அணிவகுக்கும் ஆணவப் படுகொலைகள்! காரணம் என்ன?
அறம் இணைய இதழ்
ஆண்டு தோறும் நூற்றுக்கு மேற்பட்ட சாதி ஆதிக்க ஆணவப் படுகொலைகள் தமிழகத்தில் நடக்கின்றன…! நம்மை உறைய வைக்கும் இந்த கொலைகள் பெரும்பாலானவற்றுக்கு காவல் துறையின் கரிசனம் தொடர்வதில் ஏனோ மாற்றமில்லை. தரங்கம்பாடி ஆணவப் படுகொலையிலும் தடையின்றி அதுவே தொடர்கிறது;
கண்ணகி- முருகேசன் தம்பதிக்கு நேர்ந்த துயரம், கெளசல்யாவை காதலித்த உடுமலை சங்கர் கொல்லப்ப்பட்ட கொடூரம், சுவாதியை காதலித்த கோகுல்ராஜ் கொல்லப்பட்ட பயங்கரம், கடைசியாக நெல்லையில் சுபாஷிணியை காதலித்தற்காக மென் பொறியாளர் கவின் காவல்துறை குடும்பத்தால் கொல்லப்பட்ட விவகாரம்..வரிசையில் தற்போது பார்த்தீபன் – திவ்யதர்ஷிணி ஆணவப் படுகொலை சேர்ந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட தரங்கம்பாடி அருகேயுள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் (19) கொத்தனாராக வேலை பார்க்கும் இளைஞன். இவரும் அருகே உள்ள சாந்தக்குடியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரி சேர இருந்த திவ்யதர்ஷினியும் (17) ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்துள்ளனர்.
பார்த்திபன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். பிரியதர்ஷினி வன்னியர் சாதியைச் சேர்ந்தவர். பெண்ணின் குடும்பத்தினர் இந்த காதலில் உடன்பாடில்லை. பெண்ணைக் கண்டித்து பார்த்தும் பயனற்று போய்விட்டது. இதனையடுத்து பார்த்தீபன் குடும்பத்தாரை எச்சரித்துள்ளனர்.
ஜூன் 29-ஆம் தேதி அன்று இரவு பிரியதர்ஷினியின் தந்தை மற்றும் சகோதரர்கள் சூர்யா, வசந்த், முகிலன் ,செந்தில் உள்ளிட்ட பார்த்திபனை வீட்டை தேடிச் சென்று குடும்பத்தினரை கடுமையாக ஏசி, சாதிய வன்மத்துடன் தாக்குதல் நடத்தி எச்சரித்துள்ளனர். ”உன்னுடைய மகனின் சாவு என்னுடைய கையில்தான்” என்று பெண்ணின் தந்தை லட்சுமிகாந்தன் பையனின் பெற்றோரிடம் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பார்த்தீபன் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, பார்த்திபன் குடும்பத்தினர் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்து பாதுகாப்புக் கேட்டுள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அன்றைய இரவில் பார்த்திபன் தந்தை மாரிமுத்துவிற்கு போன் செய்து, ‘சாந்தக்குடியில் உள்ள பெண்ணின் வீட்டாரிடம் விசாரணை செய்ய வேண்டும். ஆகவே அவர்கள் வீட்டை அடையாளம் காட்ட வருமாறு’ நைச்சியமாக அழைத்துள்ளனர். அவரும் காவல்துறையின் அழைப்பை அப்பாவியாக ஏற்று சென்றுள்ளார்.
இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பெண்ணின் சகோதரௌம், அவரது நண்பர்களும் பார்த்திபனை தேடி வந்து அடித்து அழைத்துச் சென்றுள்ளனர்.
வீட்டிற்கு வந்த மாரிமுத்து மகனை காணாமல் தேடி அலைந்துள்ளார்.
பார்த்தீபனை அழைத்துச் சென்றவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். அவன் அடி தாங்காமல் கதறுவதைக் கண்ட பெண்ணையும் சேர்த்து அடித்துள்ளனர். இருவரது உயிரும் பிரிந்த நிலையில் சற்று அருகேயுள்ள கூரைக் கொட்டகையில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.
இத்தனையையும் முடித்துவிட்டு, ‘தன்னுடைய மகளைக் காணவில்லை’ என்று பெண்ணின் தந்தை லட்சுமி காந்தன் பொறையார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை பார்த்திபனின் கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்ட போது, சாத்தங்குடியில் உள்ள பாம்பாலம்மன் கோவில் அருகே உள்ள தோப்பில் சிக்னல் கிடைத்துள்ளது. அங்கே சென்று பார்த்ததில் அவ்விடத்தில் கீற்றுக் கொட்டகையில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் தூக்கில் சடலமாகத் தொங்கவிடப்பட்டுள்ளனர்.
இதில் பெண் வீட்டார் மீது வன்கொடுமை சட்டப்படி காவல்துறை ஆணவப் படுகொலை வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டது காவல்துறை. இதையடுத்து பையனின் சமூகத்தை சேர்ந்த விசிகவினர் போராட்டம் நடத்தினர்.
இருவரது உடல்களும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடல் கூராய்வு நடத்தப்பட்டுள்ளது. பெண்ணின் சடலத்தை பெற்றுக் கொண்டவர்கள், அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்கு கூட செய்ய விரும்பாமல் மயிலாடுதுறை மின் மயானத்தில் அடக்கம் செய்துவிட்டனர். இதுவே, இது ஆணவப் படுகொலை என்பதற்கான சாட்சியமான நிலையிலும் கூட காவல்துறை முறையாக ஆணவப் படுகஒலை வழக்கை பதிவு செய்ய மறுப்பது தான் ஆச்சரியமாக உள்ளது.
இதைக் கண்டித்து சாதிவெறியர்களின் மீது ஆணவப் படுகொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை தரங்கபாடி சாலையில் தலித் இளைஞரின் பெற்றோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக வாலிபர் சங்கம் வி.சி.க. உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஆத்திரமுற்ற பார்த்தீபன் சமூகத்தை சேர்ந்த சிலர் பெண்ணின் வீட்டையும், அவரது உறவினர்கள் வீட்டையும், மற்றும் வாகனங்களையும் அடித்து நொறுக்கி வன்முறை ஆட்டம் ஆடியுள்ளனர்.
ஆணவப் படுகொலையை தடுக்கவும், அதில் கறாரான காவல்துறை நடவடிக்கைகளை உறுதிபடுத்தவும் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என கடந்த ஐந்தாண்டுகளாக திமுக ஆட்சியாளர்களிடம் அனைத்து முற்போக்கு இயக்கங்களும் வலியுறுத்தி வந்தனர் . அதை காதில் வாங்காதது போல பாவனை காட்டி வந்த ஸ்டாலின், தேர்தல் நெருக்கத்தில் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து அறிக்கையும் வாங்கி வைத்து, அதை வெளியிடக் கூட மனமின்றி வைத்து விட்டார்.
முற்போக்கு கருத்துக்களை பேசிய திராவிட இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு தங்கள் அடையாளத்தை தொலைத்து சந்தர்ப்பவாத அரசியல் சகதியில் சிக்கி உழல்கின்றனர். திராவிட இயக்கங்களின் 58 ஆண்டு கால ஆட்சி சாதி மறுப்பு, சமத்துவம், சமூக நீதி என்பதை வெற்று வாய்சவடாலாக பேசினார்களே அன்றி, செயல்பாட்டில் படு பிற்போக்குவாதிகளாகவே நடந்து கொண்டனர்.
பொதுவாக தேர்தல் அரசியலை எதிர்கொள்ளும் அரசியல் கட்சிகள் ஆணவப் படுகொலை விவகாரத்தில் ஆத்மார்த்தமான அக்கறை காட்ட மறுக்கின்ற நிலை நிலவுகிறது. சாதிக் கட்சிகள் இதில் தங்களுக்கு சாதகமான அரசியலை செய்கின்றன. கம்யூனிஸ்ட்கள் மட்டுமே இதில் அக்கறை காட்டி வருகின்றனர். காவல் துறையும் இந்த விவகாரத்தில் சமூகத்தில் புரையோடிப் போய் வலுவாக ஆதிக்கம் செலுத்தும் சாதிய மனநிலையின் சாயலைக் கொண்டதாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
‘இன்னும் எத்தனை காதலர்களை பலி கேட்டு உயிர்குடித்து அடங்குமோ’ இந்த சாதிப் பிசாசு!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/25048/honor-killing-in-tamilnadu/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு