ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை: கூர்மையடையும் ஐரோப்பிய ஒன்றிய முரண்பாடுகள்

தமிழில்: மருதன்

ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை: கூர்மையடையும் ஐரோப்பிய ஒன்றிய முரண்பாடுகள்

எரிசக்தி ஆற்றல் நெருக்கடியால் உடையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை

குளிர்காலம் நெருங்க நெருங்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எரிசக்தி ஆற்றலின் விலை கடுமையாக உயர்ந்துகொண்டே செல்வதால் அந்நாடுகளில் வாழும் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இருப்பினும் ஐரோப்பிய ஒன்றிய நாடான ஜெர்மனி தன் நிலமையை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி ஜெர்மன் சான்சிலர் ஒலாப் ஸ்கால்ஸ் 200 பில்லியன் யூரோக்கள் அளவிற்கு எரிசக்தி ஆற்றல் மானியம் அளிக்கப்போவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாட்டு மக்கள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற ஐரோப்பிய நாடுகளும் தங்கள் பங்கிற்கு ஓரளவு பொது மானியம் மூலம் உயர்ந்துகொண்டேபோகும் எரிசக்தி விலையை கட்டுபடுத்த முயன்று கொண்டிருந்தாலும் ஜெர்மனி அளவிற்கு பொதுமானியத்தை எந்த ஐரோப்பிய நாடாலும் அறிவிக்கமுடியாது. நிலவி வரும் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒற்றுமையாக ஒரு வழியைக் காண எத்தணித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஜெர்மனியின் இத்தன்னிசையான அறிவிப்பால் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஜெர்மனியின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தின.

ஜெர்மனியின் தன்னிச்சையான இந்த போக்கு மற்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அதனை தனிமைப்படுத்தவே வழிவகை செய்யும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் எச்சரித்தார். இத்தாலியப் பிரதமர் மரியோ ட்ராகி “இது ஐரோப்பிய ஒன்றியத்தை துண்டாட வழிகோலும் முடிவு” என தெரிவித்தார். ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்தர் ஒர்பான் “ஜெர்மனியின் இந்த நடவடிக்கை தன்னினம் உண்ணும் விலங்கினங்களின் தன்மையை (Cannibalism) ஒத்தது” என கடுமையாக விமர்சித்தார்.

2022 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீடுகளின்படி மற்ற ஒன்றிய நாடுகளின் வளர்ச்சியை காட்டிலும் ஜெர்மனியின் மதிப்பீடு சற்று மந்தமாக இருக்கிறது. ஜெர்மனியின் வளர்ச்சி மதிப்பீடானது 1.4 சதவீதம் எனும் நிலையில் இத்தாலியின் வளர்ச்சி மதிப்பீடு 2.9 சதவீதமாகவும், பிரான்சு, நெதர்லாந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் வளர்ச்சி மதிப்பீடு முறையே 2.4, 3 மற்றும் 5.2 சதவீதமாக இருக்கிறது.

ஒப்பீட்டளவில் மற்ற ஒன்றிய நாடுகளைவிட பொருளாதார மந்த நிலை குறித்த கவலை ஜெர்மனிக்கே அதிகம் இருப்பதாலும், இதிலிருந்து விரைவில் மீண்டு பொருளாதார செயல்பாடுகளை முடுக்கிவிடவும் இப்பெரும் அளவிலான மானியம் அடிப்படை தேவையாக தற்போது இருப்பதாகவும் ஜெர்மனி கருதுகிறது. ஜெர்மனி தனது நாட்டின் மொத்த இறக்குமதியில் 64 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மட்டுமே மேற்கொள்கிறது, ஒன்றியத்தின் வருடாந்திர பட்ஜெட் மற்றும் சென்ற ஆண்டின் பெருந்தொற்று நிவாரணப் பணிகளுக்கு மிகப்பெரும் பங்களிப்பாளராக விளங்குகிறது எனவே ஜெர்மனியின் பொருளாதார மந்த நிலை ஒட்டுமொத்த ஒன்றியத்தின் பொருளாதார மந்த நிலையை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும் என்பது பொதுவான கருத்தாக விளங்குகிறது.

தற்போதைய எரிசக்தி நெருக்கடியில் மிகப்பெரும் அளவில் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதும் ஜெர்மனியின் பொருளாதாரம்தான். ரஷியாவின் உக்ரைன் படையெடுப்பிற்கு முன் தனது உள்நாட்டு எரிசக்தி தேவையில் 55% ரஷியாவிடமிருந்தே இறக்குமதி செய்துவந்த ஜெர்மனி தற்போது போரின் காரணமாக ரஷியாவிடமிருந்து பெறப்படும் எரிசக்தி இறக்குமதி மொத்தத்தையும்  நிறுத்தியுள்ளதாலும், Nord Stream எரிசக்திக் குழாயில் ஏற்பட்ட வெடிவிபத்தால் விலையுயர்ந்த உற்பத்தியாளர்களிடமிருந்து எரிவாயு வாங்கவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாலும் உள்நாட்டு எரிவாயு விலையை கட்டுபடுத்தமுடியாமல் போராடி வருகிறது. மேலும் மொத்த உள்நாட்டு மின்சாரத்தில் 27% எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படுவதாலும் மின்சாரத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது ஜெர்மனியின் உள்நாட்டு உற்பத்தியில் 23.4% பங்களிக்கும் தொழில்துறையில் மிகப்பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் இந்த மானிய அறிவிப்பிற்கு போதுமான அளவு பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும் முக்கியமான உள்நாட்டு அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர்.

சமீபத்திய கருத்துக் கணிப்பில் 62% ஜெர்மானியர்கள் ஸ்கோல்ஸின் நிர்வாகத்தின் மீது அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். ஒன்றியத்தின்  ஒற்றுமையை விலையாகக் கொடுத்தேனும் உள்நாட்டு மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் நன்மதிப்பை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஜெர்மன் சான்சிலர் ஓலாப் ஸ்கோல்ஸ்.

ஜெர்மனியின் உள்நாட்டு அரசியல் நிலைமை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவைகள் இடையே எழுந்துள்ள கூர்மையான முரண்பாடுகளை இவ்வறிவிப்பு வெளிக்கொண்டு வந்துள்ளது. மேலும் ஒன்றியத்தின் வடக்கு மற்றும் தெற்கு நாடுகளிடையே பொருளாதாரச் சிக்கலை சமாளிப்பது தொடர்பான கருத்தொற்றுமையையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதிக அளவிலான பொருளாதார ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை தெற்கு நாடுகள் வலியுறுத்தும் வேளையில் அவைகளின் கடந்த கால தவறான பொருளாதார நிர்வாக போக்குகளுக்கு தாங்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தை மேற்கு நாடுகள் கொண்டிருக்கின்றன.

ஜெர்மனியின் இந்நடவடிக்கையை விமர்சித்து எழுதிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார ஆணையர் பவுலோ ஜெந்திலோனி மற்றும் போட்டி ஆணையர் தியரி ப்ரெட்டன் நிலவிக் கொண்டிருக்கும் எரிசக்தி ஆற்றல் விலையுயர்வு சிக்கலை சமாளிக்க ஒன்றியம் தழுவிய தீர்வை நோக்கி பயனிப்பதே சிறந்தது எனவும் இது போன்ற அரசாங்கங்களிடையே மானியத்திற்கான போட்டியானது ஒன்றியத்தை உடைத்து ஒற்றை ஐரோப்பிய சந்தையை சிதைத்துவிடும் என்றும் தெரிவித்தனர். கோவிட் பெருந்தொற்றின்போது வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க வகுத்து செயல்படுத்தப்ட்ட SURE திட்டம் போன்ற ஒரு திட்டவரைவை அனைத்து ஒன்றிய நாடுகளும் இணைந்து உருவாக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் நெதர்லாந்து போன்ற வடநாடுகள் ஒன்றிய அமைப்பின் இத்தகைய கருத்துக்களை போட்டி மனப்பான்மைக்கு எதிரானதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் கருதுகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் ஒன்றிய நாடுகளின் கடன்களை ஒரு சில நாடுகளின் மீது சுமத்த மட்டுமே பயன்படும் என்றும் அந்நாடுகள் கருதுகின்றன. சற்று வெளிப்படையாக சொல்வதெனில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 150 சதவீதம் அளவிலான இத்தாலியின் கடன் சுமையை பகிர்ந்து கொள்ள ஜெர்மனியோ, நெதர்லாந்தோ தயாராக இல்லை.

இதுபோன்ற ஒன்றிய அளவிலான சிக்கல்கள் அதிகரிப்பதை ரஷியா தனக்கு சாதமாக பயன்படுத்திகொள்ளும் என்பது மட்டும் திண்ணம். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் ரஷியா மீதான பொருளாதாரத் தடையை எதிர்த்து வரும் ஹங்கேரி தன் நாட்டில் எரிவாயு விலையை கட்டுப்படுத்த ரஷியாவுடன் ஒரு சிறப்பு புரிந்துணர்வை ஏற்பாடு செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அந்நாடு வரும் குளிர்காலத்தை எளிதாக கடந்துவிடமுடியும் என்ற நிலையில் இருக்கின்றது. மற்ற ஒன்றிய நாடுகளுக்கும் ரஷியாவுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள ஹங்கேரியின் இக்கொள்கை ஒரு முன்மாதிரியாக அமையக்கூடும் என்ற அச்சமும் இல்லாமலில்லை.

பிளவுகள் வளர அனுமதிப்பதும், கூட்டுப் பொருளாதாரப் தீர்வை தாமதப்படுத்துவதும் பொருளாதார இழப்பு மற்றும் புவிசார் அரசியல் பாதுகாப்பின்மை ஆகிய இரண்டிலும் அனைவருக்கும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

அக்டோபர் 20 மற்றும் 21 தேதிகளில் நடந்த ஐரோப்பிய கவுன்சில் வேலை அமர்வில் இது தெளிவாகியது. EU கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் குறிப்பிட்டது போல், EU உறுப்பு நாடுகள் "ஒன்றாக செயல்பட வலுவான மற்றும் ஒருமித்த அர்ப்பணிப்பை காட்டியுள்ளன” என்று தெரிவித்தார்.

அமர்வில் விவாதிக்கப்பட்ட நடவடிக்கைகளில் எரிசக்தி சேமிப்பு உத்திகள், கூட்டு எரிவாயு கொள்முதல், மின்சார உற்பத்தியில் எரிவாயுக்கான தற்காலிக விலை வரம்பு (Price Cap) மற்றும் இயற்கை எரிவாயு பரிவர்த்தனைகளில் தற்காலிக மாறும் விலை வழித்தடம் (Dynamic Price Corridor) ஆகியவை அடங்கும்.

மேலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எரிசக்தி ஒற்றுமை நடவடிக்கைகளை வளர்ப்பதன் அவசியத்தையும், நிவலவும் நெருக்கடியிலிருந்து ஐரோப்பியர்களைப் பாதுகாக்க தேசிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அளவில் பொருத்தமான கருவிகளைத் திரட்ட வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய ஆற்றல் நிதியத்தை உருவாக்குவது பற்றி தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் விவாதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் மேற்கூறிய திட்டங்களை செயல்படுத்த உறுதியான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்றும், மேலும் அவற்றை முன்னோக்கி நகர்த்த மற்றொரு ஐரோப்பிய கவுன்சில் நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பத்துள்ளது.

இதற்கிடையில், EU ஒருங்கிணைப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான ஆணையாளரான எலிசா பெரய்ரா, குடும்பங்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் உயர் எரிசக்தி விலைகளால் திணறிக் கொண்டிருக்கும் பெரிய தொழில்களுக்கு உதவுவதற்காக 2014-20 ஒருங்கிணைப்புக் கொள்கையின் கீழ் 40 பில்லியன் யூரோக்கள் ($39bn) வரை திருப்பிவிட உறுப்பு நாடுகளை அனுமதிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார்.. இது பொதுவான நிதியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இது சரியான திசையில் ஒரு படியாகும் என்று ஒன்றிய ஆதரவு வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பாத்திரத்தை வகிப்பதன் சங்கடங்களைக் களைவதற்கும், எரிசக்தி நெருக்கடியில் பொதுவான கொள்கையை வகுப்பதில் வழிவகுக்க போதுமான அரசியல் மற்றும் பொருளாதார சக்தி இருப்பதை ஒப்புக்கொள்வதற்கும் ஜெர்மனிக்கு இதுவே நல்ல சந்தர்ப்பம் எனவும், அது வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே பாலமாக மாறுவதன் மூலமும், அரசியல் ரீதியாக மூலோபாய மற்றும் பொருளாதார ரீதியாக வசதியான அணுகுமுறைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமும் ஐரோப்பிய ஒற்றுமைக்கான அதன் உறுதிப்பாட்டை நிரூபிக்க முடியும் எனவும் ஒருமித்த கருத்து நிலவுகிறது.

அதே சமயம் தன்னிச்சையான முடிவுகள் ஐரோப்பிய ஒன்றிய உடன்பாடுகளுக்கு பெரும் இடையூறு விளைவித்து எரிவாயு விலையை உயர்த்தும், இது எதிர்பார்க்கப்படும் மந்தநிலையை மோசமாக்குவது மட்டுமல்லாமல், உக்ரேனில் தனது போருக்கு நிதியளிப்பதற்காக புடினுக்கு இன்னும் அதிக எரிசக்தி வருவாயையும் கொடுக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது ஜெர்மனியால் கூட தாங்க முடியாத ஒரு பெரிய ஐரோப்பிய அரசியல் மற்றும் பொருளாதார தோல்வியாக இருக்கும் என்பதே ஒருமித்த ஒன்றிய ஆதரவு குரல்களாக ஒலிக்கின்றன.

- மருதன்

(தமிழில்)

மூலக்கட்டுரை: Aljazeera

https://www.aljazeera.com/opinions/2022/10/29/to-stay-warm-this-winter-the-eu-needs-to-stay-together