சீனாவை சுற்றி வளைப்பது என்ற நிலையிலிருந்து சீனாவிடமிருந்து தற்காத்துக் கொள்வது என்ற நிலைக்கு சென்றுள்ள அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகள்
வெண்பா (தமிழில்)
இந்தோ-பசிபிக் தற்காப்பு உத்தி: ஜப்பான்-பிலிப்பைன்ஸ் முக்கிய பங்காளிகள்
முதல் தீவு சங்கிலியிலிருந்து [First Island Chain] சீனா முன்னேறி செல்லாதபடி, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற அமெரிக்க நட்பு நாடுகள் கண்காணித்து வருகின்றன. தரை, கடல், வான், இணையம் ஆகிய மார்க்கங்களில் சீனா தனது இராணுவ மற்றும் தொழில்துறை பலத்தை அதிவேகமாக விரிவுபடுத்துவதால், இந்தோ-பசிபிக் முழுவதும் புதிய போர்த்தந்திரத்திற்கான சூழல் உருவாகி வருகிறது. இது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தோ-பசிபிக் முழுவதும் உள்ள ஜனநாயக நாடுகளின் தடுப்பு நடவடிக்கை (Deterrence) கொள்கைகளை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது. இந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா மாநாட்டில் [Shangri-La Dialogue], "நாம் இதை மிகைப்படுத்தவில்லை. சீனா உருவாக்கும் அச்சுறுத்தல் உண்மையானது, அது உடனடியானதாகவும் இருக்கலாம்" என்று அமெரிக்கத் தற்காப்புச் செயலாளர் பீட் ஹெக்செத கள நிலவரத்தை வெளிப்படையாகக் கூறினார். சீனாவின் இராணுவமயமாக்கல், தொழில்துறை வேகம் மற்றும் அரசியல் கட்டுப்பாடு ஆகியவை, அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையபோகிறது என்றும் அவர் எச்சரித்தார்.
"கடலில் நீர்ப்பீச்சிகள், கப்பல்களுக்கிடையிலான மோதல்கள், கப்பல்களை சட்டவிரோதமாக கைப்பற்றல் போன்ற காணொலிகளையும் படங்களையும் நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்,” என்று ஹெக்செத் கூறினார். "தென் சீனக் கடலில் [South China Sea] சட்டவிரோதமாக தீவுகளைக் கைப்பற்றுவதையும் இராணுவமயமாக்குவதையும் நாம் காண்கிறோம். இந்தச் செயல்கள் அண்டை நாடுகளை அவமதிப்பதை காட்டுகின்றன. அவற்றின் இறையாண்மை, கடற் பயண சுதந்திரம், வான்வெளிப் பயண சுதந்திரம் ஆகியவற்றுக்கு தடையாக மாறுகின்றன. சீனாவின் சீர்குலைவு நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். தென் சீனக் கடலிலோ அல்லது முதல் தீவு சங்கிலியிலோ தற்போதைய நிலையை பலவந்தமாக மாற்றும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்றும் அவர் தெரிவித்தார்.
இப்போது தென் சீனக் கடல் முதல் ஜப்பான் கடல் வரை கூட்டணி உத்தியை இந்த அவசர நிலை வரையறுக்கிறது. கப்பல் கட்டும் திறன், விண்வெளிச் செயல்பாடுகள், சர்ச்சைக்குரிய பகுதிகளை பாதுகாத்தல் ஆகியவை இனிமேல் தனித்தனி சிக்கல்கள் அல்ல; மாறாக, நிலையான யுத்தத்தந்திர மற்றும் பிராந்திய உத்தியால் அவை ஒருங்கிணைக்கப்படும். அதே சமயம், சீனாவின் இராணுவ-அரசியல் உத்திகள் ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு இடையேயான புதுப்பிக்கப்பட்ட அணிசேர்க்கையின் உள் நுழைந்து யுத்தத்தந்திரக் கூட்டை கணிக்க முடியாத அளவுக்கு சிதைத்து வருகின்றன.
நாடுகள் தங்களை மறுசீரமைக்கும்போது, ஒரு மையக் கேள்வி விவாதத்தை உருவாக்குகிறது: சீனாவின் உற்பத்தித் திறனையும் தொழில்துறை வேகத்தையும் ஈடுசெய்ய அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் போதுமான வேகத்தில் தகவமைத்துக் கொள்ள முடியுமா?
லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டில் (RUSI) இந்தோ-பசிபிக் பாதுகாப்புக்கான மூத்த ஆராய்ச்சியாளர் பிலிப் ஷெட்லர்-ஜோன்ஸ் கூறுகையில், "சீனாவின் தொழில்துறை பலமே இப்போதைய கவலைக்கான அடிப்படை - அதன் கப்பல் கட்டும் திறன் மற்றும் வேகம் சீனாவுக்கு மிகப்பெரிய கடற்படையை கடலில் நிறுத்துவதற்கும், நவீனமயமாக்கப்பட்ட உபகரணங்களை அளிப்பதற்கும் மட்டுமல்லாமல், போரில் ஏற்படும் இழப்புகளைத் தாண்டியும் போரின் போக்கை மாற்றியமைக்கும் திறனையும் அதற்கு அளிக்கிறது. இது சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய வேறுபாடு ஆகும்".
தொழில்துறை வளர்ச்சியினால் பலத்தை மீட்டெடுக்கும் திறன் அடிப்படைக் காரணியாகும். இது சீனாவின் கடற்படைகளுக்கு மட்டுமல்லாமல், வான் மற்றும் விண்வெளி அமைப்புகளின் உற்பத்தி, நிலைநிறுத்தல் மற்றும் நவீனமயமாக்கலுக்கும் பொருந்தும். இது தவிர, அதன் தாக்குதல் மற்றும் தற்காப்பு இணைய, மின்னணு போர்முறை, உளவு, கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் (ISR) திறன்களுக்கும் இது பொருந்தும். இதன் பொருள் என்னவென்றால், தடுப்பு நடவடிக்கை என்பது இனி ஒற்றை அச்சுறுத்தலை மட்டும் தோற்கடிப்பதில் அமையவில்லை; மாறாக, பல தளங்களில் போர் சவால்களின் தொடர் வரிசையைத் தடுப்பதில் அடங்கியுள்ளது. யுத்தத்தந்திர மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் இயக்குனர் கிரெகரி போலிங், சீனாவின் உற்பத்தியை பற்றிக் குறிப்பிடுகையில், "அதன் அளவே மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது” என்றார். "எண்ணிக்கையின் அடிப்படையில் மிகப்பெரிய கடற்படை, மிகப்பெரிய கடலோர காவல்படை, உலகின் மிகப்பெரிய ஏவுகணைப் படை ஆகியவை சீனாவிடம் உள்ளன. இதன் பொருள், குறிப்பாக பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் ஜப்பான் போன்ற சிறிய நாடுகள், சமச்சீரற்ற திறன்களை கொண்டுள்ளன. இடைநிலை தூர தாக்கும் திறன்கள், ஆளில்லா தளங்கள் [uncrewed platforms] ஆகியவற்றைப் பற்றி மட்டும்தான் அதிகம் சிந்திக்கின்றன" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்றவற்றுள் கடந்த சில ஆண்டுகளாக ஆளில்லா தளங்களுக்கான உதவியை பெறுவதில்தான் மிகுந்த ஆர்வம் உள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியா பிரம்மோஸ் ஏவுகணை அமைப்புகளை [BrahMos missile system] அனுப்புகின்றன. இவை, ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் கடல் தடுப்புத் திறன்களை வழங்கும் நடவடிக்கையாகும். ஏனெனில், இப்போதைய காலங்களில் சீனாவுடன் அளவுக்கு அளவு என பொருத்திப் பார்ப்பது முட்டாள்தனமாகும்" என்றார்.
இந்தோ-பசிபிக்கில் உள்ள இரண்டு முக்கிய கூட்டணி நாடுகளாக ஜப்பானும் பிலிப்பைன்சும் உள்ளன. பிராந்திய பாதுகாப்பு என்பது அமெரிக்காவின் பாரம்பரிய பசிபிக் கூட்டணிக்கு அப்பால் முன்னணி நாடுகளையும் ஒருங்கிணைத்த திடமான புதிய புவிக்கோளத்தை உருவாக்குவதாக அமெரிக்கா கருதுகிறது. ஜப்பான் ஆனது, பிரிட்டனை விஞ்சும் கனரகத் தொழில் சக்தி, உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் விண்வெளி அடிப்படையிலான திறன்களைக் கொண்டதொரு நாடு மட்டுமல்ல. அது சீனாவை மீறி தைவானை தக்கவைக்க அதன் புவியியல் அமைவிடம் மிகவும் இன்றியமையாதது. இது அமெரிக்காவின் நிலையான நட்பு நாடாகவும், அதன் பசிபிக் யுத்தத்தந்திரத்தின் முக்கிய சங்கிலியாகவும் உள்ளது. ஜப்பானின் பங்கு இல்லாவிடில், பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த நிலையும் சரியும்.
"சீனாவுக்குப் பிறகு, இந்த பிராந்தியத்தில் மிகவும் திறமையான கடற்படையை இது (ஜப்பான்) கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கட்டுப்பாடுகள் மற்றும் அரசியலமைப்புகளில் இருந்துவரும் தடைகளை அது படிப்படியாகக் கைவிட்டு வருகிறது. இது பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகும். எனவே, அவர்கள் (ஜிடிபியில்) இரண்டு சதவீதத்திலிருந்து மூன்று அல்லது நான்கு சதவீதமாக (பாதுகாப்புச் செலவினங்களை) அதிகரிக்கும்போது, அது மகத்தான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு தொழில்துறை சக்தி, உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கனரகத் தொழில் ஆகியவை இருப்பதால், நிதி ஒதுக்கீட்டை அவர்கள் தனது பலமாக மாற்ற முடிகிறது” என்றும் அவர் கூறினார்.
ஜப்பான் அதன் புவியியல் அமைப்பிலிருந்து மட்டும்கூட யுத்தத்தந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். “நீங்கள் தைவானை எடுத்துக் கொண்டால், தைவான் எவ்வாறு தனது ஆதரவைப் பெறுகிறது என்பதிலும் ஜப்பான் மிக முக்கிய அங்கம் வகிக்கும்," என்று அவர் கூறினார். தைவான் மீதான சீனாவின் எந்தவொரு ஊடுருவலுக்கும் தடையாக பிலிப்பைன்ஸின் புவியமைப்பும் விளங்குகிறது. தைவானின் கடல் எல்லைகளையொட்டி அது அமைந்திருப்பதால், ஜப்பானைப் போலவே பிலிப்பைன்ஸுக்கும் முக்கியத்துவம் உள்ளது.
"ஜப்பானும் பிலிப்பைன்சும் இல்லாவிட்டால், நாம் முதல் தீவு சங்கிலியின் இந்தோ-பசிபிக் சக்தியாக விளங்க இயலாது" என்று போலிங் கூறினார். "குவாம் மற்றும் ஹவாயிலிருந்து செயல்பட்டால்கூட, சீன A2/AD (ஊடுருவல் எதிர்ப்பு/பரவலாக்கல் மறுப்பு) திறன்களை நம்மால் சவால் விட முடியாது. ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்துதான் அதைச் செய்ய முடியும். "அவைதான் நமது மிகப்பெரிய அரசியல் சொத்து. பிலிப்பைன்ஸில் 'ஹீல்-டு-டோ' சுழற்சிகளில் [heel-to-toe rotations] ஈடுபடுவதானது பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது குறைந்தபட்சம், தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும், சீனக் கப்பல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அவை நமக்கு அவசியம்" என்றும் அவர் கூறினார்.
முதல் தீவு சங்கிலியைக் கண்காணிப்பதில் பிலிப்பைன்ஸும் ஜப்பானும் முக்கியப் பங்காற்றுகின்றன. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளுக்கும் சீனாவின் நடமாட்டங்களை கண்காணிக்க கண்களையும், காதுகளையும், சென்சார்களையும் அவை வழங்குகின்றன. "நமது நீர்மூழ்கி திறன்கள் அதிகம் பேசப்படுகின்றன. அதுவே இப்போதும் நமக்கு மிகப்பெரிய அனுகூலமாக உள்ளது" என்று போலிங் கூறினார். "இது அமெரிக்கக் கடற்படை வைத்திருக்கும் ஒரே திறனாகும், இது சீனாவால் போட்டியிட முடியாத ஒன்று, குறைந்தபட்சம் இப்போதைக்கு முடியாத ஒன்று. முதல் தீவு சங்கிலியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் படைக்கு தடையற்ற அணுகல் இருப்பதை உறுதிசெய்வதோடு சீனா தடையில்லாமல் மீற முடியாது என்பதையும் உறுதிசெய்வதுதான் முக்கியம்” என்றார்.
இந்தோ-பசிபிக் யுத்தத்தந்திரம் இரண்டு மைய யதார்த்தங்களைச் சுற்றி நகர்கிறது: சீனாவின் துரிதப்படுத்தப்பட்ட இராணுவ-தொழில்துறை உற்பத்தி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு அத்தியாவசியமான புதிய முன்னணி நாடுகளின் எழுச்சி. சீனாவின் படைகளை விரைவாக குவித்தல் மற்றும் நவீனமயமாக்குதல் ஆகிய திறன்கள் — விண்வெளி, இணையம், ISR மற்றும் மின்னணுப் போர்முறை ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்களுடன் இணைந்து — வேகமான பரவலான தடுப்பு நடவடிக்கைகளுக்கான சூழலை உருவாக்கியுள்ளது. இந்தச் சூழலில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் பிற பிராந்தியப் பங்காளிகள் தங்கள் தொழில்துறை திறன், கடல்சார் திறன்கள் மற்றும் உளவுத் தொடர்புகளை எவ்வளவு விரைவாக ஒருங்கிணைக்க முடியும் என்பதைப் பொறுத்தது. இந்தோ-பசிபிக்கில் தடுப்பு நடவடிக்கை என்பது இனி அமெரிக்காவை மட்டுமே மையப்படுத்தவில்லை; அது முன்னணி நட்பு நாடுகள் தங்களது எல்லையை பாதுகாக்கும், சீன நடவடிக்கைகளை தடுக்கும், முதல் தீவு சங்கிலியை அணுகக்கூடிய திறன் ஆகியவற்றை சார்ந்துள்ளது.
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு