தமிழகம் காவிரியின் வடிகால் அல்ல! காவிரியில் தமிழகத்தின் சம உரிமைக்காகப் போராடுவோம்!!

ஏஎம்கே

தமிழகம் காவிரியின் வடிகால் அல்ல! காவிரியில் தமிழகத்தின் சம உரிமைக்காகப் போராடுவோம்!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

காவிரி பிரச்சினையில், உச்ச நீதிமன்றம் 30.9.2016 அன்று, மத்திய அரசு 4 நாட்களுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் 10 நாளைக்கு தண்ணீர் திறந்து வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை கர்நாடகா ஏற்க மறுத்ததுடன் தண்ணீரை திறக்க முடியாது என்றும் அறிவித்துவிட்டது.

காவிரி நடுவர்மன்றம், உச்ச நீதிமன்றம், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவாச் சட்டம் அனைத்தையும் கர்நாடக அரசு தொடர்ந்து மீறி வருகிறது. காவிரியில் நீர் நிரம்பி வழிந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் என்கிறது. வறட்சிக் காலங்களில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க மறுத்து அகண்ட காவிரியை வறண்ட காவிரியாக, தமிழகத்தை காவிரியின் வடிகாலாக மாற்றிட முயற்சிக்கிறது. மற்ற ஆறுகளைப் போல காவிரியும் வற்றி தமிழகம் பாலைவனமாக மாறும் அபாயத்தை சந்திக்கிறது.

காவிரி பிரச்சினையில் மோடி அரசின் துரோகம்

காவிரி பிரச்சினையில், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சி தமிழகத்தின் மார்பில் குத்துகிறது என்றால், மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியோ தமிழகத்தின் முதுகில் குத்திவிட்டது. உச்ச நீதி மன்றத்தில் 30.9.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஒப்புக்கொண்டதோடு, மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். ஆனால், 3.10.2016 இல் நடந்த வழக்கு விசாரணையில் "நடுவர்மன்ற இறுதி உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு விசாரணையில் இருக்கும் நிலையில், இரண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு செல்லாது, காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றச் சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும், இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் நிர்ப்பந்திக்க முடியாது" என்று கூறி பல்டி அடித்து கர்நாடகத்திற்கு சாதகமான நிலை எடுத்து தமிழகத்தை வஞ்சித்தது. 40-ஆண்டுகால தமிழகத்தின் சட்டப் போராட்டத்தை நிர்மூலமாக்கியது. இதன் மூலம் மோடி ஆட்சி தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. மாறாக மாநிலங்களின் உரிமைகளையும் பறித்து, அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவித்து எதேச்சதிகார ஆட்சியின் மூலம் புதியகானியத்திற்கு சேவை செய்கிறது. இத்தகைய எதேச்சதிகாரப் போக்கு வன்மையாக கண்டிக்கத் தக்கதாகும்.

சிந்துபாத் கதையாக தொடரும் காவிரி சிக்கல்

காவிரி நதி நீர் சிக்கல் 40 ஆண்டுகளுக்கு மேல் தீராமல் தொடர்கிறது. 70-களில் பூதாகரமாக இரு அண்டை மாநிலங்களுக்கிடையே உருவெடுத்துள்ள இந்தப் பிரச்சினைக்கு மத்தியில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த கட்சிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தீர்வு காண மறுக்கின்றன. காவிரி தீர்ப்பாயம் அமைப்பதை தீர்மானிப்பதற்கு இந்திய அரசுக்கு 22 ஆண்டுகள் ஆகின. அந்தத் தீர்ப்பாயம் தனது முடிவை வெளியிட 17 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. 2007 இல் வெளியிடப்பட்ட நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு மத்திய அரசிற்கு மேலும் 6 ஆண்டுகள் ஆகின. அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டவாறு காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் 9 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அமைக்கவில்லை. நடுவர் மன்றம் அமைத்தது கூட உச்சநீதி மன்ற தலையீட்டால்தான் நடந்தது. ஆனால் தற்போது மோடி ஆட்சியோ மீண்டும் நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வு என்றும், இந்தியாவிலுள்ள அனைத்து ஆற்றுநீர்ப் பிரச்சினைகளுக்கும் ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பது என்றும் கூறி கர்நாடகாவிற்கு சாதகமான நிலையை எடுத்துள்ளது.

காவிரி பிரச்சினையில் நடுவர்மன்றத் தீர்ப்பை அமல்படுத்த முடியாததற்குக் காரணம் என்ன?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பு தமிழகத்திற்கு ஆறுதல் அளிக்கின்ற தீர்ப்புதான். அந்தத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி போராடுவதும் அவசியம்தான். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மட்டுமே காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது. காரணம் 2007-ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் வறட்சிக் காலங்களில் நீரை பகிர்ந்து கொள்வது எப்படி என்ற வரையறையை முன்வைக்கவில்லை, அதை நீதிமன்றத்தால் வரையறுக்கவும் முடியாது. எனவேதான் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வறட்சி ஏற்படும் எல்லா காலங்களிலும் போராட்டத்திற்கான நிலைமைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

காவிரி பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் கர்நாடகத்தில் அக்கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பறிபோய்விடும் என்பதால்தான், போட்டி போட்டுக் கொண்டு உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை செயல்படுத்த மறுக்கின்றன என்பதில் பாதி உண்மைதான் உள்ளது.

இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருப்பதால், நதிநீர் உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சினையையும் தேசிய இனங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் சுதந்திரமாக பேசித் தீர்க்க முடியாமல் இருப்பது; ஜனநாயக பூர்வமான அரசியல் சட்டங்கள் அடிப்படையிலான உத்திரவாதம் இல்லாதது; கர்நாடக மற்றும் தமிழக ஆளும் வர்க்கங்களைப் போலவே புதிய காலனிய ஆதரவு மத்திய அரசும் உச்ச நீதி மன்றமும், காவிரி நடுவர் மன்றமும், காவிரி ஆணையமும் கூட ஒரு ஜனநாயக ரீதியிலான சமபங்கீட்டுக் கோட்பாட்டை முன்வைத்து நதி நீர்ப்பகிர்வுப் பிரச்சினைக்கு தீர்வுகாண தயாரில்லாதது காவிரிப் பிரச்சனை தீராத பிரச்சினையாக இருப்பதற்கு அடிப்படையாய் இருக்கிறது. மறுபுறம், மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்திவரும் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய காலனிய வேளாண் கொள்கைகளால் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளிலிருந்து விவசாயிகளை திசை திருப்புவது மற்றும் ஆறுகள், நிலங்கள், நிலத்தடி நீர் போன்ற இயற்கை வளங்களை தனியாருக்கும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும், தண்ணீர் துறையை தனியார் மயமாக்கும் கொள்கைகள் நதி நீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தடைகளாக இருக்கின்றன.

எனவே, காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு காவிரியில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையில் தொடரும் பூசலை வரலாற்று ரீதியக ஆய்வு செய்வதோடு, மேற்கண்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் விரிவாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது அவசியமானது.

1. காவிரி: ஆயிரம் ஆண்டுகால மோதல்

எந்த ஒரு சமூக அமைப்பிலும் அதன் உற்பத்திமுறையை - நதி, நீர், நிலம் உட்பட இயற்கை வளங்கள் அனைத்தையும் எந்த வர்க்கம் கட்டுப்படுத்துகிறதோ அந்த வர்க்கமே தீர்மானிக்கிறது. காவிரி ஆற்று நீரும் காலனியாட்சிக்கு முந்தைய காலத்தில், தமிழகத்தை ஆண்டு வந்த நிலப்பிரபுத்துவ மன்னர்களால் தங்கள் வர்க்க நலன்களுக்கேற்ப கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் அமைத்து பெருமளவு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆற்று நீரைப் பொறுத்தவரை ஆரம்ப காலங்களில் ஆற்றின் மேல் படுகைப் பகுதிகளை விட கீழ்படுகைப் பகுதிகளே அதிகம் பயன்படுத்தி வந்துள்ளன. அவை சமவெளிப் பகுதியாக இருப்பதும் ஒரு காரணமாகும். எனவே தான் காவிரிப் பாசனப்படுத்தலும், அதன் விவசாயமும் மிகவும் தொன்மை வாய்ந்ததாக இருந்து வருகிறது. கி.பி.2-ஆம் நூற்றாண்டிலேயே சோழமன்னன் கரிகாலனால் காவிரி மீது கட்டப்பட்ட கல்லணை உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த அணையாக கருதப்படுகிறது. பிறகுதான் காவிரியின் தலைமடைப் பகுதியான மைசூரும் அதன் மன்னர்களும் காவிரி நீரைப் பயன்படுத்துவதில் போட்டியிட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே பரஸ்பரம் மோதல்களும், பூசல்களும் பலமுறை நடந்ததற்கான சான்றுகள் வரலாறு நெடுகிலும் உள்ளன.

கி.பி.600-களில் கன்னட சாளுக்கிய மன்னர்களுக்கும், தமிழக பல்லவ மன்னர்களுக்கும் மோதல்; கி.பி-940-களில் கன்னட ராஷ்டிரகூட மன்னர்களுக்கும் சோழமன்னர்களுக்கும் மோதல். கி.பி.1146-1163-இல் தென்கன்னட நாட்டை ஆண்ட போசள மன்னன் முதலாம் நரசிம்மன் காவிரி நீரைத் தடுத்தபோது, சோழமன்னன் இரண்டாம் ராசராசன் படை எடுத்து "சுழியிட்ட காவிரிக்கு சோழ நாடு வாழ வழியிட்ட"தற்கான மோதல் போன்றவை சில உதாரணங்கள்.

இவ்வாறு தமிழக கர்நாடக மன்னர்களுக்கிடையே நடந்த மோதல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு காவிரி நீர்பிரச்சினை காரணமாக இருந்திருக்கிறது என்பதை பின்வரும் கன்னட இலக்கியப் பாடல் உறுதிப்படுத்துகிறது. கேஷிராஜா என்பவர் கி.பி. 13 இல் எழுதிய 'சப்தயனிகர்ப்பணம்' என்ற கன்னட நூலில் 'காவிரி நீரை அந்தத் தமிழன் என்ன கடன் கொடுத்திருக்கிறானா? கொடு, கொடு என்று கேட்கிறானே'-"காவேரிய காலனாதிவுழன் எம்கடன் கொண்டனோ" - என்று கொதிப்புடன் குறிப்பிடுவது இன்று வரை தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இதேபோல், கி.பி. 17 இல் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் காவிரி நீரைத்தடுக்க, இதை எதிர்த்து மதுரை இராணி மங்கம்மாள், தஞ்சை மராட்டிய மன்னர் ஆகிய இருவர் கூட்டுப்படையும் கிளம்ப, அச்சமயம் பெய்த பெருமழையால் தடை உடைந்து காவிரி மீண்டது. இவ்வாறு தமிழகத்தின் வரலாற்றோடு இணைந்து, வான் பொய்ப்பினும் தான் பொய்யாது, கன்னட மன்னர்களின் தடைகளை எல்லாம் தாண்டி தொன்று தொட்டு தொல் தமிழகத்தை வளமாக்கி வந்தது காவிரி.

காலனிய ஆட்சி செய்துகொண்ட காவிரி ஒப்பந்தங்கள்

பின்பு வந்த காலனிய உற்பத்தி முறைக்கேற்ப பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தமது வியாபாரச் சந்தையை விரிவாக்கிக் கொள்ளவும், இங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்காகவும், தமது படை பரிவாரங்களுக்குத் தீனி போடவும் ஏகாதிபத்தியத்திற்கு எட்டப்பன்களாக செயல்பட்ட நிலப்பிரபுக்களின் நலன்களைக் காக்கவுமே பாசனத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியது. இதற்காகவே இங்கு எல்லா துறைகளிலும், வளர்ச்சி குன்றிய, பின்தங்கிய உற்பத்தி முறையை நீடித்திருக்கச் செய்தது. நீர்பாசனத் திட்டங்கள் போன்றவற்றை விரிவுபடுத்தாமலே தேசிய இனங்களை மிரட்டி, துப்பாக்கி முனையில் வலுக்கட்டாயமாக இணைக்கும் சதிகளைச் செய்து வந்தது. உதாரணமாக இன்று தமிழகத்தில் உள்ள 39,000 ஏரிகளில் 38,000 ஏரிகள் இங்கே ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே வெட்டப்பட்டவைதான் இதுவே காலனிய ஆட்சி, அதற்குப் பின்பு இன்றுள்ள அரைக் காலனிய ஆட்சிகளின் சுய உருவத்தைக் காட்டுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மைசூர் பகுதியை ஆண்ட திப்புசுல்தான் 1794 இல் காவிரியில் அணைகட்ட அடிக்கல் நாட்டினார். பணிகள் நடந்துகொண்டிருக்கும் போதே ஆங்கிலேயர்கள் போரிட்டு திப்புவைத் தோற்கடித்து மைசூர் சமஸ்தான ஆட்சிப் பொறுப்பை உடையார்கள் வசம் ஒப்படைத்து, தனக்குக் கப்பம் கட்டும் பிரதேசமாக மைசூர் சமஸ்தானத்தை மாற்றிக் கொண்டனர். உடையார்களின் மைசூர் சமஸ்தான ஆட்சி கி.பி. 1807 முதல் 1866 வரை காவிரி மீது அணைகட்ட பலமுறை ஏகாதிபத்திய சென்னை மாகாண அரசிடம் மனுபோட்டும், மன்றாடியும் மறுக்கப்பட்டது.

இக்கட்டத்தில், 1867 இல் மைசூர் சமஸ்தானத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டு அங்கு 15 சதவீதத்திற்கும் மேலான மக்களை பலிகொண்டது. இதேபோல 1877 இல் அன்றைய சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பஞ்சத்தால் 50-லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாண்டு போனார்கள். இத்தகைய கொடிய பஞ்சங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதும், காவிரியில் அணைகள் கட்டி பாசனப் பரப்புகளை விரிவுபடுத்திக் கொள்வதும், அவசியம் என்ற நிலையை உருவாக்கியது.

இதனால், குறிப்பாக மைசூர் சமஸ்தான மன்னர் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் காவிரிப் பாசனப் பகுதிகளை, விரிவுபடுத்த விருப்பம் கொண்டார். ஏகாதிபத்தியத்தின் சென்னை மாகாண அரசோ, தமது ஆளுகையின் கீழிருந்த மைசூர் சமஸ்தான அரசு பாசனப் பகுதிகளை விரிவுபடுத்துவதை விரும்பவில்லை. மைசூர் மன்னருடன் தொடர்ந்து கடிதங்கள், பேச்சு வார்த்தைகள் என்று நிர்பந்தித்து 1892 இல் ஓர் உடன்பாட்டைச் செய்து கொண்டது.

மைசூர் சமஸ்தானத்தில் தோன்றி அல்லது அம்மாநில வழியாக சென்னை மாகாணத்திற்குள் பாயும் ஆறுகளின் பாசனப் பரப்பை, சென்னை மாகாண அரசின் அனுமதியின்றி மைசூர் அரசு விரிவு படுத்தக் கூடாது. அதே சமயம் தான் அனுபவிக்கும் உரிமைக்காக அல்லாது வேறு எந்தக் காரணங்களை முன்னிட்டும் சென்னை மாகாண அரசு மைசூர் அரசுக்கு அனுமதி மறுக்கக் கூடாது எனும் 1872 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி காவிரியின் குறுக்கே கண்ணம்பாடியில் ஓர் அணைகட்ட சென்னை மாகாண அரசிடம் 1911 இல் அனுமதி கோரியது மைசூர் அரசு. தமது நலனுக்கு இது எதிரானது என்று சென்னை மாகாண அரசு மறுத்துவிட்டது.

கோலார் தங்கச் சுரங்கப் பணிகளுக்கு மின்சக்தி வழங்குவதற்காக அமைக்கப்பட்ட சிவசமுத்திரம் அனல்மின் நிலையத்திற்கு நீர்வழங்கவே இந்த அணையைக்கட்ட அனுமதி கேட்பதாகக்கூட மைசூர் அரசு மன்றாடிக் கேட்டுக் கொண்டது. முதலில் மனமிறங்கினாலும் பின்பு மறுத்துவிட்டது சென்னை மாகாணம். மண்டியிட்டு மைசூர் மன்றாடுவதைக் கண்டும் கேட்டும் மனமிரங்கிய அலகாபாத் உயர் நீதி மன்றம் 1914 இல் ஆதரவு தந்தது. விடாத சென்னை அரசோ இந்திய அரசிடம் செல்ல, மைசூருக்காக மனமிரங்கிய மத்திய அரசும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. சிலிர்ந்தெழுந்த சென்னை மாகாண அரசு லண்டனுக்குச் சென்றது. மாட்சிமை பொருந்திய மன்னராட்சியோ அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு இந்திய அரசு தந்த பின்இசைவை தள்ளுபடி செய்து, சம்பந்தப்பட்ட இரு மாகாணங்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. இதன்படி சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தான அரசுக்குமிடையே 18.02.1924-ல் இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது.

1924ஆம் ஆண்டு ஒப்பந்தமும் மைசூரை மணக்க வைக்கவில்லை

காவிரி நீரில் அச்சமயம் சேதாரம் போக மீதமுள்ள 671 டி.எம்.சி. நீரில் சென்னை 489, மைசூர் 177, கேரளா 17 டி.எம்.சி. என்று பங்கிட்டுக் கொள்வது. மைசூர் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணையைக் கட்டி 44.8 டி.எம்.சி நீரைத்தேக்கி 1.01 இலட்சம் ஏக்கர் பாசன விரிவாக்கம் செய்து கொள்வது. சென்னை மாகாண அரசோ மேட்டூரில் அணைகட்டி 93.5 டி.எம்.சி நீரைத் தேக்கி 3.01 இலட்சம் ஏக்கர் பாசன விரிவாக்கம் செய்துகொள்வது. காவிரியின் துணை நதிகளில் இரு அரசுகளும் அணைகள் கட்டி சென்னை 100 பங்கு நீரையும், மைசூர் 60 பங்கு நீரையும் தேக்கிக் கொள்வது. அதேசமயம் மைசூர் அரசு அமைக்கும் அணைகள், நீரின் அளவு ஆகியவற்றின் முழுவிவரங்களையும் உடனுக்குடன் சென்னை மாகாணத்திற்கு தெரியப் படுத்தவேண்டும். இதற்காக ஓர் அலுவலகத்தையும், அலுவலரையும் கே.ஆர்.எஸ் அணையில் நிரந்தரமாக வைக்கவேண்டும் என்று கூறும் இந்த 1924-ஒப்பந்தம் 1892-ஒப்பந்தத்தையும் உள்ளடக்கியது. 50-ஆண்டுகளுக்குப் பிறகு 1974-ல் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கூடி மீண்டும் பரிசீலிப்பது என்றும் இவ்வொப்பந்தம் கூறுகிறது.

இவ்வொப்பந்தத்திற்குப் பின்புதான் மைசூர் அரசு தமது கே.ஆர்.எஸ் அணைத் திட்டத்தை 1931 இல் நிறைவு செய்தது. 1940-களில் கன்வா, பைரமங்கலம், சிம்சா போன்ற சில நடுத்தர நீர்த் தேக்கங்களை மைசூர் கட்டினாலும், 1924-ஒப்பந்தம் தனக்களித்த 1.01 இலட்சம் ஏக்கர் பாசன விரிவாக்கத்தை 1956-வரை விரிவுபடுத்த முடியவே இல்லை.

மறுபுறம், சென்னை மாகாண அரசோ 1934 இல் மேட்டூர் அணையைக் கட்டி முடித்ததோடு தமக்களிக்கப்பட்ட பாசன விரிவாக்கம் 3.01 இலட்சம் ஏக்கரையும் விரிவு படுத்திக் கொண்டது. இதோடு 1953 இல் கீழ்பவானி, அமராவதி அணைகளையும் கட்டி தமது பாசனப் பரப்பை பெருமளவு பெருக்கிக் கொண்டது.

அதாவது ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சென்னை மாகாண அரசுக்கும், அதன் கீழிருந்த மைசூர் சமஸ்தான அரசுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் 1950-கள் வரை மைசூரை முன்னேற விடவில்லை என்பதை பின்வரும் புள்ளி விவரமே காட்டுகிறது. 1901 இல் தமிழகத்தின் மொத்த பாசனப் பரப்பு 15.64-லட்சம் ஏக்கர். அடுத்து 1956 இல் தமிழகத்தின் பாசனப் பரப்பு 22.77-லட்சம் ஏக்கர். ஆனால் கர்நாடகத்தின் பாசனப் பரப்போ வெறும் 4.93-லட்சம் ஏக்கர் மட்டுமே. அதாவது காலனிய ஆட்சியில் மைசூரு வஞ்சிக்கப்பட்டது.

2. அரைக்காலனிய மாற்றம்: அடாவடி செய்யும் கர்நாடகமும்! தவிக்கும் தமிழ்நாடும்!

1947-க்குப் பிறகு நாடு காலனிய உற்பத்தி முறையிலிருந்து, அரைக்காலனிய உற்பத்தி முறைக்கு மாற்றியமைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. மைசூர், கர்நாடக மாநிலம் ஆனது. அதுவரை சென்னை மாகாணத்தின் பகுதியாக இருந்த காவிரி உற்பத்தியாகும் குடகு, கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது. அரசியல், ஆட்சி அதிகாரம், புதிய எல்லை விரிவாக்கம் பெற்று வலிமைமிக்க கன்னட தேசம் உருவானது. இவ்வாறு வரலாற்று ரீதியாக ஒரு மாநிலம் உருவாகியதன் விளைவாகவும், அரைக்காலனிய நிலைமைகள் உருவாக்கப்பட்டதாலும், மாநில அளவிலான தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்கள் காவிரி நீரைப் பயன்படுத்தி கர்நாடக பாசனப் பரப்பை விரிவுபடுத்துவதில் பன்மடங்கு வேகம் காட்டின. மைசூர் மன்னரும், சென்னை மாகாண அரசும் செய்து கொண்ட எந்த ஒரு காவிரி ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்; அந்நிய பிரிட்டிஷ் ஆட்சியால் திணிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று கர்நாடகா கூறியதில் நியாயம் இருக்கத்தான் செய்தது.

ஆனால், 1956 இல் கொண்டு வரப்பட்ட தற்போதைய மாநிலங்களுக்கிடையிலான நீர்தாவாச் சட்டத்தை கர்நாடகம் மதிக்கவோ, ஏற்கவோ தயாராய் இல்லை. எதற்கும் கட்டுப்படாமல், தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக, வெறித்தனமாக தமது கே.ஆர்.எஸ் அணைக்கு மேற்கேயும், கிழக்கேயும் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, சுவர்ணவதி போன்ற கர்நாடக காவிரியின் உபநதிகளில் பல பெரும் அணைகளைக் கட்டி அதுவரை சுமார் 5-லட்சம் ஏக்கராக இருந்த தமது காவிரிப்பாசனப் பரப்பை தற்போது சுமார் 30-லட்சம் ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்திக் கொண்டது. கன்னட மாநில அரசு அமைந்ததும், 1966 இல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பசுமைப் புரட்சி திட்டமும் விவசாயத்தைப் பெருமளவு பெருக்க வகை செய்தன. இவ்வாறு காவிரி நதி, கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுவை ஆகிய பல மாநில நதி என்பதை மறுத்து, அடாவடித்தனமாக செயல்பட்டு இன்று காவிரி நீர்ச்சிக்கலைத் தீராத சிக்கலாக்கி வருகிறது கர்நாடகா. எந்தப் பேச்சு வார்த்தைக்கும், உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் கூட கட்டுப்பட மறுத்துவருகிறது.

மேலும் இவை எல்லாவற்றையும் விட மிகப் பெரிய அபாயகரமான திட்டமொன்றை தற்போது கர்நாடகம் அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. கர்நாடகக் காவிரியில் இப்போது கிடைக்கும் 500-டி.எம்.சி நீரில் 465-டி.எம்.சி நீரைக் கர்நாடகமே பயன்படுத்திக் கொள்வதற்காக "காவிரி நிராவரி நிகாம்" என்ற அமைப்பை 2003-04-ல் ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் முழுவதையும் நிறைவேற்ற ரூ.5,000 கோடி நிதி தேவைப்படும் என்றும், தொடக்க கட்டமாக ரூ.1,500 கோடியை பொதுமக்களிடம் பத்திரங்கள் மூலம் தற்போது திரட்டி வருகிறது. மறுபுறம் இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகக் காவிரியின் நிலை பாலாற்றை விட மோசமாய், தமிழகம் பாலைவனமாய் மாறிவிடும். நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. இன்றைய அரைக்காலனிய நிலைமைகளில் காவிரியில் கர்நாடகத்தின் அடாவடி பெருகுகிறது. இந்த அடாவடியை அனுமதிக்க முடியாது.

கவலைக்கிடமாகிவிட்ட தமிழ்நாடு

தமிழகம் மற்றும் தமிழகக் காவிரி பாசனப் பரப்பின் நிலமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. வளம் கொழித்த பூமி கடந்த சில ஆண்டுகளாக வறண்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் குறுவை, சம்பா சாகுபடிகள் பொய்த்துப் போனதைப் போலவே இந்த ஆண்டும் கர்நாடகத்தின் 'தாதா' தனத்தால் பொய்த்துப் போகும் அபாயம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கூட தண்ணீர் விட மறுப்பதால் தமிழகக் காவிரி காய்ந்து விட்டது. இருக்கும் விதைகளையும் இழந்துவிட்டு, வாங்கிய கடனையும் திருப்பிக் கட்ட முடியாமல், தமிழக காவிரி பாசனப் பரப்பின் பயிரைப் போலவே விவசாயிகளின் வாழ்வும் கருகி வருகிறது. தற்கொலைகளும் பட்டினிச் சாவுகளும் தொடர்கதையாகி விட்டன. ஒரே மாதத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மாண்டு வருகின்றனர். தற்போது தமிழக காவிரிப் பரப்பின் நிலத்தடி நீர்மட்டமும் கீழேபோய் குடிநீருக்கும் நெருக்கடி. இவ்வாறு நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.3,000 கோடி நட்டத்தைச் சந்தித்திருக்கும் தமிழக பொருளாதாரம் கடந்த இரண்டாண்டுகளில் விவசாய உற்பத்தி, போக்குவரத்து, வர்த்தகப் போக்குவரத்து எனப் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டு மொத்தமாக சுமார் ரூ.30,000 கோடிகளுக்கு மேல் இழப்பைச் சந்தித்துள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமுல்படுத்தியிருந்தால் இந்த நிலமை சிறிதாவது மாறியிருக்கும். இதற்கு கர்நாடக அரசு மட்டுமே காரணம் என்று கூறமுடியாது. கர்நாடக அரசை கண்டிக்காத மத்திய அரசும், இதற்கு பொறுப்பாகும்.

தேசிய இன ஒடுக்குமுறைகளும், நதிநீர்ச் சிக்கலும்

இந்திய ஆளும் வர்க்கம்-குறிப்பாக அதன் முன்னணிப் பிரிவான தரகு முதலாளிய வர்க்கம்-இந்தியா முழுமைக்குமான மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்திக் கொண்டே வருகிறது. இன்றைக்கு இந்தியாவில் கட்டப்பட்டிருக்கும் ஒற்றுமை, பிரிட்டீஷ் இந்திய அரசு கட்டிய ஒற்றுமையின் தொடர்ச்சியாகும். பிரிட்டீஷ் இந்திய அரசை எதிர்ப்பதில் பல்வேறு தேசிய இனங்களிடம் தோன்றிய அரசியல் ஒருமைப்பாட்டு உணர்வையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வையும் அரசியல் ரீதியிலும் ஸ்தாபன ரீதியிலும் வளர்த்தெடுத்துக் கொள்ள அன்றைக்குப் புரட்சிகர ஜனநாயக இயக்கங்கள் பலமற்று இருந்தன. இத்தகைய உணர்வைக்கூடத் தரகு முதலாளிகளே ஏகாதிபத்தியத்துடன் பேரம் பேசுவதற்குப் பயன்படுத்திக்கொண்டனர். 1947-க்கு முன் மேலிருந்து கட்டியமைக்கப்பட்ட இந்த ஒற்றுமை ஆளும்வர்க்க நலன்களுக்கான ஒற்றுமையாகும். பல்வேறு தேசிய இனங்களுக்கு இடையிலான சமனற்ற தன்மையைப் பயன்படுத்திக் கட்டி அமைக்கப்பட்ட ஒற்றுமையாகும்.

இந்தியத் தரகு முதலாளிகளின் தலைமையில் இங்கு நேரடி ஆட்சியதிகாரப் பொறுப்பு ஏற்பட்ட பின்னரும் இதே வகைப்பட்ட ஒற்றுமையே தொடர்கிறது. உணர்வு பூர்வமான அல்லது அறிவு பூர்வமான தேசிய ஒருமைப்பாடு உருவாக வேண்டுமானால் தேசிய இனங்களுக்கு இடையில் அரசியல், பொருளாதார சமத்துவம் இருந்தாக வேண்டும். தேசிய இனங்களின் சிக்கலை ஜனநாயக வழியில் தீர்த்தாக வேண்டும். சமத்துவமும் ஜனநாயகமும் இல்லையெனில் தேசிய ஒருமைப்பாடு என்பது கீழ்நிலையிலிருந்து உருவாக இயலாது. அது மையப்பட்ட ஓர் அதிகார நிறுவனத்திலிருந்து திணிக்கப்பட்டதாகவே இருக்கும். தேசிய இனங்களுக்கு இடையில் பகைமையை ஏற்படுத்துவதும் அதைக் காரணமாகச் சுட்டிக்காட்டி வன்முறை அளவிலான ஒருமைப்பாட்டை மேலிருந்து திணிப்பதும் ஆளும்வர்க்கத்தின் அரசியல் உத்தியாகவுள்ளது. குறிப்பாக அசாம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய எல்லை மாநிலங்களில் தேசிய இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் பகை உருவாகும் சூழல் ஏற்படும் வகையில் நிகழ்வுப் போக்குகளில் மத்திய அரசு தலையிட்டது. இத்தகைய எல்லை மாநிலங்கள் இன்றைக்கும் சட்டபூர்வமாக அரை இராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இவற்றைச் சுட்டிக்காட்டி வன்முறை ரீதியிலான ஒருமைப்பாட்டுணர்வை மத்திய அரசு இந்தியா முழுவதும் இன்றைக்குப் பரப்பிக்கொண்டு இருக்கின்றது.

ரவி, பியாஸ் நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையில் பஞ்சாப் மாநிலத்துக்கும் அரியானா மாநிலத்துக்கும் இடையில் தீராப் பகைமையை ஏற்படுத்தும் விதத்தில் மத்திய அரசு நடந்து கொண்டது இங்கு கருதத்தக்கது. ஏற்கனவே பஞ்சாப் பெற்றிருந்த உரிமையைக் கூட அது இழந்துவிடும் வகையில் வெளியிடப்பட்ட எராடி கமிசன் தீர்ப்பைப் பயன்படுத்தி அரியானாவில் காங்கிரசு வெற்றி பெற்றதோடு, பஞ்சாபில் சங்கிலித்தொடர் போன்ற பல நிகழ்வுகள் நடைபெறுவதற்கும் அது காரணமாக அமைந்துவிட்டது.

இதே போன்று கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையில் பகைமை மூளுவதற்குரிய சூழலை வளர்த்து விடுகின்றது. இந்திய ஆளும் வர்க்கத்தின், மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு இதுவே அர்த்தமாகும். கர்நாடகத்தில் அரசியல் பிழைப்புவாதத்தால் தூண்டப்பட்ட தேசிய இனவெறியை அடக்க வேண்டும் என இன்று வரை மத்திய அரசு கருதவில்லை. பிஜித்தீவிலும் மால்ட்டா தீவிலும் நடைபெறும் இராணுவக் கலவரங்களை ஒரே நாளில் அடக்கும் திறன்பெற்ற மைய அரசு கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்களை தடுப்பதற்கு தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் நோக்கம் அதன் அரசியல் உத்தியேயாகும். 

எனவே, இன்றைக்கு காவிரி பாயும் முக்கிய மாநிலங்களான கர்நாடகமும் தமிழகமும் இதைப் பேசித் தீர்த்துக்கொள்வதற்குத் தடைகளாக இருப்பவை.

1.         இந்திய ஆளும்வர்க்கத்தின் ஆதிக்க ஒருமைப்பாட்டு அரசியல் போக்கும்,

2.         ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளின் தேர்தல் சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமும்,

3.         கர்நாடக அரசின் அடாவடி சுயநல போக்கும் ஆகும்.

இவற்றைக் களைந்தாலன்றி இந்தப் பிரச்சினைக்குரிய இறுதியான நியாயமான தீர்ப்பை அடைய முடியாது.

இன்றைய இந்திய அரசியல் யதார்த்தத்திலிருந்து இதைத் தொடங்கிவைப்பது சரியாக இருக்கும். முதலில் தேசிய இனங்களுக்கு இடையில் சமத்துவதத்தையும் ஜனநாயகத்தையும் உத்திரவாதப்படுத்துகிற தேசிய இன சுய நிர்ணய உரிமை தேவைப்படுகிறது.

இதைக்கூடப் பிரத்தியட்ச நிலைப்பாட்டிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய வளங்கள் குறித்த சிக்கலில் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பேணவில்லையெனில் தேசிய இன வெறித்தனமே மேலோங்கும்.

தேசிய இனங்களுக்கு இடையில் வளங்களைப் பங்கிட்டுக் கொள்ளல்

இந்தியா என்பது தேசிய இனங்கள் நிறைந்த நாடு என்பதை மறைப்பது வரலாற்று அபத்தம். இதன் புவியியல் தொடர்ச்சியாலும் வரலாற்றுத் தொடர்ச்சியாலும் ஒரு மொழிபேசும் மக்கள் தம் தேசிய இனப்பிரதேச வரையறையைத் தாண்டி அடுத்த பிரதேசத்தில் வாழ்க்கை நடத்துவது தவிர்க்க இயலாதது. இதுவும் அண்டை மாநிலங்களில் மட்டுமே அதிகம் சாத்தியம் ஆகும். உதாரணமாக தமிழர்கள், அண்டை மாநிலங்களில் குடியேறியுள்ளனர். குறிப்பாக கர்நாடகத்தில் உழைக்கும் மக்களாகவும் சிறு விவசாயிகளாகவும் உள்ளனர். கன்னடர்கள் தருமபுரி, வடாற்காடு, சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ளனர். இப்படி கடந்த 300 ஆண்டுகளாக ஒருவித சமூக இயங்குத்தன்மை அண்டை தேசிய இனங்களுக்கு இடையில் நிகழ்ந்து வருகின்றது. அதுபோல பிரிட்டிஷ் காலம் தொட்டு இன்றுவரை மூலதனக்காரர்களும் தொழில்நுட்ப அறிவாளிகளும் படிப்பாளிகளும் தேசிய இனப்பிரதேச வரையறையைக் கடந்து இயங்கிக்கொண்டிருக்கின்றனர். மூலதனமும் தொழில்நுட்பங்களும் அதிகாரிகளும் தம் தேசிய இன வரையறையைத் தாண்டி பாதுகாப்புடன் இயங்குவதற்குரிய உத்திரவாதத்தை மத்திய அரசு கொடுத்து வருகிறது. அதன் ஒற்றுமையின் சாரம்கூட இதுதான். ஆனால் அண்டைப் பிரதேசங்களில் குடியேறிய உழைக்கும் மக்களும் சிறுவுடைமையாளர்களும் பாதுகாப்புடன் இயங்க முடிவதில்லை. புவியியல் தொடர்ச்சியினாலும் வரலாற்றுத் தேவைகளினாலும் இவ்வாறு குடிபெயர்ந்த உழைக்கும் மக்களும் சிறுவுடமையாளர்களும் மீண்டும் தம் தேசிய இனப்பிரதேசத்துக்குத் திரும்பிக் குடிபெயர்தல் வரலாற்று ரீதியில் சாத்தியமில்லை. இத்தகைய தேசிய இனச்சிறுபான்மையினராகவுள்ள உழைக்கும் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் வாழ்க்கை உத்திரவாதம் இருந்தாக வேண்டும். இதற்கு தேசிய இனங்களுக்கு இடையில் சமத்துவமும் ஜனநாயகமும் தேவை.

அதேபோல் இன்றைய இந்தியச் சூழலில் ஒரு தேசிய இனத்தின் எல்லாத் தேவைகளையும் அத்தேசிய இனம் முழு அளவில் நிறைவு செய்ய இயலாது. நாடுகளுக்கு இடையில் இருக்கும் சமனற்ற நிலை மாநிலங்களுக்கு இடையிலும் இருக்கின்றது. இதை நீக்கிக்கொள்ள ஜனநாயக பூர்வமான விவாதம் தேவை. உதாரணமாக தமிழ்நாட்டின் நீர்பாசனத் தேவையை எடுத்துக் கொள்வோம்.

தமிழகத்தில் 1971 இல் வேளாண்மைக்கு உகந்த நிலம் 13 மில்லியன் ஹெக்டேர் ஆகும். இதில் 6 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் மட்டுமே வேளாண்மை செய்யப்படுகின்றது. இதிலும் 2.4 மில்லியன் ஹெக்டேர் நிலம் மட்டுமே பாசன வசதி பெற்றுள்ளது. ஆக வேளாண்மை நிலத்தில் 60 சதவீதத்திற்குப் பாசனவசதி இல்லை. பாசனத்திற்குக் கால்வாய்கள், குளங்கள், கிணறுகள் மட்டுமே பயன்படுகின்றன. இவை 1950 இல் இருந்ததைவிட அதிகமாகப் பெருகவில்லை.

ஒரு விவரம் காணலாம்.

(மில்லியன் ஏக்கரில் பாசன நிலம்)

ஆண்டு           கால்வாய்       குளம் கிணறு            பிற      மொத்தம்

1951-52            1.96                  1.61      1.23                 0.13      4.93

1960-61            2.18                  2.31      1.48                  0.11      6.08

1970-71            2.18                  2.22      1.91                  0.09      6.40

1979-80            2.30                  2.21      2.76                  2.76      7.36

கால்வாய்ப் பாசனமும் ஆற்றுநீர்ப் பாசனமும் பெரும் பகுதியைக் கொண்டவை. தமிழக ஆறுகளில் காவிரி, பாலாறு, பெண்ணையாறு, பெரியாறு முதலியவை அண்டை மாநிலங்களை உற்பத்தி இடங்களாகக் கொண்டவை. தமிழக ஆற்று நீர்ப் பாசனப் பரப்பளவில் இந்த நான்கு ஆறுகள் மட்டும் ஏறத்தாழ 80 சதவீத இடத்தை நிரப்புகின்றன. இது முக்கியம். தமிழகத்தில் பாயும் நதி நீரை நாம் அதிகம் வீணடிப்பதில்லை. அதாவது மொத்த நதிகளின் நீர் அளவான 810 டி.எம்.சி.யில் 765 டி.எம்.சி நீர் பயன்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. எனினும் 1947-க்குப் பின் கால்வாய்ப் பாசனப் பரப்பளவு அதிகம் பெருகவில்லை. இன்றைய நதிப்படுகைப் பாசனப் பரப்பளவில் ஏறத்தாழ 78 சதவீதம் 1947 இல் இருந்தது. எனவே கால்வாய்ப் பாசனம் தமிழக நிலப்பரப்புக்குப் போதாது. அடுத்து குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம். 'குளந்தொட்டு வளம் பெருக்கிய நாடு' தமிழ்நாடு ஆகும். மழைநீரைத் தேக்கிவைப்பதற்கும் நிலத்தடி நீராகப் பாதுகாப்பதற்கும் இவை தேவை. தமிழகத்தில் ஆண்டு சராசரி மழை அளவு மிகவும் குறைவு. இதிலும் கூட உண்மையில் பயன்படும் அளவு மிகமிகக் குறைவு. எடுத்துக்காட்டாகத் தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 12.32 மில்லியன் ஹெக்டேர் மீட்டர்களாகும். (1982 ஆம் ஆண்டுக் கணக்கின்படி) இதில் நிலத்தோடு ஓடுதல், நீராவியாதல் போன்றவற்றால் மட்டும் 6.25மி.ஹெ மீட்டர் வீணாக, மீதியுள்ள 2.5 மி.ஹெ.மீட்டர் மட்டும் நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மொத்த மழை நீரில் 20 சதவீதம் மட்டுமே பாசனத்துக்குப் பயன்படுகின்றது. மழைநீரைத் தேக்கும் குளங்கள் எல்லா மாவட்டங்களிலும் சமமாகப் பெருகவில்லை குளத்துப்பாசனப் பரப்பு சற்றுப் பெருகியுள்ளது. மொத்தமுள்ள 38,000 குளங்களில் செங்கை, தென்னாற்காடு, வடாற்காடு, கோவை, நெல்லை, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் 80 சதவீதக் குளங்களும் 90 சதவீதக் குளப்பாசனப் பரப்பும் உள்ளன. தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீர் தேங்க வசதியில்லை. எடுத்துக்காட்டாக தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை கணிசம். இதைத் தேக்க குளங்கள் இல்லை, குளங்கள் உருவாக்கப்படவும் இல்லை. ஆகவேதான் பெய்யும் மழை அளவில் 20 சதவீதம் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படுகிறது.

நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் கிணற்றுப்பாசனம் மட்டுமே இந்த 40 ஆண்டுகளில் ஓரளவு பெருகியுள்ளது. 1950 இல் 6.3 லட்சம் கிணறுகளும் 1979 இல் 16 லட்சம் கிணறுகளும் இருந்தன. இருப்பினும் ஒரு கிணற்றுக்கு உரிய பாசனப்பரப்பளவு பெருகவில்லை. 1950 இல் ஒரு கிணற்றின் பாசனப்பரப்பளவு சராசரி 2 ஏக்கர் அது 1979 இல் 1.75 ஏக்கராகக் குறுகியுள்ளது. ஆனால் இது பஞ்சாபில் 10 முதல் 15 ஏக்கராக உள்ளது. தமிழகத்தின் மொத்தக் கிணறுகளில் 76 சதவீதம் கோவை, பெரியார், சேலம், தருமபுரி, தென்னாற்காடு, வடாற்காடு, செங்கற்பட்டு, திருச்சி ஆகிய 8 மாவட்டங்களில் மட்டுமே உள்ளன. மற்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் சாதனங்கள் பெருகவில்லை.

எனவே இன்றைய சூழலில் தமிழகத்தில் உள்ள பயிரிடும் பரப்பில் பாசனம் பெறும் பரப்பளவு 40 சதவீதம் மட்டுமே. மொத்த பயிரிடும் பரப்பில் உள்ள கால்வாய்ப்பாசனம் (நதிநீர்ப்பாசனம்) 12.5 சதவீதம் மட்டுமே. இதிலும்கூடப் பெரும்பகுதியை (அதாவது 10 சதவீதத்தை) அண்டை மாநிலங்களை உற்பத்தி இடங்களாகக் கொண்ட ஆறுகளே நிரப்புகின்றன. தமிழகத்திற்குள் ஓடும் மொத்த நதி நீர் அளவில் 95 சதவீதத்தை நாம் பயன்படுத்தினாலும் நாம் இன்னமும் சிக்கனத்துடனும் அதிகத் திறனுடனும் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு 65 லட்சம் லிட்டர் நீர் பயன்படுகிறது என இந்திய மத்திய நீர்த்திறன் குழு குறிப்பிடுகிறது. ஆனால் தஞ்சைப்பகுதியில் இது 2 முதல் 3 மடங்கு வரை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரியாறு பாசனத்தைத் தவிர தமிழகக் கால்வாய்ப் பாசனப்பகுதி நவீனப்படுத்தப்படவில்லை, கால்வாய்களுக்குத் தரை பாவப்படவில்லை. மேலும் 1980 வரையிலான கால்வாய்ப் பாசனப்பரப்பில் ஏறத்தாழ 80 சதவீதம் 1947க்கு முன்பே இருந்ததுதான். கால்வாய்களின் பாசனப்பரப்பைப் பெருக்கவும் இல்லை; நவீனப்படுத்தவும் இல்லை. 90 ஆம் ஆண்டுகளுக்குப் பின் மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக நீர்ப்பாசன திட்டங்களை புறக்கணித்தே வருகின்றன. இது ஒருவிதமான நீர்ப்பாசன வசதி மறுப்பு ஆகும். மேலும் பெய்யும் மழைநீரில் 20 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தும் அளவுக்குக் குளங்கள் உள்ளன. இவையும் சில மாவட்டங்களில் மட்டுமே பெருத்துள்ளது. இப்பொழுதுள்ள நிலையில் கன்னியாகுமரி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே நிலத்தடி நீர்ப்பயன்பாடு நீண்டகாலத்துக்கு வரும் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இது எந்த அளவுக்கு பாசனத்துக்குப் பயன்படும் என்பது ஐயமே.

தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி ஆகிய வட்டங்களில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மையால் அது பாசனத்துக்குப் பயன்படுவதில்லை. எனவே தமிழ்நாடு இன்றைய நீர்ப்பாசனப் பரப்பின் அளவைப் பெருக்க வேண்டுமானால்,

1.         நீர்ப்பாசன வளங்களை நவீனப்படுத்த வேண்டும்.

2.         தமிழகத்தில் பாயும் நதிநீரின் அளவை உத்திரவாதப்படுத்த வேண்டும்; அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

இது வெறும் நீர்ப்பாசனப் பிரச்சினை மட்டுமல்ல; அரசியல் ரீதியில் பல தீர்வுகளையும் இது கோருகிறது.

-           ஒரு தேசிய இனத்துக்கு, அதன் பிரதேச வரையறைக்கு உட்பட்டு மட்டுமே இயங்கக்கூடிய வளங்களின் மீதான முன்னுரிமை இருந்தாக வேண்டும்.

-           அண்டைய தேசிய இனப் பிரதேசங்களிலும் இயங்கக் கூடிய வளங்கள் மீதான பங்கீடு குறித்துக் குறிப்பிட்ட தேசிய இனங்களுக்கு இடையில் ஜனநாயகப் பூர்கவமாக விவாதித்து முடிவெடுக்கும் உரிமை இருந்தாக வேண்டும். இதை வென்றெடுக்கத் தேசிய இனங்களுக்கு இடையே சமத்துவமும் ஜனநாயகமும் கொண்ட தேசிய இனத் தன்னுரிமை தேவை.

-           இதற்கு நாம் முன்பு சொன்ன அரசியல் சக்திகளும் போக்குகளும் பெருந்தடைகளாக இருக்கின்றன. அத்தகைய சக்திகள்.           ஒரு தேசிய இனத்தின் வளங்களை முற்றாகப் பயன்படுத்தும் உரிமையைத் தடுக்கின்றன.

-           தேசிய இனங்களுக்கு இடையே வளங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைமையைச் சிக்கலாக்கித் தேசிய இனங்களுக்கிடையே பகைமை ஏற்படச் செய்கின்றன.

இந்தத் தடைகளை உடைத்தாலன்றிக் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுக்கு நிரந்தர நீண்டகாலத் தீர்வு இல்லை. இதற்கு மட்டுமல்ல; எந்தவொரு தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு இருக்காது.

3. நதிநீர் சிக்கலுக்கு தீர்வு காண இந்திய அரசியல் சட்டத்திலும் இடமில்லை.

காவிரி உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு சரியான, நியாயமான முறையில் தீர்வு காண்பது என்பது மிகவும் சிக்கல் வாய்ந்த ஒன்றாகவே உள்ளது. அவ்வாறு தீர்வு காண்பதற்கான எளிமையான சட்டவிதிகள் அரசியல் சட்டத்தில் எதுவும் இல்லை.

பிரிட்டிஷ் ஆட்சியில் இங்கே சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தவிர பெரும் நீர்பாசனப் பணிமானங்கள்-திட்டங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய இந்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அதுவும் இலண்டனிலிருந்த இந்திய அமைச்சரின் ஒப்பளிப்புக்கு உட்பட்டவையாகவே இருந்தன. 1919 இல் இந்திய அரசுச் சட்டம்-மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்-கொண்டு வந்த பிறகுதான் நீர்பாசனம் மாகாண அரசுக்குட்பட்டதாக- ஆனால் ஒதுக்கப்பட்ட பொருளாக ஆக்கப்பட்டது. இதன்படி ஒரு மாகாணத்திற்கும் இன்னொரு ஆட்சிப் பகுதிக்கும் இடையிலான தொடர்புகளைப் பாதிக்கும் மாகாணங்களுக்கிடையேயான பொருள்கள் மத்திய அரசின் சட்டமியற்றலுக்கு உட்பட்டவையாகவே இருந்தன.

இதைத் தொடர்ந்து, 1935-ல் காலனியாட்சியால் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியல் சட்டப் பிரிவு 130 எந்த ஒரு மாநிலத்தின் நதிநீர் உரிமைகளோ அல்லது அம்மாநிலத்தின் எந்தவொரு பகுதியின் குடிமக்களின் உரிமைகளோ இயற்கையாய் அமைந்த நீர்வள வசதியினால் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய நீர், கிடைக்காமல் போகக் கூடிய நிலைமை ஏற்படும் போது, அரசுக்கோ, கவர்னர் ஜெனரலுக்கோ பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பிரச்சினைகளின் தன்மைக்கேற்ப விசாரணைக்குழு அமைத்து கவர்னர் ஜெனரல் தீர்ப்பளிப்பார். இத்தீர்ப்பால் பாதிக்கப்படுவதாக ஒருமாநிலம் கருதுமானால் இங்கிலாந்து மன்னரிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். கவர்னர் ஜெனரலின் தீர்ப்பில் எந்த நீதிமன்றமும் தலையிடமுடியாது (131, 133 பிரிவுகள்) என்றும் கூறுகின்றன. காலனியகால இந்தச் சட்டங்கள் எல்லாமே இறுதி அதிகாரம் மன்னருக்கே என்றும், நீதிமன்றங்கள் எதுவும் தலையிட முடியாது என்றும் காலனிய ஆட்சி நலன்களுக்கு சேவை செய்யும் வகையிலேயே உருவாக்கி செயல்படுத்தப்பட்டுவந்தன.

இதே போல, நாடு அரைக் காலனியாக மாற்றப்பட்டப் பிறகு கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அரைக்காலனிய நலன்களுக்கு சேவை செய்து வருகின்றன. இந்திய அரசியல் சட்டத்தின் 262-வது பிரிவு 'ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளின் நீரைப் பயன்படுத்துவதில் மாநிலங்களுக்கிடையே ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வதற்கு, பாராளுமன்றம் தனியாக சட்டம் இயற்றிக் கொள்ளலாம்' என்று கூறுகிறது. தனக்குள்ள இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய நாடாளுமன்றம் இரண்டு சட்டங்களை இயற்றியது. அவை

1. நதி நீர் வாரியங்கள் சட்டம் 1956: இச்சட்டத்தின் பிரிவு 2 இல் நாட்டின் பொது நன்மையைக் கருதி பன்மாநில நதிகள் மற்றும் நதிப்படுகைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தவும், வளர்ச்சி அடையச் செய்யவும் இந்திய அரசு இவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்றும் இதற்காக நதிநீர் வாரியங்கள் அமைக்கலாம் என்றும் கூறுகிறது. ஆனால் இதுவரை இந்திய அரசால் ஒருமுறை கூட இச்சட்டம் பயன்படுத்தப்படவில்லை. இது பெயரளவுக்கான ஒரு சட்டமாகவே இன்று வரை இருந்து வருகிறது. எல்லா அதிகாரங்களையும் மையத்தில் குவிக்கும் பாசிச இந்திய ஆளும் வர்க்கங்கள் இதை ஏன் விட்டுவைத்திருகின்றன என்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்களிலிருந்து தாங்கள் வெளியேற்றப்பட்டு விடுவோம் என்பதால்தான்.

2.         மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீட்டுத் தகராறு சட்டம் 1956: இச்சட்டப்படி, மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்த் தகராறுகளைத் தீர்க்க நடுவர் மன்றம் அமைக்குமாறு பாதிக்கபட்ட மாநிலங்கள் மைய அரசைக் கோரலாம். (பிரிவு 3. நீர்ப் பங்கீட்டுத் தகராறைத் தீர்ப்பதற்காக நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்து அரசிதழில் வெளியிட வேண்டும் (பிரிவு 4) நடுவர் மன்றம் தரும் தீர்ப்பை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிடவேண்டும். இத்தீர்ப்பு முடிவானது, சம்பந்தப்பட்ட அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடியது. அதை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் (பிரிவு 6) நடுவர் மன்றத் தீர்ப்பை மாறுபாடு இல்லாமல் நிறைவேற்றத் தேவையான எல்லாம் அடங்கிய திட்டத்தையோ அல்லது திட்டங்களையோ மத்திய அரசு வகுத்து, அவற்றை அரசிதழில் வெளியிட்டு, நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த ஒரு அதிகாரமுள்ள ஆணையத்தை அமைக்க வேண்டும் (பிரிவு 6-அ) மத்திய அரசுக்கு அதிகாரத்தை இதன் துணைப் பிரிவுகள் வழங்குகின்றன. நடுவர் மன்ற நீர்ப் பகிர்வு பிரச்சனைகளில் உச்சநீதி மன்றமோ, மற்ற நீதிமன்றங்களோ தலையிட அதிகாரமில்லை (பிரிவு 11) என்றும் இச்சட்டம் கூறுகிறது.

மேலும், வேளாண்மை நடவடிக்கைகளுக்கு உத்தரவாதமளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. தொழில், வாணிபம் அல்லது செய்தொழில் புரிவதற்கான சுதந்திரத்திற்கும் அரசமைப்பின் 19(அ) பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பதால் விவசாயிகள் அனைவருக்கும் நீர் உட்பட அனைத்திற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் இந்த எல்லாச் சட்டங்களும் ஏட்டளவிலேயே உள்ளன.

காலனிய காலசட்டங்களை ஒத்துள்ள இச்சட்டங்களை வைத்து சில நீர்பகிர்வுப் பிரச்சினைகள், நீர்பாசனங்கள், மின் திட்டம் போன்றவற்றை செய்தாலும் மொத்தத்தில் இந்திய அரசியல் சட்டங்களே பயனற்றவைகளாக, கட்டைப் பஞ்சாயத்துகளுக்குக் கூட லாயக்கற்றவையாகவே உள்ளன. இன்று நாடுமுழுவதும் விவசாயிகளின் நீர்ப்பிரச்சினைகளை மட்டுமல்ல குடிநீர் தேவைகளைக் கூட இச்சட்டங்களால் தீர்க்க முடியவில்லை. நதிநீர் பூசல் சட்டங்களை நீக்க வேண்டும். புதிய சட்டங்கள் கொண்டுவரவேண்டும் என்று ஆளும் வர்க்கக் கட்சிகளே கூச்சலிட்டு வருகின்றன. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட பாசிச பா.ஜ.கவின் வாஜ்பாய் கும்பல் 1987 இல் தேசிய நீர்க் கொள்கை என்ற ஒன்றைக் கொண்டு வந்தது. தமிழக ஜெயா கும்பலும் இக்கொள்கையை வரித்துக் கொண்டது. அதுமுதல் இன்றைய மோடி ஆட்சிவரை இக்கொள்கையின்படி ஆறுகளையும், நிலத்தடி நீரையும், நிலத்தையும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் பெரும் தரகுமுதலாளிகளுக்கும் தாரைவார்க்கத் தொடங்கிவிட்டன. அதாவது உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் நீர்வளத் துறை போன்ற இயற்கை வளங்களிலும் புகுந்துவிட்டன. இதற்கு ஏற்ப இனி புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு முன்னோட்டம்தான் தேசிய நீர்க்கொள்கை. இத்தகைய புதிய காலனியச் சட்டங்கள் மூலம் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவே முடியாது. இவ்வாறு இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் நதிநீர் பிரச்சினைகளைக் கூட ஏன் குடிநீர் பிரச்சினைகளைக் கூட தீர்க்க வக்கற்றுப் போய்விட்டது.

4.         நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பும்; அதற்கு முன்பும் பின்பும் நடந்த நாடகங்களும், நயவஞ்சகங்களும்

1968 ஆம் ஆண்டிலிருந்து காவிரி நீர்பகிர்வுப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்காததாலும் நடுவர்மன்ற கோரிக்கை கூட ஏற்கப்படாததாலும் 1971இல் தமிழக அரசும், காவிரி விவசாய சங்கமும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குகள் தொடுத்தன (வ.எண்-1/71, வ.எண்-2/71). இந்த வழக்குகள் நடந்திருந்தால் ஒருவேளை காவிரி நீர் பிரச்சனையில் சற்று நிலைமை மாறியிருக்கலாம். ஆனால் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்ற அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராவின் வஞ்சக வார்த்தைகளை நம்பி வழக்குகளை வாபஸ் பெறவைத்தார் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி. இவ்வாறு 1924-ஒப்பந்தம் 1974-ல் மறு பரிசீலனைக்கு வரும்முன்பே சிக்கல் தொடங்கிவிட்டது.

எத்தனையோ சந்திப்புகள். எத்தனையோ பேச்சுவார்த்தைகள். எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. இதனால், 'இளவுகாத்த கிளிபோல' தங்கள் வாழ்க்கை ஆகிவிடக் கூடாதே என்று அச்சப்பட்ட 'காவிரி பாசன விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கம்' 1983 நவம்பர் 18-ல் உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட்மனுவைத் தாக்கல் செய்தது. இது 1989-ல் தான் விசாரணைக்கு வந்தது. அப்போதைய வி.பி.சிங் அரசு, "பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவிட முடியும்' என்று கூறி இதுவரை நடுவர் மன்றம் அமைப்பதையும், இந்த வழக்கு விசாரணையை நடத்தாமலும் தடுத்து வந்த பாசிச காங்கிரஸ் கட்சியைப் போல் உச்சநீதிமன்றத்தில் கூறமுடியாத அரசியல் நிர்ப்பந்தத்தில் இருந்தது. எனவே "இதுவரை நடந்த காவிரி நீர்ப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தையில் எவ்வித முடிவும் உடன்பாடும் ஏற்படவில்லை. இனி என்ன செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறினாலும் அதுபோன்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராக உள்ளதாகக்" கூறியது. பிறகு வந்த உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 2.6.90 அன்று காவிரி நடுவர் மன்றம் அமைக்க ஆணையிட்டது மத்திய அரசு.

நடுவர் மன்றம் செயல்படத் தொடங்கியதும், இறுதித் தீர்ப்பு வரும்வரை இடைக்கால நிவாரணம் வேண்டும் என்று தமிழ்நாடு கேட்டுக் கொண்டது. தனக்கு அந்த அதிகாரமே இல்லை என்று நடுவர் மன்றம் தப்பிக்கும் மன்றமானது. பின்பு மீண்டும் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் 21.06.91-ல் நடுவர் மன்றம் தமது இடைக் காலத் தீர்ப்பை அளித்தது.

நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பும், விளக்கத் தீர்ப்பும்

காவிரிப் பாசனப் பகுதிகளைப் பார்வையிட்ட நடுவர்மன்றம் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நீர் நிலவரங்களைக் கணக்கில் கொண்டு, 1980-முதல் 1990-வரை காவிரியில் மேட்டூருக்கு வந்த நீரின் அளவை வைத்து 205 டி.எம்.சி. நீரை தமது இறுதித் தீர்ப்பு வரும்வரை தமிழகத்திற்கு கர்நாடகா விடவேண்டும் என்றது. 370 டி.எம்.சி நீரைக் கேட்ட தமிழகம் வேறுவழியின்றி கிடைத்ததை வரவேற்றது. ஜூன் முதல் செப்டம்பர் வரை 137 டி.எம்.சி.யும், அக்டோபர் முதல் மே வரை 68 டி.எம்.சி.யும் வகை இட்டு மேட்டூருக்கு விட வேண்டும். இதில் புதுவைக்கு 6 டி.எம்.சி.யை தமிழகம் தரவேண்டும். கர்நாடகாவின் அப்போதைய பாசனப் பரப்பான 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல் இனி விரிவு படுத்தக் கூடாது என்று கூறியது நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு.

இந்த நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு கர்நாடகத்திற்கு மட்டுமே பாசன உச்சவரம்பு விதித்துள்ளது. தமிழகத்திற்கு விதிக்கவில்லை. 205 டி.எம்.சி அட்டவணைப்படி மாதந்தோறும் வழங்கவேண்டும் என்று இடைக்காலத் தீர்ப்பு கூறுகிறது. நீர் உபரியில்லாத போதும், வறட்சிக் காலத்திலும் எப்படி வழங்கமுடியும்? எனவே நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கர்நாடகம் அறிவித்து, "காவிரி பாசனப் பாதுகாப்பு" அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டம் இந்திய அரசியல் சட்டதிற்கே விரோதமானது என்று உச்சநீதிமன்றம் கூறியதால் மீண்டும் நடுவர் மன்றத்திடமே மேல் முறையீடு செய்தது கர்நாடகா?

மீண்டும் விசாரித்த நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்புக்கு ஒரு விளக்கத் தீர்ப்பை 03.04.92இல் அளித்தது. இதன்படி கர்நாடகம் தமிழகத்திற்கு கொடுத்தது போக மீதமுள்ள நீரைப் பயன்படுத்தி பாசனப் பரப்பை விரிவுபடுத்திக் கொள்ளலாம். 205 டி.எம்.சி. நீரளவில் மேட்டூருக்கு மேல் இரு மாநிலங்களுக்கும் நடுவில் 64 கி.மீ. ஓடிவரும் காவிரியின் தமிழக எல்லையில் கிடைக்கும் 25 டி.எம்.சி நீரைக் கழித்து 185 டி.எம்.சி மட்டுமே கர்நாடகா கொடுத்தால் போதும் என்ற ஒரு கட்டைப் பஞ்சாயத்தை நடுவர் மன்றம் செய்தது. ஆனால் பற்றாக் குறைக் காலத்தில் இருக்கும் நீரை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதை நடுவர் மன்றம் வசதியாக மறைத்து விட்டது. அதாவது வறட்சி மற்றும் வளமான காலங்களிலும் காவிரி நீரில் தமிழகத்திற்கு சமஉரிமை என்பதை நடுவர் மன்றம் முன்வைக்கவில்லை. இதை வாய்ப்பாக எடுத்துக் கொண்ட கர்நாடகா தமக்கு எப்போதும் பற்றாக்குறையே என்று தமிழகத்தை வஞ்சித்து வருவதன் விளைவுதான் காவிரி இன்று இன்னொரு பாலாறாக மாறுவதற்கு காரணம். மேலும் நடுவர்மன்றத் தீர்ப்பு வந்து பல வருடங்களாகியும் இது அமலாவது அந்தரத்திலேயே நிற்கிறது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தபிறகும் கர்நாடகா அதை ஏற்கவில்லை. நடுவர் மன்ற தொழில் நுட்பக்குழு மற்றும் மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகா மட்டுமல்ல. மத்திய அரசே நடைமுறைப்படுத்த மறுக்கிறது.

புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் மத்திய அரசும், இந்த நடுவர் மன்றத்தீர்ப்பை அமல்படுத்த நான்கு மாநில விவசாயிகள், ஜனநாயக சக்திகளை உள்ளடக்கிய உண்மையான அதிகாரமுள்ள ஓர் ஆணையத்தை அமைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தபோது மத்தியில் ஆட்சியிலிருந்த பாசிச நரசிம்மராவின் காங்கிரஸ் அரசு இத்தீர்ப்பை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமலே தமிழகத்திற்கு துரோகத்தையும் கர்நாடகத்திற்கு மகிழ்ச்சியையும் தந்தது. அடுத்து வந்த குஜ்ரால் அரசோ அற்ப ஆயுளில் முடிந்து போனது. பின்பு வந்த பாசிச பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசோ நிர்பந்தங்களின் காரணமாக அதிகாரமற்ற ஓர் ஆணையத்தை 1998 இல் அமைத்தது. இந்த போலி ஆணையத்தால் இன்றுவரை இம்மியளவும் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சி முதல் பாசிச பா.ஜ-கவின் இன்றைய மத்திய அரசுவரை காவிரி பிரச்சினையில் பாம்புக்கும் நோகாமல் பாம்படிக்கும் கோலுக்கும் நோகாமல் கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்பட்டு வந்தன. பாசிச மோடியின் பா.ஜ.க-ஆட்சியோ வெளிப்படையாக கர்நாடகத்துக்கு சாதகமாக செயல்படுகிறது. நடுவர் மன்ற தீர்ப்பை அமுல்படுத்தாமல் அதிகாரமுள்ள ஆணையத்தை அமைக்காமல் மத்திய அரசு இந்திய அரசியல் சட்டத்தை மீறி செயல்படுவதற்கான காரணம் கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புகள் இவ்விரு கட்சிகளுக்கும் இருப்பதும், தமிழகத்தில் இக்கட்சிகளுக்கு வாய்ப்பே இல்லாததும் ஆகும். மேலும் மாநில தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கக் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே பாசிச மத்திய ஆளும் கும்பலுக்கு போட்டிபோட்டு சேவை செய்வது என்ற அரசியல் சந்தர்ப்பவாதப் போக்குகளுமே இதற்குக் காரணம். இவை எதுவுமே காவிரி நதிநீர்ப் பகிர்வுப் பிரச்சினைக்குரிய சரியான தீர்வை முன்வைப்பதில்லை.

இந்தியா முழுதும் தீராத நதிநீர்ச் சிக்கல்

வரலாற்று ரீதியாகவே இந்தியாவில் காவிரி மட்டுமல்ல பல ஆற்று நீர் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே தொடர்கின்றன. இந்தியாவில் ஓடும் 18 பெரிய ஆறுகளில் 17 ஆறுகள் மாநிலங்களுக்கிடையில் ஓடும் ஆறுகள் ஆகும். இதில் எதில் ஒன்றிலும் இதுநாள் வரையில் சிக்கல்கள் தீர்க்கப்படவே இல்லை.

1.         கோவா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு இடையில் உள்ள மகதாயி நதிநீர் விவகாரம்;

2.         ஒரிஸா மற்றும் ஆந்திரபிரதேசத்திற்கு இடையில் உள்ள வன்சத்ரா நதிநீர் விவகாரம்;

3.         மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு இடையில் உள்ள கிருஷ்ணா நதிநீர் விவகாரம்;

4.         காவிரி நதிநீர் விவகாரம்;

5.         பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சல் பிரதேசத்திற்கு இடையில் உள்ள ராவி பியாஸ் நதிநீர் விவகாரம்

இந்த ஐந்து வழக்கிலும், மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் தாவாச்சட்டம் 1956 இன் படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்கள் இன்னும் அலுவலக அளவிலேதான் உள்ளன, இனிமேல்தான் செயல்பட வேண்டியுள்ளது. காவிரி மற்றும் ராவி பியாஸ் நதிநீர் விவகாரங்களில் கூட தீர்ப்பாயங்களில் எந்த செயல்பாடும் ஏற்படவில்லை. கிருஷ்ணா நதிநீர் விவகார வழக்கில் கூட, நடுவர்மன்றம் ஆலோசித்த ஒரே பிரச்சினை என்னவெனில் புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கும் ஆந்திரபிரதேசத்திற்கும் இடையில் நீர் பங்கீடு பற்றியதே ஆகும். எடுத்துக்காட்டு மத்திய நீர்வளத்துறையின் 2016-17 பட்ஜெட்டில் ராவி பியாஸ் தீர்ப்பாயத்திற்கு 0.68 கோடி, காவிரி தீர்ப்பாயத்திற்கு ரூ 2.8 கோடி, கிருஷ்ணா தீர்ப்பாயத்திற்கு ரூ 2.6 கோடி, வன்சத்ரா தீர்ப்பாயத்திற்கு ரூ 4.52 கோடி மற்றும் மகதாயி தீர்ப்பாயத்திற்கு ரூ 3.1 கோடி நிதி ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

கடந்தகால தீர்ப்பாயங்களின் உண்மை நிலை

நர்மதா நதிநீர் விவகாரங்களின் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு 1979 இல் வந்தது, கோதாவரி நதிநீர் விவகார தீர்ப்பாயத்தின் தீர்ப்பு ஜுலை 1980-ல் அறிவிக்கப்பட்டது. கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு டிசம்பர் 2010-ல் அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பாயங்கள் பிறகு செயல்படவில்லை. இருப்பினும், கிருஷ்ணா தீர்ப்பாய வழக்கில், தெலுங்கானா மாநில உருவாக்கத்திற்குப் பிறகு, ஆந்திரபிரதேசத்திற்கும் தெலுங்கானாவிற்கும் நீர்பகிர்மானம் தொடர்பாக மறுபடியும் இது இயங்கிக் கொண்டிருக்கிறது.

நர்மதா நதிநீர் விவகாரங்களின் நடுவர்மன்ற தீர்ப்பு முழுவதுமாக பிரச்சினையை தீர்க்கவில்லை. பலவருடங்களுக்குப் பிறகும் குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு இடையில் பூசல்கள் நீடிக்கின்றன. நடுவர்மன்றம் தீர்மானித்த பெருந்திட்டமான சர்தார் சரோவர் திட்டம் (SSP), 37 வருடங்களுக்குப் பின்னும் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு நடுவர் மன்றம் செவி கொடுக்காமை குறித்து பல்வேறு மனுக்களும் போடப்பட்டுவிட்டன. எந்த வறண்ட கட்ச் பகுதி மக்களுக்காக திட்டம் முன்மொழியப்பட்டதோ, அப்பகுதி மக்கள் அதிகப்படியான பங்கு கேட்டு உச்சநீதி மன்றம் சென்றனர். நடுவர்மன்றத் தீர்ப்பு எட்டு ஆண்டுகளாக பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே இரண்டு மாநிலங்களும் அடுத்த கட்டப் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

கோதாவரி நதிநீர் தீர்ப்பாய வழக்கில், அதன் முடிவுகளில் ஒன்றான போலாவரம் அணையின் கட்டுமானப் பணிகள் தொடர்வதோடு பெரும் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன. ஏற்கனவே கிருஷ்ணா ஆற்றுப்படுகை சச்சரவுகளுக்கு இரண்டாவது தீர்ப்பாயத்தின் தேவை உள்ளதாக பார்க்கப்பட்டு அந்தப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. நதி நீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட நடுவர்மன்ற தீர்ப்பாயங்கள் எதுவும் பிரச்சினைகளை தீர்க்கவில்லை.

இவையனைத்தும் தீர்ப்பாயங்களால் மட்டுமே நதிநீர் பங்கீட்டு சிக்கல்களை நிரந்தரமாக தீர்க்க முடியாது என காட்டுகின்றன.

இந்த தீர்ப்பாயங்களின் கூடவே, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் (Ministry of Water Resources) வலைதளம் இன்னும் மூன்று நடப்பிலுள்ள விவகாரங்களை பட்டியலிட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள போலாவரம் அணை (இந்திராசாகர்), ஒரிஸ்ஸா மற்றும் சட்டீஸ்கர் மாநில பழங்குடி இனப்பகுதிகளின் பெரும்பகுதிகளை இந்த அணை மூழ்கடித்து விடும் என இவற்றிற்கு இடையில் சச்சரவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பு மதிப்பீடு அல்லது மக்கள் ஆலோசனை செயல்பாடோ நடைபெற்றிருக்கவில்லை. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் மத்திய அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change) தடையாணை பிறப்பித்துள்ளது, ஆனால், விசித்திரமாக, இந்த ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மத்திய அரசு இதை தேசியத் திட்டமாக அறிவித்து முழு நிதியும் வழங்கியது. இருப்பினும், இந்த திட்டத்திற்கு எதிரான பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தெலுங்கானாவும் பயன், பகிர்மானம் மற்றும் உப்பங்கழி தாக்கம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியது. இவ்வித பிரச்சினைகளுக்கு இடையிலும் எவ்வாறு இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது மர்மமாகவே உள்ளது.

(Ministry of Water Resources) அட்டவணையில் உள்ள இரண்டாவது விவகாரம் கோதாவரி மீதான பாபலி குறுக்கணை ஆகும். (Ministry of Water Resources) வலைதளம் இந்த விவகாரம் பற்றி குறிப்பிடுவது: "ஆந்திர பிரதேச அரசு மே 2005 இல் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தது என்னவென்றால் மஹாராஷ்டிரா அரசு போச்சம்படு திட்டப் பகுதியின் (ஸ்ரீராம்சாகர் திட்டம்) மூழ்கும் பகுதியில் பாபலி குறுக்கணை கட்டிக் கொண்டிருப்பது கோதாவரி நதிநீர் தீர்ப்பாயத்தின் 07.07.1980 தேதியிட்ட தீர்ப்பை மீறும் செயலாகும். நாந்தேடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோதாவரி நதியின் மீது பாபலி குறுக்கணை அமைந்துள்ளது; மகாராஷ்டிரா-ஆந்திரபிரதேச எல்லையிலிருந்து 7.0 கி.மீ உயர் பகுதியில் உள்ளது. கோதாவரி நதியின் மீதான போச்சம்படு அணை பாபலி குறுக்கணையிலிருந்து 81கி.மீ கீழுள்ளது. போச்சம்படு நீர்த்தேக்கம் மஹாராஷ்டிரா பிரதேசத்திற்குள் 32 கி.மீ தூரத்திற்கு விரிவடைந்துள்ளது. நிலையான காலங்களில் இந்த பிரதேசத்திற்குள்ளே ஆற்றுப்படுகையின் மூழ்கும் பகுதி அமைகிறது."

மார்ச் 1, 2014 தெலுங்கானா மாநில உருவாக்கத்தின் தொடர்ச்சியாக, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவிற்கும் இடையில் பிரச்சினைகள் தோன்றியது, ஆனால் சமீபத்தில் இரண்டு மாநிலங்களுக்குமிடையில் உடன்படிக்கை கையெழுத்தாகிவிட்டதால் அந்த சச்சரவுகள் இப்போது வரலாறாகியிருக்கலாம்.

(Ministry of Water Resources) அட்டவணையிலுள்ள மூன்றாவது விவகாரம் கேரளா மற்றும் தமிழ்நாட்டுக்குமிடையிலுள்ள முல்லைப் பெரியாறு அணையாகும். இந்த விவகாரம் அடிப்படையில் 120 வருடத்திற்கு மேலான கட்டுமான அணையின் பாதுகாப்பு பற்றியது ஆகும். தமிழ்நாடு அனைத்து பயன்களையும் பெற்றாலும், அணை உடைபட்டால் கேரளாதான் பாதிப்படையும். கேரளா அப்பகுதியில் புதிய அணை கட்ட விரும்புகிறது. தமிழ்நாடு தற்போது பெறும் அதே அளவு நீரையும் தொடர்ச்சியாக தர ஏற்றுக் கொண்டிருந்தாலும் ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு இந்த ஆற்றுப்படுகையிலிருந்து சரியான பங்கீடு தரப்படுவதில்லை. ஆனால் தமிழ்நாடு அணை மாற்றத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. இப்பிரச்சினையும் தொடர்கிறது.

மேலும் பல கொதிக்கும் விவகாரங்கள் உள்ளன. அதில் பெரியது சட்டீஸ்கர் மற்றும் ஒரிஸ்ஸாவிற்கு இடையில் மகதாயி நீர் பங்கீடு பிரச்சினை தீர்ப்பாயத்திற்கு செல்லும் கட்டத்தில் உள்ளதாகும். மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவாச் சட்டம் 1956 இன் படி ஒரிஸ்ஸா அரசு ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளது. மத்திய அரசால் கூட்டப்பட்ட தலைமைச் செயலர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கிடையிலான கூட்டங்கள் இன்னும் பிரச்சினையை தீர்க்க உதவவில்லை.

சில ஆண்டுகளாக தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கு இடையில் பாலற்று நீரை பங்கிட்டுக் கொள்வதில் ஒரு சச்சரவு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. மற்றொன்று தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கும் இடையில் காவிரியின் உபநதியின் மீதான அட்டப்பாடி பாசனத் திட்டத்திற்கு முதல்நிலை சுற்றுச்சூழலுக்கான தடையை நீக்க கேரளா கேட்பதில் தொடங்கியிருக்கிறது. அரியானா மற்றும் பஞ்சாபிற்கும் இடையில் அவ்வப்போது சட்லஜ்-யமுனா நதிநீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை தலைதூக்குகிறது. யமுனா ஆற்றங்கரையின் தலைமடை மாநிலங்களுக்கிடையிலும் தீர்க்கப்படாமல் சச்சரவுகள் உள்ளன. தபி நதிநீரை பங்கிட்டுக் கொள்வதில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்துக்கும் இடையில் பர்-தபி-நர்மதா மற்றும் டமன்கங்கா-பின்ஜால் ஆறுகளை இணைக்கும் திட்டங்களுக்கான அனுமதி அளித்தல் ஆகியவற்றிலும் பிரச்சினை சில வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ளது. எனினும் இவற்றில் எந்த பிரச்சினையுமே இதுவரை தீர்ப்பாயம் செல்லவில்லை. இவ்வாறு இந்தியா முழுவதும் நதி நீர் சிக்கல் தீர்க்கப்படாமல் தொடர்வதற்குக் காரணம், நதிநீர் பிரச்சினையில் மத்திய, மாநில ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கக் கட்சிகளும், உச்ச நீதி மன்றமும், தீர்ப்பாயங்களும் சமபங்குக் கோட்பாட்டை ஏற்க மறுப்பதேயாகும்.

5. சமபங்கீடுத் கோட்பாடு - "ஹெல்சிங்கி" கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்போம்!

கர்நாடகம், தமிழகத்தைப் போலவே இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிடையேயும் ஓடும் ஆறுகள் தொடர்பாக, நீர்பகிர்வுக்கான தகராறுகள், பூசல்கள் எழுந்துள்ளன. இத்தகைய, நதிநீர் தகராறுகள் தொடர்பான நெடிய வரலாற்றில் நீர்பங்கீடுகள் குறித்துப் பல்வேறு கொள்கைகளும் கோட்பாடுகளும் பல அமைப்புகளால் வகுக்கப்பட்டு அவற்றுள் சரியானது உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்படி இருக்க, ஒரு நாட்டிற்குள் பல மாநிலங்களில் ஓடும் ஆறுகள் பற்றிய பூசல்களை தீர்ப்பதில் என்ன சிரமம்? நதிநீர் பங்கீடுகள் குறித்த கோட்பாடுகளில் நான்கு முக்கியமான கோட்பாடுகள் உள்ளன.

1. தேசிய இறையாண்மைக் கோட்பாடு (The Doctrine of Territorial Sovereignty) இதன்படி தன் எல்லைக்குட்பட்ட ஆற்று நீர் மற்றும் அதன் பயன்பாடுகள் மீது, முழு இறையாண்மையையும் அறுதியான சட்ட அதிகாரத்தையும் கட்டுப்பட்டையும் அந்நாடே பெறுகிறது.

இக்கோட்பாட்டின்படி ஆற்றின் கீழ்ப்படுகை உழவர்களுக்கு தேவைப்படும்போது நீர் கிடைக்காது. இத்தகைய ஒரு தவறான கருத்து, அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் ரியோகிராண்ட் ஆறு தொடர்பாக எழுந்த பூசலில் அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் ஹார்மன் 1895 இல் முன்வைத்த கருத்து. இந்த ஹார்மன் கோட்பாடு அடாவடியானது என்று நதிநீர் பிரச்சினையில் தலைசிறந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். இக்கோட்பாடு உலகளவிலும், இந்திய அளவிலும் இதுவரை பயன்படுத்தப்படவில்லை. இதை நர்மதை, கிருஷ்ணா, ராவி, பியாஸ் ஆகிய ஆறுகள் தொடர்பாக அடுத்தடுத்து அமைக்கப்பட்ட தீர்பாயங்கள் கூட திட்டவட்டமாக ஏற்க மறுத்துவிட்டன. ஓரங்கட்டி, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இக்கோட்பாடு சட்டவியல் அடிப்படையிலோ, நீரியல் அடிப்படையிலோ எந்த நீதிமன்றத்திலும் செல்லுபடியாகாது. இக்கோட்பாட்டைத்தான் தற்போது கர்நாடகா பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆற்றின் மேல் படுகை நாடுகள் இக்கோட்பாட்டை வலியுறுத்துகின்றன.

2. ஆற்றுப்படுகை உழவர்களின் கோட்பாடு (The Doctrine of Riparian Rights) இதன்படி, ஆற்றின் கடைகோடியிலுள்ள நாடு ஆற்றில் இயற்கையாக ஓடிவரும் நீரைக் குறைவின்றி பெறவேண்டும். இது முந்தைய ஹார்மன் கோட்பாட்டிற்கு நேர்ரெதிரானது. இது ஆற்றின் கீழ்படுகை நாடுகள் வலியுறுத்தும் கோட்பாடு. இதுவும் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்படாத கோட்பாடே. நாம் நிராகரிக்க வேண்டிய கோட்பாடே.

3. உடைமைக் கோட்பாடு (The Doctrine of Prior Appropriation) இதன்படி, நல்ல பயன்பாட்டுக்காக ஒன்றைத் தனக்கென உரித்தாக்கிக் கொள்வது. முதலில் தக்க நேரத்தில் தன்னுடைமையாக்கிக் கொள்பவருக்கே அதன் மீதான முதல் உரிமையுண்டு.

இது இன்று, ஏகாதிபத்தியவாதிகளுக்கு சேவை செய்யும் கோட்பாடாக இருக்கிறது. இதுவும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படாத கோட்பாடே. நாம் நிராகரிக்க வேண்டிய கோட்பாடே. முறியடிக்கப்பட வேண்டிய கோட்பாடே.

4. சமபங்கீட்டுக் கோட்பாடு (The Doctrine of Equitable Apportionment) இதன்படி, குறிப்பிட்ட பரப்பு அல்லது அமைப்பிற்குட்பட்ட ஆற்று நீரின் பயன்கள், அவ்வமைப்பு அல்லது பரப்பின் மீது ஆற்று நீரின் பயன்களை, அவ்வமைப்பு அல்லது பரப்பின் மீது சட்ட அதிகாரம் செலுத்தும் நாடுகள் தம்மிடையே சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கி நகரில் 1966 இல் நடந்த பன்னாட்டு சட்ட சங்கத்தின் (Internation Law of Association) 52வது மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள், வந்தடைந்த முடிவே ஹெல்சிங்கி கோட்பாடு என்றழைக்கப்படுகிறது. ஆற்றின் மிகைநீர் வடிநிலப் பகுதி, பிரிக்க முடியாத நீரியல் அலகாகும். இதன்படி அடிப்படையிலேயே வடிநிலப் பகுதிக்கான பங்கீடு, முடிவு செய்யப்பட வேண்டும். அரசியல் அடிப்படையில் பல்வேறு நாடுகள் உள்ளன என்பது பங்கீட்டை எவ்வகையிலும் பாதிக்காது என்று கூறும் இக் கோட்பாடு 37 பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.

ஹெல்சிங்கி கோட்பாட்டின் 4 முக்கிய அம்சங்கள்

1.         ஒரு வடிநிலப் பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்ட பகுதியாக பாவிக்க வேண்டும். அவற்றைத் தனித் தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது.

2.         உடன்பாடு அல்லது தொன்றுதொட்டு நிலவிவரும் பழக்க வழக்கங்கள் அல்லது அதுபோன்ற ஏதாவது இருப்பின் அவை சம்பந்தப்பட்ட நாடுகளைக் கட்டுப் படுத்தும். அப்படி இல்லாத பட்சத்தில் ஆறு பாய்ந்தோடும் நாடுகள் அனைத்தும் அந்த ஆற்றின் படுகைப் பகுதியில் நியாயமானதாகவும் சம அளவிலும் பங்கைப்பெறும்.

3.         ஒவ்வொரு ஆற்றைப் பொறுத்தும், அது சம்பந்தமாக சகல உண்மையின் விவரங்களின் அடிப்படையில் அந்த ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதே நியாயமான சம அளவிலான பங்கீடாகும். அவற்றின் படுகைப் பகுதியில் உள்ள ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் சட்டப்பூர்வமான உரிமைகளை மதிக்க வேண்டியது நீங்காத கடமையாகும்.

4.         ஒரு நாட்டின் சட்டப்பூர்வமான உரிமையை மற்றொரு நாடு மதிப்பது என்பதில் மற்றொரு நாட்டின் சட்டப்பூர்வமான உரிமைகளை யாரும் மீறாமல் பார்த்துக் கொள்வதும் ஆகும்.

சமபங்கீட்டுக் கோட்பாடான இந்தக் கோட்பாட்டை வைத்துத்தான் உலகில் நதிநீர் பூசல்கள் தீர்க்கப்படுகின்றன. காவிரி நீர்பகிர்வுப் பிரச்சினையிலும் இக் கோட்பாட்டின் படிதான் தீர்வு காண முடியும். தீர்வுகாண வேண்டும். இதை உடனடியாக அமலுக்குக் கொண்டு வரவேண்டும். ஆனால் நமது நாட்டு ஆளும்வர்க்கங்களும், உச்சநீதி மன்றமும், நடுவர் மன்றமும் இதுவரை காவிரி நீர் பகிர்வுப் பிரச்சினையில் இத்தீர்வை சரியான முறையில் முன்வைத்து அமல்படுத்தவில்லை. அமல்படுத்த மறுக்கின்றன

வெள்ளத்திலும் வறட்சியிலும் சமபங்கு

அதிக மழைபெய்து காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காலங்களில் காவிரியில் பிரச்சினை இல்லை. ஆனால் மழைகுறைவாக பெய்யும் ஆண்டுகளில், இருக்கும் நீரை பகிர்ந்து கொள்வதில்தான் பிரச்சினை எழுகிறது. எனவே தண்ணீர் பற்றாக்குறைக் காலங்களில் அதாவது வறட்சிக் காலங்களில், இருக்கும் நீரை சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள கர்நாடகம் மறுக்கிறது. வெள்ளத்திலும், வறட்சியிலும் சமபங்கை அடைய வேண்டுமானால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதற்கு ஆலோசனை வழங்க ஒரு தொழில் நுட்பக்குழு அமைக்கப்பட வேண்டும். வெறும் நீதிமன்றத்தாலோ, பேச்சுவார்த்தையாலோ இதைத் தீர்க்கமுடியாது. எனவேதான் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

காவிரி சிக்கலில் கர்நாடகத்தின் அடாவடி

காவிரியில் மையாமான பிரச்சினை என்பது, ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நீர்ப்பாசன வாய்ப்புகளை பாதுகாத்துக்கொள்ள முடியுமா என்பதேயாகும். உதாரணமாக, கர்நாடக தரப்பில் இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் வளர்ச்சி குறைவாக இருந்தது. ஆனால், 1970-களுக்குப்பிறகு விரைவாக வளர்ச்சியடைந்தது. 1901-ல் 1.24 லட்சம் ஹெக்டேராகவும், 1970-களில் 2.73 லட்சம் ஹெக்டேராகவும், 1990-களில் 4.53 ஹெக்டேர்களாகவும், தற்போது 10 லட்சம் ஹெக்டேர்களாகவும் பாசனப் பரப்பு வளர்ச்சியடைந்தது. தமிழ்நாட்டு தரப்பு 1901-ல் 5.7 லட்சம் ஹெக்டேராக இருந்த பாசனப் பரப்பு, 1990-களில் 9.18 லட்சம் ஹெக்டேராகவும், தற்போது 8 லட்சம் ஹெக்டேர்களாகவும் சுருங்கிவிட்டது.

கர்நாடகா, தேசிய இறையாண்மைக் கோட்பாட்டின் அடிப்படையில் காவிரி ஆற்று நீர் அனைத்தும் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கோருகிறது. கர்நாடகம் பெருமளவில் பாசனப் பரப்பை பெருக்கிக் கொண்டதை, பலநூற்றாண்டுகளாக காவிரியில் தனது உரிமை மறுக்கப்பட்டு வந்ததைக் காட்டி நியாயப் படுத்துகிறது. கடைமடையைச் சார்ந்த தமிழகமோ, பாரம்பரியமாக இருந்த உரிமையைக் கோருவதோடு வெள்ளம், வறட்சி, மாசுபடுதலை காட்டி உரிமை கோருகிறது.

கர்நாடகா கடந்த காலங்களில் ஒருதலைபட்சமாக பாதிக்கப்பட்டு வந்ததை முன்வைக்கிறது. பிரிட்டீஷ் காலனி ஆட்சியாளர்கள் தங்களது சென்னை மாகாண நலன்களை காத்துக் கொள்வதற்கு மைசூரு சமஸ்தானத்தின் நீர் பாசனத் திட்டங்களை அமல்படுத்துவதை முழுவதுமாக தடை செய்து அழித்தனர். 1892 மற்றும் 1924 ஒப்பந்தங்கள், அரசியல் ரீதியில் பலவீனமான மைசூரு அரசாங்கத்தின் மீது திணிக்கப்பட்டன என்று கூறி தனது தரப்பை நியாயப்படுத்துகிறது. வெள்ளம் வந்தால் திறந்துவிடுகின்ற வடிகால் பகுதியாக தமிழகத்தை மாற்றுகிறது. கர்நாடகாவின் இத்தகைய அராஜகப் போக்கையும் அடாவடித் தனத்தையும் ஒருபோதும் ஏற்கமுடியாது.

மறுபுறம், தமிழகம் உடைமை கோட்பாடு பேசுகிறது. உலகம் முழுவதும் ஆரம்பகாலங்களில் நீர்ப்பாசன வளர்ச்சியானது மண்வளம், நீர் மற்றும் ஆற்றுப்படுகை வசதி போன்றவை வடிகால் பிரதேசங்களில்தான் உருவானது. மேலும் காவிரி நீர்ப்பாசன கட்டமைப்புகள் பிரிட்டீஷ் ஆட்சியில்தான் வளர்ச்சியடைந்தது என்று கூறுவதும் தவறு. அது 2 ஆம் நூற்றாண்டிலிருந்தே காவிரியை பயன்படுத்தி வந்தது என்று வாதிடுகிறது. இதனடிப்படையில்தான் மாறிமாறி தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள் கடைமடை மாநிலமான தமிழகத்தின் நலன்கள் என்பது பாரம்பரிய உரிமை என்று வாதிடுகின்றன. இது சமபங்கு கோட்பாட்டிற்கு எதிரானதாகும். எனவே இத்தகைய கோட்பாடுகள் நதி நீர் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவாது. காவிரி பிரச்சினை உள்ளிட்ட எந்த ஒரு ஆற்று நீர் பிரச்சினைக்கும் சமபங்கு கோட்பாடான "ஹெல்சிங்கி" கோட்பாட்டின் அடிப்படையில்தான் தீர்வு காணமுடியும்.

6. காவிரி பிரச்சினையில் திராவிடக் கட்சிகளின் துரோகம்.

காவிரி பிரச்சினையில் பாரம்பரிய உரிமை பேசும் தமிழக ஆளும்வர்க்கக் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டும் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் எதிர்த்து சட்டரீதியாக தமிழக உரிமைகளை நிலைநாட்டுவதில் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளையே எடுத்தன. ஜெயலலிதா நீதிமன்றத்தின் மூலமே அனைத்தையும் சாதித்துவிட முடியும் என்று நடுவர் மன்றம் அமைப்பதைப் பற்றி அக்கறையற்றவராகவே கடைசி வரை இருந்தார். மத்திய அரசோடு அடிப்படையில் இணக்கமான உறவு வைத்துக் கொண்டு, வெளித் தோற்றத்தில் வீராவேசம் பேசி மோசடி செய்தார். கருணாநிதியோ நடுவர்மன்றம், பேச்சுவார்த்தை என்று பேசிக்கொண்டே குடும்பநலனை முதன்மைப்படுத்தி மத்திய அரசோடு அரசியல் பேரம்பேசி தமிழகத்தின் நலன்களை காவு கொடுத்தார்.

காவிரி பிரச்சினையில் ஜெயலலிதா செய்த தவறுகள்

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு வெளிவந்த 1991-ஜூன் மாதத்தில்தான் ஜெயலலிதாவும் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த அ.தி.மு.க, 11 எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதே மாதம்தான் நரசிம்மராவின் தலைமையில் காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியை அமைத்தது. அக்கட்சிக்கு 265 எம்.பி.களின் ஆதரவுதான் இருந்தது. ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 எம்.பி.களின் ஆதரவு தேவையாகும். அ.தி.மு.க.வின் 11 எம்.பி.களின் ஆதரவோடுதான் நரசிம்மராவ் ஆட்சி அமைக்க முடிந்தது.

1991 இல் நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. நரசிம்மராவின் மத்திய அரசு அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அதிகாரம் உள்ள ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். நரசிம்மராவின் மத்திய அரசு அப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழகத்தை ஏமாற்றிக் கொண்டிருந்தது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கர்நாடக அரசுக்கு வசதியாக அமைந்துவிட்டது. தமிழக முதல்வரும், தமிழக எம்.பி.களும் உடனடியாக மத்திய அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று அறிவித்திருக்க வேண்டும். ஆனால் முதல்வர் ஜெயலலிதா அதைச் செய்யவில்லை.

அதிகாரமுள்ள ஆணையம் அமைத்து, தமிழகத்திற்கு தண்ணீரில்லாமல் ஏமாற்றிக் கொண்டிருந்த மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்தது செல்வி ஜெயலலிதா செய்த தவறாகும்.

இரண்டாவது தவறு

1998ல் போலி காவிரி ஆணையத்தை அமைப்பதற்கு ஒப்புக்கொண்ட முதல்வர் கலைஞர், தமிழகத்திற்கு பெரிய துரோகம் செய்துவிட்டார் என்று ஜெயலலிதா முழங்கினார்.

போலி ஆணையம் அமைக்க ஒப்புக்கொண்ட கலைஞர் தமிழ்நாட்டிற்கு தவறு செய்துவிட்டார் என்பது சரிதான். ஆனால் அந்த போலி ஆணையம் அமைப்பதில் செல்வி ஜெயலலிதா பங்கு வகித்திருக்கிறாரே!

போலி ஆணையத்தை பாரதிய ஜனதாவின் மத்திய அரசு அமைக்கும் போது மத்திய ஆட்சியில் செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வும் அங்கம் வகித்தது. அ.தி.மு.க.வின் 18 எம்.பி.களின் ஆதரவு இல்லையெனில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற நிலையிருந்தது.

தமிழக முதல்வர் கருணாநிதி ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட ஆணையம் தமிழகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய போலி ஆணையம் என்று செல்வி ஜெயலலிதாவுக்கு தெரிந்தவுடன், போலி ஆணையத்தை ரத்து செய்துவிட்டு அதிகாரமுள்ள ஆணையத்தை அமைக்கும்படி மத்திய ஆட்சியை செல்வி ஜெயலலிதா வற்புறுத்தியிருக்க வேண்டுமல்லவா? போலி ஆணையத்தை மாற்றாவிட்டால் மத்திய ஆட்சிக்கு அ.தி.மு.க. கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று செல்வி ஜெயலலிதா கூறியிருந்தால், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள, மத்திய அரசு, அதிகாரமுள்ள ஆணையத்தை அமைத்துக் கொடுத்திருக்குமே.

செல்வி ஜெயலலிதா அவ்வாறு செயல்பட்டு அதிகாரமுள்ள ஆணையத்தை அமைக்குமாறு செய்யவில்லையே, ஏன்?

அதிகாரமுள்ள ஆணையத்தை அமைக்காமல், தமிழகத்தை ஏமாற்றிய மத்திய அரசை ஆதரித்துக் கொண்டிருந்தது, காவிரியில் செல்வி ஜெயலலிதா செய்துள்ள மற்றுமொரு தவறல்லவா? தமது அரசியல் லாபத்துக்காக தமிழக நலனை விட்டுக் கொடுத்தவர்தான் ஜெயலலிதா.

காவிரியில் கருணாநிதி செய்துள்ள தவறுகள்

1989 ஆம் ஆண்டுவரை காவிரி நடுவர் மன்றம் அமைக்க கலைஞர் கருணாநிதி போராடினார். 1990 இல் சிறுபான்மை அரசான வி.பி.சிங் அரசாங்கத்தை, காவிரி நடுவர் மன்றம் அமைக்கும்படி செய்தார். ஆனால் 1997 இல் ஐக்கிய முன்னணி அரசு தயாரித்து சமர்ப்பித்த அதிகாரமுள்ள காவிரி ஆணைய வரைவுத் திட்டம், நடைமுறைக்கு வராமல் போய்விட்டது. அந்த ஆட்சி அற்ப ஆயுளில் போய்விட்டது.

அதன் பின் 1998 இல் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கூட்டணி அரசு அதிகாரமுள்ள ஆணையம் அமைக்க முன்வரவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் ஏதாவது ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே அதிகாரம் இல்லாத (பல் இல்லாத) ஆணையத்தை அமைத்தது.

அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த நான்கு மாநில முதல்வர்கள் கூட்டத்தில் அதிகாரமுள்ள ஆணையம் அமைப்பதைத்தான் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளும். அதற்கு கர்நாடகா சம்மதிக்கவில்லையெனில், பிரதமர் கூறியபடியே உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிடுங்கள் என்று அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டத்தில் கூறிவிட்டு தனது நிலையில் உறுதியாக நின்றிருந்தால், உச்சநீதிமன்றம் மூலம் அதிகாரமுள்ள ஆணையம் அமைக்கப்பட்டிருக்கும். நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழ்நாடு காவிரி தண்ணீரை பெற்றிருக்கும். ஆனால் இது நடைபெறவில்லை.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி திடீரென்று தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டார். நடுவர் மன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு இன்றியமையாததாக அமைத்திருந்த ஒழுங்குபடுத்தும் குழு அமைப்பை நீக்கிவிட்டு, போலி ஆணையம் அமைக்க சம்மதித்துவிட்டார். போலி ஆணையம் அமைக்க ஒப்புக் கொண்டு ஒரு மாபெரும் தவறை கலைஞர் கருணாநிதி தமிழகத்துக்கு செய்துவிட்டார்.

உச்சநீதிமன்ற வழக்கை பாழடித்தது தவறு

தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 12.08.1998 இல் தொடர்ந்து நடந்தது. அப்போது 4 முதல்வர்களின் சம்மதத்தோடு அமைக்கப்பட்ட (போலி) காவிரி ஆணையத் திட்டத்தை மத்திய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து மத்திய அரசு வழக்கறிஞர் கூறியதாவது:

காவிரி ஆணையத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதால் நீதிமன்றம் இதற்குமேல் தீர்ப்புக் கூறத் தேவையில்லை. வழக்கை அப்படியே முடித்துவிடலாம் என்று அவர் கூறினார். தமிழக அரசு வழக்கறிஞர் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியதை அப்படியே ஆமோதித்தார். ஏற்றுக்கொண்டு விட்டதால் நீதிமன்றத்தின் வேலை மிகவும் எளிதானதாக ஆகிவிட்டது. எந்தவித உத்தரவும் இல்லாமல் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவிட்டது.

1999 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணியினர் அமோக வெற்றிபெற்று, மத்திய பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை ஆதரித்துக்கொண்டிருந்தனர். இந்த தமிழக எம்.பி.களின் ஆதரவு இல்லையெனில் மத்திய ஆட்சி பதவியில் நீடித்திருக்க முடியாது என்ற நிலையிருந்தது. மத்திய ஆட்சிக்கு கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வேன் என்று தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி கூறியிருந்தால் நியாயம் பிறந்திருக்கும். ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள, அதிகாரமுள்ள ஆணையத்தை அமைத்து விடுவார்கள்.

தமிழகத்தின் உயிர்ப் பிரச்சினையில் ஏமாற்றிக்கொண்டிருக்கும் மத்திய ஆட்சியை தி.மு.க. கூட்டணி எம்.பி.கள் அனைவரையும் ஆதரிக்கும்படி செய்தது, தமிழகத்திற்கு கலைஞர் செய்துள்ள மற்றொரு தவறாகும். இவ்வாறு திராவிடக் கட்சிகளின் ஆட்சி காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை காக்கத் தவறிவிட்டன. அத்துடன் தமிழகத்தில் ஏற்கனவே இருந்த நீர் ஆதாராங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தும்விட்டன. அதுவே இன்றைய தமிழகத்தின் அவலத்திற்கு மற்றொரு முக்கியக் காரணமாகும்.

7. திராவிட கட்சிகளின் ஆட்சியில் நீர்நிலைகள் அழிக்கப்படுகின்றன

அதிமுக, திமுக ஆட்சிகள் காவிரியில் தமிழக உரிமைக்காக விட்டுக்கொடுக்காமல் போராடாதது மட்டுமல்ல, தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு அதிக அளவு காவிரியை நம்பும் அளவுக்கு நீர் நிலைகளை அழித்துவிட்டன. தமிழக ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளை மணற் கொள்ளையர்கள் மற்றும் கல்விக் கொள்ளையர்களுக்கு அர்ப்பணித்து விட்டன.

தமிழகத்தில் ஆறுகள் எங்குமே ஆறுகளாக இல்லை. ஆற்றங்கரைகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் கடந்த 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கல்வி வள்ளல்களாலும், ரியல் எஸ்டேட் கொள்ளையர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. ஆறுகள் முழுவதும் மணற் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டு நிலத்தடி நீர் அதளபாதாளத்துக்கு போய்விட்டது. ஆலைக்கழிவுகள், இரசாயன கழிவுகள், ஊர் கழிவுகளால் ஆறுகள் சாக்கடைகளாக மாறியுள்ளன.

தமிழகத்தின் உயிர்நாடியான மேட்டூர் அணை, அது கட்டப்பட்ட நாட்களில் ஆசியாவில் மிகப்பெரிய அணைகளில் ஒன்று. காவிரி தமிழ்நாட்டின் உணவுத்தேவையில் மூன்றில் ஒரு பகுதியை நிறைவேற்றுவதோடு, வடக்கே சென்னையிலிருந்து, தெற்கே இராமநாதபுரம் வரை 80 சதவீத குடிநீர் தேவையையும் நிறைவேற்றவும் மேட்டூர் அணையையே நம்ப வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு அப்பகுதிகளின் நீர் நிலைகள் அழிக்கப்பட்டுள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது. ஆனால் எவ்வளவு கழிவுகள்! ஒரு நதியே பாழடிக்கப்பட்டுள்ளது. ஒரத்துப் பாளையம் நொய்யல் ஆறு அதற்கு ஒரு சான்று.

காவிரிப் படுகையில் ஆய்வு செய்த மத்திய அரசின் நிபுணர்குழு "தமிழகத்தில் நீர் மேலாண்மை சரியில்லை; திறனற்ற பாசன முறையைக் கையாள்கிறார்கள்; மாற்றுப் பயிர்களையும் யோசிக்கவேண்டும்" என்று குறிப்பிடுகிறது. "தமிழகத்தின் நீராதாரங்களை சீரமைப்பதன் மூலமாகவே தமிழகத்தின் மூன்றில் ஒரு பகுதி நீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ளமுடியும்" என்று நீரியல் நிபுணர் ஜனகராஜன் கூறுகிறார். நீர் மேலாண்மை குறித்து இந்த ஆட்சிகள் அக்கறை கொள்ளாததே இந்த அவல நிலைக்கு மற்றுமொரு காரணமாகும். தண்ணீர் பற்றாக்குறைக் காலங்களில் தண்ணீர் சிக்கனமும் மாற்றுப் பயிர் சாகுபடிகளும் அவசியம் என்று நிபுணர்கள் கூறுவது உண்மைக்கு புறம்பானது அல்ல, அவ்வாறு கூறுவதை கர்நாடக ஆதரவு நிலை என்று கூறுவது ஒரு மோசடியாகும். வறட்சி, தமிழகத்தைப் போலவே கர்நாடகத்தையும் பாதித்துள்ளது என்பதை ஏற்கவேண்டும். எனவே வறட்சிக் காலங்களில் நீர் பாசன முறையில் மாற்றம், மாற்றுப் பயிர் என்பது தவிர்க்க முடியாத தேவையாகும். அத்துடன் தமிழகத்தில் அரிக்கப்பட்டுள்ள நீர் நிலைகளை மீட்பதுவும் அவசியமாகும்.

பாசனத்தை வளர்ப்பதில் இஸ்ரேலிடம் கற்க வேண்டிய பாடம்

நீரை சிக்கனமாக செலவழிப்பதிலும், நீர் மேலாண்மை புரிவதிலும் பாலைவன நாடான இஸ்ரேலிடம் இந்திய அரசும், தமிழக அரசும் பாடம் கற்க வேண்டும். 1948-ல் இஸ்ரேல் ஒரு நாடாக உருவெடுத்த இந்த 70 ஆண்டுகளில் இன்று உலகிலேயே நீர் மேலாண்மையிலும், விவசாயத்திலும் உயர்ந்த இடத்தில் இருக்கிறது.

இஸ்ரேலின் நிலப்பரப்பில் பாதிக்குமேல் பாலைவனம். இஸ்ரேலின் பருவநிலையும் நீராதாரங்களும் விவசாயத்திற்கு சாதகமானவை அல்ல. நாட்டின் சிறு பகுதி மட்டுமே மழையைப் பெறுகிறது. நீராதாரம் மிக முக்கியமானது என்பதால், நீராதாரக் கட்டமைப்புகள் அனைத்தையுமே தேசிய தண்ணீர் வலையமைப்பில் சேர்த்திருக்கிறார்கள். ஏராளமான நிலத்தடி நீர்த் தேக்கங்களை கட்டியிருக்கிறார்கள், தண்ணீரை ஆவியாகாமல் தடுப்பதற்காக பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் மூலம் கொண்டு செல்கிறார்கள். கடல் நீரில் இருக்கும் உப்பை நீக்கிவிட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறார்கள். வீடுகளிலும், அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் பயன்படுத்தப்படும் தண்ணீரை துளியும் வீணாக்காமல், மீண்டும் சுத்தமாக்கி மறு சுழற்சியில் பயன்படுத்துகிறார்கள்.

இஸ்ரேலில் கிபுட்ஸ், மோஷாவ் என்ற இரு வேளாண்பண்ணை முறைகளைக் கையாள்கிறார்கள். கிபுட்ஸ் என்ற கூட்டுப் பண்ணை விவசாயத்தில் உற்பத்திக்கான ஆதாரங்கள் சமூகத்துக்குச் சொந்தம். ஒவ்வொருவரின் உழைப்பும் சமூகத்துக்கு பயன்படுகிறது. மோஷாவ் என்பது வேளாண் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு குடும்பமும் தனக்கென்று சொந்தமாக நிலங்களை வைத்துக்கொண்டு அதில் பாடுபடுகிறது. சமூக சமத்துவம், கூட்டுறவு, பரஸ்பர உதவி என்கிற அடிப்படையில்தான் கிபுட்ஸ், மோஷாவ் இரு முறைகளுமே செயல்படுகின்றன.

வேளாண் ஆராய்ச்சியிலும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளிலும் இஸ்ரேல் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள் இஸ்ரேலியர்கள். சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்புநீர் பாசனத்தில் உலகின் முன்னோடி இஸ்ரேல். 2000 ஆம் ஆண்டுக்குப் பின்பு மட்டுமே தாம் ஏற்கனவே பயன்படுத்திய தண்ணீரில் 12 சதவீதத்தை குறைத்து, விளச்சலை 26 சதவீதம் பெருக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு பருவத்திலும் எவ்வளவு சாகுபடி செய்யப்பட வேண்டும், எவ்வளவு தண்ணீர் ஒவ்வொரு பயிருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்து அமல்படுத்துகிறது. வேளாண்மைக்கான கொள்முதலும், வேளான் விளைபொருட்கள் விற்பனையும் கூட்டுறவு அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

1948-ல் பாலைவன நாடான இஸ்ரேலின் சாகுபடிப் பரப்பு 40,000 ஏக்கர். இன்று அது 11 லட்சம் ஏக்கரைத் தொட்டிருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் வேளாண் பொருட்களின் உற்பத்தியை 1600 சதவீதம் உயர்த்தியிருக்கிறார்கள். அந்நாட்டின் மக்கள்தொகை பெருக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகம் இது. உலகிலேயே அதிகமான அளவு காய்கறிகளை உண்ணுவதில் மூன்றாவது இடத்தில் இஸ்ரேலியர்கள் இருக்கிறார்கள். ஒரு இஸ்ரேலியர் ஆண்டுக்கு உண்ணும் சராசரி காய்கறிகளின் அளவு 197.6 கிலோவாகும்.

ஆனால், வற்றாத ஜீவநதிகளைக் கொண்ட இந்தியாவிலோ மத்திய-மாநில அரசுகள் வேளாண்துறையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டின் நீராதாரங்களை பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளிடம் ஒப்படைத்துவிட்டு வேளாண்துறையையும், நீராதாரங்களையும் அழித்து விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளுகின்றனர். வற்றாத ஜீவநதிகளையும், நிலவளமும் கொண்ட இந்திய நாட்டில் வரலாறு காணாத விவசாயிகளின் தற்கொலையும் பட்டினிச் சாவுகளும் தொடர்கின்றன.

தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டுவரும் திராவிட கட்சிகளோ மணற்கொள்ளையிலும், கல்விக் கொள்ளையிலும் புரளுகின்றன. தமிழக அரசின் அலட்சியம் நீர் நிலைகள் கழிவுநீர் கால்வாய்களாகவும், கல்லூரிகள் மற்றும் மருத்துவ மனைகளாகவும் மாறிவிட்டன. இதன் விளைவாக மக்கள் வெள்ளத்தாலும், வறட்சியாலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

காவிரியோ, கிருஷ்ணாவோ, முல்லை பெரியாறோ நதிநீர் பகிர்வில் தமிழகத்தின் உரிமைக்காக போராடுவது அவசியம். அது முதன்மையானது. தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை ஒருபோதும் அனுமதியோம். அதே நேரத்தில் வறட்சியிலும், வளமான காலங்களிலும் காவிரியில் சமமான பங்கு நீருக்காக மத்திய அரசையும், கர்நாடக அரசையும் எதிர்த்துப் போராடுவது அவசியமானதாகும். அத்துடன் நதிநீரை பயன்படுத்துவதில் சிக்கனமும், சாதுர்யமும் அவசியமாகும். நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டியதும் அவசியமாகும். திராவிடக் கட்சிகளின் துரோகத்தையும் எதிர்க்க வேண்டியது அவசியமாகும். சென்னை பெரு வெள்ளப் பேரழிவிற்கும், காவிரி பாலைவனமாக மாறுவதற்கும் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் பெரும் பங்குண்டு.

8. காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு: தேவை புதிய சிந்தனை

ஈராயிரம் வருடங்களுக்கு முன்பே காவிரியில் நாம் கல்லணையைக் கட்டிவிட்டோம், கன்னடர்களோ முக்கால் நூற்றாண்டுக்கு முன்புதான் முதல் அணையைக் கட்டினார்கள். 1924 இல் காவிரிப் படுகையில், தமிழகம் 16.22 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துகொண்டிருந்தபோது, வெறும் 1.4 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்து கொண்டிருந்தது கர்நாடகம்.

இன்றைக்கு கிட்டத்திட்ட 15 மடங்கு சாகுபடி பரப்பை அவர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். மேலும், சாகுபடிப் பரப்பை அவர்கள் கூட்டுகிறார்கள். நாம் பாரம்பரிய நதிநீர் உரிமை, சட்டங்களையெல்லாம் தாண்டி கொஞ்சம் நமக்குள் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். காலத்தே வளர்ச்சியில் பின்தங்கிய ஒரு மாநிலம் பின்னாளில் தன் வளர்ச்சியை நோக்கி அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? காலத்தால் யார் முன்னேறியவர்களோ அவர்களுக்கான முன்னுரிமை என்றும் தொடரவேண்டும் என்ற நியாயத்தை தமிழகம் போன்ற சமூக நீதி பேசும் மாநிலம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு பேச முடியும்?

இன்றைக்கு சிந்துநதி உடன்பாட்டில், பாகிஸ்தானுடனான பகிர்வை ஏன் மாற்றப் பார்க்கிறோம்? வளரும் காஷ்மீரின் தேவைகளுக்கு ஏற்ப நமக்கான நீரை அதிகம் எடுத்துக் கொண்டு பாகிஸ்தானுக்கான பகிர்வை குறைக்க வேண்டும் என்று எந்த நியாயத்தின் அடிப்படையில் பேசுகிறோம்? இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு இந்த நியாயமே கோலோச்சும். உலகம் முழுக்க ஆயக்கட்டு உரிமைகளில் கடைமடை பகுதிக்கான நியாயம் தலைமடை பகுதிகளால் கேள்விக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய சூழலுக்கேற்ப நதிநீர் விவகாரங்களை அணுக நாம் தயாராக வேண்டும். காவிரி ஆற்றில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சம உரிமை என்ற ஹெல்சிங்கி கோட்பாடுதான் ஜனநாயக பூர்வமாக பங்கிட்டுக் கொள்வதற்கான ஒரே வழியாகும்.

காவிரி நீர்ப் பகிர்வுச் சிக்கலைத் தீர்க்கவும், நிரந்தரத் தீர்வுகாணவும் முன்வைக்கப்பட வேண்டிய தீர்வுகள்:

இத்தகைய சூழ்நிலையில், தேசிய நீர்கொள்கை போன்ற ஏகாதிபத்தியத்திற்கும், புதிய காலனியாதிக்கத்திற்கும் சேவை செய்யும் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதும், காவிரி நீர்ச்சிக்கல் போன்றவற்றிற்கு நிரந்தரத் தீர்வுகாணவும் பின்வரும் தீர்வுகளை நிறைவேற்ற மக்களைத் திரட்டிப் போராடியாக வேண்டும்.

பாலைவனமாகிவரும் தமிழகக் காவிரிப் பகுதிகளையும், மடிந்து வரும் மக்களையும், கால்நடைகளையும், பயிர்களையும் உடனடியாக பாதுகாத்தாக வேண்டும். இதுதான் முதன்மையான பணி. எனவே எவ்வளவு குறைபாடுகள் உள்ளதாகவும், கட்டைப் பஞ்சாயத்து தீர்ப்பாக இருந்தாலும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தியாக வேண்டும். இப்போதுள்ள அதிகாரமில்லாத, போலி காவிரி ஆணையத்தைக் கலைத்துவிட்டு, நடுவர் மன்றத் தீர்ப்புகளையும், மற்ற நதிநீர்ச் சிக்கலையும், உரிய முறையில் அமுல்படுத்தவும், கண்காணிக்கவுமான உண்மையான அதிகாரமுள்ள ஆணையத்தை, நான்கு மாநில விவசாயிகள், ஜனநாயக சக்திகளை உள்ளடக்கிய புதிய காவிரி ஆணையத்தை அமைக்க வேண்டும். இதே போல், கர்நாடகக் காவிரியில் கிடைக்கும் மொத்த நீரையும் தடுத்துவிட, புதிய பாசனத் திட்டங்களை - 'காவிரி நிராவரி நிகாம்' போன்ற திட்டங்களை கர்நாடகா செயல்படுத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவற்றிற்காக மத்திய அரசை நிர்பந்தப்படுத்த தமிழக மக்கள் போராட வேண்டியது அவசர அவசியம்.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புபடி தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக கர்நாடகா வழங்குவதோடு இதுவரை வழங்காததால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்புக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

கர்நாடகத்திலிருந்து வழிந்துவரும் நீரைப் பெறும் வடிகால் பிரதேசமல்ல தமிழகம். வளமான காலத்திலும், வறட்சிக் காலத்திலும் காவிரி நீரில் தமிழகத்திற்கு சமமான பங்கு உண்டு என்பதை நிலை நாட்ட போராடியாக வேண்டும். மேலும் இன்று தமிழக காவிரி விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த கடன்களை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். புதிய கடன்களை போர்க்கால அடிப்படையில் வழங்கி விவசாயிகளைக் காப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் விவசாயிகள் அரைகுறையாக விளைவித்த தானியங்களை, அரசு கொள்முதல் செய்வதை நிறுத்தியதாலும், ஆதரவு விலையை ரத்து செய்ததாலும் விற்க முடியாமல் பெரும் நஷ்டத்தில் விவசாயிகள் தவிக்கின்றனர். எனவே உடனடியாக தமிழக அரசு ஆதாரவிலை உணவுதானியக் கொள்முதல் திட்டத்தை அமுல்படுத்த மக்கள் போராட வேண்டும். காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் தலைமடைக்கே அனைத்தும் எனும் தேச இறையாண்மைக் கோட்பாட்டை நிராகரித்து, அனைத்து தேசங்களுக்கும் சம உரிமை என்ற ஹெல்சிங்கி கோட்பாட்டை - சம பங்கீட்டுக் கோட்பாட்டை-உயர்த்திப் பிடித்துப் போராட வேண்டும்.          

9. வெள்ளம் வறட்சிக்கு நிரந்தரத் தீர்வுக்கு நாட்டின் நதிகள் இணைப்பு

வறட்சியில் ஒவ்வொரு நாளும் கர்நாடகம் தமிழகத்திற்கு இடையிலும், கேரளம் தமிழகத்திற்குமிடையிலும், பஞ்சாப் அரியானாவுக்குமிடையிலும் நீர்ப்பகிர்வுக்கான பூசல்கள் தொடர்கின்றன. தற்சமயம் கூட பஞ்சாப் பிறமாநிலங்களுடனான நதிநீர் ஒப்பந்தங்களை தன்னிச்சையாக ரத்து செய்துள்ளது. நாட்டின் இலட்சக் கணக்கான கிராமங்களுக்கும், கோடிக்கணக்கான மக்களுக்கும் போதிய, சுகாதாரமான குடிநீரில்லை. ஏகாதிபத்திய நாடுகளின் தனிநபர் நீர் நுகர்வு சுமார் 500 லிட்டராகவும், இந்தியா போன்ற நாடுகளில் 20 லிட்டராகவும் இருப்பது நிலைமையின் விபரீதத்தைக் காட்டுகிறது. விவசாயமோ பொய்த்து வருகிறது. உண்ண உணவும், குடிக்க நீருமின்றி பட்டினிச் சாவுகள், தற்கொலைகள் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன. கால்நடைகள் செத்து மடிகின்றன. மரங்கள் கூட தீய்ந்து வருகின்றன. சுகாதாரமற்ற நீரால் பரவும் நோய்களால் இந்தியாவில் வருடத்திற்கு 15 இலட்சம் பிஞ்சுக் குழந்தைகள் செத்து மடிகின்றன. வறட்சி நிவாரணப் பணிகள் என்ற பெயரில் ஒப்பந்தக்காரர்கள் அடிக்கும் கொள்ளை, இந்தியாவின் 100 முன்னணித் தொழில் நிறுவனங்கள் இணைந்து அடிக்கும் கொள்ளையை விட அதிகம். ஒருபுறம் வெள்ளத்தாலும், மறுபுறம் வறட்சியாலும் மக்கள் மாண்டுவருகின்றனர். வெள்ளத்தாலும் வறட்சியாலும் ஏற்படும் பேரழிவுகளிலிருந்து மீள நாட்டில் ஓடும் நதிகளை இணைப்பது ஒன்றுதான் தீர்வாகும்.

நாட்டின் மொத்த மழை நீரில் நாம் 1 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறோம். மீதி 99 சதவீதம் வீணாக கடலில் கலக்கிறது. கங்கை, மகாநதி போன்ற நதிகளில் 70 முதல் 80 சதவீதம் உபரி நீர் வழிந்து கடலில் கலக்கிறது. உதாரணமாக மகாநதியில் மட்டும் 600 டி.எம்.சி. நீர் கடலில் கலக்கிறது. 1 டி.எம்.சி நீரால் 1000 ஏக்கரை வளப்படுத்திட முடியும், வரும் 2025 இல் நாட்டின் மக்கள் தொகை 164 கோடியாகிவிடும். இதனால் நமது உணவு தானிய உற்பத்தியை இரண்டுமடங்காக உயர்த்தியாக வேண்டும். புதிய பாசன நிலங்களை, நீராதாரங்களை உருவாக்காமல் இது சாத்தியமில்லை. ஏற்கனவே விவசாயத்திற்குகந்த மொத்த நிலத்தில் 25 சதவீதம்தான் பாசன வசதி பெற்றுள்ளது. மீதி 75 சதவீதம் வானம்பார்த்த விவசாய நிலம். உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக, அதிகமாக சுமார் 3,500 அணைகளைக் கொண்டுள்ளது இந்தியா. ஆனால் ஒட்டுமொத்த விவசாய நிலங்களில் வெறும் 10 சதவீதம் நிலங்களுக்குத்தான் இவை பாசன வசதி தருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் இவ்வளவு அணைகள் கட்டியும் நாட்டில் வெள்ளம் தாக்கும் நிலப்பரப்பு 2.4 கோடியிலிருந்து 4 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது. சென்ற மழைக்காலத்தின் போது கூட பீகார் உட்பட வடமாநிலங்கள் வெள்ளப்பெருக்கில் மிதந்தன.

தமிழகத்திலோ காவிரி நீர் சேர்த்து மேற்பரப்பு நீர்வளம் 1,300 டி.எம்.சி, கேரள நீர்வளம் 2,500 டி.எம்.சி, கர்நாடக நீர்வளமோ 3,500 டி.எம்.சி. இதில் கேரள, கரநாடகத்தில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் தலா 2000 டி.எம்.சி நீர் கடலில் கலக்கிறது. இதில் இரு மாநிலங்களும் தலா 200 டி.எம்.சி நீரைத் தந்தாலே வறண்ட தமிழகம் வளமாகிவிடும்.

நாட்டில் ஓடும் வற்றாத ஜீவ நதிகள் வீணாகக் கடலில் கலப்பதை தடுத்து நதிகளை இணைப்பதன் மூலம், தமிழகத்திற்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் 350 லட்சம் ஹெக்டேர் நிலம் புதியதாக பாசன வசதி பெறும். 3,40,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். மேலும் வெள்ள, வறட்சிப் பேரிடர்களை போக்குவதோடு நீர்வழிப் பாதை, குடிநீர், மீன் வளர்ப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என மத்திய அரசே கூறிவந்தது.

50 ஆம் ஆண்டுகளில் நதிகள் இணைப்புப் பற்றி இந்திய ஆளும் வர்க்கங்கள் பேசி வந்தன. சென்ற பாஜக ஆட்சியின்போது கூட அதுபற்றிப் பேசினார்கள். அதற்காக ஒரு அமைச்சகத்தையே கூட உருவாக்கினார்கள். ஆனால் நதி நீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் அண்மைக் காலங்களில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. ஏகாதிபத்திய ஆதரவுத் தொண்டு நிறுவனங்களின் செல்வாக்கு மத்திய அரசின் மீது ஒரு செல்வாக்கு செலுத்துகிறது. தற்போதைய மோடி அரசின் நதிநீர் இணைப்பு அமைச்சர் உமா பாரதி, இமாலய பகுதியின் 14 ஆறுகளையும், தீபகற்ப பகுதியின் 16 ஆறுகளையும் இணைக்கும் திட்டத்திற்கு 10 டிரில்லியன் ரூபாய்கள் செலவழியும் என்று கூறி நதி நீர் இணைப்புப் பற்றிய ஐயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் பேரழிவுகள் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் இலட்சக்கணக்கானவர்கள் இடம் பெயர வேண்டும் என்பது குறித்து எழுந்த எதிர்ப்பால், நாட்டின் தென்பகுதியில் உள்ள 16 ஆறுகளையும், 14 இமயமலை ஆறுகளையும் இணைக்கும் திட்டத்திலிருந்து அரசு பின்வாங்கியுள்ளது. மேதா பட்கர், வந்தனா சிவா மற்றும் அருந்ததிராய் போன்ற பிரபலமான தொண்டு நிறுவன ஏகாதிபத்தியக் கைக்கூலிகளின் தலைமையில் நடந்துவரும் நர்மதா பச்சோ அண்டோலன் போன்ற அமைப்புகள் அணைகள் கட்டுவதை எதிர்க்கும் போராட்டங்களின் காரணமாகவும் அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று ஏற்பாட்டை மத்திய, மாநில அரசுகள் செய்யாமல் ஆறுகள் இணைப்பு, அணைகள் கட்டுவதை ஏற்கமுடியாது. ஆனால் ஆறுகள் இணைப்பால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று கூறி தொண்டு நிறுவனங்கள் ஆறுகள் இணைப்பை எதிர்ப்பது தேச துரோகம் மட்டுமல்ல, அது சுற்றுச் சூழலுக்கும் மாபெரும் அச்சுறுத்தலேயாகும். நதிகள் இணைப்பால் வரும் சுற்றுச் சூழல் பிரச்சினையைவிட வறட்சியாலும், வெள்ளத்தாலும் உண்டாகும் சுற்றுச் சூழல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாகும்.

உண்மையில் நாட்டின் வெள்ள, வறட்சிப் பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமல்ல நாட்டின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சிக்கு நதி நீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக போராடுவது அவசர அவசியக் கடமையாகும். ஆனால், கடந்த 57 ஆண்டுகளாக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாத இந்திய ஆளும் வர்க்கக் கும்பல்கள் புதிய தாராளக் கொள்கைகளை அமல் படுத்தி விவசாயத் துறையை நாசமாக்குவது; ஆறு குளங்களையும் கனிம வளங்களையும் ஏகாதிபத்திய வாதிகளிடம் ஒப்படைப்பது என நாட்டு மக்களை முட்டாளாக்கப் பார்க்கின்றன. தண்ணீர்ப் பிரச்சினையை முன்வைத்து மக்களை திசை திருப்புகின்றன.

10. தண்ணீர்ப் பிரச்சினையை வைத்து விவசாயிகளின் பிரச்சினையிலிருந்து திசை திருப்பும் ஆளும் வர்க்க கட்சிகள்

காவிரி பிரச்சினை உள்ளிட்டு நதிநீர் பிரச்சினைகள் தீராததற்கு, ஆளும் வர்க்கக் கட்சிகள் அமல்படுத்தி வரும் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் மற்றொரு முக்கியகாரணமாகும். மத்திய மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் புதிய தாராளக் கொள்கைகள் வேளாண்துறை நெருக்கடிகளை தீவிரப்படுத்துவதுடன் விவசாயிகளின் வாழ்க்கையில் கடும் துன்பங்களைக் கொண்டு வந்துள்ளது. அதிலிருந்து அவர்களை திசைதிருப்ப நதிநீர் பிரச்சினைகளை ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்துகின்றன.

தண்ணீர் பிரச்சினைதான் விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று இரண்டு மாநில ஆளும் வர்க்கக் கட்சிகளும் வாதிடுகின்றன.

ஒருபுறம், தமிழகத்தில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு "இறுதியானது". அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கூட கேள்வி எழுப்பமுடியாது. இதுவே சட்டத்தின் நிலை என்றும், நடுவர் மன்றத் தீர்ப்பு அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் என்றும் வாதிடப்படுகிறது. மறுபுறம், கர்நாடகத்தில் வறட்சி நிலவும் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தீர்ப்புதான் அவர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்றும் அத்தீர்ப்புக்கு எதிராக அவர்களிடம் வெறியூட்டப்படுகிறது.

விவசாயிகளைப் பொறுத்தவரை, தங்களது வாழ்நிலை வீழ்ச்சியடைந்து வருகின்ற இன்றைய எதார்த்த சூழலில் இத்தீர்ப்புகள் என்பது மிகமிக சாதாரணமாகும். எந்த ஒரு நாடாளுமன்றவாதக் கட்சியும் விவசாயிகளின் துன்பத்திற்கான உண்மையான காரணம் எங்கே உள்ளது என்று கூறத் தயாரில்லை. இன்று நாடு முழுவதும் விவசாயிகள் நம்பிக்கை இழந்து தவித்து வருகின்றனர் என்பதை சொல்லத் தேவையில்லை. ஆனால் விவசாய நெருக்கடிகளின் பன்முகத் தன்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் லட்சக் கணக்கான விவசாயிகளின் தற்கொலைகள் விவசாயிகளின் துன்பங்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. வேளாண் துறை நெருக்கடிக்கான முக்கிய காரணங்கள் நன்கறிந்ததுதான். அவை பின் வருமாறு:

-           புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்திய காலத்தின்போது விவசாய உற்பத்தி பாதியாக வீழ்ச்சியடைந்துவிட்டது; நபர் ரீதியான உணவுதானிய உற்பத்தி முழு அளவில் வீழ்ந்துவிட்டது;

-           விவசாயிகளுக்கு வங்கிகள் அளித்துவந்த கடன்கள் குறைந்து, கந்துவட்டிக் கொடுமையில் சிக்குவது அதிகரித்து வருகிறது; வேளாண்மைத் துறைக்கான அரசாங்க முதலீடுகள் குறைந்து வருவதோடு, தனியார் முதலீடுகள் அதனை ஈடு செய்யவில்லை. விளைவு, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு செலவு குறைக்கப்பட்டு விட்டது;

-           ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதை சீரழித்து - உற்பத்தியாளர்களையும், நுகர்வோரையும் சந்தை சக்திகளின் வர்த்தக சூதாட்டத்தில் தள்ளி வதைத்துவருவது;

-           மானியங்களை வெட்டியதன் விளைவாக உரம், பூச்சி மருந்துகளின் விலைகள் பன்மடங்கு உயர்ந்து இடுபொருட்களின் விலை உயர்ந்து விட்டது. தனியார் நிறுவனங்களிடமிருந்து மரபணு நீக்கப்பட்ட விதைகளை அதிக விலைகொடுத்து வாங்குவது போன்ற காரணங்களால் உற்பத்தி செலவு அதிகரித்து வருவது;

-           வேளாண் விளைபொருட்களின் இறக்குமதிக்கான அளவு ரீதியான கட்டுப்பாடுகளை நீக்கி, சுங்க வரிகளைக் குறைத்து, உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டுப் பொருட்களை மலிவான விலையில் கொட்டிக் குவிப்பது, விளை பொருட்களின் விலை குறைந்து உள்நாட்டு விவசாயிகளால் போட்டி போடமுடியாமல் விவசாயம் நலிவடைந்து வருவது;

-           விவசாயிகள் பணப்பயிர் உற்பத்திக்கு மாறுவதால் விவசாயிகளின் குடும்பத் தேவைக்கான உணவு பாதுகாப்பு அழிவதுடன், பல பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி சுற்றுச் சூழலை பாதித்து வருவது;

-           விவசாயிகளின் வருமானத்தைவிட செலவு அதிகரித்து, சொத்துக்களை விற்பது, கடன்படுவது, அடகுவைப்பதும் விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறுவதும் அதிகரித்து வருவதுடன், வேறு எந்த வேலையும் கிடைக்காமல் குடிபெயர்வு அதிகரிப்பதும், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டு மாள்வதும் தொடர்கிறது.

மேற்கண்ட கொள்கைகள் அனைத்தையும் 2012 ஆம் ஆண்டு உலக வர்த்தக கழக மாநாட்டில் இந்திய அரசு கையொப்பம் இட்டதன் மூலமாக கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளை கட்டவிழ்த்துவிட்டது.

வேளாண் கார்ப்பரேட்டுகளின் இணைப்புகளும் (MERGER) விவசாயிகளின் தற்கொலைகளும்

அண்மையில் உலக அளவில் வேளாண் கார்ப்பரேட் கம்பெனிகள் மத்தியில் ஏற்பட்டு வரும் கைப்பற்றல்களும் விழுங்குதலும் (merger and acquisition) ஏகபோகங்களை தீவிரப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்து தற்கொலைக்குத் தள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.

இன்று உலக அளவில் வேளாண் வணிக நிறுவனங்களின் ஒன்றிணைவுப் போக்கு துரிதமாக நடந்தேறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஜெர்மனி நாட்டின், மருந்து மற்றும் வேளாண் வேதிப் பொருட்கள் (உரம், பூச்சி மருந்துகள்) தயாரிப்பில் பெரிய முன்னணி நிறுவனமான பேயர் (Beyar) நிறுவனம், அமெரிக்காவின் மிகப்பெரும் நிறுவனமான மான்சாண்டோவை அதிக விலை கொடுத்து இணைத்துக் கொண்டது. உலக அளவில் விதைச் சந்தையில் 26 சதவீதத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மான்சாண்டோவை, உலக அளவில் வேளாண் வேதிப் பொருட்கள் சந்தையில் 18 சதவீதத்தைக் கொண்டுள்ள பேயர் நிறுவனத்தின் கைப்பற்றல் நிறைவேறுவதால், இந்நிறுவனம் விதை மற்றும் வேளாண் வேதிப் பொருட்கள் விற்பனையில் உலகின் மிகப் பெரும் நிறுவனமாக மாறும்.

அண்மைக் காலங்களில் வேளாண் வணிக நிறுவனங்கள் தங்களது இலாபங்களை நிலைநிறுத்திக் கொள்ள இத்தகைய இணைப்புகள் மூலம் தங்களை பலப்படுத்திக் கொள்வதுடன், சந்தைக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி வருகின்றன. அதனடிப்படையில் நிகழும் கம்பெனிகளை கைப்பற்றுவதில் இந்த இணைப்பு மூன்றாவது இணைப்பாகும். ஒன்று, 130 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான டவ் கெமிக்கல் மற்றும் டூபாண்ட் இணைப்பு. மற்றொன்று, 47 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கெம்சைனா, சிஜெண்டாவை கைப்பற்றிக் கொண்டது. இது உலகின் 20 சதவீத உரம், பூச்சி மருந்து விற்பனையிலும், அமெரிக்காவில் 10 சதவீத சோயாபீன் விதை விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது.

மான்சாண்டோ, சிஜெண்டா, பேயர், டூபாண்ட், டவ் கெமிக்கல் மற்றும் BAST போன்ற 6 கம்பெனிகள் உலகின் 60 சதவீத விதை மற்றும் உரம், பூச்சி மருந்துகள் சந்தையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. தற்போதைய இணைப்புகளுக்குப் பின் 4 கம்பெனிகளே இவை அனைத்தையும் கைப்பற்றிக்கொள்ளும். இனி ஒரு சில நிறுவனங்களின் கைகளில் வேளாண் வணிகம் முழுவதும் குவிந்துவிடும்.

வேளாண் வணிக நிறுவனங்கள் விவசாயிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுதான் பிரச்சினயாகும். இந்த நிறுவனங்கள் சந்தையில் தங்களுக்குள்ள வலிமையைப் பயன்படுத்தி மரபணு நீக்கப்பட்ட விதைகளின் விலைகளை பன்மடங்கு உயர்த்தி கொள்ளை லாபம் அடைந்துவந்தன. விதைகள், உரம், பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தி பயிர் சாகுபடிசெய்வதில் இந்நிறுவனங்களோடு இணைந்துகொண்ட விவசாயிகள் தங்களது செலவு அதிகரித்து வரும் அளவிற்கு வருமானம் பெருகவில்லை என்பதை கண்டார்கள். வேளாண் வணிக நிறுவனங்களின் இலாபம் பெருகிக்கொண்டே போனதோடு, விவசாயிகள் கடும் பாதிப்புகளை சந்தித்தனர். எனவே விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறினர் அல்லது பழைய முறையிலான விதைகளை பயன்படுத்தும் சாகுபடிக்கு மாறினர். அதனால் வேளாண் கார்ப்பரேட்டுகளின் சந்தை முடங்கியது. இலாப சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

இத்தகைய சூழலில்தான் வேளாண் வணிக கார்ப்பரேட்டுகள் தங்களது வலிமையை பெருக்கிக் கொள்ளவும், சந்தையை விரிவாக்கிக் கொள்ளவும் கம்பெனிகளை கைப்பற்றுவது, விழுங்குவதில் ஈடுபடுகின்றன. இதன் விளைவாக சந்தையை விரிவுபடுத்தும் விதமாக விதைகள், உரம், பூச்சி மருந்துகள் விலை குறையும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த உறுதிமொழிகள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. காரணம், உண்மையில் இந்த இணைப்புகளுக்குப் பின்னால் இக்கம்பெனிகளில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் இலாபவீழ்ச்சியால் முதலீடுகளை திரும்பப் பெறுவோம் என்று அச்சுறுத்தல் விடுத்தனர். எனவே இந்த நிறுவனங்கள் இந்தியா போன்ற வளரும் சந்தைகளை நோக்கி படையெடுக்கின்றன. கொள்ளை லாபங்களை மூட்டை கட்டிக்கொள்ளத் துடிக்கின்றன. விதைகள், தாவரங்கள், கால்நடைகள் உள்ளிட்ட உயிரியல் பொருட்களின் மீது காப்புரிமைக் கேட்டு அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தத்தை கொண்டுவருகின்றன. இவ்வாறு வேளாண் கம்பெனிகளின் ஏகபோகங்கள் பெருகுவதால் விவசாயிகளின் இடுபொருட்கள் விலை உயர்ந்து நட்டத்தைக் கொண்டுவந்து தற்கொலைக்கு தள்ளும் போக்கு தீவிரமடைந்து வருகிறது.

மேற்கண்ட புதிய காலனிய வேளாண்மைக் கொள்கைகள், வேளாண்மைத் துறையில் அடிப்படையான முரண்பாடுகளை தீவிரமாக்கி வருவதை எடுத்துக் காட்டுகின்றன. புதிய தாராளக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துவதால் விவசாயிகள் வாழ்வு நலிவடைவதும், அதிருப்தியடைவதும் தீவிரப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இரண்டு மாநில விவசாயிகளும் வறட்சிக்கும் பட்டினி சாவுகளுக்கும் தற்கொலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இரண்டு மாநில ஆளும் வர்க்கக் கட்சிகள் வறட்சி, வெள்ளம் போன்ற பேரழிவுகளிலிருந்து காப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த மறுக்கின்றன. நதிகள் இணைப்புத் திட்டம் பற்றி பேசவும் மறுக்கின்றன. மாறாக விவசாயிகளின் துன்பங்கள் அனைத்திற்கும் ஆற்று நீர்பிரச்சினை குறித்த தீர்ப்புகள்தான் காரணம் என்று கூறி இனவெறியைத் தூண்டி இரண்டு மாநில விவசாயிகளையும் மோத விடுகின்றனர்.

விவசாயிகள் (அமைப்பாக்கப் படாததாலும், பிரச்சினைகளின் உண்மைத் தன்மையை புரிந்து போராடததாலும்) ஆளும் வர்க்கக் கட்சிகளின் திசைதிருப்பும் பிரச்சாரத்திற்கு இரையாகி வருகின்றனர். அத்துடன் விவசாயிகள் தங்களது துன்பங்களுக்கான காரணங்களை புரிந்துகொள்ள காது கொடுத்து கேட்கவும் தயாரில்லை.

ஆனால், ஆளும் வர்க்கக் கட்சிகளோ, விவசாயிகளின் வீழ்ச்சிக்கு மாநிலங்களுக்கிடையிலான ஆற்று நீர் பிரச்சினைதான் முக்கியக் காரணம் என்று ஏமாற்றுகிறார்கள். ஏனென்றால் விவசாயிகளின் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அதிருப்தி அடைந்த விவசாயிகளுக்கு வழங்குவதற்கு சதிகளும், திசை திருப்பல்களும் தவிர வேறொன்றும் இல்லை. நதிநீரில் பெரும் பகுதியை பெறுவதுதான் தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்றும், அதை பிற மாநில விவசாயிகளிடமிருந்து பறித்துக் கொள்வதுதான் தீர்வு என்றும் இன வெறியை ஊட்டி பகைமையை வளர்க்கின்றனர்.

இவ்வாறு மத்திய, மாநில அரசுகள் புதிய காலனிய, புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்துவதால் ஏற்பாடும் விவசாய நெருக்கடியிலிருந்து விவசாயிகளை திசைதிருப்பும் ஆளும் வர்க்க சதிகள், நதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தடையாக மாறியுள்ளது. வேளாண்மை கார்ப்பரேட்மயத்தை ஒழித்து, நிலச்சீர்திருத்தம் செய்வது ஒன்றுதான் நதி நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கும்-அனைவருக்கும் நீர் உரிமை கிடைப்பதற்கும் வழிவகுக்கும்.

அடுத்து, புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதால் தண்ணீரைத் தனியார் மயமாக்கும் கொள்கைகள் நதிநீர் சிக்கலுக்குத் தீர்வு காண்பற்குத் தடையாக இருக்கிறது.

11. தண்ணீர் தனியார்மயமும் மனித உரிமை மறுப்பும்

மத்திய மாநில அரசுகள் அமல்படுத்தி வரும் புதிய தாராளக் கொள்கைகள் நதிநீர்ச் சிக்கலை தீர்ப்பதற்கு தடையாக மாறியுள்ளன. தண்ணீர் துறையை தனியாருக்கு திறந்துவிடும் கொள்கைகள் தண்ணீர் வளத்தின் மீது அரசாங்கம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கும் இறையாண்மை உரிமையை மறுக்கிறது. அது நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தடையாக மாறியுள்ளன.

1991-ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் துவங்கிவைத்த ஏகாதிபத்திய உலகமய, தனியார்மய புதியதாராளக்கொள்கைகளை அமல்படுத்துவதில் தண்ணீர் தனியார்மயமாக்கல் இறுதியாக அமல்படுத்தப்பட்டது. உலக அளவில் உருவாகிவரும் தண்ணீர் பிரச்சினைக்கு தனியார்மயமே தீர்வு என்று சர்வதேச நிதி நிறுவனங்களும், கடன் வழங்கும் நிறுவனங்களும் முன்வைத்தன. ஆனால் இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், அவை முன்வைத்த திட்டங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக படுதோல்வி அடைந்துவிட்டன.

மூன்றாம் உலக நாடுகளில் தண்ணீர் தனியார் மயமாக்கலின் பரிசோதனைக் களமாக லத்தீன் அமெரிக்க நாடுகள்தான் திகழ்ந்தன. பொலிவியாவின் கொச்சபம்பா; அர்ஜெண்டைனாவின் போனஸ் அயர்ஸ், டுயூன்மன்; டான்சானியாவின் டார் எஸ் சலாம்; பிரான்சின் கிரிநோபில்; பிலிப்பைன்ஸின் மெட்ரோ மணிலா; தென் அமெரிக்காவின் கோன்கொஹி போன்று உலகின் தண்ணீர் தனியார்மயமாக்கலின் உதாரணங்களாக கூறப்பட்ட அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்தன.

1998-ஆம் ஆண்டு உலக வங்கியின் மேற்பார்வையில் கீழ் பொலிவிய அரசு தன்னுடைய தண்ணீர் அமைப்பை தனியார் மயமாக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டது. கொச்சபம்பா நகருக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தம் அமெரிக்க பொறியியல் பகாசுர நிறுவனமான பெக்டெல் நிறுவனத்துக்கு 40 ஆண்டுகளுக்கு விற்றது. சிலமாதங்களிலேயே தண்ணீருக்கான கட்டணத்தை மூன்று மடங்காக்கியது. ஒரு மாதத்திற்கான குறைந்தபட்ச கூலி 60 அமெரிக்க டாலர்கள் என்று உள்ள ஒரு நாட்டில், தண்ணீருக்கான கட்டணம் மட்டும் 20 அமெரிக்க டாலராக உயர்ந்தது. உண்மையில் அம்மக்களால் அதை கொடுக்க முடியவில்லை. ஆத்திரமுற்ற மக்கள் வீதியில் இறங்கி பொலிவிய அரசாங்கத்திற்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் 12 நபருக்கு மேல் காயமடைந்தார்கள். 17 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். தண்ணீர் கிடைக்காமல் சாவதைவிட துப்பாக்கிச் சூட்டில் சாக மக்கள் தயாராயினர். மக்கள் சக்திக்கு முன் மண்டியிட்ட பொலிவிய அரசு, பெக்டெல் நிறுவனத்தை அந்நாட்டிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது.

2006-ஆம் ஆண்டு அர்ஜெண்டைனாவின் அரசு சூயெஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அகுவாஸ் அர்ஜெண்டைனாஸ் உடனான 30 வருட ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றது. மக்கள் சக்திக்கு முன் மண்டியிட்ட பெக்டெல் நிறுவனம் பொலிவியாவிலிருந்து வெளியேறியது. ஆனாலும் ரூ. 120 கோடி நட்ட ஈடு கோரி பொலிவிய அரசு மீது வழக்கு தொடுத்துள்ளது.

கொச்சபம்பா, எல் அல்டோ மற்றும் அர்ஜெண்டைனாவில் என்ன நடந்ததோ அது ஒரு தனித்த சம்பவம் அல்ல. 2000 ஆம் ஆண்டுகளில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து உலக அளவில் பரந்த அளவில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினர். இந்தியாவிலும் கூட தண்ணீர் துறையை தனியாருக்கு திறந்துவிடும் போக்கு அதிகரித்து, அதனை தொடர்ந்து அதற்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்தன. சத்தீஸ்கரில் சியோநாத் ஆறு தனியாருக்கு தாரை வார்த்ததை எதிர்த்தும், கேரளாவில் பிளாச்சிமடாவில் கொக்ககோலாவை எதிர்த்தும் நடந்த போராட்டங்கள் அதற்கு உதாரணங்களாகும்.

1990-களில் மூன்றாம் உலக நாடுகள் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கு தண்ணீர் வழங்குவது உள்ளிட்ட சேவைகளிலிருந்து விலகிக் கொண்டு தனியாரிடம் ஒப்படைப்பதே தீர்வு என்றும், அத்துடன் அந்நிய முதலீட்டை கவர்வதற்கு தண்ணீர் துறையை தனியார் மயமாக்கவேண்டும் என்றும் எகாதிபத்திய நாடுகள் கூறின. ஆனால் அனுபவமோ நேர் எதிராக முடிந்தது. தண்ணீர் கட்டமைப்புகள் மற்றும் தனியார்மயம் பற்றிய ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆய்வு "ஆசியாவில் 18 நகரங்களில் ஆய்வு செய்யும்போது தனியார்மயத் திட்டம் அந்நிய முதலீட்டை கொண்டுவரவில்லை என்பதை நிரூபித்துவிட்டது" என கூறுகிறது.

தண்ணீர் துறையை தனியார்மயமாக்கினால் போட்டியின் காரணமாக பயனாளிகளுக்கு குறைந்த விலையில் தண்ணீர் கிடைக்கும் என்றனர். ஆனால் அதற்கு மாறாக பன்மடங்கு விலைகள் உயர்ந்தன. அனைத்திற்கும் மேலாக, ஏகாதிபத்தியவாதிகளின் வாக்குறுதிகள் பொய்த்துப் போனதுடன் தண்ணீர் வழங்குவது லாபத்திற்கானது அல்ல; சமூகக் கடமை என்பதை தியாகம் செய்யவேண்டிய நிலைக்குக் கொண்டுவந்தது. தனியார் முதலாளிகளை பொறுத்தவரை இலாபமே முதல் குறிக்கோளாகவும், ஒரே நோக்கமாகவும் இருந்தது. அவர்கள் சமூக தேவைகளை பெருமளவில் புறக்கணித்தனர்

அதிகரித்துக் கொண்டே போகும் கட்டணங்கள், ஏழைகளுக்கு தண்ணீர் தருவதை துண்டித்தல் மற்றும் ஒதுக்கித் தள்ளுதல் மூலம் தண்ணீர் என்பது மக்களுக்கான அடிப்படை ஜீவாதார உரிமை என்பது நிராகரிக்கப்பட்டது. தனியார்மயமாக்கல் மூலம் அரசாங்கம் தங்களது பொறுப்புகளிலிருந்து கழன்றுகொண்டன. அதுவே பெருமளவில் கலகங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் காரணமாயின. தண்ணீர் தனியார்மயமாக்கலுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களும் தண்ணீர் தனியார்மய தோல்விக்கும் காரணமாயின.

தனியார்மயத்திற்குப் பதிலாக அரசு-தனியார்-பங்கேற்பு

தண்ணீர் துறையில் தனியார்மயத்தின் தோல்விக்குப்பின் சர்வதேச நிதி நிறுவனங்கள் தங்களது உத்தியை மாற்றிக்கொண்டன. தண்ணீர் தனியார்மயம் (Public Sector Participation - PSP) என்ற பழைய திட்டத்திற்குப் பதிலாக அரசாங்கம்-தனியார்-பங்கேற்புத் (Public-Private-Participation-PPP) திட்டத்தை அமல்படுத்தின. இதன் மூலம் தனியார்மயக் கொள்கைகள் நயவஞ்சகமாக திணிக்கப்படுகிறது. இத்திட்டம் ஏழைகளுக்கு தண்ணீர் வழங்குவதால் ஏற்படும் இழப்புகளை, அரசாங்கம், தனியார் நிறுவனங்களுக்கு மானியங்கள், வட்டியில்லாக்கடன் மற்றும் சுலபமான வழிகளில் ஒப்பந்தம் வழங்குவதன் மூலம் நட்டத்தை ஈடுகட்டுவது என்று கூறுகிறது. ஏழைகளுக்கு தண்ணீர் வழங்கும் பொறுப்பை அரசாங்கம் எடுத்துக்கொள்வது, தனியாருக்கு லாபத்தை உத்திரவாதம் செய்வது என்று இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தனர். சமூகம் முழுவதற்கும் தண்ணீர் வழங்கும் சமூக பொறுப்பிலிருந்து அத்துறையை விலக்கிக்கொள்வது மற்றும் அத்துறையை முழுவதும் சந்தை மற்றும் வணிக நலன்களுக்கானதாக மாற்றியமைப்பதுடன், தனியார் நிறுவனங்கள் லாபத்தை அமைதியாக மூட்டை கட்டிக்கொள்வதற்கு வழிவகுப்பது என்ற இரட்டை குறிக்கோள்களை இந்தப் புதிய திட்டம் கொண்டுள்ளது.

இந்தியாவில் தண்ணீர்துறை தனியார்மயம்

அரசாங்கம்-தனியார்-பங்கேற்பு மூலம் இந்திய நாட்டின் தண்ணீர் துறை பலமாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வடக்கே ஜம்முகாஷ்மீர் முதல், தெற்கே கேரளாவரை; மேற்கே ராஜஸ்தான் முதல் வட கிழக்கே சிக்கிம் மேகாலயா வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் குடிதண்ணீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்டு பரந்த அளவிலும், சில மாநிலங்களில் குறைந்த அளவிலும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் தலையீடுகள் மூலமே நடக்கிறது.

குடிநீர் விற்பனை

இந்தியாவில் பல பத்தாண்டுகளாகவே தண்ணீர் தனியார் மயமாக்கலில் புதிய போக்குகள் துவங்கிவிட்டன. தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பது என்பது தண்ணீர் தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாட்டில் தண்ணீர் விற்பனை என்பது இந்திய தண்ணீர் சந்தையில் ஏராளமான வாய்ப்புகளையும் லாப வெறியையும் தூண்டியது.

1991ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் மின் துறையை தனியாருக்குத் திறந்துவிடும் கொள்கையை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக நீர் மின் உற்பத்தியும் கூட தனியாருக்குத் திறந்துவிடப்பட்டது. அதன் விளைவாக தனியார் நிறுவனங்கள் ஆற்று நீரைத் தேக்குவதற்கான அணைகளைக் கட்டவும், பராமரிக்கவும், இயக்கவும் உரிமை கொண்டாட அனுமதிக்கப்பட்டது. ஆற்றின் மீது தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு அனுமதி அளித்தது. இந்தப் புதிய கொள்கைகள் தண்ணீர் தனியார் மயமாக்கலில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

இதற்கு முன்பு ஆறுகள், குளங்கள், ஏரிகள் ஆகியவை அரசாங்கம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பொது உரிமையாகவும், தனியார் நிலங்களில் கிடைக்கும் நிலத்தடி நீர் தனியார் உடைமையின் கீழும் இருந்து வந்தது.

ஆனால், இன்றைய புதிய நிலைமைகளின் கீழ், மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறிப்பாக பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கைகளில் இவை ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தண்ணீர் வணிகத்தில் கோக், பெப்சி, சூயெஸ், விவேண்டி, தேம்ஸ் வாட்டர் மற்றும் பெக்டெல் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளும் உள்நாட்டைச் சேர்ந்த டாட்டா போன்ற கார்ப்பரேட்டுகளும் ஈடுபட்டுள்ளன. உதாரணமாக, தனி ஒரு விவசாயி பம்ப்செட் மூலம் நிலத்தடி நீரை எடுத்து விற்றதற்குப் பதிலாக, தற்போது பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் குளிர்பானங்கள் தயாரிப்பது, தண்ணீர் வியாபாரம் செய்வதற்காக கேரளாவில் பிளாச்சிமடா, உத்தரபிரதேசத்தில் மெஹ்திகஞ்ச், தமிழகத்தில் தாமிரபரணி போன்ற இடங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து விற்கின்ற நிலை உருவாகி உள்ளது.

இந்நிறுவனங்கள் ஏராளமான நிதி மற்றும் அரசியல் ரீதியில் மிகவும் வலிமை வாய்ந்தவைகளாகும். அமெரிக்க ஏகதிபத்தியம், உலகவங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற அதிகாரமிக்க சர்வதேச நிதி நிறுவனங்கள் இவைகளின் பின்னணியில் உள்ளன. இவை எந்த ஒரு அரசாங்கத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தவும், அதன் கொள்கைகளை தீர்மானிக்கவும் வல்லமை மிக்க நிறுவனங்களாகும். பிளாச்சிமடா, மெஹந்திகஞ்ச் மற்றும் தமிழகத்தில் தாமிரபரணி போன்ற இடங்களில் நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் நீரை உறிஞ்சி விசாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதை எதிர்த்து மக்கள் போராடினர். சில இடங்களில் இவை மூடப்பட்டாலும் தொடர்ந்து வெவ்வேறு இடங்களிலிருந்து கொள்ளையை தொடர்கின்றன.

நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சுவதை எதிர்த்த மக்களின் போராட்டத்தாலும், கொக்க கோலாவிலும், பெப்சியிலும் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி கலந்திருப்பதை காட்டி பல மாநிலங்கள் அவைகளை தடை செய்தபோது, அமெரிக்க அரசாங்கம் அதிகார பூர்வமாக இந்திய அரசிற்கு கடிதம் எழுதி இக்கம்பெனிகளின் மீதான தடைகளை நீக்கக் கோரியது. அந்நிய முதலீடு வருவதில் சிக்கல் ஏற்படும் என மிரட்டி அந்தத் தடைகளை நீக்க வைத்ததே அவைகளின் செல்வாக்கை காட்டுகின்றன. இந்திய அரசு அதற்கு பணிந்து போகிறது.

அண்மையில் ஜெயலலிதா ஆட்சி தாமிர பரணியை முற்றாக உறிஞ்சி குடிக்கும் வகையில் பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. தொழில் வளர்ச்சி என்ற பேரில் நாளொன்றுக்கு 57 லட்சம் லிட்டர் தண்ணீரை தாமிரபரணியிலிருந்து உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன இந்த பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள். இவற்றில் கோக், பெப்சிக்கு மட்டும் 24 லட்சம் லிட்டர் நீர் போகிறது. கோக் பெப்சி தண்ணீரை உறிஞ்சுவதற்கு வசதியாக சீவலப்பேரியில் ரூ.11 கோடியில் தடுப்பணை ஒன்றைக் கட்டியுள்ளது தமிழக அரசு. ஆனால் இதே காலத்தில் பழைய சீவரம் அருகே தடுப்பணை கட்டவேண்டும் என்று மக்கள் பல ஆண்டுகள் போராடியும் அந்தக் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவே இல்லை. மெல்ல மெல்ல பன்னாட்டுக் கம்பெனிகளின் பிடியில் ஆறுகள் செல்வதன் வெளிப்பாடுதான் இது.

இப்படி உறிஞ்சி எடுக்கப்படும் நீருக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஆயிரம் லிட்டருக்கு ரூ.37. ஆனால், பெப்சியும் கோக்கும் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.20 க்கு விற்கின்றன. ஒரு லிட்டர் தண்ணீரை சுமார் 4 காசுக்கு வாங்கி 500 மடங்கு அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் காண்கின்றன. 'அம்மா' ஆட்சி ஒரு லிட்டர் தண்ணீரை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு 4 காசுக்கு விற்றுவிட்டு மக்களுக்கு ரூ.10 க்கு விற்கிறது. புதிய காலனியத்திற்கு சேவை செய்து, தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை மலிவு விலைக்கு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்த்துவிட்டு பலலட்சம் கோடிகளை சுருட்டியது ஜெயா, சசி கும்பல். ஜெயலலிதா மறைந்தாலும் அந்தக் கொள்கைகள் இன்னமும் தொடர்கின்றன.

கழிவு நீர், பாதாள சாக்கடை திட்டம்

இந்தியா தற்போது வேகமான தனியார்மயமாக்க சுழற்சியின் மத்தியில் இருக்கிறது. நகராட்சி ஒப்பந்தங்களைப் பெறுவதற்கும், ஒட்டுமொத்த ஆற்றையே வாங்கி விடுவதற்கும் நாடு முழுவதும் தனியார் தண்ணீர் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன.

பொலிவியா உள்ளிட்டு உலகின் பலநாடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பெக்டெல் நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் மற்றும் கழிவுநீர் சேவைகளை அளித்து வருகிறது. திருப்பூரில் குடிநீர் வினியோகத் திட்டத்திற்காக ரூ 1,600 கோடிக்கு மேல் மூலதனத்தைப் போட்டு கொள்ளையடிக்க தயாராகிவிட்டது.

ஜாம்ஷெட்பூர், ஆக்ரா, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் வியோலியோ இயங்கிவருகிறது. இந்தூரில் தண்ணீர் சேவை வழங்க தேம்ஸ் நிறுவனம் கண்வைத்துக் கொண்டிருக்கிறது. மைசூர், மங்களூர், ஹூப்ளி மற்றும் தர்வாட் பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய ஆங்க்லியன் நிறுவனம் போட்டிபோட்டுக் கொண்டு இருக்கிறது. தன்னுடைய துணை நிறுவனமான டேக்ரமாண்ட் பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் சூயெஸ் நிறுவனத்திற்கு டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் நாக்பூர் போன்ற இடங்களில் தளங்கள் உள்ளன. காவிரியிலிருந்து பெங்களூருக்கு தண்ணீர் சப்ளை செய்வது அமெரிக்காவின் இந்தக் கம்பெனிதான்.

டெல்லியில் சூயெஸ் கட்டிக்கொண்டிருக்கும் சுத்திகரிப்பு ஆலை இலாப நோக்கில் செயல்படுவதற்கு அரசு சார்பில் உறுதி கொடுத்திருப்பதால் இத்திட்டம் விவாதத்திற்கு உரிய ஒன்றாக இருக்கிறது. மேலும், உலக வங்கியின் உதவியோடு கட்டப்பட்ட டெஹ்ரி அணையின் வழியாக, மேல் கங்கை கால்வாயிலிருந்து தண்ணீரை திசைமாற்றி டெல்லிக்கு குடிநீர் வினியோகம் செய்ய 30 கிலோமீட்டர் நீளத்தில் தொடர் குழாய்களை அமைக்கும் 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டமும் இதில் அடங்கும். இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளிலிருந்தும், நிலங்களிலிருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். மேலும் கங்கையின் புனித நீரும் திசைமாற்றி விடப்படுகிறது. நவ்தான்யா மற்றும் தண்ணீர் ஜனநாயகத்திற்கான மக்கள் முன்னணி போன்ற தண்ணீர் உரிமைக்காகப் போராடுகின்ற இயக்கங்களின் கடுமையான எதிர்ப்பால், இந்திய அரசு கடும் கோபத்துடன் பின்வாங்கி, இது ஒன்றும் தனியார்மயமாக்கலல்ல, அரசு-தனியார்-பங்கேற்பு கூட்டாண்மை திட்டம், இதில் அரசின் கட்டுப்பாடு நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று உறுதி கொடுத்துள்ளது. ஆனால் நடைமுறையில் தண்ணீர் தனியார்மயம் வேகமாக நடைபெற்றுவருகிறது.

ஆறுகள் குளங்கள் தாரைவார்க்கப்படுதல்

ஷியோநாத் ஆற்றுத் திட்டம் என்பது இந்தியாவின் தண்ணீர் துறையை தனியாருக்கு திறந்துவிட்டதன் ஆரம்பத் திட்டமாகும். அது துவங்கியமுதலே தனியார்மயமாக்கலின் பிரச்சினைகளை முன்னுக்குக் கொண்டுவந்தது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் துர்க் நகர் அருகே "போராய்" தொழிற்பேட்டைக்கு குடிநீர் வழங்குவதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ரேடியஸ் என்ற உள்நாட்டு தனியார் தண்ணீர் நிறுவனத்துக்கு அந்த ஆற்றில் ஒரு அணைகட்டிக் கொள்ளவும் சலுகை வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி, ஏற்றுக்கொண்ட அளவு நீரை வாங்காவிட்டாலும் அதற்குரிய முழு அளவு கட்டணத்தையும் கொடுத்துவிட வேண்டும். தொழில் வளர்ச்சி கழகம் நாள் ஒன்றுக்கு 4 மில்லியன் லிட்டர் வாங்குவதற்கான முழு கட்டணத்தையும் அரசாங்கம் கட்டிவிட வேண்டும். அத்துடன் ஆற்றின் மேல் பகுதியிலிருந்து அந்த அணைக்கு தண்ணீர் வரத்தை அரசாங்கமே உத்திரவாதம் செய்தது. மேலும் இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதியை முன்பணமாக தொழில் வளர்ச்சிக் கழகமே கொடுத்து உதவியது. ஆனால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இத்தகைய உதவியை செய்ய அரசாங்கம் மறுத்தது.

இத்திட்டத்தின்படி இக்கம்பெனி 1 மில்லியன் தண்ணீரை வழங்கிவிட்டு 4 மில்லியன் தண்ணீருக்கான கட்டணத்தைப் பெற்று கொள்ளையடித்தது. ஆனால் இத்திட்டம் அமலுக்கு வந்தவுடன் மீன்பிடிப்புத் தொழில், குளியல்துறையாக பயன்படுத்தல், காய்கறி மற்றும் சிறுதானிய பயிர்சாகுபடி போன்றவற்றுக்கு அந்த ஆற்றை நம்பியிருந்த கிராம மக்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது. ஆற்றுப் படுகையில் சிறு படகில்சென்று மணல் எடுக்கும் தொழிலும் தடைசெய்யப்பட்டது.

உள்ளூர் மக்கள், சங்கங்கள், இடதுசாரி குழுக்கள், ஆய்வு நிறுவனங்கள் இத்திட்டத்தை எதிர்த்துப் போராடினார்கள். அந்தப் போரட்டம் நாடுதழுவிய அளவில் கவனத்தை ஈர்த்தது. மக்களின் போராட்டத்திற்கு பின்பு அம்மாநில அரசாங்கம் மந்திரிசபை தீர்மானம் மூலம் இத்திட்டத்தை கைவிட்டதாக அறிவிப்பு செய்தது. இத்திட்டத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு கமிஷன் போட்டனர். ஆனால் அதன் முடிவு இன்னமும் வெளியிடப்படவில்லை.

ஆனால் தொடர்ந்து, கங்கை ஆற்றை சூயெஸ் என்னும் பன்னாட்டுக் கம்பெனிக்கு மத்திய அரசு விற்றுள்ளது. ஷியோநாத் ஆறு, தரகு முதலாளி கைலாஷ் ஹோனி என்பவருக்கு விற்கப்பட்டது. தமிழக காவிரி நதியான பவானியும், கேரளத்து வளம் கொழிக்கும் ஆறுகளும் வியாபாரம் பேசப்படுகின்றன. எத்தனை ஆறுகள் விலைபோயினவோ ஆளும் வர்க்கங்களுக்கே வெளிச்சம். இவ்வாறு தண்ணீர் தனியார் மயமாக்கல் கொள்கைகள் மூலம் நமது ஆறுகள், ஏரிகள், குளங்கள் ஆகியவை பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் உடைமைகளாக மாற்றப்படுகின்றன.

நீர் பாசனத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தமிழக அரசின் "தமிழ்நாடு நீர்வள நிலத் திட்டம்"

தமிழ் நாட்டில் வேளாண்துறையில் ஒரு புதிய மறுமலர்ச்சியையும், உத்வேகத்தையும் அளித்து, விவசாயிகளின் உற்பத்தியையும், வருமானத்தையும் பெருக்குவது என்ற பேரில் 'தமிழ்நாடு நீர்வள நிலத் திட்டம்' என்று அழைக்கப்படும் "நீர்ப்பாசனம் பெறும் வேளாண் நவீன மயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறு சீரமைப்பு, நிர்வாகத் திட்டத்தின்" 2-வது பகுதி இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.3 ஆயிரம் கோடி செலவிலான இந்தத் திட்டம் உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட இருக்கிறது. தமிழ் நாட்டில் 34 ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகள் மூலமாக ஏராளமான குளங்கள், கால்வாய்கள், ஏரிகளுக்கு நீர் கிடைக்கின்றன. இந்த ஆற்றுப் பாசனங்கள் 127 உப வடிநிலங்களை உள்ளடக்கிய, 17 பெரிய வடி நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மூலம் அண்டை மாநிலங்களில் இருந்து பெறப்படும் 224 டி.எம்.சி. தண்ணீரையும் சேர்த்து, தமிழ்நாட்டின் மேல்பரப்பு நீர்வள ஆதாரம் 885 டி.எம்.சியாகும். இந்தத் தண்ணீரை வைத்துத்தான் பாசன வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் நாட்டில் உள்ள 127 உப வடிநிலங்களில், 61 பகுதிகளில், கடந்த 2012 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி முதல் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு நீர்வளநிலத்திட்டத்தின் முதல் பகுதி ரூ.101 கோடியே 60 லட்சம் செலவில் நெல் சாகுபடி, மாற்றுப் பயிர் சாகுபடி மற்றும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது நீர்பாசனத்தை தனியாருக்கு திறந்துவிடும் திட்டத்தின் ஒரு பகுதிதான்.

தண்ணீர் மீதான பொது உரிமை மறுப்பு

பணம் மற்றும் கொள்ளை லாபமே தண்ணீர் தனியார் மயமாக்கலின் உள்ளார்ந்த வேட்கையாகும். தண்ணீர் வியாபாரம் 4,000 பில்லியன் டாலர் முதல் 3 டிரில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2025 வரை 180 பில்லியன் டாலர்கள் முதலீட்டு வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. குடிநீர் கட்டமைப்புக்கு 13 பில்லியன் டாலர்கள், சுகாதாரம் 17 பில்லியன் டாலர்கள், பஞ்சாயத்து மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு 70 பில்லியன் டாலர்கள், கழிவு நீர் தொட்டிகள் மற்றும் சுத்திகரிப்பு 30 பில்லியன் டாலர்கள், சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்கு 15 பில்லியன் டாலர்கள் என்று ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஆண்டுக்கு ரூ. 3,37,500 கோடி என்றும், இது இரு மடங்காக மாறும் என்றும் மதிப்பீடு செய்யப்படுகிறது. இத்தகைய மாபெரும் சந்தைக்காக ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகள் வெறிகொண்டு அலைகின்றன.

இயற்கை மனிதர்களுக்கு தண்ணீரை தேவையான அளவிற்கு இலவசமாகவே வழங்கி வருகிறது. ஆனால், ஏகாதிபத்தியவாதிகளின் இலாபவெறி இயற்கைப் பொருட்கள் மீது, குறிப்பாக தண்ணீர் அனைவருக்குமான பொதுச் சொத்து என்பதிலிருந்து வணிகப் பொருளாக மாற்றுகிறது. தாழ்த்தப் பட்டோருக்கு தண்ணீர் உரிமை உள்ளிட்ட பொது உரிமையை மறுத்தது நிலப்பிரபுத்துவ பார்ப்பனிய வர்ணாசிரம "மனுநீதி". ஆனால், அனைவருக்கும் தண்ணீர் என்பதற்கு மாறாக, ஏழைகளுக்கு தண்ணீர் உரிமையை மறுக்கிறது ஏகாதிபத்திய "சந்தை நீதி".

தண்ணீர் என்பதை அடிப்படை மனித உரிமையாக போற்றி பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்கள் இயற்றப்பட்டுள்ளன. 1966 ஆம் ஆண்டு பொருளாதார, சமூக, மற்றும் கலாச்சார உரிமைக்கான ஐ.நா.வின் மாநாடு இந்த முடிவை முன்வைத்தது. 2002-ல் இந்த உரிமையை உத்திரவாதப் படுத்த ஒரு நிபுணர்குழுவை அமைத்தது. 2004-ல் கூடிய 159 நாடுகள் இந்த உரிமையை உறுதி செய்தது. அந்த அறிக்கை தண்ணீர் மீதான சுதந்திரம், உரிமையை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்று அறிவித்தது. அந்த அறிக்கை தண்ணீர் மீதான பொது உரிமையை நிலைநாட்டுவதற்கு மிக முக்கியமான சட்டவடிவை முன்வைத்துள்ளது.

-           தண்ணீர் மீதான மனித உரிமை, மனிதகுலம் உயிர்வாழும் தேவையிலிருந்து பிரிக்கமுடியாதது. மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கு இது முன்நிபந்தனையாகும்.

-           தண்ணீர் மீதான மனித உரிமை ஒன்றுதான் ஒவ்வொருவருக்கும் (தனிமனித மற்றும் சமூக ரீதியான) போதுமான, பாதுகாப்பான, அங்கீகரிக்கத் தகுந்த, நடைமுறையில் தனிநபர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான உத்திரவாதத்தை அளிக்கும்.

-           இக்கமிட்டி விவசாயத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், உணவுக்கு உத்திரவாதத்தை நிலைநாட்டவும் தண்ணீர் மீதான பொது உரிமையை நிலைநாட்டவேண்டும் என்று கூறுகிறது.

-           இன்றைய தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும் உரிமைகளை தக்கவைக்க, தண்ணீர் மீதான பொது உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

-           தனியார் முதலீடுகளை அனுமதிப்பது என்ற பெயரால் தண்ணீர் வினியோகத்தையும், சேவையையும் விலையாக்கி சிறு கும்பலான பணக்காரர்களின் சொத்தாக மாற்றக்கூடாது.

-           நியாயமான முறையில் மக்களுக்கு தண்ணீர் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

என அந்த அறிக்கை கூறுகிறது.

இருதரப்பு ஒப்பந்தங்கள் மட்டுமல்லாது உலகவங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் காட் ஒப்பந்தத்தின் மூலம் தண்ணீரை தனியார் மயமாக்கும் கொள்கைகளை திணிக்கின்றன. 96-99 வரை 193 குடிநீர் திட்டங்களுக்கு உலகவங்கி கடன் கொடுத்தது. இதில் 112 கடன்களில் தண்ணீர் தனியார் மயமாக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கியது. கடனை வசூலிக்க குடிநீரோ, பாசன நீரோ எதுவாகிலும் இனி விலை நிர்ணயம் செய்தே விற்கவேண்டும் என இந்திய அரசை நிர்ப்பந்திக்கிறது. இந்த நிர்ப்பந்தங்களுக்கு மத்திய மாநில அரசுகள் பணிந்து தண்ணீரை தனியார் உடைமையாக மாற்றி வருகின்றன.

தண்ணீர் தனியார் மயமாக்கல் மூலம் தண்ணீர் துறை சந்தையோடு இணைக்கப் படுகிறது. சந்தை விதிகளின்படி தண்ணீர் வழங்குவதற்கான முழு விலையையும் நுகர்வோர் கொடுக்க வேண்டும். காசில்லாத ஏழைகளுக்கு குடி தண்ணீரும் கிடையாது. ஏழைகள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கங்களும் கூட ஓரம்கட்டப்பட்டுவிடும். விவசாயத்திற்கான தண்ணீரும் வியாபாரம் ஆகுமானால் நாட்டின் உணவு பொருள் விலையும் உயர்ந்து உணவு பாதுகாப்புக்கே குழி பறித்துவிடும்.

தண்ணீர் என்பது அடிப்படை மனித உரிமையாக ஆக்கப்படுவது ஒன்றுதான் அனைவருக்கும் தண்ணீர் என்ற உரிமையை நிலைநாட்ட வழியாகும். தண்ணீர் தனியார்மயத்தை ஒழித்து, அதன் மீதான நிலையான பொது உரிமையை நிலைநாட்டினால்தான் உணவு பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த முடியும். உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தண்ணீருக்கான உரிமையை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமல்லாது, உணவு மற்றும் வாழ்வாதாரத்திற்கான பொது சொத்தாக மாற்ற வேண்டும். குடிநீர், விவசாயம் உள்ளிட்ட அனைத்திற்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். அது ஒன்றுதான் அனைவருக்கும் தண்ணீரை உத்திரவாதப்படுத்தும்.

ஆனால் மத்திய, மாநில அரசுகளும், ஆளும் வர்க்கக் கட்சிகளும் ஏகதிபத்திய வாதிகளின் தண்ணீர் தனியார் மயமாக்கல் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இக்கொள்கைகளால்தான் நீரின் மீது பொது உரிமை மற்றும் மனித உரிமையை நிலை நாட்ட முடியவில்லை. ஆற்று நீர் மீது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை நிறுவ முடியவில்லை. இவ்வாறு தண்ணீரை தனியார் உடமை ஆக்கி பொது உரிமையை மறுப்பதால்தான் ஆற்று நீர் மீது சட்ட ரீதியாக அரசாங்கக் கட்டுப்பாட்டை கொண்டுவர மறுக்கின்றனர். நதி நீரை முறையாகப் பகிர்ந்து கொள்வதற்கான எந்த ஒரு சட்டத்தையும் கொண்டுவரவோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை செயல்படுத்தவோ, நடுவர் மன்றங்களை அமைக்கவோ மறுக்கின்றனர். எனவே தண்ணீரை தனியார்மயமாக்கி தண்ணீர் மீதான பொது உரிமையை மறுப்பதை எதிர்க்காமல், காவிரியில் நடுவர்மன்றம் அமைத்து தமிழகத்தின் உரிமையை காக்கமுடியாது.

மோடி அரசின் துரோகமும் ஒற்றைத் தீர்ப்பாய முடிவும்

தண்ணீரைத் தனியார் மயமாக்கும் கொள்கையிலிருந்துதான் நடுவர் மன்றம் அமைப்பதற்கான உத்தரவை ஏற்க மறுக்கும் மோடி அரசின் மோசடிகளை புரிந்து கொள்ள வேண்டும்.

காவிரி பிரச்சினையை தீர்க்க உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது. பிரதமர் மோடி இதைப் பயன்படுத்திக்கொள்வார் என்று தமிழ் மக்கள் நம்பினர். ஆனால், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. இந்த விஷயத்தில் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது" என்று அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் சொல்லி முதுகில் குத்தியது. இந்த வாதம் சட்டப்படியும் சரி இல்லை; அறம் சார்ந்தோ, தேச நலன் சார்ந்தோ எடுக்கப்பட்ட முடிவுமல்ல. அரசியல் சுயநலனும், புதிய காலனிய சேவையும் மோடியை இந்த நிலையை எடுக்க வைத்துள்ளது.

எல்லா மாநிலங்களையும் சம தூரத்தில் வைத்து அணுகவும், நதிநீர்ப் பகிர்வில் அந்தந்த மாநிலங்களுக்குரிய நியாயங்களை உறுதிசெய்யவும் மோடி தவறிவிட்டார். குறுகிய கால தேர்தல் லாபங்களுக்காகத் தமிழகத்தை மேலும் வதைக்கும் முடிவை பாஜக அரசு எடுத்திருக்கிறது.

ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டம்

மாநிலங்களுக்கிடையில் உள்ள தண்ணீர்ச் சிக்கல்களைத் தீர்த்து தீர்ப்புரைக்க, இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு தீர்ப்பாயம் அமைப்பது என்று மோடியின் அமைச்சரவை முடிவு செய்து அறிவித்திருக்கிறது. நடுவண் அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள இந்த ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டம் பின்வருமாறு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது

இந்த ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் "மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தாவா சட்டம்-1956" திருத்தப்படும். அதன்படி ஒற்றைத் தீர்ப்பாயத்தின் தலைவராக-ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இருப்பார். இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டவுடன் இந்தியாவில் இப்போது செயல்பாட்டில் உள்ள காவிரித் தீர்ப்பாயம் உள்ளிட்ட எட்டுத் தீர்ப்பாயங்களும் காலாவதி ஆகிவிடும்.

இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் நேரடியாக-மாநிலங்களிடமிருந்து தண்ணீர்த் தகராறு வழக்கை எடுத்துக் கொள்ளாது. இந்திய அரசு அமைத்துள்ள பூசல் தீர்வுக் குழுவில் (Disputes Resolution Committee) ஒரு மாநிலம் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அக்குழு தொடர்புடைய மாநிலங்களை அழைத்து சமரசப் பேச்சு நடத்தும். அப்பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லையெனில், அதன்பிறகு தொடர்புடைய மாநிலம் இந்திய அரசுக்கு மனு செய்ய வேண்டும். இந்த மனுவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு, அந்தக் குறிப்பிட்ட தண்ணீர்த் தகராறுகளை-ஒற்றைத் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு அனுப்பும்.

ஒற்றைத் தீர்ப்பாயம் அங்கங்கே அவ்வப்போது தேவைக்கேற்ப தீர்ப்பாய அமர்வுகளை (Benches) உருவாக்கிக் கொள்ளும். அவ்வாறான ஓர் அமர்வுக்கு - அந்தக் குறிப்பிட்ட தண்ணீர் தகராறுகளை விசாரித்து முடிவு செய்ய தீர்ப்பாயம் அனுப்பி வைக்கும். இந்த அமர்வு மூன்றாண்டுகளுக்குள் வழக்கை விசாரித்து இறுதி முடிவுகளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பாய முடிவுகள் வெளியானவுடன் அது உடனடியாக தானாகவே இந்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு அதிகாரம் வழங்கப்படும். தீர்ப்பாய அமர்வு விசாரித்து இறுதி முடிவுகள் வழங்கியவுடன் அந்த அமர்வு கலைக்கப்பட்டுவிடும். இவைதாம் இந்திய அரசு இப்போது வெளியிட்டுள்ள ஒற்றைத் தீர்ப்பாயம் குறித்த விவரங்கள்!

இந்த ஒற்றைத் தீர்ப்பாயத்தை அமைத்திட அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் 1956-ஆம் ஆண்டுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும். இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்படும்போது, இப்போதுள்ள காவிரித் தீர்ப்பாயம் உள்ளிட்ட எட்டு தீர்ப்பாயங்கள் கலைக்கப்படும். ஆக முதல் பலிகடா தமிழ்நாடுதான்! காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு, அதன் இறுதித் தீர்ப்பைக் குப்பைக் கூடையில் வீசிவிட்டு, புதிய சமரசப் பேச்சை கர்நாடகத்துடன் தமிழ்நாடு தொடங்கக் கட்டளையிட வேண்டும் என்ற சூழ்ச்சித் திட்டத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான், இந்திய அரசு உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்திருக்கிறது என்ற உண்மை இப்போது அம்பலமாகியுள்ளது.

இந்திய அரசே இந்த சூழ்ச்சித் திட்டத்தை முன்வந்து தொடங்க வேண்டும் என்பதில்லை. புதிய ஒற்றைத் தீர்ப்பாயத்தில் கர்நாடக அரசு ஒரு மனுப் போட்டால், அது சமரசத் தீர்வுக் குழுவிற்கு அதை அனுப்பி வைக்கும். சமரத் தீர்வுக் குழு இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசும்-பேசும்-பேசிக் கொண்டே இருக்கும். அந்தப் பேச்சுக்கு இப்போது காலவரம்பு விதிக்கவில்லை! பேச்சு தோல்வி என்று சமரசத் தீர்வுக் குழு அறிக்கை கொடுத்தால்தான் ஒற்றைத் தீர்ப்பாயம்-அந்த வழக்கைத் தனது அமர்வுக்கு அனுப்பி விசாரிக்க அறிவுறுத்தும். (அந்த அமர்வு மூன்றாண்டுக்குள் முடிவுகள் வழங்க வேண்டும்).

தமிழ்நாட்டின் காவிரி உரிமைச் சிக்கல் எப்போது முடிவுக்கு வரும்? அது முடிவுக்கு வரக்கூடாது என்பதுதான் மோடி அரசின் விருப்பம்! ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாட்டு அரசும் தமிழ்நாட்டு மக்களும் ஒட்டு மொத்தமாக எதிர்த்து முறியடிக்க வேண்டும். காவிரிக்குப் பொருந்தாத ஒற்றைத் தீர்ப்பாயம் சட்டமாகிவிட்டால், இந்தியாவில் அரங்கேறிவிட்டால், காவிரிச் சிக்கலை அந்த ஒற்றைத் தீர்ப்பாய சுழலுக்குள் திணித்துவிடக் கூடாது. ஏன் என்றால், காவிரித் தீர்ப்பாயம் 2007 பிப்ரவரி 5-இல் இறுதித் தீர்ப்பு வழங்கி, 19.02.2013இல் அது இந்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது. 1956-ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ப் பூசல் சட்டம் - பிரிவு 6(2)-இன்படி, ஒரு தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டால் அதன்பிறகு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அது இணையானதாகும். எனவே, முடிந்து போன தீர்வை - ஓர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை - புதிதாக சமரசப் பேச்சுக்கும் - தீர்ப்பாயத்திற்கும் விடுவது சட்டவிரோதச் செயலாகும்.

மாநிலங்களுக்கிடையிலான ஆற்று நீர்ச் சிக்கல்களை தீர்ப்பாயங்களுக்கு விட்டால் - அது முடிவுக்கு வராமல் பல ஆண்டுகள் இழுக்கப்படுகின்றன என்றும் அதனால் விரைந்து முடிவு காண ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப் போவதாகவும் இந்திய அரசு கூறுகிறது. இதைவிட மோசடிப் பேச்சு வேறென்ன இருக்க முடியும்?

காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பை 2007 பிப்ரவரி 5-இல் வெளியிட்டது. அதை அரசிதழில் வெளியிடாமல், வேண்டுமென்றே காலம் கடத்தியது இந்திய அரசு. உச்ச நீதிமன்றம் ஒரு மாதக் காலக்கெடு வைத்து ஆணையிட்ட பின்னர், 2013 பிப்ரவரி 19-இல் இறுதித் தீர்ப்பை வேறு வழியின்றி அரசிதழில் வெளியிட்டது. இதனால் அத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குரிய அதிகாரம் பெறுகிறது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அத்தீர்ப்பை முடமாக்கிப் போட்டது இந்திய அரசுதான். கடந்த செப்டம்பர் மாதம் (2016), ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும், பின்னர் அக்டோபர் 4-க்குள் அமைத்திடவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே தாக்கி அதனைத் காலொடித்து போட்டது இந்திய அரசு!

நீதிமான்கள் போலவும் நேர்மைச் செம்மல்கள் போலவும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள் பாசாங்கு செய்து கொண்டு - இப்பொழுது நிலவும் நீண்ட கால தாமதத்தைத் தவிர்க்கவே இந்தியா முழுமைக்கும் ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப் போகிறோம் என்று கூறுவது வெறும் பொய் மட்டுமா? வஞ்சகம்! அரசியல் சுயநலன் அனைத்தையும் உள்ளடக்கிய பொய்! தண்ணீரைத்  தனியார் மயாமாக்கும் திட்டம்.

இந்தியத் துணைக் கண்டத்தை வேட்டையாடும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரவேற்பு வளைவுகள் போடுவதையும், நடை பாவாடை விரிப்பதையும் தனது அரச தருமம் என்று ஆக்கிக் கொண்டுவிட்ட நரேந்திர மோடி அரசு-இந்தியாவின் ஆறுகளைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்கப் போகிறது. முதலில் தமிழர்களின் காவிரி நீரை விற்கப் போகிறது.

அதற்கான சட்ட வரைவு (மசோதா) ஒன்றை மோடி அரசு தயாரித்துள்ளது. அதன் பெயர், "தேசியத் தண்ணீர்ச் சட்டக வரைவு - 2016" (Draft National Water Framework Bill-2016 – Draft of 16 May 2016) என்பதாகும். இந்த வரைவுச் சட்டம், சட்டம் ஆவதற்கு முன் பலியானது தமிழ்நாட்டுக் காவிரி நீர்தான்! இந்த வரைவுச் சட்டகம், தண்ணீரை - "விற்பனைக்குரிய சரக்கு" என்று வரையறுக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக இதர துறைகளில் என்னென்ன செய்யப்படுகின்றனவோ அவை அத்தனையையும் ஆறுகளிலும் செய்யலாம் என்று கூறுகிறது இச்சட்டகம்.

இதன் பொருள், பெப்சி-கோகோகோலா மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ நிறுவனங்களின் பயன்பாடுகளுக்காகவும்-உள்நாட்டு மக்களிடம் விற்பனை செய்வதற்காகவும் தனியாரிடம்-பன்னாட்டு முதலாளிகளிடம் நமது ஆறுகளை இந்திய அரசு ஒப்படைப்பதை நீதித்துறை தடுக்க அதிகாரம் இல்லாமல் தடை செய்கிறது இச்சட்டம்!

மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, தில்லியின் ஒற்றை அதிகார மையத்தை உருவாக்கி வரும் நரேந்திர மோடியின் சர்வாதிகார நடவடிக்கைகளில், ஒற்றைத் தீர்ப்பாயமும் ஒன்று! இச்சட்டகத்தின் பிரிவு 23-இல் உட்பிரிவு 2 பின்வருமாறு கூறுகிறது: "நகர நீர் வழங்கலில் மீட்டர் அளவுப்படி தண்ணீரின் விலை முடிவு செய்யப்படும்". இச்சட்டகப்பிரிவு 29-இல் உட்பிரிவு 2 சொல்கிறது: "ஒரு தடவை தீர்ப்பு வந்துவிட்டால்-அந்த ஆற்றுச் சிக்கல் அத்துடன் முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. தேவைப்பட்டால் மீண்டும் மீண்டும் எழுப்பலாம்". இதன் 30ஆவது பிரிவு ஒரு மாநிலத்திற்குள் பல்வேறு பகுதி அல்லது குழுக்களிடையே எழும் நீர்ச் சிக்கலையும் தீர்க்கும் வகையில் பொறியமைவு வேண்டும் என்கிறது.

இந்த பிரிவு 30-இன் உட்பிரிவு (4) கூறுகிறது: இப்பொழுது நிலுவையில் உள்ள தண்ணீர்ச் சிக்கல்கள் அனைத்தையும் இந்தத் "தேசியத் தண்ணீர்ச் சட்டக" வரைவுக்குள் கொண்டு வர வேண்டும். இதன்படி காவிரி உரிமைச் சிக்கலும் கொண்டு செல்லப்படலாம். எனவே ஏற்கெனவே 2016-மே மாதம் இந்திய அரசு தயாரித்த தேசிய தண்ணீர்ச் சட்டக வரைவு - 2016-க்கு ஏற்பத்தான் இப்பொழுது நடுவண் நீர்வளத்துறை "ஒற்றைத் தீர்ப்பாயச் சட்டம்" கொண்டு வர உள்ளது. இவ்விரண்டிற்கும் ஏற்றபடிதான் முன்கூட்டியே காவிரி மேலாண்மை வாரியம் அமையாமல் தடுத்து விட்டது இந்திய அரசு! காவிரியைக் காவு கேட்கிறது நரேந்திரமோடி அரசின் ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டம்!

ஆனால், ஒரு மாநிலத்தின் ஜீவாதாரப் பிரச்சினையில் இப்படி அடி விழும்போது, அந்த மாநிலத்தின் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் எப்படி ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதை கர்நாடக அரசியல்வாதிகளைப் பார்த்து, தமிழகக் கட்சிகள் கற்றுக்கொள்ளவில்லை.

தமிழக அரசியலின் இழிநிலை

அண்மையில் மரணம் அடைந்த, பெண் சிங்கம் என்று அதிமுகவினரால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா மோடியின் துரோகத்திற்கு எதிராக கர்ஜிக்கவில்லை. மாநிலத்தின் 39-தொகுதிகளில் 37-தொகுதிகளுடன் மக்களவையில் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உட்கார்ந்திருக்கும் அதிமுகவின் உறுப்பினர்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களையும் சேர்த்துக்கொண்டு, நாடாளு மன்ற வளாகத்தில் பேரணி நடத்துகிறார்கள். 47 பேர் நடப்பது பேரணி! குறைந்தபட்சம் தமிழகத்தைச் சேர்ந்த எல்லாக் கட்சி உறுப்பினர்களும் கைகோர்த்து நடந்திருந்தாலாவது ஒரு அர்த்தம் கிடைத்திருக்கும். கேலிக்கூத்து!

டெல்லியில் 10 நாட்கள் தங்கி, ஒரு அரசையே வீட்டுக்கு அனுப்பியவர்களுக்கும்; குடும்பத்தோடு போய் உட்கார்ந்து, தனக்கு வேண்டிய அமைச்சரவையை வாங்கி வந்தவர்களுக்கும் தனக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால், அதிகாரப் பீடங்களை எங்கிருந்து தட்ட வேண்டும் என்பதையெல்லாம் அறிந்தவர்களுக்கு காவிரி விவகாரத்தில் எந்த மொழியில் பேசினால், டெல்லிக்குப் புரியும் என்று தெரியாதா?

தமிழக அரசியல்வாதிகளுக்கு உண்மையிலேயே காவிரி விவகாரத்திலும் தமிழக விவசாயிகளிடத்திலும் அக்கறை இருந்தால், முதலில் டெல்லியைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்க வேண்டும். பிரம்மாண்டப் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் இங்கே அல்ல; அங்கே நடத்த வேண்டும். பெரு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் முன்மொழியும் நிதிக் கொள்கைகள் தேசிய விவகாரங்களாக உருமாற்றப்பட்டு காரியமாகும்போது, மாநிலங்களின் உரிமையின் பாற்பட்ட விவகாரங்களை மட்டும் அகில இந்தியக் கட்சிகள் எப்படி அலட்சியமாகக் கையாள முடியும் என்று கேள்வி கேட்கவேண்டும். ஆனால் இரண்டு திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல மாநிலத்தில் உள்ள எந்த ஒரு நாடாளுமன்றவாதக் கட்சியும் மோடி ஆட்சியை எதிர்த்து தமிழகத்தின் உரிமைகளுக்காக உறுதியாக போராட தயாரில்லை. இக்கட்சிகள் அனைத்தும் பணத்திற்கும், பதவிக்கும் தமிழக நலன்களை பேரம்பேசி தங்களது சுய நலன்களை பேணும் கட்சிகளாக மாறிவிட்டன. திருத்தல்வாதக் கட்சிகளான சி.பி.ஐ, சி.பி.ஐ.எம் போன்றக் கட்சிகள் காவிரி பிரச்சினைக்கு தீர்வுகான ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைத்துப் போராடத் தயாரில்லை இத்தகைய சூழலில் தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் என அனைத்து ஜனநாயக சக்திகளும் மோடி அரசுக்கு எதிராக அணிதிரள வேண்டும்.

உண்மையில் நதி நீர் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக காவிரிச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமானால் ஜனநாயகமற்ற அரசியல் சட்டங்களை தூக்கியெறிய வேண்டும். இந்திய அரசு அமல்படுத்தி வரும் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகளை ஒழித்துக்கட்டி நிலத்தின் மீதும், நீரின் மீதும் இறையாண்மையையும், அரசுக் கட்டுப்பாட்டை கொண்டுவரும் திட்டங்களையும், தண்ணீரை அடிப்படை மனித உரிமையாக மாற்றும் சட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் மீது அரசாங்கக் கட்டுப்பாட்டை நிறுவ வேண்டும். தேசிய இனங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தங்களுக்குள் பிரச்சினைகளைப் பேசி தீர்ப்பதற்குத் தடையாக-தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ள இந்திய அரசிற்கு மாற்றாக, பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய கூட்டாட்சி அமைக்கப்பட வேண்டும். வெள்ளம் வறட்சியிலிருந்து நாட்டு மக்களை காக்க நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காவிரியில் இரண்டு மாநில விவசாயிகளை உள்ளடக்கிய அதிகாரமுள்ள மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதை இன்றைய இந்திய அரசு ஒருபோதும் செய்யாது. புரட்சியின் மூலம் அமையும் ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசுதான் சாதிக்கும்.

அதற்கு தயாராகும் அதே வேளையில், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஹெல்சிங்கி சமபங்கு கோட்பாட்டு அடிப்படையில் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும், கர்நாடகா தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரியும், மோடியின் ஒற்றைத் தீர்ப்பாயத்தை எதிர்த்தும், தண்ணீரை தனியார் மயமாக்கும் புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும் கீழ்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் மோடி அரசாங்கத்தை எதிர்த்துப் போராட அனைத்து ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்.

*          வளமான காலத்திலும் வறட்சிக் காலத்திலும் காவிரி நீரில் தமிழகத்திற்கு சம உரிமை உண்டு!

*          உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதை எதிர்க்கும் மோடி அரசையும் கர்நாடக அரசையும் எதிர்ப்போம்!

*          காவிரி நீரை உடனே திறந்துவிடு!

*          மோடி அரசே! காவிரி நடுவர் மன்றத்தை ஒழித்துக்கட்டும் ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் முடிவைக் கைவிடு!

*          நதிநீர் இணைப்புக்காகப் போராடுவோம்!

*          நீர், நிலம், கனிம வளங்களை கபளீகரம் செய்யும் புதிய காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவோம்!

*          தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய அரசை தூக்கியெறிவோம்!

*          பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையுள்ள தேசிய இனங்களின் கூட்டாட்சிக் குடியரசுக்காகப் போராடுவோம்!

- ஏஎம்கே

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

ஜனவரி, 2017