பாஜகவின் சூழ்ச்சி; ஆம் ஆத்மியில் நடந்தேறிய ஆள் தூக்கி அரசியல்!
அறம் இணைய இதழ்
கட்சிகளைப் பிளப்பது, ஆள் தூக்கி அரசியல் செய்வது ஆகியவற்றின் மூலமே தன் அதிகார விரிவாக்கத்தை நடத்தி வரும் பாஜக ஆம் ஆத்மியில் ஆகப் பெரிய சதியை அரங்கேற்றி உள்ளது. ஆம் ஆத்மியின் 10 மாநிலங்களை எம்பிக்களில் 7 பேர் பாஜகவில் ஐக்கியமானதன் பின்னணியில் அதிகொடூர சதித் திட்டங்கள் உள்ளன;
தலைநகராம் டெல்லியில் நேர்மையான ஆட்சி செய்து தரமான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை கட்டணமின்றி எளிய மக்களுக்கு சாத்தியப்படுத்திய ஆம் ஆத்மி மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து அதன் தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஸ் சிசோடியா போன்றவர்களை கைது செய்து சிறையில் தள்ளி ஆட்சியைப் பிடித்தது, பாஜக. பின்னர் இது முற்ற்லும் பொய்யான குற்றசாட்டு என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தற்போது வரலாறு காணாத வகையில் ஒரே நேரத்தில் ஏழு எம்.பிக்களை தூக்கியுள்ளது, பாஜக. ராகவ் சத்தா, ஸ்வாதி மாலிவால், ஹர்பஜன் சிங், சந்தீப் பதக், அசோக் மிட்டல், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி ஆகிய எழுவரும் பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பாஜகவில் இணைந்துள்ளனர். அதாவது கட்சியின் மூன்றில் இரு பங்கு எம்பிக்களை ஆம் ஆத்மியிடம் இருந்து பாஜக தூக்கி உள்ளதன் மூலம் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.
மாநிலங்களவையில் தனக்கு போதிய பிரதிநித்துவம் இல்லாத நிலைமையை மேம்படுத்திக் கொள்வதற்கு ஆம் ஆத்மியை பிளந்து அக் கட்சி எம்பிக்களில் மூன்றில் இரு பங்கை தூக்கியுள்ளது பாஜக. இதன் மூலம் விரும்பிய மசோதாக்களை கொண்டு வருவதற்கு உள்ள தடையை குறுக்கு வழியில் கடக்க நினைக்கிறது.
இதற்காக முன்னதாக அமலாக்கத்துறை ரெய்டுகளையும் நடத்தி உள்ளது. இது, ஏதோ திடீர் என்று நடந்துவிடவில்லை. சில ஆண்டுகளாகவே இதற்கான திட்டமிடல்களை செய்து வந்தது பாஜக. ஆம் ஆத்மியின் மூன்கு எம்பிக்கள் தொழில் அதிபர்கள். அசோக்மிட்டல், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹானி ஆகியோர் தொழில் அதிபர்கள் என்பதால் ஆம் ஆத்மிக்கு நிதியளிப்பாளர்களாவும் இருந்தனர்.
இந்த தாமரை ஆபரேஷனுக்கு ராகவ் சத்தா என்பவரைத் தான் முக்கிய கருவியாகப் பயன்படுத்தி உள்ளது பாஜக. பாஜக தலைவர் நிதின் நபினால் ஸ்வீட் ஊட்டி விடப்படும் இந்த ராகவ் சர்மா ஒரு சார்ட்டட் அக்கவுண்ட். 22 வயத்தில் கட்சிக்கு வந்த இவரை எம்.எல்.ஏ அடுத்து எம்.பி என பதவி கொடுத்து வளர்த்தார், கெஜ்ரிவால். ராகவ் சத்தா கெஜ்ரிவாலின் செல்லப்பிள்ளையாக பார்க்கப்பட்டவர். கெஜ்ரிவால் சிறை சென்ற போதே ராகவ் சத்தாவை பாஜக கரெக்ட் செய்துவிட்டது. கெஜ்ரிவால் சிறையில் இருந்து வந்த போது அனைவரும் உணர்ச்சி பொங்க அவரை வரவேற்ற போது லண்டன் சென்று ஓடி ஒளிந்து கொண்டார் ராகவ் சத்தா.
மாநிலங்கள் அவையில் ராகவ் சத்தாவிற்கு துணைத் தலைவர் பதவி தந்திருந்தது ஆம் ஆத்மி. ஆனால், முன்பெல்லாம் பாஜகவிற்கு எதிராக மக்கள் பிரச்சினைகளை சிறப்பாக பேசி வந்த ராகவ் சத்தா கடந்த இரண்டாண்டுகளாக அப்படி பேசுவதை முற்றிலும் தவிர்த்து வந்தார்.
தலைமை தேர்தல் ஆணையரை எதிர்த்து எல்லா எம்பிக்களும் கையெழுத்திட்ட போது ராகவ் சத்தா போடவில்லை. அதே போல சமையல் கேஸ் தட்டுப்பாடு குறித்தும் எஸ்.ஐ.ஆர் குளறுபடிகள் குறித்தும் மெளனம் சாதித்தார். ஆகவே கெஜ்ரிவால், மிகச் சமீபத்தில் ( ஏப்ரல்-2) ராகவ்விடமிருந்த துணைத் தலைவர் பதவியை பறித்து அசோக்மிட்டலுக்கு தந்தார். பாஜகவில் அசோக்மிட்டல் சேர்வதற்கு முந்திய நாள் வரை அசோக்மிட்டலது அரசு இல்லத்தின் ஒரு பகுதியில் தான் கெஜ்ரிவாலும் இருந்தார். ஆனால், எந்த அசோக் மிட்டலை ராகவ் சத்தாவுக்கு மாற்றாக கெஜ்ரிவால் நம்பினாரோ, அவரும் பாஜகவில் தற்போது சேர்ந்துள்ளார் என்பது தான் அதிர்ச்சி.
ஸ்வாதி மாலிவாலைப் பொறுத்த வரை அவரை ஆம் ஆத்மி ஆட்சியில் மகளிர் ஆணையத் தலைவராக்கியதோடு, 2022 -ல் எம்.பியாக்கி இளம் வயதிலேயே நல்ல வாய்ப்புகளை தந்தார் கெஜ்ரிவால். அவர் இரண்டு வருடத்திற்கு முன்பே பாஜக முகாமில் நெருக்கமாகிவிட்டதால், அவரை சந்திப்பதையே இரண்டு வருடங்களாக தவிர்த்துவிட்டார் கெஜ்ரிவால்.
ஹர்பஜன் சிங் பிரபல கிரிக்கெட் வீரர் என்பதற்காக எம்.பியாக்கப்பட்டவர்.
சந்தீப் பதக் கேம்பிரிட்ஜில் படித்தவர். ஐ.ஐ.டியில் பேராசிரியர். மேல் நாடு சென்று மெத்த படித்த அறிவாளி, பேராசிரியர் என்பதால் அவருக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டது.
அசோக்மிட்டல், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹானி ஆகியோர் பெரும் தொழில் அதிபர்கள் என்பதால் எம்.பி வாய்ப்பு பெற்றனர். உண்மையில் இவர்கள் பதவி பெற்ற பிறகு கட்சி நெருக்கடிகளை சந்தித்த போது அமைதி காத்தனர். பாஜக அரசு ரெய்டுகளை நடத்தியவுடன் ரகசியமாக பாஜகவுடன் இணக்கம் காட்டி தங்கள் தொழில் வளர்ச்சிக்கு பதவியை பயன்படுத்திக் கொண்டனர்.
பஞ்சாப்பில் உள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 48 பேரை பாஜகவிற்கு தூக்கி வருவேன் என ராகவ் சத்தா தற்போது பேசிக் கொண்டு இருக்கிறார். ஆக, துரோகத்திற்கு மேல் துரோகம் செய்யத் துணிந்துவிட்டார். பஞ்சாப் ஆம் ஆத்மி அரசும் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரும் என்றே தோன்றுகிறது. அடுத்த கட்சியில் உள்ள சிறு, சிறு உட்கட்சி பூசல்களை உளவறிந்து அதன் மூலம் ஆள் தூக்கி அரசியலை அதிகார பலம் கொண்டு பாஜக இந்தியா முழுமையும் கச்சிதமாக செய்து வருகிறது.
ராகவ் சத்தாவை இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்து சமூக வளைத்தளங்களில் பதிவிடுகின்றனர். முன்பு ராகவ் சத்தா பாஜகவை ரவுடிகளின் கட்சி என்றும், பித்தலாட்டக்காரர்களின் கூடாரம் என்றும் பேசியதை வைத்து ராகவ் சத்தா ரவுடியாகிவிட்டார். பித்தலாட்டக் கூடாரத்தில் ஐக்கியமாகிவிட்டார்.. என கிண்டல் செய்கிறார்கள். பொதுத் தளத்தில் தான் 15 ஆண்டுகளாக சேர்த்து வைத்த நன் மதிப்பை சிதைத்துக் கொண்டு, இவர்கள் பாஜகவிற்கு சென்றதன் பின்னணியில் பெரிய அளவு பணம் கைமாறியுள்ளது என டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பாஜக எப்படியும் ஆம் ஆத்மியை தலை எடுக்க விடாது. அதுவும், தலைநகர் டெல்லியை இனி மற்றொரு கட்சி ஆள்வதற்கு பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. இனி ஆம் ஆத்மிக்கு எதிர்காலமே இல்லை. எத்தனை காலம் போராடுவது? பாஜகவில் சேர்ந்தால் எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக் கொள்ளலாம்…என இந்த எம்பிக்கள் நினைத்திருக்க வாய்ப்புள்ளது.
இங்கே கெஜ்ரிவால் அவர்கள் செய்த தவறு ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தன் கட்சியை தெளிவான சித்தாந்த பின்னணியில் அவர் கட்டமைக்கவில்லை. மதச் சார்பின்மை, சமத்துவக் கோட்பாடு ஆகியவற்றில் கெஜ்ரிவால் செய்த சமரசங்களால் பல இழப்புகளை சந்தித்துக் கொண்டுள்ளார்.
முன்னதாக ஆம் ஆத்மியில் ராஜேந்திரபால் கெளதம் என்ற தலித் தலைவர் புத்த மதத்தை பின்பற்றியவர் என்பதற்காக கட்சியில் உள்ள வலதுசாரிகளால் விமர்சிக்கப்பட்டார். அதை கெஜ்ரிவால் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, அவர் மனம் நொந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்றார்.
ஆம் ஆத்மியை சிந்தாந்த பலத்தோடு கட்டமைக்க துடித்த இந்த கட்சியின் ஸ்தாபர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோரின் அருமை தெரியாமல் அவர்களை வெளியேற விட்டுவிட்டார். இவர்கள் கட்சியின் சித்தாந்த முகமாகத் திகழ்ந்தவர்கள். உண்மையான மக்கள் தொண்டர்கள், எளிய பின்னணியில் இருந்து வருபவர்கள் ஆகியோருக்கே பதவி வாய்ப்புகளைத் தர வேண்டும் என்றும் பாஜகவில் இருந்து ஆம் ஆத்மிக்கு வருபவர்களுக்கும் தொழில் அதிபர்கள், மேட்டுக் குடியினர், பிரபலங்கள் ஆகியோர் கட்சியில் சேர்ந்து உடனே பதவிக்கு வருவது தடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்கள். அதை கெஜ்ரிவால் பொருட்படுத்தாத காரணத்தால் வெளியேறினார்கள்.தற்போது அதற்கான விலையைத் தான் கெஜ்ரிவால் தந்து கொண்டிருக்கிறார்.
பெரிய படிப்போ, செல்வ பின்னணியோ, மேட்டுக்குடி பிறப்பு என்பதோ.. ஒருவரின் தகுதிக்கு அளவுகோல் ஆகாது. எளிய பின்புலத்தில் இருந்து வருபவர்களுக்கே வாழ்க்கையின் கஷ்டங்கள், வலிகள் தெரியும். கொள்கை பிடிப்பும், தொண்டு செய்யும் குணமும், பழி பாவங்களுக்கு அஞ்சும் பண்பும் தான் ஒருவரை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக இருக்க வேண்டும் என்பதை எந்த கட்சித் தலைமை புரிந்து வைத்துள்ளதோ, அவர்கள் இது போன்ற துரோகங்களை சந்திக்க வாய்ப்பில்லை.
தவறானவர்களுக்கு பதவி வாய்ப்புகளை வழங்குவது ஒரு கட்சி தற்கொலைப் பாதையில் பயணிப்பதற்கு ஒப்பாகும். இன்றைய தினம் இதை உணராவிட்டால், எந்தக் கட்சியும் பாஜகவின் வேட்டைக்கு பலியாவதை தவிர்க்க முடியாது.
ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கட்சி.. என்ற சதி திட்டத்தின் படி எதிர்கட்சிகளே இல்லாத ஒரு நிலையை நோக்கி தேசத்தை கொண்டு செல்லும் பாஜகவின் சூழ்ச்சியின் செயல்திட்டங்களை புரிந்து கொண்டு விழிப்புணர்வு பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/24517/aam-aadmi-mps-join-bjp/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு