ஜிஎஸ்டி வரிவிகிதக் குறைப்பு அவர்களின் நோக்கத்தை எட்டாது - நெருக்கடி மேலும் தீவிரமடையும்
தி வயர் - தமிழில்: வெண்பா

பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பானது சரியான நடவடிக்கையாகக் காட்சியளிக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சில் செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற கூட்டத்தில், வரி விகிதச் சீரமைப்பிற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. வருவாய் இழப்பு பற்றி பேசிக் கொண்டிருந்த எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகள் கூட வரி குறைப்பானது சாமானிய மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற பொதுவான எண்ணம் நிலவி வருவதால், அரசியல்ரீதியாக அதனை எதிர்ப்பது உகந்ததாக இருக்காது எனக் கருதி அமைதி காக்கின்றன.
ஆனால் உண்மையில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என பார்ப்போம். (மொ-ர்)
இந்த விகிதக் குறைப்புகள் பயனுள்ளவையாக இருந்திருந்தால், அவை ஏன் முன்னதாகவே செயல்படுத்தப்படவில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஜிஎஸ்டி ஒரு மறைமுக வரி என்பதும், அது தேக்கநிலை பணவீக்கத்திற்கு (stagflationary) இட்டுச்செல்லும் தன்மை கொண்டது என்பதும், விகிதக் குறைப்பு உள்ளிட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகள் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்த விகிதக் குறைப்புகள், டிரம்ப் இந்திய ஏற்றுமதிகளுக்கு விதித்த அபராத வரிகளுடன் தொடர்புடையவை அல்ல என்று நிதி அமைச்சகம் பேசி வருகிறது. அரசு இந்த விகிதக் குறைப்புகளை நடைமுறைபடுத்துவது குறித்து ஏற்கனவே சிந்தித்து வருவதாகவும் கூட தெரிவிக்கிறது.
அவ்வாறெனில், வரிவிகிதங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கும் கொள்கை வகுப்பாளர்களான இவர்கள், ஏற்கனவே படிப்படியாக ஏன் செய்யவில்லை, தற்போது அதைக் குறைப்பதற்கான அவசரம் என்ன' என்ற கேள்விக்கு நிதி அமைச்சகம் சரியான பதிலளிக்கவில்லை. எடுத்துக்காட்டாக, காப்பீட்டுக்கு பொருந்தக்கூடிய விகிதங்களைக் குறைப்பது குறித்து வருடங்களுக்கு மேலாக பேசப்பட்டு வருகிறது. கல்விப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கான விகிதங்களைக் குறைப்பது அல்லது நீக்குவதை விட எது மிகவும் நியாயமானதாக இவ்வளவு நாள் இருந்திருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகள் குறித்த பிரதமரின் அறிவிப்பு, ஆகஸ்ட் 15 அன்று அவரது சுதந்திர தின உரையில் வெளியானது. ஆகஸ்ட் 7 அன்று டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு, ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது கூடுதல் 25% அபராத வரிகளை விதிப்பதாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இது நிகழ்ந்தது.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழுவின் வருகை ரத்து செய்யப்பட்டதன் மூலம், பேச்சுவார்த்தைகள் முடங்கிவிட்டன என்பது தெளிவாகிறது. ஏற்றுமதியில் இந்தியாவின் போட்டியாளர்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை விட, இந்தியா மீதான வரிகள் அதிகமாக இருக்கும் என்பதாலும், இதன் விளைவாக அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகள் சந்தையை இழக்கும் என்பதாலும், சுமார் 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 4.4 லட்சம் கோடி, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.26% சதவிகிதம்) மதிப்புள்ள இந்தியாவின் ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் என்பது தெரிந்தது.
இந்தியாவில் தேவையின் (Demand) மீதான தாக்கம்
இந்த பாதிப்பு பொருளாதாரம், வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆகியவற்றில் தேவையின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். பாதகமான சூழல் மற்றும் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, முதலீடு, பங்குச் சந்தை, ரூபாய் மதிப்பு இவற்றை பாதிக்கக்கூடும். நேரடி ஏற்றுமதியாளர்கள் மட்டுமல்லாமல், பிற உற்பத்தியார்கள் மூலப்பொருட்கள் வழங்குவோர், சேவைகளை வழங்குபவர்களும் கூட இதனால் பாதிக்கப்படுவர்.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்கள் உழைப்பைச் செறிவானவை என்பதால், வேலையின்மை அதிகரிக்கக்கூடும், அது பொருளாதாரத்தில் தேவையை மேலும் குறைக்கும்.
இந்த பாதிப்புகளை போக்குவதற்கான மாற்று மருந்து பொருளாதாரத்தில் தேவையைப் பெருக்குவதே ஆகும். உள்நாட்டுத் தேவையை உயர்த்துவதே மிகவும் வெளிப்படையான வழியாகும். 145 கோடி மக்களைக் கொண்ட இந்தியா, பெரும்பாலும் ஏழ்மையில் உள்ளவர்களாகவும், குறைந்த அளவே நுகர்வோர்களாகவும் இருந்தாலும், அவர்களின் உண்மையான வருமானம் அதிகரித்தால் தேவையை உருவாக்க முடியும். மேலும், மறைமுக வரிகளைக் குறைப்பதன் மூலம் விலைகள் உண்மையிலேயே குறைக்கப்படும்போது (அதாவது இந்த நன்மை நுகர்வோரைச் சென்றடைந்தால்) அது தேவையை அதிகரிக்கும்.
ஆனால், ஏற்றுமதி வீழ்ச்சியால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய இது போதுமானதா என்பதே இங்கு எழும் கேள்வி.
டிரம்ப்பின் அபராத வரிகள் பல வழிகளில் தேவையை அச்சுறுத்தக்கூடும். முதலாவதாக, அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் நேரடியாகக் குறைவதால். இரண்டாவதாக, அனைத்து நாடுகளிடமும் உபரிப் பொருட்கள் குவிந்திருப்பதால், மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதிகளும் குறைய வாய்ப்புள்ளது, மேலும் அவை தங்கள் உபரிப் பொருட்களை பிற நாடுகளுக்கு விற்க முயற்சிக்கும். மூன்றாவதாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்து, மற்ற நாடுகள் அவர்களிடம் இருந்து அதிக தள்ளுபடிகளையும் சலுகைகளையும் பெற முயற்சிக்கும். நான்காவதாக, அதிக வரிகள் காரணமாக உலகப் பொருளாதாரம் மந்தமடையக்கூடும், தேவையின் வீழ்ச்சி அமெரிக்காவில் தொடங்கி பின்னர் மற்ற நாடுகளுக்கும் பரவும். ஐந்தாவதாக, தொழிலாளர்களின் ஊதியங்கள் எல்லா இடங்களிலும் குறைய வாய்ப்புள்ளது, இது தேவையின் வீழ்ச்சிக்கு நிச்சய்ம் வழிவகுக்கும். இறுதியாக, நிச்சயமற்ற தன்மை காரணமாக, முதலீடுகள் குறைய அதிக வாய்ப்புள்ளது.
இந்தக் காரணிகள் உலகப் பொருளாதாரத்தைத் தேக்கநிலை பணவீக்கம் அல்லது மந்தநிலைக்குத் தள்ளக்கூடும். இது உலகளாவிய தேவையை கடுமையாகக் குறைப்பதற்கும், அமெரிக்காவில் ஏற்படும் இழப்பை விட இந்தியாவின் ஏற்றுமதிகளை மிகக் கடுமையாகப் பாதிப்பதற்கும் வழிவகுக்கும்.
அமெரிக்கா தனக்கு மட்டுமல்லாமல் மற்ற எல்லா நாடுகளுக்கும் விதித்த அதிக வரிகளைத் திரும்பப் பெற்றால், தாக்கம் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படலாம். ஆனால் இது சாத்தியமற்றதாகத் தெரிகிறது. அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி டிரம்ப் வரிகளை விதிப்பதற்கு எதிராக அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, இது அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்த ஒரு காரணமாக அமைந்தது என்று அந்த மேல்முறையீட்டில் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே, அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை இந்தியா மீதான வரிகள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
சுருக்கமாகக் கூறினால், ஏற்றுமதி சந்தைகளை இழப்பதன் மூலம் ஏற்படும் தாக்கம், அமெரிக்க வரிகளின் அதிகரிப்பால் நேரடியாக ஏற்பட்ட ரூ. 4.4 லட்சம் கோடி இழப்பை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
தேவையை (Demand) இந்தியா மேம்படுத்துதல்
ஏற்றுமதியாளர்கள் ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளால் பயனடைய மாட்டார்கள், ஏனெனில் ஏற்றுமதிகள் பூஜ்ஜிய-மதிப்பீட்டில் உள்ளன – அதாவது அவர்கள் ஜிஎஸ்டி செலுத்துவதில்லை. எனவே, ஏற்றுமதியாளர்களின் தேவை எந்த மாற்றமும் அடையாது.
பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளில் தேவை அதிகரித்து, ஏற்றுமதி தேவையின் சரிவை ஈடுசெய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது உண்மையில் நடக்குமா என்பதே இங்கு எழும் கேள்வி.
சில பொருட்களின் ஜிஎஸ்டி விகிதங்கள் உயரும் அதே வேளையில், பெரும்பாலான பொருட்களுக்கு விகிதங்கள் குறையும். 2023-24 ஆம் ஆண்டிற்கான விரிவான தரவுகளின் (துரதிர்ஷ்டவசமாக, பொதுவில் வெளியிடப்படவில்லை) அடிப்படையில், நிதி அமைச்சகத்திற்கு கிடைத்த தகவலின்படி, நிகர வருவாய் இழப்பு சுமார் ரூ. 48,000 கோடியாக இருக்கும் என்று வருவாய் செயலாளர் தெரிவித்தார். இதை இழப்பு என்று குறிப்பிடுவதில் கூடமோசமான அணுகுமுறை இருந்தது.
இது தேவையை எந்த அளவிற்கு மேம்படுத்தும்?
கார்கள், ஆடைகள் மற்றும் விமானங்களில் வணிக வகுப்பு இருக்கைகள் போன்ற ஆடம்பர மற்றும் அதிக விலையுள்ள பொருட்களுக்கான விகித அதிகரிப்புகள் அவற்றின் விலைகளை உயர்த்தும். மேல்-நடுத்தர வர்க்கத்தினரின் இந்த பொருட்களுக்கான தேவை நெகிழ்வானது என்பதால் குறையும்.
வரி குறைக்கப்பட்ட பொதுவான நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறையும், அது இந்த பொருட்களுக்கான தேவையைத் தூண்டும் அல்லது நுகர்வோருக்குச் சேமிப்பை ஏற்படுத்தும். இந்தச் சேமிப்பு பிற நுகர்வுப் பொருட்களுக்குச் செலவிடப்படலாம் அல்லது கடன்களைத் தீர்க்கப் பயன்படுத்தப்படலாம். தேவையில் ஒரு குறிப்பிட்ட அதிகரிப்பு இதன் தொடர்ச்சியாக ஏற்படக் கூடும்.
இந்த அதிகரிப்பை இப்போதைக்கு மதிப்பிட முடியாது என்று நிதி அமைச்சகம் கூறுகிறது. ஜிஎஸ்டி செயல்படத் தொடங்கிய கடந்த எட்டு ஆண்டுகளில், சில பொருட்களின் விகிதக் குறைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நுகர்வின் பங்கை அதிகரிக்கவில்லை. இது கொரானா தொற்று உள்ளிட்ட பிற காரணிகளால் நிகழவில்லை.
ஆனால் ரூ. 48,000 கோடி நிகர ஜிஎஸ்டி வருவாய் குறைப்பு, குறைந்தபட்சம் ரூ. 4.4 லட்சம் கோடி அளவிற்குத் தேவையைத் தூண்டிவிடும் என்பதும் கூட சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது. மேலே கூறியவாறு, உண்மையில் தேவையின் வீழ்ச்சி இந்தத் தொகைக்கு பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றன. எனவே, அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகள் ஏற்றுமதியால் ஏற்படும் தேவை இழப்பை ஈடுசெய்ய வாய்ப்பே இல்லை.
மிக முக்கியமாக, ஜிஎஸ்டி நிறுவனமயப்பட்ட சில துறைக்கு மட்டுமே பொருந்தும், நிறுவனமயப்படாத துறைக்கு அல்ல. இதனால், விகிதக் குறைப்பு நிறுவனமயப்பட்ட துறையின் விலைகளைக் குறைக்கும், ஆனால் நிறுவனமயப்படாத துறையின் விலைகளை குறைக்காது. இதன் விளைவாக, தேவைகள் நிறுவனமயப்பட்ட துறைகளில் மட்டுமே அதிகரிக்கும், நிறுவனமயப்படாத துறைகளில் அல்ல. ஜிஎஸ்டி காரணமாக நிறுவனமயப்படாத துறைகள் (அதாவது சிறு குறு உற்பத்தி துறைகள்) ஏற்கனவே சந்தித்து வரும் பாதகமான சூழல்கள் மேலும் தீவிரமடையும்.
இந்தச் சார்பு விலை மாற்றம் காரணமாக, உழைப்புச் செறிவான நிறுவனமயப்படாத துறையிலிருந்து மூலதனச் செறிவான நிறுவனமயப்பட்ட துறைகளின் உற்பத்தி பொருட்களுக்கானத் தேவை மாற்றம் அடையும். இந்தத் தேவை மாற்றம், விகிதக் குறைப்புகளின் விளைவாக நிறுவனமயப்பட்ட துறையில் ஏற்படும் எந்தவொரு வேலைவாய்ப்பு மற்றும் தேவையின் அதிகரிப்பையும் மிஞ்சிவிடும். பொருளாதாரத்தின் K-வடிவ வளர்ச்சி மேலும் வலுப்பெறும். ஒட்டுமொத்த தேவை குறைவதால், நிறுவனமயப்பட்ட துறையின் வளர்ச்சி குறைய இது எதிர்வினையாற்றும்.
தேவையின் அதிகரிப்பு காரணமாக நிறுவனமயப்பட்ட துறையில் உற்பத்தித் திறன் பயன்பாடு (capacity utilisation) அதிகரித்து இத்துறையில் அதிக முதலீட்டிற்கு இட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நிலவும் நிச்சயமற்ற தன்மை அதிகரித்திருப்பதாலும், நிறுவனமயப்படாத துறையின் வீழ்ச்சி பொருளாதாரத்தை மந்தமாக்கும் என்பதாலும் அது சாத்தியமில்லை.
முடிவுரை
சுருக்கமாக, நிறுவனமயப்படாத துறையின் மீதான மோசமான தாக்கம், நிறுவனமயப்பட்ட துறையின் மீதான ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளின் நேர்மறையான தாக்கத்தை விட மேலோங்கி நிற்கும்.
இவை அனைத்தும் மிகப்பரந்த நிறுவனமயப்படாத துறைகளை சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டியின் உள்ளார்ந்த கட்டமைப்புச் சிக்கல்களின் விளைவாகும். ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியபோது இது போதுமான அளவு கணக்கில் கொள்ளப்படவில்லை. இப்போது ஜிஎஸ்டி அபாயம் நிதர்சனமான உண்மை என்பதால், இந்த கட்டமைப்புச் சிக்கலைச் சரிசெய்ய அவசர சீர்திருத்தம் தேவைப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விகிதக் குறைப்புகள் மற்றும் சில சட்ட மாற்றங்கள் போதுமான சீர்திருத்தங்கள் அல்ல.
சுருக்கமாக, 145 கோடி இந்தியர்களால் உருவாக்கப்படக்கூடிய உள்நாட்டுத் தேவையை உயர்த்துவதும், ஏற்றுமதி சந்தைகளை அதிகம் சார்ந்திராமல் இருப்பதும் ஒரு சிறந்த அணுகுமுறையாகும். ஆனால் அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் அதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்படவில்லை, ஏனெனில் அவை (மிக சொற்பளவில் வேலைவாய்ப்பினை வழங்கி வரும்) நிறுவனமயப்பட்ட துறைக்கு மட்டுமே உதவும்; நிறுவனமயப்படாத துறைகளின் வீழ்ச்சிக்கே இட்டுச் செல்லும். மேலும், இது தேவையை மேம்படுத்துவதற்குப் பதிலாக, நெருக்கடியை மேலும் மோசமாக்கும்.
- வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://m.thewire.in/article/economy/gst-rate-cuts-will-not-achieve-their-goal
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு