திமுக அரசு - ஆருரான் ஆலையின் கூட்டுச் சதிக்கெதிரான தஞ்சை திருமண்டங்குடி விவசாயிகளின் தொடர் போராட்டம் வெல்க!
சமரன்
உழுபவன் கணக்கு பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பது பழமொழி. ஆனால் இன்று அவன் உயிர் கூட மிஞ்சுவதில்லை என்பதுதான் நிலைமை! உழவுதான் அனைத்திற்கும் முதல்...
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
எனக் குறள் உரைக்கிறது...
இன்று டெல்டாவில் நெல்லுக்கான கட்டுபடியான விலையை கேட்டு ஒருபுறம் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் கிட்டத்தட்ட 7000 விவசாயிகளை ஏமாற்றி பெரும் மோசடியில் ஈடுபட்ட திரு ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு எதிரான போராட்டம் 150 நாட்களையும் கடந்து நடந்து வருகிறது.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், வளைந்து நெளிந்தோடும் காவிரியின் நிலப்பரப்பெங்கும் விவசாயிகளின் கண்ணீர்தான் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரும்பு விவசாயிகள், வாழ்வு கசப்பாகி குமுறிக் கொண்டிருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பு வீரவசனம் பேசிய மு.க.ஸ்டாலின் கண்களை மூடி, வாயை பொத்தி, காதுகளை அடைத்து மூன்று குரங்காய் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளார்.
ஆரூரான் கரும்பு விவசாயிகளின் தொடர் போராட்டம்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் 1989-ம் ஆண்டு துவங்கப்பட்டது திரு ஆரூரான் சர்க்கரை ஆலை. அது வடபாதிமங்களம் தியாகராஜனுக்கு சொந்தமானது. லாபகரமாக இயங்கி வந்த இந்த ஆலை கடந்த 2018-ல் நட்டக் கணக்கு காட்டி மூடப்பட்டது. இந்நிலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 200 கோடி நிலுவைத் தொகையினை வழங்காமல் மூடப்பட்டதற்கு எதிராக அப்போதே விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். தொழிலாளர்களும் தங்களது சம்பள பாக்கி கேட்டு போராடினர்.
ஆனால் ஆலை நிர்வாகம் மேலும் மேலும் விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்வதை தொடர்ந்தது. கடந்து 2016-2018ஆம் ஆண்டுகளில் வங்கியில் வாங்கிய கடனை ஆலை நிர்வாகம் விவசாயிகளிடமிருந்து பிடித்தம் செய்து கொண்ட போதிலும், அந்த தொகையினை வங்கியிடம் செலுத்தவில்லை. வங்கியோ விவசாயிகளுக்கு நோட்டீசு அனுப்பியது. இதோடு மட்டும் இந்த ஆலையின் மோசடி நிற்கவில்லை. கிட்டதட்ட 7000 விவசாயிகள், தொழிலாளர்கள் பெயரில் ஆலை நிர்வாகம் 300 கோடி கடன் பெற்று பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த கடன்களையெல்லாம் விவசாயிகள்தான் கட்ட வேண்டும் என விவசாயிகளின் கழுத்தை நெறித்து வருகின்றன வங்கிகள். தலையில் இடியாய் இறங்கிய இப்பெரும் மோசடிக்கு எதிராக, நிற்கதியான விவசாயிகள், நியாயம் கேட்டு ஆலைமுன் பந்தல் அமைத்து கொசுக்கடி, பாம்புக்கடிக்கிடையிலும் இரவும் பகலுமாக போராடி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் நிலுவைத் தொகையை ஆலை உரிமையாளரிடமிருந்து பெற்றுத் தருவதாக தவணை முறையில் உத்தரவாதம் கொடுத்து வந்த எடப்பாடியின் அதிமுக அரசின் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, "நானும் தொழிற்துறை அமைச்சர் எம்சி.சம்பத்தும், மின்துறை அமைச்சர் தங்கமணியும் சேர்ந்து சக்கரை ஆலை அதிபர்களிடம் 10 முறைக்கு மேல் பேச்சு வார்த்தை நடத்திவிட்டோம். அவர்கள் நிலுவைத் தொகையை வழங்க முடியாது என அறிவித்து விட்டனர்" என்று கூறினார். இப்படி விவசாயிகளுக்கு துரோகமிழைத்து ஆலை முதலாளிகளுக்கு ஆதரவாக அதிமுக நின்று கொண்டது. பின்னர் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பொய்யான வாக்குறுதியை கூறி திமுகவின் ஸ்டாலின் அரசு ஆட்சிக்கு வந்ததும் ஆலையானது பல்வேறு முறைகேடுகள் மூலமாக கால்ஸ் டிஸ்லரீஸ் என்ற மதுபான நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் போராடும் விவசாயிகளை ஆலை முன்னிருந்து அகற்றும் முயற்சியிலும் உள்ளது. இவ்வாறு மேலும் மேலும் மோசடிக்குள்ளாகி ஏமாற்றப்பட்டதற்கு எதிராக ஆலை முன் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
குறிப்பாக ஆலையை அரசே ஏற்று நடத்தும் என்ற பொய்யான வாக்குறுதியை தந்து விவசாயிகளை ஏமாற்றி ஓட்டு வாங்கிய திமுக ஸ்டாலின் அரசை கண்டித்தும், கால்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக அவசர அவசரமாக கரும்பு பதிவு உத்தரவு கொடுத்த சர்க்கரைத் துறை ஆணையருக்கு எதிராகவும், சிபில் பிரச்சினையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும் எனவும் போராடி வருகின்றனர். மறுபக்கம் ஆலையை திறப்பதற்கான சீரமைப்பு பணிகளை திமுகவின் பினாமியான கால்ஸ் டிஸ்லரீஸ் நிறுவனம் செய்து வந்தது. இந்நிலையில், அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கால்ஸ் நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்தது. போராடும் இடத்திலிருந்து அகற்றி 200மீ தூரத்துக்கு அப்பால் விவசாயிகளை விரட்டியுள்ளது.
விவசாயிகள் பெயரில் ஆலைமுதலாளிகள் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதால், விவசாயம் சார்ந்தோ அல்லது வேறேதேனும் தொழில் செய்து பிழைத்துக் கொள்ளவோ வங்கிகளை நெருங்க முடியாத நிலைமை உள்ளது. கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்துவிட்ட கையறு நிலைதான். விவசாயிகளிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டது மட்டுமின்றி, அவர்களையே கடனாளியாக-குற்றவாளியாக நிறுத்தும் கொடுமை சொல்லி மாளாது! திண்ண சோற்றையும் பிடிங்கிக்கொண்டு கட்டிவைத்து அடிப்பது போன்ற கொடுமைதான் இது!
விவசாயிகளின் ரத்தம் குடித்த தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம்! வெளுத்துப்போன ஜனநாயகம்!
அதிமுக ஆட்சி காலத்திலேயே 15 சதவீத வட்டியுடன் விவசாயிகளின் கரும்புக்கான பாக்கி நிலுவைத்தொகையை
78 கோடியை திரும்ப தரச் சொல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த போதிலும், தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்திற்கு இவ்விவகாரம், சென்றதும் நிலைமை வேறானது.
சரி, இந்த கம்பெனி சட்டத் தீர்ப்பாயம் வழங்கியிருக்கும் நீதியை பார்ப்போம்...
தீர்ப்பாயத்தின் தீர்ப்பு
கடனை திரும்ப செலுத்த ஆலை சொத்தை ஏலம் விட பரிந்துரைத்தது. ஆலை நிர்வாகம் வங்கிகளுக்கு தரவேண்டிய 1454.58 கோடி கடனில் வெறும் 85 கோடியை மட்டும் கொடுத்தால் போதும். அதையும் ஐந்து ஆண்டுகளில் ஏழு தவணையாக செலுத்தினால் போதும். (என்ன ஒரு நீதி!) இத்தீர்ப்பால் 1454.58 கோடியில் 1369.58 கோடி ரூபாயை வங்கியும் தள்ளுபடி செய்துள்ளது.
இது மட்டுமா இன்னும் பாருங்கள்! விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் தரவேண்டியதில்லை. 45 கோடி மட்டும் கொடுத்தால் போதும், அதையும் எப்படி? ஒரு ஆண்டில் ஐந்து தவணையாக கொடுத்தால் போதுமாம்!
கரும்பு ஏற்றி வந்த வாகனங்களுக்கான வாடகை பாக்கியை ரூ.47.61 லட்சத்தில் வெறும் 48 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதுமாம்!
தொழிலாளர்கள், ஊழியர்கள் ஊதிய பாக்கியில் 18.74 கோடி ரூபாய்க்கு பதிலாக 3.71 கோடியை மட்டும் கொடுத்தால் போதும். இவைதான் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் எனும் நாட்டாண்மைகள் கொடுத்திருக்கும் உன்னதமான தீர்ப்பு! இதை எழுதும் பொழுதே இந்த தீர்ப்பாயத்தை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் ஆராதிக்க மனம் குமுறுகிறது. இந்த தீர்ப்பாயத்தின் தீர்ப்பிலிருந்து எல்லோருக்கும் பொதுவென்று சொல்லப்படும் அரசின் வர்க்கத் தன்மையின் லட்சணத்தை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்! இப்பெரும் துரோகத்திற்கு எதிராக விவசாயிகள் போராடினால் அவர்கள் குற்றவாளிகள்!
இப்படி முதலாளிகளுக்கு வாரி வழங்கப்படும் சலுகைகள் எல்லாம், சர்க்கரை உற்பத்தி அதிகரித்து விட்டதால், ஆலை முதலாளிகள் நட்டமடைந்து விட்டனர் என்ற பொய்யைத் திரும்பத் திரும்ப கூறி ஏமாற்றி வருகின்றனர்.
சர்க்கரை உற்பத்தி அதிகரிப்பால் நஷ்டத்தை சந்திப்பதாக கூறுவது பெரும் ஏமாற்றே!
உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்து இரண்டாவது இடம் வகிக்கிறது இந்தியா. உலக அளவில் கரும்பு விளைச்சல் அபரிமிதமாக அதிகரித்ததாலும் இதனால் சர்க்கரை விலை கடும் சரிவை சந்தித்ததால் ஆலைகள் நஷ்டத்தை சந்திக்கின்றன என ஆலை முதலாளிகள் கூறுவதில் துளியும் உண்மை இல்லை.
ஒரு டன் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, மின்சாரம், எரி சாராயம், மொலாசஸ், எத்தனால், உரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 30,000 ரூபாய் என்கிறார் பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டி என் பிரகாஷ். தமிழகத்தில் 2012-13 காலகட்டத்தில் பல கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் லாபத்தில் இயங்கின. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மாநில அரசு அறிவித்த தொகையையும் சேர்த்து விவசாயிகளுக்கு முழுவதுமாக பட்டுவாடா செய்ததோடு 214 கோடி லாபமும் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்க்கரையை பற்றி மட்டும் பேசும் ஆலை முதலாளிகள் எத்தனால், எரி சாராயம், மின்சாரம், காகிதம், உரம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் லாபம் பற்றி வாய் திறப்பதில்லை. தமிழகத்தில் 18 அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், 20 தனியார் சர்க்கரை ஆலைகளும் உள்ள நிலையில் புதிதாக மேலும் இரண்டு ஆலைகள் துவங்க முதலாளிகள் அனுமதி கோரியுள்ளனர். ஆலைகள் நட்டத்தில் இயங்குகிறது என்று இவர்கள் கூறும்போது, மேலும் இரண்டு ஆலைகள் கட்டுவதற்கான முயற்சி ஏன்? இதிலிருந்தே நட்ட கணக்கு காட்டும் முதலாளிகளின் பித்தலாட்டம் தெரிகிறது.
உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சர்க்கரை உற்பத்தி தேவையை விட அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், தமிழகத்தில் தேவையான அளவு சர்க்கரை உற்பத்தியாவதில்லை என்பதே உண்மையாகும். தமிழ்நாட்டின் ஆண்டு சக்கரை தேவை 15 லட்சம் டன், ஆனால் இங்கு 5 லட்சத்து 80 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
குறிப்பாக ஆருரான் சர்க்கரை ஆலை சர்க்கரை, மது, மின்சாரம், உரம் ஆகியவற்றை தயாரிக்க கூடியதாகும். இதுபோன்ற தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பிலிருந்து மின்சாரம், உரம், காகிதம், எத்தனால், சாராயம் போன்றவற்றை தயாரித்தாலும் அவற்றின் மூலம் வருகின்ற வருவாயை மறைத்துவிட்டு சர்க்கரை விற்பனை மூலம் கிடைப்பதை மட்டும் தில்லுமுல்லாக வரவு வைத்து நட்ட கணக்கு காட்டி ஏமாற்றி வருவதுடன் பல லட்சம் கோடிகள் வங்கி கடன்களை அரசாங்கத்தால் தள்ளுபடி என்ற பெயரிலும் சலுகைகள் அனுபவித்து வருகின்றன.
இது மட்டுமின்றி விவசாயிகள் ஆலைக்கு அனுப்பும் கரும்பின் எடையில் அடிக்கும் எடை மோசடி, இதையெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது எனவே ஆலை முதலாளிகள் காட்டும் நட்ட கணக்கு பெரும் மோசடியே!
எத்தனாலா? எரிசாராயமா? சாராயமே இலக்கு!
கரும்பிலிருந்து நேரடியாகவோ அல்லது சர்க்கரை தயாரித்த பின் கழிவிலிருந்து (மொலாசஸ்) எத்தனாலை தயாரிக்கலாம். அதாவது கரும்பிலிருந்து நேரடியாக ஒரு டன்னிற்கு 70 லிட்டருக்கு மேல் எத்தனால் எடுக்கலாம். மற்றொரு வகையில் சர்க்கரை உற்பத்தி செய்த பின் டன்னிற்கு 10 லிட்டர் எத்தனால் கிடைக்கும். எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையின் அளவு குறைந்து அது வருவாயாக வந்து சேரும். இந்த வருவாயை விவசாயிகள் பக்கம் திருப்பி விடலாம். (ஆனால் அதையும் ஆலை அதிபர்கள் விழுங்கி விடுவர்). அமெரிக்கா 2007லேயே தனது மொத்த எரிபொருளில் 22 சதவீதம் எத்தனால் பயன்படுத்த இலக்கு வைத்தது. பிரேசில் தனது மொத்த கரும்பு உற்பத்தியில் 50 சதவீதம் எத்தனால் தயாரிக்க உத்தரவிட்டதோடு 85% வரை பெட்ரோலில் எத்தானாலை கலந்து எரிப்பொருளாக பயன்படுத்தி வருகிறது. இந்திய அரசு நிர்ணயித்திருந்த 10% எத்தனால் பயன்பாடு இலக்கை இவ்வாண்டு மார்ச்சிலேயே அடைந்துவிட்டது. 2025ஐக்குள் பெட்ரோலில் 20% எத்தானாலைப் பயன்படுத்தவும் இலக்கு வைத்துள்ளது. எத்தனால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைவதை அமெரிக்காவும் பிரேசிலும் காட் ஒப்பந்தத்தை காட்டி தடுத்து வருகின்றன. எத்தனாலுக்கும் இந்த நாடுகளையே சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளுகின்றன. அதனடிப்படையிலேயே உலக வர்த்தக கழகம், இந்தியாவின் சர்க்கரை உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் கூட தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இந்த நிலையில்தான் பெருமளவு சர்க்கரை கழிவிலிருந்து எத்தனால் பிரித்தெடுக்கப்படாமல், அது சாராய உற்பத்திக்கு திருப்பி விடப்படுகிறது.
எத்தனாலுக்கான அதிகபட்ச விலையாக லிட்டருக்கு ரூ. 39 என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் மொத்த சக்கரை ஆலைகளில் ஆண்டுக்கு 50 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் நடைமுறையில் எத்தனாலை உற்பத்தி செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் 8 சர்க்கரை ஆலைகளுக்கு மட்டும் தான் எத்தனாலுக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தின் அனைத்து சக்கரை ஆலைகளிலும் முழு அளவில் எத்தனால் தயாரித்து விற்பனை செய்தால் அதன் வருவாயில் விவசாயிகளுக்கான ஒட்டுமொத்த நிலுவைத் தொகையையும் ஒரே ஆண்டில் கொடுத்து முடிப்பதோடு மட்டுமின்றி கொள்முதல் விலையையும் உயர்த்தி வழங்கலாம்.
ஆனால் கள நிலவரம் என்னவென்றால் சர்க்கரை கழிவிலிருந்து (மொலாசஸ்) எரிபொருளான எத்தனால் தயாரிப்பதற்கு பதிலாக எரி சாராயம் தயாரிப்பதற்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. உற்பத்தி செய்யும் வழிமுறைகளில் எத்தனால் மற்றும் எரிசாராயம் இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், எரிசாராய உற்பத்தி கனஜோராக நடைபெறுவதற்கு காரணம் அரசின் வருவாய்க்கு அச்சாணியான ரூபாய் 45000 கோடியை அள்ளித்தரும் டாஸ்மாக் மது கடைகளுக்கு சரக்கு சப்ளை செய்யும் மதுபான ஆலைகள் விஸ்கி, பிராந்தி, ரம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருளே இந்த எரிசாராயம் தான். எனவே தான் எத்தனாலா? சாராயமா? என்று கேட்டால் சாராயமே அரசின் எளிய தேர்வாகிறது. மொலாசஸிலிருந்து எரி சாராயம் தயாரிக்கும் சர்க்கரை ஆலை யாருடையது...? எரி சாரயத்திலிருந்து விஸ்கி, பிராந்தி, ரம் தயாரிக்கும் ஆலை யாருடையது...? இப்படியான கேள்விகளை கேட்டுக்கொண்டே போனால் இந்த சங்கிலி தொடரின் ஆட்சி அதிகார பிணைப்பு வலுப்பட்டிருப்பது புரியவரும். இப்படி இருக்கும்போது இந்த சாராய கொள்ளையர்களுக்கு விவசாயிகள் பிரச்சனையாவது.... மண்ணாங்கட்டியாவது...
தமிழகத்தில் பெரும்பாலான சர்க்கரை ஆலைகளில் எரி சாராயம் உற்பத்திக்கு "வடிப்பாலைகள்" இருக்கின்றன. அரசின் 90 சதவீத ஆலைகளில் வடிப்பாலைகள் இல்லை. வடிப்பாலைகள் இருந்தால்தான் எத்தனால் தயாரிக்க முடியும். வடிப்பாலை இருக்கும் அரசின் ஆலைகளிலும் எத்தனால் தயாரிக்க தடை. அதனால் இங்கு உற்பத்தியாகின்ற மொலாசஸ் மிக சொற்ப விலைக்கு தனியாரால் கொள்ளையடிக்கப்படுகிறது.
இப்படி கரும்பிலிருந்து மொலாசஸ் மூலம் சாராய லாபம் பார்க்கும் ஆலை அதிபர்கள் மற்றும் அரசின் கூட்டு, பொய்யாக சர்க்கரை நட்ட கணக்கை காட்டி விவசாயிகளை பட்டினியில் தள்ளி வீதியில் போராட வைத்து விட்டு மொலாசஸிலிருந்து தயாரித்த சாராய லாப போதையில், போராடும் விவசாயிகளை அதிகார பலம் கொண்டு ஒடுக்கி வருகின்றனர். இவ்வாறு கரும்பிலிருந்து எரி சாராயம் தயாரித்து பெரும் கொள்ளை அடிக்கவே ஆரூரான் சர்க்கரை ஆலை கால்ஸ் டிஸ்லரிஸ் எனும் தி.மு.க.வின் சாராய நிறுவனத்திற்கு கைமாற்றபட்டுள்ளது.
கால்ஸ் டிஸ்லரீஸ் எனும் தி.மு.க வின் சாராய நிறுவனம்
தமிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் மது தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பெரும்பாலும் இந்த ஆலைகள் திராவிட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பினாமிகளின் ஆலைகளாகும். சசிகலா, அதிமுக வின் பொள்ளாச்சி மகாலிங்கம், திமுகவின் டி.ஆர்.பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் போன்றோர் பெரும் சாராய வியாபாரிகளாவர். அந்த வரிசையில் இந்த கால்ஸ் கம்பெனியும் தி.மு.க வினருக்கு சொந்தமானதுதான். காரைக்கால் பகுதியை சேர்ந்த வாசு தேவனுக்கு சொந்தமானதாகும் இந்நிறுவனம். சாராயத் தொழிலில் மிக நீண்ட அனுபவம் உடைய குடும்ப பாரம்பரியத்தை சேர்ந்த வாசுதேவனின் குடும்பம் காங்கிரசு கட்சியின் அனுதாபிகளாக இருந்தவர்கள். பின்னர் தேசிய நீரோடையிலிருந்து திராவிட குட்டையில் குதிக்கவும், கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவில் போட்டியிடும் வாய்ப்பு கேட்டு அது தவறிபோகவே கால்ஸ் டிஸ்டில்லரீஸ் என்ற மதுபான ஆலையை நடத்துவதற்கான உரிமம் கைவரப் பெற்றுது.
இந்த கால்ஸ் நிறுவனம்தான் தற்போது அடிமாட்டு விலைக்கும் மோசமான விலைக்கு ஆரூரான் சர்க்கரை ஆலையை கைப்பற்றியுள்ளது. தி.மு.க. வின் இந்த நிறுவனம் சுமார் 1000 கோடி மதிப்புள்ள சொத்தினை வெறும் 140 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதிலிருந்து திரைமறைவில் அதிகாரம் பலம் கொண்டு என்னென்ன உள்ளடி வேலைகள் நடந்திருக்கும் என்பதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கால்ஸ் நிறுவனம்தான் விவசாயிகளிடம் பணத்தை வசூலித்து தருமாறு வங்கியை ஏவுகிறது. விவசாயிகளின் மீது பொய் வழக்குகளை போட்டு மிரட்டி வருகிறது. இப்படி ஆலை அதிபர்கள் - அரசு ஆகியவற்றின் கூட்டின் மூலம் நடைபெறும் பகல் கொள்ளையில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடினால் திமுகவின் திராவிட மாடல் ஸ்டாலின் அரசு எப்படி நடவடிக்கை எடுக்கும். விவசாயிகளின் பக்கம் ஸ்டாலின் நிற்பாரா? எப்படி நிற்பார்! தன் கண்ணை தானே குத்திக் கொள்ளும் அளவிற்கு தரம் தாழ்ந்து சிந்திப்பதற்கா சுயமரியாதை பாடம் படித்துள்ளார்? அதிமுக ஆட்சியின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆலை அரசுடைமை ஆக்கப்பட்டு பிரச்சனை தீர்க்கப்படும் என்று சொன்ன ஸ்டாலின், தான் ஆட்சிக்கு வந்ததும் ஆலையை தனது கட்சிக்காரர் உடைமையாக மாற்றி விட்டார். இவரிடம் விவசாயிகள் நீதி கேட்டு கண்ணீர் வடித்தால் கருணையாக அவரது அரசு லத்தியைத்தான் எடுத்துக்காட்டும்.
இந்துத்துவா மாடலும் திராவிட மாடலும் சாராய மாடலே! விவசாயிகளை ஒடுக்க லத்தியை இறுக்கி பிடிப்பவர்களே!
இந்தியாவின் பெரும்பாலான மாநில அரசுகள் தங்களுக்கான வருவாய்க்கு மது விற்பனையை தான் நம்பி இருக்கின்றது. மதுவை முற்றாக எதிர்க்கும் ராமபக்தர்கள் நடத்தும் ஆட்சிகளில் சாராய விற்பனை கனஜோராகத்தான் நடக்கிறது.
யோக்கியன் யோகி ஆளும் உத்திரபிரதேசத்தில் ஆண்டுக்கு 30000 கோடி சாராய வருமானம் கிடைக்கிறது. இந்த தர்ம யோகி பதவியேற்ற பின் புதிதாக 2,706 மதுக்கடைகளை திறந்துள்ளார். கர்நாடகாவில் 27000 கோடி, மகாராஷ்டிராவில் 17,177.19 கோடி, புதுச்சேரி 1063 கோடி, உத்தரகாண்ட் 247.6 கோடி, அசாம் 2,031.33 கோடி, அருணாச்சலப் பிரதேசம் 163.42 கோடி, கோவா 500 கோடி, மேகாலயா 300 கோடி மத்திய பிரதேசம் 10,500 கோடி, இப்படி மதுவிலக்கு பற்றி வாய் கிழிய பேசும் காவிகளின் ஆட்சி மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் ஆளும் மாநிலங்களும் சாராயத்தை பெரும் வருவாயாக பார்க்கிறது. இவற்றின் எரிசாராய தேவைக்கு விவசாயிகளின் ரத்தம் பிழியப்படுகிறது.
நிலுவைத் தொகை கேட்டு போராடும் விவசாயிகளை குண்டாந்தடிகளும், துப்பாக்கி தோட்டாக்களும் பதம் பார்க்கிறது. மகாராஷ்டிராவில் நடந்த கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி விவசாயிகளை கொன்றது அந்த அரசு. இப்படி விவசாயிகளுக்கு விரோதமாக ஆளும் அரசுகள் வன்முறையின் மூலம் ஒடுக்கி வருகிறது.
திராவிட மாடல் தி.மு.க. அரசும், ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக தஞ்சை ஆட்சியரிடம் கொடுக்கச் சென்ற போது அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தது. சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டு வேனில் சென்ற கரும்பு விவசாயிகளை போராட்டத்திற்கு செல்ல விடாமல் கும்பகோணத்தில் விவசாயிகளின் வேனை நள்ளிரவில் மறித்தது. விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்திற்கு பின்பே வேனை விடுவித்தது. தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளை கைது செய்தது. இன்றளவும் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கி தீவிரம் காட்டி வருகிறது. எந்த மாடல் பேசினாலும், சாராய வருமானத்தை வைத்து ஆட்சி நடத்தும் இவர்களுக்கு விவசாயிகளின் கதறல்கள் இவர்களின் காதுகளை எட்டுவதில்லை. ஆனால் ஆலை முதலாளிகளின் சிறிய மூச்சும் கூட இவர்களின் இதயங்களை தொட்டு விடுகிறது. நாட்டில் விவசாயத்தையும், தொழிலையும் வளர்த்து மக்களுக்கு வேலை கொடுத்து அதன் மூலம் ஆட்சியை நடத்தாமல், விவசாயம் தொழில் உள்ளிட்ட அனைத்தையும் ஏகாதிபத்தியவாதிகளிடம் ஒப்படைத்துவிட்டு மக்களை வறுமையில் ஆழ்த்துகிறது. வறுமைக்கெதிராக மக்களைப் போராட விடாமல் சாராய போதையில் மூழ்கடிக்கின்றன மத்திய-மாநில அரசுகள். ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் புதிய காலனிய நிறுவனங்களான உலக வங்கி, உலக வர்த்தக கழகம் ஆகியவற்றின் அடிமைத்தனமான ஒப்பந்தங்களை ஏற்று இந்தியாவின் இறையாண்மையை அவர்களின் காலடியில் கிடத்துகின்றன.
உலக வர்த்தக கழகத்தின் கிடுக்குப் பிடியில் இந்திய விவசாயம்! சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை ஏன்?
டங்கல் திட்டம் காட் ஒப்பந்தத்தை ஏற்று செயல்பட்டால் எத்தகைய மோசமான விளைவுகளை நாடு சந்திக்கும் என்பதை விளக்கி கடந்த காலங்களில் இருந்து நாம் தொடர்ச்சியாக போராடி வந்துள்ளோம். அவை ஒவ்வொன்றாய் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு நாட்டின் மீது அடிமை விலங்கு பூட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய விவசாயத்தின் கழுத்தில் ஏகாதிபத்தியத்தின் கோரப் பற்கள் இறுகிக் கொண்டிருக்கிறது.
உலக வர்த்தக கழக அமைச்சர்களின் 9வது பாலி மாநாட்டில், ஏழை நாடுகள் விவசாயத்திற்கும் ரேஷன் கடைகளின் மூலமாக உணவுப் பொருட்களை விநியோகம் செய்வதற்கும் எவ்வளவு மானியம் வழங்க வேண்டும், அவற்றை என்னென்ன விலைகளுக்கு விற்க வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானிக்கும் உரிமையை மேற்பார்வையிடும் உரிமையை உலக வர்த்தக கழகத்தில் கையெழுத்திட்டு ஒப்படைத்து விட்டது இந்திய அரசு.
இதன் அடிப்படையில்தான் இந்திய மக்களுக்கு வழங்கி வரும் மானியங்கள் அனைத்தும் ஒழித்துக் கட்டப்பட்டு வருகின்றன. சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் மானியம் வெட்டப்பட்டு மானியத்தை பணமாக வழங்கும் வகையில் "உங்கள் பணம் உங்கள் கையில்" என்ற திட்டத்தின் மூலம் சந்தை விலைக்கு உணவுப் பொருட்களை வாங்கி கொள்வதை நோக்கி மக்களை அரசு தள்ளியுள்ளது.
அடிமைத்தனமான ஒப்பந்தங்களை ஏற்று செயல்பட்டுவரும் இந்தியாவை அதன் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது உலக வர்த்தக கழகம். ஒருபக்கம் நாட்டில் சர்க்கரை உற்பத்தி அதிகரிப்பு, அதனால் விலை வீழ்ச்சி என்றெல்லாம் சொல்லி கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஆலைமுதலாளிகள் அரசின் கூட்டு வாட்டி வரும் நிலையில், இந்திய அரசு தனது சர்க்கரையை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்ய்துள்ளது உலக வர்த்தக கழகம்.
இந்தியா தனது நாட்டின் சர்க்கரை ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான விலையிலும், உலக வர்த்தக கழகத்தின் விதிமுறைக்கு புறம்பாகவும் பல்வேறு மானியங்களை வழங்கி வருவதாக பிரேசில், ஆஸ்திரேலியா, கவுதம்மாளா ஆகிய நாடுகள் இந்தியாவின் மீது உலக வர்த்தக கழகத்தில் வழக்கு தொடர்ந்தன. (இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் 10%தான் வேளாண் மானியம் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்திக்கும் உலக வர்த்தக கழகம், ஏகாதிபத்திய நாடுகள் மட்டும் தங்கள் நாடுகளின் வேளாண்மைத்துறைக்கு 20% க்கு மேல் மானியம் வழங்க அனுமதிக்கிறது). இந்நாடுகள் தொடுத்துள்ள வழக்கில் சர்க்கரை சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதற்கான உலகளாவிய வர்த்தக விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாகவும், உலக வர்த்தக கழக ஒப்பந்தத்தின் பல்வேறு சரத்துகளுக்கு ஒவ்வாததாகவும், இதர ஒப்பந்தங்களான, வேளாண் ஒப்பந்தம், மற்றும் காட் ஒப்பந்தத்திற்கு எதிராகவும் இருப்பதாக குற்றம் சாட்டின.
இவ்வழக்கில் கடந்த 2021 ல் தீர்ப்பளித்த உலக வர்த்தக கழகத்தின் "வர்த்தக தகராறு தீர்மானக்குழு" தடை செய்யப்பட்ட இத்தகைய மானியங்களை இந்தியா நிறுத்த வேண்டும் எனவும் குழுவின் அறிக்கை வழங்கப்பட்டு 120 நாட்களுக்குள் அதனை நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதே வேளையில் இத்தீர்ப்பு குறித்து இந்தியா உலக வர்த்தக கழக மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உலக வர்த்தக கழகத்தில் இந்தியா தொடுத்துள்ள மேல்முறையீடு இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதற்கான சாத்தியம் ஏதும் இல்லை என்பதே உண்மை. உலக வர்த்தக கழகத்தின் இத்தகைய நடவடிக்கைகள், கிடுக்குபிடிகள், இந்தியாவின் சர்க்கரையை பிற நாடுகள் இறக்குமதி செய்வதை தடுப்பது மட்டுமின்றி இந்தியாவின் சர்க்கரை சந்தையை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய வல்லூறுகள் கைப்பற்றி கொள்வது என்ற அவற்றின் திட்டம் அதனுள் அடங்கி இருக்கிறது. (இந்தியா சர்க்கரை ஏற்றுமதி செய்யும் நாடுகள்: வங்கதேசம், இலங்கை, சோமாலியா, ஈரான், ஆகியவையாகும்.)
தொகுப்பாக பார்க்கும் பொழுது கரும்பு விவசாயிகள் ஏமாற்றப்படுவது என்பது ஆரூரான் சர்க்கரை ஆலை என்ற ஒரு ஆலையில் நடக்கும் பிரச்சனை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமுள்ள ஆலைகள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைத்து ஆலைகளிலுமுள்ள பிரச்சினையாகும். இந்தியா முழுவதுமே ஆலைகளால் தாங்கள் ஏமாற்றபடுவதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போராட்டங்களை ஆலை அதிபர்களுக்கு ஆதரவாக நின்று கொண்டு அரசுகள் ஒடுக்கி வருகின்றன.
சர்க்கரை கணக்கை மட்டும் காட்டி கரும்பிலிருந்து பெறப்படும் பிற வருவாயை மறைத்து லாபம் ஈட்டிக்கொண்டே நட்டக் கணக்கு காட்டி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பல ஆயிரம் கோடிகளை ஆலை அதிபர்கள் தர மறுக்கின்றனர். சர்க்கரை உற்பத்தியின் அதிகரிப்பால் சந்தையில் சர்க்கரை விலை வீழ்ச்சியடைந்து விட்டதாக கூறும் ஆலை அதிபர்கள் மாற்று எரிபொருளான எத்தனாலை உற்பத்தி செய்வதில்லை. மாறாக எரிசாராயம் தயாரிக்கின்றனர். மதுவினால் வரும் ஏகபோக லாபமும் அரசை நடத்துவதற்கான மதுவின் வருவாயும், ஆலை அதிபர்களையும் அரசையும் எரிசாராயம் தயாரிக்க உந்தி தள்ளுகிறது. இப்படி கொள்ளையடித்துவிட்டு கரும்புக்கான தொகையை கேட்டுப் போராடும் விவசாயிகள் மீது ஒடுக்குமுறையை ஏவுவதோடு, சட்டங்களை காட்டியும் ஏமாற்றி வருகின்றனர். ஆரூரான் விவகாரத்தில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் இழைத்த அநீதி அதற்கு ஒரு சான்று.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் ஆலையை அரசுடமையாக்கி விவசாயிகள் பிரச்சனையை தீர்ப்பதோடு டன்னிற்கு ரூபாய் 4000 கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்த திராவிட மாடல் தலைவர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் ஆலையை தனது கட்சியின் உடைமையாக மாற்றிக்கொண்டார். தற்போது விவசாயிகள் டன்னிற்கு 5,000 கேட்கும் நிலையில் 2,900 ரூபாய் கொடுப்பதாக தனது கரிசனம் காட்டியுள்ளார்.
மற்றொரு பக்கம் மோடி அரசு விவசாயிகளின் நலன் கருதி அதிகமான அளவில் இவ்வாண்டு கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்படும் என்றும் இதன் மூலம் விசாயிகள் பலன் அடைவர் என்றும் கூறி பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனாலை கலந்து கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. உண்மையில் கரும்பு எத்தனாலுக்கு திருப்பிவிடப்படுவதின் காரணம் வேறாகும். இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதிக்கு உலக வர்த்த்தக கழகம் தடை விதித்ததன் எதிர் விளைவு தான் இது. தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்திருப்பினும், உலக வர்த்தக கழகத்தின் ஆணைக்கு அடிபணிந்து சர்க்கரை ஏற்றுமதியை கைவிடுவதும், சர்க்கரை உற்பத்தியை படிப்படியாக குறைத்து ஏகாதிபத்திய நாடுகளுக்கு இந்தியாவின் சர்க்கரை சந்தையை காவு கொடுப்பது என்ற அடிமைத்தனத்தின் விளைவுதான் எத்தனாலுக்கு அதிகப்படியான கரும்பினை திருப்பிவிடும் மோடி அரசின் முடிவின் பின்னுள்ள சூட்சமமாகும். எத்தனாலுக்கு கரும்பு திருப்பிவிடப்பட்டாலும் அதிலிருந்து வரும் வருவாய் ஆலை முதலாளிகளின் பெட்டிகளைத்தான் கனக்க செய்யுமே ஒழிய வாடி நிற்கும் விவசாயிகளை வந்தடையப் போவதில்லை. எனவே எத்தனால் மட்டுமின்றி கரும்பிலிருந்து கிடைக்கும் அனைத்து பொருள்களிலிருந்தும் கிடைக்கப் பெறும் லாபம் விவசாயிகளை சென்றடைவதற்கான வழிவகையை ஏற்படுத்தக் கோரி நாம் போராட வேண்டியுள்ளது மட்டுமின்றி சாராய வேட்டைக்கு கரும்பை அதிகமாக பயன்படுத்தும் ஆலை முதலாளிகளின் அரசாங்கங்களுக்கு எதிராகவும் போராட வேண்டும். அதோடு உலக வர்த்தக கழகத்தின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து சர்க்கரை உற்பத்தியை படிப்படியாக குறைக்கும் மோடி அரசின் முடிவிற்கு எதிராகவும், உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியாவை வெளியேறக் கோரியும் நமது போராட்டமானது இருக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளின் பிரச்சனை என்பது ஒட்டுமொத்த இந்திய வேளாண்மையை ஏகாதிபத்தியத்தின் காலடியில் பலியிட்டதன் விளைவாக எழும் நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரச்சனையின் ஒரு பகுதியாகும். எனவே தங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்கான போராட்டத்தோடு கரும்பு விவசாயிகள் போராட்டம் நிற்காமல், இந்திய வேளாண்மையை நெருக்கடிக்கு தள்ளி விவசாயிகளை தற்கொலைக்கும் தள்ளும், ஏகாதிபத்தியவாதிகளின் புதிய காலனிய வேளாண் கொள்கையை எதிர்த்த போராட்டமாக அதை விரிவுபடுத்தபடுவதில்தான், விவசாயத்தையும், விவசாயிகளையும், காப்பாற்றக்கூடிய வழியில் பயணிக்க முடியும் என்பதை உணர்ந்து விவசாயிகள் தஙகள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். விவசாயிகள் பிரச்சனை என்பது அவர்களோடு நின்றுவிடுவதில்லை. அது ஒட்டுமொத்த நட்டின் பிரச்சனை. எனவே நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகளோடு தோள் நிற்க வேண்டும். வேளாண்மையை மட்டுமின்றி அனைத்து வாழ்வுத் துறைகளையும் அழித்து வரும் மேற்சொன்ன புதிய காலனிய கொள்கைகளை எதிர்த்து நாட்டின் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் அனைத்து மக்களோடும் விவசாயி வர்க்கம் கைகோர்ப்பதும், அத்தகைய ஜனநயாகப் போராட்டத்தில் ஒரு அச்சாணியாக விவசாயி வர்க்கம் பங்காற்றுவதிலும்தான் அது தனது அரசியல் விடுதலையை பெறுவதோடு நாட்டின் விடுதலையையும் பெறுவதற்கு பங்காற்ற முடியும். எனவே விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து பின் வரும் முழக்கங்களின்பால் அணிதிரள்வோம்.
திமுக அரசே!
* ஆரூரான் ஆலை நிர்வாகத்திற்கு எதிரான கரும்பு விவசாயிகள் போராட்டத்தை நசுக்காதே!
* டன்னிற்கு ரூ.5000 கணக்கிட்டு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்கு!
* தொழிலாளிகளின் ஊதிய நிலுவை மற்றும் வாகன உரிமையாளர்களின் வாடகை நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கு!
* விவசாயிகள் பெயரில் மோசடியாக பெற்ற கடனை ஆலை முதலாளியிடமே வசூல் செய்! அக்கடனை விவசாயிகள் தலையில் ஏற்றாதே!
* ஆரூரான் ஆலை உள்ளிட்டு தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து தனியார் சர்க்கரை ஆலைகளையும் அரசுடமையாக்கப் போராடுவோம்!
* முதலாளிகளுக்கு வால் பிடிக்கும் கட்டப்பஞ்சாயத்து அமைப்பான தேசிய கம்பெனிச் சட்ட தீர்ப்பாயத்தை கலைக்கவும் நீதிமன்ற விசாரனை கோரியும் போராடுவோம்!
* கரும்பு சக்கையிலிருந்து பெறப்படும் மொலாசஸ்தான் மதுபான உற்பத்தியில் பயன்படும் மூலப்பொருள்! அதன் இலாபத்தை கொள்ளையடிக்கவே திராவிடக் கட்சிகள், தீர்ப்பாயம், ஆலை முதலாளிகளின் கள்ளக்கூட்டு!
* டாஸ்மாக் ஏகபோகத்திற்காக சர்க்கரை ஆலைகளை தன் குடும்ப சொத்தாக மாற்றிவரும் தி.மு.க "குடும்ப" ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
- சமரன்
(மார்ச் -மே 2023 மாத இதழ்)