திமுக அரசு மற்றொரு பாலியல் குற்றவாளியை மறைப்பது ஏன்?
அறம் இணைய இதழ்
மாணவி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆதாய அரசியல் செய்கிறார்கள் தான்! ஆனால், இந்த சம்பவத்தில் அரசும், காவல்துறையும் நடந்து கொள்ளும் விதம் பல சந்தேகங்களுக்கு வலு சேர்க்கிறது. பல்கலை கழகத்தின் படுமோசமான நிதி நிலைமைகள் ஒருபுறமும், விடை தெரியாத கேள்விகள் பல மறுபுறமும் பிரச்சினையின் மூலத்தை மறக்கடிக்கிறது;
கல்வி வளாகத்திற்குள்ளேயே அதில் படிக்கும் மாணவி வெளியாள் ஒருவனால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளது பெரும் அதிர்வுகளை உருவாக்கி உள்ளது. இதில் 80 சதவிகித சி.சி.டிவி கேமரா வேலை செய்யவில்லை. தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது என்பதும் குற்றவாளி தொடர்ந்து இது போன்ற குற்றங்களை அங்கே பல வருடங்களாக செய்து வருகிறான் என்பதும், யூனிவர்சிட்டியில் உள்ள சிலரோடு அவன் நட்பில் இருந்துள்ளான் என்பதும் கவனத்திற்கு உரியது. இந்த சம்பவத்தில் அரசும், காவல்துறையும் காட்டும் பதட்டமும், கமுக்கமும் மேலும் சந்தேகங்களை மக்களுக்கு ஏற்படுத்துகிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
முதலாவதாக இந்த நபர் ஞானசேகரன் ஒரு தொழில் முறை குற்றவாளி. இவன் ஏற்கனவே 15 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளவன். முன்னதாக 2011 ஆம் ஆண்டு இதே பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவியை இவ்விதம் பாலியல் வன்புணர்வு செய்த வகையில் கைதானவன். நான்கு பெண்களை திருமணம் செய்துள்ளான். முதல் மனைவி இவன் கொடுமை தாங்காது கர்ப்பிணி நிலையிலேயே இவனைவிட்டு பிரிந்து போயுள்ளாள். இந்தப் புகார் வந்த மூன்று மணி நேரத்தில் சி.சி.டிவி.கேமராக்கள் பயனற்று உள்ள நிலையில் காவல்துறையினர் இவன் தான் செய்திருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக முடிவு செய்து அவனை தூக்கி உள்ளனர் என்பது தான் ஹைலைட்!
ஆக, ஒரு கொடூர குற்றவாளியை தெரிந்தே இந்த சமூகத்தில் நடமாடவிட்டுள்ளது யார் தவறு? அப்புறம் எதற்கு அரசாங்கம்? காவல்துறை எதற்கு? நீதிமன்றங்கள் எதற்கு? எப்படிப்பட்ட கொடூர குற்றவாளிகளுக்கும் நீதிமன்றங்கள் பிணை கொடுப்பதும், விடுவிப்பதுமே முதல் ஆபத்தாக நாம் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக இந்தக் குற்றவாளி சுகாதாரத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியத்தோடு பல நிகழ்வுகளில் புகைப்படம் எடுத்துள்ளான். பல திமுக உள்ளுர் நிர்வாகிகளோடு நெருக்கமாக இருந்துள்ளான். அத்துடன் துணை முதல்வரோடு ஒரு புகைப்படமும் வைத்துள்ளான். ‘இவ்வளவு மோசமான கிரிமினலை ஒதுக்கி வைக்க வேண்டும்’ என்ற உணர்வு அந்தக் கட்சியில் யாருக்குமே இல்லை. ”அவன் சைதை திமுக மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளான்” என சைதை பகுதி அதிமுகவினர் கூறுகின்றனர். அமைச்சர் ரகுபதியோ, ”அவன் கட்சியிலேயே இல்லை” என அவசரமாக அறிக்கைவிடுகிறார். கட்சியில் இல்லாதவன் எப்படி இவ்வளவு திமுகவின் முக்கிய புள்ளிகளோடு நெருக்கம் பாராட்டி, இத்தனை புகைப்பட ஆதாரங்கள் வைத்துள்ளான்?
இந்த சம்பவத்திற்கு செல்வதற்கு முன்பு இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை பற்றி சற்று பார்ப்போம். மத்திய அரசின்கல்விக் கொள்கை விளைவாக அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பல தன்னாட்சி அங்கீகாரம் மற்றும் நிகர் நிலை அந்தஸ்து பெற்றுவிட்ட காரணத்தால் பல்கலைக்கு வந்து கொண்டிருந்த சில நூறு கோடி வருமானம் தடைபட்டுவிட்டது. மாநில அரசு ஒதுக்கி வந்த ரூ 12 கோடி நிதியும் எப்போதோ நிறுத்தப்ப்பட்டுவிட்டது.
நியாயமான சம்பளத்திற்கு வழி இல்லாததால் பேராசிரியர்கள் தொடங்கி, அலுவலர்கள், ஆய்வக ஊழியர்கள், செக்யூரிட்டிகள்..எனப் பலரும் ஒப்பந்தக் கூலிகளாகவே உள்ளனர். அதாவது அத்துக் கூலிகளே! நிரந்தரமான கெளரவமான பணி என்பது பெருமளவு கிடையாது. செக்யூரிட்டிகள் எல்லோருமே வெளி நிறுவனங்கள் அனுப்பும் செக்யூரிட்டிகளே! ஆகவே, யாரிடமும் நீங்கள் பொறுப்புணர்வை எதிர்பார்க்க வாய்ப்பில்லாத நிலையே நிலவுகிறது.
பல்கலைக் கழகத்தின் மிகக் கடுமையான நிதிப் பற்றாக்குறையே பல மாதங்களாக செயல்பாடின்றி கிடக்கும் சி.சிடிவி கேமராக்களை பழுது பார்க்க வக்கற்ற நிலையை தோற்றுவித்துள்ளது என்பதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?
துணைவேந்தர் நியமனத்திலும், பேராசிரியர்கள் நியமனங்களிலும் மாநில உயர்கல்வித் துறையை அமைச்சர் பொன்முடி பண வேட்டைக்கான களமாகப் பார்த்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த பட்டவர்த்தனமான உண்மையாகும். இந்தச் சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ் சார்புள்ளவர்களாகப் பார்த்து துணைவேந்தர் பொறுப்பில் நியமிக்கிறார் என்ற வகையில் மத்திய, மாநில அரசுக்கு இடையிலான யுத்தக்களமாக மாறி உள்ளது உயர்கல்வித் துறை. பழம் தின்று கொட்டை போட்ட பொன்முடியாலேயே கவர்னரை சமாளிக்க முடியவில்லை எனும் போது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உயர்கல்வித் துறை அமைச்சரால் கவர்னரின் அதிகார ஆட்டத்தை ஒரு சிறுதும் தடுக்க முடியவில்லை.
அடுத்ததாக மாணவியின் எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை ஊடகங்களில் வெளியானதற்கு அரசும், காவல்துறையும் காட்டிய பதற்றம் எதற்கு? பெயரும், முகவரியும்,அடையாளமும் தான் வெளியில் தெரியக் கூடாது. ஆனால், என்ன குற்றம் நடந்தது என்பதை ஏன் மறைக்க வேண்டும்? அந்த குற்றவாளி ஞானசேகர் அந்த மாணவியை மடக்கி பிடித்ததை அங்கிருந்து யாருக்கு தெரியப்படுத்தினான்…?
‘’அந்த சார் கிட்டயும் நீ ஒத்துழைக்கணும்’’ என்று அந்த மாணவியிடம் கேட்டானே, அந்த சார் யார்? அதை ஏன் மறைக்கிறீர்கள். அவர் கட்சிப் பொறுப்பில் இருந்தால் பகிரங்கமாக அவரை விலக்கிவிட்டு உடனே கைது செய்யுங்கள். அது தான் அரசு மீது மக்கள் நம்பிக்கை கொள்வதற்கு வழி வகுக்கும். அந்த நபரை காப்பாற்ற நினைப்பது சந்தேகங்களுக்கு தான் வலு சேர்க்கும்.
வழக்கம் போல பாஜகவும், அதிமுகவும் இதில் அரசியல் ஆதாயம் தேடத்தான் துடிக்கிறார்களே அன்றி, நடந்த சம்பவத்தை முழுமையாக உள்வாங்கி நிரந்தர்த் தீர்வுக்கோ, பல்கலைக் கழ்கத்தின் நிதி பற்றாகுறை அவலம் குறித்தோ பேசத் தயார் இல்லை.
தங்களுக்கு நேர்ந்த அநீதியை பல மாணவிகள் மறைத்து உள்ளனர். இந்த மாணவி துணிந்து புகார் தந்துள்ளார். கன்னியாகுமரி பெண்களுக்கே உள்ள துணிச்சல் தான் இந்த விவகாரம் வெளியில் தெரிந்து, குற்றவாளி கைதுக்கு காரணமாகிவிட்டது. நடைபெற்ற சம்பவம் சென்னையின் மிக முக்கிய இடமான அண்ணா பல்கலைக் கழகம் என்பதால், இந்த விவகாரம் பெரும் முக்கியத்துவம் அடைந்துள்ளது.
ஏனெனில், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இந்த ஆட்சியில் பல்வேறு இடங்களில் நடை பெற்று வருகிறது. பெரும்பாலும் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டுவிடுவதும் வழமையாக உள்ளது. கடைசியாக அண்ணா நகரில் பத்து வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்புணர்வு சம்பவ குற்றவாளியை தண்டிக்க உச்ச நீதிமன்றம் நேரடி தலையீடு செய்து தமிழக காவல்துறையை நம்ப முடியவில்லை என வெளி மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகள் பட்டியலைக் கேட்டது நினைவிருக்கலாம்.
கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதிக்கு அநீதி இழைத்தது தொடங்கி, தொடர்ந்து பல பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் இந்த திமுக அரசு குற்றவாளிகளின் பாதுகாவலனாகவே இருந்துள்ளது என்பதை ஆழ்ந்த வேதனையுடன் பதிவு செய்கிறோம். தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. அவர்களாவது உண்மையை வெளிப்படுத்தி மற்றொரு குற்றவாளியை தண்டிப்பார்களா? அல்லது மேல்மட்ட அரசியல் சமரசங்கள் அமுக்கிவிடுமா? பார்ப்போம்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/20267/anna-university-girl-student-rape/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு