முதலாளித்துவ கட்சிகளுக்குள் எந்தவொரு வித்தியாசமுமில்லை...
சந்திரன் தாமோதரன்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒரு தொகுதிக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்ற தேர்தல் ஆணையத்தின் நியமனம் , கூட்டணிக் கட்சித் தலைவர்களே மாற்றம் குறித்தும், ஆட்சியதிகாரத்தில் பங்கு குறித்தும் பேச ஆரம்பித்திருப்பது போன்ற பல காரணங்களை முன்வைத்து திமுக ஆதரவாளர்கள் வாக்கு இயந்திரத்தில் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாகவும், எண்ணிக்கையில் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாகவும் இணையத்தில் எழுத ஆரம்பித்துள்ளனர்.
ராகுல் காந்தி வாக்கு இயந்திரத்தில் நடைபெற்ற மோசடி குறித்து தொடர்ந்து பேசிய போது , அதை அம்பலப்படுத்தி வந்தபோது, திமுகவோ அதன் கூட்டணிக் கட்சிகளோ ராகுல்காந்தி முன்னெடுத்த போராட்டத்தை தமிழ்நாட்டில் பெரிய அளவில் கொண்டு போகவேயில்லை, அதைப்போலவே SIR திருத்தம் குறித்து மம்தா, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் மேற்குவங்கத்தில் குரல் கொடுத்த போதும், இங்கிருக்கும் அதே இடதுசாரிகள் உட்பட யாரும் பெரிதாக விமர்சிக்கவில்லை.
மாறாக வாக்கு சதவிகிதம் உயர்ந்ததற்கு SIR தான் காரணமென்று அதற்கு நற்சான்றிதழ் கொடுத்தனர். இப்போது தங்கள் வெற்றி பாதிக்கப்பட்டால் அதற்கு இயந்திரமும், எண்ணிக்கையும்தான் காரணமென்றால் இது மக்களிடம் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்திவிடும்.
ஒருவேளை கருத்துக் கணிப்புகள் தவறாக இருந்து, திமுக அறுதிப்பெரும்பான்மை பெற்றுவிட்டால் மேலே சொன்ன குற்றச்சாட்டுகள் பொய்யென்று ஆகி அது ஒன்றிய ஆளும் அரசுக்கும் , அந்தக் கட்சிக்கும் சாதகமாக மாறிவிடாதா ?
தங்கள் வசதிக்கேற்ப பேசுவதுதான் கொள்கை அரசியலா ?
இதைக் கேட்டால் அதிகாரபூர்வமாக திமுக பேசியதா என்பார்கள், விஜய் கட்சிக்கு வாக்களித்த மக்களை திமுக தலைமை அதிகாரபூர்வமாக விமர்சிக்கவில்லை.
ஆனால் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமாக திமுக ஆதரவாளர்கள் பேசினார்கள், பிறகு தலைமை பேசினால் என்ன பேசாவிட்டால் என்ன ?
ஒருவேளை இதற்கு முந்தைய தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்தவர்கள் இந்த முறை தவெகவிற்கு வாக்களித்திருந்தாலோ
அல்லது இந்த முறை தவெகவிற்கு வாக்களித்தவர்கள் அடுத்த முறை திமுகவிற்கு வாக்களித்தாலோ அவர்கள் தற்குறிகளில்லாமல் வேறு வகையான ஆட்களாக மாறிவிடுவார்களா?
இதுதான் பச்சை சந்தர்ப்பவாதம் என்பது.
இது இதோடு நிற்காது
திமுகவோடு இருக்கிற திமுகவை ஐந்து ஆண்டுகள் விமர்சனமின்றி தூக்கிச் சுமந்த கூட்டணிக் கட்சிகள் நாளை எதிர்த்தால் அவர்களும் தற்குறிகள் என்றும் இன்னும் கேவலமாகவும் அவதூறாக விமர்சிக்கப் படப்போகிறார்கள் என்பதன் துவக்கம்தான் இது.
மற்றபடி இங்கு திமுக, அதிமுக, தவெக, பாஜக இன்னபிற முதலாளித்துவ கட்சிகளுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை, அனைத்தும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதற்கும்,
அதன் மூலம் தங்கள் ஆட்சியதிகாரத்தையும், வளர்ச்சியையும் மேம்படுத்திக் கொள்வதற்கும்
மக்களை ஒட்டச்சுரண்டவுமே பயன்படுகிறவையே.
ஜெயகாந்தன் ஒருமுறை கூறியது போல " வணிகப்பத்திரிக்கைகளின் அட்டையை கிழித்துவிட்டால் உள்ளே இருக்கும் பக்கங்களுக்கிடையில் எந்த வித்தியாசமும் இல்லை " என்றாரே அதேதான் இந்தக் கட்சிகளுக்கும் பொருந்தும்.
நாளை தேர்தல் முடிவுகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வெற்றி பெறுபவர்கள், தோற்றுப் போகிறவர்கள் எல்லாத்தரப்பும் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது, வளர்த்துக் கொள்வது என்பதையெல்லாம் முதலாளித்துவவாதிகளின் துணைகொண்டு சிறப்பாக செய்து கொள்வார்கள்.
ஆனால் என்ன நடந்தாலும் உழைக்கிற மக்களுக்கு மென்மேலும் துன்ப துயரங்கள் அழுத்தவே செய்யும். எனவே உழைக்கிற மக்களுக்கு நாளை மற்றுமொரு நாளே!
சந்திரன் தாமோதரன்
https://www.facebook.com/share/p/1ALeRVJusR/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு