனத்தை ஆரியமயமாக்கி, அகத்தியர் விழக்களை நடத்தியதை அமைதியாக வேடிக்கை பார்த்தவர் தான் ஸ்டாலின்.
மேலும், இன்று வரை சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்து, பெரும் சம்பளம் வாங்குகிறார் சுதா சேஷ்யய்யன். சாஸ்திராவின் வட பழனி அலுவலகத்திற்கும், தஞ்சைக்கும் ஓடி,ஓடி வேலை பார்த்துக் கொண்டே செம்மொழி ஆய்வு நிறுவனத்தை சனாதன ஆராய்ச்சி நிறுவனமாக்கிக் கொண்டிருக்க சுதா சேஷ்ய்யனால் எப்படி முடிகிறது?
கல்வித் துறையில் கோலோச்சிய பாஜக ஆதரவு பார்ப்பனர்களின் பட்டியலை தந்துள்ளேன்.
அதற்கு சிறிய சாம்பிளாக இன்றைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படித்த சென்னை மாநில கல்லூரிக்கு தன் ஆட்சியில் அவர் பிரின்சிபாலாக்கி அழகுபடுத்தியது இராமன் அய்யரைத் தான். அத்துடன் ஒரு கூடுதல் அத்துமீறலாக, இதே நபருக்கு கல்லூரி கல்வி இயக்கத்தின் இணை இயக்குனர் பதவியும் தரப்பட்டுள்ளது. இரண்டு பதவிகளுமே முழு அர்ப்பணிப்போடு முழு நேரம் தந்து செயல்பட வேண்டியவை. ஆனால், இவரை இரு இடங்களிலும் பதவி தந்து இரண்டுமே, உருப்படியாக செயல்பட முடியாத நிலைமை உருவாக்கப்பட்டது? ஏன்?
இப்படியாக ஏகப்பட்ட உதாரணங்களை எழுதியுள்ளேன். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்து சூத்திர மக்களை காப்பாற்றுவதற்காக வரலாற்றின் தேவையாக எழுந்து, அரசியல் அதிகாரத்திற்கு வந்த ஒரு மாபெரும் இயக்கத்தை, பார்ப்பனர்களின் காலடியில் கிடத்தியதில் ஸ்டாலின் அவர்களுக்கு ஈடு இணையில்லை என்பேன். அதற்கான ஆதாரங்களை அறம் ஆன்லைன் டாட் இன் இணைய இதழில் மிக விரிவாக பதிவு செய்துள்ளேன்.
'அறம் வாட்ஸ் அப் சேனல்' இணைப்பில் சென்று வாசித்துக் கொள்ளுங்கள். அதில் உங்களை இணைத்துக் கொண்டால், முந்தைய கட்டுரைகளையும், புதிய கட்டுரைகளையும் தொடர்ந்து வாசிக்கலாம்.
நிர்வாக அரிச்சுவடியே தெரியாத –
அதிகாரிகள் யாரையும் கட்டுப்படுத்தும் ஆளுமை திரானியற்ற –
வெறும் பொம்மையாக வீற்றிருந்து அதிகாரிகள் சொன்ன இடத்தில் கையெழுத்து மட்டுமே போட்டு வந்த
ஒருவரை,
ஐந்தாண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பெற்று இருந்தோம் என்பதை அறியும் போது, அடடா, உண்மையான தற்குறியை கவனிக்க தவறிவிட்டோமே என்பதை உணர்வீர்கள்.
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/share/p/14c7im21vp8/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு