தவெகவில் சி. மகேந்திரன் - சிபிஐ-ன் தாராளவாதம்
துரை. சண்முகம்
சி . மகேந்திரன் தவெக வில் இணைந்ததை ஒட்டி இணையம் முழுக்க அவருக்கு தர்ம அடி விழுந்து கொண்டிருக்கிறது.
கும்பலாக சேர்ந்து அடிக்கும் போது கூட்டத்தில் நாமும் ரெண்டு அடி போடுவோம் ! எனும் பழக்கத்தில் சிபிஐ கட்சியில் இருப்பவர்கள் ஆதரிப்பவர்கள் அனைவரும் சேர்ந்து புனித கல் எறிந்து கொண்டிருக்கிறார்கள்.
வெளியில் இருந்து ஆதரவு என்று தவெக அரசு அமைப்பதற்கே ஆதரவு கொடுத்த கட்சியை சேர்ந்தவர்கள் அதற்குத் தக தரும் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முறைக்கான வியாக்கியானங்கள் மேல் இத்தகைய தர்மடி விழவில்லை., தனிநபராக உள்ளுக்குள்ளேயே பாய்ந்து விட்டதால்
மகேந்திரனுக்கு மண்டகப்படி.
பனையூர் இணைப்பு விழாவில் ஆதவ் அர்ஜுனா ஒரு தகவலை சொல்கிறார்,
" நாங்கள் எந்த காலத்திலும் நன்றியோடு இருக்க வேண்டுமென்றால் அது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத்தான்!
நாங்கள் ஆட்சி அமைக்க எந்த பலனையும் எதிர்பார்க்காமல் ஆதரவு கொடுத்தார்கள்!
ஒரு பத்து நாட்களுக்கு முன்பே தோழர் மகேந்திரன் அவர்கள் இளைஞர்களை கொண்ட உங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என நினைக்கிறேன் அதே நேரத்தில் நான் எனது கம்யூனிச படி இருப்பேன்! சிவப்பு துண்டோடு இருப்பேன்! என்றெல்லாம் சொன்னார்.
நான் சிபிஐ கட்சி தலைவர் தோழர் வீரபாண்டியன் அவர்களிடம் இந்த விவரங்களை சொல்லி தோழர் இப்படி நினைக்கிறார்! என்ன செய்வது என்று பேசிய போது,
கட்சியில் இணைவது அவர் விருப்பம் சேர்த்துக் கொள்வது உங்கள் விருப்பம்! நாங்கள் தடையாக இருக்க மாட்டோம்! இது ஒரு ஜனநாயக கட்சி தாராளமாக தோழரை ஏற்றுக் கொள்ளுங்கள்! "
என்று சொன்னதாக பேசுகிறார்.
தங்கள் கட்சிக்கான தாராள வாதத்தில் சி. மகேந்திரன் அவர்களுக்கும் தாராளமாக பங்கு வைக்கும் கட்சி செயலாளருக்கு
இந்த தர்ம அடியை கொடுப்பார்களா கொள்கை வீரர்கள்?
தொடக்க காலத்தில் இருந்து இந்திய ஆளும்வர்க்க கட்சிகள் முதலாளித்துவ கட்சிகளிடம் சமரசவாத அரசியல் கண்ணோட்டத்தில் அணுகி அணுகி தங்களுடைய அணிகள் உட்பட அனைவரையும் எந்த நேரத்திலும் முதலாளித்துவ கட்சிகளிளில் உள்ள ஏதாவது ஒரு முற்போக்கு அம்சங்கள் கிடைத்தால் தாவி விடுவதற்கு தக கிளைகளை பரப்பி நிற்பதுதான் இந்திய பொதுவுடமைக் கட்சிகள் இயக்கங்களின் வரலாறாக இருக்கிறது.
தமிழினத் தலைவர் கலைஞர்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா
இப்படி யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி எனும் பெயரில் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் அணுக்கமாக இணங்கி அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ற ஜனநாயக வாதங்கள் பேசி மாற்றான் வர்க்கத்து மல்லிகைப்பூவுக்கு நாராக கிழிந்து தொங்கும் போது, இதில் மகேந்திரர்கள் பொங்கி வழியாமல்
மார்க்சா பூத்துக் குலுங்குவார்?
இந்நேரம் இவர் திமுகவில் சேர்ந்திருந்தால் இந்த தர்ம அடி விழாது! ஏனென்றால் அது கார்ப்பரேட் கட்சியாக மாறிவிட்டாலும் கடந்த கால முற்போக்கு வசனங்களில் எடைக்கு எடை ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் வழங்கப்படும்.
போலி கம்யூனிஸ்டுகள் என தேர்தல் கம்யூனிஸ்டுகளை போட்டு வாங்கிவிட்டு, அசல் திமுக தம்பிகளே நாணும் அளவுக்கு கோணிக்கொண்டு போன மார்க்சிய லெனினிய 'புரட்சியாளர்களை' எல்லாம் பார்க்கும்போது மகேந்திரன் விஜய் கட்சிக்கு போனதுதான் அதிர்ச்சி தருகிறது என்பது போல புரட்சி பேசுவது பாசாங்கு!
ஏதோ சி. மகேந்திரன் அவர்கள் இந்த நிலைப்பாட்டிற்கு முன்பு மார்க்சிய லெனினிய சித்தாந்த கண்ணோட்டப்படி அரசியல் பேசிக் கொண்டு இருந்தவர் போலவும், இப்போதுதான் தடம் மாறிவிட்டார் என்று வரையறுப்பதும் அரசியல் சந்தர்ப்பவாதத்தில் நீட்சிதான்.
சிவப்பு கொள்கையை விட்டது இங்கு பிரச்சனை இல்லை. சிவப்பு துண்டை அவர் விடாததுதான் பிரச்சனை போலும்.
அவர் மட்டுமல்ல தோழர் நல்லகண்ணுவை பல விசயங்களில் நீங்கள் பரிசீலிக்க ஆரம்பித்தால் " எல்லோருக்கும் நல்லவர்" என்பதைத் தவிர
மார்க்சிய லெனினிய அரசியல் நிலைப்பாட்டில் ஊன்றி நின்றவர் என்று வரையறுக்க முடியாது. அவருடைய சீடப்பிள்ளையாக துணை நின்றவர்தான் தோழர் சி. மகேந்திரன். தோழர் நல்லகண்ணுவின் எளிமை பிராண்டு வாதம் பிற முதலாளித்துவக் கட்சிகள் அந்த செல்வாக்கில் இணங்கிய சூழல்,
கட்சியின் செல்வாக்குக்கும் பயன்பட்டதால் அவர் நல்லவராகவே அமைந்துவிட்டார்.
ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணி வைக்க போயஸ் வாசலில் இன்று பனையூர் வாசலில் நின்ற மகேந்திரனை போல இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நின்ற போது,
புதிய கலாச்சாரம் இதழில் "உங்களிடம் பேச இனி என்ன இருக்கிறது தோழர்களே?" என்று ஒரு கவிதை எழுதினேன்.
அது தினமணியில் பிரசுரமாகி
மீண்டும் முரசொலியில் பிரசுரமானது.
அப்போது கடுப்பாகி கம்யூனிஸ்டுகளின் தியாகம் தெரியுமா? எழுதியவனின் நாக்கை வெட்டு என்கிற ரேஞ்சுக்கு எழுதி விசுவாசத்தை காட்டினார்கள் சில தோழர்கள்.
இன்று இவர்கள் காட்டிய வழியில்
முற்போக்கை தேடி தவெக பக்கம் பாய்ந்திருக்கிற மகேந்திரனை ரவுண்டு கட்டுகிறார்கள். அறிவாலயத்தை சிலாகிக்கிற தோழர் முத்தரசன் இன்னும் தோழராகவே வாழமுடியும். அது ஒரு இடதுசாரி பாக்கியம்!
மார்க்சியம் லெனினியம் அதன் வர்க்கப் பார்வை என்பதை எல்லாம் விட்டு நாள் ஆச்சு.
முழுக்க முழுக்க முதலாளித்துவ சீர்திருத்தவாதம் பெரியாரியம் அம்பேத்கரியம் காந்தியம் எனும் பெயரில் கலக்கப்படும் ஒரு மண்டல வைத்தியத்தில் மகேந்திர விளைவுகளையே பார்க்க முடியும்.
இன்று நீ! நாளை நான்! எனும் அணி வரிசைகள் முதலாளித்துவ கட்சிகளை நோக்கி தொடரலாம்.
இதற்கான அடிப்படைகளைக் கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்துக்கொண்டு
மனிதன் மாறி விட்டான்! மரத்தில் ஏறி விட்டான்! என்று தத்துவம் பாடி பயனில்லை.
தனிநபர் வகிக்கும் அதே பாத்திரத்தை வரலாற்றில் கட்சியாகவே வகிப்பதை
கொள்கை ரீதியாக விமர்சிக்க முடியாமல் எது தடுக்கிறது?
காக்கா பிரியாணி துன்னா காக்கா மாதிரிதான் கத்த முடியும் !
என்பது வெறும் நகைச்சுவை காட்சி அல்ல. அதுதான் இங்கே நடக்கிறது!
- துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு