திரிணமுல் –பாஜக என்ற இரு துருவ அரசியலால் மேற்கு வங்கம் அல்லோகலப்படுகிறது
சாவித்திரி கண்ணன்
நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது.
திரிணமுல் –பாஜக என்ற இரு துருவ அரசியலால் மேற்கு வங்கம் அல்லோகலப்படுகிறது.
முதல் 20 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரசும், அடுத்து 34 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இடதுசாரிகளும் இன்று இளைத்து போய் ஒரிரு சதவிகித ஓட்டு வங்கிக் கட்சிகளாய் காட்சியளிக்கும் அவல நிலையில் உள்ளன.
15 ஆண்டுகளாக மூன்று முறை தொடர்ந்து இங்கு கோலோச்சும் மம்தா பானர்ஜியை வீழ்த்த பாஜக பெரும் பலத்தை பிரயோகிக்கிறது. மக்கள் செல்வாக்கு மம்தாவிற்கு இருந்தாலும், வாக்காளர்கள் லிஸ்ட், மத்திய அதிகார பலம் நெருக்கடிகளை கடந்து மம்தா வெல்வாரா? என்பது தான் கேள்வி.
பாஜகவின் வளர்ச்சி வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை தான்!
கால் நூற்றாண்டுக்கு முன்பு (2001ல்) ஒரு சதவிகித வாக்கு வங்கி கூட இல்லாத கட்சியாகத் தான் பாஜக மேற்கு வங்கத்தில் காணாமல் கிடந்தது. அப்போது சிபிஎம், காங்கிரஸ் ஆகியவை மிகப் பெரிய கட்சியாகவும் திரிணமுல் காங்கிரஸ் வளர்ந்து வரும் கட்சியாகவுமே இருந்தன.
2006 தேர்தலில் பாஜகவுடன் முதன் முதலாக உறவு வைத்த மம்தா அவர்களின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இதில் மம்தாவின் கருணையால் 29 இடங்களில் நின்று அனைத்திலும் தோற்று 1.93 சதவிகித வாக்குகளை பெற்று மேற்கு வங்கத்தில் தன் கால்களை பதிக்கிறது பாஜக.
அந்த ஒரே ஒரு வாய்ப்பை பயன்படுத்தி வரம் கொடுத்த சாமி தலையிலேயே கை வைக்கும் அசூர சக்தியாக பரிமளித்து, தற்போது பாஜக மம்தாவை அச்சுறுத்தி கொண்டுள்ளது!
2011லேயே , பாஜகவோ, ஆர்.எஸ்.எஸ் கேடர்கள் பலத்துடன் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் நின்று அனைத்திலும் தோற்றாலும் தன் வாக்கு வங்கியை 4.8 சதவிகிதமாக உயர்த்திக் கொள்கிறது.
2016 தேர்தலில் பாஜக வெறும் முன்றே தொகுதிகளில் வென்றாலும், தன் வாக்கு வங்கியை 10 சதவிகிதமாக்கிக் கொள்கிறது. அப்போது முதல் அது ஆள் தூக்கி அரசியலை பட்டவர்த்தனமாக செய்தது. கம்யூனிஸ்டு கட்சியில் இருந்த பல பார்ப்பன தலைவர்கள் பாஜகவில் சேர்ந்தனர். திரிணமுல் காங்கிரசில் மம்தாவின் நெருக்கமான சகாக்களையும் தூக்கத் தொடங்கியது.
2021 ல் மேற்கு வங்கத்தில் பாஜக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. இந்த தேர்தலில் பாஜக 77 சட்ட சபைத் தொகுதிகளை வென்று தன் வாக்கு வங்கியை 38.4சதவிகிதமாக உயர்த்தியது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் 12 எம்.பிக்களை பெற்று வாக்கு வங்கியை 39 சதவிகிதமாக்கிக் கொண்டுள்ளது.
சிறுத்து போன சிபிஎம்! கரைந்து போன காங்கிரஸ்!
மாநில மக்கள் உணர்வுகளை சரியாக மதிப்பிட முடியாத தேசிய கட்சிகளான காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் தங்களின் 35 முதல் 40 சதவிகிதமான மிகப் பெரிய வாக்கு வங்கியை முதலில் மம்தாவின் திரிணமுல்லிடம் சிறுகச் சிறுக பறி கொடுத்தன.
பிறகு, பாஜகவிடம் படுவேகமாகப் பறி கொடுத்தனர்.
2011ல் சிபிஎம்மின் வாக்கு வங்கி 30 சதவிகிதமாக சரிந்து வெறும் நாற்பதே இடங்களை பெற்றது. காங்கிராசோ 42 இடங்களை பெற்று வாக்கு வங்கியை 9.1 சதவிகிதமாக சரித்துக் கொண்டது. இன்றைய நிலவரப்படி காங்கிரஸ் 3 முதல் 4 சதவிகித வாக்கு வங்கியும், சிபிஎம் ஒன்றரை சதவிகித வாக்கு வங்கியுமாக உள்ளன.
2021 தேர்தலில் காங்கிரஸ் ஓரிடமாவது பெற்றது. சி.பி.எம்மோ ஒன்றைக் கூட பெற முடியவில்லை.
திரிணமுல் காங்கிரசின் தில்லான வளர்ச்சி;
மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியில் உருவானவர். அந்தக் கட்சியில் பிரணாப் முகர்ஜியைக் கடந்து மம்தா ஒரு போதும் முக்கியத்துவம் பெற முடியாது என்ற நிலையிலிலும், மாநில பிரச்சினைகளில் காங்கிரஸ் காட்டும் மெத்தன போக்கு பிடிக்காமலும் தனியே கட்சி கண்டார். அப்போது மிருக பலத்தில் இருந்த இடதுசாரிகளை எதிர்க்க காங்கிரசுடன் கூட்டணி வைத்து களம் கண்டார். சிங்கூர், நந்தி கிராமம் பிரச்சினைகளில் மக்களின் குரலாக மம்தா மாறினார். அவர் தனிப் பெரும் சக்தியாக வளர்வதைக் கண்ட பாஜக அவருக்கு வலிந்து ஆதரவு தந்தது.
இன்றோ, தன் சகலவிதமான சதி திட்டங்களுடன் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்த மல்லுக்கட்டுகிறது பாஜக! என்றாலும் கூட, 2021 தேர்தலில் கூட தனித்து நின்று தன் வாக்கு வங்கியை 48.5 சதவிகிதமாக உயர்த்தி மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 216-ல் வெற்றி கண்டவர் தான் மம்தா.
கிட்டத்தட்ட 31 சதவிகித வாக்கு வங்கி கொண்ட இஸ்லாமியர்களில் கணிசமானோர் திரிணமுல் காங்கிரசை ஆதரிக்கிறார்கள். வங்க தேசத்தில் இருந்து வரும் ஊடுருவலை மம்தா ஊக்குவிப்பதாக பொய் பிரச்சாரத்தை பாஜக கட்டவிழ்த்துவிட்டுள்ள போதிலும், இதை அதனால் இன்று வரை நிரூபிக்க முடியவில்லை.
பாஜகவானது மேற்கு வங்கத்திற்கு எதிரான வட இந்திய கலாச்சாரத்தை திணிக்கிறது. மதவெறியைத் தூண்டுகிறது. வேற்று மாநிலத் தலைவர்களை மேற்கு வங்கத்தில் இறக்குமதி செய்கிறது. தேர்தல் ஆணையத் தில்லுமுல்லுகளின் வழியே வெற்றி இலக்கை குறுக்கு வழியில் அடையத் துடிக்கிறது என்பதை மேற்கு வங்க மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் முன்னதாக 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியது. அடுத்ததாக தற்போது எந்த வெளிப்படைத் தன்மையும் இன்றி 7 லட்சம் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளது! இத்தகைய குயுக்திகளை செய்தேனும், வெற்றிக் கோட்டை தொட்டுவிடுவதென பகிரதபிரயத்தனம் செய்கிறது பாஜக.
இத்தனை இன்னல்களையும் எதிர்கொண்டு, மம்தா சளைக்காமல் மாநில மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க தீவிரமாக களம் கண்டுள்ளார். அனைத்து தேர்தல் கருத்து கணிப்புகளும் திரிணமுல் காங்கிரசே நான்காவது முறையும் அரியணை ஏறும் என்கிறது. ஆனால், திரிணமுல்லின் வெற்றி என்பது தேர்தல் நேர்மையாக நடைபெறும் பட்சத்தில் தான் சாத்தியமாகும்.
இங்கு தேர்தல் தில்லுமுல்லுகளை செய்து பாஜக அரியணை ஏற முயன்றால், அதை களத்தில் தீப்பிழம்பாக எதிர்கொண்டு மோதும் திரிணமுல் என்பது சர்வ நிச்சயம்.
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/share/1Bk8PLCh3z/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு