புதிய காலனிய தொழிற்சாலை சட்ட திருத்தம் 2023

உழைக்கும் வர்க்கத்தின் இரத்தம் குடிக்கும் மோடி - மு.க.ஸ்டாலின் கும்பலின் கூட்டுப் பாசிசத்தை முறியடிப்போம் !

புதிய காலனிய தொழிற்சாலை சட்ட திருத்தம் 2023

தி.மு.க அரசு பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் நலன்களுக்காக தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் மத்திய அரசின் "பாசிச தொழிற்சாலை சட்ட திருத்தத்தை" சட்டமன்றத்தில் வாதிக்காமலேயே - வெறும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளது. அதாவது ஒரு கொடிய புதிய காலனிய - பாசிச சட்டத்தை பாசிச முறையில் அரங்கேற்றியுள்ளது. தனியார் தொழில் நிறுவனங்களை வாழவைக்க தொழிலாளர்களை சாவடிக்கும் இக்கொடூரமான சட்டத்தை முறியடிப்பது நமது உடனடி கடமையாகும்.

பாஜக எதிர்ப்பு நாடகமாடி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு தற்போது பாஜக அரசின் கொள்கைகளை அச்சுப் பிசகாமல் அமல்படுத்தி வருகிறது. அதற்கு இச்சட்ட அமலாக்கம் மற்றுமொரு எடுப்பான உதாரணம் ஆகும்.

பாசிச மோடி ஆட்சி பன்னாட்டு - உள்நாட்டு  கார்ப்பரேட்டுகள் மூலதனத்தை சுலபமாக திரட்ட ஏதுவாக தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றி சட்டம் இயற்றியுள்ளது. இது பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் நலன்களுக்கான புதிய காலனிய சட்டமாகும். அதற்கு சேவை செய்யும் வகையில்தான் தி.மு.க அரசு இச்சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக மோடி ஆட்சியே இச்சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ள நிலையில் திமுக அரசு அமல்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இச்சட்டத்தை பாஜக ஆளும் மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ள அதே வேகத்தில் தி.மு.க அரசும் நிறைவேற்றியுள்ளது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளில் இச்சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநில அரசு எனும் பெருமையையும் பெற்றுள்ளது "சமூகநீதி அரசு". அண்மையில் கர்நாடக பாஜக அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்சட்ட திருத்தத்தின் மூலம் திமுக அரசின் சமூகநீதி என்பது புதிய காலனிய - கார்ப்பரேட் நீதிதான் என்பதும், திராவிட மாடல் என்பது கார்ப்பரேட் மாடல்தான் என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கி இரத்தம் குடிக்கும் சட்டம்:

150 ஆண்டுகால தொழிலாளர் போராட்டத்தை - இரத்தம் சிந்தி பெற்ற உரிமைகளை ஒரே மசோதா மூலம் ஒரு சில நிமிடங்களில் காலில் போட்டு நசுக்கியுள்ளது பாசிச தி.மு.க அரசு.

மோடி ஆட்சி தொழிலாளர்கள் விரோத சட்ட தொகுப்பை 40 வினாடிகளில் சட்டமாக்கிய போது கண்டித்த மு.க.ஸ்டாலின், தற்போது மோடியை மிஞ்சும் வகையில் அதே சட்டத்தை ஒரு சில நிமிடங்களில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியிருக்கிறார். கார்ப்பரேட்டுகளின் காலை நக்குவதிலும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதிலும் குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றுதான் என்பதை திமுக அரசு மீண்டும் நிரூபித்துள்ளது.

இச்சட்டம் பின்வரும் தொழிலாளர் விரோத அம்சங்களை உள்ளடக்கியுள்ளது:

1) வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 முதல் 16 மணி நேரம் வரை அதிகரிப்பது,

2) வாழமுடியாத அளவுக்கு ஊதியங்களை குறைந்தபட்சமாக நிர்ணயிப்பது,

3) தொழிலாளர்களுக்காக இருக்கும் சமூகப் பாதுகாப்பு நலன்களை குறைப்பது,

4) நிரந்தர வேலை வாய்ப்பை ஒழித்து ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்த அனுமதிப்பது.

5) இனி முதலாளிகள் தங்கள் லாபத்தை தவிர தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக் கடமைகளில் கவனம் செலுத்த அவசியமில்லை.

6) எந்தவொரு வேலைக்கும் அதில் அனுபவமில்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தலாம். இதனால், தொழிலாளர்கள் சந்திக்க நேரும் விபத்துகளுக்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்க வேண்டியதில்லை.

7) தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. எவ்வளவு பாதிப்புகள், இழப்புகள் நேர்ந்தாலும் தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்கங்களை நாட முடியாது.

8) தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைத் தவிர போனஸோ, ஊக்கத் தொகையோ ஏன் தேனீர் போன்ற சாதாரண சலுகையைக் கூட கொடுக்க வேண்டியதில்லை.

ஆகவே இந்த சட்டம் கார்ப்பரேட்டுகள் தமது மூலதனத்தை சுலபமாக திரட்டி கொள்ளை இலாபம் அடிப்பதற்காக தொழிலாளர்களை அத்துக்கூலிகளாகவும் பஞ்சப்பராரிகளாகவும் கொத்தடிமைகளாகவும் மாற்றி அவர்களின் எலும்புகளை நொறுக்கி இரத்தம் குடிக்கும் பாசிச சட்டம் என்பது சொல்லாமலே விளங்கும்.

இதை திமுக அரசின் அமைச்சர் தங்கம் தென்னரசு ஒப்புதல் வாக்குமூலமாகவே தந்துள்ளார்.

"பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் கேட்டுக்கொண்டதால்தான் இச்சட்டத்தை கொண்டு வர வேண்டியுள்ளது" என்று திருவாய் மலர்ந்துள்ளார் அவர். முதலாளிகளுக்காக சட்டம் இயற்றிவிட்டு தொழிலாளர்கள் விருப்பம் இருந்தால் செய்யலாம் என காதில் பூ சுற்றுகிறார்.  8 மணி நேர வேலை சட்டம் இருந்த போதே 12 மணி நேரம் வேலை வாங்கி தொழில் நிறுவனங்கள் ஊழியர்களை சுரண்டின. தற்போது இச்சட்டம் 12 மணி நேர வேலை என்பதன் மூலம் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக சட்டப்பூர்வமாகவே மாற்றியுள்ளது.

முதலாளிகளுக்கு தரகு வேலை பார்த்த திருப்தியில் சட்டமியற்றிய கையோடு ஐ.பி.எல் பார்க்க சென்றுவிட்டார் சமூகநீதி காக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின். உழைக்கும் வர்க்கத்தின் பிணங்கள் மீது அமர்ந்து பெரியண்ணன் மோடி பிடில் வாசிக்கிறார்; சின்னண்ணன் ஸ்டாலின் ஐ.பி.எல் பார்க்கிறார்.

கூட்டணி கட்சிகளுக்கோ இன்னமும் திராவிட மாயை தெளியவில்லை. சட்டமன்றத்தில் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்காமல் அவை வெளிநடப்பு செய்துள்ளன. CPM CPI விசிக கட்சிகள் தலைநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். சட்டமன்றத்தை முற்றுகையிட்டிருக்க வேண்டும். சட்டம் கொண்டுவருவது குறித்து 10 நாட்களுக்கு முன்பே இக்கட்சிகளுக்கு தெரியும். ஆனால் எந்த மக்கள் திரள் பிரச்சாரமும் செய்யவில்லை. சட்டம் வந்த பின்பும் கூட போராட்டம் நடத்தும் பொறுப்பை தொழிற்சங்கங்கள் கையில் விட்டுவிட்டு வெறும் கண்டன அறிக்கைகளோடு நின்றுவிட்டன. வி.சி.க, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் திமுக ஆட்சிக்கு முற்போக்கு பிம்பம் தந்து தொழிலாளர் வர்க்கத்திற்கு துரோகம் இழைக்கின்றன.

எனவே திமுக அரசின் இந்த கொடிய பாசிச சட்ட திருத்தத்தை முறியடிக்க பின்வரும் முழக்கங்களின்பால் போராட வருமாறு தொழிலாளர்களையும், உழைக்கும் மக்களையும், ஜனநாயக சக்திகளையும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அறைகூவி அழைக்கிறது.

பாசிச தி.மு.க அரசே!

கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் மத்திய அரசின் "புதிய காலனிய - பாசிச தொழிற்சாலை சட்டத் திருத்தத்தை" திரும்பப் பெறு!

பாசிச பாஜக அரசின் தொழிலாளர் விரோத புதிய காலனிய கொள்கைகளுக்கு கரசேவை செய்யாதே!

கார்ப்பரேட்டுகளுக்கு தரகு வேலை பார்க்கும் திமுக அரசின் "திராவிட மாடல்"பாசிசம் ஒழிக!

உழைக்கும் வர்க்கத்தின் இரத்தம் குடிக்கும் மோடி - மு.க. ஸ்டாலின் கும்பலின் கூட்டுப் பாசிசத்தை முறியடிப்போம்!

- மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்