அம்பலமான அதானியின் பங்குசந்தை மோசடிகள்
மே17 குரல்
உலக வரலாற்றில் இது வரை நடந்த ஊழல்களிலேயே மிகப்பெரியதும், நினைத்துப் பார்க்கவே முடியாத அதிர்ச்சிகரமான மோசடிகளையும் அதானி குழுமம் செய்திருக்கிறது என ஹிண்டன்பெர்க் என்னும் பெருநிறுவனங்களைப் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் உறுதியான ஆதாரத்துடன் நிரூபித்திருப்பதைக் கண்டு இந்திய ஒன்றியத்தின் கொள்ளையர் குழுமங்களெல்லாம் ஆடிப் போயிருக்கின்றன.
மக்களின் வரிப்பணங்களை பனியா, மார்வாடி பெருநிறுவனங்களுக்கு மடைமாற்றி விடவே திட்டங்களைத் தீட்டும் மோடியால், வறுமை தலைவிரித்தாடும் இந்திய ஒன்றியத்திலிருந்து உலகின் மூன்றாவது பணக்காரராக உயர்ந்தவர் அதானி. மக்களின் சொத்துக்களான பொதுத் துறைகளில் பெரும்பான்மையானவற்றை நாட்டு வளர்ச்சிக்கு பணம் ஈட்டப் போவதாக அதானிக்கு விற்றவர் தான் மோடி. மோடி தந்த ஆதரவும், துணிச்சலும் மக்களின் பணங்களைக் கேட்பாரற்றுக் கொள்ளையிடலாம் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்ட அதானி குழுமத்தின் வலைப்பின்னலுக்குள் புகுந்து மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம்.
கொள்ளை போகும் மக்கள் பணம்:
மோடிக்கும், அதானிக்கும் இடையேயுள்ள நெருங்கிய நட்பின் காரணமாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC), இந்திய அரசு வங்கி (SBI), வீட்டு வளர்ச்சி நிதி வங்கி (HDFC) போன்ற நிறுவனங்கள் மக்களின் பணங்களை எடுத்து அதானிக்கு கடன்கள் தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. அதானி குழுமம் 40% வரை பொதுத் துறை வங்கியிலும், 10% தனியார் வங்கிகளிலும் கடன் வாங்கியுள்ளது.
இந்த ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமத்தின் பங்குகள் ஒரே நாளில் மொத்த சந்தை மூலதனத்தில் ரூ.4 லட்சம் கோடிக்கும் மேல் இழந்திருக்கிறது. அதானி என்டர்பிரைசிஸ், அதானி போர்ட்ஸ், அதானி டிரான்ஸ்மிசன் என அதானியின் ஏழு முக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்த பங்குகளால் இரண்டே நாட்களில் எல்ஐசி 16,850 கோடியை இழந்துள்ளது. ஆனால் மீண்டும் அதானி நிறுவனங்களில் எல்.ஐ.சி (LIC) 300 கோடியும், எஸ்.பி.ஐ (SBI) 250 கோடியையும் FPO எனப்படும் அதானி நிறுவனங்களுக்கான பங்குச் சந்தை நிதி திரட்டலில் முதலீடு செய்திருக்கிறார்கள். மக்கள் பணத்தின் மீது அலட்சியமும், இழப்பு நேர்ந்தால் மக்களிடம் பிடுங்கிக் கொள்ளலாம் என்கிற எண்ணமின்றி இதற்கு வேறென்ன காரணமாக இருக்க முடியும். பெரு நிறுவனங்களிடமிருந்து வங்கிகளுக்கு வராக்கடனாக 20 லட்சம் கோடிகளும், அதில் 12 லட்சம் கோடியை தள்ளுபடியும் செய்த ஒன்றிய அரசின் சேவகர்கள் சரிந்து கொண்டிருக்கும் கட்டிடத்தின் மீதே கல்லை வைக்கிறர்கள். ஆனால் இந்த வங்கிகள் எளிய மக்களுக்கான கல்விக்கடன், தொழில் கடன் என சில ஆயிரம் கடன் வாங்கியவர்கள் மீது பிடியை இறுக்கும். மன உளைச்சல் தாங்காது தற்கொலை செய்யுமளவுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும்.
வகை வகையான மோசடிகள்:
மோடி 2014-ல் பிரதமராக பதவியேற்கும் போது அதானியின் சொத்து மதிப்பு 60 ஆயிரம் கோடி அளவில் தான் இருந்தது. ஆனால் இன்றைய சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 13 லட்சம் கோடி. மோடியின் தயவால் 20 மடங்கு அளவிற்கு வளர்ந்து உலகின் மூன்றாவது பணக்காரரானார் அதானி. மொரிஷியஸில் உள்ள 38 நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் மற்றும் பல்வேறு கரீபியன் தீவுகளில் ஷெல் நிறுவனங்களை நிறுவி, அதன் மூலமாக செய்த மோசடிகளை படம்பிடித்துக் காட்டியிருக்கிறது ஹிண்டன்பெர்க் ஆய்வு. ஷெல் நிறுவனங்கள் என்பது போலியான நிறுவனங்கள். அந்த நிறுவனங்களில் ஊழியர்கள், முகவரி, தொலைபேசி எண்கள் என முறையான விவரங்கள் எதுவும் இருக்காது. ஆனால் பதிவு மட்டும் செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு பொய்யான நிறுவனங்களை உருவாக்கி பல ஆயிரக் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம் நடத்தியிருக்கிறது அதானி நிறுவனம். இதில் பலவற்றிற்கு அதானியின் குடும்ப உறுப்பினர்களே இயக்குநர்களாக இருக்கின்றனர்.
தங்கள் நிறுவனங்களின் வளர்ச்சியை போலியாகக் காண்பித்து முதலில் பங்குசந்தை முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்பை உருவாக்குகிறது. அவர்களின் முதலீடுகளை ஷெல் நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்து கொள்கிறது. பின்பு அதை மிகைப்படுத்திக் காட்டியே மீண்டும் வங்கியில் கடன் வாங்கி புதிய நிறுவனங்களை உருவாக்குகிறது. மக்களுக்கான பொதுத் துறைகளான துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்துறை எனப் பல துறைகளையும் அதானி குழுமம் வாங்கிக் குவித்த அனைத்தும் இப்படியான சுழற்சியில் தான் நடைபெற்றிருக்கிறது. தனியாருக்கு அதுவும் குறிப்பாக பனியா, மார்வாடி நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விட்டால் இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சி தானாகவே நடைபெறும் எனும் கொள்கை கொண்ட மோடி அரசினால் கடைசியில் வங்கியில் சேமிக்கப்பட்ட மக்களின் பணமே பலிகடாவாக்கப் பட்டிருக்கிறது.
அதானியின் கடன்கள்:
மொரீசியஸ், கரிபியன் தீவுகள் போன்ற சில அயல் நாடுகளில் சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கான வரியில்லை என்னும் தடையற்ற வர்த்தக உடன்பாடு (Free Trade Agreement) இருக்கிறது. முதலாளிகளின் கருப்புப் பணங்கள் குவியும் இடமாக இவைகள் இருக்கின்றன. இதன் வழியாக சரக்குகளில் குறிப்பாக நிலக்கரி, பெட்ரோலியம், எரிவாயு என எந்தெந்தத் துறையினில் கால் பதித்திருக்கிறதோ அவைகளிலெல்லாம் இப்படியான போலியான, முறைகேடான வருவாயை ஈட்டுவதற்காக, தவறான இறக்குமதி, ஏற்றுமதி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். இவ்வாறு வரி தவிர்ப்பு, வரி ஏய்ப்பு வேலைகளை செய்து அதானி குழுமமும் அதன் போலியான ஷெல் நிறுவனங்களும் கொள்ளையடித்திருக்கின்றன.
அதானி குழுமத்தின் ஏழு முக்கிய நிறுவனங்களுக்கு FPO (Follow on Public Offer) எனப்படும் மக்களிடம் பங்குகள் திரட்டும் முறையில் ஜனவரி – 31க்குள் 20 ஆயிரம் கோடியைத் திரட்ட திட்டமிட்டிருந்தது. ஒரு பங்கின் விலை ரூ.3112 – ரூ.3276 என சுமார் 4.55 கோடிக்கும் அதிகமான பங்குகளைத் திரட்ட திட்டமிட்டிருந்த சமயத்தில் தான் இந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது. ஆனால் இலக்கு நிர்ணயித்த மூன்று நாட்களுக்குள் இதற்கும் அதிகமான பங்குகள் சேர்ந்து விட்டன. நமது பொதுத் துறை வங்கிகளும், ஆயுள் காப்பீட்டு நிறுவனமும், நிறுவனம் அற்ற முதலீட்டாளர்கள் (QIB-Qualified institutional brokers) மற்றும் சில அறக்கட்டளை நிறுவனங்கள் என அனைத்தும் சேர்ந்து கை தூக்கி விட்டிருக்கிறார்கள். மோடியின் கருணையால் நிதிகளைத் திரட்டி விட்டது அதானி குழுமம். இதிலும் ஷெல் நிறுவனங்களின் கைங்கர்யம் இருக்கிறதா என்பதை யாராவது ஆய்வு செய்து தான் கண்டுபிடிக்க வேண்டும்.
அதானி அம்பலமானதும் இது இந்தியாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார் அதானி, மோசடிப் பேர்வழியான அதானி தேசபக்தியைப் போர்த்திக் கொண்டு தப்பிக்க நினைக்கிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அதானியே தடையாக இருக்கிறார் என ஹிண்டன்பெர்க் பதிலடி கொடுத்திருக்கிறது.
இந்தியாவின் பங்குச்சந்தை துவங்கிய காலகட்டத்திலிருந்து அதனைக் கையகப்படுத்தி சூதாட்டம் போன்ற யூக வணிகத்தை மேற்கொண்டு மிகப்பெரும் அளவில் பணத்தை சம்பாதித்தவர்கள் பனியா, மார்வாடிகள். இந்தியா என்கிற தேசமே பனியாக்களின் வணிக நலனுக்காக உருவாக்கப்பட்டது என்ற பெரியாரின் ஆழமான அரசியல் பார்வையைத் தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் வங்கிகள் 1940-களிலேயே மார்வாடிகளின் கைக்குள் சென்று விட்டது. வெள்ளையர்களை விரட்டி தங்களின் வணிக நலன்களை வளர்த்துக் கொள்ளவே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி கொடுத்து அரவணைத்தார்கள் பனியா, மார்வாடி முதலாளிகள். எனவே இவர்களின் தேவைக்காகத் தான் இன்றளவும் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றனவேத் தவிர 130 கோடி மக்களின் நலனுக்காக அல்ல என்பதை மக்கள் உணரும் காலமே அதானி போன்ற மோசடிப் பேர்வழிகள் காணாமல் போவார்கள். அவர்களுக்குத் தோள் கொடுக்கும் மோடி போன்ற ஆட்சியாளர்கள் உருவாக மாட்டார்கள். சிக்கலான வலைப்பின்னலுக்குள் நுட்பமாக ஒருங்கிணைக்கப்பட்டு பொருளாதாரக் கொள்ளையை நடத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனிய – பனியா – ஒன்றிய அரசின் கூட்டுக் களவாணித்தனத்தை மக்களுக்கு விளங்கும் படி எடுத்துரைக்கும் ஆற்றல்கள் பெருக வேண்டியதே அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை இந்திய ஒன்றியம் அடையும்.
may17kural.com /wp/adanis-stock-market-scams-exposed/
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு