பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை
வன்மையான கண்டனங்கள்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புக்கள், மத்தியில் ஆளும் பாசிச மோடி அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த பாசிச நடவடிக்கைக்கு செந்தளம் வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறது.
சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் இதுவரை வெகுஜன அரசியலில் ஈடுபட்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (PFI) அமைப்பை மோடி அரசு தடை செய்துள்ளது. அதன் மீது அவதூறான பொய்களையும் கட்டுக்கதைகளையும் ஜோடித்து; பாஜக ஆளும் குஜராத், கர்நாடகா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பரிந்துரைத்தது எனவும் கூறி இத்தடையை நியாயப்படுத்தி வருகிறது. ஒட்டுமொத்த அரசமைப்பையும் தன் ஆணைக்கிணங்கும் வகையில் மாற்றியமைத்து பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது.
தொடர்ச்சியாக ஜனநாயக சக்திகள் மீதும் சிறுபான்மையினர் மீதும் தாக்குதலை தொடுத்து வரும் மோடி அரசு அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளதையே இச்சம்பவம் தெரிவிக்கிறது.
பாராளுமன்றங்களில் மோடியை துதிப்பாடுவதை தவிர வேறு எதையும் செய்யக்கூடாது எனும் வகையிலேயே சில அரசியல் வார்த்தைகள் பயன்பாட்டிற்கு பாராளுமன்றத்தில் தடை செய்தது இந்த மோடி அரசு. மோடி என்றாலே பாசிச அடக்குமுறை பாயும் என்ற அவல நிலையை ஏற்படுத்தியது.
PFI ன் நாடு தழுவிய வளர்ச்சியும் ஜனநாயகத்திற்காகவும், பாசிச எதிர்ப்பிலும் அவர்கள் மேற்கொண்ட அணிச்சேர்க்கை இந்த மோடி அரசை இந்நிலையை எடுக்க வைத்துள்ளது. மாறாக, அவர்கள் அடுக்கும் கட்டுக்கதைகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவையே.
இந்தியாவில் உண்மையில் பயங்கரவாத அமைப்புகள் என்றால் அது ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவாரங்களே! அவைகள்தான் முதலில் தடை செய்யப்பட வேண்டியவை. பாஜக அரசுடன் கள்ளக் கூட்டு நடத்தும் திமுக அரசோ, திரிணாமூல் காங்கிரசோ, சிபிஎம்மோ ஆர்.எஸ்.எஸ் ஐ தடை செய்ய பரிந்துரைக் கூட செய்யவில்லை. ஆனால் மத்திய அரசின் ஏவல்களுக்கு அடிபணிந்து நீதிமன்றங்களுடன் இணைந்து தானும் பாசிசத்தை அரங்கேற்றி வருகின்றன.
PFIஐ தடை செய்தது போன்று RSSம் தடை செய்யப்பட வேண்டும். இரண்டும் சேர்ந்துதான் கேரளாவில் வன்முறையில் ஈடுபட்டதாக யெச்சூரி சொல்கிறார். RSS - PFI இரண்டையும் சமப்படுத்துகிறது. பெரும்பான்மை இந்துமதவெறிக்கெதிரான சிறுபான்மையினரின் ஜனநாயகத்திற்கான போராட்டத்தையும் சமப்படுத்தும் தவறை செய்கிறது.
எனவே இச்சூழலில் PFI மீதான தடையை நீக்க கோருவதும்; பாசிசத்திற்கெதிராக அனைத்து ஜனநாயக ஊடகங்களும் குரல் கொடுப்பது மற்றும் ஒண்றிணைந்து நிற்பது இன்றைய அவசர அவசிய தேவையாகியுள்ளது.
- செந்தளம் செய்திப் பிரிவு