உயர்கல்விக்கு ஆபத்து : புதிய சட்டம் வருகிறது!

மின்னம்பலம்

உயர்கல்விக்கு ஆபத்து : புதிய சட்டம் வருகிறது!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆபத்தான மசோதா ஒன்று அறிமுகமாக உள்ளது. விஸ்கிட் பாரத் சிக்‌ஷா அதிஷ்டான் சட்ட மசோதாதான் அது. முன்பே அது அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதுதான். இந்த கூட்டத் தொடரில் அது சட்டமாக்கப்படும் எனத் தெரிகிறது. அந்த சட்டமானால் இந்தியாவின் ஒட்டுமொத்த உயர்கல்வியும் ஒன்றிய அரசின் பிடிக்குள் சென்றுவிடும். 

இந்த மசோதா 2025 டிசம்பர் 15 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. உயர்கல்விக்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. விஸ்கிட் பாரத் சிக்‌ஷா அதிஷ்டான் என்ற இந்த அமைப்பு பின்வரும் அமைப்புகளுக்கு மாற்றாக அமையும்: (i) பல்கலைக்கழக மானியக் குழு (UGC), (ii) அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), மற்றும் (iii) தேசிய ஆசிரியர் கல்விக் குழு (NCTE). ஏற்கனவே இந்த அமைப்புகள் தொடர்பான சட்டங்களை இந்த சட்டம் ரத்து செய்துவிடும். சட்டம் மற்றும் மருத்துவக் கல்வியை இந்த சட்டத்தின்கீழ் வராது. அவற்றுக்குத் தனியே சட்டங்கள் உருவாக்கப்படும். 

பள்ளிக்கல்வியையும் உயர்கல்வியையும்  ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கு ஏற்ப வடிவமைப்பதே ஒன்றிய பாஜக அரசின் நோக்கம். அதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்துவருகிறது. 

இந்த விஸ்கிட் பாரத் … அமைப்பு நிறுவப்படுவதால் பின்வரும் கேடுகள் ஏற்படும்: 

1. இந்தித் திணிப்பு : 

புதிதாக அமைக்கப்படும் இந்த ஆணையத்தின் கீழுள்ள எந்தக் கவுன்சிலுக்கும் நிதியளிப்பதற்கான பொறுப்பு வழங்கப்படவில்லை. இந்த சட்டம், மானியங்கள் வழங்கும் பொறுப்பை கல்வி அமைச்சகத்திடம் (MoE) ஒப்படைக்கிறது. இதனால் மானிய ஒதுக்கீடென்பது அதிகாரத்துவமானதாகவும், தன்னிச்சையானதாகவும், அரசியல் கணக்கீடுகளுக்குட்பட்டதாகவும் மாறும். ஏற்கனவே இந்தியைப் பயிற்றுமொழியாக ஏற்காத மாநிலங்களுக்கு பள்ளிக் கல்விக்கான நிதியை பாஜக அரசு விடுவிக்க மறுத்துவருகிறது. இனி உயர்கல்விக்கும் அந்த கதிதான் ஏற்படும்.

2. இட ஒதுக்கீடு மறுப்பு : 

உயர்கல்வியென்பது அரசமைப்புச் சட்டத்தின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. அதை இந்த சட்டம் ஒன்றிய அரசின் அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்லும். ஆணையத்தின் 12 உறுப்பினர்களில் 10 பேர் நேரடியாக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டோ, அல்லது மத்திய அரசு பரிந்துரைக்கும் “நிபுணர்கள்” ஆகவோ இருப்பார்கள். நாட்டின் உயர்கல்வித் தரநிலைகள் மற்றும் தரத்தை நிர்ணயிக்க வேண்டிய அமைப்பில், ஆசிரியர்கள் இருவர் மட்டுமே இருப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநில உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இந்த இரு ஆசிரியர் பிரதிநிதிகளும் ‘ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவர்கள்’ என்பதால், அது அரசியல் நியமனங்களாக மாறும் அபாயம் உள்ளது. மேலும், ஆணையத்தின் அமைப்பு நாட்டின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கவில்லை; பட்டியல் சாதிகள் (SC), பட்டியல் பழங்குடிகள் (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC), பெண்கள், மாற்றுப்பாலினத்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் இதில் வழங்கப்படவில்லை.

3. மையப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை ஆட்சி:

அங்கீகாரம் வழங்குதல், படிநிலைத் தன்னாட்சி, நிறுவனங்களை மூட உத்தரவிடுதல் போன்ற ஒழுங்குமுறை விதிகள், உயர்கல்வியில் கடுமையாக மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை உருவாக்கும். இது ஆண்டுதோறும் தண்டனைமிகு கணக்காய்வு, நேரம்–வளங்கள் வீணாக்கம், ஆசிரியர்களுக்கான வேலைப் பாதுகாப்பு குறைதல், கட்டணங்களில் கடும் உயர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும்; மாணவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தேவையற்ற அலைச்சலையும் கவலையையும் உருவாக்கும். மேலும், VBSA சட்டம் முந்தைய அனைத்து சட்டங்களையும் மேலோங்கி நிறைவேற்றும் (overriding effect) என்பதால், நாட்டின் கூட்டாட்சித் (federal) தன்மைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

4. பன்முகத் தன்மையை முற்றிலும் புறக்கணித்தல்:

உயர்கல்வித் தரநிலைகளை நிர்ணயிப்பதில் ‘ஒரே அளவு அனைவருக்கும்’ (one size fits all) என்ற அணுகுமுறை ஒருபோதும் வெற்றி பெற முடியாது. நாட்டின் பல்வகைத் தன்மையையும், உயர்கல்வி கிராமப்புறங்கள் உட்பட பல சமூகப் பிரிவுகளுக்கு இன்னும் விரிவடைந்து கொண்டிருப்பதையும், சமூகநீதி நோக்குடன் சமூகப் பொறுப்புணர்வைக் கொண்ட ஒழுங்குபடுத்தும் தேவை இருப்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் HECI/VBSA அணுகுமுறை உயர்கல்வியை ஒருசிலருக்கானதாகச் சுருக்குவதையே நோக்கமாகக் கொண்டு, சமத்துவம்  குறித்த கேள்விகளை முழுமையாகப் புறக்கணிக்கிறது. பல ஆண்டுகளாக உட்கட்டமைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள ‘செயல்திறன் குறைவு’ என மதிப்பிடப்படும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களை மூடும் அபாயத்தை இது உருவாக்குகிறது.

5. நிறுவனத் தன்னாட்சிக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் அச்சுறுத்தல்:

VBSA சட்டம், உயர்கல்வி நிறுவனங்களின்  தன்னாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இந்த சட்டம் ஏற்படுத்தும் ஆணையம், ஒவ்வொரு தரநிலை ஒழுங்குமுறைக்கும் ஒன்றிய அரசின் முன்அனுமதி அவசியம் என்கிறது. இது ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) உள்ள கல்வியில் மாநில அரசுகளின் செல்வாக்கக் குறைப்பதோடு, மாநில அரசுகள் நடத்தும் பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்களை ஒன்றிய அரசின் ஆளும் கட்சியுடன் அரசியல் மோதலுக்குள் தள்ளும். மேலும், கருத்துச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், எதிர்ப்புக் கருத்துகள் ஆகியவற்றை ஒடுக்க ஒழுங்குமுறைகளை கருவியாகப் பயன்படுத்தும்.

6. NEP 2020 உருவாக்கிய நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்துதல்:

VBSA சட்டம், NEP 2020-ன் பார்வைக்கு இணங்க உள்ளது. நாடு முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே NEP-ன் சுமையால் திணறுகின்றன: உள்ளடக்கம் நீர்த்துப்போன பாடத்திட்டங்கள், CUET எனும் சிக்கலான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வால் தாமதமான சேர்க்கைகள் அதனால் காலியாக உள்ள இடங்கள், நான்கு ஆண்டு இளங்கலைப் பாடத்திட்டத்தில் கூடுதல் ஒரு ஆண்டு படிப்பு இருந்தும் மதிப்புச் சேர்க்கை இல்லாமை, சமநிலையற்ற பாடச்சுமையால் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் நியமனங்கள், கல்லூரி இணைப்புகள் மற்றும் HEFA கடன்கள் மூலம் பொதுநிதி வெட்டுக்கள், ஆராய்ச்சி துறையின் திறன் குறைதல் மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகைகள் குறைப்பு. இத்தகைய சூழலில் HECI/VBSA போன்ற இன்னொரு பேரழிவு சீர்திருத்தம் கொண்டு வரப்படுவது, 

இந்திய உயர்கல்வியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாக இந்த சட்டம் அமையும். இந்த சட்டத்தை நிறைவேற்றுவது மட்டுமின்றி கல்வியை முழுமையாக ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டப்படி மறுவார்ப்பு செய்வதற்காகவே திருமதி நிர்மலா சீதாராமன் கல்வி அமைச்சராக்கப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் அகற்றப்படுவது காக்ரோச் ஜன்தா பார்ட்டியின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடப்படலாம். ஆனால், புதிய அமைச்சர் நியமனம் வினாத்தாள் கசிவு உட்பட உயர்கல்வியின் எந்தவொரு சீர்கேட்டையும் தடுத்துவிடாது என்பதே உண்மை. 

வினாத்தாள் கசிவு முதலானவை உயர்கல்வியைப் பீடித்துள்ள நோயின் அறிகுறி மட்டும்தான். தேசிய கல்விக் கொள்கை ( NEP) என்பதுதான் நோய். அந்த நோயை ஒழிப்பதே நம் இலக்காக இருக்க வேண்டும். 

( 2026 மழைக்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் சட்ட மசோதாக்கள் குறித்து தொடர்ந்து எழுதவுள்ளேன். அதன் முதல் கட்டுரை இது)

( ரவிக்குமார் எம்.பி)

மின்னம்பலம்

https://minnambalam.com/higher-education-at-risk-if-vbsa-bill-becomes-law/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு