நில ஒருங்கிணைப்புச் சட்டம்: 'திராவிட மாடல்' புதியகாலனிய சேவை
சமரன்
அமெரிக்காவின் லாபவெறிக்கும் போர்வெறிக்கும் இந்தியாவை பலியிட பல்வேறு திட்டங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. அதற்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல், அதே திட்டங்களை பெயர் மாற்றி 'திராவிட மாடல்' திட்டங்களாக திமுக அரசு நடைமுறைப் படுத்தி வருகிறது.
இந்தாண்டு தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் இறுதி நாளான ஏப்ரல் 21 அன்று, மக்கள் விரோத 17சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை எவ்வித சட்டமன்ற விவாதங்களுக்கும் இடமளிக்காமல் குரல் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. சபாநாயகர் சட்டத்தின் பெயரை அறிவித்து துறைச் சார்ந்த அமைச்சரை அழைப்பார்; அவரும் எழுந்து நின்று சட்டத்தின் பெயரை மட்டும் அறிவித்து அமர்வார். மீண்டும் சபாநாயகர் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பார். அதற்கிடையில் திமுக மற்றும் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் 'அல்லேலுயா' என்பது போல் ஆதரித்து கத்துவார்கள், அவ்வளவுதான் சட்டம் அமல். சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டத்தின் பெயரையாவது முழுமையாக காதில் வாங்கினார்களா என்றுகூட தெரியாது. ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு மக்களின் கருத்து கேட்பு கூட வேண்டாம், குறைந்தபட்சம் சட்டமன்ற உறுப்பினர்களுக்காவது அது குறித்து விளக்கப்படுகிறதா என்றால் துளியும் கிடையாது. எவ்வளவு வெட்ககேடான ஜனநாயக முறை. பாசிச மோடி அரசின் பாராளுமன்ற சட்டமியற்றும் முறைகளை மிஞ்சிவிட்டது மு.க.ஸ்டாலினின் சட்டமன்றம்; பாசிசத்தை அரங்கேற்றுவதிலும் கார்ப்பரேட் சேவையிலும் நாங்களும் சளைத்தவர்களல்ல என்பதை நித்தம் நித்தம் நிரூபித்து வருகிறது திமுக அரசு.
நிறைவேற்றப்பட சட்ட மசோதாக்களுள் சில:
1. கால்நடை, மீன்வள, வேளாண், மருத்துவ, தமிழ், சட்டப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா
2. சென்னை மாநகர காவல் சட்டத்திருத்த மசோதா
3. தமிழ்நாடு நிதி ஒதுக்கம், தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகப் பெறுப்புடைமை திருத்தம்
4. பத்திரப் பதிவுத்துறை பதிவுக் கட்டணம் தொடர்பான மசோதா
5. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான சட்டத்திருத்த மசோதா
6. கிராம ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்யவும், ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரி நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா
7. தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்டமசோதா
8. 1976 -1998 காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட 91பழைய சட்டங்களை நீக்கம் செய்தல் தொடர்பான சட்டத்துறை சார்ந்த இரண்டு மசோதாக்கள்
9. குண்டர் சட்டம் 1982 - திருத்த மசோதா
10. சரக்குகள் மற்றும் சேவை வரிகள் தொடர்பான 2 சட்டத்திருத்த மசோதாக்கள்
11. நில சேர்மப் பகுதி தொடர்பான நகர ஊரமைப்புத் துறை சட்டத்திருத்த மசோதா
12. வேலை நேரத்தை அதிகரிப்பதற்காக பணியிடங்களில் தொழிலாளர்களுக்கான ஒய்வறை, கழிப்பறை, உணவறை வசதிகளை ஏற்படுத்த மசோதா
13. புதிய நிறுவனங்களுக்கான பதிவுமுறைகள் குறித்த சட்ட திருத்த மசோதா
14. உள்கட்டமைப்பு திட்டங்களில் தனியார் துறையினரின் பங்கேற்புக்கு வழிவகுக்கும் சட்ட மசோதா
15. டெண்டர் முறைகளில் திருத்தம் குறித்த சட்ட மசோதா
16. அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமை மசோதா
17. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாநில ஆணைய திருத்த மசோதா
இவை குறித்து தெளிவான தகவல்கள் கூட தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஊடகங்களை கையாண்டு வருகிறது பாசிச திமுக அரசு.
திமுக அரசின் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் பாஜக அரசின் பட்ஜெட் என்ன வழிகாட்டியதோ அதை நிறைவேற்றும் வகையிலேயே அமைந்தது. மத்திய அரசைப் போலவே ஏகாதிபத்தியங்களிடம் கடன் பெற்று நாட்டை மேலும் வறிய நிலைக்கு தள்ளும் கடன் பட்ஜெட்டாகவே போட்டுள்ளது. அதற்கு சேவை செய்யும் வகையில்தான் இந்த தமிழக சட்டமன்ற மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதாக்கள் அனைத்தும் மக்கள் விரோதமானவை, ஆபத்தானவை.
1. குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் தவிர ஏனைய பிற பல்கலைக் கழகங்களில் மாநில உரிமைகளையும் பொறுப்புகளையும் துறத்தல்
2. ஒரே நாடு ஒரே சீருடை ஒரே காவல்துறை என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு சேவை செய்யும் வகையில் காவல் சட்ட திருத்த மசோதா
3. பத்திரப் பதிவு துறை, நிதித்துறை உள்ளிட்டவற்றில் மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்தல்
4. குற்றவியல் நடைமுறைச் சட்டம், என்.ஐ.ஏ, ஊபா சட்டங்களுக்கு சேவை செய்யும் வகையில் குண்டர் சட்ட திருத்தம் உள்ளிட்ட சட்டதுறை மசோதாக்கள்
5. நகராட்சி - மாநகராட்சிகளை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு சேவை செய்யும் வகையில் சட்ட திருத்தங்கள்
6. உள்ளாட்சி அமைப்புகள், கிராம சபைகள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை பறிக்கும் வகையில் மசோதா
7. பன்னாட்டு-உள்நாட்டு கார்ப்பரேட்கள் தடையின்றி தொழில் தொடங்கவும் உள்கட்டமைப்பு துறைகளில் ஆதிக்கம் செலுத்தவும் வழிவகுக்கும் வகையில் நிறுவனங்கள் பதிவு சட்ட திருத்தம், டெண்டர் முறை சட்ட திருத்தம், உள்கட்டமைப்பு மசோதா.
8. தொழிலாளர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு வேட்டுவைக்கும் சட்ட மசோதாக்கள்
தொழிலாளர் விரோத வேலைநேர அதிகரிப்பு மசோதாவும், குற்றவியல் நடைமுறை சட்டதிருத்த மசோதாவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான கிளை அம்சங்கள் வெவ்வேறு பெயர்களில் சட்ட மசோதா திருத்தங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் மற்றொரு ஆபத்தான நில ஒருங்கிணைப்புச் சட்டம் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இயற்கை வளங்களை கொள்ளையடிக்க கார்ப்பரேட்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டம்
தமிழ்நாட்டில் கார்ப்பரேட்கள் தொழிற்கூடாரங்களை தொடங்குவதற்கும் அதற்கு தேவையான கனிம வளங்களை தங்கு தடையின்றி சுரண்டுவதற்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) சட்டத்தை (Tamilnadu Land Consolidation (for special projects) Act) பாசிச முறையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது திமுக அரசு.
நீர் நிலைகள், வேளாண் பகுதிகளை கார்ப்பரேட்கள் கைப்பற்ற இருந்த சிற்சில தடைகளையும் உடைத்துள்ளது இந்த சட்ட மசோதா. எந்த ஒரு கார்ப்பரேட்டும் 100 ஹெக்டேருக்கு (247 ஏக்கர்) மேலாக தொழிற்சாலை அமைக்க விருப்பம் தெரிவித்தால் மட்டும் போதுமானது. அதில் உள்ள நீர் நிலைகள், வேளாண் பகுதிகள், கனிம வளங்கள், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் என அனைத்தையும் அப்படியே தாரை வார்க்க வகை செய்துள்ளது. இதை அனுமதிக்க ஒரு ஆய்வு குழு அமைக்கும், அந்த குழுவிற்கு கார்ப்பரேட்களின் கோரிக்கையை நிராகரிக்கவும் தடை செய்யவும் எவ்வித உரிமையும் இல்லை. சில வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் மட்டும் பரிந்துரைத்து அவர்கள் அதை அனுமதித்தே தீர வேண்டும் என்றும் சட்டம் வகை செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், கிராம சபைகள் போன்றவற்றிற்கு இருந்த அதிகாரங்களும் இதற்கு சேவை செய்யும் வகையில் துணையாக பறிக்கப்பட்டுள்ளதால், நீர்நிலைகள், வேளாண் பகுதிகள் பறிபோவது குறித்து அவர்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது. அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தால் அது சட்ட விரோதமாக கருதி அவர்கள் மீது தேச விரோத சட்டங்களும் பாயும் அபாயத்தையும் கூடுதலாக உருவாக்கியுள்ளது. சமீபத்தில் கூட சீர்காழியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் உரிமைகள் பறிபோவதற்கு எதிராக கிராம மக்களை திரட்டி போராடியதற்காக அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளது இந்த பாசிச திமுக அரசு.
இயற்கை வளங்களை பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கும் வகையில் வனச் சட்டம், சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம், அணைகள் பாதுகாப்புச் சட்டம், நீர்உரிமை சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் போன்றவற்றை பாஜக அரசு கொண்டுவந்தது. அதன் அம்சங்களை அப்படியே பின்பற்றி இந்த சீர்கேடான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது திமுக அரசு. பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழகத்தை மாற்றத் துடிக்கும் பாஜகவின் நோக்கங்கள் எந்த தடங்கலுமின்றி தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே மற்ற எந்த மாநிலத்தைவிடவும் இக்கொடுமையான சட்டங்களை தொடர்ச்சியாக முதல் ஆளாக நிறைவேற்றி வருகிறது பாஜக அடிவருடி மு.க.ஸ்டாலின் கும்பல். அதன் சிவப்பு பக்தகோடிகளுக்கு இவர்தான் பாசிசத்தை வீழ்த்த வந்த ஸ்டாலினாம்! (தயவு செய்து உங்களுக்கு வைக்க இருந்த 'அய்யா துரை' என்ற பெயரையே மாற்றிக் கொள்ளுங்கள் முதல்வரே!).
பரந்தூர் விமான நிலையம், பயண குறைப்பு சாலை திட்டம், அதானி துறைமுக விரிவாக்கம், குண்டாறு சோலார் திட்டம் உள்ளிட்ட அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்புத் திட்டங்களுக்கு சேவை செய்யும் கதிசக்தி உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும்; செமிகண்டக்டர், லித்தியம் பேட்டரி உற்பத்தி, EV ஆலைகள், இராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் போன்றவற்றை டாட்டா, சாம்சங், ஃபாக்ஸ்கான், அதானி, ஜெனெரல் ஏவியேசன் போன்ற கார்ப்பரேட்கள் நிறுவுதல் உள்ளிட்ட குவாட் திட்டங்களுக்கும் சேவை செய்யும் வகையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பாருங்கள்! உங்களுக்கான புதிய காலனிய சட்டங்களை சாமர்த்தியமாக நிறைவேற்றி விட்டேன், வாருங்கள்! எமது வளங்களையும் மனித உழைப்பையும் கொள்ளையிட்டுச் செல்லுங்கள்! தமிழகமே உங்களுக்குதான்! என்று பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்க ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணப்பட்டுள்ளது மு.க.ஸ்டாலின் கும்பல். அடுத்தாண்டு ஜனவரியில் உலக வர்த்தக மாநாட்டை தமிழ்நாட்டில் நிகழ்த்தவும் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே டெல்டா மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் (மீத்தேன்) திட்டங்களால் வேளாண் பகுதிகளும், நீர் நிலைகளும் சீரழிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களிலும் கூட நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டங்களுக்கு அனுமதியளித்திருந்தது பாஜக அரசு, விவசாயிகளின் எதிர்ப்புக்கு பின் அதை ஒத்தி வைத்துள்ளது. இந்த நிலக்கரி சுரங்கங்கள் அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாடு மேலும் வெப்பமண்டலமாகவும் சுவாசிக்கும் காற்று மேலும் விசமாகவும் மாறும் அபாயம் உள்ளது. ஆனால் இந்த புதிய சட்டம் மறைமுகமாக அந்த திட்டங்களை நிறைவேற்ற துணை போகிறது. நிலம் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப்பட்டால் அதில் உள்ள வளங்கள் அனைத்தும் அவற்றுக்கே சொந்தம். நிலக்கரி மற்றும் நீர்நிலைகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரமும் அவர்களுக்கே. தமிழ்நாட்டில் இருந்த 1லட்சத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் பாதிக்கு மேல் பயன்படுத்த முடியாத வகையில் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ளவற்றிலும் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் அல்லது நீரை விலை கொடுத்து பெறும் வகையில் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கவுள்ளது இச்சட்டம்.
அதேப் போன்று புதியகாலனிய நீலப் பொருளாதார கொள்கை மற்றும் சாகர்மாலா திட்டங்களுக்கு சேவை செய்யும் வகையில் கடல் சார்ந்த மீனவர்களின் உரிமையை பறித்து வருகிறது. மீன்வளம் உள்ளிட்ட கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளின் ஏகபோகமாக்கி கொள்ள திமுக அரசும் துணை போகிறது. சிங்கார சென்னை என்ற பெயரில் மீனவர்களை கடலோரங்களிலிருந்தும் தங்கள் வாழ்விடங்களிலிருந்தும் விரட்டியடிக்கிறது. அதையொட்டியே சமீபத்தில் சென்னை பட்டினப்பாக்கம் பகுதிவாழ் மீனவர்களை விரட்டியடிக்கிறது. அதற்கு எதிராக மீனவர்கள் போராடி வருகின்றனர்.
பருவநிலை மாற்றங்களை கணக்கில் கொண்டு சுற்று சூழலுக்கு ஏற்ற கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது குவாட் கூட்டமைப்பின் வழிகாட்டுதல்கள். அதன்படி, ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் நாடுகளில் சுற்ற சூழலை பாதுகாத்து கொள்வது; காலனிய நாடுகளில் சுற்றுச் சூழலை சீரழிக்கும் தொழிற்கூடங்களை உருவாக்குவது என்ற செயல்தந்திரத்தை கடைபிடிக்கின்றன. ஏனெனில் சர்வதேச ஒப்பந்தப்படி, பருவநிலை சீர்கேட்டிற்கு காரணமான நாடுகளே பொறுப்பேற்று அபாராதம் செலுத்த வேண்டும் அதை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் அந்த சுமையையும் நம் போன்ற புதியகாலனிய நாடுகளின் தோளில்தான்! எவ்வளவு துரோகமான அயோக்கியத்தனம் இது! வளங்களும் கொள்ளை லாபமும் எங்களுக்கு, சுற்றுச் சூழல் பேரழிவுகள் உங்களுக்கு! என்கின்றன ஏகாதிபத்திய வல்லூறுகள்.
சீனாவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் அமெரிக்கா இந்தியாவை துருப்பாக பயன்படுத்துகிறது. இதற்கான திட்டங்களைத்தான் பாஜக அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருவதோடு பாசிசத்தையும் தீவிரப்படுத்தி வருகிறது. அதற்கு துணைப் போகும் வழியில் தன் பங்கிற்கு தமிழகத்தை பாலைவனமாக்கி வருகிறது திமுக அரசு. இந்த கொள்ளை கூட்டங்களை நாட்டை விட்டு விரட்டியடிக்காமல் நம்மால் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது.
- சமரன்
ஜூன் மாத இதழ்