ஆத்திரத்தில் அள்ளித் தெளித்த முரசொலியின் அவதூறுகள் - க.கனகராஜ்
தீக்கதிர்
திமுக ஏடான முரசொலியில் “பெ. சண்முகத்தின் உண்மை முகம்” என்று மூன்று பகுதிகளாக ஒரு தொடர் எழுதியிருக்கிறார்கள். தோழர் பெ. சண்முகம் தனிநபர் அல்ல; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலச் செயலாளர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், முதலாளித்துவக் கட்சிகளைப் போல எந்த உயர் பொறுப்பில் இருப்பவரும் தானடித்த மூப்பாகத் தன் கருத்தைக் கட்சியின் கருத்தாகச் சொல்லிவிடுவதில்லை.
1996-ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி சார்பில் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் அடையாளமாக விளங்கிய தோழர் ஜோதிபாசு அவர்கள் பிரதமர் பொறுப்பிற்கு முன்மொழியப்பட்டார். தோழர் ஜோதிபாசுவும் அப்போது பொதுச் செயலாளராக இருந்த விடுதலைப் போராட்ட வீரர் தோழர் சுர்ஜித் அவர்களும் அதை ஏற்கலாம் என்றனர். ஆனாலும், மத்தியக்குழு அதை நிராகரித்தது. இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாண்பு. ‘தலைவர் ஆணைப்படி கட்சி முடிவு’ என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அல்ல. கட்சியின் கூட்டு முடிவை அமல்படுத்துவதே தலைவரின் பொறுப்பு. இப்படி ஒரு நிகழ்வு வேறு எந்தக் கட்சியிலும் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா? எனவே, முரசொலியின் கேள்விகள் தோழர் பெ. சண்முகத்தைக் குறிவைத்து எழுதப்படுவது என்பது மார்க்சிஸ்ட் கட்சியைப் பற்றிய புரிதலற்ற தன்மை; தோழர் சண்முகத்தின் மீதான தனிப்பட்ட வன்மம் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
தவெக ஆதரவும் புறநிலை எதார்த்தமும்
தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஒரு புதிய சூழல். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. தவெக தனிப்பெரும் கட்சி. அப்போது முன்னுக்கு இருந்தது மூன்றே வழிமுறைகள்தான்:
1. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது.
2. திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது.
3. எவரும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்கவில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும்; இல்லையென்றால் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்வது.
இந்த மூன்றில், முதலாவதே சரியானது எனத் தேர்ந்தெடுத்தோம். பாஜக ஆட்சி அமைந்துவிடவில்லை அல்லது உடனடியாகத் தேர்தல் வரவிடாமல் தடுத்துவிட்டோம் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை. தேடிவந்த அமைச்சர் பொறுப்பைக் கூட நிராகரித்துத்தான் நாங்கள் ஆதரவு அளித்தோம் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இதில் நாங்கள் மகிழ்ந்திருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு கல்லெறிவது நிதானமற்ற மனநிலையையே காட்டுகிறது. இந்த மூன்றும் உலகப் பம்மாத்து என்று முரசொலி கருதினால் பம்மாத்து இல்லாத நான்காவது, ஐந்தாவது வழிமுறை ஏதாவது இருந்தால் சொல்லட்டும்.
இப்போது மட்டுமல்ல, 2006-ஆம் ஆண்டு தனிப்பெரும் கட்சியான திமுக ஆதரவு கேட்டபோது அப்போதும் எந்த சுயநலமுமின்றி ஆதரவுக் கடிதம் கொடுத்தோம் என்பதை முரசொலிக்கு இப்போது நினைவுபடுத்த வேண்டியதில்லை. இப்போதும் எங்களின் மே 8 தவெக ஆதரவு நிலைப்பாடு சரியானது என்றே கருதுகிறோம். அதைப் பொதுவெளியில் கொண்டு சேர்ப்பது செயலாளரின் பணி; அதைத்தான் தோழர் சண்முகம் செய்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் வர்க்கக் கொள்கை
திராவிடக் கட்சிகளின் ஆட்சி என்பதற்காக நாங்கள் கட்சி நடத்தவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உழைக்கும் வர்க்கங்களின் ஆட்சியை உருவாக்குவதுதான் எங்களின் நோக்கம். இந்தியா இன்றைக்கு எதிர்கொள்ளும் மிகப்பெரிய நவ பாசிசப் பேரிடரான பாஜகவை எங்களால் மட்டுமே தேர்தல் ரீதியாக வெற்றி கொள்ள முடியாது என்கிற காரணத்தினால்தான் தேர்தல் உடன்பாடுகளை நாங்கள் வைத்துக் கொள்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கான அடிப்படையான சித்தாந்தக் காரணங்களில் ஒன்று காங்கிரஸ் உடனான அணுகுமுறை தொடர்பானது. பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் பிரதிநிதியாக விளங்குகிற, அந்நிய மூலதனத்துடன் இந்த பெருமுதலாளிகளின் நலனுக்காகச் சமரசம் செய்து கொள்கிற கட்சி காங்கிரஸ் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.
ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பிறகு முதல் முறையாக ஒரு புதிய சூழல் 2004-இல் ஏற்பட்டது என்பதை நாம் அறிவோம். காங்கிரஸ் 145 இடங்களிலும், பாஜக 138 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.இந்தியாவில் மிகப்பெரிய பேரிடராக, பெருநோயாக, கேடாக வளர்ந்துவிட்ட நவ பாசிச சங்பரிவார சக்தியை ஆட்சியில் அமரவிடக் கூடாது என்பதற்காக ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, அமைச்சரவையில் பங்கு என்று எந்தக் கோரிக்கையும் வைக்காமல் நாங்கள் ஆதரவு கொடுத்தோம். அந்த முடிவின் மூலம் இந்திய மக்களின் நலன் பாதுகாக்கப்பட்டிருக்கிறதா என்பது மட்டும்தான் எங்கள் நோக்கமாக இருந்தது. அது பம்மாத்து கிடையாது; பம்மாத்து செய்யவும் எங்களுக்குத் தெரியாது.
முரசொலியின் திரிப்புகள்
போகிற போக்கில் “பாஜக ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை மீண்டும் மம்தா ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று நினைத்தார்களே அதேபோல” என்று ஓர் அளப்பைச் செய்துவிட்டுப் போகிறது முரசொலி. அவசரநிலைக் காலத்தில் திமுக தலைவர்கள் தமிழ்நாட்டில் அனுபவித்ததை விட மேற்கு வங்கத்தில் பல மடங்கு அதிகமாக அடக்குமுறைகளையும், படுகொலைகளையும் துயரங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், ஊழியர்களும் அனுபவித்தார்கள். அன்றைய காங்கிரஸ் ஆட்சியை அரைப் பாசிச ஆட்சி என்றே வரையறுத்தோம். தேசத்தின் நலன் கருதி அன்று காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்த நாங்கள், மம்தாவைத் தோற்கடிக்க பாஜகவை ஆதரித்தோம் என்று சொல்வது எத்தனை பெரிய அவதூறு என்று தெரிந்தே முரசொலி நெஞ்சறிந்து பொய் சொல்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தவொரு கட்சியையும் ஆதரித்து ஆட்சிப் பொறுப்பில் அமர வைப்பதற்காக உருவாக்கப்படவில்லை. தன்னுடைய சொந்த ஆட்சியை, அதன் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை, அதன் மூலம் இந்தியாவில் சாதி, மதம், பொருளாதாரம், இனம், மொழி என்று எல்லா வேறுபாடுகளையும் களைந்து ‘எல்லோருக்கும் எல்லாமும்’ கிடைக்கிற ஒரு சோசலிச சமூகப் பொருளாதார ஒழுங்கமைவை உருவாக்குவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. அதில், இந்தியாவில் உள்ள அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையையே அது முன்வைக்கிறது. இன்றைய முதலாளித்துவ அமைப்பிற்குள் சில சீர்திருத்தங்களைச் செய்ய முடியுமே தவிர, முழுமையான - அனைவருக்குமான ஒரு சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவது சாத்தியமில்லை என்று கருதுகிறது.
முதலாளித்துவக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னையே முன்னிறுத்துவதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நோக்கம். இதில் தோழர் பி. ராமமூர்த்தியும், இ.எம்.எஸ்.-சும், கே. பாலகிருஷ்ணனும், இப்போது ஏதோ ஒரு கிளையில் இந்த நோக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் எளிய - ஆனால் மார்க்சியத்தைப் புரிந்துகொண்டு மனிதகுலத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற ஒரு தோழர் வரை அனைவருக்கும் ஒரே நோக்கம்தான். ஆனால், இடையில் இருக்கும் மிகப்பெரிய பேரிடரை எதிர்கொள்வதற்காக இந்தத் தேர்தல் உடன்பாடுகளே தவிர, எவருக்கும் பல்லக்கு தூக்குவது எங்கள் நோக்கம் அல்ல. காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு ஆதரவளித்தபோது திமுக பல்லக்கு தூக்கியதாக நாங்கள் ஒருபோதும் கூறியதும் இல்லை. ஆனால், முதலாளித்துவக் கொள்கைகளுக்குப் பல்லக்கு தூக்குவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் அணியில் இருந்தாலும், எதிரில் நின்றாலும் அதை எதிர்த்துச் சமர்புரிவதில் நாங்கள் எப்போதும் சளைத்தவர்கள் அல்ல. எவரும் எங்களுக்கு இணையாக அந்தச் சமரைப் புரிந்தவர்களும் இல்லை என்பதை நாடறியும்; முரசொலி நாளேடும் அறியும்.
மக்கள் நலக் கூட்டணியும் சமகால விமர்சனங்களும்
முன்னெடுத்த குறைந்தபட்சச் செயல்திட்டத்தின் அடிப்படையிலான ஒரு முயற்சி. அது சரியான முயற்சி. அந்த முயற்சியில் நாங்கள் வெற்றிபெறவில்லை என்பது ஓர் உண்மைதான். தோற்ற முயற்சியெல்லாம் தவறு என்றால் உலகத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்காது. அந்த முயற்சியை நாங்கள் தொடர முடியாமல் போனதற்கான காரணம் நவ பாசிச பாஜக இந்தியாவைச் சூழ்வது தீவிரப்பட்டதுதான். பாஜகவுக்கு எதிராக நிற்போரில் அவர்களைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்புள்ள அணியில் இணைந்தோம் என்பதைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லை.
நாங்கள் முடிவெடுத்த மே 8-ஆம் தேதியன்று காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கவில்லை. அதன்பிறகு நம்பிக்கை கோரும் தீர்மானத்தையொட்டி அதிமுகவில் பிளவு ஏற்படுத்துவதற்கும், ஆதரவைப் பெறுவதற்கும் தவெக முயற்சிப்பதாக அறிந்தபோது நாங்கள் அதைப் பகிரங்கமாகவே விமர்சித்தோம். எனவே, ஒரு குறிப்பிட்ட சூழலில் எடுக்கப்பட்ட முடிவை அதற்குப் பின்பு நடைபெற்ற நிகழ்வுகளை வைத்து நீங்கள் இல்லையென்றாலும் அது நடந்திருக்கும் என்று சொல்வதுதான் ஊரை ஏமாற்றும் பசப்புவாதம். ‘கொள்கை புடலங்காய் ஏதுமில்லை’ என்பது போன்ற தடித்த வார்த்தைகள் வாதிடுவதற்குச் சாரமில்லாத காரணத்தினால் விரக்தியில் வசைபாடல் என்பதைத் தாண்டி சொல்வதற்கு ஏதுமில்லை.
அடுத்ததாக, தவெகவின் வர்க்க நிலைப்பாடு என்ன? யார் கேட்டாலும் ஆதரவு கொடுத்துவிடுவீர்களா? அவர்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? எந்தச் சக்திகள் சூழ்ந்திருக்கிறது? அதெல்லாம் தெரியாதவரா? என்ற கேள்விகளை எழுப்பி, தேர்தலுக்கு முன்பு தவெக குறித்து மார்க்சிஸ்ட் கட்சி வைத்த விமர்சனங்களையெல்லாம் பட்டியலிட்டு, “இவர்களுக்கா உங்களது ஆதரவு?” என்று கேள்வி கேட்டிருக்கிறது முரசொலி. திமுகவின் வர்க்க நிலைப்பாடும் நாங்கள் அறிந்ததே; அது எங்கள் நிலைப்பாட்டிற்கு இயைந்தது அல்ல என்று தெரிந்துதான் திமுகவுடனும் நாங்கள் தேர்தல் உடன்பாடு கொண்டிருந்தோம்.
தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் எங்களுக்கு இருந்த மூன்று வாய்ப்புகளை ஆய்ந்து சரியானது என்று எங்கள் கட்சி தவெகவிற்கு வெளியிலிருந்து ஆதரவு என்கிற முடிவை எடுத்தோம். எனவே, தேர்தலுக்கு முந்தைய தவெக மீதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனங்களைச் சொல்லி, தேர்தலுக்குப் பிந்தைய இதுவரை சந்தித்திராத ஒரு சூழ்நிலையில் எடுத்த முடிவை விமர்சிப்பது சரியா? இப்படி விமர்சிக்கப் புகுந்தால் அந்த விமர்சனத்திலிருந்து எந்தக் கட்சியும் தப்பாது.
அதேபோன்று தேர்தலுக்குத் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டது என்று ஒரு குற்றச்சாட்டை முரசொலி முன்வைக்கிறது. பாஜக எதிர்ப்பு என்பதில் நாங்கள் உறுதியுடன் இருந்தோம். அந்த நிலைப்பாட்டில் பாஜக ஆதரவு, பாஜக எதிர்ப்பு என்று நிலைப்பாடுகளை இதர கட்சிகள் மாற்றி மாற்றி எடுத்ததையொட்டி, பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்த கட்சியுடன் உடன்பாடு கண்டிருக்கிறோம். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜக எதிர்ப்பு என்கிற ஒரே நிலைப்பாட்டில்தான் இருந்திருக்கிறது; மற்றவர்கள்தான் மாறியிருக்கிறார்கள்.
அதேபோன்று, வாச்சாத்தியைக் குறிப்பிட்டு “செங்கோட்டையனோடு கைகுலுக்க முடிகிறதா?” என்று கவலையோடு கேட்டிருக்கிறது முரசொலி. எங்கள் தோழர்களைப் படுகொலை செய்யாத, பழிவாங்காத, அவதூறு செய்யாதவர்கள் உள்ள கட்சி என்று தேடினால் எந்தக் கட்சியும் மிஞ்சாது. இறப்பே நடக்காத வீட்டில் சாம்பல் வாங்கிக் கொண்டு வா, இறந்த உன் குழந்தையை எழுப்பித் தருகிறேன் என்று சொன்னதற்கு ஒப்பாக அது முடிந்துவிடும். ஒரு குறிப்பிட்ட சூழலில் முன்னுக்கு வரும் பிரச்சனையின் அடிப்படையில் அந்த நேரத்தில் அதை எதிர்கொள்வதற்காக இருப்பதில் சிறந்தது அல்லது இருப்பதில் பாதகம் குறைந்தது என்று ஒட்டுமொத்தமாக முடிவு எடுக்கிறோமே தவிர, ஒரு கட்சியில் உள்ள ஒவ்வொரு நபரும் புனிதராக இருக்கிறாரா என்று தீர்மானித்து முடிவெடுக்கவில்லை. அப்படி முடிவெடுத்தால் அது திமுகவிற்கும் பொருந்தும்.
திராவிட இயக்க மதிப்பீடும் வர்க்க முரண்பாடும்
பல இடங்களில் திராவிட இயக்க வெறுப்பு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது ஒரு பழியாகச் சுமத்துகிறது முரசொலி. திராவிட இயக்கத்தைப் பற்றிய முழுமையான ஒரு பரிசீலனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. அதில் “இன்று தமிழ்நாட்டில் நாம் இந்துத்துவாவின் பெரும் தாக்குதலைச் சந்திக்கும் வேளையில்,திராவிடச் சித்தாந்தம் மற்றும் இயக்கத்தின் தாக்கமும், பாரம்பரியமும் இந்துத்துவத்தின் பகுதியான மனுவாத, பிராமணிய மதிப்பீடுகளை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. தமிழகத்தில் இந்துத்துவா முழுமையாகக் கால் ஊன்ற முடியாமல் இருப்பதற்கு, தமிழகத்தில் அதற்கு எதிரான சமூக மூலதனம் உள்ளது என்பது முக்கியக் காரணம். கேரளாவில் இடதுசாரி இயக்கம் இந்தப் பங்கை ஆற்றுகிறது. மதச்சார்பற்ற, ஜனநாயக மதிப்பீடுகளை அழிக்க ஆர்.எஸ்.எஸ்., மதத்தை, சாதியைப் பலவிதங்களில் பயன்படுத்தும். இந்த இடத்தில் திராவிட இயக்கத்தின், சித்தாந்தத்தின் நேர்மறை அம்சங்களைப் பயன்படுத்த வேண்டும், அதற்காக இந்தச் சக்திகளுடன் இடதுசாரிகள் ஒத்துழைக்க வேண்டும்” என்று மதிப்பீடு செய்துள்ளோம்.
ஆனால், அதேசமயத்தில் தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட நிலப்பிரபுத்துவ குணாம்சங்களில் திராவிடக் கட்சிகளிடம் உள்ள பலவீனத்தைத் திமுக மறுக்க முடியுமா? அதன் தலைமை, அதன் கொள்கைகள் எவ்வாறு இருந்தபோதும் களச்செயல்பாட்டில் நிலைமை அதற்கு நேர்மாறாக இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
அதேபோன்று மூலதனத்தை ஈர்ப்பதற்கு வழங்கும் சலுகைகள், அதற்காகத் தொழிலாளர்களின் நலன் பாதிக்கப்படுவது, அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்காகப் போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகளைப் பறிக்க முனைவது ஆகியவற்றில் திராவிடக் கட்சிகளோடு முரண்பட்டுத்தான் நிற்கிறோம். முரண்பட்டு நிற்பதுதான் எங்களின் தனித்தன்மை. அதைத்தான் சாம்சங் போராட்டத்தில், 8 மணி நேர வேலை திருத்தச் சட்டத்தில் பார்த்தோம்.
எனவே, திராவிட இயக்கம் உருவாக்கி வைத்திருக்கிற சமூகக் கருத்தியல் வளங்களை ஆதரிப்பதில், அதை வலுப்படுத்துவதில் திராவிட இயக்கங்களோடு உறுதியாக இணைந்து நிற்போம். அதேநேரத்தில், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அணுகுமுறையை அந்த இயக்கங்கள் கடைப்பிடிக்கும்போது அவற்றை எதிர்த்துப் போராடுகிறோம். இந்த புரிதலோடுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைய வேண்டியதில் இணைந்தும், விமர்சிக்க வேண்டியதை விமர்சித்தும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும், போராட வேண்டியதில் போராடியும் கம்யூனிஸ்ட்டுகள் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
முரசொலி அவதூறுகளை வீசுவதால் திராவிட இயக்கத்தின் கடந்த கால நேர்மறையான பங்களிப்புகளை நாங்கள் மறுதலிக்கப்போவதுமில்லை; வன்மத்தோடு தரம் தாழ்ந்து அவர்கள் விமர்சிப்பதால் திமுகவின் தவறான நிலைப்பாடுகளை விமர்சிக்காமல் இருக்கப் போவதுமில்லை.
மக்கள் தீர்ப்பும் கேரள எதார்த்தமும்
அடுத்து, தேர்தல் முடிவுகளை வைத்து சில கேள்விகளை முரசொலி எழுப்பியிருக்கிறது. தவெகவிற்கு 108 சீட்டுகள் கொடுத்தது மக்கள் தீர்ப்புதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்ற இடங்களில் தவெகவை நிராகரித்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்ததும் மக்கள் தீர்ப்புதான். நோட்டாவிற்கு கொடுத்ததுகூட மக்கள் தீர்ப்புதான். ஆனால், இந்தத் தீர்ப்பு தனிப்பட்ட எவருக்கும் பெரும்பான்மையைத் தரவில்லை என்பது தான் உண்மை. கிடைத்ததில் அதிகம் தவெகவிற்குத்தான்.
அவர்கள் ஓர் உறுதிமொழி அளித்திருக்கிறார்கள்; எழுத்துப்பூர்வமாகவும் கொடுத்திருக்கிறார்கள் — மதச்சார்பற்ற ஆட்சியாகத்தான் இருக்கும் என்று; அதனடிப்படையில் தான் செயல்படுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் மாற்றம் வந்தால் விமர்சிப்போம், எதிர்ப்போம்; அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கடந்த ஆட்சியில் நல்ல கூறுகளை நாங்கள் பட்டியலிட்டதை முரசொலி சுட்டிக்காட்டுகிறது. பட்டியலிட்டவையெல்லாம் உண்மைதான்; அதை உரத்தே இன்னும் சொல்லுவோம்; அதில் எந்தத் தயக்கமும் எங்களுக்கு இல்லை. உண்மையில் கடந்த ஐந்தாண்டுகளில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சங்பரிவாரத்திற்கு எதிராக மிகச்சிறப்பான நிலை எடுத்து மதச்சார்பின்மையையும், மாநில உரிமைகளையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்காகப் பிரச்சாரம் செய்தார் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் ஏதுமில்லை. அதை இப்போதும் சொல்வோம்.
அதேபோன்று அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக நம் இரு இயக்கங்களும் இணைந்து போராடினோம் என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு உண்மை அரசமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட சங்கம் சேரும் உரிமையை நிலைநாட்டுவதற்காக திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட வேண்டியிருந்தது என்பதும். மே தினத்திற்கு விடுமுறை அளித்ததற்காக, மே தினப்பூங்கா என்று பெயர் சூட்டியதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று கன்னிமாரா நூலகத்தில் மாமேதை மார்க்சுக்குச் சிலை வைத்ததற்காகத் திமுகவை இப்போதும் பாராட்டுகிறோம். அதேவேளையில், மே தினத்தின் உயிர்ப்பாகவும், அடிநாதமாகவும், முதுகெலும்பாகவும் இருக்கிற வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து நீட்டிக்கத் திமுக சட்டம் இயற்றியதை எதிர்த்தோம். ஒருவேளை அது விலக்கிக்கொள்ளப்படாமல் இருந்திருந்தால் எப்போதும் விமர்சித்துக்கொண்டே இருந்திருப்போம். “கூட இருந்தால் மொத்தமும் சரி, விலகி இருந்தால் மொத்தமும் தவறு” என்கிற அணுகுமுறை எப்போதும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இல்லை. அப்படி யாரும் எதிர்பார்த்தால் அதற்கு மார்க்சிஸ்ட் கட்சி இணங்காது.
அடுத்ததாக, நவதாராளமய பொருளாதாரக் கொள்கையைத் திமுக ஆட்சி கடைப்பிடித்ததாம், அதனால் தோற்றுப்போனதாம் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனத்தை, “கேரளாவில் அதனால் தான் தோற்றுப்போனீர்களா?” என்று கிண்டலோடு முரசொலி கேள்வியெழுப்பியிருக்கிறது. அத்தோடு சேர்த்து, கேரளாவில் அதானி குழுமத்தின் முதலீடுகளை மார்க்சிஸ்ட் கட்சி அனுமதித்தது, முதலமைச்சர் பினராயி விஜயனும், மோடியும், அதானியும் ஒன்றாக நின்று பேசிக் கொண்ட படம் வெளியானது என்று முரசொலி ஏடு குற்றம்சாட்டுகிறது.
முதலாவதாக, இந்தியாவில் “முன்னேறிய தொழில்நுட்பம் பெறவும், உற்பத்தித் திறன்களை மேம்படுத்தவும் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும். ஒட்டுமொத்த பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு நிதி மூலதனத்தின் தடையற்ற வருகை கட்டுப்படுத்தப்படும்” என்றுதான் நேரடி அந்நிய மூலதனம் குறித்தே மார்க்சிஸ்ட் கட்சி நிலைப்பாடு எடுத்துள்ளது. எனவே, இந்தியாவில் தற்போதைய நிலையில் எந்த முதலாளியும் இருக்கவே கூடாது என்பது எங்கள் நிலைப்பாடல்ல.
அதானி போன்றவர்கள் ஒன்றிய அரசோடு இணைந்து கொண்டு கூட்டுக் களவாணிகளாக இருக்கிறார்கள், அதற்காக இந்தியாவின் சட்டங்கள் வளைக்கப்படுகின்றன, இந்தியக் கட்டமைப்புகள் அடிமாட்டு விலைக்குக் கொடுக்கப்படுகின்றன, இயற்கை வளங்களைச் சூறையாட தங்கு தடையற்ற அனுமதி கொடுக்கப்படுகிறது — இவையெல்லாம் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இதற்கு மாறாக, அவர்களுக்குப் பட்டுக் கம்பளம் விரிப்பது, அவர்களின் கட்டளைகளை — அது இந்திய அரசமைப்புக்கு எதிராகவே இருந்தாலும் — அவற்றை நிறைவேற்றுவது, தொழிலாளர் வாழ்க்கையை, சுற்றுச்சூழலை, இயற்கை வளங்களை எப்படிக் கொள்ளையடித்தாலும் அதைக் கண்டும் காணாமலும் இருப்பது அல்லது அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது என்பதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.
விழிஞ்ஞம் துறைமுகம் பற்றிய உண்மைகள் முரசொலிக்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது 2016-க்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. அதை ரத்து செய்தால் அதானி குழுமம் நீதிமன்றத்திற்குச் சென்றால் மாநிலத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வராது; பெரும் பொருட்செலவையும் ஈடாகக் கொடுக்க வேண்டியிருக்கும் என்கிற நிலை இருந்ததால் அதை இடது ஜனநாயக முன்னணி அரசு ஏற்றுக் கொண்டது. இதுவெல்லாம் முரசொலி ஏட்டிற்கும் தெரியும். இங்குதான் உருவாக்கப்பட்ட பொய்களை உண்மை போன்றும், நியாயம் போன்றும் முன்வைப்பதற்கு அது முயல்கிறது.
கேரளா, மேற்குவங்கம், திரிபுராவில் இருந்த இடதுசாரி மாநில அரசாங்கங்களும் சோசலிசத்தைக் கட்டியமைக்கவில்லை. ஏனெனில், இன்றைய அரசமைப்பு முதலாளித்துவ வளர்ச்சிக்கான கட்டமைப்பையே கொண்டிருக்கிறது. அதற்குள்ளாகச் செயல்படும் ஒரு மாநில அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் அது செயல்பட முடியும். அதில் நிர்ப்பந்தத்தின் காரணமாகச் சிலவற்றை ஏற்றுக்கொள்வதற்கும், விரும்பி ஏற்றுக்கொள்வதற்குமான வேறுபாடே இடது முன்னணி அரசுகளுக்கும் திமுக, அதிமுக அரசுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் காலத்திலும் சந்தர்ப்பவாத நிலை எடுத்ததும் கிடையாது, சறுக்கி விழுவதும் கிடையாது.
அவதூறுகள் அல்ல; உரையாடல்களே தேவை!
முரசொலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்த உரையாடலைத் தொடரட்டும்; அவதூறுகளை நிறுத்திக் கொள்ளட்டும். உரையாடல்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்; அவதூறுகள் கசப்புகளை உருவாக்கும். இந்திய அரசமைப்பைத் திருத்துவதற்கும், ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்துவதற்கும், எதிர்க்கட்சிகளே இல்லாமல் ஆக்கி இந்தியாவை ஒருகட்சி ஆட்சியை நோக்கி முயன்று கொண்டிருப்பதற்கும், அரசமைப்புகள் அனைத்தையும் தன் அடியாளாக மாற்றி வைத்திருப்பதற்கும், மாநிலங்களை உரிமைகளற்ற நிர்வாக அமைப்புகளாக மாற்றுவதற்கும், வெறுப்பின் விளைநிலமாக இந்தியாவை மாற்றுவதற்கும் பாஜகவும் சங்பரிவாரும் இடையறாது முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், இந்த ஒற்றை நோக்கத்திற்காக இந்தியாவில் உள்ள ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் இவற்றை நேசிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதேசமயம், அந்தக் கட்சிகள் அனைத்தையும் பெரிய கட்சிகள் தங்கள் அனைத்து நிலைப்பாடுகளுடன் இணைந்து போக வேண்டுமென எதிர்பார்ப்பதும், இல்லையேல் “நீ எதிரிதான்” என்ற சொல்லாடலும் இப்போதைய சூழலில் இந்தியா எதிர்கொள்ளும் நவ பாசிச நஞ்சைத் தோற்கடிக்க உதவாது. முரசொலியும் திமுகவும் இதை உள்வாங்கிக் கொண்டு விமர்சனங்களை வைக்கட்டும்; அவதூறுகளை நிறுத்தட்டும்.
- தீக்கதிர்
https://theekkathir.in/news/cpim-kanagaraj-responds-to-murasoli-criticism-tvk-support
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு