தமிழகத்தில் அரசு கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர் தேர்வில் உச்சகட்ட தில்லுமுல்லுகள்
சாவித்திரி கண்ணன்
இதற்காகத்தானே டெல்லியில் இளைஞர்கள் லட்சக்கணக்கில் அணி திரண்டனர்.
கஷடப்பட்டு படித்து பரிட்சை எழுதியவர்களை பின் தள்ளிவிட்டு, காசு கொடுப்பவர்களை பாஸ் பண்ணிவிடும் கோல்மால்கள் நீட் தேர்விலும், சி.பி.எஸ்.இ யிலும் நடந்தன…!
நேர்மையாக பரிட்சை நடத்த திரானியற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதானை பதவி விலகச் சொன்னார்கள் இளைஞர்கள்!
இதே நிலைமை தமிழ் நாட்டிலும் உருவாகிவிட்டது…!
தமிழகத்தில் அரசு கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர் தேர்வில் உச்சகட்ட தில்லுமுல்லுகள் அரங்கேறி உள்ளன என்று பரிட்சை எழுதிய 47,000 பேர் நான்கு நாட்களாக கொந்தளித்துக் கொண்டுள்ளனர்.
என்னென்ன வழிமுறைகளில் எல்லாம் வினாத்தாள் திருத்துவதில் மோசடிகள் அரங்கேறி உள்ளன என்பதை தேர்வு எழுதிய இளைஞர்கள் சமூக வலை தளங்களில் அம்பலப்படுத்தியதோடு, உயர்கல்வித் துறைக்கு புகார்களை அனுப்பி உள்ளனர். ஊடகங்களும் பிரதிபலித்தன! அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது வரை உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் வாய் திறக்கவில்லை. தன்னுடைய துறையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒரு அமைச்சர் இப்படி இருக்க முடியுமா?
12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் ஒரு பெரிய தேர்வு. உண்மையில் தமிழ் நாட்டில் சுமார் 9,000 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தாலும் 2,708 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது ஒரு ஆறுதல் தான்!
இதி தேர்வெழுதிய 8,747 பேர் ஏற்கனவே கல்லூரிகளில் பல்லாண்டுகளாக கெளரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்கள். பி.ஹெச்.டி படித்தவர்கள்! கல்வித் துறையிலேயே இருப்பதால் சப்ஜெக்ட் இவர்களுக்கு அத்துப்படியாகும்.
முதல் தாளின் பி பிரிவில் எது சரியான விடை என டிக் அடித்து சரியான பதில் சொல்வதற்கு 150 மதிப்பெண். அதில் இவர்களில் பலர் 100, 110க்கு மேல் பெற்றுள்ளனர்.
அதே சமயம் ஐந்து கேள்விகள்; கேட்கப்பட்டு அதில் ஒன்றுக்கு 300 வார்த்தைகளில் கட்டுரை எழுதும் இரண்டாம் பகுதியில் இவர்களில் பலருக்கு 50 மதிப்பெண்ணுக்கு பூஜ்ஜிய மதிப்பெண்ணும் ஒற்றை இலக்கத்தில் ஒன்று இரண்டும் எனப் போடப்பட்டுள்ளது தான் கொந்தளிப்பானது!
கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றும் கடினமானதல்ல. நன்றாகவே எழுதியுள்ளோம். டாக்டரேட் வாங்கிய எங்களுக்கு எந்த சப்ஜெக்டிலும் அடிப்படை புரிதல்கள் உண்டு. பூஜ்ஜிய மதிப்பெண்ணோ, ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண்ணோ பெறும் அளவுக்கு யாரும் முட்டாள்கள் அல்ல. அதே சமயம் 150 மதிப்பெண்ணுக்கு 47 மார்க் வாங்கிய வீக்கான வேறு சிலருக்கு கட்டுரை பகுதியில் 50-க்கு 49 மார்க் போட்டுள்ளது சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
திமுக ஆட்சியில் டிசம்பர் மாதம் இந்த தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவை ஜனவரியிலேயே அறிவித்திருக்க வேண்டும். ஆனால், பிப்ரவரியில் தேர்வு எழுதிய ஐந்து பேருக்கு மட்டும் முடிவை அறிவித்து பணி போட்டுக் கொடுத்துள்ளனர். அதிலேயே நேர்முகத் தேர்வில் முன்னுக்கு பின் முரணாக மார்க் போட்டு திருத்திய வகையில், சர்ச்சையானது. உடனே, அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டனர்.
தற்போது தவெக ஆட்சி பொறுப்பேற்று 40 நாட்கள் கடந்த நிலையில், இந்த தேர்வு முடிவு அறிவிக்கப்படுகிறது. முடிவை அறிவிக்கும் முன்பாக உயர் கல்வித் துறை செயலாளரும், அமைச்சரும் ஒரு மேற்பார்வை பார்த்திருந்தாலே கூட இதில் நடந்துள்ள முறைகேடுகளை பட்டவர்த்தனமாக உணர முடியும்.
இது ஆயிரக்கணக்கானவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது மாத்திரமல்ல, அந்த ஆயிரக்கணக்கான பேராசிரியர்களிடம் கல்வி கற்கவுள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் சம்பந்தப்பட்டதுமாகும். ஆக, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தாமல் தேர்வு முடிவுகளை அறிவித்தது பெரும் தவறாகும்.
ஏனெனில், ஆறு மாத காலம் தேர்வு முடிவை அறிவிக்காமல் தள்ளிப் போட்டதிலும்,
ஏற்கனவே வெறும் ஐந்து பேருக்கு பணி நியமனம் வழங்கியதில் நடந்த தவறுகளும் சர்ச்சையான நிலையில்,
இந்த தேர்வு முடிவை பரீசீலிக்காமல், தற்போதுள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் வெளியிடுகிறார் என்றால், இந்த முறைகேட்டில் தொடர்புடைய முன்னாள் ஆட்சியாளர்களுடன் அவருக்கு ஏதேனும் இணக்கமான புரிதல் உள்ளதா? என்பது தான் தேர்வு எழுதியவர்களின் கேள்வியாக உள்ளது.
காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தால், ''விஸ்வநாதன் திமுகவோடு தான் தேர்தல் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டியவர் தான். ஆனால், தற்போது தவெக அரசோடு இணக்கமாக இருப்பதாகவே நம்புகிறோம்'' என்கிறார்கள்!
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/100000227053317/posts/37656937383897025/?rdid=XlCP6OjfggHB9Fbd
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு