இந்தியாவின் முக்கிய கனிமங்களுக்கான செயல்திட்டத்தை மாற்றியமைத்தல்
வெண்பா
2026 ஏப்ரலில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, கனிமங்களுக்கான புதிய செயல்திட்டத்தை அறிவித்தார். பிரேசில் இனி கனிமப் பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு மட்டும் திருப்தி அடையாது, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் மதிப்பு கூட்டு நடவடிக்கைகளுக்கான கூட்டணிகளை நாடும் என்றும் கூறினார். 2026 பிப்ரவரியில், இந்தியா பிரேசில் மற்றும் பிரான்சுடன் முக்கிய கனிமங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டது, ஏப்ரல் மாதம் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் 'பாக்ஸ் சிலிகா' (Pax Silica) திட்டத்தில் இணைந்தது. இவை, உறுப்பு நாடுகள் லித்தியம், அருமண் தனிமங்கள், கோபால்ட், காலியம் போன்றவற்றின் பயன்பாட்டை எவ்வாறு நிர்ணயம் செய்கின்றன என்பதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன: ஒரு ஒப்பந்தத்தை முடிக்க சுரங்க உரிமைகள் மட்டுமே இனி போதுமானதாக இருக்காது; இப்போது சுத்திகரிப்பு தொழில்நுட்பம், கொள்முதல் உத்தரவாதங்களையும் வழங்க வேண்டும்.
இந்த மாறிவரும் சூழல் இந்தியாவிற்கு முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், இந்தியா தேசிய முக்கிய கனிம இயக்கம் (NCMM), சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2025, அருமண் காந்தங்கள் (REPM) திட்டம், தேசிய முக்கிய கனிம இருப்பு, பட்ஜெட் 2026-27-இல் அறிவிக்கப்பட்ட அருமண் வழித்தடங்கள் (Rare Earth Corridors) ஆகியவற்றை உள்ளடக்கியதொரு கொள்கையை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் ஒரே சங்கிலியால் பிணைக்கப்படுகின்றன, இருப்பினும், தாதுப்பொருட்களை தொழில்துறைக்குத் தேவையான தூய ஆக்சைடுகள், உலோகக் கலவைகள், காந்தங்களாக மாற்றுவதற்கான பகுப்பு, சுத்திகரிப்பு, உருக்கு போன்ற இடைநிலை துறையில் இடைவெளி உள்ளது.
முக்கிய கனிம பயன்பாடானது, சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தின் மீதான கட்டுப்பாட்டின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது என்ற நிலையிலிருந்துதான் இந்தியாவின் கொள்கை உருவாகியுள்ளது. சுரங்கம், சுத்திகரிப்பு, உற்பத்தி ஆகியவற்றில் சீனாவின் ஆதிக்கம் – அதன் மூலம் புவிசார் அரசியல் செல்வாக்காகப் பயன்படுத்த முயலும் அதன் நோக்கம் - இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நாடுகளில் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. கனிமச் சுத்திகரிப்பில் சீனாவின் பிடி, பரந்த உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: இடைநிலைத் துறையின் மீதான கட்டுப்பாடு என்பது மூலப்பொருளுக்கான அணுகலை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இந்தப் பின்னணியில்தான் இந்தியா விரிவானதொரு முக்கிய கனிமங்களுக்கான செயல்திட்டத்தை உருவாக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கொள்கைக் கட்டமைப்பு
2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவின் கொள்கை பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக நகர்ந்துள்ளது. தேசிய முக்கிய கனிம இயக்கம், ஜனவரி 2025-இல் ₹16,300 கோடி செலவிலும், பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடாக ₹18,000 கோடியிலும் தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 21, 2025ல் அறிவிக்கப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2025, ஏல முறையை திருத்தியது, கூடுதல் ராயல்டி இன்றி ஏற்கனவே உள்ள குத்தைகளுடன் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களைச் எடுக்க அனுமதித்தது, NMEDT வரியை ராயல்டியில் இரண்டு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாக உயர்த்தியது, மின்னணு கனிம பரிமாற்றங்களுக்கான சட்டரீதியான கட்டமைப்பை உருவாக்கியது.
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சுரங்க அமைச்சகம் 6 முறை 46 முக்கிய கனிமத் தொகுதிகளை ஏலம் விட்டது, இதில் அருமண் தனிமங்களைக் கொண்ட ஏழு சுரங்கங்களும் அடங்கும். அக்டோபர் 2025-இல் அரசாங்கம் தேசிய முக்கிய கனிம இருப்பை அறிவித்தது, இதில் இரண்டு மாத அருமண் இருப்பு மற்றும் ₹500 கோடி ஆரம்பவிலையை அறிவித்தது. நவம்பர் மாதம், அமைச்சரவை 7,280 கோடி ரூபாய் செலவில், ஐந்து அலகுகளில் ஆண்டுக்கு 6,000 டன்கள் இலக்காகக் கொண்டு, சின்டர்டு அருமண் காந்தங்கள் (REPM) உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. 2026–27 மத்திய பட்ஜெட்டில் ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாட்டில் பிரத்யேக அருமண் வழித்தடங்களை அறிமுகப்படுத்தியது, மோனாசைட் மீதான சுங்க வரியை அடியோடு நீக்கியதோடு முக்கிய கனிமச் சுத்திகரிப்புக்கான மூலதனப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்தது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இவை ஆய்வு, ஏலம் விடுவது முதல் நிதியுதவி மற்றும் இருப்பு வைத்தல் வரை கொள்கை ரீதியான அனைத்து இணைப்பையும் உள்ளடக்கியது. இருப்பினும் அதே கட்டமைப்புப் பற்றாக்குறை மீண்டும் தொடர்கிறது. REPM திட்டம் காந்த உற்பத்தியின் இறுதி நிலைக்கு மட்டுமே நிதியளிக்கிறது. அருமண் வழித்தடங்கள் ஒருங்கிணைந்த சுரங்கம் முதல் உற்பத்தி வரையிலான தொகுப்புகளாகச் செயல்படும் நோக்கம் கொண்டவை, ஆனால் அவற்றுக்குத் தேவையான இடைநிலைத் துறையான பகுப்பு மற்றும் சுத்திகரிப்பு வசதிகளுக்கான செயல்பாட்டுத் திட்டம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. உள்நாட்டு சுத்திகரிப்புத் திறன் IREL-க்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, இது பழைய கட்டமைப்புகளைக் கொண்டு குறைந்த அளவிலான அருமண் குளோரைடுகள் மற்றும் ஆக்சைடுகளை மட்டுமே தயாரிக்கிறது. 80% முதல் 90% சதவீத அளவிலான - மேம்பட்ட பகுப்பு, உலோகமாக்கல் (metallisation) போன்றவை நாட்டிற்கு வெளியிலேயே உள்ளன, அவற்றில் சீனாவின் அறிவுசார் சொத்துரிமை (IP) ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்தியா தனது தேவைக்கான 4,000 முதல் 5,000 டன்கள் வரையிலான அருமண் காந்தங்கள் அனைத்தையும் இறங்குமதியே செய்கிறது.
உள்நாட்டு வளக்குவியல் தாராளமாகவே உள்ளது. இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் கேரளாவின் கடலோரப் பகுதிகளில் உள்ள 13.15 மில்லியன் டன் மோனாசைட்டில் 7.23 மில்லியன் டன் அருமண் ஆக்சைடுகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்ட 5.9 மில்லியன் டன் லித்தியம் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இருப்புகளை வர்த்தககமாக மாற்றுவதானது உள்நாட்டுச் சுரங்கங்களை மட்டுமல்லாமல் அந்நிய ஒப்பந்தங்களையும் சார்ந்துள்ளது.
ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டணிகள்
இந்தியாவின் இருதரப்பு கனிம ஒப்பந்தங்கள் கணிசமாக விரிவடைந்துள்ளன. KABIL நிறுவனம் அர்ஜென்டினாவில் ஐந்து லித்தியம் சுரங்கங்களைக் கொண்டுள்ளது, மேலும் உலகின் மிகப்பெரிய லித்தியம் இருப்பைக் கொண்டுள்ள சிலியுடன் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உள்ளது. 2026 பிப்ரவரியில் பிரேசிலுடனான இந்தியாவின் ஒப்பந்தம் தென் அமெரிக்க நாடுகளுடனான இரண்டாவது ஒப்பந்தமாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுடனான ஒப்பந்தம் இந்தியாவுக்குத் தேவையானவற்றுடன் நெருங்கி உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா முக்கிய கனிம முதலீட்டு ஒப்பந்தமானது மவுண்ட் ஹாலண்ட் மற்றும் ஆண்டோவர் லித்தியம் திட்டங்களில் 20 சதவீத பங்குகள் உட்பட சுமார் 600 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஐந்து திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அதன் தொழில்நுட்பப் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி, சுத்திகரிப்பு போன்றவை வெறும் கொள்முதல் ஒப்பந்தங்களால் வழங்க முடியாத தொழில்முறை அனுபவத்தை வழங்குகின்றன.
இரண்டு மாற்றங்கள் மேலும் கவனத்திற்குரியவை. இந்தியாவும் பிரான்சும் ஆய்வு, சுத்திகரிப்பு, மறுசுழற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய கனிமங்கள் குறித்த கூட்டு திட்டத்தில் கையெழுத்திட்டன. உறவை சிறப்பானதொரு உலகளாவிய செயல்திட்ட கூட்டணியாக மேம்படுத்தின. இதற்கிடையில்தான், இந்தியாவும் அமெரிக்காவும் மேம்பட்ட உற்பத்தி, தூய்மையான ஆற்றல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான விநியோகச் சங்கிலிகளை உள்ளடக்கிய இருதரப்பு முக்கிய கனிம ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தியா கையெழுத்திட்ட மிக முக்கியமான இருதரப்பு கனிம ஒப்பந்தமாக இது இருக்கும்.
பன்முகச் சூழல்
பன்முகச் சூழல் மாறியுள்ளது. ஏற்கெனவே இந்தியா முக்கிய கனிமப் பாதுகாப்பு கூட்டணியில் (MSP) உறுப்பினராகியுள்ளது, இது 2026 பிப்ரவரியில் வளங்களுக்கான புவிசார் மூலோபாய கூட்டணியாக (FORGE) மாற்றப்பட்டது. டிசம்பர் 2025-இல் இந்தியா உட்பட 13 நாடுகளுடன் தொடங்கப்பட்ட 'பாக்ஸ் சிலிகா', கனிம பயன்பாட்டை AI சகாப்தத்திற்கான பரந்த தொழில்நுட்பக் கட்டமைப்பின் பகுதியாகக் கருதுகிறது - இது ஆற்றல், மேம்பட்ட உற்பத்தி, குறைக்கடத்திகள், கணினி ஆகியவற்றை உள்ளடக்கியது. குவாட் கூட்டமைப்பானது முக்கிய கனிமங்களுக்கான இந்தோ-பசிபிக் விநியோகச் சங்கிலியின் முக்கிய தூணாகத் தொடர்கிறது.
இந்த கூட்டமைப்புகளின் முக்கியத்துவம் அவை திரட்டும் நிதியில் மட்டுமல்ல, அவை உருவாக்கவிருக்கும் தரநிலைகளிலும் உள்ளது. இங்குதான் ESG அளவுகோல்கள், கண்டுபிடிப்புகள், சுத்திகரிப்பு முன்னுரிமைகள் மற்றும் "நம்பகமான" வர்த்தகச் சங்கிலி போன்றவை தீர்மானிக்கப்படுகின்றன. இந்திய நிறுவனங்கள் இறுதியில் கடைபிடிக்க வேண்டிய விதிகள் அதில் பங்கெடுத்துதான் உருவாக்கப்படுகின்றன.
இடைவெளி எங்கே உள்ளது: மூன்று பரிந்துரைகள்
முதலாவதாக, இடைநிலைத் துறை போதிய முதலீடு இன்றி உள்ளது. REPM திட்டம் இறுதி காந்த நிலைக்குதான் நிதியளிக்கிறது, அதே நேரத்தில் அருமண் வழித்தடங்கள் மற்றும் சுங்க வரிச் சலுகைகளானவை தாதுக்களின் தொகுப்புகளைக் கையாளுகின்றன. எதுவுமே பிரிப்பு, சுத்திகரிப்பு மற்றும் உலோகமாக்கல் ஆகியவற்றில் நேரடியாக முதலீடு செய்யவில்லை - இந்த நிலைகளில்தான் சீனாவின் கட்டுப்பாடு மிகவும் வலுவாக உள்ளதோடு அதன் அறிவுசார் சொத்துரிமைத் தடைகளும் அதிகமாக உள்ளன. அதி தூய அருமண் ஆக்சைடுகள் மற்றும் உலோகங்களின் வர்த்தகத்துடன் இணைக்கப்பட்டதொரு இடைநிலை உற்பத்திதான் உள்நாட்டு அளவிலான தடையை நேரடியாகத் தீர்க்கும். வணிக ரீதியான பகுப்புப் நிறுவனங்களை இயக்கும் ஆஸ்திரேலிய, பிரஞ்சு மற்றும் ஜப்பானிய சுத்திகரிப்பு நிறுவன்ங்களிடம் இந்தத் தொழில்நுட்ப அறிவு உள்ளது, மேலும் இந்தியாவின் தற்போதைய கூட்டாண்மைகள் அதைப் பெறுவதற்கான நடைமுறை வழியை வழங்குகின்றன.
இரண்டாவதாக, இந்தியாவின் இருதரப்பு கனிம ஒப்பந்தங்கள் திறனை விட பயன்பாட்டை நோக்கியே சாய்ந்துள்ளன. 2024 முதல் ஆஸ்திரேலியவுடனான ஒப்பந்தம் மட்டுமே உண்மையான ஒப்பந்தமாக செயல்படுகிறது; மற்றவை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அல்லது கூட்டுப் பிரகடனங்கள் ஆகும், அவை தொழில்நுட்பப் பரிமாற்றம், கூட்டுச் சுத்திகரிப்பு வசதிகள் அல்லது இடைநிலை உள்கட்டமைப்பில் கூட்டு முதலீடு ஆகியவற்றுக்கான அமலாக்கத்தக்க விதிகளை இன்னும் இணைக்கவில்லை. செயல்பாட்டு விதிமுறைகள் - உள்ளூர் சுத்திகரிப்பு வரம்புகள், அறிவுசார் சொத்துரிமை-பகிர்வு ஏற்பாடுகள் மற்றும் கூட்டு கட்டமைப்புகள் போன்றவை இந்திய அரசின் பிரேசில் மற்றும் பிரான்ஸ் ஒப்பந்தங்களின் தொடர்ச்சிக்கும், நடந்து வரும் அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளுக்கும் மையமாக இருக்கும். கனிம பயன்பாட்டை குறைக்கடத்தி மற்றும் AI விநியோகச் சங்கிலிகளுடன் இணைக்கும் 'பாக்ஸ் சிலிகா' திட்டம், இந்த நிபந்தனைகளை முன்னெடுப்பதற்கான தளத்தை வழங்குகிறது.
மூன்றாவதாக, அருமண் வழித்தடங்களைச் செயல்படுத்துவது - நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதிகள், மத்திய-மாநில ராயல்டி பகிர்வு, மோனாசைட் படிமங்களிலிருந்து வெளிவரும் கதிரியக்கக் கழிவுகளைக் கையாளுதல் ஆகியவற்றை நிர்வகிக்கும் தெளிவான கட்டமைப்புகளுடன் இருக்க வேண்டும். இவை இல்லையென்றால், அவ்வழித்தடங்கள் செயல்படும் தொழில்துறை தொகுப்புகளாக மாறுவதற்குப் பதிலாக ஏட்டளவிலான பட்ஜெட் அறிக்கையாக மாறும் நிலையே உள்ளது. MMDR சட்டத்தின் கீழ் முக்கிய மற்றும் மூலோபாய கனிமங்களுக்கான ஒரு பிரத்யேக அத்தியாயம், நீண்ட குத்தகைக்காலம், குத்தகை பரப்பளவைப் பொருட்படுத்தாமல் விரைவான மத்திய அனுமதிகள் மற்றும் சுத்திகரிப்பை ஊக்குவிக்கும் விதமான ராயல்டிகளை வழங்குவது ஆகியவை உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும்.
முடிவுரை: கட்டமைப்பிலிருந்து ஒழுங்குமுறைக்கு
இந்தியாவின் முக்கிய கனிமக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் – கனிமவளச் சட்ட திருத்தம் முதல் அருமண் காந்த திட்டம், அருமண் வழித்தடங்கள், முக்கிய கனிம இருப்பு, பாக்ஸ் சிலிகா திட்டம் மற்றும் பிரேசில், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தங்கள் வரை - ஒரு சீரான திசையில் நகர்கின்றன. விடுபட்டுள்ளது என்னவென்றால், பிணைக்கப்பட்ட இடைநிலைத் துறைத் தடையைச் சுற்றியுள்ள ஒழுங்கமைப்பு ஆகும். தொழில்நுட்பப் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட பிரத்யேக மானியங்கள் மற்றும் ஒப்பந்த விதிமுறைகளின் ஆதரவுடன், பகுப்பு, சுத்திகரிப்பு மற்றும் உலோகமாக்கல் ஆகியவை உள்நாட்டிற்குள் தொடங்கப்படும் வரை, இந்தியா மதிப்புச் சங்கிலியின் விளிம்புகளில் இருந்துகொண்டே சுரங்கம் தோண்டும், இருப்பு வைக்கும், சேகரிக்கும். இந்தியாவின் கொள்கை சங்கிலிதொடரைப் போல தோன்றினாலும், இன்னும் முழுமையாக பிணைக்கப்படவில்லை.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.orfonline.org/expert-speak/closing-the-midstream-gap-in-india-s-critical-minerals-strategy
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு