அயோத்தி கோவிலில் நடக்கும் அபாரக் கொள்ளைகள்!

அறம் இணைய இதழ்

அயோத்தி கோவிலில் நடக்கும் அபாரக் கொள்ளைகள்!

ராமன் எத்தனை ராமனடி? என்று ஆச்சரியப்படும் விதத்தில் ராமர் பெயரில் விதவித அவதாரங்களை எடுத்து அரசியல் வியாபாரத்தை நடத்துகின்றனர். ஆட்சிக்கு வருவதற்கு ஒரு ராமர்! மசூதியை இடிக்க ஒரு ராமர்! நிலங்களை அபகரிக்க ஒரு ராமர்! நிதி திரட்ட ஒரு ராமர்! சிலையாய் நிற்க ஒரு ராமர்! காணிக்கை பணத்தை களவாட…வென்று!

இதுவரை இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தான் பணக்கார கோவில் என்று இருந்ததற்கு சவால் விடும் வண்ணம், அயோத்தி ராமர் கோவில் உருவாகி உள்ளது. திருப்பதி கோவிலைக் காட்டிலும் பன்மடங்கு பெரிய கோவில்! இன்னும் அதிக பக்தர்கள் வருகின்ற இடமாகவும் உள்ளது. காணிக்கை பணம் கொட்டொகொட்டென்று கொட்டுகிறது!

ஆனால், கஜினி முகமது அன்று சோமநாதர் கோவிலைக் கொள்ளையடித்ததைக் கூறி இந்துக்களின் ஓட்டைப் பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக இன்று தாங்களே கஜினி முகமதுவாக மாறி, ராமர் கோவிலை சூறையாடி வருகிறது.

ராமர் எப்படி மக்கள் மனதில் இடம் பெற்றார்?

தந்தையின் கட்டளையை வேதவாக்காகக் கொண்டு ஆட்சியைத் துறந்து 14 ஆண்டுகள் வனவாசம் போன தனயன் என்பதாலும், மனைவியைத் தவிர வேறு பெண்ணை விரும்பாத பேராண்மை கொண்டவனான ராமன், கற்பில் சிறந்த மனைவியை காப்பாற்ற மாவீரன்  ராவணனனோடு மோதி, வீரதீர போர் புரிந்தவன் என்ற வகையிலும் தான்!

ஆக, இளைஞர் வடிவிலான வில்லேந்திய இராமர் தான் பல நூற்றாண்டுகளாக மக்கள் மனதில் பதிந்தவர்! ஆனால், பாஜக அரசோ முற்றிலும் மாறாக, ‘பால ராமர்’ என்ற ஒரு புதுக் கடவுளை உருவாக்கியது!

குழந்தை கிருஷ்ணர் கொண்டாடப்படுவதற்கு போட்டியாக ராமரை நிறுத்த எண்ணினார்களோ, என்னவோ?

இதற்காக கரசேவை நடத்தி, பாதயாத்திரை நடத்தி, இறுதியில் அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் ராமர் பிறந்து வளர்ந்தார் எனக் கதைகட்டி பாபர் மசூதியை இடித்துவிட்டு, பிறகு சம்பந்தேமேயில்லாமல் வேறு இடத்தில் ஏக்கரா கணக்கில் இடம் வாங்கி பிரம்மாண்ட கோவில் எழுப்பியது பாஜக!

ராமர் கோவிலுக்காக பாபர் மசூதியை இடித்தது!

ராமர் கோவில் கட்ட நில அபகரிப்புகளை அரங்கேற்றியது,

நிலங்களை வாங்க நிதி வாங்கி குவித்தது,

வாங்கிய நிதியை கணக்கில் சரியாக வரவு வைக்காதது,

கோவிலை கட்டுவதில் கோல்மால் செய்தது,

கட்டிய கோவிலுக்கு வரும் காணிக்கையை களவாடிக் கொண்டிருப்பது..என்ற வகையில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை ஒரு புலனாய்வு கட்டுரையாக எழுதி சிரமப்படுத்தாமல் ஒரு இந்துத்துவ நபரிடம் உரையாடுவது போல அமைத்து இங்கு எளிமையாக சொல்லி உள்ளேன்.

ஏ.ஐ இமேஜ் நன்றி; கீற்று இணையம்

”ஏன் பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று கூறி, வம்படியாக அந்த மசூதியை தகர்த்துவிட்டு, அங்கேயே கட்டாமல்  ஊருக்கு வெளியே கட்டினீர்கள்?”

”பாபர் மசூதி இருந்த இடம் ராமர் கோவில் எழுப்ப போதுமானதில்லை. அதைச் சுற்றிலும் வேறு சில இந்து கோவில்களையும் இடித்தால் தான் அங்கு ராமர் கோவில் எழுப்ப முடியும். ஆகவே, அங்கே கட்டுவதற்கு பதிலாக அயோத்தியிலேயே வேறு இடத்தில் கட்டினோம். இதுவும் அயோத்திக்குள் இருப்பதால் தவறில்லை”

”அதைத் தானே நாங்களும் சொன்னோம். அயோத்தியில் எங்கு ராமர் கோவில் கட்டினால் என்ன? பாபர் மசூதி இருந்த இடத்தை ஏன் இடிக்க வேண்டும் என்றோமே..”

”இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. ராமருக்கு கோவில் எழுப்பப்படும் ஊரில் பாபர்மசூதி இருக்க வேண்டாம் என்று தான் இடித்தோம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்”

”ஓகோ, சரி அதோடு விட்டீர்களா? அயோத்தியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் பல நூற்றாண்டுகளாக சகோதரர்களை போல ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்! அங்குள்ள பல சிறிய இந்து கோவில்களின் வெளியே பூ விற்பவர்களாக, பூஜை பொருட்களை விற்பவர்களாகவும் இஸ்லாமியர்கள் இருந்ததை 1991-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நக்கீரன் பத்திரிகைகாக செய்தி, புகைப்படங்கள் எடுக்க நான் சென்ற போது பார்த்தேனே..!”

”அதை எப்படி நாங்கள்  தொடர்ந்து அனுமதிப்போம்? அயோத்தியில் இஸ்லாமியர்கள் குடும்பங்களே இன்றைக்கு இல்லாத அயோத்தியை உருவாக்கிவிட்டோமே!”

”சரி, இஸ்லாமியர்கள் துடைத்தெறியப்பட்ட அயோத்தியில் நடந்த தேர்தலில் பாஜக ஏன் தோற்றது? இஸ்லாமியர்களை அரவணைத்து அரசியல் செய்யும் சமாஜ்வாடி கட்சி ஏப்படி வெல்ல முடிந்தது…?”

”சாவித்திரி கண்ணன் சார். அது உங்களுக்கு தெரியாதா? என் வாயில இருந்து வரவழைக்கணுமா?”

ராமர் கோவில் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

”ஆமா, சொல்லுங்க. வெட்கமாக இருக்குது இல்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாக பாஜகவினரும், இந்துத்துவ அமைப்புகளும் செய்த அராஜகங்கள் கொஞ்சமா? நஞ்சமா? ராமர் கோவிலுக்கு நிலம் கேட்டு இந்துக்களின் நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டு வாங்கிவிட்டு, அதை பல மடங்கு அதிகப்படுத்தி கணக்கு எழுதி பல நூறு கோடிகள் ஆட்டையப் போட்டீங்க. பல இந்துக்களுக்கு நிலத்திற்கான முழு பணத்தையும் செட்டில் பண்ணாமல் அரைகுறையாக கொடுத்து அலைக்கழித்தீர்கள். மேலும் அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக உலகம் முழுமையும் உள்ள இந்துக்களிடம் இருந்து கணக்கு வழக்கில்லாமல் நன்கொடைகள் வசூலித்து, கணக்கில் காட்டாமல் பல கோடிகளை முழுங்கினீர்கள்! இவையெல்லாம் அயோத்தி மக்களுக்கு தெரிந்ததால் தான் இந்த அயோக்கிய பயல்களுக்கு ஓட்டு போடக் கூடாது …என உங்களை தோற்கடித்தார்கள் சரியா?”

”சார்! அப்படிச் சொல்லக் கூடாது. எந்த ஒரு பெரிய செயல்பாடுகளிலும் சில தவறுகள் நடக்கவே செய்யும். எப்படிப் பார்த்தாலும் இன்றைக்கு உலகமே வியக்கும் ராமர் கோவில் அயோத்தியில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. கோடிக்கணக்கான மக்கள் அங்கு சென்று மன நிறைவோடு வழிபட்டு வருகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக அது இன்று கம்பீரமாக எழுந்து நிற்கிறதா? இல்லையா?”

”இல்லை. இது ஒரு வரலாற்றுப் பிழை! இதை கோவிலாகவா நீங்கள் கட்டி உள்ளீர்கள்? ஏதோ பைவ் ஸ்டார் ஹோட்டலை கட்டுவது போல டாம்பீகமாக கட்டி உள்ளீர்கள்! கோவிலைச் சுற்றிலும் பார்க்குகள், பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடுமிடங்கள், நீர் ஊற்றுகள்.. போன்றவை கொண்ட சுற்றுலா தளமாக்கி உள்ளீர்கள்”

”சார், காலத்திற்கு ஏற்ப ஆன்மீகத்தையும் மாற்றிக் கொண்டே போகணும். இது ஒரு ஆன்மீக சுற்றுலா தளமாக உருவாக்கப்பட்டு இருக்கு. அதிலே தப்பில்லை”

”தப்பில்லை, தப்பில்லை என்று தானா பக்தர்கள் நேர்த்திக் கடனாக தரும் நகைகள், தங்கம், வெள்ளியிலான பொருட்கள், பணம் ஆகியவற்றை அவரவர் இல்லங்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள் உங்க ஆட்கள்? அதுவும் கோவில் எழும்பிய குறுகிய காலத்திற்குள்ளேயே 5,000 கோடி காணிக்கை பணம் காணாமல் போயிருக்குதே!”

”5,000 கோடிகள் என்பதெல்லாம் காங்கிரஸ்காரங்க கட்டுகிற கதை. அவ்வளவு இருக்காது. கோவில் பணத்தை கொள்ளையடித்தவர்களை கைது செய்ய எஸ்.ஐ.டி விசாரணை நடத்த எங்க யோகி ஜீ ஆணையிட்டுள்ளார். விரைவில் அனைத்தையும் இராமர் கோவில் உண்டியலில் சேர்ப்போம்”

”போனது திரும்பாது. முதலை வாய்க்குள் போன கதை தான்! ஆனால், உங்கள் பிறவிக் கணக்கில் நடந்த பிழைகளால் விளைந்த பாவங்கள் சேர்ந்துள்ளதை எப்படிக் கழிப்பீர்?”

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/24968/ayothi-ramar-temple-corruptoin/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு