இன்னும் சுய பரிசோதனைக்கே தயாரில்லை இவர்கள்!
சாவித்திரி கண்ணன்
இன்னும் சுய பரிசோதனைக்கே தயாரில்லை இவர்கள்!
அப்பப்பா! எத்தனை விதமான கோபங்கள், பச்சதாபங்கள், வருத்தங்கள்..!
''திமுக கம்யூனிஸ்டுகளை அலட்சியப்படுத்திவிட்டது''
''புறக்கணித்துவிட்டது...''
''நம் மீது அவர்களுக்கு மரியாதை இல்லை.''
''கம்யூனிஸ்டுகளை கிள்ளுக் கீரையாக நினைகிறார்கள்.’’
இப்படியான சொல்லாடல்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன்....!
திமுக மீது இவ்வளவு கோபப்படுவதற்கு முன்பு உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்து கொண்டீர்களா? எனதன்புத் தோழர்களே…!
வலுவான சக்தியாக இருக்கின்ற ஒரு அரசியல் இயக்கத்தை எந்தப் பெரிய கட்சியும் அலட்சியப்படுத்தத் துணியாது.
புறக்கணிக்க முடியாத சக்தியாக கம்யூனிஸ்டுகள் இருந்திருக்கும் பட்சத்தில், புறந்தள்ளும் துணிவு அவர்களுக்கு இருக்குமா..?
திமுகவை குறித்து நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகளான அலட்சியம், புறக்கணிப்பு ...யாவையுமே நீங்கள் மக்கள் பிரச்சினைகளில் காட்டினீர்கள் அல்லவா?
ஆகவே, நீங்கள் போராடும் மக்களுக்கு மரியாதை தரவில்லை. போராடும் இயக்கங்களை கிள்ளுக் கீரையாக நினைக்கத் துணிந்தீர்கள்!
விளைவு.., யாருக்கு ஆதரவாக இத்தகு அணுகுமுறைகள் அனைத்தையும் நீங்கள் செய்தீர்களோ.., அவரே அதை திருப்பி உங்களுக்கு பரிசளித்துவிட்டார்.
மக்கள் விரோத பல சட்டங்களை, நகர்வுகளை திமுக அரசு செய்த போதெல்லாம் அந்த ஆட்சியை விட்டுக் கொடுக்காமல் நீங்கள் ஆதரித்த வகையில், உங்கள் அதரவுத் தளங்களில் கணிசமானவற்றை நீங்கள் இழந்து நிற்கிறீர்கள்..!
ஆம், ஐந்து வருட திமுக ஆட்சியோடு நீங்கள் செய்த ஒட்டுண்ணி அரசியலால் நீங்கள் மிகவும் மக்களிடம் அன்னியப்பட்டு பலவீனமாகிவிட்டதால், பலவீனமான உங்களை கிள்ளுக் கீரையாக நடத்தத் திமுக துணிந்தது.
சாம்சன் தொழிற் சங்கத்தை சட்டப்படி பதிவு செய்ய மறுத்ததும், இரவோடு இரவாக போராட்டப் பந்தலை பிய்த்தெரிந்து, நள்ளிரவு கைதுகளை நடத்தியதுமான ஒரு அரசோடு சமரசம் பேசி சமாதானம் ஆனீர்கள். அந்த நீண்ட நெடிய வீரஞ் செறிந்த போராட்டத்தால் சிறு கோரிக்கைகளைக் கூட வென்றேடுக்காமல் சமரசம் ஆனீர்கள். அதன் பிறகும் பழிவாங்கல் நடவடிக்கைகளில் இருந்து தொழிலாளர்களை காப்பாற்ற உத்திரவாதம் தந்த அரசு கைகளை உதறியது. அப்போதும் உங்களுக்கு அறச் சீற்றம் வரவில்லை.
தூய்மை பணியாளர்களை காண்ட்ராக்டர்களுக்கு மடை மாற்றம் செய்ததை எதிர்த்து ரிப்பன் மாளிகை எதிரே ஒரு உயிர்ப்பான போராட்டத்தை அவர்கள் நடத்திய போது, சி.ஐ.டியும், ஏஐடியுசியும் வெளியில் இருந்து ஆதரிக்கிறோம் என ஒதுங்கி நின்றது சரியா?
போராட்டம் ஒடுக்கப்பட்டதற்கு பின்பு வந்து காலம் தாழ்ந்து கை கொடுத்துப் பயன் என்ன?
செவிலியர்களின் உறுதிமிக்க போராட்டத்தை அரசு சிதைத்த போது கம்யூனிஸ்டுகள் அறிக்கை தந்து விட்டு, வேடிக்கை தானே பார்த்தீர்கள்!
பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு நடத்திய உறுதிமிக்க போராட்டம் ஆகியவற்றை அரசின் அதிகார எந்திரங்கள் உருக்குலையச் செய்த போது ஒன்றும் செய்யவில்லையே, நீங்கள்!
தொழிலாளர் விரோத சட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் திமுக அரசால் நடைமுறைப்படுத்தப்படுவதும் குறிப்பாக 12 மணி நேர வேலை நேரம் பட்டவர்த்தனமாக அமலாவதும் தெரிந்தும், தெரியாதது போல நீங்கள் பாசாங்கு காட்டுவது நியாயமா?
எதற்கெடுத்தாலும் 110 விதியின் கீழ் அவசர சட்டங்களை கொண்டு வந்து தொடர்ந்து அமல்படுத்திக் கொண்டிருந்த திமுக அரசை எள்ளளவேனும் உங்களால் எதிர்க்க முடிந்ததா?
கார்ப்பரேட்களுக்கு விவசாய நிலங்களை எடுத்து தரும் நில ஒருங்கிணைப்பு மசோதாவை நிறைவேற்றி அதிரடியாய் தமிழகம் முழுமையும் சுமார் 48,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்ட போது, மாவட்டங்கள் தோறும் போராடிய விவசாயிகளோடு உங்களால் களத்தில் நிற்க முடிந்ததா?
தேசிய கல்வி கொள்கையையே தமிழக கல்விக் கொள்கையாக்கி இங்கு அமல்படுத்தப்படுவதை எதிர்த்தீர்களா?
திமுக அரசால் போக்குவரத்துதுறை தனியார் மயமாக்கப்படுவதை தடுக்க முடிந்ததா?
அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அலட்சியப்படுத்தி, துரோகம் இழைத்த திமுக அரசை தோலூரிக்க மறுத்து, இறுதி வரை தோழமை பாராட்டினீர்களே.. எப்படி?
தீக்கதிரும், ஜனசக்தியும் முரசொலியாய் மாறியது.. கடும் விமர்சனத்திற்கு ஆளான போதும் கண்டுகொள்ளவே இல்லையே!
தேர்தல் கூட்டணியை தேர்தல் முடிந்தவுடன் முடிவுக்கு கொண்டு வந்து அடுத்த நாளில் இருந்தே மக்கள் நலன் சார்ந்து பேசிய தோழர் சங்கரய்யா,ப.மாணிக்கம் காலத்து இடதுசாரி இயக்கங்கள் தொலைந்து போனது எப்படி?
இப்போதும் அவகாசம் இருக்கிறது. கொடுக்கப்பட்ட தொகுதிகளை திருப்பியளித்து விடுதலையடையுங்கள்!
இடதுசாரிகளுக்கு மக்கள் மன்றம் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியம் காத்திருக்கிறது…!
சாவித்திரி கண்ணன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு