அன்று திண்ணியம்! நேற்று வேங்கைவயல்! இன்று சங்ககிரி - தேவண்ண கவுண்டனூர்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

அன்று திண்ணியம்! நேற்று வேங்கைவயல்! இன்று சங்ககிரி - தேவண்ண கவுண்டனூர்!

திராவிட மாடல் ஆட்சியில் சாதிய வன்கொடுமைகள் தலை விரித்தாடுகின்றன. திண்ணியத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாயில் மலம் திணித்த வன்கொடுமையின் நீட்சியாக வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் சாதி வெறியர்கள் மலம் கலந்த வன்கொடுமை செயல் கண்டு தமிழ்நாடே அதிர்ச்சிக்குள்ளானது. ஆனால் தி.மு.க அரசு அதிர்ச்சியடையவில்லை. மிகவும் நிதானமாக டி.என்.ஏ பரிசோதனை எனும் பெயரில் மலம் கலந்தவர்களை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினரை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு துன்புறுத்தி வருகிறது. தி.மு.க அரசின் இந்த போக்கு சாதி வெறியர்களுக்கு அசாத்திய துணிச்சலை தந்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே அண்மையில் சங்ககரி வட்டத்திலுள்ள தேவண்ண கவுண்டனூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் வீட்டு உணவு தட்டில் சாதி வெறியர்கள் மலத்தை அள்ளி வீசியுள்ளனர். இந்த செய்தியை கூட ஊடக வெளிச்சத்திற்கு வராமல் பார்த்துக் கொண்டு இன்றுவரை ஆதிக்க சாதிவெறியர்களை தி.மு.க அரசும் அதன் மாவட்ட ஆட்சி நிர்வாகமும் காவல் துறையும் பாதுகாத்து வருகின்றன. 

சங்ககிரியில் ஒருவேங்கைவயல்! 

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் தேவண்ண கவுண்டனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மட்டம்பட்டி பொடாரங்காடு கிராமத்தில் 57 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ராதிகா என்பவரின் தாத்தா வசித்து வந்தார். ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கமலகாசன் தன் மனைவி, மகன் விஜய பிரபாகரன், மகள் இத்திசாவுடன் அதே வீட்டில் வசித்து வருகிறார். வீட்டிற்கு மின் இணைப்பு பெற வேண்டி கடந்த மார்ச் மாதம் மின் வாரியத்தை அணுகியுள்ளார். மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு பெற வேண்டுமெனில் பட்டா, வீட்டு வரி இரசீது தேவை என்று சொன்னதையடுத்து அதன்பொருட்டு கிராம நிர்வாக அலுவலரை அணுகியுள்ளார். வன்னியர் சாதியை சேர்ந்த அந்த கிராம நிர்வாக அலுவலர் (VAO) ஆய்வு செய்தபின் தருவதாக பொய் சொல்லி அவரை அனுப்பிவிடுகிறார். பிறகு வன்னியர் சாதியை சேர்ந்த குப்புசாமி-பாக்கியம் குடும்பத்தாரிடம் இந்த தகவலை சொல்லி சாதிவெறியை தூண்டும் வகையில் பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கமலகாசன் வசிக்கும் இடம் புறம்போக்கு என்று தெரிந்தும் (புல எண் 600 1B) அதை மறைத்து அந்த இடம் குப்புசாமிக்கு சொந்தமான இடமான புல எண் 600 2A ஐ சேர்ந்த இடம் எனவும் பொய்யான தகவலை கூறி அவர்களை தூண்டிவிட்டுள்ளார். 

வி.ஏ.ஓ வின் தூண்டுதலால் குப்புசாமி பாக்கியம் தம்பதியினர் தங்கள் மகன்களுடன் (ராஜரத்தினம், ஆனந்தராஜ்) கமலகாசன் வீட்டு முன்பு சென்று "இது எங்களுக்கு சொந்தமான இடம். நீ எப்படி வீட்டுவரி இரசீது வாங்க முடியும்? வீட்டை காலி செய்" என மிரட்டியுள்ளனர். அதை தொடர்ந்து 15.3 அன்று கமலகாசன் வீட்டின் முன்பு இருந்த புளியமரத்தை ஜேசிபி மூலம் வெட்டி சாய்த்துள்ளனர். இது குறித்து கமலகாசன் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியரிடம் புகார் தந்துள்ளார். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து குப்புசாமி குடும்பத்தார் 24.4 அன்று கமலகாசன் வீட்டின் வாழை மரங்களையும் வெட்டி சாய்த்துள்ளனர். மேலும் ராதிகாவின் கழுத்தில் கத்தி வைத்து "பறத் தேவிடியா! எங்களுக்கு சொந்தமான இந்த வீட்டை காலி செய்" என மிரட்டியுள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடமும் சங்ககிரி காவல் நிலையத்திலும் கமலகாசன் புகார் தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

பக்கத்து கிராமத்தில் திருவிழா நடக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. ஊரில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடக்கிறது. இதை அறிந்த குப்புசாமி வீட்டார் அந்த குப்பைகளை அள்ளிக்கொண்டு வந்து 28.4 அன்று கமலகாசன் வீட்டின் முன்பு வெட்டிய மரங்களின் மேல் கொட்டியுள்ளனர். மேலும் கமலகாசன் வீட்டில் உணவு அருந்திக்கொண்டிருந்த அவரின் பிள்ளைகளின் உணவு தட்டில் மலத்தை அள்ளி வீசி மிக கொடூரமான சாதிய வன்கொடுமையை இந்த சாதிவெறி கும்பல் அரங்கேற்றியுள்ளது. இது குறித்து 5.5. அன்று கமலகாசன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தந்துள்ளார். ஆட்சியரின் உத்தரவின் பேரில் சாதிவெறியர்கள் மீது வழக்குகள் போடப்பட்டன. ஆனாலும் இன்றுவரை சாதிவெறியர்கள் மீது எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தி.மு.க அரசும் காவல் துறையும் ஆட்சியரும் சாதிவெறியர்களுக்கு துணை போகின்றனர். அனைவரும் கூட்டாக சேர்ந்து சங்ககிரியில் இன்னொரு வேங்கைவயலை அரங்கேற்றி வருகின்றனர். வேங்கைவயல் சம்பவம் சமூக ஊடகங்களில் வெளிவந்ததால் பேசுபொருளானது. ஆனால் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கூட வெளிவராமல் திராவிட மாடல் ஆட்சி பார்த்துக்கொண்டது. 

ஆகவே, கமலகாசன் குடும்பத்தாரின் வீட்டை ஆக்கிரமிக்கவும் அவர்களின் வாழ்வுரிமையை பறிக்கவும் அவர்கள் மீது கொடூரமான சாதி வன்கொடுமையை ஏவிவரும் குப்புசாமி குடும்பத்தாரை சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்யக்கோரியும், பட்டா வீட்டு வரி ரசீது வழங்காமல் இழுத்தடித்து சாதிவெறியை தூண்டிய வி.ஏ.ஓ மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் போராட வருமாறு மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அறைகூவி அழைக்கிறது.

தி.மு.க அரசே!

* தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த கமலகாசன் வீட்டு உணவு தட்டில் மலம் வீசிய சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்!

* கமலகாசன் வீட்டை ஆக்கிரமிக்கவும், அவர்களின் வாழ்வுரிமையை பறிக்கவும் முயலும் சாதி வெறியர்களுக்கு துணை போகாதே!

* கமலகாசன் வீட்டிற்கு பட்டா, வீட்டு வரி இரசீது, மின் இணைப்பு வழங்கு! வழங்காமல் இழுத்தடித்து சாதிவெறியை தூண்டிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடு!

* திராவிட மாடல் ஆட்சியில் தலைவிரித்தாடும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு