அல்லாடும் புலம்பெயர் தொழிலாளர்கள்

மஞ்சுளா G

அல்லாடும் புலம்பெயர் தொழிலாளர்கள்

திருவள்ளுவர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் அமைந்துள்ள  செயின்ட் பீட்டர்&பால் கடல் உணவு(இறால்) பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் கடந்த 21ம் தேதி ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவினால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர் சுவாசக் கோளாறு, கண் எரிச்சல் மற்றும் மூக்கு, வாய் பகுதிகளில் இரத்தப்போக்கு போன்ற கடும் பாதிப்புகளுக்கு உள்ளானர்கள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 83 தொழிலாளர்களில், 28பேர் உடல்நலம் தேறி வெளியேறி உள்ளதாகவும், 40பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதில் 29 தொழிலாளர்கள் உடல்நிலை சீராக உள்ளதெனவும் தமிழக அரசின் ‘மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுதுறையின்’ தகவல் தெரிவிக்கிறது. 

கடந்த 21ம் தேதியிலிருந்து 26ம்தேதி வரையிலான காலத்தில் 15பெண்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 12பேர் ஒடிசாவையும் 2பேர் அசாமையும் ஒருவர் ஜார்கண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். உயிரிழந்த 13பேரின் உடல் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு அவரவர் மாநிலத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிறுவன உரிமையாளரும் மேலாளரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை மூடப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக தமிழக அரசு அமைத்த மூவர் குழு தனது முழு அறிக்கையை ஜூன் 25ம் தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. கடந்த 2025 டிசம்பரில் அதாவது, 6மாதங்களுக்கு முன்பாக இந்நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிமீறல் குறித்து தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் எச்சரிக்கை செய்ததை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

அம்மோனியா குழாய்அமைப்பு முறையாக பராமரிக்கப்பட்டு மாதத்திற்கு ஒருமுறை பரிசோதிக்கப்பட வேண்டும் என்ற குறைந்தபட்ச விதிமுறையை கூட இந்நிறுவனம் முறையாக கடைபிடிக்காததும் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த உரிய சான்றுகள் பெறாததையும் பாதுகாப்பு சென்சார் எச்சரிக்கை அமைப்புகள், தொழில்சார் மருத்துவ மையம் அமைக்கப்படாதது குறித்தும் அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பதாக தெரிகிறது. 

அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளதாகவும் தமிழகம் முழுவதுமே இத்தகைய அபாயகரமான நிறுவனங்களை கண்காணிக்க கூடிய வகையில் தொழிலாளர் நலத்துறை ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவுகளும் வழிகாட்டுதல்களும் அவ்வறிக்கையில் தரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மூவர் குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேசமயம், புலன்பெயர் தொழிலாளர்கள் தற்சமயம் எதிர்கொண்டு வருகின்ற பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து மாநில அரசுகள் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டும் என்பது தொழிலாளர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. 

இந்நிறுவனத்தின் உணவு பதப்படுத்தும் பிரிவில் 186 பெண்களும், 119 ஆண்களும் பணிபுரிந்து வந்துள்ளனர். அதில் 128 பெண்களும் 101 ஆண்களும் பிற மாநிலங்களைச் சார்ந்தவர்கள். இதில் 115பேர் ஒடிசா, 69பேர் அசாம், 12பேர் ஜார்கண்ட் மற்றும் பிற மாநிலங்களைச் சார்ந்த 12 தொழிலாளர்கள்  என்பதான விவரம் வெளிமாநிலத்தை சார்ந்தவர்களே அதிகம் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

வாயு கசிவிற்குபின் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்ப விருப்பம் தெரிவிப்பதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் அதேவேளையில் பல தொழிலாளர்கள் இங்கேயே தொடர்ந்து வேலைபார்க்க விருப்பப்படுகின்றனர் எனவும் கூறப்படுகிறது. இரண்டுமே பகுதி உண்மை என்றபோதும் அரசானது ஒடிசா மாநிலத் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக அனுப்புவதும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜார்கண்ட் மாநிலத் தொழிலாளர்களை வீடுகளுக்கு அனுப்பாமல் காத்திருக்க வைத்திருப்பதும் குறிப்பாக, தகவல்களை முறையாக தொழிலாளர்களுக்கு அளிக்காததும் தொழிலாளர்களை பெருந்துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இறந்த பத்து பெண்களில் குமானியும் ஒருவர். 15வயது சிறுமியான இவர் ரூ15000 சம்பளம் அளிக்கப்படும் என்பதை நம்பி ஒடிசாவின் பழங்குடி கிராமம் கியோநிகரிலிருந்து 5மாதங்களுக்கு முன்பு வேலையில் சேர்ந்தவர். குமானியின் உடல் ஒடிசாவிற்கு அனுப்பட்ட விவரம் அவரது அண்ணன் வித்தியாகர் ஜூங்காரவுக்கு முறையாக தெரிவிக்கவிக்கப் படவேயில்லை. ஆந்திராவில் பணிபுரிந்து வரும் வித்தியாகர் தனது தங்கையின் உடலை பெற இரண்டு நாட்களாக திருவள்ளுவர் நிவாரண முகாமில் காத்திருந்த நிலையில் அவருக்கே தகவல் தெரிவிக்காமல் உடல் அனுப்பப்பட்டுள்ளது. 

விசாரணையே முறையாக துவக்கப்படாத நிலையில் 62 ஒடிசா தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக ரயிலில் ஏற்றிவிடப்பட்டுள்ளனர். ரயிலில் இருந்த ஒரு தொழிலாளியின் மனைவி இறந்துக் கொண்டிருந்த தருணத்தில் கணவரோ புவனேஸ்வர் சென்றடைந்து விட்டார். மனைவி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் கொஞ்சமும் இரக்கமின்றி கணவர் வலுகட்டாயமாக அனுப்பப்பட்டது ஏன்? 

தீவிர சிகிச்சை பிரிவில் அக்கா பத்மினி சிகிச்சை பெறும் நிலையில் அவரது தம்பி பரத் ஜூவாங்கா அவரது விருப்பத்திற்கு மாறாக ஒடிசா செல்லும் ரயிலில் ஏற்றப்பட்டார். அக்கா நலமுடன் இருப்பதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை என்கிறார் பரத். ஏன் இத்தனை குளறுபடிகள்?

ஒடிசா தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக ஒருபுறம் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஜார்கண்ட் தொழிலாளர்களோ எந்தவித தகவலும் முறையாக அவர்களுக்கு வழங்கப்படாமல் 5 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முதலமைச்சர் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

வேலை வாய்ப்பு முகமை ஆட்கள் தொழிலாளர்களை அணுகி வேலை வாய்ப்புகளை வழங்க தயாராக இருந்ததாக பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் உள்ளே அமர்ந்துள்ள ஒரு இடைத்தரகர் தொழிலாளர்களை உடனடியாக வேறு நிறுவன பணிகளுக்கு செல்ல வலியுறுத்துவதாகவும் இல்லையெனில் உரிய நிவாரணங்களை பெற்றுத் தர இயலாது என மிரட்டுவதாக களத்தில் உள்ள வழக்கறிஞரும் தோழருமான ஸ்ரீலா கூறுகிறார்.  

வாயு கசிவு காரணமாக பெருமளவில் உயிரிழந்தவர்கள் ஒடிசா மாநிலத் தொழிலாளர்கள்தான். பாதிப்பிற்கு உள்ளாகாத ஒடிசா மாநிலத் தொழிலாளர்கள் பலர் உடனடியாக ஒரு புதிய வேலையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.  அதற்கான காரணம் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சக தொழிலாளர்கள் பலர் மருத்துவனையில் இன்னும் சிசிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்கள் எந்த மருத்துவமனையில் இருக்கிறார்கள் என்ற தகவல் கூட தெரியாத நிலையும் அவர்களை பார்க்க கூட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பதுமே அவர்களின் தற்போதைய பெருந்துயரமாக உள்ளது. 

உதாரணமாக, இதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சிமா சுங்காவை சில மாதங்களுக்கு முன்புதான் காதலித்து மணம் செய்த சுமான்தா, தன் மனைவி நினைவிழந்த நிலையில் ஏதோ ஒரு மருத்துவனையில் இருக்கிறார் என்பதை மட்டுமே அறிந்துள்ளார். தன் மனைவி நலமுடன் திரும்பிய பிறகே தன்னால் வேலையை பற்றி யோசிக்க முடியும் என மனம் நொருங்கிய நிலையில் புதிய வேலைவாய்ப்பை மறுத்துள்ளார். பொதுவில் பழங்குடிகள் என்பவர்கள் அறிவற்ற மக்கள் என்பதாகவும் தாங்கள் சொல்வதை கேட்டு அவர்கள் நடக்கவேண்டும் என்ற அதிகார மனநிலையே அங்கு நிலவுவதாக தெரிகிறது.

மாற்று வேலை தருவது அவசியம் எனினும் குறைந்தபட்ச கால அவகாசம் கூடத் தராமல் வேலை முகாமை ஆட்கள் தொழிலாளர்களை பணியில் சேர்த்துக் கொள்ள அங்கு வட்டமிடுவது ஏன்? வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்படுவது ஒன்றே தீர்வா? போதிய நிவாரணம் அனைவருக்கும் அளிக்கப்பட்டு விட்டதா? கட்டாயப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுவது ஏன் என்பதற்கான முறையான பதில்களை அரசு தெரிவிக்க வேண்டும்.

முதற்கட்ட விசாரணையில் 14முதல் 18வயதுக்குட்பட்ட ஐந்து தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. உயிரழந்தவர்களை அடையாளம் காணுவதிலும் சிரமங்கள் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கிராமப்புற அல்லது பழங்குடியின மலைகிராம பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை வேலைவாய்ப்புக்காக அழைத்துச் வரும் முகவர்கள் முறையான உரிமம் பெற்று இடப்பெயர்வு குறித்த தகவல்களை தெரிவிக்க வலியுறுத்தும், சட்டபூர்வ உத்தரவுகள் இருப்பினும் அவை ஏதும் பின்பற்றப்படுவதில்லை என்பதையும் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்பதையும் இச்சம்பவம் வெளிக்கொணர்ந்துள்ளது. 

இச்சம்பவம் திடிரென நிகழ்ந்த விபத்தல்ல. குறைந்த கூலியுடன் உயிருக்கு கூட உத்தரவாதமில்லாமல் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பதற்கு நேரடி அத்தாட்சியாக இச்சம்பவம் அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் இது போன்று எத்தனை தொழிலாளர்கள் உள்ளனர்? அவர்கள் யாரால் வரவழைக்கப்பட்டு இங்கு பணிநிமித்தம் செய்யப்படுகிறது? எத்தனை இடைத்தரகர்கள் உள்ளனர்? தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் அளிக்கப்படுகிறது? பணிக்கொடை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்படுகிறதா? 

பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழகம் வாழ்வளிப்பதாக ஒரு பிம்பம் இங்கு கட்டியெழப்ப படுகிறது. தமிழக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளித்தால் அவர்கள் விரைவில் குறைந்த கூலிக்கு எதிராகவும், பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிராகவும் போராடுவார்கள் என்பதை உணர்ந்தே முதலாளிகள் புலம்பெயர் தொழிலாளர்களை பணியமர்த்துகின்றனர். திருவள்ளுரில் இந்த தொழிற்சாலை துவங்கப்பட்ட ஆரம்பகாலங்களில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணிபுரிந்ததாகவும் குறைந்த கூலி, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட பாதுகாப்புகள் அளிக்கப்படாததால் பணியிலிருந்து விலகியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

வாரத்தில் 7நாட்களும் காலை 9மணிமுதல் இரவு 9மணி வரை விடுமுறை ஏதுமின்றி 12மணிநேரம் வேலை செய்ததாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஒருநாள் ஓய்வு பெற வேண்டுமெனில் முன்னதாக இரட்டை பணி செய்ய வேண்டும் அதற்கு கூடுதல் ஊதியமும் கிடையாது. சம்பளம் வெறும் 13000 மட்டுமே தரப்பட்டுள்ளது என அவர்களோடு களத்தில் இருக்கும் தோழர் ஸ்ரீலா தெரிவிக்கிறார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம், ஏமன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் இலாபமீட்டும் செயின்ட் பீட்டர்&பால் நிறுவனத்தில் எந்த அளவிற்கு சுரண்டல் நடைபெற்றது என்பதை ஒடிசா சென்ற தொழிலாளர்கள் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டிகள் அம்பலப்படுத்துகின்றன. மாதச் சம்பளம் 15000 தருவதாக உறுதியளிக்கப்பட்டு சேர்க்கப்பட்டாலும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து உணவிற்கான பிடித்தம் மற்றும் ஒருநாள் விடுப்பு எடுத்தால் கூட ரூ1000 ஊதிய பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலாளர் தங்களுடைய ஆதார் அட்டைகளை திருப்பி தரவில்லை எனவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர், 

உயிருக்கு கூட உத்தரவாதமில்லாத நிலைமைகளும் கடும் சுரண்டலும் பணிபாதுகாப்பு இல்லாமலும் அல்லல்படும் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைகளில் தனி கவனம் செலுத்துவதோடு அனைத்து தொழிலாளர்களையும் ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளை தொழிற்சங்கங்கள் முன்னெடுக்க வேண்டும். 

அம்மோனியா கசிவு குறித்து ஊழியர்கள் தொடர்ந்து புகாரளித்தும் ஆலை நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது. தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வது, ஆபத்துகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை அமலாக்குவது என்பது ‘தமிழ்நாடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின்’ பொறுப்பாகும். ஆனால் இயக்கக அதிகாரிகள் மேலேயே லஞ்சப் புகார்கள் உள்ளன. தமிழக அரசு உடனடியாக இயக்ககத்தை மறுசீரமைக்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மஞ்சுளா G

https://www.facebook.com/share/p/1NWP4QMz2N/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு